கவிதையைப் புரிந்துகொள்ளுதல் என்பது நெடுந்தூரப்பயணத்திற்கு ஈடானது.அப்பயணத்தின்போது ஏற்படும் அனுபவங்கள்,கலாச்சார மாற்றங்கள் புதிய மனிதர்கள்,புதிய நிலங்கள்,புதிய மொழிகள் என வகைவகையான பிரமிப்புகளை உள்ளடக்கியது,அத்தகைய அனுபவத்தற்கு ஈடானது மொழியின் தீவிர கதியில் இயங்கும் கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பது.
அத்தகைய கவிஞர்களின் கவிதையை முதல் வாசிப்பிலேயே புரிந்து அதன் நிறைவை அடையமுடியும் என்பதும் சற்று சிக்கலானதுதான்,சில கவிஞர்களின் கவிதைகள் எட்டக் கூடிய உயரத்தில் நின்றிருக்கும்,சிலரது கவிதை முதல் வாசிப்பில் எந்தவொரு உபவிளைவையும் தாராமல் சென்றுவிடும்,அல்லது அந்த வாசிப்பில் எந்தவொரு அனுபவத்தையும் தராத கவிதை, வாழ்வின் ஏதோவொரு கணத்தில்,நிகழ்ச்சியில் நமக்கு நினைவிற்கு வந்து பெரும்பங்களிப்பான அனுபவத்தினை தரக்கூடியதாக இருக்கும்.
தொடர் வாசிப்பு,எழுத்து,கவிதை சார்ந்து இயங்குபவர்களுடனான தொடர்புகள்,அவர்களுடனான உரையாடல்கள் என பல்வேறு தளங்களில் கவிதை குறித்து தீவிரகதியில் இயங்கும் இடங்களில் நம்மை ஒப்படைக்கும் தருணங்கள் ஒரு நல்ல கவிதையை,நல்ல கவியை நமக்கு அடையாளம் காட்டக்கூடும்.மேம்போக்கான தருணங்களில் இருந்து வாழ்க்கையைக் கற்றவர்களுக்கு பாசாங்கான மரியாதைகள் மீது நாட்டமிருக்கும்.
கவிதையும் அத்தகையதுதான் அரத்தமற்ற அல்லது போலியான,கணநேர சிமிட்டல்களுடன் முடிந்துபோகிற,கைதட்டலுடன் கடந்துவிடமுடிகிற கவிதைகளை உற்பத்தி நிறுவனமாக மாற்றிவிட்ட இக்காலத்தில் நிஜங்களைத் தேடி அலைவதும்,நிஜங்களுக்காக காத்திருப்பதும் காட்டுச்சுனையில் குளிப்பதற்கு ஈடானது.
தமிழ் கவிதை இயக்கத்திற்கு நின்று நிலைத்துப் பெய்யும் மழையைப்போன்ற கவிதைகளை தந்திருப்பவர் க.மோகனரங்கன்.அவரது குரலிலும்,பழகும் தன்மையிலும் உள்ள மென்போக்குத் தன்மையே அவரது கவிதைகளிலும் நாம் காணலாம்.
நெடுவழித் தனிமை,இடம்பெயர்ந்த கடல்,மீகாமம்,கல்லாப்பிழை என்ற நான்கு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளது.மேலும் நவீன தமிழ்க் கவிதைகள் குறித்தும்,அதன் போக்குகள் மற்றும் ஆளுமைகள் குறித்தும் தீர்க்கமான கட்டுரைகளை எழுதியவரும்,சிறந்த விமர்சகர்களில் ஒருவராகவும்,மொழிபெயர்பாளராகவும் நவீன தமிழிலக்கியத்தின் அனைத்து வகைமைகள் குறித்தும் ஆழ்ந்த உரையாடல் நிகழ்த்துபவராகவும் உள்ளவர் மோகனரங்கன்.
முதல் கவிதை(1987) பிரசுரமாகிப் பல வருடங்களுக்குப்பிறகு தனது முதல் தொகுப்பை(மார்ச் 2000) கொண்டுவருகிறார்.ஏறக்குறைய 13 வருடங்கள் கழித்து.தற்போதையக் கவிஞர்களுக்கு இது அதிசயமாகக் கூடத்தோன்றக்க்கூடும். நெடுவழித்தனிமை தொகுப்பு வந்தபோது மிகவும் கவனிக்கப்பட்டது.மோகனரங்கனின் கவிதைகளின் வடிவமும்,மரபான மொழி நடையும் என் மனநிலைக்கும்,கவிதைச் செயல்பாடுகளுக்கும் ஏறக்குறைய அருகில் இருந்தது.அக்காலகட்டத்தில் நான் எழுத முயன்ற கவிதை வடிவத்திற்கு நேர்மாறானதாக இருந்தாலும் மோகனின் வடிவ நேர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.நெடுவழித்தனிமை முதல்தொகுப்பு 40க்கும் குறைவான கவிதைகள் அடங்கியது.அதிலொரு கவிதை

பிரார்த்தனை
கண்டகள் மூட
நெஞ்சு நேர்ந்து
கைகள் தொழும்
திருஉருவான
சிலையாகத்தான்
சித்திக்க வேண்டுமென்பதில்லை
நிழலடியில்
தலைச்சுமையிறக்கி வைத்த
ஆசுவாச மூச்சொன்று
போதும்
கல்லாகும் யோகம்
பயில்வேன்

இக்கவிதையை வாசிக்கும்போது இரு நேரெதிரானத் தன்மை நிகழ்வதைக்காணலாம்.கவிதையின் முதல் பாதியில் ஒரு நாத்திகனின் குரலாகத்தொடங்கி மறுபாதியில் வேதாந்தியின் குரலாக மாற்றமடைகிறது.இதைப்போன்றே இக்கவிதை மற்றொரு வாசிப்பில் எளிய மனிதர்களின் மனக்குரலாகவும் நிற்பதையும் பார்க்கலாம்.கவிதையின் வழியாக முழுமை அடைவதற்கும் கவிதையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் மிக நுட்பமான வேறுபாடுகள் உண்டு.இதனை பரம திருப்தியாக உணவு உண்டதைப்போன்று உணரமுடியாது.மோகனின் கவிதைகள் வழியாக வாசகன் அடையும் தருணங்கள் மிகச் சாதாரணத்திற்கும் சற்று மேலானவை,அவர் அந்த கட்டுக்கோப்புத் தன்மையினை நெடுவழித்தனிமை தொகுப்பிலிருந்தே தொடங்கிவிட்டார்.

கடைதிறப்பு

நீங்கள்
செய்வதற்கு ஒன்றுமில்லை
குழந்தை மடிவிட்டிறங்கி ஓடும்போது
தவறி கண்ணாடிப்பொருள் விழும்போது
பாதையின் குறுக்கே பாம்பு மறையும் போது
கையில் விலங்கோடு எதிர் ஒருவன் வரும்போது
நிசியில் நாய்கள் குலைக்கும்போது
குடிசைகள் பற்றியெரியும்போது
ஒருத்தி நேசிப்பதாகச் சொல்லும்போது
ஒருத்தி வெறுப்பதாகச் சொல்லும்போது
பார்த்துக்கொண்டே
நிற்கிறீர்கள்விநாடிகளின் நீட்சியில்
நிரம்பும் வெறுமை
சமன் கலைக்கிறது
வாழ்வின்
அர்த்தம் மற்றும் அரத்தமின்மைகள் பற்றிய
உங்களின் கற்பிதங்களை.

மேற்கண்ட கவிதையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்
ஒரு விண்ணப்ப படிவத்தைப்போன்ற கச்சிதம் இவரது கவிதை தொகுப்பின் கவிதைகளில் நிரம்பியிருக்கும்.இதே காலகட்டத்தில் இவருக்குப் பிறகு எழுத வந்த 90களின் கவிஞர்கள் என்று தற்போது அடையாளப்படுத்தப்படும் கவிஞர்கள் உருவாகி பரவலாக தங்களது புத்தாக்கமான கவிதையாக்கங்களின் வழியாக கவனிக்கப்பட்டும் பேசப்பட்டுக்கொண்டுமிருந்தனர்.ஆனாலும் எதன் மூலமும் சலனப்படாத மோகனரங்கன் தனது தனித்த மொழி நடையுடன் கூடிய கவிதைகளின் வழியாக அதில் உள்ளாடும் ஆழ்மன அமைதியைப்போன்ற சொல்லாட்சிகளுடன் எழுதிய கவிதைகளின் வழி கவிதையுலகு அவருக்கு மதிப்பு மிக்கதும்,பொருத்தமானதுமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது.
இவர் வடிவச் சிக்கனமும்,சொற்பிரயோகத்தில் காத்திரமும்,இருண்மையும் கூடியத் தன்மைகளுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும்போது,தனது சமகாலத்திலேயே அதிலிருந்து விலகி ஒரு பாய்ச்சல் நடந்துகொண்டிருப்பதன் தாக்கமில்லாமல் தனது கவிதையாக்கங்களை செய்து கொண்டிருந்தவர்.மோகனின் கவிதைப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் செம்பதிப்புத் தன்மைகொண்டவை என்பது என்னுடைய அனுமானம். மீகாமம்,கல்லாப்பிழை தொகுப்புகளை வாசிக்கையில் இது உறுதியானது..நான் ஆர்வமாக எழுதவும் வாசிக்கவும் முற்பட்ட கவித்தன்மைகளிலிருந்து விடுபட்டு சாந்தமான,அப்பழுக்கற்றத் தன்மையுடன் எழுதப்பட்டவை..

மிகச்சமீபத்தில் ஒருநாள் நள்ளிரவில் ஒரு பெரிய கோவிலின் உட்பிரகாரத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்திருக்க நேரிட்டது.ஒரு தவிட்டுக்குருவி உலகத்தைப் பார்ப்பதுபோல பிரகாரத்திலிருந்த,கோவில் நடையில் இருந்த சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.நாமில்லாத இரவுகளில் இந்த சிலைகள் கீழிறங்கி தங்களது இயல்பான வாழ்வை வாழும்தானே என்று எண்ணியபடியிருந்தேன்.இதற்கு சிலவாரங்களில் கவிஞர் சுகுமாறனின் ஒரு கவிதையில் இதே படிமத்தையொட்டி ஒரு கவிஞர் சுகுமாறனின் ஒரு கவிதையை வாசிக்க நேர்ந்தது.நமது எண்ணவோட்டத்தை நமக்கு முன்பாகவே மூத்தகவியொருவர் எழுதிப்பார்த்திருப்பதையும்,அதனையொட்டி நாமும் சிந்தித்தோமே என்றும் நினைத்துக்கொண்டேன்.ஏறக்குறைய அதேபோன்ற கவிதையொன்று நெடுவழித்தனிமை தொகுப்பில் வந்த ”கல் திறந்த கணம்” கவிதையில் இருந்தது.

கல் திறந்த கணம்

பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடி யோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப்பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண்திருப்ப
காதில் விழுந்தது
நூறுநூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒளி.

கவிதையின் மூலம் பெறும் அனுபவப்பங்கிடு என்றே இதனை நினைக்கிறேன்.அல்லது மொழியின் சரடு பல்லாண்டு காலங்கள் நீண்டு பல்வேறு கவிகளின் மனதின் வழியாக புத்தம் புதிய பொருளாக,காட்சிகளாக பதிவு பெறுவதாகக் கருதலாம்.
இளம் படைப்பாளிகளுக்கு மோகனரங்கன் கவிதைகள் முன்னுதாரணமாக கொள்ளும் அளவிற்கு முக்கியமானவை.தற்போது எழுதிக்கொண்டிருக்கும் அல்லது பிற்காலத்தில் எழுதவரும் படைப்பாளிகளுக்கும் இவரது கவிதைகளின் ஒழுங்கு, அதன் தொனி மற்றும் கவிதையாக்கத்தில் நிகழ்ந்துள்ள செய்நேர்த்தி ஆகியவை ஒரு பாடமாக இருக்கும் சாத்தியமுள்ளவை.ஏறக்குறைய அனைத்து தொகுப்பின் வழியாகவும் அவர் நிகழ்த்தியுள்ள மரபான மொழியின் தாக்கமும் அவர்களுக்கு உதவக்கூடும்.

மீகாமம் அவரது மூன்றாவது கவிதைத்தொகுப்பு முதலிரண்டு தொகுப்புகளில் இருந்த நெருக்கமான படிம அடுக்க்களின் வழி கவிதை சொல்லும் முறையிலிருந்து மெல்ல விடுபட்ட தொகுப்பு,ஏறக்குறைய தொகுப்பு முழுவதும் காமத்தை அடிப்படையாகக்கொண்ட கவிதைகள் அடங்கியது.அன்பு,காதல்,களவொழுக்கம் என பலவிதமான உணர்ச்சிகளின் இக்கவிதைகளின் அடிநாதம்.இக்கவிதைகள் நறுக்குத்தெறித்தாற்போன்ற ஒழுங்கைக் கொண்டிருப்பவை காதலை அல்லது காமத்தை எழுதும்போது எப்படி இந்த ஒழுங்கு சாத்தியமென கேள்வி எழலாம் ஆனால் மோகன் அவற்றை மீகாமம் தொகுப்பில் செய்து காட்டியிருக்கிறார்.

என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய் சிறுநீர்
இம்முத்தம்

என்ற கவிதையை உதாரணமாகச் சொல்லலாம்

பெருந்திணை

வேலி மீறிய
கிளையொன்றில்
இலை மறைவாகக்
கனிந்த
சிறுகோட்டுப் பெரும்பழத்தின்
சுவை
அறிந்த
கிளி
பின்
சுரம் கூட்டிப்பாடவுமில்லை
மரம்விட்டுப் பறக்கவுமில்லை

என்ற கவிதையின் வழி மிக எளிமையாக ஒளிந்த பூடகத்தன்மையுடன் காமத்தைச் சொல்லும்போது,தற்காலத்திய யதார்த்தமும் பிடிபடுகிறது.

மோகனரங்கன் கவிதைகளின் மொத்த கவிதைத்தொகுப்புகளின் வடிவமும் அதன் தொனியும் மறைமுகமான தர்க்கமும், தன்னுணர்வுடன் கூடிய விசாரணையும் கொண்டு எழுதப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.கவிஞனின் ஞானம் அதன் சிருஷ்டியில் வெளிப்படக் கூடாது என்ற கருத்துருவின் பால் ஏற்பும் மறுப்புமாக எனக்கு ஒத்திசைவு உண்டு.இவரது கவிதைகள் கட்டமைக்கும் காட்சிகள்,உண்ர்வுகள்,சிந்தனைகள் மற்றும் பிரதிபலிப்புகள் காலவோட்டத்திற்கு லேசாக முரண்பட்டும்,சொல்லப்பட்ட முறைகளாலும் தனித்தன்மை கொண்டவையாகவும் உள்ளன.எனவே இக்கவிதைகள் மரபான மொழியினாலும்,பாடுபொருட்களாலும்,வெளிப்பாட்டு முறையிலும் அகத்தன்மை நிறைந்துள்ளது.வாசகனுக்கு சலிப்பில்லாத வடிவம்,கல்லாப்பிழைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதை.

பொய்யா விளக்கு

விழித்துத் தேடுகையில்
நினைவுக்குப் பிடிபடாது
சுழித்து மறையும்
சுகக் கனவென,
துங்கச் சுடரும்
தூமணி முகம்தனை
கணப்பொழொதிற்குக்
காட்டி மறைத்தாய்
அங்கமெல்லாம் விதிர் விதிர்க்க
அயர்ந்து நிற்கிறேன்
அம்மட்டோ
இம்மட்டோ
என அகத்திருள்.

அடங்கல் என்ற மற்றொரு கவிதை

அசையாத உறுதியை
அவசரமில்லாத நிதானத்தை
மனம் கொள்வதனின்றும்
தொடங்குகிறது
ஞானத்தின்
அரிவரி என்கிறது.

மனித வாழ்வின் அடிப்படையாக சொல்லப்பட்ட நல்ல எண்ணம்,நன்னடத்தை போன்றவை காலகாலமாக மீறப்பட்டும்,அடிப்படையான குணநலன்களாகவும் இவை இருந்து வந்திருக்கின்றன.மோகனரங்கன் கவிதைகளில் இவை ஆசைகளாகவும்,நிராசைகளாகவும் தன்மையாக வெளிப்படுகின்றன. இவரது அனைத்து கவிதையிலும் இறையாண்மையுடன் கூடிய ஒரு ஒற்றைக்குரல் இந்த கவிதைகளை ஒழுங்கு செய்து கொண்டிருப்பதையும் காணலாம்,சங்கப்பாடல்களைப்போன்ற நெருக்கமான மொழி நடையுடன், கவிதையில் கச்சாப்பொருட்களான காமம்,பிரிவு,ஏக்கம்,நிராசை,முடிவு மற்றும் முடிவிலிகள் போன்றவற்றின் மீது கட்டுக்கோப்பை நிகழ்த்தியுள்ளது.அதுமட்டுமில்லாமல் அவரது கவிவழ்வு முழுமைக்கும் நீண்ட ஒற்றையிழையைப்போல வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.இவரது கவிதை ஒருபோதும் அப்பாவித்தனத்தை,பகடியை நோக்கி நகரவில்லை,ராஜபாட்டையில் கைவீசி நடக்கும் ராணுவ ஒழுங்கையொத்தது அது.அதற்கு அவரது மொழியறிவும்,விமர்சன மனப்பான்மையும்,கவிதைபோக்குகள் குறித்த ஞானமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மோகனரங்கன் கவிதைகள் நெடுகவும் பாந்தமான தலைப்புகளை க்கொண்டவை தலைப்புகளினாலே சில கவிதைகள் புதியபொருள்படும்படியாக உள்ளது.சில நேரங்களில் அந்த கவிதைக்கு ஒரு மரியாதையான தோற்றத்தையும் தந்துவிடுகிறது.முதல் தொகுப்பிலிருந்து பார்த்தால் தலைப்புகளின் தன்மை மாறாத பொலிவுடன் இருப்பதைக் காணலாம் இசை வளரும்தனிமை,கல்திறந்த கணம்,காகிதத்தில் கிளைத்த காடு(நெடுவழித்தனிமை),அருட்பெருங்கடல்,அருநிழல்(இடம்பெயர்ந்த கடல்),நினைவு முகம்,வியாசம்(மீகாமம்)இருள் வெள்ளி,அற்றது பற்றல்,நீர்வழிப்படுஊம் நினைவு,கடாகாசம்(கல்லாப்பிழை) போன்றவற்றை உதாரணத்திற்குச் சொல்லலாம்.
எனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள அறம்கண்டநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் என்னுடைய குலதெய்வக்கோவில்,இக்கோவிலுக்கு பின்புறத்தில் தென்பெண்ணையாறு அகண்ட நதியாக காட்சிதரும்.இந்த ஆற்றையொட்டி உள்ளக் குன்றின் மேலே தற்போது அதுல்யநாதேஸ்வர் என்று தற்போது அழைக்கப்படும் மிகப்பழைமையான சிவன்கோவில் உள்ளது.பச்சையம்மனை தரிசிக்கச்செல்வதற்கு முன்பாக கோவிலுக்கு வெளியில் செம்முனி,கருமுனி,லாடமுனி,முத்துமுனி என முனிகளின் சிலை வரிசை இருக்கும்,இந்த ஏழுமுனிகளையும் தாண்டி
தனியாகக் ”கும்பமுனி” அமர்ந்திருப்பார்.1980களின் இறுதியில் எழுதவந்த க.மோகனரங்கன் தனக்குப்பிறகும் தன்னுடனும் வந்த கவிஞர்களுடன் பொருந்தி உள்ளொடுங்கிப் போகாமல் கும்பமுனியைப்போல தனித்த அடையாளத்துடனும்,மொழிநடையுடனும் இருக்கிறார்.அவற்றை அவரது தொகுப்புகளின் வழியாக நாம் அறியலாம்.இறுதியாக

வெகுநேரமாகியும் யாரும்
தேடி வரவில்லை என்பதால்
மறைவிடத்தை விட்டு
வெளியே வந்த சிறுவன்
வெறுச்சோடி கிடக்கிற
தெருவைப் பார்க்கிறான்
இருட்டிவிட்டதால் விளையாட்டை
இடையில் நிறுத்திவிட்டு
எல்லோரும் போயிருந்தார்கள்
நில ஒளியில்
வீதியில் பாதியை மறைத்தவாறு,
வீழ்ந்துகிடக்கும்
வீடுகளின் நிழல்களை மிதித்தபடி
எந்நேரத்திலும் வந்து
எதிரே மறித்து நிற்கப்போகும்
நாய்களுக்குப் பயந்து
நடப்பவன்
அவ்விரவில்
அந்த த் தனிமையில்
அவ்வளவு
அநாதரவாக உணர்கிறான்
ஒருகணம்
உடைந்து அழப்போகிறவனைப்போல,
தடுமாறி நிற்பவன்
மறுபோது வீம்புடன்
தலையை உதறிக்கொள்கிறான்.
தன்னை யாரோ அல்ல,
தானே கண்டுபிடித்தவன் போல
தயக்கமேதுமின்றி
நேரிட்டு நிதானமாக
நடக்கத்தொடங்குகிறான்.

இவ்வாறு முடிகிறது தற்பிறப்பு என்கிற கவிதை.இதை ஒரு சிறுவனின் அனுபவமாக மட்டும் என்னால் கடந்து போக முடியவில்லை,வாழ்வின் ஏமாற்றங்களை,இழப்புகளை,தனிமைகளை,நிரிகரிப்புகளை,பொருட்படுத்தாமைகளை கடந்துவிட்ட அதைத் தழும்பாக ஏற்றுக்கொண்டு நன்கு வாழ்ந்த முது குரல் இந்த கவிதையில் பின்னால் ஒளிந்துள்ளதைக் காணமுடிகிறது. இக்கவிதைக்கு கவிஞர் “தற்பிறப்பு” என்று தலைப்பு வைத்துள்ளார்.அந்த அனுபவமும்,பாடமும் வாழ்க்கை முழுமைக்குமானது என நாம் புரிந்துகொள்ளலாம்.

***

-கண்டராதித்தன்

Please follow and like us:

1 thought on “தள்ளி அமர்ந்த கும்பமுனி- க.மோகனரங்கன் கவிதைகள்.

  1. கும்பமுனி சரியான ஒப்புமை கண்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *