ஷெனாயில் மிதக்கும் உலகம்…
பின்னிரவொன்றில் விழித்துக்கொண்ட
இரு விழிகள்…
இன்னும் உறங்க மறுத்து,
சிவந்து கனன்று எரிந்துக் கொண்டே இருக்கின்றன…
அவன் காதுகளில் மெதுவாய் கதைபேச,
விரகம் படிந்த இரவுகளில்
நிர்வாணமாய் திரியும்
ஒரு காற்றை அவன் அறைக்குள் நுழைத்து விடுகிறேன்…
அந்த தனிமை,
கனன்று எரியும்
இந்த விழிகளின் ஓரம்…
ஒரு புழுவைப்போல்
நெளிந்து வழியும் கண்ணீரால்,
வறண்டு வெடித்த இவன் உதடுகளை
மெதுவாய் வருடக்கூடும்,
அபினி தரும்
பிம்பங்களின் கிறக்கம் மட்டும்,
ஒரு கனவுலகத்தை
இவன் கண்களுக்குள் இழுத்து வருகிறது…
ஷெனாயில் மிதக்கும்,
கருப்பு தேவதைகள் நடனமிடும் கனவுலகது…
வர்ணங்களை தொலைத்த
ஓவியங்களால் அலங்கரித்து செய்த
அந்த உலகில்
தனிமைகளில் கதை பேசும் காற்றுக்கு,
தேவதையாய் உருவம் தீட்டப்படுகிறது…
இப்போது, என் கண்களை
இறுகமூடிக் கொள்கிறேன்,
கண்ணீரோடு வழிந்துக் கொண்டிருக்கிறது,
இருண்டு மறைந்த அந்த கனவின் உலகம்…
என் தொடக்கம்: மரணம்.
நீ எதிர்பாராத நிமிடமொன்றில்
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்…
அதிர்ச்சியின் உச்சத்தில் நீ உறைந்துபோகும்
அந்த கணம்,
சடுதியாய் வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே
நிகழ்ந்து வந்த
முகாரி இது…
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…
என் காட்சிப் பிழைகளை
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில்
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்க முனைகிறேன்…
மேய்ப்பு செழித்த பசுமைகளில்
இடையனை மறந்து விட்ட ஆடுபோல
மாயைகளில் உழன்று திரிகிறேன்….
என் பட்டிக்கு அவன்
என்னை அழைத்துப் போக
தேடிவரும் அஸ்தமன நேரமிது….
என் கைகளில் கருமை படர்ந்திருக்கிறது…
என் கண்களில் வெறுமை நிறைந்திருக்கிறது…
என் உதடுகள் வறண்டு கிடக்கிறது….
பாவங்களின் பெரும் சுமையை
ஒரு சிலுவையைப் போல என் தோள்கள் சுமந்திருக்கிறது…
இப்போது நான் இழந்து,
பின் மறந்து விட்ட என் புன்னகையை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் மரணத்தை நான் அலங்கரிக்க
அதை உடுத்தியாக வேண்டும்…
உன்னிடம் அது இருந்தால்
என்னிடம் கொடுத்து விடு…
என்னை நான் அலங்கரித்தாக வேண்டும்…
என் வெற்று மதுக்கிண்ணத்தின் கீழே,
ஒரு ரோஜா சருகாகிக் கிடக்கிறது…
வண்ணம் நிறைந்த ஒரு பட்டாம் பூச்சி செத்துக் கிடக்கிறது.
பின், ஒரு கருப்பு வெள்ளை கனவில்
நான் மயக்கமுறுகிறேன்….
நிம்மதியாய் நான்
உறங்கிப் போன பின்பு
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்…
வெள்ளை துணியில் என்முகத்தை
இறுக மூடிக்கிடப்பதை நான் விரும்புகிறேன்…
உன் கண்ணீரில் என் மௌனப்”புன்னகையை”
நீ காண்பதை அப்போது நான் விரும்பவில்லை…
எப்போதும் போல இப்போதும்
நான் தனிமையில் இருக்கிறேன்….
என் கொண்டாட்டத்தில் நீங்கள்
அழுது கிடப்பீர்கள்….
என் பெயரையும் சில நினைவுகளையும்
மட்டும் இங்கே வைத்து…
என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்….
உன் அழகான அந்த இதழ்களின்
ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்…
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு….
கருப்பு வெள்ளை கதை
தனிமையிலிருந்து  கொண்டுவந்த
இந்த  கருப்புவெள்ளை  கதையின்  மீது
என் வண்ணங்களை  தீட்ட  முனைகிறேன்…
இந்த  கதையில்  ஆங்காங்கே
புதைக்கப்பட்டு கிடக்கும் அந்த
ஒற்றைப்  புன்னகையின்  சொந்தக்காரனை
இந்த  பிரதி எங்கும் தேடி  அலைகிறேன்…
வன்மங்களால்  வரண்டுக்  கிடக்கும்
அந்த  நீலக்கண்களில்,
கசியும்  ஏக்கங்களும்
பசியின்  வாட்டமும்
என்  வர்ணங்களில்  வழிந்து ஓடுகிறது….
