வழி
அறிந்திருந்த ஒருவரின்
இறுதிச்சடங்கிற்கு
அறியாத ஊருக்கு கிளம்பிச்சென்றேன்.
நான் வந்திறங்கியபோது
உடல் கிளம்பிவிட்டதைச் சொன்னது
பாதை மறித்துக்கிடந்த மலர்கள்.
சுடுகாட்டிற்கு எப்படி
வழி கேட்பதெனத் தயங்கி
ஒளிரும் மஞ்சள் பூக்களை
பின்தொடர்ந்தேன்.
நடுவேயொரு
கோவிலின் வாசலுக்கு மட்டும்
இடைவெளி விட்டு
தொடர்ந்தது பூக்களின் வழித்தடம்.
குறுகிய தெருக்களுள் சென்ற
பூக்களின் வண்ணம் மாறிற்று
இப்போது அரளி இதழ்கள் என்னை
அழைத்துச் சென்றன.
அமைதி தவழும் ஒரு தோட்டத்துள்
இறங்கிச் சென்றது
பூவிரிப்பு.
அதன் ஒழுக்கில் இறங்கித்
திரும்பிக் கண்டேன்
எரிந்தணைந்து நீர்தெளித்து
குளிரத்துவங்கியிருந்த
அவர் வீட்டை.
நேர்கோட்டின் வரைபடம்.
நான் வந்தடைந்துவிட்டதாய்
சொன்னது
கையிலுள்ள வரைபடம்.
சுற்றிப் பார்த்தேன்
அங்கு எதுவுமே இல்லை.
வழிகேட்கவும் எவருமில்லை
இத்தனைக்கும் அதுவொரு
நேர்ச்சாலை
குழப்பத்திற்கு வழியேயில்லை
இந்த செயலியோ
நான் தேடும் இடம்
என் கண்முன்னே உள்ளதென
தீர்மானமாய் சொல்லியது
கடுப்பில் நானதை
அணைத்து வைத்தேன்.
வந்தவழியே திரும்பிப்போக
நினைக்கும்வரை அங்கே நின்றேன்
நினைத்த கணத்தில்
கண்டுகொண்டேன்
அது பாதையே அல்ல,
எதிரில் இருந்த மரத்தின்
அத்தனை பூக்களும்
உதிர்ந்து கிடந்தன
ஒன்றுகூட நசுங்காமல்
***
-ஆனந்த் குமார்