‘யாழ்பாணத்தான்’ என்ற சொல்லாடல் ஒரு கேலிக்குரியதாப் பயன்படுத்தப்பட்டாலும், அதுவொரு குறித்த மனநிலையை பொதுப்படுத்திக்காட்டும் சொல்லாடல். இலக்கிய விவாதங்கள், அரசியல் உரையாடல்களில் இதனை அடிக்கடி குறிப்பிடுவதைப் பார்க்கலாம். சிற்றிதழ் பாசையில் ‘யாழ்ப்பாண மனநிலை’ என்று எழுதப்படுவதைக் காணலாம். எஸ்.பொ எழுதிய சடங்கு நாவல் இந்த மனநிலையைப் பற்றிப் பேசும் நாவல். இந்த நாவல் வெளியாகி அரைநூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று படிக்கும்போதும் சடங்கு எஸ்.பொன்னுத்துரையின் முத்திரைப் பதிப்பாகவே உறுதியாகத் தோன்றுகிறது. நூல் வடிவில் இன்று வாசிக்கக் கிடைத்தாலும், ஆரம்பத்தில் தொடர்கதையாகவே சடங்கு வெளியாகியது. 1966-ஆம் ஆண்டு ‘சுதந்திரன்’ வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது. தொடர்கதைகள் நாவலுக்குரிய அடர்த்தியைப் பெறுவது வடிவம் சார்ந்து சவாலானது. வார இதழ்களில் வெளியாகும் தொடர்கதைகள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் திருப்பங்களையும் சுவாரஸ்யத்தையும் தக்கவைக்க எழுதப்படுபவை. கூட்டாகச் சேர்ந்து வாசிக்கும்போது பூடகமாகக் குறிப்பால் உணர்த்தப்படுபவை அவற்றில் இல்லாமல் நேரடியாகச் சொல்லப்படும் சம்பவ அடுக்குகளுடன் சுருங்கிப் போகவே அதிக வாய்ப்புகள். இவற்றிலிருந்து தப்பித்து சடங்கு இன்று வாசிக்கும்போதும் தொடர்கதை என்ற எண்ணம் ஏற்படாதவாறு தோன்றுவதற்கு காரணம், எஸ்.பொ தொடர்கதை என்ற வடிவத்துக்குள் தன் ஆழ்மன படைப்பாக்கச் செயல்பாடுகளைக் கொண்டு செல்லாமல் தன் இயல்பிலே எழுதிச் சென்றமை என்றே தோன்றுகிறது. இந்தக் கெட்டிக்காராத்தனம் தான் அவரை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தங்களையே வரிந்துகொண்டவர்களிடம் இருந்து விலத்தி தன் சுயத்துடன் இருக்கவும் இலக்கியத்தரமாகச் சமரசம் இன்றி எழுதவும் உதவியதாக இருக்கலாம்.
நவீனத்துவ நாவல்களின் பொது இயல்பில் முக்கியமான ஒன்று சமூகம் மீதான விமர்சனம். மரபான இலக்கியம் தந்தைக்குரிய கண்டிப்புடன் மரபுகளை வலியுறுத்த, நவீனத்துவ இலக்கியங்கள் மகன் போல மரபுகளை மீறும், விமர்சித்து கேள்வி கேட்கும் துடுக்குத்தன இயல்பைக் கொண்டிருக்கும். சடங்கு நாவல் சமூகம் மீதான விமர்சனத்தை மிக மிக நுணுக்கமாக முன்வைக்கும் நாவல். சமூக மேலடுக்கில் இருக்கும் யாழ்ப்பாண வேளாள மனநிலையை உரித்துக்காட்டிக் கிண்டலடிக்கிறது. இந்தக் கிண்டல் நேரடியானதல்ல – மறைமுகமானது. நமது உதட்டில் புன்னகையை உயிர்விக்கச் செய்தவாறு வாசித்து முடிக்கும் வரை உடன் வருகிறது.
கொழும்பில் அரசாங்க திணைக்களத்தில் கிளார்க்காக வேலைபார்க்கும் செந்தில்நாதனுக்கு ஐந்து பிள்ளைகள். யாழ்ப்பாணத்தில் அவரது குடும்பம் வசிக்கிறது. அவரோ கொழும்பில் வாடகை அறையில் நண்பர்களுடன் தங்கி வேலை பார்ப்பதும், விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வருவதுமாகக் காலம் தள்ளுகிறார். செந்தில்நாதன் வார விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளபோது – வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய ஐந்து நாள்களுள் நிகழும் சம்பவங்களே கதையாகச் சொல்லப்படுகிறது.
செந்தில்நாதன் யாழ்ப்பாணம் வருவதும் சுவாரஸ்யமான பின்புலம் கொண்டது. கடன் எடுக்க உதவிய சக இலாகா நண்பருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற மன உந்துதலில் சிறிய மதுவிருந்து கொடுக்கிறார். எந்த உதவியும் சும்மா பெறவில்லை என்று மனதைச் சமாதானப்படுத்தத்தான் அந்த மதுவிருந்து. இப்படியே அறைக்குச் செல்ல இயலாது என்று சினிமாவுக்குச் சென்று அறைதிரும்புகிறார். சினிமாவில் கண்ணுற்ற காட்சிகள் நினைவில் தோன்றி அவரது பாலியல் உணர்வைச் சீண்டுகிறது; மனைவியின் தேக ஸ்பரிசம் – பிரிவு எல்லாம் சேர்ந்து அவரை வாட்டுகிறது. திடீரென்று வீடுசெல்ல தீர்மானிக்கிறார். அவரது நிறைவேறாத பாலியல் தவிப்புடன், அவரைச் சுற்றிய வடமராட்சிப் பிரதேச வாழ்க்கைச்சூழலுடன் இந்நாவலின் களம் விரிகிறது.
செந்தில்நாதன் பாத்திரம் அசலான யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவரின் அச்சு வார்ப்பு. யாழ்ப்பாண சமூக அடுக்கில் உயர்ந்த ‘வேளாளரான’ செந்தில்நாதன், கொழும்பில் வேலைபார்த்தாலும் முடிந்தவரை ஒழுக்கமாக இருக்கிறார். தேவையற்ற பிரச்சினைகளுக்குள் செல்ல மாட்டார். யாழ்ப்பாணத்தில் மனைவி அன்னலட்சுமியுடன் சோடியாக கடற்கரை சென்று அமர்ந்து காற்றுவாங்கியபோது, யாரோ சிறிய கற்களைத் தூக்கிப்போட்டார்கள். எதற்கு வம்பு – கழிசடைகள் தான் இதைச்செய்வார்கள் என்று திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் அன்னலட்சுமியுடன் சோடியாக கடற்கரைக்குச் சென்றதில்லை. தன் மனைவி எந்த பிற ஆணுடனும் பேசுவதை ஒருபோதும் அனுமதியார். அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தபோது அன்னலட்சுமியுடன் குதி குதியென்று குதித்து, மன்னிப்புக் கேட்டு கண்ணீர் உதிர்க்கும்வரை பேசுவதைத் தவிர்த்தார். அவரைப் பொறுத்தவரை தான் வேறு பெண்களுடன் பேசலாம் – அவர்களும் தன்னிடம் பேசலாம் – பிறத்தி ஆண்களுடன் அன்னலட்சுமி மட்டும் பேசக்கூடாது, அந்த விதி அவளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தீர்க்கமாக நம்புபவர். ரெயில் பயணத்தில் மது அருந்தச் சென்ற கணவனைக் கொண்ட பெண்ணுடன் பேச்சுக்கொடுக்க பிரியமாக இருக்கிறது. கைக்குழந்தையுடன் தனித்திருக்கும் அப்பெண்ணுடன் தயக்கத்துடன் கதைத்துப் பார்க்கிறார். பெண் மட்டக்களப்பு, ஆண் யாழ்ப்பாணம் என்று தெரிந்தவுடன் ‘இவன் பேயன் கூல்பானைக்குள் போய் விழுந்துட்டான்’ என்று தனக்குள் நொந்துகொள்கிறார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களைத் தாழ்த்திப் பார்க்கும் மனநிலையை எஸ்.பொ மிகச்சாதாரமாக கிண்டலுன் எழுதியிருப்பார். எஸ்.பொ தனிப்பட்ட வாழ்கையில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை விரும்பித் திருமணம் செய்திருந்தார். மது விரும்பியும் கூட, அதிகமாகவே அருந்தவும் செய்வார். அதனை அவரே பகிரங்கமாக முன்வைக்கவும் தயங்குவதில்லை. இந்த நாவலில் மட்டக்களப்பு பெண்ணை திருமணம் செய்த கணவனாகச் சித்தரித்து இருப்பதும் தன்னையே.
செந்தில்நாதன் மூன்றுமாதகாலத்திற்கு பிறகு குடும்பத்தைச் சந்திக்க வருகிறார். மனைவியுடன் சல்லாபிக்க வேண்டும் என்ற உடலியல் வேட்கை அவரைப் போட்டு வாட்டித் தள்ளுகிறது. இதையெல்லாம் அவரால் நினைத்தவுடன் செய்ய இயலவில்லை. குறுக்கே அவருக்கு பல்வேறு தடைகள் இருந்தாலும், அவரை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவராக இருப்பவர் தனது மாமியாரான செல்லப்பாக்கிய ஆச்சி – அவர் நேரடியாக செந்தில்நாதனை கட்டுப்படுத்துபவர் அல்ல. ஆனால் முழு அதிகாரமும் அவரிடமே இருக்கிறது. செந்தில்நாதனின் தந்தையின் கவனயீனமாக அவரது குடும்பம் சிறுபிராயத்திலே நிர்க்கதியாகிவிடுகிறது. சொந்தபந்தங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறது. செல்லப்பாக்கியம், செந்தில்நாதனின் கொழும்பு உத்தியோகம் – அவரின் நடத்தைகளைக் கவனித்துக் கணித்து, தனது மகளுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக வரித்துக்கொள்கிறார். அவர் வீட்டுக்கு வந்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதிலிருந்து என்ன என்ன வேலைகளை எப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கும் வரை செல்லப்பாக்கிய ஆச்சியின் அதிகாரங்கள் நீள்கிறது. வாயிருந்தால் வங்காளம் வரை போய் வரலாம் என்று நம்புபவர் அவர்.
செல்லப்பாக்கிய ஆச்சி தன் முன்னே செந்தில்நாதன் நின்றபோதும் எதையும் நேரடியாக, செந்தில்நாதனுக்குச் சொல்ல மாட்டார். மகளுக்குச் சொல்வது போல அவரிடம் சொல்வார். செந்தில்நாதனும் மறுபேச்சு இல்லாமல் அவற்றைச் செய்வார். அவருக்கு அன்றைக்கு என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும், என்ன நேரத்துக்குப் படுக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்ப எப்படி நீராடி முழுக வேண்டும் என்பதுவரை அன்றாடத்தில் செய்ய வேண்டிய சின்னச் சின்ன காரியங்கள் எல்லாமே செல்லப்பாக்கியத்தின் தீர்மானங்கள் ஊடாகவே நடக்கின்றன. தன் மகளும் அவரும் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்கள் அறியாத அளவுக்கு அவரது மறைமுக முடிவாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் பேரப்பிள்ளைகளுக்கு யாருடன் திருமணம் பேசவேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்து, அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தும் மதிநுட்பம் வாய்த்தவராக இருக்கிறார். செந்தில்நாதனுக்கு அவை பெரிதாக விளங்குவதில்லை. அவர் தன்னளவில் சுதந்திரமானவராக உணர்கிறார். ஆனால், உண்மை அப்படியல்ல; செல்லப்பாக்கியத்தின் பொம்மலாட்ட பொம்மையாகவே செந்தில்நாதன் இருக்கிறார்.
தன்னுடைய மகன் நவரத்தினம் நெல்லியடியைச் சேர்ந்த பெண்ணை விரும்பி கூட்டிக்கொண்டு வந்து தன்னுடன் திருமணம் முடித்து வைத்திருக்கிறார். செல்லப்பாக்கியத்துக்கு இதில் உடன்பாடில்லை; மருமகள் மீது ஒவ்வாமையே இருக்கிறது. மருந்து போட்டு தன் மகனைப் பிடித்ததாக நம்புகிறார். அவர்களிடம் சிக்குண்டிருக்கும் காணியை பிரித்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் செல்லப்பாக்கியம் இருக்கிறார். பிரதான வீதியை ஒட்டியுள்ள பங்கை எடுக்கக் கணக்குப் போட்டு – பேச்சுவார்த்தைக்கு மருமகன் செந்தில்நாதனை அனுப்ப, அவரோ செல்லப்பாக்கியத்துக்கு உவப்பில்லாத தீர்வுடன் வருகிறார். அங்கே வெடிக்கும் செல்லப்பாக்கியம், மருமகனுக்குக் கொடுக்கும் மரியாதையைக்கூடக் கொடுக்காமல் விடுகிறார். பொருளாதாரத்தைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் உறவுகளை மீறிய நலன்களும் – கிழவியின் ஆற்றலும் வெளிப்படும் அழுத்தமான இடங்களாக இருக்கின்றன.
சாதிய சமூக அடுக்குகளை நேரடியாகவே அணுகும் பல்வேறு தருணங்கள் நாவலில் இருக்கின்றன. வேளாள மனநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை அணுகும் போக்கு நாவலில் மிக யதார்த்தமாக உள்வாங்கப்பட்டிருக்கும். செந்தில்நாதன் கிணற்றடியில் குளிக்க வரும்போது துலா சீரில்லாமல் இருக்கிறது. அதனைத் தானே ஏறி முதுகை சாய்த்துத் தள்ளிச் சரிப்படுத்துகிறார். ஆண்கள் இல்லாத வீடு, இவற்றை எல்லாம் சரிசெய்ய யார் இருக்கிறார்கள் என்று தனக்குள் நொந்து கொள்வதோடு ‘ஆரேன் நளவன், பள்ளன் வந்தால்தான் இதனைச் செய்யலாம். அப்படிச் செய்தால் பந்தியிலை வைத்து சோறு தாறியளோ என்று கேட்கும் அளவுக்கு வந்துவிடார்கள்’ என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். நல்லவேளை தானே துலாவைச் சரிப்படுத்திவிட்டேன் – என்று தனக்குள் பரமதிருப்பதியும் அடைகிறார். கொழும்பில் படித்து உத்தியோகம் பார்க்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே செந்தில்நாதனுக்குச் சரிக்குச் சரியாக அமர்ந்து உண்பதும், வேலை பார்ப்பதும் கடும் எரிச்சலைக் கொடுத்தாலும் – அது கொழும்பு, இது யாழ்ப்பாணம் இங்கே இவர்கள் அப்படிச் செய்யக்கூடாது என்று தீர்க்கமாக நம்புகிறார், விரும்புகிறார். வீட்டில் வேலி அடைப்பதற்காக வரும் மாணிக்கத்துக்குச் சிரட்டையில் கோப்பி கொடுக்கிறார்கள். அதனை மாணிக்கம் வேறொரு காரணம் சொல்லி மறுத்தாலும் – உண்மைக் காரணம் தெரிந்து உள்ளே சினப்படுகிறார். கூலியைக் குறைத்து கொடுத்து, பின்னர் கூட்டிக் கொடுப்பதாகச் செல்லப்பாக்கி ஆச்சி செய்யும் தந்திரங்கள் அவரை திருப்திப் படுத்துகிறது. இதற்கான நியாயங்களை உருவாக்கிக்கொள்ளும் அவரது பலவீனமான மன அமைப்பை எஸ்.பொ அச்சொட்டாக எழுதியிருப்பார். செந்தில்நாதன் பாத்திரம் கருப்பு, வெள்ளை பாத்திரமாக வடிவமைக்காமல் அவரது பலவீனங்கள் ஒருபக்கமாகவும், அவரது நல்ல சுபாவங்கள் இன்னொருபக்கமாகவும் சேர்ந்த பாத்திரமாக வடிவமைத்து இருப்பார். யுனிவர்சிட்டியில் படிக்கும் பொடியங்களைக் காணும்போது அவருக்கு கடும் எதிர் விமர்சனங்கள் அடிமனதில் கிளர்ந்து வருகிறது. ‘இவர்களுக்குச் செலவழிக்கும் அரசாங்க பணம் எல்லாம் கரி’ என்ற அபிப்பிராயம் அவருக்கு உண்டு. காரணம் அவரும் யுனிவர்சிட்டியில் படிக்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போனமை என்ற காரணமும் இருக்கிறது. நம்முடைய ஆக்கலுக்கு யுனிவர்சிட்டி நடாத்தத் தெரியாது – வெள்ளைக்காரர்கள் போனபின்னர் எல்லாம் போச்சு என்று தன்னைத்தானே சமாளித்து வைத்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட பலவீனமான நையாண்டிகள் நாவலின் அடுக்குகள் இடையே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் சாதிய பிரச்சினைகளை எழுதுவதற்கும் – எஸ்.பொ அவற்றைக் கையாள்வதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் இதுதான்.
செல்லப்பாக்கிய ஆச்சி பாத்திரம் – எஸ்.பொ உருவாக்கிய ஆழமான பாத்திரம். இதற்கு நிகராகச் சொல்லக்கூடிய பெண் பாத்திரம் ஈழ இலக்கியத்தில் வேறு இல்லை என்றே சொல்லலாம். இளம் வயதிலே கணவனை இழந்து, தன் இரண்டு பிள்ளைகளையும் ஒற்றைத்தாயாக வளர்த்த விதமும் – அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் விரித்துக் கொடுக்கும் ஆளுமையும் – யாழ்ப்பாண சமூகத்தில் பெண்ணின் மறைமுக அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதையும் சடங்கு நாவல் துல்லியமாக விவரிக்கிறது.
இனமுரண்பாடுகள் வலிமையடைந்து ஆயுத மோதல்கள் நிகழாத யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்று அறிய இந்த நாவல் மிக முக்கியமான ஆக்கமாக இருக்கும். சடங்கு வெளியான காலத்தில் ஆபாச நாவல் என்று பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. அன்னலட்சுமி பாத்திரம் உடல் வேட்கையால் – கணவனை நினைத்தவாறு சுய இன்பம் காண்கிறார் என்ற சித்தரிப்பே அதற்குரிய முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. உண்மையில் அந்த சித்தரிப்பு நாவலில் குறைந்த விவரிப்பில் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும். அதிர்ச்சியூட்டும், அல்லது சங்கடப்படுத்தும் வர்ணனைகள் கூட இருக்காது. இந்த நாவல் ஆபாச நாவல் என்று சொல்லப்பட்டது வேடிக்கையாகத் தோன்றுகிறது. வேளாள மனநிலை உரித்துக்காட்டிய படைப்பாக இருப்பதால் ஏற்பட்ட சீண்டல் கூட அப்படியான உப்புச்சப்பில்லாத விமர்சனத்தை உருவாக்கியதாகவே புரிந்துகொள்ள இயல்கிறது.
“எஸ்.பொ. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. ஆனால், அந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த எழுத்தாளர் சிலரிடம் காணப்படும் ‘தாழ்வுச் சிக்கல்’ சற்றும் இல்லாத – தனது ஆற்றலையும் முன்னோடுந் தன்மையையும் நன்குணர்ந்த – ‘திமிர்ந்த ஞானச் செருக்கர்’ என்பதும் பாராட்டுடன் குறிக்கத்தக்கது” என்று ஒருமுறை எழுதினார் அ.யேசுராசா.
ஆம், அவர் சடங்கு நாவலில், தன் இயல்புகளை, தன் கதைகளை நிராகரிக்கும் வேள்ளாளர்களின் மேலாதிக்க பார்வையை உள்ளே கொண்டுவந்து தன் சுயத்துடன் கடுமையாகக் கிண்டலடித்து இருப்பார். அது கிண்டல் என்று புரிந்துகொள்ள நல்ல வாசிப்புப் பயிற்சி அவசியம்.
–அனோஜன் பாலகிருஷ்ணன்