எனக்கு உணர்ச்சிவப்படுவதற்கு பெரிய காரணங்கள் ஏதும் தேவையில்லை. நக்கீரன் ஈசனைப் பார்த்து “சங்கை அரிந்துண்டு வாழ்வோம்; ஆனால் அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை” என்று சொல்லும் போதே எனக்கு மனம் விம்மிவிடும். அதை மறைத்துக் கொள்ள சத்தமாக சிரிப்பேன் அல்லது அண்ணாந்து பார்ப்பேன். அந்த சந்தர்ப்பங்களில் முகம் இன்னமும் விகாரமாகிவிட்டிருக்கும். அனைவருக்கும் இது தெரியும். டிவி பார்த்துக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அது எனக்கும் தெரியும் என்பதால் நான் இன்னும் வலுக்கட்டாயமாக ஏதாவது செய்ய முயன்று தோற்றுக்கொண்டிருப்பேன். தேன்மொழிதான் இதை முதலில் கண்டு பிடித்து எல்லாரிடமும் பரப்பி விட்டவள். அதன்பின் நான் அனைவருக்கும் ஒரு  காட்சிப் பொருளாகிவிட்டேன். அதனாலேயே நான் காலேஜ் போகும் போதும் வேலைக்கு போகும்போதும் சரி, இப்போது வீட்டில் இருக்கும் போதும் சரி,  இதில் கவனமாகவே இருப்பேன். உலகமே கண்ணீர் விட்டு பார்க்கும் செய்திகளை உணர்ச்சியற்று பார்த்து அலச பழகிக் கொண்டேன். ஆனாலும் பஸ்ஸிலோ  அல்லது எங்கோ ஒரு திரைப்படப் பாடலோ ஏதாவது ஒரு சாலையோர சிறுவரோ அதை தகர்த்து விடுவார்கள்.  டி.வி.யில்  இப்போது ஓடிக்கொண்டிருக்கும் “உன்னப் போல ஆத்தா’ பாடலை முன்பு பஸ்ஸில் கேட்டு அழுதது இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.  அதோடு சேர்ந்து இந்த ஞாபகங்கள் இந்த நடு இரவில் வந்துவிட்டன. வயதாகி ஒண்டிக்கட்டையாக இருப்பவனுக்கு இதுபோன்ற நல்ல  நினைவுகளே துணை. ஏதோ சொல்லிவைத்தார்போல தேன்மொழியே போன் செய்தாள். இங்கே நள்ளிரவு என்றால் இப்பொழுது அங்கே பொழுது விடிந்திருக்கும். பொழுது விடிந்ததும் டிவி பார்க்க அமர்ந்து வீட்டாளா என்ன..

“என்னடா.. குரல் கம்மியிருக்கு.. ஏதாவது பாட்டு ஓடுதா”

சண்டாளி!

“போனவாரத்துல ஒரு நாள் கோயில்காளை விஜயகாந்த் பாட்டு கேட்டேன்.. நீ கேட்டிருந்தா என்ன சேஷ்டையா முகத்தை வச்சுப்பன்னு இவன் கிட்ட சொல்லி சிரிச்சுகிட்டிருந்தேன்”

எங்கள் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கூடத்தை சாப்பாட்டு நேரத்துக்கு முன்பும் பின்னும் கூட்டி பெருக்கும் வேலை எப்பொழுதும் எனக்குத்தான் ஒதுக்கப் படும். அவள் ஒருநாள் அமைப்பாளரிடம் நான் வேணுணா கூட்டித்தறேனே எனக்கும் சோறு தங்களேன் என்று கேட்டு வைத்தாள். அய்யோ அம்மா என பதறிப்போனார் அவர்.  கும்பிட்ட வேகத்தில் கரண்டி கீழே   விழுந்து விட்டது. நான்தான் போய் கழுவி எடுத்து வந்தேன். அன்று அவளது அம்மாவிடம் தர்மஅடி வாங்கிய போது அழுதபடி , ‘அந்த ரசம் நீ வைக்கிற சோத்தைவிட எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா.. பத்ரகாளி..’ என ஆக்ரோஷமாக பதிலுக்குத் தன் அம்மாவைத் திட்டினாள். அவள் குச்சியை கீழே வீசிவிட்டு் சிரிக்கத் துவங்கிவிட்டாள். அன்று இருந்த வெள்ளந்தித்தனத்தை இத்தனை வருடங்களாக கட்டிக் காப்பது தேன்மொழியினுடைய சாகஸம்.

“அந்தப் பாட்டெல்லாம் சலிச்சுப் போச்சுக்கா” என்றேன்

இப்போது நினைத்தாலும் நீர் தளும்பிவிடும்.

“விக்ரமனுக்கு ஒரு ஜாதகம் பொருந்தறமாதிரி இருக்குடா. ஆந்திரா பார்டர்ல ஒரு கிராமம். பேரு அட்ரஸ்லாம் அனுப்பறேன். கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணி முடிச்சுடலாம். நீதான் அந்தப் பக்கம் வேலை பார்த்திருக்க. ஒருவாட்டி பார்த்துட்டு வறியா…”

அந்தப் பக்கம் என்ன.. தமிழ்நாட்டின் நாலாபக்கத்திலும் வேலை பார்த்திருக்கிறேன். அதுக்காக இல்லாவிடினும் தோட்ட வேலைக்கு அனுப்பாமல் நகரத்திற்கு படிக்க அனுப்பிய அவளுடைய அம்மாவிற்காக  அலையலாம். நான் டவுனுக்கு படிக்க போறேன்னா தனியா அனுப்ப மாட்டாங்கடா.. உன்னையும் அனுப்புவாங்கன்னு சொன்ன இவளுக்காக கண்டிப்பாக அலையலாம்.

நான் அந்தப் பக்கம் போய் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கும். மணலியில் வேலை பார்த்த காலத்தில் சில நேரங்களில் டவரின் உச்சியில் நின்று  பார்க்கும் போது சுற்று வட்டாரங்களில் கிராமங்கள் இருப்பது தெரியும்.  ஆனால் மீண்டும் நேரில் போகும் நேரம் தேன்மொழியின் மகனுக்காக வாய்த்திருக்கிறது. இது இரண்டாம் முறை.

அந்தப் பக்கம் கடல் இந்தப் பக்கம் கோயில் நடுவில் நடுவினில் மண் ரோடு.  சமுத்திர ராஜன் ஈஸ்வரனை விழுந்து விழுந்து கும்பிட்டுக்கிட்டு இருக்கான் பாரு என்று ஒருமுறை எம்கே கூறினார். அப்போது  டவரின் உச்சியில் நின்று விளக்குகளுக்கான பராமரிப்பு வேலை செய்து  கொண்டிருந்தோம். அவர் சொல்லித்தான் பாபியின் வீட்டிற்கு அன்று சென்றிருந்தேன். பாபியின் அப்பா எம்கேயின் கீழே வேலை பார்ப்பவர். அவரிடமிருந்து ஒரு ஃபைல் வாங்கிவரச் சொல்லி என்னை அனுப்பியிருந்தார்.

நான் ஏதோ அலுவலக ஃபைல் என நினைத்திருந்தேன். தாமதமாகத்தான் கம்ப்யூட்டர் விஷயம் எனப் புரிந்தது. ஃப்ளாப்பி டிஸ்கில் காப்பி செய்துகொண்டிருந்தாள். கம்ப்யூட்டர் அலுவலக  புழக்கத்திற்கு வந்திருந்த காலம். ஆனால் இப்படி நகருக்கு வெளியே ஒரு வீட்டில் எதிர்பார்க்கவில்லை.

வீட்டில் ஃபோனும் இல்லை. இன்டர்நெட்டும் இல்லை. அருகில் இருக்கும் புரெளசிங் சென்டர் சென்று காப்பி செய்து வந்த ஃபைல்.  அது காப்பியாகாமல் அரைமணி நேரம் சோதித்தது. நானும் பொறுமையாக அமர்ந்திருந்தேன். டீ தருவார்கள் என நினைத்து ‘குடிக்க தண்ணி இருக்கா’ என்று கேட்டேன். ஒரு பாட்டிலில் கொண்டு வந்து தந்தார் அவள் அம்மா. ஊரில் நான் அனுபவித்த ஒன்றுதான். எவர் சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் டம்ளர் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இத்தகைய பாட்டில்கள்

ஃபைல் ஒரு வழியாக காப்பியானது.

‘டிஸ்க்கை பாக்கெட்ல வைக்காதீங்க அங்கிள். பையில வச்சுகங்க’ என்றாள்

ஆனால் அந்த ஃபைல் அலுவலக கணினியில் இட்டதும் தானாகவே டெலீட் ஆகிவிட்டது. அதில் வைரஸ் இருக்கு என்றார் எம்கே. அதைத் திருப்பித் தந்து வேறு ஒரு ஃபைல் அடுத்தநாள் எடுத்து வரச் சொன்னார். மூன்று நாள் இவ்வாறே போனது.

‘எங்க ஆஃபீஸ் லேந்து கம்ப்யூட்டர் மெக்கானிக்கை வந்து பார்க்க சொல்லவா.. அவன் ஆன்ட்டிவைரஸ் வச்சிருப்பான். கிளீன் பண்ணிடலாம்..” என்றேன் பாபியிடம்.

“அதுவும் ஒரு பைல்தான அங்கிள்.. இருந்துட்டுப் போகட்டுமே.. நான் சென்டர்லேந்து டவுன்லோடு பண்ணித் தறேன் வாங்க..” அவள் முகத்தில் சிரிப்பு.

நான் பார்த்ததை கவனித்ததும், “கம்ப்யூட்டர் சர்வீஸ் பண்றவர் மெக்கானிக் இல்லை அங்கிள்.. ஆனா அப்பா கூட அப்படித்தான் சொல்லுவார்..”

‘இண்டஸ்ட்ரி ஆளுக்கு எல்லாரும் மெக்கானிக்தான் ‘

புரெளசிங் சென்டரில் அவள் போய் அமர்ந்த கம்ப்யூட்டர் மற்ற அனைத்தையும் விட பளபளப்பாக இருந்தது. அங்கு இருந்த பையன் பாபிக்காகவே அதை ஒதுக்கியிருப்பதை தனது செய்கையால் வெளிப்படுத்தினான். எனக்கே புரிந்த ஒன்று அவளுக்குப் புரிந்ததாக தெரியவில்லை.

நான் மீண்டும் அலுவலகம் வந்து எம்கேயிடம் அதைக் கொடுத்தேன்.

” இந்த ஃபைலுக்கு நாலு நாள் அலைய விட்ருச்சே அந்தப் பொண்ணு.. கடைசீல சென்டர்ல போய்தான் வேலை முடிஞ்சது.  அப்புறம் எதுக்கு வீட்ல கம்ப்யூட்டர்.. இன்றைய தேதிக்கு வீட்டுக்கு இப்ப அது தேவையில்ல சார்.. ஐம்பதாயிரம் இருக்குமா.. அவர் சம்பளத்துக்கு பெரிய பணம் சார்.. வேஸ்ட்ல்ல..”

பிறகு எம்கே என்னிடம் அவர்கள் கதையை சொன்னார்.

பாபியின் அப்பாவிற்கு நடந்த ஒரு அவசர ஆபரேஷனுக்கு அவரது மைத்துனன் தான் ரத்தம் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஹெச் ஐ வி இருந்த விஷயம் அவனுக்கே தெரியாது.  அவனிடமிருந்து அவருக்கும் அவரிடமிருந்து அவர் மனைவிக்கும் தொற்றிவிட்டது.

‘எங்க ஹெச் ஆர் ரூல் படி அவருடைய மெடிக்கல் கண்டிஷனை நாங்க சொல்லியாகனும். அந்த ரிப்போர்ட்தான் இது..’

“அந்தப் பொண்ணு எப்பவோ சயின்டிஸ்ட் ஆகனும்னு சொல்லிச்சுன்னு லோன் போட்டு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்திருக்கார்… அதனால் ஏதும் யூஸ் இல்ல. அவருக்கும் தெரியும்..’

எனக்கு பாபியின் சிரிப்பு கண்முன் வந்து போனது. அதற்கு முன் மனதில் ஒரு அதிர்ச்சி உருவாகியிருந்தது. துழாவித் துழாவி யோசித்து, அவர்கள் வீட்டில் சென்று அமர்ந்திருந்த நேரங்களில் பாட்டில் தண்ணீர் தவிர வேறு ஏதும் அருந்தவில்லை என்று எண்ணிப் பார்த்து  ஆறுதல் கொண்டிருந்தேன்.

அதற்குப் பிறகு இன்னும் ஒரு வருடம் அஅடுத்த வேலை மாறும் வரை  அடிக்கடி ரிப்போர்ட் வாங்கப் போவது நான்தான். எவ்வளவுதான் அதுபற்றி படித்திருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ காபி கூட அருந்தவில்லை. கேட்டுவிடக்கூடாதே என்ற அச்சம் துவக்கத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் எப்போதும் போல புதிய வாட்டர் பாட்டிலை மட்டும் தருவார்கள்.    கடைசியாக ஒருநாள் ரிப்போர்ட் வாங்கப் போகும் போது நான் ஊர் மாறப் போவதைச் சொன்னேன். எப்படியும் ரெண்டு வருஷத்துல திரும்பி வருவேன் என்றேன். அவர் உடல் நலம் படிப்படியாக தளர்ந்து வந்தது. அவரது மனைவி இன்னும் ஒடுங்கிப் போயிருந்தார். நான் அதுபற்றி ஏதும் கேட்காததாலேயே எனக்கு அவர்களின் நோய் குறித்து தெரியும் என உணர்ந்திருந்தார்கள் என்றே தோன்றியது.

அதுவே கடைசி சந்திப்பு என எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. பாபி அப்போது ஒரு தட்டின் மீது வரட்டி போல ஒன்றை எடுத்து வந்தாள்.

‘நாயோ நரியோ தொரத்திருக்குமோ ஏதோ.. வுட்டுட்டுப் போச்சுப்பா’  என்றாள். துள்ளிக்குதித்துக் கொண்டு  குதூகலமாக இருந்தாள். அதில் ஒரு முட்டை இருந்தது.

பிளெமிங்கோ முட்டைப்பா. எத்தனையோ வாட்டி கழுத்தை ஆட்டி ஆட்டி பார்க்கும். ஓடும். ஆனால் கூடு இப்பத்தான் தானா கிடைச்சது.. பாவம் என்ன ஆச்சோ ஓடிருச்சுங்க..

போன வேகத்தில் ஸ்டூல்போட்டு ஏறி கம்ப்யூட்டர் அட்டை பெட்டியை இறக்கினாள். வெளியிலிருந்து மண் அள்ளி வந்தாள்.  பெட்டிக்குள் இருந்த தெர்மோகோலை தூசு தட்டினாள். கம்ப்யூட்டர் கேபினெட்டிலிருந்து் ஃபேனை கழட்டினாள். ஒரு பல்பை எடுத்து அதன் மேலே வைத்து முட்டையை  உள்ளே வைத்தாள்.

‘பொரிக்குதான்னு பார்ப்போம்.. கடையில போய் இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கனும்..”

நடந்து வரும்போது, ‘ நீங்க அடுத்த வாட்டி வரும்போது நான் காலேஜ் போயிருப்பேன் அங்கிள்.. எம் கே சார்ட்ட நம்பர் தந்துட்டுப் போறேன்.’  என்றாள்

அன்றும் பிரெளசிங் சென்டரில்தான் பிரிண்ட் அவுட் எடுத்தோம். கடைசிவரை கம்ப்யூட்டரில் வைரஸை அவள் க்ளீன் பண்ணவே இல்லை.

நான் வேலைக்கு மாறிப்போன இடத்திலிருந்து வேறு எங்கெங்கோ போனேன். அதன்பிறகு இன்றுதான் இந்தப்பக்கம் வருகிறேன்.

“விக்ரமனுக்கு முப்பதுக்கு மேல வயசாகுது. சின்னப் பையன் மாதிரி நடந்துகறான். மனசுல இன்னும் தானொரு சின்னப்பையன் தான்னு நினைச்சுகிட்டு இருக்கான் போலிருக்கு. அசட்டுத் தனமா பேசறான். ஏதோ இவ சொன்னதால பொண்ணு பார்க்க வறான். எல்லாம் சரின்னா நாங்களும் வந்துருவோம். அவங்க ஏதும் போட மாட்டாங்கன்னு தோணுது. நாமளே எல்லாம் பண்ணிடலாம்..  மாமனா முன்னாடி நின்னு எல்லாத்தையும் பண்ணி வைடா” என்று தேன்மொழி சொல்லியிருந்தாள்

ஆனால் விக்ரமனுக்கு நான் அவர்கள் வீட்டு முன்னாள் வேலைக்காரன்தான் என்பது தெரிந்திருந்தது. ஸ்டேஷனுக்கு வெளியே  அடையாளம் தெரியாமல் தேடிப் பார்க்கும் போதே ஒரு கையில் சிகரெட்டுடன் கையசைத்தான்.

“வீக்யெண்ட்ல ஏதாவது ஹில்லுல ட்ரெக்கிங் போகணும் அங்கிள். இந்தியா முழுக்கப் போயிட்டேன். ஒரு ஊரிலேயே ஒரு மாசத்துக்கு மேல இருக்கப் பிடிக்கல.. இதில் ஒரு பொண்ணோட எப்படி இருக்கிறது?” என்றுதான் சொன்னான் முதலில் போனில் அழைத்தபோது எடுத்த எடுப்பிலேயே.

“அம்மா இஸ் எ நியூசென்ஸ் அங்கிள்.. நெய்ப்பந்தம் பிடிக்க பேரன் வேணுங்கிறாங்க.. அக்காகிட்ட சொல்லி அவளையே இன்னொரு குழந்தை பெத்துக்க சொல்லவேண்டியது தான..”

ஓட்டுநரிடம் காரை ஓரம் கட்டச் சொல்லி சிறுநீருக்கு ஒதுங்கினேன். விக்ரமன் கூலர்ஸை சட்டையில் மாட்டிக்கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“நைஸ் பேர்ட்ஸ்” என்றான்

அது ப்ளெமிங்கோ.

ஓ..

அது ஒரு பறவையோடதான் கூட்டு சேரும். வருஷத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அதோட முட்டை போடும் கூட்டை பார்த்துதான் மனுஷன் தட்டு கண்டுபுடிச்சான்னு  சொல்றாங்க.

அவனிடம் ஏன் அதை கூறினோம் எனத் தோன்றியது. அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆர்வம் இருப்பது போல தெரியவில்லை.  ஏதோ அவள் சொன்னதற்காக போய் வருவோம் என்றுதான் தோன்றியது.

அதற்குள் அவன் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தான்

பெண்ணின் வீடு, வாசலில் வேலி உள்ளே திண்ணை என காலத்தை தாண்டி நின்று கொண்டிருந்தது.

சம்பிரதாயங்கள் முடிந்து பேச்சு வார்த்தை ஆரம்பமானது

பெண்ணின் அப்பா, ‘தம்பி முப்பது வயசு மாதிரி இல்லை. ரொம்ப குண்டா இருக்காரு’ என்றார்.

‘அவன் மாசம் ஒரு ட்ரிப்புனு போய் மலை ஏறிட்டு வருவான். அவனைப்போய் குண்டுங்கிறீங்க..’ என்றேன்

‘அப்படியா.. அம்மா, இப்ப பொண்ணுக்கு ஒத்தாசையா கூட ஃபாரின்ல இருக்காங்க.. அவரே தனியா இருக்காரு.. கண்டதை சாப்புடனும் இல்லையா.. வெயிட் போட்டு ஒரு மாதிரி தாங்கி நடக்கிறாரே.. அதான் கேட்டேன்..”

எனக்கு அந்த தொனி வித்தியாசமாகப் பட்டது. சில நேரத்திலேயே அனைத்தும் பிடிபட்டது. வீட்டின் நடுவே மித்தம் இருந்தது. அதற்கு அந்தப் பக்கம் இடிந்து  சாய்ந்திருந்தது. பின்கட்டுக்கு போக வீட்டைச் சுற்றித்தான் போகவேண்டும். வில்லங்கத்தில் இருக்கும் வீடு. மகளின் சம்பளம் மட்டும்தான் ஆதாரம்.  அதனால் அவர் பிடிகொடுக்கவும் இல்லை. இவனுக்கும் வேணாம் அவங்களுக்கும் வேணாம் அப்புறம் இது என்ன நாடக ஒத்திகை என சலிப்பு உண்டானது.. ஆனால் அனைத்தும் அந்தப் பெண்ணிற்கு தெரிந்திருக்கிறது என்பது அவளது முகத்தில் தெரிந்தது. எல்லாம் புரிந்த ஒரு தெளிவு. அவளை தேன்மொழிக்கும் பிடிக்கும் என நினைத்துக் கொண்டேன். இவர்கள் இருவருக்காகவாவது இது அமைய வேண்டும்.

“ஹாக்கி விளையாடற பையன்ங்க ஏன் தாங்கி நடக்கப் போறான்.. ஊருக்குப் போன அக்கா சீக்கிரம் வந்துருவாங்க.. அப்புறம் ஏன் வெளியில் சாப்பிட போறாரு”

விக்ரமன் ஏதும் புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தான்

“ஆமாமாம்.. அவங்க முன்னாடியே பேசினாங்க.. தம்பின்னா நீங்க அவங்களுக்குத் தூரத்து சொந்தமா..”

இப்பொழுது சரியாகத்தான் தொட்டிருக்கிறார். இனி நான் அவருக்கு இணையாக பேச முடியாது.

“அவங்கம்மாவும் எங்கம்மாவும் சின்ன வயசுலேந்து சிநேகிதிங்க.. அப்படித்தான்..”

“அது சரி..  அந்த காலத்துலயே வீடு உள்ள வரை விடுவாங்க போலிருக்கு.. நாங்கல்லாம் திண்ணை வரைதான்..”

“பேசறத வேடிக்கை பார்க்குறதில சலிப்பே வரது இல்ல.. போய் இன்னொரு காப்பி போட்டு குடுடி” என்று மனைவியை ஏவினார்..

‘போன் பேசிட்டு வந்துடறேன் ‘ என நான் மெல்ல எழுந்து வேலி பக்கம் வந்து நின்றேன்.

அப்போது தேன்மொழியிடமிருந்து போன் வந்தது

“எப்படிடா போகுது..? என்ன சொல்றாங்க “

சொன்னேன்.

“அவர் யோசிக்கிறார்னா, நம்பிக்கையா பேசி கொஞ்சம் விட்டு கொடுத்து பேசி்முடிச்சு வைடா.. நாளாகி நாளாகி இதுதான் அமைஞ்சதுடா.. நான் எப்படியும் கொஞ்சநாள்ல போயிடுவேன்..  பொரி போடப் பிள்ள இருந்தும்  இல்லாம அம்மா போனா..  புள்ள இருந்தும் நெய்ப்பந்தம் பிடிக்க பேரன் இல்லாம அக்காவை போக விட்றாதடா..” அவள் குரல் உடையத் துவங்கியது

எனக்கு உணர்ச்சிவசப்பட பெரிய காரணங்கள் ஏதும் தேவையில்லை.  ஆனால் நான் அதை மறைத்துக் கொள்ள முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் முகம் இன்னமும் விகாரமாகிவிட்டிருக்கும்.

நான் பிறந்த போது என் அம்மாவுக்கு காசநோய் முற்றியிருந்தது.  நான் பிறந்ததும் தேன்மொழியின் அம்மா என்னைப் பிரித்து தனியே வைத்தாள். பின் தன் வீட்டுக்கு கொண்டு வந்தாள். டேபிள் லேம்ப் கீழே வைத்து பாலாடையில் பால் புகட்டினாள். அம்மாவை எரித்த போது என்னைத் தூளியில் போட்டு தேன்மொழி ஆட்டிக்கொண்டிருந்தாள்..

யாரோ வரும் அரவம். நான் சமாளித்துக் கொண்டு திரும்பி் நின்று கொண்டேன்

அந்தப் பெண் காபி எடுத்துக் கொண்டு வந்தாள்.

இது மூணாவது அங்கிள். ஒரு பாவ்லா. அம்மா வாயில்லாத பூச்சி. அப்பாவுக்கு பயம்தான். அதை இப்படித்தான் காட்டுவாரு. பாவம் அங்கிள் அவரு. தானா சரியாகிடும். வேற எதுவும் இப்ப நடக்காது அங்கிள். அவங்ககிட்டயும் சொல்லிடுங்க..

எனக்கு ஒரு கணம் பாபி முகம் நினைவுக்கு வந்தது. அந்த முட்டையும் நிச்சயம் பொரிந்திருக்கும்.

நான் மேலும் உணர்ச்சிவசப்படுவதை  மறைத்துக் கொள்ள அண்ணாந்து பார்த்தேன். மீண்டும் ஏதோ அரவம்.

நான் மேலே பார்ப்பதை பார்த்து,

“அது ப்ளெமிங்கோ அங்கிள்.. பின்னாடிப் பக்கம் இருக்கு ” என்றாள். திரும்பிப் பார்க்கையில் அது எழும்பி எங்கள் தலைக்கு மேல் பறந்தது

“ஆமாம். இதோட நாலு கண்ணுல பட்டுடிச்சி” என்றேன்.

***

-காளிப்ரஸாத்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *