நுண்ணுணர்வுகளின் வழியே தான் கவிதைகள் பிரபஞ்ச வடிவம் பெறுகின்றன. அது
செயல்வடிவமாகவோ தூண்டல் வடிவமாகவோ புத்துணர்ச்சி வடிவமாக நுண்ணுணர்வுகளின்
கூட்டாக மிக குறுகிய எழுத்துருவங்களுக்குள் எல்லைகளை வரைமுறைகளை மீறுவன. அது
அசலான பாடுபொருளின் மாயத்தன்மையை நிராகரிக்கவோ அல்லது மாயப்பொருளின் கலை
வடிவத்தில் ஒரு உண்மையை சொல்வதாக கூட இருக்கலாம். கவிஞர் சேரனின் அஞர் கவிதை
தொகுதியை சுய பிரதிபலிப்பு ( self-reflexive ) கொண்ட கவிதைகளின் தொகுப்பாக சொல்ல
முடியும். அதாவது கவிதை பொருள் சார்ந்து கேள்விகளை நியாயங்களை அதுவாகவே
முன்வைக்கும். அதனாலயே பின் நவீனத்துவ கவிதைகள் அதன் பொருள் மறைவை அல்லது
திரிவை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதோடு மிகுதியையும் சூறையாடுவன. அண்டி வார்ஹோலின்
மர்லின் மன்றோவிலோ கெதி ஏக்கரின் மீளெழுத்தான கர்வான்டஸ் டொன் குயிசோட் இலோ
இந்த புதிய போக்கை குறிப்பாக சிறிய துணுக்குகளாக பழைய வடிவங்களை பாவிக்கும் அல்லது
மீளுற்பத்தி செய்யும் போக்கை கவனிக்கலாம்.
“இந்த அறைக்கு எதிர் அறையில்தான்
ஸான்ட்ராவை வைத்திருந்தோம்
மீசை விறைக்கும் உறைபனி
அவ்வப்போது வரும்
காலைச் சூரியன் ஒளி
படர்ந்து அறைக்குள் விரியட்டும்
எனப் பெரிய கண்ணாடி யன்னல்கள்
அவற்றில் எல்லோருடைய பெருமூச்சுக்களும்
மோதி உருவழிகின்றன
எஞ்சி இருப்பவை அதிக நாட்கள் அல்ல
எனத் தெரிந்ததும்
இப்படி அழகான அறைகளுக்கு மாற்றி விடுவார்கள்
மருத்துவம் கிடையாது
பெருவலி நீக்கியாக ஹைட்ரோமோர்ஃபோன்.
அது எழுப்பும் விசித்திரக் கனவுகளுக்கும்
அதிசயக் குழப்பங்களுக்கும்
எல்லைகள் கிடையா” (கவிஞன் இருந்த அறை)
சேரனின் காட்சிமொழி ஒரு தொடர்ச்சியான ஆனால் அழுத்தமான விவரிப்புகளுடன் இயங்குவன.
அது பாடுபொருளை இன்னொரு தளத்திற்கு அல்லது வேறு பரிமாணத்தில் உணரவைப்பன.
கவிதைகளின் தலைப்பு முதற்கொண்டு அதன் முடிபு பகுதி வரை கவிதை மையத்தின் நகர்வை
சேரன் தேர்ந்த கவிஞனுக்குரிய ஆற்றலோடு கையாளுகிறார். அதுவே கவிதைகளுக்கு
அழுத்தமொன்றை, உணர்வொழுங்கின் பாய்ச்சலொன்றை வாசிக்கிறபோது வாசகனுக்கு
கடத்துகிறது. சேரன் தொடர்ச்சியாக யதார்த்தத்தின் மாயையை உடைக்கிறார் அல்லது பாரம்பரிய
இலக்கிய குறியீடுகளிலிருந்து மாட்டேற்று சட்டமொன்றை தான் இயங்கும் தளத்திற்கு வெளியே
காண நினைக்கிறார். பிற்பட்ட அறுபதுகளிலும் எழுபதுகளிலும் hypertext புனைவுகளை
முறையான பரிசோதனைகளின் வழியே மரபு சார்ந்து ஆதிக்கப்படுத்துகிற சூழலொன்று
உலகளாவிய ரீதியில் தோன்றியது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளை மென்மேலும் வன்முறை
நெருக்கடிகளுக்குள் தள்ளிய அறிவுசார், உளவியல், தார்மீக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு
முகங்கொடுக்கும் போது, நவீனத்துவம் கற்பனையை ஒத்திசைவுக்கான தரகுத்தளமாக
உயர்த்தியது. இந்த மாற்றம் ஈழத்துக் கவிதைகளிலும் ஆங்காங்கே தென்பட்டது உண்மை.
“வைகறை நிலவு வாசலில் விழுந்தது
இலைகளுக் கூடே நிலவு வழிந்தது
நிலவுத் துளிகள் நெளிந்தன மண்ணில்
வைகறை நிலவு .
மணக்கும் பூக்கள் …
பனிக்குளிர் சுமந்து பரவும் காற்று ..
அமைதி அழகை அணைத்துப் புணர்ந்தது.” என நுஃமானின் கவிதைகளும்
“தூண்டில் இரையோடு
ஆழஆழ உள்ளிறங்கும் மீனென மனம்
ஓர் உந்தல்
மனம் வெளியே தூக்கியெறியப் பட்டதா?
மனம் வாழ்ந்த துளிப் பொட்டலில்
சமுத்திரத்தின் பேர் நுழைவு.
அங்கிருந்து மேலெழுந்த வெண்குமிழாய்
எழுங்கதிரை விழுங்கிய நான் –
பிரபஞ்ச உள் விரிவு. “என மு.பொவின் கவிதைகளும்
” எறிந்து அலை கழுவும் கடல் முற்றத்தில்
எழுந்து நின்றது ஓர் சிவனின் கோவில்
முழுநிலவு பூத்திருக்கும் வேளை தோறும்
அடித்தலைகள் அரித்துவரும் அத்திவாரம்! ” என தா.ராமலிங்கத்தின் கவிதைகளும்
“பகலின் நலிவு இருளின் வலிவு.
இன்னும் ஒருமுறை இரவு வெல்லும்.
ஓங்கும் மரங்கள், இலைகளில் இரவு
காயத், தீய்ந்து கரியாய் மாறும்.
நெடிய தென்னை தலையை விரிக்கப்
பேய்கள் அஞ்சி ஒடுங்கி நிற்பன.
சின்ன வண்டுகள் சில்லென அலறத்
தவளைகள் மேனி நடுக்கங் கேட்கும்.
வான வெளியில் நிலவு தடுக்கி
மேகக் குளத்தில் வீழ்ந்து மூழ்கும்.
இருளோ இன்னும் இன்னுஞ் சூழும்.”என சி.சிவசேகரத்தின் கவிதைகளும் அந்த மரபிலுண்டான
தாக்கத்தை பறைசாற்றின. அதற்கு பின்னராக சேரனின் கவிதைகள் எவ்வாறு உருவழிப்பு மற்றும்
மீளுருவாக்கம் மூலம் சுருக்கமான வழிமுறை ஒன்றை வரைவது பற்றி சிந்தித்தன. நம்மையும் நம்
நிலைமைகளையும் துல்லியமாக புரிந்து கொள்கிற செயல் சார்ந்த மதிப்பீடுகளை பொறுப்போடு
உணர்வுறுத்தி கடமைகளை வரையறுக்க கட்டாயப்படுத்தின.
” போர் நிலத்தில் அப்பாவைப் புதைத்தார்கள்
அவரை எரித்திருக்க வேண்டும்
அவர் புதைந்த இடத்தில் ஒரு நடுகல்
பிறகு அதுவும் இல்லை
அம்மா பெட்டியுள் வீடு திரும்பினாள்
முகத்தைப் பார்க்க முடியவில்லை
இடது கால் மட்டும்தான் பெட்டியுள் இருந்தது
அதுவே அற்புதம் என்று மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள்
அவர்களுடன்
கண்ணீரை இரவல் பெற்றுக் கதை எழுதியவர்களும்
ஒரு மாயப் பிசாசும்
நடுவில் அமர்கின்றன
துயரைக் கரைக்க முடியாமல்
காலம் தவிக்கிறது.”( மாயப்பிசாசு )
இக்கவிதைகள் உணர்வொழுங்கில் வழிகிற அதே நேரம் தர்க்க கூறுகளை நியாயங்களோடு
போர்க்கால துயரை மீளுருவாக்கம் செய்கின்றன. சேரனின் கவிதைகள் சைக்கிளைக்கூட
வித்தியாசமாக நோக்கும். இரவு ஒழுங்கைகளில் அழகியலைத் தேடும். வெறுமனே
ரொமான்டிஸைஸ் பண்ணாமல் குறிப்பை படிப்படியான நெகிழ்வோடு அல்லது துண்டாடிய
பாடுபொருளின் மிகுதியை துவக்கும் காரணத்தோடு அவை வந்து விழும். பொருள் சீரற்ற தன்மை
போல தற்காலிக பாயத்தை ( temporal flux ) போல வருகிற கவிதைகள் கூட தார்மீக உளவியலோடு
மெட்டாபிசிகல் ஐயத்தை ஏற்படுத்துவன. அம்மாவை குறித்த கவிதையில் அம்மாவின் நிழலை
அப்படித்தான் அனுகுகிறார். பெயர் தெரியாத மரத்தினடியில் நண்பனை கொன்றவர்களை
அப்படித்தான் அவர் பேசுகிறார். சேரனின் சமூக வாஞ்சை, அரசியல் விமர்சனம் தெள்ளத்தெளிவானது. எந்த பூடகங்களையும் அஞ்சுதலையும் கொண்டிருக்கா. சமூகம் தொடர்பில் அவர் கொண்ட தத்துவம் கவிதையாக மாறும் புள்ளியை ஊன்றும். எந்த விலகலையும் அந்நியத்தையும்
அவை ஊடாட்டா. ரோஹிங்யாவுக்கும் எமக்கும், அந்த இடம் எனக்குத் தெரியும், படத்திலுள்ள
சிறுவர் பெண்கள் ஆண்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சித்தமிழ் விசுவாசியின் ஆனந்த கண்ணீர்,
காவல் முகாம் என வரிசையாக அரசியலை ஈழத்து போர் ச்சூழலில் சிதைந்த உண்மையின்
சொற்களை சேரன் பேசுகிறார். உண்மையில் போருக்கு பின்னரான கவிதைகள் நவீனத்துவ
பெறுமானத்தோடு அதில் உள்ளார எஞ்சியிருக்கும் ரொமான்டிக்சத்தை பலவாறாக வெளிப்படுத்துவன.
“அடுத்தடுத்து மூன்று தெரு விளக்குகளைக் கடந்து செல்ல வேண்டும்
அதுவரையும் இருள்தான்.
அதற்கு அப்பால் தெரு மூன்று கிளைகளாகப் பிரிகிறது
ஒரு தெருவைச் சூனாவெட்டித் தெரு என்கிறார்கள்
இன்னொன்றின் பெயர் மார்கழிப் புட்டம். அடுத்த தெரு
உனை நீ புணரி.
பொங்கும் மென்மலை உன் மார்பு என்பது
கிழக்கே போகும் தெரு. அதனைத் தொடர்வது
அவன் குறி ஓடும் தெரு.
ஊர்த்தெருக்கள் இயற்கையின் பெயர் சூடிய காலம் ஒன்றிருந்தது
வரலாற்றை வங்கிகளும்
அரசியல் சிறுக்கரும் திருடிவிட்ட பிற்பாடு
மிஞ்சியவை இவைதான்.
நிலமும் இல்லை
நிலக்காட்சியையும் பகட்டு மனிதர்
துடைத்தழிக்கும் காலத்தில்
நான்
ஒரு காலிழந்த சிட்டுக் குருவி
வேரில் பழுக்காத பலா.”( பெயர்)
இந்த கவிதையில் காமங்குறித்த சொல்லாடலில் intertextuality போல அரசியலும் பின்வரும். இது
தான் சேரன் கைக்கொள்கிற உத்தி. தமிழ் பரப்பில் சேரன் கவிதைகளின் வீச்சம் இது போலவும் சில
வெளிப்படையான ஜனரஞ்சகத்தையும் ஒருங்கே நிரப்பி விடுவன. விரிவான பார்வையை அல்லது கோணங்களை நகர்த்தி உணர்திறனை கட்டமைப்பு சார்ந்து ஏற்படுத்துவன. கவிதைகளில் துவித
குறியீடுகளை இருமையை சேரன் அடிக்கடி லாவகமாக உபயோகப்படுத்துகிறார். தோழர்
நிக்கொலாய் புக்காரினுக்கு என்ற கவிதையில் இரண்டு குறிப்போடு அதை நிறைவுக்கு கொண்டு
வருகிறார். சோஷலிசத்தோடு லரீனா எனும் பெண்ணையும் புக்காரினுக்கு நேசிக்க சொல்வதாக
உரையாடல் அல்லது கடிதப்பாணியிலான கவிதை துவித குறியீடொன்றை ( dual code )
சமாந்தரமாக சமநிலைப்படுத்தியிருக்கும். அஞர் கவிதை தொகுப்பாக கலவையான
உணர்வொழுங்கை நிரப்புகிறது. காதலை கழிவிரக்கத்தை தாய்மையை நட்பை பொருண்மையை
விடுதலையை ஆழமாக பேசுகின்ற தொகுப்பாக இருக்கும்.
“பொன்மீன் உருகி அழும் சிறு வெளியில்
காற்றுக் குமிழிகள், நீர்த் தாமரை, சிப்பி, சங்கு, சோகி,
நுனியில் வளையும் மெல்லிதழ்க் கடற்சாதாழை, கடற்குதிரை
எல்லாம் அசையும்
மகளின் ஏழு கைப்பிடி நீருலகம்.
பள்ளி செல்ல முன்பு கண் இமைக்காமல்
கொஞ்ச நேரம் அதைப் பார்க்கிறாள்
அக்கணம்
வியப்பிசைக்குறியின் முன்மாதிரி அவள்
கடற்குதிரை இரண்டாயிரம் குட்டிகளைப்
பெற்றுத் தள்ளுகிறது
அதன் உடலின் அதிர்வுக்கு
எந்தப் புவி அதிர்வும் ஈடில்லை
மூலையில் பதுங்கிய பொன்மீனின் வால்
விசித்திர நர்த்தனம் புரிகிறது
மாலையில் திரும்பி வருகிறாள்
தனது சாவிற்கு இரண்டு மணித்துளிவரையும்
பொன்மீன் சிறகடிப்பதைப் பார்க்கிறோம்.
நீரில் நனைந்த வண்ணத்துப் பூச்சியின் இறகு மாதிரி
மிதக்கிறது பொன்மீன்
கார், கூதிர், பனி, இளவேனில் என
எல்லாக் காலங்களையும் தனது இலைகளால்
வரைந்து காட்டும் தெருவோரத்து ஒற்றை மரம்போல
ஆயிரம் படுகொலைகளின் கனம்
ஒரேயொரு சாவிலேயே அவளுக்கு.” (பொன் மீன்)
மகளின் வளர்ப்பு மீன் பற்றி உணர்வின் நூல் போல கோர்த்த எல்லாக் குறியீடுகளும் ஒரு மீனின்
இறப்பை அதன் ஒட்டு மொத்த துயரத்தோடும் விவரிப்புகளோடும் வந்து திரியும். பிரமையை
கொண்டு வருகிற கவிதைகளில் அதற்கு ஏற்ற காட்சியை தொடர்புறும் தன்மையை ஏற்கனவே
சொல்லப்படாத வழியொன்றோடு முன்னிறுத்துவது புதிதாக இருக்கிறது. ஏழு கைப்பிடி நீருலகம்,
குரலற்று போன கிணறு, அது தான் வழி, ஒரு சிங்கள எழுத்து என வார்த்தைக்குள் கவிதையின் உரு
இன்னொரு பரிமாணத்திற்கு விரிகிற உபாயம் முக்கியமானது. அவை உணர்த்த விழையும் ஆழம்
மிகுந்த மெனக்கெடலோடு ஒரு கவிதைக்கு ஒரு வார்த்தை விழுந்தாலே போதுமென சொல்லும்.
நல்லூர், அஞ்சலி, புதைகுழி மற்றும் நிலையென குறுங்கவிதைகள் சில நினைவுகளின் பாதீடென
குழந்தைக்கு மென்று கொடுக்கும் தாயைப்போல சிலசமயம் பொடிமருந்தை தேனோடு திணிக்கும்
பரிசாரி போல பேசுவன. சேரனின் கவிதைகள் சூழலை, வாழும் மக்களை, போரை
அதையொட்டிய பண்பாட்டுச்சிதைவை நின்று நிதானிப்பன. போரின் வாழ்வியலை போருக்கு
பின்னரான மனநிலையோடு பேச விழைவது மிகுந்த உணர்திறனுள்ள கடப்பாடு. அதை சரிவர
தனது பத்தாவது தொகுதியில் பதிவு செய்துவிட்டாரென தோன்றுகிறது.
-சப்னாஸ் ஹாசிம்
அண்மையில் கவிதைபற்றி வாசித்த ஆரோக்கியமான விவாதங்களை தூண்டும் நல்ல பதிவு
வாழ்த்துக்கள் சேரன். அண்மையில் உங்கள் கவிதைபற்றி வாசித்த ஆரோக்கியமான விவாதங்களை தூண்டும் நல்ல பதிவு