கார்பன் – 14
ஜனிக்கும்போதே முதுமையில் பிறந்த குழந்தைபோல்
கற்கால மனிதனொருவன் மண்ணுக்குள்ளிருந்து வெளிப்பட்டான்
தசாப்தங்கள் பலவற்றைக் கடந்துவந்த சோர்வு முகமெங்கும் தெரிந்தது
மூப்பெய்திய விழித்திரையில் விழுந்ததெல்லாம் வியப்புகள்
காலகட்டத்தை வேறுபடுத்தும் அனுபவமும் புதியது
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிய ஆரம்பித்தது
மாடகோபுரங்களைவிட அடுக்குமாடிகள் உயரமானவை
ஆழ அகழிகளைவிட மின்வேலிகள் வலிமையானவை
துருப்பிடித்த வாளோடு சில சுவடிகளையும் வைத்திருந்தான்
ஒருவேளை தூதுவனாக இருக்கக்கூடும்
பூமிக்குள் மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் போரில்
வழிமாறி இக்காலத்தில் எழுந்துவிட்டானா
இருந்த இடத்திலிருந்தே இருவேறு யுகத்தின் முனைகளை
தொட்டுக்காண்பிக்கும் அவனால்தான்
இன்று எதேச்சையாய் உயிர்பிழைத்திருக்கிறது
நீண்ட நெடும் நாகரிகம்
.
திரும்பிய திசையெல்லாம் ஊரே பரபரத்தன
அழிவின்மையில் செதுக்கப்பட்ட பிரதிமையைக் கண்டுசெல்ல
கூட்டங்கள் வரிசையில் அலைமோதின
”அவன் வந்தவழியைப் பின்தொடர்ந்து சென்றால்
நமக்கும் நேரப்பிரயாணம் சாத்தியமென்று” வதந்திகளும்பரவின.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
முகச்சுருக்கம் காட்டாத புகைப்படம்போல்
நடப்பது என்னவென்று புரியாமல்
அசைவின்றி அமர்ந்திருந்தவன்
பிறகு சுற்றிமுற்றி வெறித்தபடி
தனக்குள்ளேயே புரிந்துகொண்டான்,
“தற்சமயம் உலகமே மாறுவேடத்தில் இருப்பதாக….”
.
இன்று இணையம் முழுக்க பரபரப்பில் பகிரப்படும்
சுடுமண் மானிடனே… சொல்
நீ நிறுத்திவிட்ட கனவு எந்த பேரரசைப் பற்றியது…?
எழுத்துப்பிழைகளோடு எழுதுவதென்பது
உன் காலத்திலும் இருந்ததுதானே..?
விலங்குகளும், தெய்வங்களும் எப்போதிருந்து பேசமறந்தன..?
சடங்குகள், வழிபாடுகள் எப்போதிருந்து வழிமாறின…?
நிலத்தின் மாறுவேடத்தைக் கலைக்கும்போது
பூமி ஏன் பின்னோக்கிச் சுழல்கிறது…?
எல்லா காலகட்டத்துக்குமான நம்பிக்கையொன்று சாத்தியம்தானா…?
அந்தந்த தருணத்தில் லயிப்பதை விடுத்து
வாழ்வென்பது ஞாபகங்களை சுமந்தலையும் விதிப்பயனா…?
இன்றேல்
நாட்காட்டியின் நீரோட்டத்தில் எட்டிப்பார்த்து சலித்துப்போய்
நித்தியத்தில் கரையேறிவிடும் நிஜத்தின் ஈவுகளா..?
ஒரு சூரியகாந்தி வரைந்துகாட்டும் கோட்டின் மீதே
நம்பிப் பயணித்த கதிரவனை மறுநாள் காலை
கிழக்குத் திசையில் தோண்டியெடுக்கும் அகழாய்வுகள்
தினந்தோறும் நிகழ்வது வழக்கமான ஒன்றுதான்,
வெட்டிச்சாய்த்த விருட்சமொன்று
தன் நரம்புகளை வளையங்களாக்கி
தான் வாழ்ந்த வருடங்களை எண்ணச் சொல்வதுபோல்
மரித்தபின்னும் நிலவும் மனிதன் என்பவன்
உச்சரிப்புகள் முடிந்தும் கேட்கும் எதிரொலிகள்
வேதிச்சேர்க்கையில் விரும்பியபடியே
ஓங்கி உலகளக்கும் ஐசோடோப்புகள்
உடலின்மேல் படியப் படிய
செயலற்றுப்போய் தேகம் சிதைகையில்
உயிர் எனும் பொருண்மையும் உடன் சிதைகிறது
கதிரியக்கத்தால் குறிசொல்லும் கரிமங்கள் யாவும்
தொன்மத்தின் பல முடிச்சுகளை
சத்தமின்றி கட்டவிழ்க்கின்றன
தோண்டியெடுக்கப்படும் நகரங்களின்மீது
பழகிய நினைவில் எச்சமிடும் பறவைக்கு
சங்க காலத்திலிருந்தே ஒரே முகவரி, ஒரே வானம்
கணக்கின்றி மேற்கொள்ளும் விசாரணையில்
பண்பாட்டில் அகப்பட்ட மர்மங்களெல்லாம்
காலம் தாழ்த்தியே பதில் சொல்கின்றன,
இரவில் கண்முழிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு
பிரகாசங்களை வடிகட்டித்தருகிறது சல்லடை வானம்,
ஒட்டுத்தைக்கவேண்டிய வரலாற்றின் கிழிசல் துணிகளும்,
இன்னும் திருத்தி எழுதப்படவேண்டிய அத்தியாயங்களும்.
எல்லாம் எல்லாம் தெளிவாகக் கணக்கிடப்பட்டன
.
எங்கோ ஆழத்தில் மீன்கள் விட்ட மூச்சுக்காற்று
குமிழாக மேலெழுந்து சலனமுறும் மேற்பரப்பாய்
கணக்கின்றி காற்றில் கலந்திடும் துகள்கள் யாவும்
கதிர்வீச்சாய் வெளிவந்து ஒருநாள் இப்படித்தான்
எல்லாவற்றையும் ஒப்புவிக்கும்
நகராமல் நின்றுபோன தொல்பொருளொன்றின் வயதினை,
அறியப்படாதொரு நதியின் மூலத்தினை.
எத்தனை நாட்களாய் எவற்றையெல்லாம்
மறந்திருந்தோம் என்பதை – மற்றும்
உலகில் முதன்முதலில் மலர்ந்த நெருப்பொன்றை
உள்ளங்கையளவு நீரிலும் தன்னுடலை
முழுமையாக மறைத்துக்கொள்ளவும்
யுகக்கணக்கில் அதனுள் ஒளிந்துகொள்ளவும் தெரிந்த
நெருப்பொன்றை.
இதோ பதில் கிடைத்தாயிற்று,
வந்தவன் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாம்
சிதையாத அந்த சுவடிகளே அவன் படைத்த இலக்கியமாம்
உருசிதைந்து மண்ணரித்து உடலின் அணுக்கள்
மொத்தமாய் விட்டுச்சென்றாலும்
கார்பன் மட்டும் காலங்காலமாய்
ஒட்டிக்கொண்டே வந்திருக்கிறது
நிரூபிக்கப்படாத ஆன்மாக்கள்
முடிவிலியில் பிணைந்திருக்க
எண்ணங்களை அயனியாக்கும் காஸ்மிக் வானமோ
இரத்தக்கறை படிந்த அந்தியாய் கழுவப்படாமல் கிடக்கிறது
கல்வெட்டுகள் வாங்கிய தழும்புகள் எவற்றிலும்
உளியைக் குறித்த புகார்கள் ஏதுமில்லை
மொழியின் அட்ச ரேகைபோல் நீளும் வாக்கியங்கள்
தடயங்களாய் வழிசொல்லும் கதைகளுக்கும் முடிவில்லை.
பூர்வஜென்மத்தின் விலைபேசும் முகம்-பொறித்த நாணயங்கள்,
ஊர்சுற்றியே உலகை வரைந்த பதப்படுத்திய பண்டங்கள்,
போர்செய்து வரைபடத்தில் ஊர்ந்து விரிந்த எல்லைக்கோடுகள்,
எல்லாம் தனித்தனியே சாட்சிகளாக விளக்கக்கூடும்
”சுதந்திரம் என்பது ஒருகாலத்தில்
எவ்வளவு சிக்கலாக இருந்ததென”.
அல்லது சரியாகப் புதைக்கப்படாதவனின் கட்டைவிரல்போல்
பூமிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
இந்த நடுகற்கள் ஒருவேளை சொல்லக்கூடும்
’இறப்புகள் அனைத்தும் அகாலத்தின் சாட்சிகளென’
இப்போது
மட்காத வாழ்வொன்றை நானும் பிரார்த்திக்கிறேன்
பொக்ரானில் சத்தமிட்டு சிரித்த புத்தரைப்போல
இறந்தபின்பு என்னையும் பூமி முழுக்க புதைக்கட்டும்
எதிர்காலத்தில் ஒருநாள் நடக்கப்போகும் அகழாய்வில்
தற்செயலாய் தென்படவிருக்கும்
எனது எலும்புகளும், உடைமைகளும்
இந்நீண்ட தொன்மத்திலொரு கூடுதல் நினைவாகட்டும்
உருகி முடிந்தபின்னும் ஞாபக மறதியில்
ஒரு மெழுகுவர்த்தி இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது
இறந்தபின்னும் சரீரமொன்று
தன்னையறியாமல் உளறிக்கொண்டிருக்கிறது
நியதி என்பது ஒன்றே….
எதுவும் இங்கே முழுமையாய் நீங்குவதில்லை.
அழுகியதால் மட்டும் ஒரு கனி
மரணமுற்றதாய் அர்த்தமில்லை.
பெரு விஷ்ணுகுமார்
Super