சமகாலத்து கவிதைகளின் உலகம் சூழலின் விம்பங்களை விட்டும் வெகு தூரமாக நகர்ந்து விட்டது. காலத்தின் ஓட்டத்தில் குமிந்திருக்கும் சொற்களின் மாய விளையாட்டுக்களாக கவிதைகள் நகர்த்தப்படுவதும், அதன் விரிவாக்க கருத்தியல்களில் குறியீட்டுத்தாளங்கள் நிரம்பிவழிவதுமாக ஒத்திக் கிடக்கிறது வாசிப்பு மனம். தீவிரமான கவிதைகளின் உரையாடல்கள், பிரதிகளின் உணர்வுத்தளமாக அமைந்திருந்த சொற்களின் தொகுப்புக்களாக இவைகளின் வருகை எதிர் கதையாடலுக்கான வெளியினை உருவாக்கியிருக்கிறது. கவிதைகளை புரிந்து கொள்ளுதல் எனும் நிலைப்பாட்டிற்கு அப்பாலாக கவிதைகள் பேச முனைகின்ற அழகியலின் ஊடறுப்பு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

கவிதைகளின் மொழி வழித் தொடர்புகள் உணர்வுகளின் பக்கம் சார்ந்தவையாக இயங்கத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மாற்றியல் பார்வைக்கான பெருத்த கீறல்கள் கவிதைகள் மீது இக்காலங்களில் விழுந்திருக்கின்றன. அவற்றிலும் கவிதைகள் கொண்டியங்குகின்ற அழகியல் நுட்பங்கள் காலத்தின் மேம் போக்கானவையாகவும் அவற்றினை நுகர்கின்ற போது கிடைக்கக் கூடிய அனுபவங்கள் கவிதைகளின் மீதான ஆராய்ச்சிப் புரிதல் என்றே கூற முடியுமாயிருக்கிறது. கவிதைகள் எவ்வகையான நிலைப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதினை எவராலும் வரையறுக்க முடியாதிருப்பினும் இன்று உலக வடிவமைப்பின் கூறுகள் பற்றிய எல்லா சமாச்சாரங்கழளையும் கவிதைகள் பேச முற்படுகின்றன, வராலாற்றின் மீது காத்திரமான முன்வைப்புக்களை செய்கின்றன, விசித்திரமான மனிதர்கள், விந்தைகள் கலந்த பூமி பற்றியெல்லாம் பேசுவதோடு அவை பற்றிய தேடல்கள் காட்சியல் வடிவமாக அல்லாமல் கவிதையியல் ரீதியாக எம்மிடம் வந்து சேர்ந்திருந்திருக்கிறது. கவிதைகள் யாருக்கு சொந்தமானது எனும் கேள்வி எழுகின்றபோது அதற்கான பதில் காத்திரமான வாசிப்பாளனுக்குச் சொந்தமானது என்பதே. இலக்கியச் சூழலில் கவிதைகள் கொண்டிருக்கும் பெருத்த இடத்தில் பிரதி வழியினையும் தாண்டி முகநூல் வாயிலாகவும், இணையத்தளப் பக்கங்களின் ஊடாகவும் இன்று கவிதைகள் பரப்பிவிடப்பட்டிருக்கின்றன. பகிரப்படுகின்ற அனைத்துக் கவிதைகளும் காத்திரமானதா? இல்லையா? என்பதினை ஒரு தொடர்ச்சியான வாசகன் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது. சமகால ஆண் கவிஞர்களின் வருகையானது கவிதைகள் மீதான ஒரு அதிகாரக் குவியலின் பக்கம் எம்மை அழைத்துச் செல்கிறது. பெண் பாத்திரங்கள்; ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு முடக்கப்பட்டு கதையாடுவதற்கு இடம் தரப்படாமல் மழுங்கடிக்கப்படுறது. சமூகத்தின் பார்வையில் பெண் என்பவள் எவ்வாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிறாள், அவளின் பாத்திரங்கள் எவ்வகையான வாசிப்பினை வேண்டி நிற்கின்றன, என்பதினை காத்திரமாக விமர்சனம் செய்யக் கூடிய ஒரு அமைப்பு எம்மத்தியில் நேர்த்தியாக உருப்படவில்லை.

