உடைந்து சிதறிய இரவு
பால்நிலவொழுகும் பின்னிரவில்
மின் கம்பியிலுறங்கும் காகங்களின் நிழல்
மேல்மாடிச் சுவரின் மீது
துல்லியமாக விழுந்து கிடக்கின்றன
பசியில் அலைந்து திரிந்த பல்லியொன்று
ஊர்ந்து செல்லும் பெயரறியாப் பூச்சியை
பிடித்துண்ணப் பதுங்குகிறது
அத்தருணம் இரவை கிழித்துக்கொண்டு
கனைத்துச் செல்லும்
இரும்புக் குதிரைகளின் குழம்பொலி
கட்டிடக் காடுகளை அதிரச் செய்கிறது
அச் சிறு கணங்களினிடை
திடுக்கிட்டெழுந்த காகங்கள்
வெறிச்சோடிக் கிடந்த சாலையினை
முறைத்துப் பார்த்த பின்னர்
தன்னை சுதாகரித்துக்கொண்டு
மீளவும் துயிலத் துவங்கின
இடைக்கிடை இவ்வாறெழும் சப்தங்களினால்
காகங்களின் நிழல் அதிர்வுறுகையில்
பல்லி பயந்தொடுங்கி
பின் வாங்கியபடியே இருந்தன
துளித்துளியாக இரவு ஒழுகித் தீரும்வரை
இச் சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தன
பல்லி தனது பசியை ஆற்ற முடியாமலும்
காகங்கள் ஆழ்ந்துறங்க முடியாமலும்
உடைந்து சிதறின அன்றய இரவு
கண்ணாடி
பின்னிரவு தாண்டி
உறக்கமற்று ஔிர்கிறது
தலை நகர்
பரபரப்பாக இயங்கும் நகரை
இலகுவில்
யாராலும் பூட்டிவிட முடியாது
அதில்
பொதுக் கழிவறையிலிருக்கும்
நிலைக் கண்ணாடியால்
நினைவில் வைத்திருக்க முடியுமோ
ஒரு பொழுதில் அடக்கி ஓடி வரும்
ஆயிரம் முகங்களை
பிம்பங்களை
காட்டுவதோடு முடிகிறது
கண்ணாடியின் பணி
அதற்கப்பால்
அதனால் என்ன செய்ய முடியும்
கடலின் நிறம் மேகமா
ஆதியிலிருந்து நீலத்தை
கடலில் கரைத்து வருகிறது மேகம்
ஆனால் கடலின் நிறம்
இன்னும் மாறவுமில்லை
மேகத்தின் நீலமும்
தீர்ந்து போகவுமில்லை
சில வேளை
கடலில் நிறம் மாறும் போது
மேகத்தின் நிறம்
தீர்ந்து விடுமா என்ன
அயர்ச்சியுறாது கடலில்
நீலத்தை கரைத்த வண்ணம்
ஓடுகிறது மேகம்
அன்பெனும் பேரலை
ஏதுவான நிறங்கள் குழைத்தெடுத்து
கடலை அச்சொட்டாக
வரைந்து முடிக்கிறாள் ஹயா
அலைகள் எதுவுமின்றி
நதிபோல் அமைதியாக கிடக்கிறது கடல்
உடன் அவளை அழைத்து
ஏன் அலைகளை வரையவில்லை
மறந்து விட்டாயாவென அவாவுற்றேன்
அதற்கு அவள்
அவ்வாறு வரைந்திருந்தால்
இரவு ஒழுகித் தீரும் வரை
அலை ஓயாது ஆர்ப்பரித்து
வீட்டின் உறக்கத்தை
கலைத்திருக்குமென்று சொன்னாள்
அவளது கடலில் கால் நனைக்கையில்
மனசுக்குள் ஆர்ப்பரிக்கின்றன
அன்பெனும் பேரலைகள்
***
-ஜமீல்
Please follow and like us: