கொடியில் தொங்கும் ஊர் வாசம்
மெது மஞ்சள்
கண்ணெட்டாத் தூரம் வரை
படர்ந்திருக்கிறது.
ஒற்றையடிப் பாதை
ஒரமெங்கும்
கடும்சிவப்புப் பொப்பிப்பூ
தகதகக்கும்வெயில்
முகத்தில் அப்பி இதமூட்டும்
மழையில் அவிக்கும் இறுங்காய்…
வெயிலுக்கு
வாசமுண்டு.
கொடியில் முறுகிக் காய்ந்த
ஆடையின் மணம் போல…
அல்லது
மண் கிளறிச்
சிறு செடிகளைப்
பெயர்த்திழுக்கும் போது அவிழும்
வாசம்.
மேலே வானம் பார்க்கிறேன்
கழுத்தொடிய நீண்டோடும்
காஷ்மீர் கம்பளம்.
ஊருக்கு திரும்ப முடியாத
தொலைதூரம்.
குரல்களை மறுதலிக்கும்
தேசம் எனது!
நடுவிலிருக்கும்
சிறுவீடும் பால்யமும் சிதறிக்கிடக்கும்
நினைவுகளையும் தவிர
வேறெதுவும் இல்லை.
இங்கோ
இன்னும் எதுவுமே ஒட்டவுமில்லை.
2020 June 27
ஆடு மேய்த்தல்
உன்னுடைய ஆடுகள்
அனுமதியின்றி
என்னுடைய நிலத்தில்
மேய்ந்து கொண்டிருக்கின்றன.
தயவு செய்து ஓட்டிச் செல்!
அவை பசிய இலைகளையும்
என்னுடைய ஊதாக் கத்தரிக்காய்களையும்
வாசலில் துளிர்த்திருக்கின்ற
பேரரளி மொக்குகளையும்
தின்று கொண்டேயிருக்கின்றன.
உன்னுடைய ஆடுகள் காய சண்டிகை
தீராப் பசி கொண்டலைகின்றன.
அவை தண்ணீரை அள்ளிக் குடிக்கின்றன.
என்னுடைய சின்னஞ்சிறிய கிணறு
வற்றித் தேய்ந்து விட்டது.
ஒக்டோபர் 2017
ஈரக்கூந்தலில் ஒழுகும் வலி நினைவு
நேற்று மழை பெய்தது
ஈரச் சுவர்களில் தொங்கியது
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிஊன்
உம்மாவை கப்று
உள்வாங்கிக் கொண்டது
கற்பூரம் மணக்க
குளிப்பாட்டும் போது
மையத்தின் உடல்
வலிக்க தண்ணீர் கூட
ஊற்றுவதில்லை
இரு விழிகளில்
சுருமா எழுதி
ஈரக் கூந்தலைப்பின்னி
மணக்கும் பஞ்சுத் துண்டுகளில்
உடல் பொதிந்து
முகம் மட்டும் திறந்து
கபனிட்ட பின்னர்
வெள்ளை ரோஜாவின் மந்தகாசம்
முகம் வலிக்காத
மயிலிறகு முத்தங்கள்
கேவி அழுதால்
வலிக்கும் மையத்தின் காதுகளென
அணைத்துக் கொள்ளும்
எவர் வீட்டோ உம்மும்மா
சந்தூக்கு
ஆறேழு பேர் தோளில்
மெல்லக் கிளம்பும்போது
வீடெங்கும்
சிந்திக்கிடக்கும் சாம்பராணி வாசமும்
உம்மாவின் நினைவுகளும்
பள்ளியில்
மையத்துத் தொழுகை
அழுது தொழுத பின்
தோண்டி வைத்திருக்கும்
கப்று வரவேற்கும்.
அழுங்காமல்
உம்மாவை அதற்குள்
இறக்கி
பிடி மண் தூவி
அடக்கி விட்டு
மீசான் கட்டையை நாட்டும் போது
அழுகை கொப்பளிக்கும்
ஆனாலும்
அதற்குள்ளும் ஆறுதல் பூக்கும்.
அதுவெல்லாம் இல்லாது,
உம்மா என்று ஒரு
வெறும் சாம்பல் கிண்ணத்தை
ஏளனமாய் நீட்டினார்கள்
நான்
அணைத்துத் தூக்கினேன்.
உம்மாவை கப்று
உள்வாங்கிக் கொண்டது.
மழை பெய்தது
நான் உடைந்து
அழுதேன்!
2020 May 7
6.09 pm
இடப்பெயர்வு அல்லது பாடும் கூழாங்கல்
கடும்நீல கிண்கிணிப்பரல் கடல்
முத்துச்சிப்பி மகரக் காடு.
நூற்றாயிரம் மாதங்கள்
உருண்டு புரண்டு…
உருண்டு புரண்டு…
உயிர்த்திருக்கும்
கையலகக் கூழாங்கல்.
அதன்
வழுவழுப்பு மேற்பரப்பு
கனிந்த சாம்பல் நிறம்!
அதனுள்ளோடும்
இலை இலையாய்ப் பிரிகின்ற
நூலாம் படைக்கோடுகளெங்கும்
கடற்கன்னிக் கதைகள்.
செஞ்சாம்பல் சிட்டுக் குருவியின்
அடி வயிற்று மஞ்சள் வெதுவெதுப்பு!
கருவூதாக் கடல் பாடல்கள்
அலையாடும் சிப்பிச் சிலும்பல்.
வெறும் பாதங்களை
குறுக்கறுக்கும் மணல் துகள்களின்
வெட்கக் குறுகுறுப்பு.
இப்போதோ,
கடல் பாடும் கூழாங்கல்
குளிர் தின்னும் வெளிக்காற்றை மறுதலிக்கும்
மூடிய ஜன்னலடியில் கிடக்கிறது…
வெறும் வானம் வெறித்தபடி.
ஜூன் 2018
-ஷமீலா யூசுப் அலி
மிகவும் சிறப்பு