கவிதைகளின் வகிபங்கு தன் வசப்படுத்தியிருக்கும் மொழி அமைப்பிலிருந்து உருவாகிறது. கவிதைகளின் மொழி என்பது அதனுடைய பண்பினை வெளிப்படுத்தும் கருவியாயிருக்கிறது. கவிதைகளின் மொழியினைத் தாண்டி வெளிப்பட்டு நிற்கின்ற படைப்புக்களை நாடகத் தன்மையானவையாகவிருக்கின்றன. இவ்வகையான மொழியே கவிதைகளுக்கும்;, கவிதைகளுக்கான நாடகத்திற்கும் இடையிலான வேறுபாட்டினை வெளிப்படுத்துகின்றன. மொழியின் ஊடாக மனித உணர்வினை வெளிப்படுத்துகின்ற கவிதைகள்; வாசக மனதினை சஞ்சலிக்கச் செய்கின்றன. திரைப்பட இயக்குனரும் கவிஞருமான ழான் கோலா திரைப்படங்களின் வரைவிலக்கணம் பற்றி இப்படிச் சொல்கிறார். “மூலக் கதைக்கும் காமிராவிற்கும் இடையே, எழுத்துக்கும் படிமங்களுக்கும் இடையே, திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையே ஒரு படைப்பாளி இருந்து செயற்படுவதனால்தான் ஒரு திரைப்படம் உயிர் பெறுகிறது. அதற்குத்தான் நடை என்ற பெயர்” என்கிறார். கவிதைகளின் நடைக்கும் இக்கதை பொருந்தும் என நினைக்கிறேன். இதனூடாகவே கவிதைக்கு பொருந்திப் போகின்ற மொழி பற்றி நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கவிதைகளின் ஊசலாட்டத்தினை புரிந்து கொள்ள வேண்டியுமிருக்கிறது.

றியலாஸின் “யசோதரையின் வீடு”கவிதை நிலப்பரப்பில் புது வெளியாய் எதிர்க் கருத்தியலை உருவாக்கும் பிரதி வகைகiளில் கவனயீர்ப்பிற்குரியது. எழுத்தாளர்கள் எப்பொழுதும் செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும் என பொதுப்புத்தி சொல்கிறது. இதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு. படைப்புக்களின் முகட்டினை மாற்ற நினைக்கும் சக்தி எழுத்தாளர்களிடம் இருப்பதாக வாசகர்களின் புரிதல்கள் அமைகின்றன. வெறுமையான எழுத்தில் மட்டும் தன்னுடைய கருத்துக்களை புதைத்து விட்டு செயற்பாட்டு வெளியில் சோம்பேறிகளாகிவிடுவது கவிதைகளின் தோல்வியாகவேயிருக்கிறது. றியலாஸ் புறவற்றின்; மீது பெரும் பார்வை கொண்டவராகவே காணப்படுகிறார். யசோதரை சமூக அபிமானம் கொண்ட றியலாஸின் மீது ஒட்டு மொத்த பார்வையும் பொதிந்திருக்கும் வகையில் எழுத்துக்களின் மேம்போக்குத்தனத்தினை உதறிவிடுகிறாள். இவ்விரு கலப்புக்களாக மேய்ந்து திரியும் யசோதரையின் வீட்டில் காத்திரமான கவிதைகளின் முகமும், சலித்துவிடக்கூடிய பிற பக்கங்களும் ஒட்டியே கிடக்கின்றன.

“நீங்கள் எண்ணுவது போல்
வானத்திற்கு
வரண்ட நிலங்கள் மீது
எதுவித அக்கறையுமில்லை
என்னைப் போலவே
அதுவும்
மூத்திரம் முட்டும் போதெல்லாம்
சிப்பைத் திறந்து
ஒரு பாட்டம் பொழிந்துவிட்டு
இழுத்து மூடிக் கொள்கிறது,
அவ்வளவுதான்.”

றியாலஸிற்கு மூத்திரம் போகும்போதுதான் உண்மையில் இக்கவிதை பிறந்திருக்க வேண்டும். இதனைத்தான் நான் செயற்பாடு எனக் குறிப்பிடுகிறேன். கவிதைகளுக்கான பிறப்பிடம் இப்படி அமையும் போதுதான் வானத்திற்கும் ஆண் குறிக்குமான நீட்சியான உறவில் மழையும், மூத்திரமும் ஒட்டிக் கொள்ளும் சம்பாஷனை நிகழ்கிறது. யதார்த்த தழுவல்களிலிருந்து மீறிஎழும் பீய்ச்சலில்தான் மண் வாசனையும், மூத்திர வாசமும் மணங்களுக்கான அர்த்தத்தினை உருவாக்கிக் கொள்கின்றன. றியலாஸூம் நானும் முரண்பட்டுக் கொள்கின்ற ஓரிடம் இக்கவிதையில் இருக்கத்தான் செய்கிறது. வரண்ட நிலங்கள் மீது அக்கறையில்லாத வானமும், றியலாஸின் மூத்திரமும் ஒன்றானதல்ல. நிலத்தினை நனைக்கும் வானம் போலவே றியலாஸ் நனைத்துக் கொண்டிருக்கும் மூத்திரக் கிடங்கு மீது அவருக்கு நிறையவே அக்கறையிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே இக்கவிதை பிறந்திருக்கிறது. அக்கறையில்லாமல் கவிதைகள் எதுவும் பிறப்பதில்லை என்பதில் நம்பிக்கையுடையவன் நான். றியலாஸின் கவிதைகள் சிலவற்றில் விநோதத்தின் வெளிப்பாடாய் கவர்ச்சி முக்கியத்துவம் கொள்கிறது. அவற்றின் மூலம் பெறப்படுகின்ற தாக்கமும் எம்மை ஆட்டிப்படைக்கிறது. யசோதரையின் வீட்டில் இருக்கின்ற மிக உன்னதமான செயற்பாடுகளில் அதுவே மிக முக்கியமானது. அதனை நுகர்கின்ற போது விசித்திரமான அனுபவங்களையும், வாழ்வினையும் அதனால் தர முடியும். இதுவே ஒரு பிரதிக்கு இருக்கின்ற செயற்பாடாக நான் கருதுகிறேன்.

றியலாஸ் கவிதைகளின் செயற்பாட்டு வெளியில் நிகழும் மாற்றங்களின் போக்குகள் விசித்திரமானவை. அவை பிரதிபலிக்கின்ற விடயங்களின் மீது மலக் கரிசணை மிக அதிகமாகவே இருக்கிறது. வாழ்வின் நெடிய பயணங்களில் சங்கமிக்கும் வரலாற்றுத் தடங்களாகவும் இதனைக் குறிப்பிடலாம். இதுவே சுயம் கூறும் படைப்புக்களின் விநோதமாக அரங்கேறிவிடுகிறது. யசோதரையின் வீடு அடையாளங்களின் மீது தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவ்வகை அடையாளங்களினை உருவாக்குவது கவிதைகளின் தேவையாகவும் மாறிவிடுகிறது. றியலாஸின் கவிதைகள் ஏதோ ஒரு நிலைப்பாட்டிலான அரசியலினை பேசுவதற்கே முனைகின்றன. ஆனாலும் பலவிடங்களில் தோல்வியடைந்து பேசுவதற்கான யோக்கிதையை இழந்து விடுகிறது.

பிரமிளின் தாக்கம் றியலாஸையும் விட்டு வைக்கவில்லை. எனக்குள் எழுகின்ற கேள்வி பிரமிளின் “சிறகிலிருந்து பிரந்த இறகு ஒன்று…|”கவிதைக்குப் பிறகு பிரமிளை யாருமே வாசிக்கவில்லையா? எடுத்த எடுப்பில் இந்தக் கவிதையினை மாத்திரமே பிரமிளுக்கான அடையாளமாக முன்வைக்கிறார்கள். இப்படியிருப்பது குற்றமில்லை என்றாலும் ஒரு நிபந்தனையினை அவசியம் முன்வைக்க வேண்டும். பிரமிளின் தாக்கத்தில் கவிதைகளை மீள் வாசிப்பில் எழுத முயற்சிப்பவர்கள் பிரமிளின் மூலக் கவிதையினையும் தங்களது கவிதைகளுக்கு மேலாக அச்சிட வேண்டும்.