இந்த  பிரதியில்  இருந்து  அவனை
பிரித்தெடுக்க  முனைவதை
கதை  சொல்லி  தடுத்துக் கொண்டு இருக்க…
கதைக்குள்ளே  இருந்த என்னையும் சேர்த்து,
இந்த  பிரதியை  கிழித்தெறிந்து  விடுகிறேன்…
அவன்  நானாகவும்
நான்  அவனாகவும்  வேடம்  மாற்றிக்  கொண்டிருக்கலாம்,
இந்த  கதையின் வாசகனாக  அவன்  மாறி
என்னை  அவன் இந்த  கதையில்  காணும் போது
என்ன  நினைப்பான்….
நான்  கிழித்துப்போட்ட  பிரதியில்
அந்த  நீலக்  கண்கள்  என்னை  வெறித்துப்  பார்க்கிறது…
அந்த  பார்வையில்  என் இரவுகளையும்
அவன்  கனவுகளையும்  நாம்  தொலைத்திருக்கிறோம்…
ஒற்றை  பிரதி  அழிந்த  பின்பும்
ஒவ்வொரு  வாசகனின்  பிரதியிலும்
அந்த  வேதனை  வாழ்கிறது…
உன்னை  எப்போதாவது
நான்  அனைத்துக்  கொள்வேன்,
அப்போது  இந்த  பிரதியை  கிழித்துவிட்டதற்காய்
என்னில்  காரி உமிழ்ந்திடு…
அவன் எனும் கவிதை.
காதல் நீர்த்த சதைகளின் மீதான
காமத்தை பற்றி அந்த இரவில் அவன்
பேசிக்கொண்டே இருந்தான்…
மேகங்கள் நட்சத்திரங்களை
மறைத்து வைத்த
பிணிகொண்டு நீளும் யாமமது…
என் பருத்து செழித்த முலைகளின் மீதும்,
ஒரு யுகத்தின் தாகம் தீர்க்கும் இதழ்களின் மீதும்
படியாத பார்வை….
உன்மத்தமான வெறுமைக்குள் படர்ந்திருந்த
ஆன்மாவை, கண்களினூடே
கரைத்துக் கொண்டிருந்தது….
முல்லை கங்குலென இருண்டு கிடக்கும் மனமெங்கும்,
படர்ந்து பறக்கும்
மின்மினிகளை போல
ஒரு ரம்மியமான காதல் அவன் மீது
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது….
நிலவில் இருந்து வந்தவன் அவன்…
செட்னாவிலிருந்து கனவுகளில் வந்தவள் நான்..
ஒரு பெண்ணின் ஆன்மாவை
ஸ்பரிசிக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.
அவன் பார்வையும், வார்த்தையும்
மாயைகளில் வார்க்கப்பட்டவை
நீண்ட பெரும் கதைகளில் என்னை
சிறை வைத்திருக்கிறான்….
இது அவன் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை…
அவன் எனும் ஏகாந்தத்தில் இருந்து
விழுந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள்…
இப்போது என் வாசிப்பின் பிரங்ஞையை முடித்துக்கொண்டு
காதல் எனும் வெறுமையில் வழிந்துக் கொண்டிருக்கிறேன்…
இல்லாமையின் கனவு
வேகமாய்,
மிக வேகமாய்
கடந்து போகிறது காலம்…
என் கல்லறையை நோக்கி…
காலத்தின்
இடைவெளியில்
இழந்த உணர்வுகளின் முகாரி…
வரட்சி புன்னகையில்
தெறிக்கும்…
மெதுவாய்,
மிக மெதுவாய்
என் கண்கள் திறக்க முனைகிறேன்…
கருமை படிந்த
கனவுகள் தாண்டிய
நிஜத்தின் வெளியைக் காண…
மூல இசையில்
இசைந்தசையும்
என் சுயத்தின் மயக்கம்…
கனவுகள் இருப்பதாய்
நம்பும்….
அச்சம் நிறைந்த
இந்த வனத்தின் பாதையில்
இச்சை மிருகங்கள்
குதறிக் கொல்லக்கூடும்…
வெற்றுப் பாதங்களுடன்
முற்கள் செறிந்த இந்த பாட்டையில்
போராட முனையும்
இந்த கோழை…..
தெரியும்,
இவை மாயைகளின்
யதார்த்தம்….
திரைகள் கிழியும் வரை
தொடரும் இந்த முனுமுனுப்பு…
இந்த வாழ்க்கை என்பது
இல்லாமையின் கனவு…
ஒருவனாய் நின்றாளும் அவனை
அறிந்தடைய திணறும்
ஆன்மா…
மிஸ்பாஹ் உல் ஹக்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *