அறைச்சுவற்றில் மாட்டியிருந்த அந்தக் கடிகாரத்தின் நொடிமுள் சத்தம் மட்டுமே அவளுக்கு அப்போது கேட்டுக்கொண்டிருந்தது. அதுவே அவளை உறங்கவிடாமல் அவளது உறக்கத்திற்குள் புகுந்து கொண்டு ஊடறுத்தது. எப்போதுமே வைத்திருக்கும் அலாரம் கூட அன்று அவள் வைத்திருக்கவில்லை. அந்த அறைக்குள் நன்றாக இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தவள் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டாள். அவளுக்கு வேறு எந்தச் சத்தமும் உள்ளே அங்கே கேட்கவில்லை. அறைக்குள் உள்ளிறங்கிய பனி எந்தவொரு வெளிச் சத்தத்தையும் கேட்கவிடாமல் செய்து வைத்திருந்தது. இந்த நொடிமுள்ளின் நின்று நின்று செல்வதால் ஏற்படும் இந்த இடையறாதச் சப்தமே அவளை எழுப்பிவிட்டிருக்கிறது.
போர்வையை சற்று விலக்கிய போது குளிர் நடுக்கியது. இத்தனைக்கும் நள்ளிரவு வேளைகளில் இப்படி அதிகமாக குளிருவதில்லை. விடிந்த பிறகான இவ்வேளை தான் இப்படி குளிருகிறது. ஒருவேளை மின்விசிறியை அணைக்காமல் விட்டுவிட்டோமோ என்று தோன்றக் கண் திறந்து மேலே பார்த்தாள். கண்களைத் திறக்க விடாமல் கனத்த இமைகள் அழுத்தின. இருந்தும் கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தாள். மின்விசிறி அணைந்திருந்தது. ஆனாலும் இப்படி குளிர் அடிக்கிறது. இது தெரிந்து தான் முன்பே நள்ளிரவில் எழுந்து மின்விசிறியை அணைக்கும் வழக்கத்தை வைத்திருந்தாள்.
சுற்றிப் பார்த்தாள். திறந்திருக்கும் அந்த ஜன்னலைச் சாத்தினால் நன்றாக இருக்கும். முதலிலேயே இதைச் செய்திருக்கலாம். வெளியில் ஊரைப் போர்த்தியிருந்த பனிப்படலத்தின் கனத்த இறுக்கம் காலையின் புத்தொளியால் களையப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு ஊடாக நுழைந்த கதிர் ஒளியுடன் இந்தப் பின்பனியும் சேர்ந்து கொண்டு புகையென ஒழுகி அறைக்குள் குளிரடித்துக் கொண்டிருந்தது. எழுந்து சென்று ஜன்னலைச் சாத்திவிட்டு வந்தாள். தரையில் கால் வைத்தது சில்லிட்டது .
இப்போது அறை குளிரடங்கி ஓய்ந்துக் கிடந்தது. ஆனால் அந்தச் சுவர் கடிகாரத்தின் நொடிமுள் சத்தம் இன்னும் அணுக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தக் கடிகாரத்தை மாற்றி வேறொன்று வாங்கிப் போட வேண்டும். இந்த நொடி முள் ஏன் நொடிக்கு நொடி நின்று நின்று திக்கித் தடுமாறுகிறது. சீராக ஓடிக்கொண்டிருக்கலாம் அல்லவா? அது தன்னை “விழித்துக்கொள், விழித்துக்கொள், விழுத்துக்கொள்” என்று ஒவ்வொரு நொடிக்கும் இப்படியா விரட்ட வேண்டும்? எப்போதோ ஒரு முறை பஜார் சென்றிருந்த போது ஏதோ ஒரு கடையில் இப்படி இடையிடையே நொடித்துக் கொண்டு நில்லாமல் சீராக நகர்ந்து இயங்கிக்கொண்டிருந்த நொடிமுள் கொண்ட கடிகாரத்தைப் பார்த்திருக்கிறாள். அதில் அந்த சத்தம் வரவேயில்லை என்று அப்போது அவளுக்குத் தோன்றியது. அது மாதிரி ஒன்றை வாங்கி மாட்டவேண்டும். அதனை நான் கடையிலா பார்த்தேன்? எவர் வீட்டிலோ தானே பார்த்தேன். எவர் வீடு?
சுவரில் மாட்டியிருந்த அந்த கடிகாரத்தை எக்கி எடுத்தாள். அதன் பேட்டரியை கழற்றி அருகில் இருந்த எழுதுமேசையின் மேல் இரண்டையும் வைத்தாள். பிறகு தன் உடலில் இருந்த சூட்டினை தன் உள்ளங்கைகளால் உரசித் தேய்த்து பெருக்கிக்கொண்டு, கைகளை கன்னங்களில் பதிய வைத்து, அந்த இதத்தை உணர்ந்தவாறு மீண்டும் போர்த்திப் படுத்துக் கொண்டாள். பின்னர் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஆழ்ந்து உறங்கிப் போனாள்.
அவளது உம்மா வந்து அறைக்கதவை அறைந்து அவளைத் திட்டி எழுப்பும் வரை அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். உம்மா அவளை எழுப்பிவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
இவள் பீளை அடர்ந்த கண்களை கசக்கியவாறு எழுந்து அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். ஒருமுறை, “நாம் எழுந்து வந்துவிட்டோமா இல்லை இன்னும் அங்கே தான் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறோமா?” என்று சந்தேகம் வந்து கட்டிலை திரும்பிப் பார்த்தவாறு அறைக் கதவருகே தயங்கியபடி நின்றாள். இங்கு வந்து இப்படி நின்றிருப்பது தான் தானா என்ன? பேசாமல் மீண்டும் போய் படுத்துக்கொண்டு விடலாமா?
அவளுக்குச் சோம்பல் இன்னும் முழுதாக களையவில்லை. புலர்ந்தும் பூமியில் எஞ்சும் பின்பனிப் போல அவளிடத்தில் அது இன்னும் தங்கி இருந்தது. அது அவளை இன்னும் போர்த்தித் தான் வைத்திருக்கிறது.
அடுத்த அறையில் இருந்து ஓதி முடித்துவிட்டு வந்த அவளது தம்பி பின்னால் இருந்த படி அவள் அருகில் வந்து காதில், “சோம்பேறி” என்று கத்திவிட்டு ஓடினான். எரிச்சல் அடைந்து அவனுக்கு எதிர்வினை புரிய அவள் வாயெடுத்த போது கொட்டாவி வந்து குரலைக் கம்மச் செய்தது. மணி எட்டு ஆகியிருந்தது. இன்னும் பல் தேய்த்துக் குளித்து உணவு உட்கொண்டுவிட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் கல்லூரி செல்ல வேண்டும். உம்மா சமையல் அறையில் வேலையாய் இருந்தாள். இவளை நினைத்து நினைத்து திட்டுவது மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
“நேரம் காலமின்னு ஒன்னும் தெரியாம இப்படி தூங்கிக்கிடந்தா என்னத்துக்கு ஆகுறது?”
“ஒரு ஒத்தாசையும் கெடையாது ஒன்னும் கெடையாது. சாவடி தான இந்த வீடு. திங்கணும் தூங்கணும் போகணும் வரணும்”
அவள் பல் துலக்கிவிட்டு உணவு மேஜையில் வந்து சாவகாசமாக அமர்ந்தாள். உம்மா வைத்துவிட்டுச் சென்றிந்த தேநீரை அருந்திய படி மேஜையின் மேல் கிடந்த செய்தித் தாளை வாசித்தாள். தேநீரின் சூடு தொண்டையில் இறங்கியது இதமாக இருந்தது. செய்தித்தாளோடு பின் இணைப்பாக வந்த மலரில், கோரோனா நோய்த் தொற்றின் போது உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து சந்தித்திருந்த மந்தநிலையைப் பற்றியும் அந்நிலை எப்படி படிப்படியாக மீண்டும் சீராகி சமநிலையை எட்ட எத்தனிக்கிறது என்பதைப் பற்றியும் இருந்த அந்த அரைப்பக்கத்து கட்டுரையை வாசித்து முடித்தாள்.
பிறகு அவள் அங்கிருந்த படிக்கே “வாப்பா எங்க?” என்று கேட்டதற்கு அவர் அதிகாலையிலேயே புறப்பட்டு ராமநகராவில் உள்ள தங்கள் கடைக்குச் சென்று விட்டதாக சமையல் அறையில் இருந்து பதில் வந்தது. பின்னர், அணிந்திருந்த இரவாடையுடனேயே நாற்காலியில் கால் மூட்டுகளைக் கட்டிக்கொண்டவாறு தன்னை மாற்றி அமர்த்திக் கொண்டாள். எதிரில் கைக்கு தட்டுப்பட்ட டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள். ஏதோ ஒரு பாட்டுச் சேனல் அதில் ஓடிக்கொண்டிருந்தது.
இவளுக்கு அப்போதென வாப்பாவுடன் போன மாதம் ராமநகரா சென்றிருந்த நினைப்பு வந்தது. வாப்பா தன் கடையின் கிளை ஒன்றை அப்போது தான் ராம நகராவில் ஆரம்பித்திருந்தார். திறப்பு விழாவுக்காக அப்போது உம்மாவையும் தம்பியையும் தன்னையும் கூட அழைத்துச் சென்றார். விழாவை முடித்துவிட்டு அருகில் இருந்த மலைக் குன்று ஒன்றுக்கு சென்றிருந்தார்கள். அங்கு தான் ஷோலே படத்தின் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று வாப்பா சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் நினைவில் ஓட்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கு சட்டென அந்தப் பாட்டு தோன்றியது. ஹேமமாலினி ஜட்கா வண்டியை ஓட்டிச் சென்றுகொண்டிருப்பார். அவருக்குத் தெரியாமல் தர்மேந்திரா அவ்வண்டியில் தொற்றிக்கொண்டு ஏறி ஹேமமாலினியை வம்பிழுப்பார். “கோயி ஹசீனா ஜப் ரூத் ஜாத்தி ஹை தோ அவுர் பீ ஹஸீன் ஹோ ஜாத்தி ஹை” என்று அவள் எதிரில் ஓடிக்கொண்டிருந்த டிவியையும் பொருட்படுத்தாமல் ரிமோட்டை கையில் வைத்திருந்த படி விட்டத்தைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இப்படி உட்கார்ந்திருந்தவளைப் பார்த்துவிட்டு “நீ இன்னும் குளிக்க போகலையாடீ?” என்று உம்மா உரக்கக் கத்திவிட்டுப் போனதும் தான் எழுந்து கொண்டாள்.
அவள் குளியல் அறையில் தன் ஆடைகளை மெதுவாகத் தான் களைந்தாள். ஏதோ ஒரு அசமந்த பாவம் அவளிடம் குடிகொண்டு விட்டிருந்தது. ஆனால் அவள் அதனை உணராதவளாக இருந்தாள். தன்னை எங்கோ தொலைத்தவள் போல. அல்லது தன்னை எங்கோ ஒளித்துக்கொள்பவள் போல. குளிப்பதற்காக அவள் குழாயின் நாசிலை திறந்தாள். தண்ணீர் அவள் தலைக்கு மேலிருந்து கொட்டியது. அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தெரியாமல் குழாயை வலப்பக்கமாக திறந்துவிட்டிருக்கிறாள். அது ஷவரை திறந்து விட்டுவிட்டது. இடப்பக்கமாக திறந்துவிட்டிருந்தால் வாளியில் நீர் நிரம்பியிருக்கும்.
ப்ச்ச். இப்படித் தலைக்கு நீர் விட்டுக்கொண்டாகி விட்டதே. ஆனாலும் அது அவளுக்கு வசதியாக போய்விட்டது. இப்போது அவள் வெறுமனே அதன் கீழ் நிற்க வேண்டும். அவ்வளவு தான். ஷவரை இன்னும் அதிகமாக திறந்து வைத்துக்கூட அவள் குளிக்க முற்படவில்லை. அது நீரை அவள் மேல் மெதுவாகப் பாய்ச்சிக்கொண்டிருந்தது. அவள் வெறுமே அந்த ஷவரைப் பார்த்திருந்தபடி அதற்கு கீழ் அதன் மெல்லிய நீரொழுக்கில் முகத்தை நனைத்தபடி நின்றிருந்தாள். ஆனால் அவள் மனம் அந்தப் பாட்டைத் தான் எண்ணிக்கொண்டிருந்தது. அது அவள் உதடுகளில் இன்னமும் முணுமுணுப்பாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
“கோயி ஹசீனா ஜப் ரூத் ஜாத்தி ஹை தோ “
அவளுக்கு அப்பாடலின் முதல் இரண்டு வரிகள் தான் தெரிந்தது. அதனையே திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டை முணுமுணுப்பதற்கு முழுவரிகளும் தெரிந்திருக்க வேண்டுமா? அர்த்தம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? இப்படியே இங்கே முணுமுணுத்துக் கொண்டு நின்றிருந்தால் என்ன? பிறகு அவளே தன் வலது கை ஆட்காட்டி விரலை முணுமுணுத்துக்கொண்டிருக்கும் தன் உதடுகளுக்கு மேல் வைத்து ஷூவென்று சொல்லிக்கொண்டாள். பிறகு எதற்கென்றே தெரியாமல் ஒருமுறை சிரித்துக் கொண்டாள்.
சட்டென அவளுக்கு தன் அறையில் அவள் காலை வேளையில் கழற்றி வைத்த கடிகாரத்தின் நினைவு வந்தது. குளித்து முடித்து அறைக்குத் திரும்பிய பிறகு கழற்றிய பேட்டரியை அந்த கடிகாரத்தில் பொறுத்தி கடிகாரத்தை சுவரில் மீண்டும் மாட்டிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். பிறகு மீண்டும் நினைவு தோய்ந்து முணுமுணுக்கத் தொடங்கிவிட்டாள்.
“இன்னும் என்ன உள்ள பண்ற நீ? ஒவ்வொரு எடத்துக்கா வந்து உன்ன நான் நகத்தணுமா” உம்மா வந்து குளியலறையின் கதவைத் தட்டிப் போனாள். உள்ளிருந்து வரும் முணுமுணுப்பு நின்றிருந்தது. கூந்தலில் ஈரம் சொட்ட அவள் வெளியே வந்தாள். அதனைக் கண்டதும் உம்மாவுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது. ஆத்திரத்தில் கத்தினாள்.
“இன்னைக்கு ஏன் டி தலைக்கு குளிச்ச? அறிவில்ல? இப்ப எப்படி தலை காயும்? காலேஜ் போக போறியா? வேண்டாமா?”
“எனக்கு தெரியும் உன் பிளான். நீ வேணும்னே தான் ஷவரை தொறந்து விட்டிருப்ப. தலைய காயவைக்கிற சாக்குல இன்னும் நேரத்த கடத்தலாம்ல. அதுக்கு தான?”.
“உம்மா இல்ல. தெரியாத்தனமா குழாய வலதுபக்கம் திருப்பிட்டேன் உம்மா”
ஆனால் உம்மா அவளை நம்புவதாக இல்லை. உம்மா அவளைத் திட்டிக்கொண்டே அவள் கூந்தலைத் துவட்டி காயவைக்க முடிந்தவரை உதவினாள். நேரம் வேறு சென்றுகொண்டிருந்தது. கூந்தல் கால் ஈரப்பதத்துக்கு வந்தவுடன், “போதும் தலை காய வச்சது. லஞ்ச் பாக்ஸ் எடுத்து வச்சுருக்கேன். மறக்காம எடுத்து வச்சுக்கோ.” என்றாள்.
“சாப்பிட வேற சாப்பிடணுமே நீ”
இவள் அவளாகவே முன் வந்து “இல்லம்மா ப்ரேக் ஃபாஸ்டையும் கட்டி தந்துடு. நான் நடுல டைம் கெடச்சாலோ இல்ல மார்னிங் இண்டெர்வெல்லயோ சாப்டுக்கறேன்” என்றாள்.
அன்றைய நாளில் முதல் தடவையாக அவள் பொறுப்பாக பேசியது உம்மாவை சற்று ஆசுவாசப்படுத்தியது.
“சரி. சரி. நீ போய் டிரஸ் மாத்திட்டு கிளம்பு. நேரமாச்சு. நான் ரெடி பண்ணி வைக்கிறேன்”
இருந்தும் அவள் மந்தமாகவே தன் அறைக்குத் திரும்பினாள். “இன்று கல்லூரிக்கு போயே தான் தீர வேண்டுமா என்ன? பேசாமல் ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன?” அவள் அலமாரியைத் திறந்து தன் உடைகளை எடுத்து உடுத்திக் கொண்டாள்.
நினைவுப்பிசகலாக ஏதோ தோன்றித் தன் புத்தக அலமாரியைத் திறந்து தன் பொருளாதாரப் புத்தகத்தையும் கணக்கியல் குறிப்பேட்டையும் எடுத்து தன் பைக்குள் திணித்தாள். வகுப்பில் இன்றைக்கு எதனையோ எடுத்துவரச் சொல்லியிருந்தார்கள். என்ன அது? அவளுக்கு மறந்து போய்விட்டது. அவள் அந்நேரத்தில் அவளுக்குத் தோன்றியவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டாள். முடிக்கப்பட வேண்டிய பாட வேலை ஒன்று பாக்கி இருப்பதை நினைவு கூர்ந்தாள். பிறகு ஹாலிற்கு புத்தகப் பையுடன் நகர்ந்து மதிய உணவு டப்பாவை எடுத்து வைத்தாள். அருகிலேயே இன்னும் ஒரு சிறிய டப்பா இருந்தது. உம்மா அதற்குள் கட்டி வைத்துவிட்டாளே என்று எண்ணி அதனையும் எடுத்து வைத்துக்கொண்டாள். பின்னர் எதனையோ மறந்தவளாக மீண்டும் தன் அறைக்குத் திரும்பினாள். உம்மா உள்ளிருந்தபடியே “இன்னும் என்னடி செய்யுற கிளம்பாம?” என்றாள் கெஞ்சாத குறையாக .
அவள் தன் உடை அலமாரியைத் திறந்தாள். இந்த மேலுடையை இன்றைக்கும் போட்டுக்கொள்ளத்தான் வேண்டுமா? ஒரு நாளைக்கு அதற்கு விடுப்புக் கொடுத்துத் தொலைவோமே. பையன்கள் எல்லாம் டை இல்லாமல் ஷூவில்லாமல் எல்லாம் வருகிறார்கள். என்ன ஆகிவிடப் போகிறது? இதனை உடுத்தி உடுத்தி போர் அடிக்கிறது. ஒரு முறை அலமாரிக் கதவை வேகமாக மூடிவிட்டு வெளியே வந்தாள். பின்னர் மீண்டும் உள்நுழைந்து, இல்லை இல்லை உம்மா கத்துவாள். வாப்பா இருந்தாலாவது விட்டுவிடுவார். சரி எடுத்து அணிந்து தான் தொலைவோமே என்றிருந்தது. அவள் அந்த மேலுடையை அணிந்துகொண்டு வெளியே வந்தாள். “இதோ கிளம்பிட்டேன்” என்று கூறியபடி வாசல் நிலைக்கு அருகில் தொங்க விடப்பட்டிருந்த தன் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தாள்.
அவள் தன் பியூசி கல்லூரியை அடைந்துவிட்டிருந்தாள். நேரம் சரியாக இருந்தது. வீட்டில் இருந்து வர பத்து நிமிடம் தான். மிகவும் பிந்திப்போனால் அதிகபட்சம் பதினைந்து நிமிடம் தான் பிடிக்கும். இத்தனைக்கும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டிவந்தாள். சிற்றுண்டியை உண்ணாமல் கைவிட்டது சரியாக இருந்தது. வண்டியை கல்லூரி வளாகத்தின் முகப்பிலேயே வண்டிகள் நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு வகுப்பறையை நோக்கி தன் தோள் பையுடன் நகர்ந்தாள்.
உம்மா அவள் சென்ற பிறகு பெருக்கித் துடைப்பதற்காக அவள் அறைக்குள் சென்றாள். துணிமணிகள் அங்கங்கு சீரற்று சிதறிக் கிடந்தன. புத்தகங்கள் அலமாரியில் கலைந்திருந்தன. படுத்திருந்த இடம் கூட கசங்கல் துணிகளின் கூளமாகக் கிடந்தது. போர்வையைக் கூட அவள் மடித்திருக்கவில்லை. அந்த அறையே கிடாசி எறிந்தது போல இருந்தது. “ஒழுங்கீனம். ஒழுங்கீனம்” என்று அவளை மனதுக்குள் திட்டிக்கொண்டே அவற்றை எல்லாம் சுத்தம் செய்தும் சீர்படுத்தியும் வைத்தாள். பிறகு அவளது மேஜையில் அவள் கீழே இறக்கி வைத்திருக்கும் அந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். அருகில் பேட்டரியுடன் அது கிடந்தது. எதற்கு இவள் இப்படி இதனை கழற்றிவைத்திருக்கிறாள்? ஒரு வேளை கடிகாரம் ஓடவில்லையோ என்றெண்ணி ஒருமுறை மீண்டும் பேட்டரியை அக்கடிகாரத்தின் பின்புறம் போட்டுப் பார்த்தாள். நொடிமுள் துடித்துக்கொண்டு நகர்ந்து சீராக இயங்க ஆரம்பித்தது. எதுவும் பிரச்சினை இல்லை.
கல்லூரிக் கிரவுண்டை அவள் கடந்து சென்ற போது தூரத்தில் ஏதோ ஒரு சலசலப்பை உணர்ந்தாள். அங்கே சீருடைகளில் சில கல்லூரி மாணவர்கள் குழுமி நின்றிருந்தனர். முதலில் அது வேறு எதற்காகவோ என்று நினைத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடந்தாள்.
அவர்கள் இவளைக் கண்டுகொண்டபின் ஒருவருக்கொருவர் பார்வையால் சைகை காட்டி அணி திரண்டனர். அவர்கள் அனைவரிடத்திலும் ஒரு ஒழுங்குணர்வு இருந்ததை இவள் கவனிக்கவில்லை. ஒவ்வொருவரும் தன் பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்தும் முதுகுப்பக்கம் மாட்டியிருந்த தன் தோள்பைகளில் இருந்தும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிகளின் பெட்ரோல் டாங்கின் பவுச்களில் இருந்தும் மறைத்து வைத்திருந்த அந்த காவி நிறத்திலான ஷால்களை எடுத்தனர். அவற்றை தங்களது கைகளில் சுற்றிக் கட்டிக்கொண்டும் கழுத்தில் போட்டுக்கொண்டும் தலையில் கட்டிக்கொண்டும் இவள் செல்லுகின்ற திசையை நோக்கி நகர்ந்தனர்.
இவள் அவள் வகுப்புக்கான திருப்பத்தில் திரும்பும் போது அவர்கள் எல்லா திசைகளில் இருந்தும் அவளைச் சூழ்ந்து கொண்டுவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவர் கையிலும் கழுத்திலும் தலையிலும் அணிந்திருந்த அந்தக் காவி நிறத்திலான ஷால்களை ஒரே நேரத்தில் கழற்றி அவள் முகத்திற்கு முன் வீசி எறிந்தபடி, “ஜெய் ஸ்ரீ ராம்“ என்று சொல்லி கோஷமிட்டனர். அவள் காதுகளில் அந்நாமத்தை தொடர்ந்து இறைந்து கொண்டிருந்தனர்.
அவள் ஒருகணம் விதிர்த்துப் போய் நின்று விட்டாள். கைகால்கள் என முழு உடலும் நடுக்கம் கண்டிருந்தது. அவளுக்கு நிகழ்ந்த அனைத்தும் அவள் அணிந்திருந்த அந்த மேலாடைக்குள்ளாகவே முடிந்து போனது. அவளது உடலில் வெம்மை பரவி அதிகரித்தது. அணிந்திருந்த ஆடையை அது பொசுக்கிவிடும் போல இருந்தது. அவ்வெம்மையால் வியர்த்து வழிந்து அவ்வியர்வை அவளது மேலுடை வரைக்கும் பரவி அது அவளது உடலில் மற்றுமொரு தோல் போல பொருந்தி ஒட்டியது. மூடியிருந்த முகத்தில் அவளது மருண்ட விழிகளை சூழ்ந்திருந்தவர்கள் இணங்கண்டு கொண்டுவிட்டார்கள். அது அவர்களை இன்னும் துரிதப்படுத்தியது. அவர்கள் இன்னும் இன்னும் என கூச்சலிட்டார்கள்.
பேச்சு மூச்சற்று நின்றிருந்த அவளுக்கு கண்களில் கண்ணீர் சுரந்து வந்தது. தொண்டை மேலெழ முடியாமல் திணறித் தவித்தது. மறுகணம் அந்தத் திணறலைக் கிழித்துக்கொண்டு அவளுக்குள் இருந்து எதுவோ உந்தித் தள்ள, அவளது குரலில் இருந்து எழுந்த அவ்வாசகம் சூழ்ந்திருந்தவர்களுக்கு மத்தியில் நின்று கனத்து ஒலித்தது.
“அல்லாஹு அக்பர் “
“அல்லாஹு அக்பர் “
“அல்லாஹு அக்பர் “
அவள் தன்னை மீறி எழுந்த அவ்வாசகத்தின் விசையை இறுகப் பற்றிக்கொண்டாள். அது அவர்களுக்கு மத்தியில் இருந்த அவளை நிலையழியச் செய்யாமல் அன்று வழிநடத்திச் சென்றது.
இச்சலனமெல்லாம் நடந்து முடிந்து ஓய்ந்திருந்த, ஒரு மாத காலத்துக்குப் பின்னான ஒரு ஞாயிற்றுகிழமையின் பின்மதிய வேளையில், வெயிலில் உலர்ந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு வருவதற்காக அவளது உம்மா வீட்டு மொட்டை மாடிக்குச் சென்றிருந்தாள். கொடியில் உலர்ந்திருந்த ஆடைகள் காற்றில் சரசரத்துக்கொண்டிருந்தன. உம்மா அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டு வந்தாள். முதல் நாள் தான் வாப்பாவுடன் அவள் அவளது மேற்படிப்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்துக்காக பெங்களூரு வரை சென்று அங்குள்ள பிரபல கல்லூரியில் விசாரித்துவிட்டு வந்தாள். வேலையை முடித்துக்கொண்டு மடிவாலாவின் ஆஞ்சநேயர் கோயில் நிறுத்தத்தில் உணவு உட்கொண்டுவிட்டு மாநகரப் பேருந்தில் ஏறி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மைசூரு பேருந்து மாறி அன்று இரவு தாமதமாகத்தான் இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
உம்மாவுக்கு இன்று காலை அவள் குளியலறையில் வெகுநேரம் எடுத்துக்கொண்டது சட்டென நினைவுக்கு வந்தது. “இன்னிக்கும் என்னடி இப்படி லேட் பண்ற? வெளிய வந்து தொலைடீ” என்று அவளைத் திட்டிக்கொண்டே குளியலறைப் பக்கமாய் உம்மா நகர்ந்தாள். அவள் எதனையோ வெகுநேரமாக வறக் வறக்கென்று தேய்த்தும் அடித்தும் கசக்கியும் துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சத்தம் வெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. உம்மாவின் குரல் கேட்டப் பிறகு உள்ளிருந்து வந்த அந்தச் சத்தம் நின்று போனது. அவள் அவசரமாக வியர்க்க விறுவிறுக்க வாளியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விலகி நடந்தாள்.
அன்று அவள் மேலே வந்து உலர்த்தியிருந்த அவள் மேலுடை கொடியில் கடைசியாக இருந்தது. அதில் ஒரு சிறு பகுதி மட்டும் நைந்து கிழிந்திருந்தது. அது என்னவென்று உம்மா சென்று கைவைத்துப் பார்த்தாள். அக்கரிய நிற ஆடையின் நைந்துக் கிழிந்த ஓரங்களில் செந்தூரக் கறை போகாமல் இன்னும் மிச்சமிருந்தது.
***
-லோகேஷ் ரகுராமன்