பிரமிள் கவிதை:

சிறகிலிருந்து
பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின்
வாழ்வை
எழுதிச் செல்கிறது.

றியலாஸ் கவிதை:

காதலர்களிடமிருந்து பிரிந்த
காதல் ஒன்று
தனிமையின் ஏக்கத்தை
கடற்கரை வெளியெங்கும் முத்தமிட்டபடி
சேரவும் முடியாமல்
பிரிந்து செல்லவும் முடியாமல்
வாழ்வின் தீராப் பக்கங்களில்
காதலை எழுதிச் செல்கிறது.

நல்ல வேளை இக்கவிதைக்கு  “ப்ரமிளைவாசித்தல்” என தலைப்பிட்டதால் கவிஞர்களுக்கே உரித்தான தந்திரமாக தப்புதல் எனும் பங்கினை பொருத்தமாக்கிக் கொண்டார் றியலாஸ்.

யசோதரையின் வீடு கவிதைகளின் வழியே தீர்மானிக்கப்டுகிறது. காலத்தின் விதியாகவும், விதியினை பதிவு செய்கின்ற நாட்டியமாகவும் நம்முன் விரிவடைகிறது. காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படுகின்ற கவிதைகளுக்கு தனித்துவமான வகிபங்கிருப்பதினை இப்பிரதி ஞாபகம் கொள்கிறது. கவிதைகள்; மீதான உரையாடல்களை வழிப்படுத்துவதற்கும், மேலோங்குப் பார்வைக்கு கொண்டு செல்வதற்கும் இவ்வகை யுக்தி முறைகள் அவசியமாகின்றன. றியலாஸின் கருத்தியல் வெளிப்பாட்டின் மூலம் கவிதைகளுக்கான மொழியினை உருவாக்க முடிந்திருக்கிறது. சாதாரண வாசகன் யசோதரையின் வீட்டில் நீட்சியினை விரிவுபடுத்திக் கொள்கிறான். எழுத்தியக்க முறையில் குறிப்பிட்ட ஒரு வட்டத்தினை வடிவமைத்து அதற்கு மட்டுமாக தன்னை ஒடுக்கிக் கொள்ளும் பிறக் கவிமணிகளிடமிருந்து பிரிந்து செல்லும் றியலாஸ் கவனிக்கபட வேண்டியவர்தான். பிரதி தருகின்ற இன்பத்தினை நுகர முடியுமான சூழலை யசோதரையின் வீடு முழுமையாக ஏற்படுத்தவில்லை. பரந்துபட்ட கவிதைத் தளத்தின் ஊடாக எழுதப்படும் பிரதியாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வரைபடத்தினை வைத்து இயங்குவதில்லை என்பதை றியலாஸ் வாசிப்பு செய்வது அவசியமாகிறது. யசோதரையின் வீடு மையப்படுத்துகின்ற அரசியலில் இருந்து அதனைப் புரிந்து கொள்கின்ற இடர்பாடுகள் இல்லாத வழி முறையினை மட்டுமே றியலாஸ் நினைத்திருப்பது அபத்தமானது. இப்படியெல்லாம் பிரதிகளில் இருந்து வெளிப்படுகின்ற ஏராளமான வார்த்தைக் குமியல்கள் பிரதியினை மட்டுமல்லாமல் பிரதியாளனையும் சேர்த்து மதிப்பிடுகின்ற நிலையினை அடைந்திருப்பது ரசிக்கத்தக்கதல்ல.
“மேடுபள்ளமாய்க் காணப்பட்ட
பூமியினை
சமப்படுத்திக் காண்பித்தது
கடல்.
பதிலிற்கு
துனித்தலைந்த நீர்த்துளிகளை
பெரும் கடலாகக் காண்பித்தது
நிலம்.”

