வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தோம்பல் அதிகாரத்தில் வரும் குறள் இது.
விருந்தினர்களுக்காகக் காத்திருந்து, அவர்களை உண்ணச்செய்து பிறகு மிச்சமுள்ளவற்றை உண்ணும் இயல்புடையவனின் நிலத்தில் வித்து கூட இட வேண்டியதில்லை. யாவும் தானே விளையும். வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? என்கிற வினா அவ்வளவு கவித்துவமானது. தேவையே இல்லை என்கிற விடையைத் தன்னகத்தே கொண்டது.
இந்தக் கவிதையை வாசித்ததும் நமக்குள் பெரிய பரவசம் நிகழ்கிறது. இது நடக்குமா? என்று நாம் முட்டாள்தனமாக கேட்பதில்லை. மாறாக இதை எழுதியவன் திசை நோக்கி கை கூப்பத் தோன்றுகிறது. உலகியல் ஆள் ஒருவன் குழம்பிப் போய் பார்க்கும் இடம் இது. ஒரு கவிதை வாசகன் “உனக்கு இது கூடப் புரியவில்லையா?” என்று கேட்கும் இடம். ஒரு வசதிக்காக இதை மிகை என்று சுட்டினால் அய்யனிடம் இந்த மிகை பல இடங்களில் உண்டு.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
என்கிறது இன்னொரு குறள்.
நல்லநாடு என்பது இயல்பாகவே எல்லாச் செல்வங்களையும் கொண்டிருக்கும். அதாவது நாம் வருந்தி உழைத்து நாட்டை வளமாக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
இந்தக்கவிதையை அணி செய்வது இதன் சந்த நயம். குழலுக்கு நெஞ்சம் மயங்குவது போல் நாம் தலையாட்டி ஆமோதிக்கிறோம். ” பெய்யெனப் பெய்யும் மழை” என்கிற வரியிலும் இந்த இசைமயக்கு உண்டு. இசை நிகழ்த்தப்படும் போது அது சந்தேகத்திற்கு இடமற்ற கதியிலேயே நிகழ்கிறது. நாமும் அதைத் தொழ மட்டுமே விரும்புகிறோம். விருந்தோம்பல் குறளில் இந்த இசை மயக்கம் கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அது நின்று நிலைப்பது அதன் ஆன்ம பலத்தால். அற உணர்வால்.
கம்பனை ” மிகையில் நின்றுயர் நாயகன் ” என்று எங்கோ எழுதியுள்ளேன். மிகை கையாள சிரமமான ஒன்று.அதன் பெயர் மிகை என்றாலும் அதனுள்ளும் ஒரு அளவு செயல்படுகிறது. ஒரு லயம் உள்ளது. அவை பிசகினால் மொத்தமும் பிசகி விடும். கம்பனின் அநேகம் பாடல்களில் அந்தப் பிசகு நேர்வதில்லை. கவிதை கவிதையாக வெற்றி பெற்றுவிடுகிறது.
கம்பன், தசரதனின் கோசல நாட்டை சிறப்பித்துப் பாடும் பாடல் ஒன்று…
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லார் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாதவர்கள் யாருமில்லை என்பதால் அங்கு கல்வியில் வல்லார் என்று தனியே யாருமில்லை. எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ந்திருக்க, அங்கு உடையார் என்றும் இல்லார் என்றும் பேதங்கள் இல்லை.
புள்ளியியல் வல்லுநர் என்றால் கணக்கு வழக்கை சமர்ப்பிக்க வேண்டும். நல்ல கவிதையிடம் யாரும் கணக்குக் கேட்பதில்லை.
பாரதியின் புகழ்பெற்ற பாடலொன்று மேற்சொன்ன குறள்களின் பாதிப்பில் படைக்கப்பட்டதாக உள்ளது.
விடுதலைப் பாட்டு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாய் நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றே?
யான் எதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்மின்: பாடுபடல் வேண்டா:
ஊன்உடலை வருத்தாதீர்: உணவு இயற்கை கொடுக்கும்:
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்
இந்தக் கவிதையை எப்போது வாசித்தாலும் உவகையும் கண்ணீரும் பெருகி எழும். உவகைதான் கவிதையில் உள்ளது. கண்ணீர், அவ்வளவு உவகை தாளாது வருவது. சமீபத்தில் கவிஞர் ஷங்கர் ராம சுப்ரமணியனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இடையே நள்ளிரவு 2 மணிக்கு சத்தமாக இந்தக்கவிதையை வாசித்த அனுபவம் அலாதியானது. நான் நிகழ்த்திய கவிதை வாசிப்பில் இதுவே சிறந்தது என்று நினைக்கிறேன். உப்பு, புளி மிளகாய் போன்ற அற்ப விசயங்களுக்காக சதா என்னை வதைக்காதே என்று பராசக்தியிடம் முறைப்பாடு வைத்த ஒரு நைந்த இதயம் எந்தத் தருணத்தில் இப்படி எழுந்து பறந்திருக்கும்?
‘மங்கல வாழ்த்துப் பாடல்’ என்பது நமது மரபின் ஓர் அங்கம். அவை ஒரு தனித்த சடங்காக நூலின் துவக்கத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் நூலிற்குள்ளேயே மங்கலம் கூடி எழுந்த பாடல்கள் என்று இந்தக் கவிதைகளைத் தொகுத்துக் கொள்ளலாம். துளியும் விரக்தியின்றி முழு நன்மையை நம்பிப் பாடும் சொற்கள் இவை.
சமீபத்தில் வாசித்த “சோர்பா என்ற கிரேக்கன்” நாவலில் தள்ளாத வயதில் படுக்கையில் கிடக்கும் சோர்பா, மரணத்தறுவாயில் எழுந்து கொண்டு, பலர் தடுத்தும் கேளாமல் ஜன்னலை நோக்கி நடக்கிறான். நூற்றாண்டுகளாக அங்கு நிலை கொண்டிருக்கும் ஒரு மலையை அன்றுதான் புதிதாய்க் காண்பது போல ஒரு முறை கண்டுவிட்டு நின்ற நிலையிலே உயிர் துறக்கிறான் அவன் சாகும் வரை வியப்பின் விழிகளை அணையாது காத்து வந்தவன். அன்றாடத்தில் பழகிப்போன பல காட்சிகளையும் அந்த விழிகளால் கண்டு ” பார்த்தீர்களா..? பார்த்தீர்களா? என்று பரவசம் தாளாது துள்ளிக் குதிக்கிறான் நாவல் முழக்க.
கவிதையை அலுப்பூட்டும் அன்றாடத்திலிருந்து அற்புதங்களுக்கு அழைத்துச் செல்வது என்று கொள்வோமெனில், தேவதேவனின் இந்தக் கவிதையில் அன்றாடமே அற்புதத்தில் திளைக்கிறது.நாள் தவறாது நமது புழக்கடையில் மலரும் மலர்கள் நிச்சயம் ஓர் அற்புதம்தான். “எனக்கு அதை நன்றாகத் தெரியும்” என்கிற அசட்டை உணர்வால் நாம்தான் அதைத் தவற விட்டு விடுகிறோம். மேற்குறிப்பிட்ட கவிதைகளில் உள்ள கட்டற்ற கற்பனாவாதம் இதில் இல்லை. ஆனால் அதே உணர்வுப் பெருக்கு திரண்டு வரக் காண்கிறோம்
எல்லாம் எவ்வளவு அருமை!
நுரைத்துவரும் சிற்றலைபோல
வரிசையாய் நாலைந்து சிறுவர்கள்
ஒரு பெண்
எடையில்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தாள்
ஒரு காரணமும் இல்லாமல்
தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது
கொன்றை
ஒரு துரும்பும் நோகாதபடி
உலவிக் கொண்டிருந்தது காற்று
பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும் இலைகள்
தான் தொட்டதனால்தான்
உதிர்ந்ததென்றிருக்கக் கூடாதென்ற
எச்சரிக்கை நேர்ந்து
அப்படி ஒரு மென்மையை
அடைந்திருந்தது காற்று
மீறி விதிவசமாய் உதிர்ந்த இலை ஒன்றை
தன் சுற்றமனைத்துக்கும் குரல்கொடுத்து
குழுமி நின்று
தாங்கித் தாங்கித் தாங்கி
அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்
மெல்ல மெல்ல மெல்ல
பூமியில் கொண்டு சேர்த்தது.
அன்றாடத்தில் அற்புதத்தைத் காண்பதே கவிஞனாக வாழ்வதின் உச்சபட்ச லாபம். கசப்பும் கண்ணீருமற்று தூய உவகை நிரம்பி வழியும் தருணங்கள் அவை .வாழ்வின் ரகசியமே கிட்டிவிட்ட ஆனந்தப் பெருக்கு.
இந்தக்கவிதை இடம் பெற்றுள்ள தொகுப்பின் தலைப்பு “அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது”. ஒரு நாற்சந்தியில் நின்று கொண்டு நமது வாழ்வைக் கவனித்தால் இந்தத் தலைப்பை அவ்வளவு சத்தமாகச் சொல்ல இயலாது. ஆயினும் ஒரு கவிதைக்குள் இருந்து சொல்லலாம்….
“ அமுது மட்டுமே ஆகுக! ”
***
–இசை
I just remembered,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்