காலங்காலமாக கதை சொல்லல், கேட்டல் மரபென்பது இனம் மத மொழி கடந்து எல்லா இடங்களிலும் விரவிக்காணப்படுகிறது.
சமகால ஈழத்து இலக்கிய தளத்தில் சிறுகதைகளுக்கென்று தனித்தன்மை இருக்க வேண்டியது கட்டாயம். சிறுகதை விடுத்து இலக்கியமென்ற வட்டம் முழுமை அடையாது.
தற்கால சூழலியல் மாற்றங்களில் ரஷ்ய படைப்புக்களின் தாக்கம் மிகுந்திருப்பது மகிழ்ச்சியானவொரு விடயம் என்றாலும்
அது ஈழத்து இலக்கியங்களின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. இதற்கு மிக முக்கியமான காரணம் ஆழமான விமர்சனப் போக்கின்மையும் வாசிப்பு வரட்சியுமே..
டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் , ஆன்டன் செகாவையும் வாசிக்கத் துவங்கியிருக்கும் ஆரோக்கியமானதாக இருந்தாலும் நமது சிறுகதைகளினதும் நாவல்களினதும் மேலெழுகை குன்றிவிட்டது எதிர்கால சந்ததியினரின் தேடலுக்கு தீனியில்லாது போக கூடிய சந்தர்ப்பம் அதிகமல்லவா?
1970 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து
போரும் அமைதியும், புத்துயிர்ப்பு , அன்னா கரீனினா, வெண்ணிற இரவுகள் , போரும் அமைதியும் என்று பட்டியல் நீளும் இலக்கிய வரிசையில் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் “வீரம் விளைந்தது”
விலக்கிவைக்கவியலாதவொன்று.
போரின் எச்சங்களை வடுக்களைத் தாங்கி மீண்டுகொண்டிருக்கும் ஈழத்து சூழலில் இலக்கியம் பற்றி பேசவேண்டியது காலத்தின் கட்டாயம்.. எதிர்காலத்தில் இவை நிச்சயமாக நிலைநாட்டப்படவேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு. மிக நீண்ட காலமாக இலக்கியத்தோடு சிறுகதைகளோடு தொடர்பறுந்து போகாமல் இருப்பவர்களைக் கண்டுகொள்தல் என்பது மிகக் கடினமானவொரு செயல் . ஈழத்து சிறுகதைகளின் புத்தெழுச்சிக் காலம் (1961-1983) வரையானது எனலாம் .செங்கையாழியான் , செ.கதிர்காமநாதன் , செ.யோகநாதன் , தொடக்கம் தீரன் நௌசாத் மன்சூர் ஏ காதர் வரை சிறுகதை போக்கு நீள்கிறது.
விரிவான வாசிப்பும் ஆழமான விமர்சனமும் தேடலும் சுதந்திரமாக எதையும் உடைத்து பேசமுடியாத்தன்மையும்
படைப்பாளர் வாசகருக்கிடையிலான நல்ல ஆரோக்கியமான விவாதங்கள் இன்மை போன்ற அக புறவய சூழல்காரணிகளின் வகிபாகம் இங்கே உற்றுநோக்கப்படவேண்டியது அவசியம்
ரஷ்ய இலக்கியத்தின் தந்தை அலெக்சாண்டர் புஷ்கினை தொடர்ந்து
லெர்மாண்டவ், கோகோல் ,பிலின்ஸ்கி,துர்கனிவ் , டால்ஸ்டாய் என்று நீளும் இலக்கியத்தாக்கம் ரஷ்ய புரட்சியின் சிந்தனைப் போக்கிற்கு வித்திட்டதை
மறுக்கவியலாது… இதன் நெருக்கீடுகள் மிக அதிகமான தாக்கத்தை ஈழத்து சிறுகதைகளின் மீது செலுத்தியுள்ளது.
தமிழ்ச்சூழலில் 2001 ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்து இலக்கியச் சூழலில் ஒரு அதிர்வை ஏற்படுத்திய நூலாக ஷோபா சக்தியின் “கொரில்லா” வைக் கூறமுடியும். ஆனாலும் புனைவுத் தளங்களில் மிக எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் சிலர் உறக்கநிலைக்கு செல்வது அல்லது மந்த கதியில் இயங்குவது ஈழத்து இலக்கியப்பரப்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திவிடும்.
சுமதி ரூபனின்” யாதுமாகி ” வேட்கை” என்பன கவனிக்கத்தக்க சிறுகதைகள் எனலாம்.பண்பாட்டு ரீதியான சில கொள்கைகள் கடப்பாடுகளை கழற்றி எறிய முடியாத கவனத்தை குவிக்க வேண்டியவை.மேலும் தமிழ்நதியின் “நந்தகுமாரனுக்கு எழுதியது” நிருபாவின் ” சுணைக்கிது” இதில் எஸ்.ராவின் சாயலை சற்று கவனிக்கலாம். பல நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து ஈழத்து சிறுகதைகள் வெளிவருகின்றன. மேலும் போற்கால இலக்கியங்களின் இடைவெளி இங்கே இடைவெளியாகவே இருக்கிறது.வெற்றிச்செல்வியின் ஒரு போராளியின் காதலி , ஈழப்போரின் இறுதி நாட்கள், பங்கர் பான்ற நூல்களை குறிப்பிடலாம். இதுவே ரஷ்ய இலக்கியங்களின் பேரெழுச்சிக்கு ஒரு காரணமெனலாம்.
ஆனாலும் மூன்று தசாப்தகாலத்திற்குமேல் போரினை சுகித்துக்கிடந்தவொரு இனத்தின் வடுக்கள் காய முன் எழுத்தை கிளறுவது அபத்தம்
உலக அளவில் இன்னும் விசாலமடையாது மேம்போக்காக மட்டும் நகர்ந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான வாசக படைப்பாளர் உரையாடலின்மை அரசியல் சினிமா போன்றவற்றின்மீதான மோகம் இணையவிதழ்களின் செல்வாக்கு போன்றவற்றைக் கூற முடியும்.
சிறுகதைகளின் வரிசையில் அருள் சுப்பிரமணியம்,சாரங்கா தயாநந்தன் ,சித்தார்த்த சேகுவேரா,மட்டுவில் ஞானகுமாரன்,இளங்கோ போன்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். விமர்சன ஆய்வுகளின் பற்றாக்குறையே ரஷ்ய இலங்கியங்கள் ஈழத்து இலக்கியங்களை விட மேலெழுந்தமைக்கு காரணம் எனலாம்.
19 ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து ரஷ்ய இலக்கிய மொழிபெயர்புக்கள் வெளிவரத்துவங்கின . ரஷ்ய புரட்சிக்கு பிறகு ஷோவியத் ரஷ்யாவின் அயல்மொழிப் பதிப்பகத் துறை மார்க்கசிய நூல்களையும் ரஷ்ய நாவல் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து மிகக் குறைந்த விலையில் வெளியிட்டது ஏராளமான தமிழ் வாசகர்களை தன் பக்கம் வாரிக்கொண்டது.
இதுபோக ஈழத்துச் சிறுகதை மரபில்
முற்போக்கு, மாமார்க்ஸியம், பிற்போக்கு என்ற வகைப்பாட்டிற்குள் சிறுகதைகள்
பண்புமுறையில் மனித தார்மீகம் போன்றவை முனைப்புற்றிருந்தன. டானியலின் சிறுகதைகள் வர்க்க உணர்வுகளைப் பேசுவனவாக அமைந்தன .
இவை அனைத்தையும் புரட்டிப்போட்ட ரஷ்ய இலக்கியங்களின் பேசுபொருள் வாழ்க்கையின் வேதனை,இன்பம்,மீண்டெழுதல் என்பதே கருப்பொருளாக இருந்தது. இருத்தலியல் கோட்பாடு பேசுபொருளாகியது.
இலக்கியத்தின் தடைகள் தனித்தன்மை பற்றி எடுத்துரைத்தது.
ரஷ்ய இலக்கியங்களுக்குண்டான தனித்தன்மை இறையியல் சுட்டுக்கள் பண்பாட்டு சூழல்கள் தடைகளைத் தகர்க்கும் வல்லமை சிந்தனை விரிவுகள்
ஈழத்து சிறுகதை வீழ்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்கின்றன.
ருஷ்ய இலக்கியங்களை வாசிக்கும் போது ஏற்படும் தடைகள் நிச்சயமாக ஈழத்து சிறுகதைகளை வாசிக்கும் போது ஏற்படுவதில்லை. மொழி இலகுதன்மை. குறியீடுகள் மண்வாசனை இயல்பு இழக்காத வாழ்வியல் அம்சங்கள் ஏராளமான நுண்ணுணர்வுகள்… இருந்தாலும் இவை வாசக படைப்பாளர் அணுக்கப்புரிதல் இல்லாமை, அறுந்து போகாத தொடர் விமர்சன போக்கு உரையாடல்கள் அயல் இலக்கிய மோகமின்மை இருக்குமானால் ஈழத்து இலக்கிய வரிசையில் சிறுகதைகளின் வளர்ச்சிப் போக்கு அணுவளவும் அசையாது. பிற மொழி இலக்கியங்கள் ரீதியில் தனக்கென்று ஒரு தனிப்பாறை அமைத்து வேர்விட்டு வளர்ந்துவிடும் என்பதில் துளியளவும் ஐயப்பாடில்லை.
-கயூரி புவிராசா
கட்டுரைதளத்தினுள் சிறப்பான முதலடி..
வாழ்த்துக்கள்