1) பின்காலனித்துவக் காலக் கவிஞன் எனும் அடையாளப்பரப்பில் இயங்கி வரும் நீங்கள்; இவ்வாறான அடையாள முன்நிறுத்தலை கட்டுடைக்கும் படைப்பாளியாக இயங்குவதற்கு சாத்தியமான சூழல் உண்டா?
அடையாள முன்னிருத்தல் என்பது வேறு வித்தியாசப்படுத்திக்கொள்ளுதல் வேறு பின்காலனிய அர்த்ததில் முன்னது மொசைக்கான அல்லது அனைத்தும் சமப்படுத்தப்பட்டாக கூறிவந்த சனநாயக மேற்பரப்பில் ஒடுக்கப்பட்டதாக உணரும்பண்பாட்டுக் குழுமங்கள் தங்கள் தனித்த அரசியலை குவியங்களாக்கி எல்லோருக்குமான பொதுசட்டத்திற்குள் தங்கள் உரிமைகளை இடம்பெறச்செய்வது பின்னது நீண்டகால உண்மைகள் போக வரலாற்று மெய்மைகளால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்ட மனித சுயத்தை அதன் மந்தைத்தனத்தின் காரணிகளான நன்மை தீமை எதிர்காலம் லட்சியம் சுகவாழ்வு இறைப்பணிவு குடும்பமும் அரசும் புனிதம் நாயக வழிபாடு தலைமை அதன் கீழான பாதுகாப்பு என்கிற பேரில் இயங்கிவந்த நூற்றாண்டுகால நவீனத்துவ போலி உத்திரவாதங்களில் தன்னிலைகளை வித்தியாசபடுத்தி அதனிடையே குறுக்கிடுவதுதான். அல்லது அதன் சுரண்டல் வடிவங்களின் சுமையிலிருந்து அதன் மூலம் உருவாக்கிக் கொண்ட குறிப்பிட்ட வர்க்க நலன் மெத்தனத்தை நகையாடி விலகி மேற்பரப்பில் திளைப்பது அதன் அர்த்தங்களை ஒத்திப்போட்டு அதை கட்டுடைப்பது பகடி செய்வது என வித்தியாப்படுத்திக் கொண்டு ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த மெய்மைகள் சாரா புதிய தன்னிலைகளை மாற்றுகளாக அதையே பன்மைத்துவங்களாக முன்வைப்பது .
பின் காலனியம் என்பது இரஷ்ய அமெரிக்கப் பனிப்போர்காலத்திலேயே மக்களை அதனதன் தேசிய எல்லைககுள்ளேயே சந்தைமயமாக்கும் பணியை ஏகபோக மூலதனத்தின் மூலம் தொடங்கி விட்டிருந்தது முந்தைய காலனியத்தில் நாடுபிடித்து அரசாண்டு படைகளைக்கொண்டு நிர்வகித்து சுரண்டுவதை விட பிந்தையகாலனியத்தில் சந்தைகளை புத்திசாலித்தனமாக உள் அனுப்பி தாராளவாத முதலீட்டியத்தின் கீழ் அவற்றை சுரண்டுவது என வளர்ந்த அய்ரோப்பிய மற்றும் பலநாடுகள் தங்கள் மென் பொருள் ஆதிக்கத்தை அங்கே சுலபமாகக் கட்டி எழுப்பியதையே பின்காலனீயம் என்கிறோம்.
பின்காலனியக் கவிஞன் என்பது ஒற்றை அடையாள முன்னிறுத்தல் மட்டுமல்ல வித்தியாசங்களை பன்மைப்படுத்துதல் மாற்றுகளை சிந்திப்பது எனும் வகையில் என் எழுத்துகள் பலகுரல் தன்மையையும் கொண்டிருப்பதாக சொல்லக்கேட்டிருக்கிறேன். முக்கியமாக அடையாளம் என்பது கவசம் மட்டுமே வித்தியாசம் என்பது தாக்குதலும் தகர்ப்புமான செயல்பாடு! சொல்லப்போனால் பிரதிக்கு வெளியே ஏதுமில்லை என்ற தெரிதாவின் தகர்ப்பு தன்படைப்பைக்கோரும் இலக்கிய ஆசிரியனை சந்தேகத்திற்கும் அல்லது அப்படைப்பை அவிழ்க்கும் போது அதில் வெளிப்படும் அதிகாரமையத்தை கலைத்துப் போடுவதற்கும் அதில் கட்டப்படிருக்கும் தந்திரமான வர்க்கச்சாயலை அம்பலப்படுத்துவதற்கும் இன்று வரை ஏதுவானதாய் இருக்கிறது பிரதிக்கு வெளியே ஏதுமில்லை என்பது என் கவிதைகளுக்கும் பொருந்தும்.. சூழல் என்பதே பலகருத்துவ மோதல்களில் இருந்தே உருவாகிறது இத்தகையப்பன்மியத்தை ஏற்க எவை தடையாக உள்ளதோ அதுவே ஒருவரது பிரதிக்குள்ளும் சலனமுறும்! . இங்கு தடை என்றால் என்ன என்பதை பார்ப்போம். மக்களை வெற்றிடமாக்கி விட்டு அதிகார அமைப்புகளின் உளவியலின்படி தாம் கட்டமைத்த (ஒற்றை தேசியப் புனிதங்களின் பெயரால் ) பொதுச்சமூக சுயத்தைஅதன் நனவுலகை விட்டு எவ்வாறேனும் தப்பிச்செல்லாத படி வைப்பது அல்லது அதன் நனவிலியை ஒழுக்க விதிகளுக்குள் அடைத்து அதற்கு வாகான வன்முறைகளை அச்சுறுத்தி ஒடுக்கும் கருவியாக்கிக்கொள்வதைத்தான் தடைகள் எனலாம்.
மேலும் தம்மால் ஒடுக்கப்படும் வர்க்கங்களின் மீது சட்டத்தின்பேரால் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் தாம் பலனடையச் செய்து கொள்ளும் மேலாதிக்க வர்க்கங்களின் உத்திகள்தான் தடைகளென்றபெயரில் !நீண்டநடைமுறைகளாய் நீடிக்கின்றன, தடை என்பதே .அதிகாரத்தை அல்லது தம்மீதானவிசுவாசத்தைக் கோரும் மத அரச அமைப்புசார் கலையின் நிறுவன அழகியல்தான்!, மற்றபடி அது பல பூந்திகளை இறுகப்பிடித்திருக்கும் ஒரு லட்டுதான்.
2) சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்பிரியா, ரமேஷ் – பிரேம், பிரம்மராஜன், சுகுமாரன், ஆத்மநாம் போன்றோரின் கவிதை நிலைப்பாடுகளுக்கு முன்பாக; கம்பர், பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் கவிதை மொழியோடு இலக்கிய செயற்பாட்டிற்குள் நுழைந்தவர் நீங்கள்; கவிதைகளில் நிகழ்ந்த இவ்வாறான மாற்றங்கள் நபர்களால் நிகழ்ந்ததா? அல்லது நுகர்வோன் மற்றும் சூழலின் தாக்கமா? இம்மாறுதலில் யவனிகா எந்தப்படியில் நிற்கிறார்?
சுதந்திரத்திற்குப்பிறகு இந்தியாவில் அதை ஏற்றும் மறுத்தும் வாழும் இருத்தலியல் போக்குகள் தொடங்கிய போதும் ஏனோ நாளடைவில் அவை அமைதியடைந்து விட்டன.அதற்கிடையே அந்நியமாதல் கலைகளில் மேலெழும்பி தனிமனித இருப்பைக் கோருதல் மன விடுதலை அடையும் மார்கங்களில் அடைக்கலமாதல் போன்றவற்றை பேசு பொருளாக்கின .விருப்பத்திற்கும் நடைமுறைக்கும் இடையே பாரதூராமாகிவிட்ட கலைப்பண்புகள், அறிந்ததனின்றும் விடுதலை தற்கணத்தில் வாழ்தல் அரசதிகாரக் கெடு பிடிகளுக்கு மாறாக கலையில் தன்னிருப்பை அதன் வாழ்வுறுதியை வேண்டல் எனும் வகையில் அரச இறையாண்மையைக்காட்டிலும் தனிமனித இறையாண்மை ஒரு அறிவுசார் பௌதீக ஆன்மீகத்தளத்தை எட்டியிருப்பதாகவும் வாதித்தனர் அதற்கான ஆசிரியப்பண்பை அவர்கள் நவீனத்திற்குள் இடப்படுத்த முயன்றனர்.
கலையில் எழும்ப முயன்ற உரிமைசார் கோஷங்களின் அல்லது மக்கள் போராட்டங்களின் மீது அபத்தங்களைச்சுமத்தி அல்லது அதன் மீதான அவநம்பிக்கையின் பாற்பட்டு புற அரசியலை நீக்கி கலை தன்னிச்சையானது என்றும் படைப்பாளிகளின் அகம் இக்கட்டுகளுக்குள் அடங்காது எனவும் தனிச்சுற்று கண்டார்கள் இயற்கையோடு அழகியல் உறவுகளைப்பேணுதல் அதை அறியமுயலுதல் அதனுள் கரைந்து போதல் போன்றவையே பிரதானப்படுத்தப்பட்டது. நீங்கள் மேற்சொன்ன படைப்பாளிகளில் பல வித்தியாசங்களும் தென்படுகின்றன என்றாலும் அவர்களுக்குள் போதங்களும் விரும்பிய வடிவெடுக்கும் நிலைப்பாடுகளும் (டிசையர்) அரசியலாக இருந்தன என்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் அவர்களுக்கிடையே கலையின் யாதார்த்தத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட மோதல்களில் நமக்கு பல சிறந்த படைப்புகளும் கிடைத்தன. அத்தகைய இலக்கியங்களில் உணர்வெழுச்சிகளின் நடனங்களும் இருந்தன. தனி மனித விடுதலை என்பதும் ஒரு உட்டோபியன் தான். அவை தமக்குள் பலரை ஆறுதல் படுத்தவும் தங்கள் ஒப்புதல்களை வாசகப்பரப்பில் முன்வைக்கவும் அதிக வெளிப்படைத்தன்மைகளை ஏற்பதில் தாராளப்போக்கையும் கடைப்பிடித்தன என்றும் சொல்லலாம் அவையே நவீனத்தின் சாதனைகளாகவும் மேற்சொன்ன அமைதியடைதல் என்பதன் சுருக்கமாகவும் விளங்கின .
கலகம் அராஜகப்போக்கு நிறுவன எதிர்ப்பு மாற்றங்களை ஏற்பது போன்றவற்றில் ஏதொரு புரட்சிகர அம்சமும் இல்லை என்பதாய் இச்சன நாயக முறையியலுக்குள் நிலவிய இலக்கிய ஸ்டேட் அத்தாரிட்டி அங்கீகார இலக்கே நவீனத்தில் அனேகம் அழகியல் மறுபிரதிகாளாயின. ஆனால் நவீனத்துவத்தின் போதாமை பற்றி விமர்சனமும் அதனால் உண்டான எதிர்கதையாடலையும் மற்றமையின் எந்த ஒரு புள்ளியில் இருந்தும் மாற்றாக தொடங்கிய யார் ஒருவரையும், நவீனத்துவம் தங்களின் குழு மனப்பான்மையின் விலக்கு விசையால் அதிலிருந்து தூக்கி எறியவே முயன்றது இருநூற்றாண்டு நவீனத்தின் மைய வலிமை சாதாரணமானதில்லை அதன் அப்பாவிகள் எனவும் யாருமில்லை நவீனத்தில் தனிநபர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளின் இலக்கிய அந்தஸ்து ஒருபுறம் இருக்க மாறாக பின்நவீனத்தில் எழுத வந்த சிலரை அராஜக வாதப் போக்கு என நிறுவி கலையில் அவர்களை உதிரிகளாக்கி விட்டே அவை தம்மை தூரப்படுத்திக் கொண்டன.விசுவாசமற்ற கலைகளின் மீது கண்காணிப்பும் அவற்றை குற்றப்படுத்துதலும் தனிமைப்படுத்துதலும் நிகழ்ந்தது . இத்தகைய முரணியக்கத்தின் விளிம்பில் நிற்கும் பலரில் நானும் ஒருவன்.பின்காலனியக்கவிஞன் என்பதும் அடையாளப்படுத்துதலில் சுலபமாகத்தானே இருக்கிறது.சில மரபுகளை மீற உற்பத்தி உறவு சார்ந்து அதுவே துணையாகவும் இருந்தது.
3) ‘நிறுவனங்களின் கடவுள்’ முழுமையடைந்த பிரதியாக ஏற்றுக் கொள்கிறீர்களா? படைப்பிலக்கியத்தில் முடிவடைதல் என்பதன் மீதான மாற்றுக் கருத்தினை பின்காலனியம் ஏற்றுக் கொள்வதில் முரண்கள் இருக்கிறதே?
பின் காலனியம் என்பது அதன் உற்பத்தி உறவுகளை முன்னிருத்தியே பேச முயல்கிறது.பதில்களோ கேள்விகளோ அங்கு ஏதுமில்லை அது தன்னை ஏற்கும்படி வைத்துக்கொள்கிறது.பின் அமைப்புவாதிகள் படைப்பாளிகளின் சுயத்தை கலைத்தார்கள். படைப்பாளி இறந்து விட்டான் என்றார்கள் இங்கு என்ன நிகழ்ந்தது பிரதிகள் பெருகியதைத்தவிர! தொடர் உருமாற்றம் அதிகார ஆசிரியப்பண்பை ஒன்றும் செய்ய முடியவில்லை. வழிபாடு இருக்கும் வரை கர்ப்பகிரகம் ஒளிரத்தான் செய்யும். உண்மையில் நிறுவனங்களின் கடவுள் எனும் கட்டுரைத்தொகுப்பு பிரதிகளின் மோதல் நிலைகளை பிடிக்க முயன்றது.
நீண்டகாலப்பீடிப்புகளின் மீது அமைதியின்மையைச் சுமத்தியது பொறுப்புத்துறப்புகளே நிறுவனங்களின் சுயேட்சைத்தன்மை என அவதானித்தது. உலகமயமாதல் ,பின்காலனீயம், நகரமயமாதல், ஒற்றைப்பேரரசு எனும் வளர்ச்சி போக்கில் ஏக போக மூலதனப்பரவல் யாவற்றையும் அரசியல் மயப்படுத்தி தனக்கு கீழ் கொண்டு வந்த பின்பு அவை பல்வேறு வித்தியாசங்களை அழித்துப்போட்டு விட்டன என்பதையும் மனித வெற்றிடம் உருவாகி வருவதையும் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயணங்களின் வழி சேகரித்து எழுதியதுதான் அத்தொகுப்பு. இந்த கோவிட் காலத்தில் மக்களை மக்களிடமே ஒப்படைத்து நீங்கள் இன்று உயிரோடு இருப்பதையே லாபம் எனக்கொள்ளுங்கள் என எல்லா அரசுகளும் அறிவிக்கின்றன அக்கட்டுரைகளில் இத்தகைய யூகங்கள் இருந்ததென நினைக்கிறேன். அத்தொகுப்பு குறித்து இதுவரை ஒரு மதிப்புரையும் வரவில்லை என்பது முக்கியமானது. பிரதி முடிவடையவில்லை இயங்குகிறது என்றுதானே சொல்லவேண்டி இருக்கிறது.அல்லது துல்லிதமாக ஒன்றை யோசித்து முடிக்கையில் அதன் தோற்றம் மாறிவிடுகிறது இல்லையா?அல்லது பூஜ்ஜியபாகை எழுத்து முறை ஒன்று இருக்கிறாதா என்ன?
4) கவிதைகளுக்கு மாற்றமடையும் முகங்களென்று ஏதும் இருக்கிறதா? கவிதைகள் படைக்கப்படும் சூழலை விட்டும் செய்யப்படுகின்ற சூழல் இன்று அதிகமாயிருக்கிறதே? இதனைத்தான் நவீனம், பின்நவீனம் என பிதற்றிக் கொள்கிறோமா?
ஒரு படைப்பாளி என்னதான் தன் நனவிலி மனதில் அல்லது ஆட்டோரைட்டிங்கில் படைப்பை எழுதினானாலும் தன் தேர்வை இடையில் வைக்காமல் அதைத்தரமாட்டான் க்ராஃப்ட் என்பது அதுதான் அவனை அகம் மட்டுமல்ல புறப்பொருளும் இயக்குகிறது தொன்மங்கள் சடங்குகள் என மரபு வழிப்பட்ட செய்வினைகளும் சகுனங்களும் அதில் உண்டு செய்யப்படுவதுதான் அருளப்படுவதில்லை கவிதை நீங்கள் கிளிஷேக்களைப் பற்றித்தான் கேட்கிறீர்கள் ஒருகவிஞர் எல்லோரும் புழங்கும் மொழியை எடுத்துக்கொண்டு யாரும் சொல்லாதனவற்றைச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஒருபிரதியில் பல முன்னோடிகளின் பங்கும் இருக்கிறது ஆகவே அது தொகுக்கப்பபட்ட பிரதிதான் படைப்பாளி உரிமை கோரினால் அவனால் ஏன் எழுதாமல் இருக்கமுடியவில்லை என்ற கேள்வியும் எழும் .அப்போது அவன் தன்அரசியலைத்தான் செய்கிறான் புலப்படும் வகையில் இருக்கும் அவனை அவன் சுயத்தை விமர்சிக்க வேண்டும் எதைமறைத்தான் என்றும் எதைக் க்ளெய்ம் பண்ணுகிறான், எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான், எனவாய்ந்தால் எல்லாம் அரசியலே! கதையாடல்களே! அங்குதான் கவிதைகளின் முகம் மாற்றமடைவதை காணநேர்கிறது. இன்றைய பிம்ப ஊடகப் பெருக்கத்தில் நகல்களின் மீது நகல்கள் விழுந்து கொடிருக்கும் போது மூலம் அகற்றப்பட்டு நகல்களையே உண்மையாய் ஏற்று கொள்வது என ப் பழகிய பின்பு ஒருவர் கவிஞராகி விடுவது சுலபம்தான்.அதுவும் சுற்றுச்சூழல் மாசுகளில் ஒன்றுதான்.தஸ்தா வஸ்கியின் நாவலொன்றை தன்கையால் மறுபடியும் அப்படியே எழுதி பதிப்பகத்தாரிடம் ஒரு பெண்மணி கொண்டு போன போது இது தஸ்தாவஸ்கியின் நாவல்தானே என்று அவர்கள் சொல்ல, அப்பெண்மணி மிக அமைதியாக இல்லை இது என் கைப்பட எழுதியது என்றாராம். இதில் எது நவீனம் எது பின்நவீனம் என்பதை உங்கள் அனுமானத்திற்கே விடுகிறேன்.
5) முரண்பாடுகளை ஏற்றுக் கொள்கின்ற அல்லது மறுதலிக்கன்ற போக்குகள் படைப்பாளிகளிடத்தில் பெரிதும் குறைந்து வருகிறதே. பின்காலனித்துவக் காலத்தின் நீட்சியான படைப்பிலக்கிய தோல்வியாக இதனை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
இக்கேள்வி உண்மையில் நாம் யாருடன் இருக்கிறோம் என்பது குறித்தான ஒன்று அவர்களுடன் நாம் இல்லையெனில் நாம் கொல்லப்பட வேண்டியவர்கள் என அர்த்தம் முரண்பாடு என்பது மனிதனுக்கும் பொருள்களுக்கும் இடையே எனத்திரிந்து விட்டது அது கூலி உழைப்பு சுரண்டல் போன்ற வற்றை கடந்துவிட்டதாக சுருங்கி வாங்கும் திறனுள்ளவர் வாங்கத்திராணியற்றவர் என மக்களை இன்றைக்கு சந்தைக்குமுன்பு பாகுபடுத்தப்பட்டு விட்டது. அதற்கான தாராளப்பொருள்முதல்வாதம் வெறிநாய்களைப்போல கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டோ அல்லது மிதித்துக்கொண்டோ அவர்கள் கூச்சலிடும் போது ஊடகங்கள் அவர்களை சமாதானப்படுத்துகின்றன அத்தியாவசியம் குழப்பபட்டு அநாவசியம் பின்நவீன அழகியலைப்பெறுகிறது விரிச்சுவல் உலகில் வழங்கப்படும் அனைத்தும் சலுகை போல இன்பம் போல அடுக்கப்படுகிறது உண்மையில் இன்னும் மக்கள் வாங்கும் சக்தியில்தான் இருக்கிறார்களா? இல்லை அனேகப்பொருட்கள் சந்தையில் வீணாகின்றன அப்படியானால் அவை எவ்வாறு தம் மூலதனத்தைத்திரும்பப் பெறுகின்றன? இங்குதான் பன்னாட்டு ஒப்பந்தங்கள் நிறைவேறுகின்றன உள்நாட்டுத் தாதுக்களுக்காக அந்நிய தொழிற்சாலைகளுக்கான நிலங்களாக மேன் பவர்களை சுரண்ட அனுமதிப்பதாக கழிவுகளை வந்து கொட்டிச்செல்வதற்காக அனுமதியை மாற்றிடாகப் பெற்றுக் கொள்கின்றன. படைப்பிலக்கியங்களைப் பொறுத்த வரையில் இவற்றை ஏற்று புரிந்து கொள்வதன்றி இவற்றை எழுத வேறு யாரோ இருக்கிறார்கள் எனவும் நம்புகிறது. ஆனாலும் அவை சூழலில் கவனம் பெற்றுவருவதை மறுப்பதற்கில்லை அத்தகைய எழுத்துகள் தொடர்கின்றன அவை கலையாவதில் உள்ள பிரட்சனைகளை விட நாஸ்டாலிஜியா ரொமான்டிசிச க்ளாசிக் வகைகளையே வாசகர்களுக்கு கொடுப்பதில் நமது படைப்பாளிகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் இதைத்தான் தோல்வி என்கிறீர்களா என்னைப்பொறுத்த வரையில் அவை ஹைடு வகையிலானவை அல்லது அதை எழுதப்பழக்கப்படாதவை என்பேன் லத்தீன் அமெரிக்க எழுத்துகள் அதிகம் மொழிபெயர்க்கப்படுவதை வாசிப்பில் வைத்துக்கொண்டு இருத்தலியலை துன்பவியலாக தனிமையை கழிவிரக்கமாக எழுதுபவர்களே இங்கு அதிகம் சாதிய மத முரண்பாடுகளே இங்கு இன்னும் பேசித்திராத புத்திலக்கியங்களாய் உள்ளன.அதிகம் பின் தங்கியுள்ளோம்.அந்நியமாதலே நிகழாமல் நிலையாமையை ஏற்றுக்கொண்ட நாடு இந்தியா காரணம் சாதிப் பெருமிதம்.இது பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையரின் ஒருங்கிணைவு நிகழாமல் போன இலங்கைக்கும் பொருந்தும்.தோல்விகளுக்குப்பஞ்சமா என்ன?
(30.06.2021)
6) தமிழ் கவிதைகள் திராவிட அரசியலாக மாற்றமுற்றிருக்கிறது எனும் உங்களின் கருத்துக்களிலிருந்து படைப்புக்கள் மீதான அரசியல் பார்வை விரிவடைந்திருக்கிறது. இலங்கை போன்ற பிற நாடுகளில் வாழ்கின்ற தமிழ் வாசகர்களுக்கு திராவிட அரசியல் படைப்புக்கள் அந்நியமானது. உங்களது படைப்புக்களில் பேசப்படும் அரசியல் பொதுவான வாசகப்பரப்பினை ஊடறுத்து விடாமல் இருப்பதற்கான காரணியாக இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
திராவிடம் என்றால் அது ஒரு அரசியல் யாப்பு எனப்புரிந்து கொள்ளவேண்டும். அதில் பல மொழிக்குடும்பங்கள். கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, துளு என இன்னபிறவும் இருக்கின்றன. திராவிட நாடு எங்கே இருக்கிறது என்பவர்கள் ஒருங்கிணைக்கபட்டிருக்கும் இந்திய வரைவெல்லைகளை கேள்வி கேட்பதில்லை. இந்தியாவைப்பொருத்தவரையில் வடக்கும் தெற்குமாக அது எல்லாவகையிலும் ஒரு முரண்பாட்டை வைத்திருக்கிறது. தமிழின் கலைமற்றும் அறிவுப்பண்பு ஆசீவக அமண முறையிலிருந்து அதன் தொடக்ககால இலக்கியங்கள் மற்றும் சமயங்களின் வித்தியாசங்களுடன் பேரடையாள அல்லது ஒற்றைமைய அரசியல் அதன் மதவாத அதிகாரங்களுடன் பொருதியே வந்திருக்கிறது. பன்மைப்பட்ட கலாச்சாரங்கள் நிரம்பிய மக்கள் தொகுதிகளை பொது அடையாளத்தின் கீழ் நிறுத்தும்போது பொதுவென்பது யாரின் வர்க்கநலனாய் இறுதியடைந்து, பிறகு யாருக்கு அதை மறுக்கிறது என்கிற புள்ளியை அடையும் போது மைக்ரோ லெவல் அரசியல் துவங்கித்தான் விடுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் கீழ் பன்மைத்தன்மைகள் நசுக்கப்பட்டுவிடுகின்றன. திராவிட அரசியல் என்பது கடவுள்மறுப்பு, அரசுநலன்சார் பிராமணீயத்திற்கான எதிர்கதையாடல், சுயமரியாதை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சமூக நீதீ அனைவருக்குமான கல்வி, தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, பெண்ணடிமைதனத்தை நீக்குதல் என பல அறிவியல் பரிமாணங்கள் கொண்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியப் பெருந்தேசிய அரசில் வலுவாக இடம்பெற்றிருந்த கட்சிகளை கைவிட்டு மேலும் மதங்கள் சாதிகளை மறுத்து திராவிட அரசியலின் ஆட்சியை ஒரு சட்டமன்றத்திற்குள் கொண்டுவருவது சுலபமா என்ன? எத்தனை போராட்டங்கள்? சீர்திருத்தப்பிரச்சாரங்கள் ? மேற்சொன்ன மொழிக்குடும்பங்கள் அனைத்தும் திராவிட யாப்பில் இணையவில்லை . இணைந்தால் அதையும் பெருந்தேசியம் என வரையறுக்கலாம் அப்பிடி இல்லையே! தமிழ்நாட்டில் திராவிடம் சிறுபான்மை அரசாகவேதான் இன்னும் இருக்கிறது. அதன் இன்றைய இலக்கியங்களில் நீங்கள் பழைய பக்தி மார்க்கங்களையோ, மூடநம்பிக்கைச்சாயல்களையோ, பண்ணைத்தனமான வழிபாடுகளையோ காண இயலாது. நிலை மறுப்பின் நிலைமறுப்பாய், மாறும் உரிமைகளின் தொகுப்பாக தொடர்பாடலாக சீர்த்திருத்த இயங்கியல் தன்மையாக திராவிடம் நவீன அடையாளம் பெற்று இருக்கிறது. வடக்கை ஒப்பிடும் போது இதை நன்றாக உணரமுடியும். இலங்கைக்கு பெரியார் வந்து போனதும் இன்று ஜெயமோகன் வந்து போவதும் ஒன்று எனச்சொல்லமுடியுமா? வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்று நீங்கள் கொழும்பிற்கு வைக்கும் கோரிக்கைகளில் மேற்சொன்ன திராவிடச்சாயல் இல்லையா? கலையை அழகியலை அதிகாரமாக்கி வணங்கச்சொல்லும் எதுவும் காலக்கிரமத்தில் தகர்க்கப்படும் எனும் படிக்கு இன்றைய உலக வரலாறுகள் காட்டும் படிப்பினைகள் முக்கியமானவை . சிங்களப் பேரினவாதம் பௌத்த பேரினவாதமாக ஆகும்போது அங்கு தமிழர் தமிழ் பேசும் இஸ்லாமியர், கிறித்துவர் என்றா பேதம் காட்டி இருக்கும் .இந்தியத்தலையீட்டிற்குப்பிறகு அங்கே தமிழர் என்பது மாறி அவர்கள் யாவரும் இந்திய இந்துக்கள் என உள்வாங்கப்பட்டிருந்தால் பௌத்தப்பேரினவாதத்தின் தீவிரம் ஒருவேளை மிகையாக்கப்பட்டிருக்கலாம்தானே கிழக்கிலங்கை அரசியல் இன்னும் உரிமைகள் கோரும் யாப்பாகத்தானே இருக்கிறது.(இதற்கிடையே இலங்கையோடு சீனபௌத்தமும் கைகோர்க்கிறது) அய்ரோப்பிய பழைய காலனீய ஒன்றியங்கள் மேலும் பரபரக்கின்றன. எப்போதும் யாருக்கும் ஆபத்து சூழ்ந்திருப்பது போன்ற செய்திகள். அதற்கிடையே நிலவும் சனநாயக கருத்துருவாக்கங்களுக்கும் அவற்றின்நடைமுறைக்கும் இடையே பாரதூரமான விரிசல் விழும் போது முரணியக்கம் தீவிரமாகத்தானே செய்யும். இத்தகைய புரிதலோடு பின்காலனிய கட்டத்தில் மாறிவரும் இன்றளவான யுனிவர்சல் அமைப்பை கவனத்தில் கொண்டுதான் என்கவிதைகள் அதன் நனவிலி அம்சத்தோடு சமகாலம் காண்கின்றன எனலாம் . அறிவிற்கும் மனதிற்கும் கலையில் அழகியல் காண செலவழித்த கன காலங்கள் நம்மை இன்று நசித்துப்போட்டிருக்கிறது அதற்கிடையே தாராளவாத பொருளாதாரத்தின் சந்தையில்தான் இந்தக்கவிதைகளும் பித்துக்குளியாக அலைகின்றன. திராவிடமும் மார்க்ஸீயமும் நவீனத்தினுள் ஊடறுத்த பாதையில்தான் பின்நவீனத்துவமும் பாய்கிறது. பொது வாசகப்பரப்பு என்பது நினைவுமறதிகளையும் அவசரங்களையும் கொண்டதன்றி வேறென்ன. கலையை ஒரு பண்பு நிலைநோக்கு என்பார் ஃபூக்கோ! அது தனிமனிதருக்கானதா? அல்லது அரசதிகார நிறுவன விதிமுறைகளுக்கானதா? அதிகாரத்திற்கு எதிரான அரசியல் கதையாடல்களே இன்றைய கலைகள்.
7) உங்களது பெரும்பாலான கவிதைகள்; பொதுப்புத்திப் பார்வையில் அல்லுண்டு போன மனிதர்களின் வாழ்வியல் குறித்து பேசப்பட்டிருக்கிறதே. இதற்கான கவனயீர்ப்பும், சார்பு விமர்சனங்களும் உங்கள் படைப்புக்களின் எதிர் கதையாடலுக்கான வழியினை மூடி விட்டிருக்கிது. இதனை ஆரோக்கியமான போக்காக கருதுகிறீர்களா?
எதிர்கதையாடல் இல்லை என்கிறீர்களா? ஆபாசப் பிரதிகளை எழுதுகிறார், பெண்ணுறுப்புகள் பற்றி ஆர்வப்படுகிறார், நிறுவன எதிர்ப்பும் தனிப்பட்ட வசைகளும் அதில் உள்ளன என்று விமர்சனங்களைச்செய்பவர்கள் முதல், விருது வழங்குபவர்கள் வரை பலரிடமும் என்கவிதைகள் மீது அலர்ஜி உண்டு. அதே சமயம் தமிழில் மார்க்ஸீயக்கவிஞன் பின்காலனியக்கவிஞன் பாலி போனிக் வகையில் மையமற்ற கவிதைகளும் எழுதும் ஒரு சிலரில் இவரும் ஒன்று என்பவர்களும் உண்டு.சார்க்காஸ்டிக்கான கைப்புநிலை உலகை எழுதுபவர் என்கிறார் தோழர் யமுனா ராஜேந்திரன். தன்பால் புணர்ச்சியை தவறு என்று சொல்பவர்களிடம் எப்படித்தவறு என்று சொல்லச்சொல்லுங்கள். உடனே குடும்பக்கூச்சலையும் பதற்றத்தையுமே வெளிப்படுத்துவார்கள். மையப்பாலுறவை புனிதம் என்பவர்கள் பன்மைத்துவ பாலுறவு யதார்த்தத்தை மறுப்பார்கள்; அமைப்பு அப்பிடி. அரசின் அடிப்படை அலகு குடும்பம் அல்லவா? வரலாறு ஒழுக்கம் நீதி போன்றவை நிறுவன அந்தஸ்தை எடுத்துகொண்டுவிட்டன.
கடந்தகாலங்களின் இழப்பை ஞாபகப்படுத்தினால் வரலாற்றை திரும்பப்படி என்பார்கள். ஏனெனில் இங்கு மக்கள் என்பது வெற்றிடம் நியதிகள் மட்டுமே சாஸ்வதம். அவை மஞ்சள் சிவப்பு பச்சை என சமிஞ்கைகளால் டெர்மினேட்டர் குறியீடுகளால், விதிகளால், ராணுவ கட்டளைகளால் நம்மை வழிநடத்துகின்றன. மனிதன் முதலீடு செய்யப்பட்டுள்ளான் என தெல்யூஸ் சொல்வது எவ்வளவு உண்மை. போஸ்ட் ட்ரூத் என்கிறார்கள் கருத்துகளின் மோதல் காலம்மற்றும் நகலாக்கம் ஊடக பிம்ப மெய்மைகள் மூலநீக்கம் என்றெல்லாம் வந்துவிட்டது இன்று ஒரு படைப்பாளி தன் தணிக்கைக்கு உட்பட்டு தன்படைப்பினுள்ளே அதன் மொழிக்குள்ளே தானே வாசகனாகவும் விமர்சகராகவும் ஆய்பவராகவும் இருக்க முயல்கிறார். அதுவே மூடிக்கொண்டிருப்பதாகத்தோற்றம் தருகிறது உண்மையில் அது ஒரு திறந்த நிலைதான். எதிர் கதையாடல்களில் சுய தணிக்கை இல்லாமல் அதை ஆரோக்கியத்துடன் அணுக முடியாது. பொதுப்புத்தி என்பது வாழ்ந்து இறந்து முடிந்த நிலை என்றாலும் அசரீரி போல அதன் சப்தம் அத்துவானத்திலும் கேட்டபடி இருக்கும்.
8) படைப்பிலக்கியங்களின் விரிந்த பரப்பில் இற்றை வரைக்கும் இயங்கிவருகிறீர்கள். வாசக மனத்தில் அதிக கேள்விகளை எழுப்பக்கூடியதும், உரையாடலுக்கான நீண்ட வெளியினை உருவாக்கக் கூடியதுமான இயங்கியலாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என இம்மூன்றில் எதனை முன்வைக்கிறீர்கள்? அது குறித்த உங்கள் படைப்பரசியல் நிலைப்பாடு என்ன?
கடந்த இருபது வருடங்களாக உலகெங்கும் நடந்து வருவதைப்பார்த்திருப்பீர்கள். எழுத்துகளில் நான் பிக்ஷன் வகைகளே அதிகம் பதிப்பாகி இருக்கின்றன. அவ்வளவு கோட்பாடுகளும் விஞ்ஞானமும் கலையைமட்டுமின்றி வரலாறு மதம் அரசாதிக்கம் அனைத்தைதையும் துளைத்துள்ளன. தொன்னூறுகளுக்கு முன்பு நாவல், சிறுகதை, கவிதை, மொழிப்புலமை, செவ்வியல், கல்விப்புலம் என்றிருந்த நிலையை விட இக்காலங்களில் உலகமயமாக்கல், நகரமயமாக்கல், ஓருலகமயமாக்கல், சுற்றுச்சூழல், புவிவெப்பம் என பல கட்டுரைகள் உலக அரங்கில் வாசிக்கப்படுகின்றன. நவீன மின் அணுத்தொழில் நுட்பம் வழியாக கலை மற்றும் விளையாட்டு, பாலுறவுகாட்சிகள், விளம்பரங்கள், வாழ்த்தட்டைகள் என ஒரு புறம். அவை பின்நவீன நிலையை நோக்கில் நகர எதிர் கொள்ள வேண்டிய தகவமைப்பு மற்றும் மாற்றங்களை நான் பிக்ஷன் வகைகளே ஆர்வப்படுத்துகின்றன. மனிதக்கதைகள் தாண்டி விஞ்ஞான விண்வெளி யூகங்கள் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் பெண்ணிய வரலாற்றுப்பார்வைகள் பால் அமுக்கங்கள் பற்றிய உளவியல் ஆய்வுகள் பெருகியுள்ளன. பகுத்தறிவின் பயங்கரவாதங்கள், இலுமினாட்டிகள், மோனொப்பிலிகள், மாஃபியாக்கள், பொருளாதார அடியாட்கள் என பெரும் வாசிப்பு நிகழ்ந்திருப்பதைப் புனைவுகள் அனுமானிக்க வேண்டும். இவை படைப்பை புனைவை சவாலுக்கு அழைத்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும் ஆயினும் கலையே மனிதருக்கு நெருக்கமானது . வில்லியம் பரோஸ் சொல்வதுபோல கலைக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள மெல்லியகோடு மறையத்தான் வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒர்பழைய செவ்வியல் குடும்பம்தான் நாம். நமக்கு கதைகள் தேவைப்படுகின்றன ஆயினும் நம்பிக்கைகளை விட தகவமைப்பு முக்கியமாகிறது ஒரு வளர்ந்த சமூகம் என்பது கனவா விடுதலையா என்பதை ஆய்வுகளே கோட்பாடுகளின் வழியாக கலையிடம் பரிந்துரைக்கின்றன.
9) இந்த நேர்காணல் வரைக்கும் இறுதியாக வாசித்த படைப்பு எது? அப்படி என்னதான் அதில் உள்ளது?
சில கவிதைத்தொகுப்புகள் இணையத்தில் சிறுகதைகள் என்று பலதையும் லாக்டவுன் காலத்தில் வாசித்து வந்தாலும் கோபால் குருவும், சுந்தர்சருக்கை இருவரும் விவாதித்து எழுதிய “விரிசல் கண்ணாடி” அனுபவம் கோட்பாடு குறித்து ஒரு இந்திய விவாதம் எனும் நூலை சீனிவாசராமானுஜம் அவர்கள் தமிழில் மொழிபெயர்க்க அது எதிர் வெளியீடு நூலாக வந்துள்ளது. இன்னும் முழுமையாக முடிக்கவில்லை என்றாலும் ஹைரார்க்கி என்பது எப்படி வரலாறு முழுதும் அரூபமாக ஓரப்படுத்துதலை நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை விடுபடல்கள் அற்று ஆழமான சமூக ஆய்வாக பலதளங்களில் துல்லியமாக கவனப்படுத்தி இருக்கிறார்கள். தலித்திய நோக்கில் அற்புதமான தொகுப்பு. முழுமையாக வாசிக்க வேண்டும்.
(02.07.2021)
-யவனிகா ஸ்ரீராம்
Please follow and like us: