Bonfire

மரக்கட்டைகளைக் குவித்து விட்டு
குளிர்காற்றின் நெடுமௌனம்
உலரமறுக்கும் தாமதமாக
தேடிக்கண்டடையப்படாத
எங்கோ ஒளிந்திருக்கும்
உராய்ந்தொளிராத தீயைச் சுட்டெரிக்கிறது

சாம்பலை ஊதிக்கிளர்த்தும்
முந்தைய உரையாடல்
பிந்திய வெம்மையின் தேடுதலை விரைவுபடுத்துகிறது

கரை உறங்கிக்கழிக்கும் கடற்கரையில்
பிசைந்த ஈர மணல்வீட்டின் நுழைவாயில்
தென்னை வேரடியில் குவிந்து மலைக்கிறது

நிலத்தின் வெற்றிடம்
அற்ற பொழுதின் ஏகாந்தம்
தகர்க்கும்
இருப்பின் கழிமுகம்

தீயென்பதும்
நீயென்பதும்
செந்தணல் கிளைத்துப் புகைக்கும்
துருவ விண்மீனின் உஷ்ணம்
கேளிக்கைத்தீயைக் கண்டடையும்
முகாந்திரமாகிறது

 

 

சிசேரியன்

முதுகுத்தண்டில் தைத்த
ஊசியின் வலிக்குப்பின்னர்
அன்றிலிருந்து
நறுநறுவென பற்களைக்கடிக்க ஆரம்பித்தது
முடிவிலியாக நீள்கிறது

மலைப்பாதைத் தண்டவாளச் சில்லுகளில்
உராய்வு இரைச்சல்
நகர்வில் வெளியேற்றும்
புகைமண்டலம் ஒத்த பெருமூச்சு
நிறுத்தங்களில் மீந்திருக்கும் பெட்டிகளை
விட்டுச்செல்வதாயில்லை

சுமை மிகுதியில் தகரக்கோது
தரிப்பிடங்களை மறக்கிறது

எரிபொருளுக்காய் நிறுத்தங்களைப் புறக்கணிக்கிறாள்
குறிஞ்சி முல்லையாய்
மருதப் பாலையாய்
மாறி மாறி வளைகிறாள்

சொல்லின் வசைக்காக
தழும்புகளைக் கனாக்காண்கிறாள்
எடையைத் தடவி வளர்க்கிறாள்

சுகமான செய்தி வரும்வரை
காதுகளைத் தீட்டிக்கொண்டு
வெளியில் காத்திருப்பவர்களுக்கு
தையல் வலியைக் காணிக்கையாக்கிறாள்

வளைபாதைகளின் கோணல் சொற்கள்
இருண்ட குகைகளுக்குள் மேடுபள்ளமாய்
அழைத்துச்செல்கிறது

 

 

சிதறல்

நீள் வரிசைகள் பெரும் சலிப்பு என
நிரலில் இருந்து பிரிந்து
பயணித்தன மேசை எறும்புகள்

தனித்தனித் திசையில்
சிதறிக்கொள்வதன் கோலம்
வெவ்வேறு பாதைகளில்
கிளைபிரிகின்றன

செக்கன்களாகவும் நிமிடங்களாகவும்
சிறகுமுளைத்து மாறியிருந்தன அவை

அறுபது அறுபது என முணுமுணுத்துக்கொண்டே
பறந்து செல்கின்றன
புதிய ஈசல்கள்

அதிலிருந்து எழுந்த தலைமை எறும்பு
மணித்தியாலமாகிச் சூளுரைத்து
தன்னைத்தானே சுழன்று நின்றது

காத்திருப்பின் காகிதத்தில்
ஒரு நாளை நிரப்ப
மீதி இருபத்து மூன்று
கொழுத்த எறும்புகளை
உணர்கொம்புடன் வரைகிறேன்

ஒற்றை அனகொண்டாவாக மாறி
முழுக் குறிப்பேட்டையும் விழுங்குகின்றது
அமர்ந்திருந்த கதிரையில்
மீதி எறும்புகள் நிரையாக ஊர்ந்து
மேசையிலிருந்த கோப்பையிலிருந்து சிதறிய ஒருசில தேநீர்த்துளிகளில்
வழமையை வட்டமிடுகின்றன.

***

~மின்ஹா

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *