சிவத்தம்பியும் யாழ்ப்பாணச் சமூகமும்
தான் வாழும் சமூகத்தின் வரலாறு, சமூக உளவியல் மற்றும் கருத்துநிலை என்பவற்றை ஆய்வுரீதியாக அணுகி அதன் பலம், பலவீனங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதும், அதை உரையாடல்மயப்படுத்துவதும் ஒரு அறிவுஜீவியின் முக்கிய கடமையாக இருக்கிறது. அறிவுஜீவி என்ற வகையில் சிவத்தம்பி இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார். யாழ்ப்பாணச் சமூகம் குறித்து ஒரு புறவயமான பார்வையை அவரளவுக்கு யாரும் முன்வைத்ததில்லை. இலங்கைத் தமிழ்ச் சமூகப், பொருளாதார, கல்வி மற்றும் சிந்தனைவெளியிலும், தமிழ்ச் சமூக அமைப்பிலும் எல்லா வகையிலும் தங்களை மேல்நிலையில் கருதிக்கொண்ட சமூகம் யாழ்ப்பாணச் சமூகம். இலங்கைத் தமிழர் சமூக அரசியல், கல்வி, சமயத்துறைகளிலெல்லாம் இங்கிருந்துதான் முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் அதுவே இலங்கையின் ஏனைய இடங்களிலுமுள்ள தமிழ் மக்களின் தெரிவாக முன்வைக்கப்பட்டது.
அப்போது யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூக சிந்தனைக்கு சமாந்தரமான அல்லது மாற்று சிந்தனையை
முன்வைக்கத்தக்கதாக இலங்கையில் ஏனைய பிராந்திய தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கவில்லை என்ற சமூக யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் கல்வி எழுச்சியோ, சமய எழுச்சியோ, அரசியல் எழுச்சியோ, விடுதலைப் போராட்டமோ முதலில் அங்கிருந்துதான் (யாழ்ப்பாணம்) தோன்றியது. எனவே அறிவுஜீவித்துவப் புலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் குறித்து உண்மையில் ஆழமாகப் பேச வேண்டிய, மதிப்பீடுகள் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் சிந்தனையை, கருத்தியலை எது கட்டமைத்தது? அதன் இன்றைய வளர்ச்சிக்கு அல்லது வீழ்ச்சிக்கு எது காரணம்? போன்ற விசயங்கள் மிக முக்கியமானவை. இலங்கையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீது சற்றுத் தாழ்வான பார்வையைக் கொண்டவர்களாக அவர்கள் பல்வேறு மட்டங்களிலும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக உளவியல், அறிவு மனப்பாங்கு போன்றவற்றில் யாழ்ப்பாணச் சமூகத்தை ஏனைய பகுதி தமிழ் மக்களோடு ஒப்பிட்டு பார்ப்பதன் மூலமே ஆழமாக இந்த விசயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
யாழ்ப்பாணச் சமூகத்தை அதன் சமூகவியல்- பண்பாடு-கருத்துநிலை சார்ந்து சிவத்தம்பி ஆய்வுரீதியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தார். யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் என ஒரு சிறு ஆய்வு நூலாக அதனை வெளிக்கொணர்ந்தார். யாழ்ப்பாணச் சமூகம் குறித்த சிவத்தம்பியின் இந்த ஆய்வு நோக்கானது யாழ்ப்பாணச் சமூகம் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்வதற்கு ஒப்பான ஒரு ஆய்வுமுறையாகும். தங்களது அறிவு,மனப்பாங்கு, பண்பாடு குறித்து தங்களது நியாயங்களுக்கு அப்பால் பிறர் என்ன கருதுகிறார்கள் என்ற புறநோக்கான ஆய்வுகள் ஒரு சமூகத்துக்கு மிக முக்கியமானதாகும். நமக்கு உண்மையில் நமது பலம், நிறைகள் மட்டுமே தெரிகிறது. நமது பலவீனம், குறைகள் என்பன மற்றவர்களின் பார்வையிலேயே துலங்கக்கூடியது. இதனை ஒரு அறிவுஜீவி ஒரு சமூகத்தின் உள்ளிருந்தே செய்ய வேண்டிய பொறுப்பிலிருக்கிறான். அத்தகைய ஆய்வுகள் அந்த சமூகத்தை மேலும் வளப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். இத்தகைய ஆய்வுகள் சிங்கள சமூகத்தில் நியூட்டன் குணசிங்க, R.A.L.H. குணவர்தனா, குமாரி ஜெயவர்தன, கணநாத் ஒபேசேகர போன்ற அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரதிஸ்டவசமாக இத்தகைய ஆய்வுகள் இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்து மேற்கொள்ளப்படவில்லை.
யாழ்ப்பாணச் சமூகம் குறித்து இத்தகைய சமூகவியல், பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படவில்லை என்ற மனக்குறை சிவத்தம்பிக்குள்ளது. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் (1993) என்ற தனது சிறு ஆய்வினூடாக அந்தக் குறையை ஓரளவு சமன் செய்துகொள்கிறார். அதேநேரம் ‘யாழ்ப்பாண மனிதன்’ குறித்து ஒரு விரிவான பார்வையை இதற்கு முன்னர் வெளிவந்த தனது ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978) என்ற நூலிலும் பேசி இருக்கிறார். அதுவும் ஒரு புறநோக்கான ஆய்வுப் பார்வையாகவே உள்ளது. காலனித்துவ இலங்கையில் யாழ்ப்பாணத்து மனிதன் இலங்கைத் தீவு நெடுகிலும் எத்தகைய மனப்பாங்குடன் நடந்துகொண்டான் என்பதை விரிவாக முன்வைத்துப் பேசுகிறது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் சற்று விரிவான வடிவமே யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் எனும் சிறு நூலாகும்.
யாழ்ப்பாணச் சமூகம் குறித்த சிவத்தம்பியின் பார்வை பின்வரும் தளங்களை மையப்படுத்தி நிகழ்கிறது.
- யாழ்ப்பாணத்தவர் என்றால் யார்?
- ஆங்கிலேயக் காலனிய அரசாங்கத்தின் யாழ்ப்பாண உத்தியோகத்தர்கள்.
- யாழ்ப்பாணத்தவர் குறித்த ஏனைய மக்களின் மனப்பதிவு.
- யாழ்ப்பாண சமூகத்தில் சாதி.
- தேசவழமைச் சட்டம்.
- யாழ்ப்பாண சமூகத்தின் அரசு.
முதலில் சிவத்தம்பி ‘யாழ்ப்பாணத்தவர்’ என்றால் யார் என்பதை வரையறுத்துக் கொள்கிறார். வாழிடம், காலச்செம்மை, திரட்சிபெறும் அனுபவங்கள் ஊடாக உருவாகும் சமூக உறவு ஒரு அமைப்பாகத் திரளக்கூடியது. எனவே அதன் இயல்பு, சிந்தனை மனப்பாங்கு என்பன ஒரேவகையானதாக மாறக்கூடியது. இதனை சிவத்தம்பி “யாழ்ப்பாணத்தை வாழிடமாக கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தவர் என்று சுட்டுவதற்கான நடத்தை முறைகள், சீவிய முறைகள், கண்ணோட்டங்கள், மனோபாவங்கள், ஆகியவற்றைக் கொண்டிருப்பார்” (யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-7, கா.சிவத்தம்பி) என்கிறார். அதாவது யாழ்ப்பாணத்தவர் என்போர் அந்த நிலத்தின், சமூக உறவின், பண்பாட்டின் பிணைப்பால் உருவான ஒரே வகை உளவியல், நடத்தை, அறிவு கொண்ட சமூகமாகும். இதனால் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் “யாழ்ப்பாணத்து மனிதன்” என்பவன், தனிப்பட்ட ஒரு கருத்துருவாக- கோட்பாடாகக் காணப்படுகிறான் என்று குறிப்பிடுவார் சிவத்தம்பி.
இந்த நோக்கு அவரது யாழ்ப்பாண மேட்டிமைப் பார்வையை முன்வைப்பதாக அர்த்தமாகாது. எல்லா சமூகங்களுக்கும் இது பொருந்தக்கூடியதே. கிழக்குத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என அனைவரும் இப்படித்தான் அந்தந்த நிலத்துக்குரிய பண்பாட்டுக்குரிய மனிதர்களாகின்றனர். அவர்களது அறிவை, மனப்பாங்கை தீர்மானிப்பதில் பண்பாட்டுக்கும் நிலத்துக்கும் முதன்மையான பங்குண்டு. உண்மையில் சிவத்தம்பியின் இந்தக் கருத்து ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான வரைபடமாகும். அதாவது யாழ்ப்பாண சமூகத்தினது மட்டுமன்றி உலகின் எல்லா சமூகங்களினதும் மனப்பாங்கையும், நடத்தையையும் சமூக ஒழுங்கையும் புரிந்துகொள்வதற்கு இதுவே வரைபடமாகும்.
சிவத்தம்பி ஈழத்தமிழ்ச் சமூகத்தை இரண்டு பிரதான பகுதிகளாக்குகிறார்.
- மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகம்.
- யாழ்ப்பாணத் தமிழ்ச்சமூகம்.
1993 இலேயே சிவத்தம்பி ஈழத்தமிழ்ச் சமூக அமைவை இந்த இரு தளங்களில் வைத்துப் பார்க்கும் பகுப்பைச் செய்தார். ஆனால் அதற்கு முன்னர் 1975 இல் அவர் வெளியிட்ட ஈழத்தில் தமிழ் இலக்கியம் நூலில் தமிழ்ச் சமூகத்தை மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார்.
- இலங்கையில் பாரம்பரியமாக, வரலாற்றுக் காலம் முதல் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள். இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலே பெருந்தொகையினராகக் காணப்படுகின்றனர்.
- இலங்கையில் வாழ்ந்துவரும் பாரம்பரிய இஸ்லாமிய மதத்தினர்.
- 19ம் நூ.ஆ. நடுப்பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருந்தோட்ட வேலைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியத் தமிழ் மக்கள்.
(ஈழத்தில் தமிழ் இலக்கியம், பக்-12- கா.சிவத்தம்பி)
இம்மூன்று பகுதியினரின் வாழ்க்கையமைப்பே ஈழத் தமிழ் இலக்கியத்தின் சமூக அடிப்படை எனும் கருத்தையும் முன்வைக்கிறார்.
ஈழத்தமிழ்ச் சமூக அமைவின் பிரதான பகுதியினராக யாழ்ப்பாணத்தவர்களைக் கருதும் சிவத்தம்பி அவர்களைப் பற்றி இலங்கையின் ஏனைய மக்களும், ஏனைய பிராந்தியத் தமிழர்களும் எத்தகைய மனப்பதிவைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் விரிவாகப் பேசுகிறார். அவர் பொதுவாக இலங்கைத் தமிழர்கள் என தனியாக மற்றவர்களால் குறிப்பாக சிங்கள மக்களால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் வடமாகாணத் தமிழர்களே என்கிறார்.
“சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் இலங்கைத் தமிழர் என்ற கோட்பாடு இலங்கையின் வடபாகத்தில் வாழும் தமிழர்களையே குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக கிழக்கு மாகாணத் தமிழரிடையே நிரந்தரமான ஒரு மனக்காழ்ப்பு உண்டென்பதும் உண்மையாகும்”
(ஈழத்தில் தமிழ் இலக்கியம்- பக். 159, கா.சிவத்தம்பி)
யாழ்ப்பாணத்து மனிதன் பற்றிய கிராமப்புற மற்றும் மத்தியதர வர்க்க சிங்கள மக்களின் புரிதலே ஒரு நீண்ட வரலாற்றுப் பகைக்கும், தமிழ்-சிங்கள இன முரண்பாட்டுக்கும் கெண்டு சென்றதை எடுத்துக் காட்டுகிறார் சிவத்தம்பி. சிங்கள மக்கள் ஏன் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றி அவ்வாறு கருதினர் என்பதை நுணுக்கமாக பரிசீலிக்கிறார். சிங்கள மக்கள் தாங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களிலுள்ள தமிழர்களைக் கொண்டே இந்தக் கருத்தைப் பெற்றனர். “மொழியால், நடையுடை பாவனைகளால், முயற்சி நெறிகளால் வேறுபட்ட இத்தமிழரை சிங்கள மக்கள் சுலபமாக இனங் கண்டு கொண்டனர்”. இப்படிச் சிங்கள மக்கள் அறிந்த யாழ்ப்பாணத்தார் என சிவத்தம்பி இரண்டு தரப்பாரைச் சொல்வார். 1. சிங்களப் பிரதேசங்களில் வியாபாரம் செய்யும் யாழ்ப்பாண வியாபாரிகள், 2. சிங்களப் பகுதிகளில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள். இந்த இருசாராரின் நடத்தை, மனப்பாங்குகளைக் கொண்டே யாழ்ப்பாணத் தமிழர் பற்றிய மனப்பதிவை சிங்கள மக்கள் வளர்த்துக் கொண்டனர் என்கிறார் சிவத்தம்பி.
ஆங்கிலேய அரசாங்கத்தின் இந்த யாழ்ப்பாண உத்தியோகத்தர்கள் உயர்நிலை அதிகாரிகளாக மட்டுமன்றி, பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நடுநிலை அதிகாரிகளாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றினர். ஓவர்சியர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், புகையிரத நிலைய அதிபர், தபால் கந்தோர் அதிபர் போன்ற பதவிகளை வகித்து வந்தனர். கிராமப்புற சிங்கள மக்கள் இவர்களை அந்நிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ஆட்சியின் வீசுகரங்கள் என மதிப்பிட்டனர். “பதவிநிலை காரணமாக மாத்திரமல்லாது, பதவியை வகித்தவர்கள் தாம் அரசாங்கத்தின் கீழ்ப்படிவுள்ள ஊழியர்கள் என்ற எண்ணங் காரணமாக தமது பதவி அதிகாரங்களைக் கையாண்ட முறையும், அவ்வதிகாரங்களால் தமது “சொந்த” நிலையை முன்னேற்றிக் கொண்ட முறையும் இவர்களை மேலும் அம்மக்களிடமிருந்து அகலப்பிரித்தது” (ஈழத்தில் தமிழ் இலக்கியம்- பக். 160, கா.சிவத்தம்பி)
என இந்தப் பிளவைப் பற்றிக் குறிப்பிடும் சிவத்தம்பி இந்த உத்தியோகத்தர்களின் மொழி, மதம், கண்ணோட்டங்கள் போன்றனவும் அந்தக்கிராமியச் சிங்கள மக்களின் வாழ்வியலோடு இணைந்து செல்ல முடியாமல் அவர்களை தடுத்துவிட்டது என்கிறார். அதேநேரம் ஆங்கிலேய ஆட்சியில் உத்தியோகம் பெறுவதற்கு வேண்டிய ஆங்கிலக் கல்வி வசதி யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு நன்கு வாய்த்திருந்தமை சிங்கள மத்திய வகுப்பாரிடம் தமிழர்கள் மீதான ஒரு விரோத உணர்வை வளர்த்தது.
சிங்கள மத்திய வகுப்பாருக்கும்-தமிழ் உத்தியோகத்தர்களுக்குமிடையில் ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக இருந்தாலும் பண்பாட்டு வேறுபாடு ஒரு பிரிகோடாக இருந்தது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த இனவாரிப்பிரதிநிதித்துவ முறையும் இனவாதக் கோஷத்தை வளர்த்து இறுதியில் சிங்கள மக்களையும்-தமிழ் மக்களையும் பிரித்தது. “ஆங்கிலக் கோமாற்கே தாமென்றும் மீளாவாளாய் அவர் தம் கொய்மலர்ச் சேவடியிணையைக் குறுகி நின்று கொண்டு, அந்தப் பலத்தால் நாம் ஆர்க்கும் குடியல்லோம், சிங்கள மக்களை அஞ்சோம் என்ற ஏகாதிபத்திய தாசானுதாச நோக்கு தமிழ் உத்தியோகத்தர்களை சிங்களவரிடமிருந்து பிரித்தது”. (ஈழத்தில் தமிழ் இலக்கியம்- பக். 160, கா.சிவத்தம்பி)
இந்த நிலைமையினை மேலும் தெளிவாக விளக்கிக் கூறும் சிவத்தம்பி படிப்படியாக வளர்ந்து வந்த இருபக்க அரசியல் கோரிக்கைகளும், கோஷங்களும், சிங்கள மக்களின் சந்தேகங்களும் இரு இனங்களையும் நிரந்தரமாகப் பிரித்தன எனச் சொல்கிறார்.
மேலும் அவர் யாழ்ப்பாண மனிதன் குறித்து இலங்கையின் ஏனைய தமிழ் மக்கள் கொண்டிருந்த மனப்பதிவுகளையும் பதிவு செய்கிறார். இதில் முதன்மையாக முஸ்லிம்களுக்கும் யாழ்ப்பாண மனிதனுக்குமிடையிலான தொரடர்பு குறித்து பேசுகிறார். இலங்கை முஸ்லிம்கள் மொழியால் ஒற்றுமைப்பட்டவர்கள் எனினும் மதத்தால், பண்பாட்டால் வேறுபட்டவர்கள் என்கிறார். முஸ்லிம்கள் இலங்கையில் பரந்து வாழ்ந்தாலும் தென்,மேல், மத்திய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களே இந்நாட்டின் முஸ்லிம் வெகுசன அபிப்ராயத்தை உருவாக்குபவர்களாகவும், வெளியிடுபவர்களாகவும் உள்ளனர். இந்தப் பகுதி முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாசிரியர்களே. அங்கிருந்த முஸ்லிம் மத்திய தர வர்க்கம் தங்கள் பகுதிகளில் கடமையாற்றிய ஆசிரியர்களை பதச்சோறாக வைத்து யாழ்ப்பாணத்தவர்களை மதிப்பிட்டனர். யாழ்ப்பாணத்தவர்கள் தமது முன்னேற்றத்துக்குத் தடையானவர்கள் என்ற கருத்து அங்கே நிலவத் தொடங்கிற்று. இந்தக் கருத்து உண்மையா, பொய்யா என்பதற்கு அப்பால் நிலவியது என்பதே உண்மை என்கிறார் சிவத்தம்பி. அதேபோல், யாழ்ப்பாணத்தவர் பற்றி மலையகத் தமிழ் மக்கள், கிழக்குத் தமிழர்கள், வன்னித் தமிழர்கள் என பலரும் கொண்டிருந்த பார்வைகளைப் பதிவு செய்கிறார். சிவத்தம்பியின் நோக்கின்படி, அனைவரும் எதிர்மறையான பார்வைகளையே கொண்டிருந்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்து மனிதன் குறித்து இந்த மக்கள் கொண்டிருந்த கருத்துநிலைகள் எவ்வளவு தூரம் உண்மையானவை, பொதுமைப்படுத்தத்தக்கவை என்பது தொடர்பில் சிவத்தம்பிக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சமூக மட்டங்களில் நிலவிய கருத்துகள் என்றளவில்தான் பதிவு செய்திருக்கிறார். எனினும் எத்தகைய சந்தர்ப்பங்களிலும் யாழ்ப்பாண மனிதன் மற்ற மக்களோடு இணைந்து செல்வதை விரும்பியவனில்லை என்பதை மிக நுணுக்கமாக வரலாற்று ஆதாரங்களோடு சிவத்தம்பி முன்வைத்துக் கொண்டே செல்கிறார். சிவத்தம்பியின் இந்த நோக்கானது யாழ்ப்பாண சமூகம் குறித்து உள்ளிருந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு நோக்காகும். ஒரு பெரும் முரண்பாட்டுக்கு தூபமிட்டதில் நமது தரப்பிலிருந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளைப் பற்றிய ஓர் அறிவுஜீவியின் மனச்சாட்சியுடன் கூடிய உசாவலாகும். இத்தகைய பார்வைகள் முன்வைக்கபட்டு அதற்கான உரிய அங்கீகாரங்களும் சமூக மட்டத்தில் கிடைக்கும் போது அது சமூக முன்னேற்றத்துக்கு வழிகோலக்கூடியது என்பது மிக யதார்த்தத்தமானதாகும்.
தேசவழமைச் சட்டம்
உலக வரலாற்றில் மொழி, மதம், பண்பாடு, சமூக வழக்குகள், இலக்கியம் போன்றவற்றைத் தோற்றுவித்த சமூகங்களே முன்னணி சமூகங்களாக வரலாற்றில் வாழ்பவையாக அறிவுச் சமூகமாகக் கொள்ளலாம். இலங்கைச் சமூகங்கள் எந்தவொரு மொழியையோ, மதத்தையோ, சமூக சட்டத் தொகுப்புகளையே உருவாக்கி நாகரிகத்துக்குப் பங்களித்தவையல்ல. ஆனால் விதிவிலக்காக யாழ்ப்பாணச் சமூகத்திடம் தேசவழமைச் சட்டம் எனும் ஒரு சமூக சட்டத் தொகுப்பு வழக்காறாக இருந்து வந்திருப்பது அச்சமூகத்தின் அறிவுநிலையை எடுத்துக்காட்டுகிறது.
“யாழ்ப்பாணத்துச் சமூகம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடத்தக்க ஒரு குழுமம் உண்டு என்பதற்கான பிரதான சான்று இந்த சமூகத்தாரினிடையே வழக்கிலுள்ள தேசவழமை எனும் சட்டத் தொகுதியாகும்” (யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-8, கா.சிவத்தம்பி) என்று எழுதுகிறார் சிவத்தம்பி.
யாழ்ப்பாணச் சமூகத்தால் உருவாக்கப்பட்டு சமூகரீதியாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த சட்டமானது ஒல்லாந்தரது ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன. அதனை அடிப்படையாகக் கொண்டே அங்கு நீதிப்பரிபாலணம் இடம்பெற்றது. அப்போது இலங்கையில் வேறு எந்த சமூகங்களும் தங்களாலேயே இயற்றப்பட்ட இத்தகைய சட்டங்களையோ, வேறு பண்பாட்டு அம்சங்களையே உருவாக்கி நடைமுறைப்படுத்தி இருக்கவில்லை எனும் போது இது ஒரு முன்னேற்றகரமான சமூகமாக யாழ்ப்பாண சமூகம் என்பதற்கான ஒரு சான்றாகத்தான் அதனைப் பார்க்கத் தூண்டுகிறது. இந்த சட்டத்தொகுப்பு சொத்துரிமையும் பேறும், சுவீகாரம் செய்தல், காணி, தோட்டம், நன்கொடை, ஈடுகள்-அடைவுகள், வாடகை, கொள்வனவு-விற்பனை, ஆண்-பெண் அடிமைமுறை, வட்டிக் கடன் என ஏழு அத்தியாயங்களில் யாழ்ப்பாணச் சமூக சட்டத்தை விளக்குகின்றன. அவை பிரதானமாக யாழ்ப்பாணச் சமூகத்தின் சமூக கட்டுமானங்கள், பொருளாதார அடிப்படைகள் என்பவற்றை பிரதிபலிக்ககூடியதாக, சமூக நியாயாதிக்கத்துக்கான ஒரு ஏற்பாடு என கணிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது. இச்சட்டத் தொகுப்பானது சமூகத்தின் அடித்தளத்தலிருந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரின் விவகாரங்கள் குறித்தும் கவனம் கொண்டிருந்தது என்பது இன்னொரு கவனிக்கத்தக்க அம்சமாகும். அடிமை குடிமைகளை அவர்களின் கட்டிலிருந்து விடுவித்தல் என்றொரு ஏற்பாடும் இந்த சட்டத் தொகுப்பிலுள்ளது. பொதுவாக சட்டத் தொகுப்பை பார்க்கும் போது ஒரு நாகரிகமடைந்த சமூகத்தின் கண்டுபிடிப்பாகவே இதனைப் பார்க்கலாம். யாழ்ப்பாணச் சமூகத்தின் ஓர் அறிவுக்கொடையாகவே இதனைப் பார்ப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதற்கு இணையான ஒரு புராதன சமூகக் கண்டுபிடிப்பு இலங்கையின் வேறு எங்கிலும் நிகழவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் நிலவுடைமை எத்தகைய அம்சங்களைக் கொண்டிருந்தது என்பது இந்த உருவாக்கத்தின் மூலம் தெளிவாகின்றது என்றொரு அவதானத்தை சிவத்தம்பி இது குறித்துப் பதிவு செய்கிறார். இந்த தேசவழமைச் சட்டத்திலிருந்து யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவரைப் பொறுத்தவரை யாழ்ப்பாணச் சமூகம் தனியார் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகமாகும். அத்தோடு அதிகாரப் படிநிலையைக் கொண்ட சமூகமாகும். இந்தப் படிநிலை என்பது சாதியமைப்பை அடித்தளமாகக் கொண்டது. “ஆரம்பத்தில் சாதியே சகல உறவுகளையும் நிர்ணயிக்கின்ற ஒரு சக்தியாக விளங்கிய ஒரு நிலையிருந்தது. இப்பொழுது விவாகத்திலும், சமூகச் செல்வாக்கு அதிகாரத்திலுமே சாதிமுறைமையின் தொடர்ச்சியைக் காணலாம்” (யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-15, கா.சிவத்தம்பி).
யாழ்ப்பாணச் சாதியத்தின் கட்டமைப்பை நுண்மையாக ஆராயும் சிவத்தம்பி யாழ்ப்பாணச் சாதியமைப்பு எப்படி தமிழக சாதியமைப்பிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் விளக்கிச் செல்கிறார்.
“யாழ்ப்பாணச் சாதியமைப்பில் சில விசேட பண்புகள் உள்ளன. முதலாவது இங்கு, தமிழகத்திலுள்ளது போன்று பிராமண மேலான்மை இல்லை. சடங்காசாரமாக நோக்கும் பொழுது பிராமணர்கள், சைவக்குருக்கள்மார் முதலிலே வைத்துப் பேசப்படும் மரபு உண்டெனினும், உண்மையான சமூக அதிகாரம் வெள்ளாளரிடமே உண்டு.”
சிவத்தம்பியின் கருத்தப்படி சாதியக் கட்டமைப்பில் தமிழகத்தில் பிராமணர்கள் அதிகார மேல்நிலையில் இருப்பது போல் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் இருப்பதாக குறிப்பிடுகிறார். வேளாளர் என்போர் சூத்திரரே எனக்கூறும் சிவத்தம்பி, சாதியப்படிநிலையில் இறுதியில் இருப்பவரே சூத்திரர். இதனால் இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவதற்காக சூத்திரரை இருவகையினராக வகுத்து நோக்கும் ஒரு முறை காணப்பட்டதாகச் சொல்கிறார்.
- சற்சூத்திரர்
- அசற்சூத்திரர்
“சற்சூத்திரர் என்போர் உயர்ந்தோர். இந்தக் கொள்கையினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர் ஆறுமுகநாவலர் ஆவார்”
(யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-15, கா.சிவத்தம்பி). என்கிறார் சிவத்தம்பி. சற்சூத்திரர் என்போரை சாதியமைப்பில் மேலாண்மைப்படுத்துவதற்காக வருண தருமத்திலேயே (04) இல்லாத ஒரு ஐந்தாவது சாதியாக பஞ்சமர் பற்றி யாழ்ப்பாண சாதியமைப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சிவத்தம்பி சொல்வார். யாழ்ப்பாண சாதியமைப்பில் தொழிலே பிராதானமாகிறது. இதனால் இங்கு சாதிநிலைப்பட்ட தொழிற்பிரிப்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாகச் சொல்வார் சிவத்தம்பி. இதனால் இங்கு அடிநிலையினரின் சமூக மேனிலைப்பாடு என்பது பாரம்பரியத் தொழிலைக் கைவிடுவதிலேயே தங்கியுள்ளது என்கிறார்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் இந்த சாதியமைப்பை மேலும் விளக்குவதற்கு கெனத் டேவிட்டின் கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound caste), கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound caste) என்ற இருபெரும் பிரிப்பினை வைத்து விளக்குகிறார். அதாவது இதன் பொருள் வேளாளரின் மேலாண்மைக்குள் வரும் சாதிகள் கட்டுப்பாடுள்ள சாதிகள், வேளாளரின் மேலாண்மைக்குள் வராதவை கட்டுப்பாடற்ற சாதிகள் எனச் சொல்கிறார் கெனத் டேவிட். சிவத்தம்பியின் நோக்குப்படி, “இங்கு முன்னர் “கட்டுப்பாடு“ உள்ளவர்களாக இருந்த பல குழுமத்தினர் தங்களைத் தாங்களே தமது சமூகத்தளைகளிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளனர். இது 1844க்கு முன்னர் நடைபெற்றதாகும். அத்தகையோரை “இட்டம் போன” (இஷ்டம் போல போன) வர்கள் எனக் குறிப்பிடும் மரபு உண்டு”
யாழ்ப்பாணச் சமூகத்தின் மற்றொரு பண்பாக சிவத்தம்பி இந்த சமூகத்துக்குள் வலுவாக வேரோடியுள்ள வன்மையான பிரதேசவாதத்தைச் சுட்டுகிறார்.
இந்தப் பிரதேசவாத உணர்வு மிக உக்கிரமாக உள்ள சமூகமாக சிவத்தம்பி யாழப்பாணச் சமூகத்தைக் குறிப்பிடுகிறார். அந்த எண்ணம் தங்களது கல்வி, பதவிநிலை, அறிவு போன்றவற்றால் அவர்களுக்குள் உருவாகி வந்திருக்கிறது. அது ஒருவகையில் வாஸ்தவமாக இருந்தாலும் இன்றைய நிலையில் அந்த அணுகுமுறை நன்மை பயக்காது. சமூகங்களுக்கு நிலவியல்ரீதியான தன்னுணர்வு அதிகரித்திருக்கும் இந்த சூழலில் சமூகரீதியாக தாங்கள் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும் தங்களை மதிக்காதவர்களைப் புறக்கணித்து நடக்கும் மனநிலையைத்தான் இன்று எல்லா சமூகங்களும் வெளிப்படுத்துகின்றன. மட்டக்களப்புத் தமிழர் vs யாழ்ப்பாணத்தமிழர் என்ற இந்தக் கூர்மையான பிரதேசவாத உணர்வுதான் இன்று அந்த எல்லையையும் தாண்டிய இருமைநிலைக்கு சமூகத்தைக் கொண்டு சென்றுள்ளது.
ஒரே சாதிக்குள் கூட இந்தப் பிரதேசவாத உணர்வு எப்படி வேரோடி வலுப்பெற்றிருந்தது என்பதை சிவத்தம்பி சொல்கிறார்-
“வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதி என்ற பாரம்பரிய செல்வாக்கு வட்டங்கள் உண்டு. இந்தப் பிரதேசப் பாரம்பரிய உணர்வு சாதிமுறைமையையும் ஊடறுத்துச் செல்வதுண்டு. உதாரணமாக தீவுப் பகுதியிலுள்ள பஞ்சமர் தங்களை வடமராட்சியிலுள்ள பஞ்சமரை விடவும் அந்தஸ்துநிலை கூடியோராக நோக்குவது வழக்கம்”
(யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-17, கா.சிவத்தம்பி).
இந்த சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் வகையிலேயே யாழ்ப்பாணச் சமூகத்தின் பொருளாதார அமைவு, விவாகம், குடும்ப அமைப்பு, குடியிருப்பு முறை என்பன பேணப்பட்டு வந்ததாக சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.
யாழ்ப்பாண சமூகம் தனக்கென்று தனியான அரச இராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த சமூகம். இலங்கை வரலாற்றில் தங்களுக்கான அரசை நிறுவியிருந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தவரே. 14ம் நூற்றாண்டு முதல் 1619ல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படும் வரை இந்த இராச்சியம் நிலவியது. இந்த அரசமைப்பின் தோற்றம் யாழ்ப்பாணத்தை அதன் சமூகத் தனித்துவங்களுடன் பேண உதவிற்று என்று கூறும் சிவத்தம்பி இந்த அரசமைப்பு எந்தளவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருந்தது என்பது குறித்து தன் சந்தேகங்களை எழுப்பிச் செல்கிறார். அதேநேரம் அங்கு மன்னனைவிடவும் வேறு தரப்பார் அடைந்திருந்த முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறார். யாழ்ப்பான வரலாற்று நூல்களின் வழியே நோக்கும் போது யாழ்ப்பாண மன்னர்களுக்கு நிகரான முக்கியத்துவத்தை அங்கு குடியேற்றப்பட்ட முதலிமார் கொண்டிருந்தனர் என்பது அவர் வாதம். நிலவுடைமை சார்ந்து முதலிமாருக்கிருந்த அதிகாரமே இதற்கான பிரதான காரணமாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அங்கிருந்த முதலிமாரின் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்கிறார். இலக்கியப் படைப்புகள் கூட அவர்களுக்கு இந்த விசேட முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்ததை எடுத்துக்காட்டுகிறார். உதாரணமாக கரவை வேலன் கோவை, தண்டிகைக் கனகராயன் பள்ளு முதலிய நூல்களைச் சொல்கிறார்.
“யாழ்ப்பாணத்தின் சனக்கண்ணோட்டநிலையில், யாழ்ப்பாண மன்னர்களிலும் பார்க்க அவ்வப்பிரதேச முதலிமாரே முக்கிய இடம்பெறுவதை அவதானிக்கலாம். கண்டி மன்னன் சம்பந்தமாக சிங்கள மக்களிடையே நிலவி வந்துள்ள வரலாற்றுப் பிரக்ஞை யாழ்ப்பான அரசர்கள் பற்றி யாழ்ப்பாண மக்களிடையே நிலவி வரவில்லை”
(யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-18, கா.சிவத்தம்பி).
இன்னும் சொல்லப் போனால் அரசு,மன்னன் போன்றவற்றையும் விடவும் முதலிகளே மக்களால் மதிக்கப்பட்டனர். அரசை விடவும் முதலிமாரே சமூகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்து வெற்றி பெற்றும் வந்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனையும் வீழ்த்தும் வரை சமூகத்தில் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அந்தவகையில் பார்த்தால் யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடையவும் அதன் தோல்விக்கும் யாழ்ப்பாணச் சமூகத்தின் அரசு பற்றிய பிரக்ஞையின்மையும், பற்றுடன்கூடிய ஈடுபாடின்மையும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. வரலாற்றில் பின்னர் எழுந்த தமிழ்த்தேசியவாதத்தின் எழுச்சிதான் யாழ்ப்பாண இராச்சியம் குறித்த பிரக்ஞையை கூர்மைப்படுத்தியது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால காலனித்தவ ஆட்சியிலும் முதலிமாரினதும், வெள்ளாள சாதியினரதும் மேலாண்மைதான் சமூகத்தில் காணப்பட்டதாக சிவத்தம்பி எடுத்துக்காட்டுகிறர்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் கருத்துநிலையானது மதம் சார்ந்தாகும். சாதியம் அடிப்படையிலான சமூக மேலாண்மை மத அடிப்படையில்தான் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு மதத்தை முன்னிறுத்தும் ஒரு போக்கு அங்கு நிலவியது. இதனால் சைவம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு மரபு யாழ்ப்பாணச் சமூகத்தில் ஆழமாகவுள்ளது. இதன்படி தமிழ்ப்பண்பாட்டோடும், மொழியோடும் சைவம் இணைக்கப்பட்டு “சைவமும் தமிழும்” என்ற கருத்தியல் யாழ்ப்பாண சிந்தனை மரபில் ஆழமாகப் பதியப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை குறைபாடுடையது எனக் கருதும் சிவத்தம்பி-
“இதன்படிக்குத் தமிழ் மனிதன், அவன் மொழி, அதன் பண்பாடு ஆகியவற்றின் உருவாக்கத்தில் வேறு எந்த மதத்துக்கும் இடம் இல்லை எனும் எண்ணத்துணிபு முன்வைக்கப்படுகிறது. சமணம், ஆசீவகம், பௌத்தம், இஸ்லாம்,கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தமிழ்சார் பங்களிப்புகளை இக்கருத்துநிலை முற்று முழுதாக மறுதலிக்கிறது”
(யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்- பக்-24, கா.சிவத்தம்பி)
இந்தக் கருத்தியல் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே வாழ்ந்த தமிழர்களை மதத்தைக் கொண்டு பிரித்துநோக்கும் நிலைக்கு வழியோலியது. யாழ்ப்பாண சைவ மனநிலை முஸ்லிம்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் சிவத்தம்பி. அதேநேரம், கிறிஸ்தவர்களையும் வேதக்காரர்கள் என ஒதுக்கியது என்கிறார். “யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் கிறிஸ்தவர்களை ‘வேதக்காரர்கள்’ என்றும் சைவர்களைத் ‘தமிழர்கள்’ என்றும் குறிப்பிடும் மரபொன்று உண்டு”
(ஈழத்தில் தமிழ் இலக்கியம், பக்-166, கா.சிவத்தம்பி)
அதேநேரம் இந்த “சைவமும் தமிழும்” என்ற ஆதிக்கக் கருத்தியல் யாழ்ப்பாண மக்களின் குளுத்தி, மடை போன்ற உள்ளூர் நம்பிக்கைகளையும் மறுதலிப்பதாகச் சொல்கிறார். அந்தவகையில் அதனை ஒரு தூய்மைவாதக் கருத்துநிலையாகப் பார்க்கலாம். இஸ்லாமிய சமூகத்துக்குள் மேற்கிளம்பிய அரபு மையத்தூய்மைவாத இஸ்லாம் எனும் கருத்தியலை ஒத்த ஒரு கருத்தியலே அது.
சிவத்தம்பியின் யாழ்ப்பாணச் சமூகம் குறித்த ஆய்வுப் பார்வையும் பகிர்வும் இப்படித்தான் அமைந்திருந்தது. யாழ்ப்பாணச் சமூகத்தின் பலமும் பலவீனமும் என்ன என்பதை அவரது பார்வை மிகத் தெளிவாக முன்வைத்தது. எனினும் அவரது பார்வை 1975 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் அவரால் முன்வைக்கபட்டவைதான். இதில் வரலாற்றுரீதியான முன்வைப்புகள் தவிரந்து மற்ற சமூகவியல்-பண்பாட்டியல் சார்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தின் பரிமாணத்தில் இன்று மாற்றங்கள் பல நிகழ்ந்துவிட்டன. அந்தவகையில் சமகால யாழ்ப்பாண சமூகத்தோடு அவரது கருத்துகள் முழுமையாக ஒத்துப் போகும் என்று கருத முடியாது. சிவத்தம்பி முன்வைத்ததைப் போன்று, இன்றைய யாழ்ப்பாண சமூகத்தின் சமூகம், பண்பாடு, கருத்துநிலை பற்றிய எந்த ஆய்வுகளும் அந்த சமூகவெளிக்குள்ளிருந்து புதிதாக வெளிவரவில்லை. சிவத்தம்பிக்குப் பின் ஏன் இன்னும் அத்தகைய ஆய்வுப் பார்வையொன்று ‘யாழ்ப்பாணத்து மனிதன்’ குறித்து முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி யாழ்ப்பாணச் சமூகம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்ட ஒரு புதிய தலைமுறையின் கேள்வியாகவுள்ளது.
***
-ஜிஃப்ரி ஹாசன்