இப்பிரதியில் எனக்கு பிடித்துப் போன கவிதைகளில் ஒன்று. நிலத்திற்கு கடலுக்குமான நேர்கோட்டில் பிரித்துவிட முடியாத பெரும் பங்கிளை அணைத்துக் கொள்கிறார் றியலாஸ். இரண்டில் ஒன்று உயர்ந்தும், தாழ்ந்துவிடாத படியும் பெரும் காரியத்தினை நிகழ்த்தியிருக்கிறார். கவிதைகள் சக்தி வாய்ந்தவையாக இருந்து கொண்டு சாதாரணமான காரியங்களினை நிகழ்த்துவதில்லை என்பதற்கு இக்கவிதை சான்று. நேர்மையான படைப்புக்களின் மீது இந்த உலகம் பயம் கொண்டிருக்கும். இதில் மிக முக்கியமான இருப்பு யாதெனில் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற அரசியல் முறைதான். காலத்தின் மிக இறுக்கமான சூழலில் இருந்து கொண்டு, அங்கு நிறைந்து கிடக்கின்ற அரசியலின் வெளிப்படையினை எழுத்துக்களில் பிரசவிப்பது பெரும் சவாலானது. அதிகார அமைப்பியலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கின்ற எழுத்து முறைகளின் நேர்மை பற்றி வாசக மனம் அறியும். சமூக வெடிப்பிற்கு மத்தியில் விளைவினை சேமிக்கக் கூடிய சீரிய எழுத்துக்களை உருவாக்குவதென்பது நேர்மையின் அடிப்படையில் கிடைக்கும் பெருவெளி. பாரதியின் கவிதைகள் வெள்ளையனுக்கு வெடி குண்டாக்கப்பட்டது போலவும், மஃஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தடையாக்கப்பட்டது போலவும், சில்வியா பிளாத்தின் கவிதைகள் மரணத்திற்கான பாடலாக்கப்பட்டது போலவும் றியலாஸிற்கு நிகழ்ந்த கவிதை மாற்றம் இப்பிரதியில் இது மட்டும்தான்.

பார்வைகளின் கூட்டமே கவிதைகள். கவிதைகளின் மொழி மிக அற்புதமானது. குறிப்பிட முடியாத மொழிகளின் கூட்டமது. விளைவுகளுடன் விரிந்து பயணிக்கும் அற்புதமான காட்சிப்பரப்பது. உலக ரசனையின் பெருமிதமான வெளியீடு. இந்த உலகம் பார்வையாளர்களால் நிரம்பியது. பார்வையாளர்கள் அனைவரும் பொதுப்புத்தியினை விரும்புகின்றனர். கவிதைகள் என்பது பார்வையாளர்களையும், பொதுப் புத்தியினையும் உள்ளடக்கியது. இதுவே சினிமா பற்றிய பொதுவான கட்டமைப்பாகும வரலாற்றுக் கதைகளின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்ட கவிதைகள் நுகர்வுப் பொருளாக மட்டுமல்லாமல் வரலாற்றினை காட்சிப்படுத்துகின்ற ஆவணமாகப் பார்க்கப்பட்டது. யதார்த்தங்களை மீறிய மசாலக் கலவைக்குல் தன்னை உட்படுத்திக் கொண்ட கவிதைகளில் யசோதரையின் வீடு சாட்சியமில்லாமல் புகுந்து கொள்கிறது. இதிலிருந்து கவிதைகள் பற்றிய துரதிஷ்டமான புரிதல்கள்; இப்பிரதியில் சிக்கிக் கொண்டுள்ளன. இவ்வாறான சூழ் நிலைகள் றியலாஸின் கவிதைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றாலும் மனித யதார்த்த வாழ்வினை விவரணப்படுத்துகின்ற பொதுவெளியும் இப்பிரதியில் வெளிவரத் தயங்கவில்லை. புதிய தொழில் நுட்பத்தினுடைய கண்டு பிடிப்புக்கள், வரலாறுகளைச் சொல்லுவதற்கு அவை ஆற்றிய மிகப் பெரும் பங்குகள் என்பன கவிதைகளை உலக தரத்திற்கு இட்டுச் சென்றன. அன்றிலிருந்து இன்று வரை கவிதைகளின் போக்கானது குறித்த வரைவிலக்கணத்திற்கு உள்ளாக மாத்திரம் அளவிடப்படாமல் பல் வேறுபட்ட கோணங்களில் தன்னுடைய வளர்ச்சியினை நிரூபித்திருப்பதை நாம் அவதானிக்கும் முறையிலிருந்து யசோதரையின் வீட்டிற்கான விவாதத்தினை முன் வைக்கலாம்.

 

-ஏ.எம்.சாஜித் அஹமட்

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *