டிசம்பர்
சாயங்கால வெளிச்சம் முன்னேறுகிறது தனது படைகளுடன்.
வெகுதூரத்தில் மலைகள் கொடியுயர்த்துகின்றன “நாங்கள் சரணடைகிறோம்”
ஆயினும் யாரிடம்? கொடைபெறாத காட்டுத்தெய்வமென வெறித்துப்பார்க்கும் எதிர்காலத்திடமா?
இந்தக் குளிர்காலத்தில், நிறைய முறை பயங்கரம் எனைச் சிறையிலடைத்தது
ஆனால் திகைப்பு விடுவித்தது, அதிர்ஷ்டவசமாக.
ஆகவே நான் எதிர்கொண்டேன், சொல்ல முடியாதவற்றின் சூறாவளிகளை,
காஃபியின் கசப்பு போல நீடித்த ஒரு புராதனமான காதலை,
பின்னர் ஏதேதோ விசைகளால் சாக்குப்பைக்குள் வைத்துக் கடத்தப்பட்டு
எங்கோ கண்விழிக்க நேர்ந்த அநேக தருணங்களை. இப்போதோ வந்திருக்கிறேன்,
கடலின் ஆஸ்பத்திரி வராந்தாவுக்கு, எனது மருத்துவ அறிக்கைகளுடன்.
எல்லாவகையிலும் இருட்டப் போகிறது. முகில்கள் வீடு திரும்புகின்றன தத்துவ வகுப்பு முடிந்து.
இத்தனைக்குப் பிறகும் இது சாத்தியமா? விண்ணவர்கள் வாயைப் பிளக்கிறார்கள்.
சிறுவனொருவன் மணலில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறான்.
இனிமேல் அவனைத் தொட ஏலாது, புகைமூட்டத்தால்,
காய்ச்சலுற்ற நிழல்களால், ஏன் திருவாளர். காலத்தாலும்தான்.
ஆம், தோணியில் ஏறி அவன் சென்றுவிட்டான் மறுகரைக்கு.
யாவும் சாத்தியமாக இருந்த ஒரு பிரதேசத்திற்கு. வழக்கம்போல
மண்ணில் சாய்கிறேன். ஆரத்தழுவுகிறது அப்பாவியான
சில்லென்றக் காற்று. நல்லவேளையாக அதனிடமில்லை
ஒரு அபிப்பிராயமும். மெல்லிய ஆறுதல். எங்கிருந்தோ கேட்கும் அவசர
ஊர்தியின் அலறல். என் தலைக்குள்ளிருந்தா கேட்கிறது அது?
தேநீர் விற்பவரின் க்ளிங்…க்ளிங்… பிறகு எழுந்துசென்று,
ஆவி பறக்க ஒரு தேநீர். ஏதென்று அறியேன், எப்படியென்றும் அறியேன்,
ஒர் இனம்புரியாத உந்துதல் எழுகிறது என்னில். உறைந்த பனி உருகுகிறது உள்ளுக்குள்.
இனி நான் மினுங்கும் கிளிஞ்சல்களாவேன்.
மின்னல்கள் ஆவேன்.
கட்டக்கடைசியில் தூரம் ஆவேன்.
ரகசிய வாழ்க்கை
இப்படி நிகழுமென்று எதிர்பார்க்கவேயில்லை.
பேருந்தின் சாளரத்தினோர இருக்கை. ஊமைவானத்தினின்று
செய்தி வரவேண்டியவனென உட்கார்ந்திருந்தேன்.
சடாரென எனைக் கடந்தது இன்னொரு பேருந்து. அதன் சன்னலோர இருக்கையில்
ஒருத்தி. செளந்தர்யமும் அழிவின் உப்பும் கலந்த ஒரு பேரழகி.
மறுமலர்ச்சிக்கால ஓவியங்களிலிருந்து தப்பிவந்துவிட்டாள் போல.
நான் பார்க்கிறேன் என்பதை அவளும் பார்த்துவிட்டாள்.
சட்டென அந்த ஒரேயொரு கணத்தினுள்
பூந்தோட்டமொன்று தோன்றியது, தனிமையில் எங்களது தலைவிதிகள்
சந்தித்துக்கொள்ளட்டும் என. பிறகு நாங்கள் அலைந்துதிரிந்து
சாகசம் புரிய ஒரு நகரம் துளிர்விட்டுக் கிளைபரப்பியது.
இறுதியில் கனிந்தது: பறக்கும்தட்டுகள் அடிக்கடி கடக்கும்
மலையுச்சியில் நான்கு சன்னல் வைத்த வீடொன்று.
அங்கே நாங்கள் வசித்தோம், ஆனந்தமும் துக்கமும் என.
சூரிய வெளிச்சம் தித்தித்தது. எனது விழிகளால் அவள் நிலா பார்த்தாள்.
பிரார்த்தித்தோம் நிறைய. பிள்ளைகள் பெற்றோம்.
கடைசியில் மரங்களைப் போல முதுமையும் அடைந்தோம்.
பின், தருணங்களின் சங்கலி அறுபட்டது மெல்ல.
நான் சிகரத்தினின்று எனது வாழ்க்கைக்குள் விழுந்தேன்.
அவள் உண்டியலில் இடப்பட்ட காணிக்கை போல எனக்குத் தெரியாத ஒரு பெயருக்குள் விழுந்தாள்.
நாங்கள் அந்நியர்கள் ஆனோம், மறுகணத்தின் கடைவீதியில்.
உலகத்தின் இரைச்சல் கேட்கத்தொடங்கிற்று
செவிக்கு மிக மிகப் பக்கத்தில்,
ரத்த நாளங்களில்.
*
– வே. நி. சூர்யா
Cover photo: Adriaen Coorte