புலி இருக்கும் பகுதி
புலி இருக்கும் பகுதிக்கு
வந்துவிட்டோம்.
இனி நீங்கள்
உளமசையாது கவனிக்கவேண்டும்.
இந்தப் புலிக்கு உடலில்லை
கண்கள் மட்டும்தான்
அதுவும் இப்போது
உங்கள் முகத்தில் இருக்கிறது.
ஒரேயொரு தொலைநோக்கியில்
பறவை பார்க்கும்
இரு நண்பர்களைப் போல
நீங்கள் அதை ஒருவருக்கொருவர்
பகிர்ந்துகொள்ள வேண்டும்.
புலி வரும் திசையென ஒன்றில்லை
காலமும்.
உங்களையும் சேர்த்து ஒருதடவை
மொத்தமாக நக்கிவிட்டு
இந்த ஈரக்காட்டினை
தனது கால்களுக்கிடையில்
ஒரு இரைபோல்
வைத்திருக்கிறதது.
ஈரக்கண்களாய் மினுங்கும் காட்டில்
இது ஒரு எளிதான பணியல்ல
இங்கு நீர்ச் சமமாக்குகிறது
நிகழ்ந்த புலியை
உதிரும் இலைகளே அறிகிறது
நிகழும் புலியை.
நிகழ்த்தல் என்பது
காத்திருத்தாலா?
உங்கள் தேர்வென்ன?
இலைகளில் அமர்ந்த நதிக்கு
இப்போது நேரமாகிறது
இந்தக்கண்களும் அதனுடன்
சேர்ந்து நழுவும்முன்
நீங்கள் புலியைப்
பார்த்துவிடத்தான் வேண்டும்
***
குரல்
அவள்
நிறுவனத்தின் குரலில்
பேசிக்கொண்டிருந்தாள்
இவனுக்கு
வாடிக்கையாளனின் குரல்.
அனைத்து பக்கமும் மூடப்பட்ட
இயந்திரத்தின் தெளிவில் அவள் இருந்தாள்
இவன் பரிதாபமாய்
ஒவ்வொரு வாசலாய் தட்டிக்கொண்டிருந்தான்.
நீதியின் குரலில்
இவன் ஒன்று கேட்கவும்
அடிக்கிடந்த அவளது
கருணையின் குரலில் சிறு பதட்டம்.
அது மெதுவாக ஆம் என்கவும்
மேலிருந்த குரல்
உடனே இல்லை என்றது
இரண்டு குரல்களுக்கிடையில்
சின்னச் சச்சரவு.
அந்த மெல்லிய நடுக்கம்
இவனை களி கொள்ளச்செய்துவிட்டது
என்ன இருந்தாலும்
ஞாயம் வேறு இவன் பக்கம் இல்லையா.
சட்டென ஆணின் குரலில்
இவன் ஒன்றைச் சொல்லவும்
அவள் குழப்பம் தீர்ந்து
பெண்ணின் குரலை அடைந்தாள்.
மிகத்தெளிவாக
அனைத்தையும் மறுத்து
உரையாடலை முடித்தாள்.
***
– ஆனந்த் குமார்