கல் அகப்படாத வேளையில்
எனை நோக்கி
நாய் என்ற சொல்லை வீசினார்
தன்னை
உண்மையான நாயென்றே
நம்பிவிட்ட அச் சொல்
அன்று முழுக்க
நாயென துரத்தியதென்னை.
ஊரெங்கும் ஓடிக் களைத்து
வீடு திரும்பினேன்
வாசற்படியில்
எனக்காகவே காத்திருந்தது
தின்று மீதம் வைக்கப்பட்ட
ஒரு கூறு எலும்புத் துண்டுகள்.
0
சிமெண்ட் தொட்டியாய்
மாறிய அறையில்
உயர்ந்துகொண்டே போகிறது
இருள் நீரின் மட்டம்
உதவிக்கோரலின் வார்த்தைகள்
நீர்க்குமிழிகளாய் வெளியேறி
உடைந்துகொண்டிருக்கின்றன
அல்லது
மேலிருந்து ஒரு கை
உடைத்துக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு உடைப்பிலும்
எழுகிறது
இனிய வளையோசை.
0
மணி பத்து
எல்லோரும் தூங்கிவிட்டார்கள்
ஒன்பது வரை
சிமினி விளக்கை ஒளிரவிடும்
முனியம்மாள் கிழவி
மதியமே
மகன் வீட்டுக்கு சென்றுவிட்டாள்
திருட்டுக் கால்களால்
மெதுமெதுவாய் நடந்துவந்து
கதவை தட்டியது
புரோட்டா சால்னாவின் வாசம்
அது
உலகின் மிக மெல்லிய ஒலி.
0
மதுவின் கை
மண்டைக்குள்
மிதவேக பம்பரத்தைச் சுற்றிவிட்டது
உள்ளங்கையிலேற்ற
முயலும்போதெல்லாம் எத்துகின்றன
கொழுப்பெடுத்த வெளியின் முரட்டுக் கால்கள்
பொறுப்புணர்வு பொருந்திய நண்பன்
என்னைப் பின்னமர்த்தி
வாகனத்தை முடுக்குகிறான்
பைத்தியக்காரன்
முழு எடையையும்
முதுகில் தாங்கிச் செல்கிறான்
நானோ
கைகளை அகல விரித்து
உரக்கச் சொல்லுகிறேன்
நானொரு சதைச் சிலுவை.
0
வெகுனாட்களுக்குப் பின் சந்தித்ததின் உற்சாகத்தில்
“டிங் டிங்” என்று சத்தெமெழும்படி
இடித்துக்கொண்டமர்ந்தன
இரு மதுபாட்டில்கள்
அடைபடுதலின்
கறுப்பு நாட்களை
மூடிகள் பிதுங்க பகிர்ந்துகொண்டன
இடையில் வந்திணைந்தன,
காரக்கடலைகளும், தண்ணீர் போத்தலும்.
எதிரேயமர்ந்த
மதுபாட்டில்களிடம்
காரக் கடலைகள்
காரமான கதைகளையும்
நீர் போத்தல் கண்ணீர்க் கதைகளையும் கூறின.
துயரம் தீயாய் எரிய
தம்மைத் தாமே
ஒரே மடக்காகக் குடித்துவிட்டு
தள்ளாடித் தரையில் விழுந்து உடைந்தன
துக்கம் தாளாத மதுபாட்டில்கள்.
***
-நெகிழன்