1.அறிமுகம்:
புறொசொபிஸ் ஜுலிபுளோறா (Prosopis juliflora) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட Prosopis, Mesquite, Algarroba bean என ஆங்கிலத்திலும், களப்பு அந்தாரா என சிங்களத்திலும் அழைக்கப்படும், பாபேசியே குடும்பத்தையும், மிமொசொய்டியே உப குடும்பத்தையும் சேர்ந்த மத்திய, தென் அமெரிக்காவை பூர்வீககமாகக் கொண்ட ஐரோப்பியர்களால் 200 வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரயோசனமான, வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் ஆபிரிக்கா (1822 களிலும்), ஆசியா, அவுஸ்தரேலியா (1900 களிலும்) உட்பட உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம்தான் சீமைக்கருவேல மரமாகும். ஆனால் உலகில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தாவரம் காணப்படுகிறது.
சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக இந்தியாவில் அழைக்கப்படும் விவசாய நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும், மூர்க்கத்தனமான அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமான இதன் சிங்களப் பெயரான களப்பு அந்தாரா என்பதற்கு வறள் காலநிலையில், களப்பு, நீரேரிகளின் கரையோரங்களில், உவரான மண்பகுதியில் வளரும் மரங்கள் என்பதே அர்த்தமாகும். இதுவே சிறந்த காரணமப் பெயருமாகும்.
2. அறிமுகப்படுத்தல்:
இலங்கையிலுள்ள உள்நாட்டுத் தரவுகளின்படி, இந்தியாவில் 1877இல் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, இலங்கையில் 1880களில் இந்தத் தாவரமானது பேராதனை தாவரவியல் பூங்காவில் காலனித்துவ குடியேற்றவாதிகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இருந்தும் பிற்காலத்தில் 1950 களில், தென்பகுதியில் அம்பாந்தோட்டைப் பகுதியில் அரசினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அரசினால் சீமைக்கருவேல மரங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு இதுவரை சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் அறிமுகப்படுத்தியதற்கு கூறப்பட்ட காரணமான உவரான, வளமற்ற மண்ணைத் திருத்துதலுக்கு உவரைத் தாங்கக்கூடிய, உற்பத்தித் திறன் கூடிய அதே மரங்களை அறிமுகப்படுத்தல் என்ற காரணத்திற்காக ஒருவேளை இலங்கையிலும் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்பதே அனுமானமாகும். அத்துடன் சீமைக்கருவேலங்கள் கடலின் மூலம் அடித்துகொண்டு வரப்பட்டிருக்கலாம் அல்லது தவறுதலாக கால்நடைப் பொருட்களுடனும் கலந்து இந்தத் தீவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எந்த வகையிலோ இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சீமைக்கருவேலம் என்ற தாவரம், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரமாகி நாட்டின் பல பகுதிகளிலும் வியாபித்துக் காணப்படுகின்றது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வறட்சி ஏற்பட்டு, மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது ஆங்கிலேயர்களின் வீடுகளில் விறகு எரிப்பதற்காக 1876 களில்; ஆண்டில் சீமைக் கருவேலம் கடப்பாவில் உள்ள கமலாபுரம் தாலுக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 1950களில் காமராசர் ஆட்சிக்காலத்தில், அப்போதைய விவசாயத்துறை பணிப்பாளரால் தரிசு நிலங்களை சீர்செய்வதற்காக பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் ஆக்கிரமிப்பு தன்மையை கண்டு தமிழக கிராமப்புற மக்கள் இதனை பேய் மரம் என அழைத்தனர்.
3. தற்போதைய வியாபகம்:
ஆரம்பத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புந்தல தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தாவரங்கள் ஆக்கிரமிப்பு தாவரங்களாகி பின்னர் புத்தளம் மாவட்டத்திலும், அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் பல பகுதிகளில் பரவலாக வியாபித்து, பூர்வீக தாவரங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றன.
4. மரத்தை அடையாளம் காண்பதற்கான இயல்புகள்:
சீமைக்கருவேலம் என்ற மரத்தை அடையாளம் காண்பதில் சிலர் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். இந்த மரமானது 3 தொடக்கம் 12 மீற்றர் உயரமாகவும், சில சமயம் புதர்கள் போன்று பல கிளைகள் கொண்டும், வைரமான மரத்தையும், உருளை வடிவான, பச்சையான, முட்கள் கொண்ட கிளைகளையும், இலைகளில் மயிர்களையும், முட்களையும் கொண்டும் காணப்படும்.
இது புளியமரத்தின் இலைகளைப் போல் சிறு இலைகளைக் கெதண்டு கருவேல மரத்தை போன்ற தோற்றத்தில் காணப்படும். இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், முதிரும்போது மஞ்சளாக மாறிவிடும் பச்சை நிறமான காய்களையும் கொண்டிருக்கும். இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று (53 மீட்டர்) 175 அடி நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியதென அறிக்கையிடப்பட்டுள்ளது.
5. அமைப்பொத்த இனங்கள்:
சில வேளை இலங்கையின் பூர்வீக கருவேலம் தவறுதலாக சீமைக் கருவேலம் என சிலரால் தவறுதலாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சீமைக் கருவேலத்தில் 1 – 3 சிறையிலைகள் காணப்படும். இந்த எண்ணிக்கை கருவேல மரத்தில் அதிகமாகும்.
6. இனப்பெருக்கமும், பரம்பலும்:
சீமைக்கரவேலமானது வித்தின் மூலம் பரப்பப்படும் தாவரமாகும். இந்த தாவரத்தின் காய்களை உண்ணும் ஆடு, மாடு, கால்நடைகள், யானைகள் மற்றும் ஏனைய காட்டு தாவரவுண்ணிகளின் மலத்தில் மூலம் வெற்றிகரமாக பரப்பப்படுகின்றன. அத்துடன் நீரோடை, மழைநீர், வெள்ளப்பெருக்கு மூலமும் இதன் விதைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரப்பப்படுகின்றன. வெட்டுத்துண்டங்களின் மூலமும் இலிங்கமில்முறை இனப்பெருக்கம் செய்கின்றது என இன்னொரு அறிக்கையும் கூறுகின்றது.
7. பூர்வீக இனங்களுக்கும், வாழிடங்களுக்குமான பாதிப்புக்கள்:
சீமைக்கருவேல மரமானது, மற்றை தாவரங்களுடன், அதன் அதிக வறட்சியையும், உவரையும் தாங்கும் திறன் காரணமாக வளங்களுக்கான போட்டியில் மற்றைய தாவரங்களை தோற்கடிக்கின்றன. அதன் பற்றைச் செடியானதும், முட்களுள்ள தன்மை காரணமாக வேகமாக பாதைகளை மறைத்து, முழு பிரதேசங்களையும் மற்றைய விலங்குகளும், மனிதர்களும் பாதைகளை, வழிகளையும் உபயோகிக்க முடியாதவாறு அடைத்துவிடுகின்றன.
8. சீமைக் கருவேலத்தின் ஆக்கிரமிப்பு சிறப்பியல்புகள்:
இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. அதிக வெப்பத்தினையும், அதிக வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. இத்தாவரம் மழை இல்லாமல் வறட்சியாக இருக்கும் காலங்களில் காற்றிலுள்ள ஈரப்பத்தை எடுத்துக் கொள்ளும், அத்துடன் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கின்றது. நோய், பீடைகளினால் பாதிக்கப்படும் தன்மை மிகக் குறைந்ததும்;, போதிய போசணைப் பொருட்கள் இன்றியும் எல்லாக் காலங்களிலும் செழித்து வளருகின்றன. மற்றைய தாவரங்களின் வளர்ச்சியை தடுத்து எந்த இடத்திலும் குடியேறும் தன்மையும் கொணடது. அடர்ந்து வளர்ந்து பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்யும். நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த மரங்களின் பாகங்களை உண்ணும் விலங்குகள் பல உடல் உபாதைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் உள்ளாகின்றன.
9. சீமைக் கருவேலத்தினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள்:
9.1 விவசாய நிலங்கள்:
தமிழகத்தில் உள்ள 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
9.2 பறவைகள் சரணாயலம்:
இந்தியா, தமிழ்நாட்டின் வெட்டங்கு பறவைகள் சரணாலயம் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக பறவைகள் குஞ்சுபொரிப்பதற்கு இடர்பட்டதாகவும், அந்த மரங்களில் கூடுகட்டுவதற்கான வசதிகள் குறைவென்றும், அதன் காரணமாக பறவைகள் வேறு இடங்களை நோக்கி இடம்பெயர்ந்தன என்றும். 2014 யின் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுந்திரசேகரின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது. அதுபோல வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயங்களில் இருந்த வம்மி அல்லது கடம்ப மரங்களை சீமைக் கருவே மரங்கள் பாதித்ததனால் பறவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இலங்கையின் புந்தல பறவைகள் சரணாலயத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இவை வேகமாக பரவியதன் காரணமாக பறவைகள் உணவை பெற்றுக்கொள்ளும் இடங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பறவைகளின் வரத்தையும் குறைத்திருந்தது.
9.3 நிலத்தடி நீர் பாதிப்பு:
இது பற்றிப் பல இடங்களில், பலர் குறிப்பிட்டுள்ளனர். சீமைக் கருவேலம் மரத்தின் நீளமான வேர்கள், நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளன. எத்தியோப்பியாவில் (கென்யாவிலும் இது போன்ற ஆய்வுகள் இடம்பெற்றிருக்கின்றன) நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் அவஸ்த் எனப்படும் இடத்திலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் வறண்ட நிலப்பரப்பில் உள்ள சுமார் 3.1 முதல் 3.3 பில்லியன் கன மீட்டர் தண்ணீரைச் சீமைக் கருவேலம் மரங்களில் உறிஞ்சிக்கொள்கின்றனவென்றும், ஒரு மரம் நாள் ஒன்றுக்கு 1 லிட்டரிலிருந்து 36 லிட்டர் வரையிலான தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.. இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன.; பூர்வீக தாவரங்களை அழிவுக்குள்ளாக்குகின்றன. இத்தாவரத்தின் ஆணி வேர் மட்டுமில்லாமல் பக்க வேர்களும் வலிமையானவை. எனவே மழைநீர் நிலத்தினை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடைசெய்கின்றன.
9.4 கால்நடை உணவு:
இந்தியாவில் 54 சதவீதம் புற்கள் காலநிலையாலும், சீமைக்கருவேல மரங்கள் காரணமாகவும் அழிதலை எதிர்கொண்டுள்ளதால், இதனை உண்டுவாழும் விலங்குகள் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்சுடியதாக உள்ளது என்று ஆய்வொன்று தெரிவிக்கின்றது. அத்துடன் மேய்ச்சல் தரைகளில் புற்கள் வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது. அத்துடன் அவர்களின் கால்நடைகளுக்கான உணவைக் குறைத்ததன் மூலமும், மேயச்சல் நிலங்களைக் குறைத்ததன் மூலமும் விலங்கு வேளாண்மையாளர்களின் வாழ்வாதாரங்களை பாதிப்பிற்குள்ளாக்கியது.
9.5 கண்டல் தாவர சூழற்றொகுதி:
சீமைக்கருவேல மரங்கள் உவர் சூழலில் சிறப்பாக வளரும் ஆற்றலைக்கொண்டுள்ளதால். அவை கண்டல் தாவரங்களின் வளர்ச்சியை தடைசெய்வதால், கடலரிப்பு அதிகளவில் வட தமிழகத்தில் ஏற்படுகின்றது எனவும், கடலில் உள்ள பல உயிரினங்கள் அழிகின்றன என்றும், மீன், நண்டு போன்றவற்றின் இனம்பெருக்கம் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதரங்களுக்கு பாதிப்புகளை உருவாக்குகின்றதென்றும், பல பறவைகள் சரணாலயங்களில் பறவைகளின் வரவைத் தடுக்கின்றன என்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் மனிதர்களுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெறும் முரண்பாடுகளுக்கு இந்த மரங்களே காரணம் என இன்னுமொரு ஆய்வு அறிக்கையிடுகின்றது.
9.6 காயம், நோய்கள்:
இந்த மரங்களின் பாகங்களை உணவாகக் கொள்வதாலும், தடிப்பான, கூரான முட்கள் விலங்குகளின் குத்தி உடம்பில் காயங்களை ஏற்படுத்துவதனாலும் விலங்குகள் இறக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கல்லூரி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், “கருவேலம் மரத்தின் முள்ளால் ஏற்படும் காயம் என்பது அவ்வளவு எளிதில் குணமாக்க முடியாது எனவும் கூறப்பட்டிருக்கின்றது. விவசாயிகளினதும், வளங்களைப் பாவிப்பவர்களினதும், போக்குவரத்துச் செய்பவர்களினதும் கைகள், பாதங்கள், உடம்புகள், ஆடைகள், கால்நடைகளின் குழம்பு, பாதம், உடம்பு, மற்றும் வாகனங்களின் டயர்கள் போன்றவற்றை இந்தத் தாரவத்தின் முட்கள் குத்திப் பாதித்ததன் மூலமும், பாதைகளை அடைத்தததன் மூலமும் மேற்கூறியவர்களின் வாழ்வாதாரங்களை பாதித்து, பாரிய நட்டங்களை ஏற்படுத்தி பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் சீமைக்கருவேலம் மரங்களை அவற்றில் காணப்படுகின்ற் முட்கள் காரணமாக பாவனைக்குட்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றார்கள். அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் விறகுக்காக அதிகமாக வேறு மரங்களிலேயே தங்கியிருக்கின்றார்கள். அதன் காரணமாக சீமைக்கருவேலத்தை விறகுக்காக பாவிக்கத்; தயங்குகின்றார்கள். இந்த மரத்திலிருந்து பெறப்பட்ட விறகை எரிக்கும் போது, தோலில் அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது” புதுக்கோட்டை, தேசிய கல்லூரி ஆய்வொன்று கூறுகின்றது. இன்னுமொரு ஆய்வு சீமைக் கருவேலம் மரத்தின் விதைகள் அதில் இருக்கும் வெல்லத்தின் அளவு காரணமாக சமிபாட்டு பிரச்சினைகள் விலங்குகளில் உண்டாகின்றன என்றும் தெரிவிக்கின்றது.
9.7 நேரடியாக வளங்களுக்கு போட்டியிடுதலும், சுதேசிய இனங்களை அழித்தலும்:
மிகவும் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பாளர்களான இவைகள், மற்றைய சுதேசிய தாவரங்களின் வாழிடங்களைக் கைப்பற்றி, பூர்வீக தாவரங்களை அழித்து, அங்கு அவை குடியேறிக்கொள்கின்றன. அத்துடன் மேய்ச்சல் தரை, வனசீவராசிகளுக்கான வாழிடங்கள் போன்றவற்றின் அளவைக் குறைப்பதாலும் அதே இனங்களுக்கு போட்டியை ஏற்படுத்துகின்றது. சீமைக்கருவேல மரத்தின் இலைகள், வேர்கள், காய்கள், பூக்கள் கொண்டுள்ள எல்-ரிப்ரோபன், சிறின்ஜின், லறிகிறிசினோல் போன்ற இரசாயனப் பொருட்களினால் ஆத்தி, பொன்னாந்தகரை, புல்லாந்தி, வீரை, பாலை, உகாய் போன்ற பூர்வீக மரங்களின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டதென்றும், அதிலும் பாலை மரங்கள் பாரியளவில் அதன் இயற்கை வாழிடங்களிலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட என இலங்கையின், அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள புந்தலை தேசிய பூங்காவில் செய்யப்பட்ட ஆய்வொன்று கூறுகின்றது.
10. சீமைக் கருவேல மரங்களை கட்டுப்படுத்தலும், அழித்தலும்:
சீமைக் கருவேல மரங்களை குறுகிய காலத் திட்டங்களால் முற்றாக அழித்துவிட முடியாது. இதற்கு ஒரு ஆண்டு, ஐந்து ஆண்டு திட்டங்களினால் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு பல ஆண்டுகள் திட்டம் வேண்டும். சிறப்பான முகாமைத்துவத்தைச் செயற்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டு முகாமைத்துவமானது, கட்டுப்பாட்டு முறைகள், பரவலைத் தடுத்தல் (நாட்டுக்கு வெளியே, உள்ளே, பரவிய பின்), ஆரம்பத்தில் கண்டுபிடித்தல், அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றுதல், அதனை அழித்தல் (பௌதிக, இயந்திர, உயிரியல், இரசாயன, சமூக, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்), அந்த மரங்களை அழித்த பின் பழைய சூழலை உருவாக்குவதற்கு தேவையான சூழற்றொகுதிசார் அணுகுமுறைகள்), கடந்தகால சூழற்றொகுதிகளின் அமைப்பு (Reference System), மீளச் சூழலை உருவாக்கலில் வெவ்வேறு அணுகுமுறைகள் (பாரம்பரிய விதைகளை நடுதல், முழைக்க வைத்த விதைகளை நடுதல், முழைக்க வைத்த கன்றுகளை நடுதல், முழு மரங்களை மீள பிடுங்கி நடுதல், விதைப்பந்துகள், மியவாக்கி முறை, ஓறேஞ்ச் கழிவு கொட்டல் மாதிரியான முறை), சீமைக்கருவேல மரங்களை வினைத்திறனாக அகற்றுவதற்குரிய திட்டத்தை வகுப்பதற்கு நோக்கம், குறிக்கோள், விரிவான திட்டம், அகற்றப்பட வேண்டிய தாவர இனங்கள், அகற்றப்படவேண்டிய இடம், அகற்றுவதற்கு முன், பின் தொகுக்கப்பட வேண்டிய தகவல்கள், வரவு-செலவு நன்மை பகுப்பாய்வு, அகற்றியதன் பின் செய்யவேண்டிய கண்காணிப்பு, பரிபாலனம், அகற்றியதற்கு பின் அந்த இடத்தில் செய்ய வேண்டிய மீளமைப்பு நடவடிக்கைகள் போன்ற படிகளைக் கொண்டுள்ளது.
10.1 பொறிமுறை கட்டுப்பாடு:
இயந்திரங்ளைக் கொண்டும், வேறு வகையிலோ அடியொடு பிடுங்கி, அந்த இடத்திலிருந்து கவனமாக அகற்றப்பட்டு அல்லது இன்னொரு இடத்திற்கு கொண்டுசென்று அழிக்கப்பட வேண்டும். அத்துடன் அகற்றப்பட்ட இடங்களில் விரைவாக பூர்வீக, மற்றும் கடந்த 20 தொடக்கம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பிரதேசங்களிலிருந்து அழிந்துபோன மரங்கள் நடுகை செய்யப்படவேண்டும்.
10.2 இரசாயனக் கட்டுப்பாடு:
2,4 D போன்ற தாவர ஓமோன்களை அதன் உணவுகொண்டு செல்லும் கலனான உரியத்தில் ஊசி மூலம் ஏற்றுவதன் மூலம் உலகில் பலநாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது.
10.3 உயிரியல் கட்டுப்பாடு:
இதன் இயற்கை எதிரிகளான புறுட்சிட் வண்டுகள் சீமைக்கருவேலம் விதைகளை தாக்குவதாக அறியக் கிடக்கின்றது. இதனைவிடவும் இத் தாவரத்திற்கு பல எதிரிகள் இருக்கின்றன. அவைகளையும் பயன்படுத்தலாம்.
10.4 கலாச்சார முறை:
பத்து நாட்களிற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இந்த மரங்களால் தப்பிப் பிழைப்பது கடினம் என்ற ஒரு கூற்றும் இருக்கின்றது. பத்து நாளைக்கு நீரைத் தேக்கி வைத்துப் பார்த்தல் வேண்டும். இது பெரிய நிலப்பரப்புக்களுக்கு சாத்தியமாகாது.
10.5 ஒருங்கிணைந்த கட்டுப்பாடு:
ஒருங்கிணைந்த கட்டுப்பாடே சிறந்த முறையாகும். களைநாசினிகள் விசிறப்பட்டதற்குப் பின்னர் மரங்கள் இறந்துவிடும். அதன் பின்னர் தீயின் மூலம் அழிக்கலாம்.
10.6 பல்வேறு வழிகளில் உபயோகித்து தாவரங்களின் அளவைக் குறைத்தல்:
பாலைவனமாக்கலை சீமைக்கருவேலம் சிறப்பாக எதிர்த்து நிற்கின்றதென்றும், விறகு, கால்நடை உணவு போன்றவற்றிற்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றது. இதன் விறகுகள் அதிக ஆற்றல் கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது. இவைகள் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரம் எரிபொருளாகவும், இதிலிருந்து தயார் செய்யப்படும் கரியானது பலதொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சீமைக் கருவேலம் விதைகளை நீக்கிய காய்களானது இனிப்புகள், ரொட்டிகள், பிஸ்கெட்டுகள் உருவாக்குவதற்கு மூலப் பொருளாக கோதுமைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் பழமானது 12-14 சதவீத புரதச்சத்தினைக் கொண்டுள்ளதால் ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவர விதைகள் சர்க்கரை நோயாளிகளுக்குகான மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. பொலிவியா, ஜமைக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தாவரத்தின் பூக்களிலிருந்து தேனீக்கள் மூலம் தேன் எடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இது மிக முக்கியமான வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.
இத்தாவரத்தின் நார்ச்சத்தானது பேப்பர், கார்போர்டு அட்டைகள், பேப்பர் அட்டைகள் போன்றவை தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சீமைக் கருவேலம் மரத்தைக் கொண்டு, மரவேலைகள் அழகாகச் செய்யலாம்.
இத்தாவரத்தின் பிசினில் பாலிபீனாலிக் தொகுப்புகள், ஃப்ளவினால்கள் காணப்படுகின்றன. இவை தனிப்பட்ட பீனால் பார்மால்டிகைடு ரெசின் உருவாக்கத்தில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் காயிலிருந்து பெரு, சிலி, அர்ஜென்டினா நாடுகளில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளின் எடை அதிகரிக்க தயார் செய்யப்படும் சிரப்புகள், சருமப் புண்களுக்கான மருந்துகள் ஆகியவற்றில் இத்தாவரக் காய் பயன்படுத்தப்படுகிறது. உயிர் பீடைகொல்லிகளாகவும், சாயமாகவும், பயன்படுகின்றது.
இத்தாவரம் விவசாய நிலங்களுக்கு வேலியாகவும், தாழைக்கூழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடற்கரை மணல் குன்றுகளில் காற்றினால் மண்ணரிப்பு ஏற்படுவதை இத்தாவரம் தடைசெய்கிறது. இந்தியாவில் மணற்குன்றுகளில் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும் பட்டியலில் சீமைக் கருவேலம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான வளமில்லா உப்பு உவர்ப்பு நிலங்களில் இத்தாவரம் வளர்ந்து மைக்கோரைஸா பூஞ்சையை வேரில் கொண்டு வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகிறது. நைட்ரஜன், சல்பர், கரையும் உப்புகள், கனிமச் சத்துக்கள் ஆகிய சத்துக்களை இத்தாவரமானது மரத்தின் கீழிலிருந்து 4.5 மீட்டர் ஆழம் வரை நிலைநிறுத்துகிறது.
சிறிய விலங்குகளின் வாழிடமாக சீமைக் கருவேலம் மரங்கள் காணப்படுகின்றது. சீமைக் கருவேலம் மரத்தை மொத்தமாக அழித்துவிட்டால், அது சிறிய விலங்குகளுக்கு மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் சிலர் கருதுகின்றனர்.
மேற்கூறிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அந்த மரங்களைப் பாவிப்பதன் மூலம், இந்த மரங்களின் சீமைக் கருவேலம் மரத்தைக் கொண்டு, மரவேலைகள் அழகாகச் செய்யலாம்.
அளவைக் குறைக்கலாம். இந்த முறை கட்டுப்படுத்தல் முகாமைத்துவத்தில் மிகவும் முக்கியமானதுமாகும்.
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்:
இந்த இயக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீமைக்கருவேல மரத்தின் தீமைகள் பற்றிய கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களுடன் இணைந்தே இந்த மரங்களை அவர்களின் பிரதேசங்களில் அழித்துவருகின்றது. அத்துடன் அந்நிறுவனத்தில் உள்ள உத்தியோகத்தர்களும் இப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகொடுத்து சீமைக்கருவேல மரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாது, மாற்று விவசாயம் மற்றும் தொழில் திட்டம், பனை வளர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் போன்றவற்றை அமுல்படுத்தி வருகின்றார்கள்.
இந்த இயக்கமானது, மரங்களை இயந்திரங்கள் கொண்டு பிடுங்கி அழித்தலையே முன்னெடுக்கின்றது. வேறு இயக்கத்தவர்களாலும், மக்களாலும் கேரளாவில் இந்த மரங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்டு மீண்டு வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. அதைத்த தவிர மற்றைய முறைகள் (இரசாயன முறை உட்பட) மண்வளத்தை கெடுக்கக்கூடியதென நம்புகின்றனர். மேலும், பயன்படுத்தப்படாத இடங்களில் பூர்வீக மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேலமரங்கள் மீண்டும் தோன்றாமல் பாரத்துக்கொள்கின்றார்கள். இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே நிகழ்கிறது. ஆனால் இந்த மனநிலை முற்றிலும் தவறு. முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம் என்ற கருத்தையும் மக்கள் மனங்களில் விதைத்துச் செல்கின்றார்கள்.
இதுவரை இவ்வமைப்பினால் 400 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்படும் இடத்தில் மீண்டும் இந்த மரங்கள் ஆக்கிரமிக்காமல் இருக்க உடனடியாக குத்தகை முறையில் வேளாண்மை செய்வதும், நல்ல மரங்களை நட்டுக்கொடுப்பதையும் தலையாய பணியாக கொண்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் இவ்வியக்கத்தை முழுமையாக ஆதரித்து செயல்படுத்த உதவிவருகின்றனர்.
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும் உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், கோரிக்கை மனு அளித்தல், உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டு சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.
இந்த விருப்பமில்லாத விருந்தாளிகளை எவ்வாறு நடாத்தப்போகின்றோம்? அவைகளிடமிருந்துமு எவ்வளவு பிரயோசனங்களை எடுக்கப் போகின்றோம்? என்ற கேள்வியும் இருக்கின்றது.
சீமைக்கருவேலத்தின் பல்நோக்கு நன்மைகளையும், பிரயோசனங்களையும் மக்கள் அறிந்து அவைகளைப் பயன்படுத்தலாம் என் பலமான குரல் கேட்டாலும், அவற்றினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களும், தீமைகளும் அநதக் குரலை மழுங்கடிக்கச் செய்துவிடுகின்றன.
எனவே இலங்கையிலும், இந்தியாபோன்று சீமைக்கருவேலம் கட்டுப்படுத்தல் பணிகள் ஒரு தாக்கமான இயக்கமாக பல்பேவறு தரப்பினர்கள், மக்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டாலேயொழிய தீமைகளிலிருந்தும், பாதிப்புக்களிலிருந்தும் நம்மையும், நமது சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
***
– ஏ.எம்.றியாஸ் அகமட்,