சுயதனிமைப்படுத்தல் சிலநேரம் மிகக்கொடுமையானது. எனக்கு சிறுவயிதிலிருந்து வறட்டு இருமல் ஏதாவது ஒரு பருவத்தில் பீடித்துக்கொள்ளும்; கொல்லும். வருடாவருடம் ஓரிரு மாதங்கள் இந்த அவஸ்தையை நான் அனுபவித்தே ஆகவேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மிக அவதி பட்டிருக்கிறேன். முறையான ஆங்கில,ஆயுர்வேத மருந்துகளோடு பாட்டி வைத்தியமும் கூட எனக்கு துரித பலனை அளிக்கவேயில்லை. இருமி இருமி நெஞ்சும், இடுப்புப்பகுதியும், முள்ளந்தண்டும் தாங்கொணா நோவைத் தரும். ஒரு கவளம் சோற்றை விழுங்குவதற்குள்ளோ, யாரிடமும் பேசுகையில் சேர்ந்தாற்போல  நாலு வார்த்தையோ வருவதற்குள் இருமல் உயிரை வாங்கிவிடும். அழுதும் கூட இருக்கிறேன்.

விடயம் என்னவென்றால் அந்த பீடை, எனக்கு கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் தொற்றியது. உலகமும், நாடும் இருக்கும் நிலைமையில் இப்போது இருமும் ஒருவனை நீங்கள் என்னவென்று நினைப்பீர்கள்? ஆம் , அதே தான்.

வைத்தியரிடம் எல்லாம் கூறி தக்க மருந்தோடு வீட்டிலேயே அடைப்பட்டுக்கிடக்க வேண்டியநிலை. பயப்படும் படியாக ஒன்றுமில்லை, வழமையாக எனக்குள்ள பிரச்சனை தான். ஆனால் தொடர்ந்து வந்த சிக்கல் என்னவென்றால், வீட்டிற்கு அவசியமான பொருட்கள் வாங்க நான் தான் கடைகளுக்குச் செல்லவேண்டும், என் மூன்று நாய்க்குட்டிகளைப் பராமரிக்கவேண்டும், ஊரடங்குத் தளர்த்தி ஏதேனும் அவசரம் என்றாலும் நான் தான் செல்லவேண்டும். இத்தனையிருக்க எப்படி என் இருமலை கட்டுப்படுத்திக்கொண்டு அதுவும் முகக்கவசம் தரும் புழுக்கத்தையும் பொறுத்துக்கொண்டு வேலைகளைச் செய்வது? எங்காவது ஓரிடத்தில் நான் இருமினாலும் என்னை சூழவுள்ளவர்கள் எப்படி பார்ப்பார்களென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

__

 

கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் பாதிப்பு, 60 ஆயிரம் மரணங்கள். தொடரும்…

 

கொரொனா, இன்னொரு பூமிக்கானக் பெருவித்து.

__

 

இனி பலதும் நடக்கலாம்;

 

சுற்றுலாத்துறையைப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகக் கொண்டிருக்கும் நாடுகள் பாரியப் பின்னடைவைச் சந்திக்கப் போகின்றன,

 

அபிவிருத்திக்கும், அவசரகாலத்திற்கும் கடன்பெற்ற நாடுகள் மீது வல்லரசுகளின் ஆதிக்கம் மேலோங்கும்,

 

குறிப்பாக இன்னும் ஒருவருட காலத்திற்கு பொழுதுபோக்கு, களியாட்ட மற்றும் பணமீட்டும் விளையாட்டுத்துறை,IT கம்பனிகள் என்பன ஓய்வற்ற இயக்கத்தில் இருக்கும். இத்துறை சார்ந்த அனைவரும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகப் போகின்றார்கள்,

 

கடல்சார் வாணிபம் தான் இனிவரும் காலத்தில் வர்த்தகப்போட்டிக்கு அடிப்படைக்காரணமாக அமையப்போகின்றது , கடல் எல்லைகள் நிச்சயம் மாறும்,

 

இலவசக்கல்வி வழங்கிக்கொண்டிருக்கும் சிலநாடுகள் , அந்த நடைமுறையை மீள்பரிசீலனை செய்யும்,

 

Covid19/ Coronaவிற்குப் பின்னரான உயிரியல்/உயிரணு ஆய்வுகள் மற்றும் மாற்று மருந்து கண்டிப்பிடித்தல் தொடர்பாக முதலீடு செய்யப்பட்ட அனைத்திற்கும் , மேலும் கண்டறிந்தப்பின் மறைத்து வைக்கப்படபோகும் சகல அறிவியல்சார் பண்டங்களுக்கும் சந்தைப்படுத்தல்/விளம்பரப்படுத்தல் என்பன இவ்வருட இறுதியிலிருந்து ஆரம்பிக்கப்படும்,

 

ஒரு தசாப்தத்திற்கு ஐநா சபை கையாலாகாதவொன்றாக வேடிக்கை பார்க்கும்,

 

இதர நாடுகள் வல்லரசு நாடுகளுடனான உறவைப் பேணுவதிலும், கூட்டு வைத்துக்கொள்வதிலும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழும்,

 

எப்படியும் இன்னும் ஒரு மாதகாலத்திற்கு ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் ஏற்படும் மாற்றம் , 20 வருடங்களுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துமென்றால் வெளிநாட்டவர் புதிதாக குடியேறிக்கொண்டேயிருப்பர்,

 

இருக்கும் கனிய வளங்களையும், மற்றைய வளங்களையும் தீர்த்துவிட்டுதான் அறிமுகப்படுத்துவோம் என்று கிடப்பிலிடப்பட்ட தொழினுட்பத் தயாரிப்புகள் எல்லாம் உலக சந்தையில் எட்டிப்பார்க்கும்,

 

This is incredible. The organisms trapped in the ice above absorb x-rays and emit light. In return, these plants absorb the light and emit oxygen, which feeds the animals trapped in the ice

இது Interstellar படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம். ஆம் , துருவங்கள் இப்போது கவனத்தை ஈர்க்கலாம். அமேசனும், அவுஸ்திரேலியாவும் தீயிற்கு பறிகொடுத்த விலங்கினங்களின் ஆன்மாவின் அலறலை கண்மூடிக் கேட்பீர்கள்,

 

அரசுகள் பேய்களின் வசமாகின்றன என்பதன் உதாரணமா இந்தியா இப்போது இருக்கின்றது. உலகின் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு எலிகளுக்கும்/குரங்களுக்கும் பதிலாக இங்குள்ள நாதியற்றோரை இந்தியா விலைபேசி

விற்கும்,

 

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்!

-756,

 

ரத்தமேயில்லாத சண்டை நிகழும்.

 

லிபரல்வாதக்காரர்கள் , கம்யூனிசக்காரர்கள் – இல்லை , அவர்களைப் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை!

__

 

“ஓய்வேயில்லை, அத்தனை வேலைப்பளு. குழந்தைகளுக்கு, மனைவிக்கு, வீட்டிற்கு, சுற்றத்திற்கு, புத்தங்களுக்கு, உரையாடல்களுக்கு நேரமேயில்லை” என அங்கலாய்த்தவர்களெல்லாம் இப்போது மாரி பிஸ்கட்டில் எத்தனை ஓட்டையிருக்கிறது என ஆராயுமளவும் நேரத்தை வைத்திருக்கிறார்கள்.

 

இது வெறும் கேளிக்கு பகிரப்படுவது தான். ஆனாலும் அடைந்து கிடக்கும் மனவுளைச்சலும் எளிதல்லவே! கசாயங்கள், கைமருந்துகள் என கண்டபடி அதிகமாக தன்னிச்சையாக கொடுக்கப்படும் ஔஷதங்கள் அளவுக்கு மீறிய அமிழ்தம் நஞ்சாவது போல் ஒரு தலைமுறையையே இனி மந்தமாக வைத்திருக்கும். சோர்வு, சீக்கிரம் பூப்படைதல், பிடிப்பின்மை போன்ற காரணங்கள் சலிப்பை உண்டாக்கப் போகின்றது.

 

Unexpressed emotions will never die. They are buried alive and will come forth later in uglier ways.” என்று சிக்மண்ட் பிராய்ட் சொல்லியிருக்கிறார்.

 

அதிகமாக Condom விற்றுத் தீர்ந்திருக்கிறதாம். நல்லது. 2021-2025 வரை அதிக விவாரத்து வழக்குகளை நீதிமன்றத்தில் கேள்விப்படப் போகின்றோம்.

 

ஊருக்கு ஊர் சிறியக் குழுக்கள் உருவாகிக் கொள்ளை,கொலை என நடந்தேறும். இனி அறியாத ஒருவரின் சிரிப்பை சாலைகளில் அரிதாகவேக் காண்பீர்கள்.

 

இதுவரை கண்டிராத அல்லது மறைந்துவிட்டாதாய் பதியப்பெற்ற விலங்குகளின் வருகை ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. தாவரங்களும் அப்படியே,

 

Your Scientists were so preoccupied with whether they could that they didn’t stop to think if they should.”  ( Jurassic Park படத்திலிருக்கும் ஒரு வசனம்) ஸ்டீவன் ஸ்பில்பேர்க்’ற்கு ஆயிரம் முத்தங்கள்.

__

 

இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் நோயை பரப்பியவர்களாக முன்னிறுத்தி காழ்ப்பை உமிழும் பதிவுகளுக்கு ஏதேனும் லைக்,கமண்ட்ஸ் ஆதரவாகத் தெரிவித்து பகிர்ந்திருப்பீர்களானால் கண்டிப்பாக இந்த ஊரடங்கு சிக்கல்கள் எல்லாம் முடிந்தவுடன் தாமத்திக்காது மனநல வைத்தியரை அணுகி உங்களைப் பரிசோதியுங்கள்.

 

“அவன் எத்தகையவனென்றால் , வானத்திலிருந்து நீரை உங்களுக்கு இறக்கி வைத்தான்.. அதிலிந்து குடிப்பும் உங்களுக்கு உண்டு, அதிலிருந்து வளர்ந்த மரங்களும் உங்களுக்குண்டு, அதில் கால்நடைகளை நீங்கள் மேய்க்கிறீர்கள்”

 

இஸ்லாமியர்கள் இறந்த ஒருவரின் இறுதிசடங்குகளை மிக முக்கியமானதொன்றாக கருதுகிறார்கள்.

 

காலனித்துவ காலத்தில் மதப்பரவலாக்கம் என்பது ஒருபுறமிருக்க தங்களுக்கான கடைசி நம்பிக்கையாய் கர்த்தரை தேர்ந்த ஏழை எளியோரை எள்ளி நகைப்பது அருவருக்கும் செயல்.

 

மதங்கள், மத நிறுவனங்கள், நிர்வகிப்பவர்களில் 90 சதவீதமானோர் இதை வியாபாரமாக தான் செய்கிறார்கள். எல்லாம் போலி. ஆனால் , மனித மனதுக்குள் இயல்பாக எழும் நம்பிக்கை வெள்ளையானது. ஒரு சரணும், தஞ்சமடைதலும் தான் துயரம் தோய்ந்த வாழ்வின் சிறு ஆறுதல். அது அப்படியே இருந்து விட்டு போகட்டும்.

 

கண்டிப்பாக எத்தனை இழப்புகள், அறிவியல் புரட்சிகள் நிகழ்ந்தாலும் மதங்கள் குறித்த நம்பிக்கைகள் ஒருபோதும் குன்றாது. புதிய மதங்களும், சபைகளும் தோன்றிக்கொண்டே தான் இருக்கும்.

 

மதம், குறித்த எந்த ஈர்ப்பும் இல்லையென்றாலும் திருப்புகழும்,திருவாசகமும் தான் அடிக்கடி வாயில் வரும்.சில நேரம் மொழி ,கடவுளினும் பார்க்க இனித்தது எனக்கு .

 

//தேக்கிடச் செய்தனை கொடியேன் ஊன்தழை

குரம்பைதோறும் நாய் உடல் அகத்தே

குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி

நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்

எற்புத் துளைதோறும் ஏற்றினன் உருகுவது//

 

20-40 நோயாளர்கள் முதலில் கண்டறியப்பட்ட போது துவாரஹனிடம் இந்த வாசகம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தேன். என்ன காரணமோ தெரியாது.

 

//சாத்திர மின்றேற் சாதியில்லை

பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் – மக்கள்

பொய்மையாகிப் புழுவென மடிவர்.//

 

பாரதி பைத்தியக்காரன் தானே?

 

The eight great mountains and the seven seas,

The Sun, the gods, who sit and rule o’er these;

Thou, I, the universe must pass away,

Time conquers all: why dote on Maya’s play?

 

புத்தர் பகவானை விட மகாஞானி யார் உளரிங்கு?

__

 

//The earth does not belong to man. Man belongs to the earth.//

 

சியாட்டல் தன் இறுதி மூச்சுவரை இதைத்தான் முனங்கிக்கொண்டிருந்தார். வங்காரி மாதாய் மற்றும் நம்மாழ்வாரும்!

 

அடுத்து நாம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால், கழிவகற்றலும் தகனமும். இந்த மாஸ்க் போடும் பழக்கத்தை அடுத்தவொரு சந்ததியினருக்கு எச்சமாக விட்டுச் செல்லப்போகிறோம்.

 

பூமி திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கடைசி சம்பவத்தை எல்-நினோ , லா-நினோ கண்டிப்பாக வருட இறுதியில் டிசம்பர் தொட்டு ஏப்ரல் வரை அரங்கேற்றுவார்கள்.

 

ஓ நோவா!

 

ஆனால், எதுவும் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்காது. அதே முடக்கம் மட்டும் தொடரும்.

 

//In quantum theory of gravity , one considers all possible histories of the universe.//

 

ஹாகின்ஸும் பைத்தியக்காரன் தான்!

__

 

எனக்கு ஓர் அழகான குட்டிக்கனவிருந்தது.  அம்மா, சகோதர்கள், நண்பர்கள் சுற்றம் எல்லாம் எப்போதும் நிலைக்கும். ஆனால் வாழ்க்கை என்பது மனைவி, ஒரு மகள், ஒரு மகன், 5-10 நாய்க்குட்டிகள், நிரம்ப சந்தோசம்!

 

தொழில், பொருளாதாரம் , ஒப்புரவு எல்லாம் விதிவசம். இப்போதெல்லாம் அதிகம் குழம்பிய போதும் காரணமேயில்லாத அமைதி வந்துவிடுகிறது.

 

விதைத்ததையே தானே அறுப்போம்!

 

//It is hard to write down in words the memories of those hours when I met Selma- those nearly hours, lifted with pain, happiness, sorrow, hope, and misery.//

 

மூச்சு முட்டுமளவு கலீல் ஜிப்ரானோடு குடித்து போதையாவதாய் கனவு கூட கண்டிருக்கேன். அந்த கனவில் நான் சமைத்த இறால் பற்றி இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.

 

ஒருமுறையேனும் உண்மையாய் காதலித்து விடுங்கள். பிறவிக்கு நல்லது.

__

 

“பணக்காரத்தந்தை, ஏழைத்தந்தை”

 

ஜனவரியில் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். நேற்று The Pursuit of Happiness படமும் இன்று Zee Tamil இல் Dangal படமும் பார்த்துவிட்டு நெடுநேரம் வெறுமனே 3-4 தம்ளர் வெதுவெதுப்பாய் கொஞ்சம் சுடுநீர் குடித்தேன். இருமல் அவ்வளவாக இல்லை.

 

தந்தைமை என்பது ஒரு நெறி.

 

குழந்தைகள் தான் பெருஞ்செல்வம்.

 

மகள் தான் நிகரற்ற வரம்.

 

என் தீர்மானங்களை மீண்டும் நிச்சயப்படுத்தினேன்.

 

வாழ்க்கை வேண்டுவதையெல்லாம் கொடுக்குமா என்ன? ஆனால் பறித்துவிடும்.!

 

சாமுவேல் டெய்லரின் Ancient Mariner என்ற கவிதையில் ,

 

Swiftly, swiftly flew the ship,

Riding gently the oncoming tide.”

 

என்ற வரிகளை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அக்னிச் சிறகுகள் நூலில் எங்கோ மேற்கோள் காட்டியிருந்தார்.

__

 

“நல்லதும் கெட்டதும் ஒரு மனிதனுக்குள்ளேயே நிகழ்கிற பொழுது அவன் இலக்கியப் பிரச்சனை ஆகிவிடுகிறான்”

 

இதை ஏன் “ஓ அமேரிக்கா” வின் முன்னுரையில் ஜெயகாந்தன் சொல்லியிருப்பார்?

 

“Imagination is more important than knowledge.” என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நான் தான் தப்பாகப் புரிந்து வைத்திருக்கிறேன்.

 

Be like water, அதனால் புரூஸ்லியை மாஸ்ட்டர் என்றே எப்போதும் நம்புவேன்.

 

நேரமிருந்தால்,

 

“Tales from Planet Earth”  என்ற அருமையான நூலைப் படியுங்கள். ஆர்தர் சி க்ளார்க்கின் தீவிரக் காதலனாய் வேறு என்ன கேட்பது!

__

 

என் உச்சபட்ச தேவை

ஒரு கவிதைச் சாற்றின்

ஒரு துளியை

பருகிவிட்டு அடுத்தமுறை

பசிப்பதற்கு காத்திருப்பது தான்!

 

இதை எழுதிய ஜனார்த்தனோடு சிக்கன் சாப்பிட வேண்டும்.

__

04.04.2020

Cover photo:- mohammed sajid

ராவணன் தர்ஷன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *