கையுள்ள வீடு
எனக்கென கிடைத்திருக்கிறது
பிரகாச வெளியில் யாருமற்ற வீடு
அதில் தனித்து உறங்கி எழுகிற எனக்கு
சகலமும் கொடுக்கிறது இவ்வாழ்வு
அடர் புகை இருளில் நாள் முழுக்க
சன்னமான நரம்பு சப்தங்கள்
அதில் கலந்து உலாவுகிறேன்
எல்லாமே சாய்வு கொடுக்கிறது
எனது வவ்வால் புத்தியை போல
சில மரசட்டங்கள் முறிந்து தொங்குகின்றன
என்னை அவ்வளவு கவனமாக கையாளுகிறேன்
ஆனாலும் அது நேர்கிறது
என் கால் தடுக்கி நானே விழுகிறேன்
அப்படி விழும் போதெல்லாம்
என்னை அறக்க பறக்க தூக்குவதற்காக
ஒரு நீளமான கை வரும்
அதுவொரு கிளை மாதிரியான கை
சுவர்களை உடைத்து
தரைகளை பிளந்து வெளியே வரும்
அப்படியே தூக்கி கோதலை கொடுத்து
இரவின் மேல் உறங்க வைக்கும்
அப்படி நிகழும்போது ஒருமுறை பார்த்தேன்
மருதாணி கோடுகள் அழிவுறுவதை போல
அதன் மேல் சிவப்பு சிவப்பு புள்ளிகள்
அது நினைவுபடுத்தியது எனது சிறு பருவத்தை
அதில் காய்ந்த சுவற்றில்
என் தந்தை வரைய வரைய
நான் அழித்த சித்திரமொன்று உள்ளது.
பிரகாசமான எலி
யாருமற்ற என்கிற சொல்
யாராவது இருந்திருந்தால் நலம் என்பதாகவேதான் உள்ளூர ஒலிக்கிறது
முறிந்து தொங்குகிற இந்த மரசட்டத்தில்
யாருமற்ற என்கிற சொல்லை விரும்பாத எலி ஏறிச்செல்கிறது
எனது பிரகாச வீட்டை அது தனது
கூர்வாலால் அசைக்கிறது
சில சொற்ப சப்தங்களை எழுப்புகிறது
அதை நான் கவனிக்காவிட்டால் மாபெரும் சப்தங்களாக வீசுகிறது
என் மேல் அது எறிகிற சிறு சப்தங்களை
சின்னஞ்சிறு கல் குவியலாக
வீட்டில் சேகரித்து வைத்திருக்கிறேன்
ஆனால் அவ்வளவு முயன்றேன்
அதன் மாபெரும் சப்தங்கள் பெரிய பெரிய பாறைகளாக அங்கங்கே நிற்கின்றன
நகர்த்த கூட முடியவில்லை.
***
-ச. துரை