01
கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ்ச்சிந்தனை மரபில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அறிஞர்களுள் ஒருவர். அவரது சிந்தனைகள் மற்றும் கருத்தலகை மீள்வாசிக்கும் போது ஓர் உலகளாவிய தமிழ்ச் சிந்தனையாளராகவும், அறிவுஜீவியாகவும் அவரை மனங்கொள்ள முடிகிறது. அவரை மார்க்ஸியராக மட்டுமே சுருக்குவது அவரது பரந்த சிந்தனைவெளியைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய தடையாகும்.
அவரது ஒட்டுமொத்த சிந்தனைகளையும் படிக்கும் போது அவர் மார்க்ஸியத்தை ஓர் இயந்திரவாத சித்தாந்தவாதமாக சுருக்கிக் கொள்ளாது ஒரு நெகிழ்ச்சியான கோட்பாடாக அணுகியிருந்தமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரை மார்க்ஸிய அறிஞராக அந்தப் புலத்துக்குள் நின்று மட்டுமே சிந்தித்த ஒருவராகப் பார்ப்பது அவரை முழுமையாக புரிந்துகொள்ளாமையின் விளைவாகும். மார்க்ஸியத்துக்கு வெளியில் அவர் ஒன்றும் இல்லை என்று கருதுவது மிக மட்டமான புரிதலாகவே அமையும்.
அவர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் பேசி இருக்கிறார். இயங்கி இருக்கிறார். அவரது பங்களிப்பு என்பது மொழியியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல், அரசியல், வரலாறு என பரந்துபட்டது. தமிழ்ச் சிந்தனைப் புலத்தில் மிகச் சிலரே இத்தகைய பரந்த செயற்பாட்டைக் கொண்டவர்கள். ஒரு கல்வியியலாளர் என்ற தளத்துக்கு அப்பால் அவர் ஓர் அறிவுஜீவியாக இயங்கி இருக்கிறார். மிக ஆழமாகவும், புதிய பார்வைகளை முன்வைப்பதாகவும் அவரது சிந்தனை இயக்கம் விரிவுபட்டது. வெறுமனே கோட்பாடுகளை அறிமுகம் செய்வது மட்டுமே ஒரு அறிவுஜீவியின் பணியாக இருக்க முடியாது.
ஏற்கனவே தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட இந்த துறைசார்ந்த பார்வைகளிலிருந்து அவரது பார்வை புதிய கோணங்களை அடையாளம் காட்டுவதாகவும் அவற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாகவும் இருந்தது. அவர் ஒரு மார்க்ஸிய விமர்சகராக செயற்பட்டு ஈழப் படைப்புகளை முற்போக்குச் சட்டகத்துக்குள் சுருக்கியமையே அவரது அறிவுலகச் சறுக்கலாக கருதப்பட வேண்டியதாகும். அந்த ஒன்றுக்காக அவரது ஒட்டுமொத்த சிந்தனை இயக்கத்தையும் அந்த வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. இந்தக் கட்டுரைத் தொடர் சிவத்தம்பியின் சிந்தனைகளை மார்க்ஸிய நீக்கக் கோணத்தில் இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்துகொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் முயல்கிறது.
இலங்கைத் தமிழ் அறிவுச்சூழலில் அவர் முதன்மையாக முன்னிறுத்தப்படவேண்டிய அறிஞர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒருவரின் அறிவுப் பயணம் என்பது அவரது அனுபவம், காலம், அறிவு என்பவற்றின் நீட்சியுடன் மாற்றமடைந்து வரக்கூடியது. அந்தவகையில்தான் அவரது மார்க்ஸிய ஈடுபாடு இருந்தது. அது அவரதுஅறிவுலகச் செயற்பாட்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வந்த சிவத்தம்பிச் சிந்தனை மரபாகும் (Sivathambi thought).
அறிவுஜீவித்துவ வாழ்க்கை வாழ விருமபும் ஒருவனின் முதல் காலடி அப்போது அறிவுலகில் செல்வாக்குச்செலுத்திக்கொண்டிருக்கும் அறிவுத்துறையிலிருந்துதான் தொடங்கும். அதுதான் அவருக்கும் நடந்தது. அது மட்டுமே சரி. அதற்கு வெளியே வேறு அறிவுத்துறைகளே இல்லை எனும் வாதத்துடன் பிடிவாதமாக அந்த வட்டத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதே மடமையாகும். அது ஓர் அறிஞனின் பண்பாக இருக்க முடியாது. அவன் ஓர் அறிஞனே இல்லை. வெறும் ஒரு கோட்பாட்டு, அல்லது மத விசுவாசி போன்றவன்தான். சிவத்தம்பியின் நிலை இதிலிருந்து முற்றிலும் வேறானது. காலமும் அனுபவமும் அவரது நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. அவரது வாழ்வின் பிற்பகுதியில் அவர் மத நம்பிக்கைகள், சடங்குகள் குறித்து (மார்க்ஸியத்துக்கு அப்பாலான) வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் அவர் ஓர் இயந்திரவாத மார்க்ஸியர் இல்லை என்பதையே நமக்குச் சொல்கிறது. உண்மையில் அப்படியான மாற்றம் எதுவும் அவரிடம் ஏற்பாட்டிருக்காவிட்டால்தான் சமூக அசைவியக்கத்துக்கு ஒவ்வாத ஒருவராக அவரை பார்க்கத் தூண்டி இருக்கும். அறிவுஜீவி என அவரை சொல்ல முடியாமல் போயிருக்கும்.
உண்மையில், அவரது காலப்பகுதியில், அறிவுத்துறைச் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களின் முதன்மையான அடையாளமாக, ஈடுபாட்டுக்குரிய துறையாக இருந்தது மார்க்ஸியம்தான். எனவே அறிவுப் பயணம் மேற்கொள்ள விரும்பிய ஒருவனுக்கு அது தவிர்க்க முடியாதது.
சிவத்தம்பியும் தமிழ்ப் பண்பாட்டின் விரிதளமும்
தமிழ்ப்பண்பாடு என்பதை ஒரு பரந்த அர்த்தத்தில் வைத்துப் புரிந்துகொண்டவர் சிவத்தம்பி. தமிழ் அறிஞர்களிலேயே இத்தகைய பார்வையுடையவர்கள் வெகுசிலரே. அதிலும் ஈழத்து தமிழ்ச் சூழலில் இவர் ஒருவரே இத்தகையை பார்வையைக் கொண்ட அறிஞர் என்று சொல்லாம். பண்பாட்டை எதன் அடிப்படையில் வரையறுத்துக் கொள்வது என்ற குழப்பம் சிவத்தம்பியிடம் இல்லை. பண்பாட்டின் முழுதளாவிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு பண்பாட்டை வரையறுத்துப் புரிந்து கொள்ளும் அவர் தமிழ்ப் பண்பாட்டை வரலாற்றடிப்படையில் புரிந்துகொள்கிறார். தமிழ்ப் பண்பாடு எதன் தளத்தில் கட்டமைந்துள்ளது? மதமா,இனமா, என்ற வாதங்களைக் கடந்த ஒரு பார்வையை சிவத்தம்பி முன்வைத்தார்.
தமிழ்ப் பண்பாடு என்பது தமிழர் பண்பாடு என விரித்துக் கொள்கிறார் சிவத்தம்பி. தமிழ்ப் பண்பாடு என்பது தன்னளவில் சுருங்கிக் கொண்ட, பல்வேறு அடுக்குகளைக் கொண்டிராதஒற்றைத் தன்மையினைக் கொண்ட அமைப்பாக சிலர் புரிந்து வைத்திருக்கின்றனர். சிவத்தம்பியைப் பெறுத்தவரை தமிழப்பண்பாடு என்பது ஒரு மதத்துக்குரியதல்ல. மாறாக, சில மதங்களை, தனித்தனி குழும வேறுபாடுகளை ஊடறுத்து நிற்கும் தமிழ்மொழியைப் பேசும் மக்களின்ஒருமைப்பாட்டினைக் குறிக்கும் ஒரு அடையாளமாக அதனைக் காண்கிறார். அதேநேரம், உலகப் புதுமைகளைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறையைச் சுட்டுவதாகவும் தமிழர் பண்பாடு அமைகிறது என்கிறார். மரபு சிதையாமல் புதுமையை உள்வாங்கிக் கொள்ளும் முறைமையை இது தமிழர்க்கு உணர்த்துவதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
“இன்று தமிழ்ப்பண்பாடு என்பது நமக்குச் சீவாதாரமான ஒரு தொடராகியுள்ளது. பக்தி இலக்கியம் முதல் பகுத்தறிவு இலக்கியம் வரை, பரதநாட்டியம் முதல் தெருக்கூத்து வரை, கோபுரம் முதல் கொட்டகை வரை, திருத்தக்க தேவர் முதல் வீரமாமுனிவர் வரை, சாத்தனார் முதல் உமறுப்புலவர் வரை பலவற்றையும், பலரையும் இணைத்து ஒருமை காண்பதற்கு இத்தொடர் உதவுகிறது” என்கிறார். (தமிழ்ச் சமூகமும்பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்-2. கா.சிவத்தம்பி)
இந்தப் பார்வை தமிழ்பண்பாட்டு நீட்சியை தெளிவாக முன்வைக்கிறது. அதனை ஒரு மதத்துக்குள்ளேயோ,நிலத்துக்குள்ளேயோ சுருக்கும் ஒரு குறுகலான பார்வையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்தப் பார்வை. அதாவது பண்பாடு அது ஊடாடும் ஏனைய பண்பாட்டுக்கூறுகளோடு ஊடாடி அதன் பன்முகத்தன்மையை விரிவுபடுத்துவதன் மூலம் அது மேலும் ஆழமும் அர்த்தமும் பெறும். தன் மரபுசிதையாமல் தன் சூழலில் நிகழும் புதியவற்றை உள்வாங்கி தனது வெளியை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதன் மூலம் அந்தப் பண்பாடு மேலும் உறுதியுற்று பலமடைகிறது. இதனால்தான் தமிழ்ப்பண்பாடு தமிழ் பௌத்தம், தமிழ் முஸ்லிம், தமிழ் கத்தோலிக்கம் எனும் பண்பாடுகளின் கூறுகளையும் உள்வாங்கி ஒரு பெரும் பண்பாட்டமைப்பாக தமிழ்ப் பண்பாடு தன்னை நிறுவி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் இந்த உள்அடுக்குகள் அதன் பருமனுக்கும், வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன.
தமிழ் பண்பாட்டின் வளர்ச்சியை ஐந்து வரலாற்றுக்கால கட்டமாகப் பிரித்து நோக்கி ஒவ்வொரு காலகட்டமும் எப்படி பிற பண்பாடுகளோடு ஊடாடி விரிவுபெற்றது என்பததைக்காட்டுகிறார். பிற பண்பாட்டுகளின் வருகையை, அவற்றின் ஒருங்கிணைவை தமிழ் பண்பாட்டின் அழிவாகவோ, வீழ்ச்சியாகவோ சிவத்தம்பி காண்பதில்லை. அந்தப் பண்பாடுகளை எப்படி தமிழ்ப்பண்பாடு உள்வாங்கி விரிவுபட்டது என்பதையே அவர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றை பின்வருமாறு ஐந்து பெருங் காலகட்டமாக வகுத்துக் காண்கிறார் சிவத்தம்பி.
1. ஆரம்பம் முதல் கி.பி. 250 வரை.
2. கி.பி. 250 முதல் கி.பி. 600 வரை
3. கி.பி. 600 முதல் கி.பி. 1300வரை
4. கி.பி 1300 முதல் கி.பி. 1800 வரை
5. கி.பி. 1800 முதல் இன்று வரை
(தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்-5. கா.சிவத்தம்பி)
இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு தமிழ்ப் பண்பாடு ஏனைய பண்பாடுகளோடு ஏற்படும் தொடர்புகளால் தமது மரபுகளைப் பேணிக்கொண்டு புதிய பாரிமாணங்களையும் பெற்று விரிவடைந்தது என்பதை விளக்கிச் சொல்கிறார்.
ஆரம்பம் முதல் கி.பி.250 வரையான காலகட்டம் என்பது தமிழ்ப் பண்பாட்டின் மூலப் பண்பாட்டுக் காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் மிகச் சுருங்கிய நிலையில் தனது பண்பாட்டை தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளத் தொடங்கினர். தமிழ்ப் பண்பாட்டின் நீட்சிக்கான சாளரங்கள் அப்போது திறக்கப்படவில்லை. சங்க காலம் எனக் கருதப்பட்ட இக்காலப் பண்பாடுதான் தமிழின் தனித்துவமான சில பாரம்பரியங்கள் வளர்த்தெடுக்கப்பட்ட காலம் என சிவத்தம்பி கருதுவது.
இரண்டாவது காலகட்டமான கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையான காலப்பகுதியைத்தான் தமிழ்ப்பண்பாட்டின் களம் விரிபடும் காலகட்டம் என்கிறார். சமணம், பௌத்தம் என்பன தமிழ்ப்பண்பாட்டின் உபபகுதிகளாக உள்வாங்கப்பட்ட காலகட்டமாக இதனைக் கருதுகிறார்.
“250-600 இல் சமண, பௌத்த மேலாண்மை காணப்படுகிறது. தமிழின் களம் விரிவடைகிறது. ஆனால் இந்த விரிவாக்கம் பௌத்தம், சமணத்தை அப்படியே பிரதிபலித்த ஒன்றன்று. பௌத்தம் சமணத்தை உள்வாங்கி தனக்கென ஒரு சிறப்புடைய தத்துவத்தை தருகிறது. திருக்குறள் வாழ்க்கை வாழப்பட வேண்டுமென்பது அதில் வாழ்க்கை ஒரு சுமை அல்ல அது சமூக முன்னேற்றத்துக்கான ஒரு பொறுப்பு” (தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்-7. கா.சிவத்தம்பி)
என்கிறார். அந்தக் காலப்பகுதி தமிழ்ப்பண்பாடு சமணம், பௌத்தம் போன்றவற்றை நிராகரித்து ஒதுக்கவோ, புறக்கணிக்கவோ இல்லை. தனது தனித்துவத்தையும் குரலையும் பேணிக்கொண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு கூறாக தமிழ்ப்பண்பாட்டின் ஒரு அம்சமாக அதனை முன்னிறுத்தியது. அது தமிழ்பண்பாட்டின் இன்னொரு கட்ட வளர்ச்சியாகும். இதனால் தமிழ் பௌத்தம் என்றொரு புதிய பரிமாணம் தமிழில் தமிழ் பண்பாட்டில் உருவாகி தமிழின் பரப்பெல்லையை மேலும் விரிவாக்கியது. இதனால் தமிழுக்கும் தமிழ்பண்பாட்டுக்கும் எந்த இழப்பும் இல்லை என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
1300க்குப் பின்னரான நான்காவது காலகட்டம்தான் தமிழ்ப் பண்பாட்டில் மாபெரும் விஸ்தரிப்பு ஏற்பட்ட காலமாக சிவத்தம்பி காண்கிறார்.
இக்காலகட்டத்தில்தான் இந்திய மற்றும் தமிழ்த்தன்மைக்கு முற்றிலும் அந்நியமான இஸ்லாம் இந்தியாவில், தமிழ்நாட்டில் பரவிய காலம். இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்தியாவில் இஸ்லாம் பரவியமை தொடர்பில் மிகையான குறிப்புகளே காணப்படுவதாக ரணஜித் குஹா, ரொமிலா தாப்பர் போன்ற இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். சிவத்தம்பியும் இந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறார்.
“1300 க்குப்பின் ஏற்படும் மாற்றம் தமிழ்ப் பண்பாட்டின் பரிமாணத்தில் ஒரு புதிய விஸ்தரிப்பை ஏற்படுத்துகின்றது. இஸ்லாம் வட இந்தியாவில் பரவிய முறைமைக்கும், தென்னிந்தியாவில் பரவிய முறைமைக்கும் வேறுபாடு உண்டு. இதனைப் பண்பாட்டு வரலாற்றில் காணலாம். இஸ்லாத்தின் வருகை தமிழில் ஏற்படுத்திய விரிவையும், அதனாலும் அதற்கு அடுத்து வரும் இன்னொரு முக்கிய விஸ்தரிப்பாலும் தமிழ்ப்பண்பாட்டின் வரைவிலக்கணம் விரிவடைகிறது”.
(தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்-8.கா.சிவத்தம்பி)
தமிழகத்தில் நிலைபெற்றுவிட்ட தமிழ்ப்பண்பாட்டோடு இக்காலப் பகுதியில் இஸ்லாமும் சேர்ந்து கொள்கிறது. அரபு நாட்டில் தோன்றிய மதமான இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் ஊடாடி தமிழ் இஸ்லாமாக புது வடிவம் பெறுகிறது. அது தமிழ்ப் பண்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இன்னொரு அடுக்காக முகிழ்க்கிறது. அது தமிழ்ப்பண்பாட்டின் நீட்சியாக வடிவங்கொண்டு அதன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது.
சிவத்தம்பி தன் நூலில் இப்படி எழுதுகிறார் “தங்கள் மதப் பண்பாட்டுத் தேவைகளுக்கு அவர்கள் (தமிழ் முஸ்லிம்கள்) தமிழையே பயன்படுத்தியதன் காரணமாக, தமிழ் தன் வரலாற்றில் முதல்தடவையாக இந்திய மரபுக்குப் புறத்தே, இந்தியப் பண்பாட்டு வட்டத்துக்கு அப்பாலே தோன்றிய ஒரு மதத்தின் மொழியாகிற்று. இது ஒரு மிக முக்கியமான மாற்றம், அரபு அந்த மதத்தின் வேதமொழி……….தமிழ் மொழி அதுகாலவரை எடுத்துக் கூறியிராத சில கருத்துகளை, கோட்பாடுகளை இப்பொழுது எடுத்துக்கூற வேண்டியிருந்தது. இம்மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பேசப்பட்ட பொழுது அரபுப் பதங்களே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறை வணக்கத்துக்கரிய வெளிப்பாடுகள்- ஆத்ம வேட்கைகள், வேண்டுதல்கள் தமிழிலேயே சொல்லப்பட வேண்டியிருந்தன”.
(தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்-10.கா.சிவத்தம்பி)
இதன் தொடர்ச்சியாக குர்ஆன், ஹதீஸ் கிரந்தங்கள் போன்ற இஸ்லாமிய மதப் பிரதிகளும், இஸ்லாமிய மதச் சடங்குகள் குறித்த பிரதிகள் என தமிழ்ப் பண்பாட்டு இலக்கியப் பாரம்பரியத்தோடு கலந்தன. அதோடு அறபுத்தமிழ் என்றொரு புதிய பரிமாணமும் தமிழ்ப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது. தமிழ்ப் பண்பாட்டின் காவிய மரபில் தமிழ் முஸ்லிம் புலவர்கள் படைப்போர், மசாலா, நொண்டி மூலகம் போன்ற படைப்பிலக்கியங்களை தமிழ்ப்பண்பாட்டுக்களித்தனர். இந்தவகையில் சிவத்தம்பி குணங்குடி மஸ்தான் பாடல்களையும், சூஃபி பாடல்களையும் மிக முக்கியமானவையாக கருதுகிறார். தமிழ்ப்பண்பாட்டின் விரிதளத்தின் ஒரு பகுதியாக சிவத்தம்பி அவற்றையும் காண்கிறார்.
தமிழ்ப்பண்பாட்டு நீட்சியின் மற்றொரு முக்கியமானதொரு கட்டமாகவும் மாற்றமாகவும் சிவத்தம்பி கருதுவது-மேற்கின் தொடர்பையாகும். மேற்கு நாட்டவரின் தமிழ்நாட்டுத் தொடர்புகள் மூலம் அவர்களது பண்பாட்டுக்கூறுகள் தமிழ்ப் பண்பாட்டோடு இணைகிறது. இது அரச அதிகாரத்தின் மூலமும் நிறுவப்பட்டதாக சிவத்தம்பி சொல்வார். அதன் விளைவாக கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் உள்மடிப்புகளாக, தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாக நிலைபெற்றன. சிவத்தம்பியைப் பொறுத்தவரை காலனிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலைநாட்டினர்தான் தமிழ்ப் பண்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்தக் காரணமாக இருந்தனர். அதை மிக நுணுக்கமாக அணுகி தன் நூலில் ஆராய்கிறார். மொழி, மதம், பண்பாடு என பல தளங்களில் தமிழையும், மேற்கின் குறிப்பாக ஆங்கில மொழி, ஆங்கிலேயப்பண்பாட்டோடும் ஒப்பிட்டு ஆராய்கிறார்.
பின்னர் தமிழ்ப்பண்பாட்டின் ஒரு கூட்டுக் கலவையான பரந்த தளத்தை கூறுபடுத்தலை நோக்கி ஆரியக் கருத்தியல் கொண்டு சென்றது. இந்த ஆரியக் கற்பிதம் தமிழ்ப் பண்பாட்டின் தூய்மையாக்கம் பற்றி பேசத்தொடங்கியது. சமஸ்கிருதமயமாதல் அல்லது உயர்குடியாக்கம் போன்ற கருத்தியல்கள் தமிழ்ப்பண்பாட்டின் விரிந்த தளத்துக்கு எதிராக ஆரிய மேன்மையாளர்களால் முன்வைக்கப்பட்டவையாகும். ஆனாலும் இன்று தமிழ்ப்பண்பாட்டுவெளியில் ஆரியக் கருத்தியல் வெறும் மாயையாக புறக்ககணிக்கப்படுவது சிவத்தம்பி போன்ற சிந்தனையாளர்களின் கருத்தியல் தாக்கத்தின் விளைவாகவே கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்ப்பண்பாட்டின் தொடக்க நிலையையும் அதன் இன்றைய நிலையையும் ஒப்பிடுவதன் மூலம் அவர் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் தன்மைகளை நிறுவுகிறார். தமிழ் பண்பாட்டின் விரிவுபட்ட தன்மையை எடுத்துக்காட்டுகிறார். இதன் மூலம் ஒரே பண்பாட்டுக்குள்ளிருக்கும் பன்மைகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதே அவரது நோக்கமாகும். அதேநேரம் அவரது இந்தக் கருத்தே தமிழ்ப் பண்பாட்டின் ஆழமான புரிதலுக்கும் ஏற்புக்கும் வழிகோலுகிறது.
“நவீன உலகில் தொடர்ந்தும் தமிழராக, நவீன வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்ட தமிழராக வாழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொழுது எவை எவை எமது அடிப்படை பண்புகள், எந்தப் பண்பு இல்லாவிட்டால் நாம் தமிழராக இருக்க முடியாது என்பதை அறிந்தபோதுதான், நாம் நமது பாரம்பரியத்தை மீளக் கண்டு கொண்டோம். முன்னர்இலைமறைகாயாக இருந்ததை, கருத்துத் தெளிவுடன் எமது வாழ்க்கை அடிப்படையாக்கிக் கொண்டோம். புதிய தேவைகள் பாரம்பரியத்தின் தடங்களைக் காட்டின. புதிய உலகோடு இணைய முற்பட்ட பொழுதான் பழந்தமிழின் சனநாயகப் பண்பு, சமரசம், உலகப் பொதுமை ஆகியவற்றை அறிந்துகொண்டோம்.”
சிவத்தம்பியின் இந்தக் கருத்து தமிழ்ப்பண்பாடு சார்ந்து அது குறித்த புரிதல் சார்ந்து மிக முக்கியமானதாகும். கூறுபடுத்தல், துண்டாடல் கலாச்சார அறிவுஜீவித்துவ வெளியில் பண்பாட்டு ஒருமைப்பாட்டையும், ஒருங்கிணைவையும் முன்வைக்கும் சிவத்தம்பியின் அணுகுமுறையே ஏற்புடையதாகவும், பகுத்தறிவுசார்ந்ததாகவும் உள்ளது.
***
-ஜிஃப்ரி ஹாசன்