மேல் மாடி
இரண்டாவது தளத்தில்
வீட்டை வாங்கியதில்
ஒரேயொரு வருத்தம் அவருக்கு
‘என்ன இருந்தாலும்
ஒருபிடி நிலம்
நமக்குச் சொந்தமில்லையே’
ஆம்
நானும் நினைத்திருக்கிறேன்
அந்தரத்தில் நான்கு சுவர்களை
சுற்றிக்கட்டி அது நமக்கு
சொந்தமென சொல்வதன்
அபத்தம் பற்றி
ஒரு துண்டு ஆகாயத்தை
உரிமை கொண்டாடுவதன்
அளவீடுகள் பற்றி
அதற்காகத்தான்
கொஞ்சம் மண்ணுடன் சேர்த்து
இந்த
தொட்டி ரோஜாக்களை வாங்கினேன்
மேலும்,
எல்லோரும் எடையற்றிருக்கும்
மதிய வேளைகளின்
எங்கள் வீடு பறந்துவிடாமல்
இந்த சிறு எடைதான்
பார்த்துக்கொள்கிறது
பூத்தல்
கடையிலிருந்து வீடுவரை
நீந்தி நீந்திதான் வந்ததிந்த
குட்டி மீன்
வந்ததும்
பால்கனி செடிகளின் பார்வையில்படும்
மூலையிலேயே
அதற்கொரு இடம் கிடைத்தது
செடிகளைப் பார்த்து தினமும்
ஒவ்வொன்றாய் கற்றுக்கொண்டது
குட்டி மீன்
முதலில் அது பேசுவதை நிறுத்தியது
பின்பு ஆகாயம் நோக்கி வாய்பிளந்தமர்ந்தது
வேர்களின் ரகசியம் அறிந்த நாளில்
கிளர்ந்து நீர்தேடி
தொட்டியெங்கும் அலைந்தது
ஆழத் திசைவிரித்து
நீரெங்கும் வேர்பிடித்த
ஒரு நாள் திடீரென
தொட்டிக்கு நேர்மேலே
அழகாய்ப் பூத்தது
தொலைநோக்கி
வழக்கமான பாதையினின்று
கிளைபிரியும் சாலையில்
நிற்குமந்த தனிமரம்
ஒரு ரகசிய வாசல்போல்
சாலையை
கைகளால் குதித்துக்காட்டும்
வான் நோக்கி
விரிந்து விரிந்து
மண்ணைத் தொட்டுவிட்ட
மரம்.
***
-ஆனந்த் குமார்
அருமை
முதலில் அது பேசுவதை நிறுத்தியது
பின்பு ஆகாயம் நோக்கி வாய்பிளந்தமர்ந்தது
வேர்களின் ரகசியம் அறிந்த நாளில்
கிளர்ந்து நீர்தேடி
தொட்டியெங்கும் அலைந்தது
ஆழத் திசைவிரித்து
நீரெங்கும் வேர்பிடித்த
ஒரு நாள் திடீரென
தொட்டிக்கு நேர்மேலே
அழகாய்ப் பூத்தது
அருமையான வரிகள் புதிய புதிய எண்ணங்களையும் தரிசனங்களையும் தேடிச் செல்ல வைப்பவை (குட்டிமீனைப் போல)
நன்றி