தீப்பசியும் தீரா முத்தமும்
எரியும் விளக்கொளியில்
முத்தம் இடுவதும்
பின் பட்டுச் சுருள்வதுமாய்
துடித்தெழுகிறது ஒரு விட்டில்.
இதுவரை கவிதைகளிலும் கதைகளிலுமாய்
காப்பாற்றப்பட்ட பல
மனிதமற்றவைகளைப்போல
இந்த விட்டிலை எழுத்தில் விட்டுவிட
இணக்கமில்லாத ஓர் இராப்பொழுதில்
புத்தகத்தை மூடிவிட்டு
திரியை அணைக்கிறேன்.
தீப்பசி தீரா விட்டில்
என் காதுகளை தொந்தரவு செய்கிறது
மேலும் அது இதயம் வரை இறங்கி
என்னை அதிர்வு செய்கிறது.
அது வெறும் இரைச்சலல்ல
ஒரு தீராப்பசி
இருட்டின் மீதான நச்செரிச்சல்
வெளிச்சம் மீதான வேட்கையென
பல பெயர்கள் இருக்கக்கூடும்
கனவுகள் சாத்தியமற்றுப் போகும்
இவ்விருளைக் கடக்க
சிறிதாயொரு மின்விளக்கை இணைத்து
திரியின் சுடரைப் பொருத்துகிறேன்
முத்தங்களால் நிரம்பியிருக்கிறது
அச்சிறு லாந்தர்.
ஆயுதமேந்தும் சொற்கள்
உரையாடிக்கொண்டிருந்தோம்
தெரிந்த திசையொன்றில் இருந்து
தீடிரென வந்து எங்களை இடைமறித்தன வெப்பம் நிறைந்த சில சொற்கள்அதுவரையிலுமாக எங்களை
சுற்றி இருந்த சொற்கள் அமைதியாகின
சற்றே சலனத்தோடு
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்
சொடுக்கும் நேரத்துள் தோலைச் சுட்டது எங்களை சூழ்ந்த வெப்பம்நாளையும் அதே நெருப்பு சுடும்
நாங்கள் அமைதியாவோம்
எங்களிடமிருக்கும் குழிர்நிறை சொற்கள் சற்று அகலும்
பின் நீண்ட நேரத்துக்கு டிக் டிக் என
பேசிக்கொண்டிருக்கப்போவது
கடிகாரத்தின் முட்கம்பிகள் மட்டும்தான்
இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களிடம்
சிலவேளைகளில் சூடான சொற்களை அகற்றுவது பற்றிய ஆய்வுக்குறிப்புகள் இருக்கலாம்,
எங்களிடமும் இருக்கின்றன.
சில சொற்கள் சுடும்
சில சொற்கள் குளிரும்
ஆனால் ஒருபோதும் அவற்றின் பெயர்கள் தீயோ பனியோ அல்ல.
***
-டணிஸ்கரன்
அழகிய கவிதை