புகைப்படத்திலிருந்து வெளியேறியவள்
உடைந்த சுவரின் புகைப்படமொன்றிலிருந்து
வெளியே வருகிறேன்
கழுத்தை நோவித்த ஆபரணங்களை
உதறும் போது
முன்வரிசை இருக்கையாளர்கள்
தும்முகின்றனர்
இந்த முறை லிகிதர் தும்மியதை
உயர் அதிகாரி மறைக்க வேண்டியதாகிப் போயிற்று
மொனாலிசா அஞ்சும் படியாக
க்ளுக் என்று சிரித்தவாறு
சத்தமாக நடக்கிறேன்
போர்வை போன்ற முக்காட்டையும்
பின்னி முடிந்த கூந்தலையும்
கலைத்துப்போட்டு
ஒருத்தி எண்ணிக்கொண்டிருக்கிறாள்
அதில் குறைந்ததை
அவள் யாரிடமும் கேட்கமுடியாது
ஒரு வேளை
அவளின் காதலனின் முத்தத்தில்
இவை பின்னால் சென்றிருக்கலாம்
நீங்கள் தேடுவது
கிடைக்காவிட்டால்
இதையே நினைத்துக்கொள்ளுங்கள்
நானும் மீண்டும் அந்த
புகைப்படத்தில் வசிப்பதாக இல்லை
****
சொற்களைப் பிரதிபலித்தல்
சொற்களாலும் மௌனத்தினாலும்
நொருங்கி வீழ்ந்த
வானத்தைப் பற்றி அவர்கள்
உடன்படவில்லை
சடசடவென பறக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் செட்டைகள்
அவர்களுக்கு இருந்தன
கடலின் அளவு மௌனத்தால்
பேசிக்கொள்ளும் வித்தையை
ஒரு மந்திர வாதி கூறிச்சென்ற வீதியொன்றில்
சூரியனை பங்குபோட்டு உண்பதுபற்றி
இருட்டின் உதடுகள் கதைத்த நாளொன்றில்
அந்த அதிசயம் நிகழ்ந்திருக்க வேண்டும்
அதற்கு அவர்கள் கண்கள் என்று
பெயர் வைத்ததை பின்னொரு நாளில் அறிந்துகொள்கிறேன்
ஒவ்வொரு சூரியக்கதிர்களும்
சொற்களை அதிகம் பிரதிபலித்துக்கொண்டிருந்த போது
அதிகமானவை கடலில் எழுதப்பட்டன
மிகுதி சொற்கள் மௌனத்தில்
அல்லது புன்னகையில்
சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டன
சொற்களாலும் மௌனத்தாலும்
யுத்தப் பிரகடனமொன்றை செய்ய முடியும்
அல்லது காதல் செய்ய முடியும் எனவும்
இதுவரை
அவர்கள் எவரிடமும் எத்திவைக்கவில்லை
ஒருவேளை வன்முறையான சொற்களை உற்பத்திசெய்யும் மனிதர்கள்
சில ஆயுதங்களை சொற்களெனவும்
சில சொற்களை ஆயுதங்களெனவும்
பயன்படுத்துவர் என அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு
காலத்தில் புதைந்த சில ஆதாரங்கள்
எஞ்சியிருக்கின்றன.
***
-அஸ்மா பேகம்