“ரொம்ப வலிக்குதா, கண்ணு?” ரோஹித்தை கேட்டார் தேவி. முன்தினம் பேரன் அடிபட்டுக்கொண்டதை கேள்விப்பட்டு பார்க்க வந்திருந்தார்.
“இப்ப இல்ல, பாட்டி. மொதல்ல வலிச்சிச்சு. சித்தி மெதுமெதுவா தடவிக்குடுத்தாங்களா, அதுலயே வலி போயிடிச்சு.”
“ஆமாமா. விழறதுலயும் அதுக்கு வைத்தியத்துலயும் அவள மிஞ்ச யார் இருக்கா?”
“அப்படியா? சித்தி விழுவாங்களா?”
“விதவிதமா விழுவா. காலேஜ் படிக்கும்போது பரீட்சைக்கு மொத நாள் மாடிப்படில விழுந்து கால் நல்லா வீங்கி நடக்கவே முடியல.”
“ஐயோ! அப்பறம்?”
“டாக்டர் கிட்ட போயி நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் ஆனா நான் நாளைக்கு நடக்கணும்ன்னு சொன்னா. அவரு ஒரு மருந்தை பஞ்சுல முக்கி வீக்கத்துல ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை போட சொன்னாரு. உங்கம்மாதான் ராத்ரியெல்லாம் கண்ணு முழுச்சு போட்டுவிட்டா.”
“அப்பல்லாம் அம்மாவும் பெரியம்மாவும் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா, பாட்டி?” சின்ன பேரன் ரஞ்சித் கேட்டான்.
“என்ன சொன்ன?”
“இல்ல… இப்ப பேசிக்கவேமாட்டேன்றாங்க! அதான்…”
“ஆமா, பாட்டி. இப்பல்லாம் ரெண்டு பேரும் சண்டதான போடறாங்க. எங்களையும் சேந்து விளையாட விடறதில்ல” ரோஹித்தும் சேர்ந்துகொண்டான்.
தேவி நொந்து போனார். சே! என்ன பொண்ணுங்க இவங்க! எவ்வளவு ஒத்துமையா இருந்தவங்க? பாத்தவங்க எல்லாரும் ஆச்சரியப்படும்படியில்ல இருந்தாங்க? அக்கா தங்கச்சின்னா தேவி பொண்ணுங்க மாதிரி இருக்கணும்ன்னு சொல்வாங்களே! ஹ்ம்… யாரு கண்ணு பட்டுச்சோ எலியும் பூனையுமா ஆயிட்டாங்களே! பசங்க பேசற அளவுக்கு வந்துட்டாங்களே! கவிதா ட்ரெயினிங் முடிச்சு வரட்டும்! இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேணும்!
மூத்த மகள் கவிதாவை கணேஷுக்கு திருமணம் செய்திருந்தார்கள். பிரசவத்திற்கு பிறந்தவீட்டிற்கு வந்தபோது கவிதாவிற்குதான் அந்த எண்ணம் முதலில் தோன்றியது, தங்கை சவிதாவை கணேஷின் தம்பி சதீஷிற்கு திருமணம் செய்யலாமே என்று. பிறப்பதற்கு முன்னாலேயே அக்காவின் குழந்தையை உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த சவிதா குழந்தையுடனேயே இருக்கலாமே என்றுதான் அதற்கு சம்மதித்தாள். இரு குடும்பத்திற்கும் மிகுந்த நிறைவுடன் திருமணம் நடந்தேறியது.
கவிதா பேறுகால விடுப்பு முடிந்து அலுவலகம் சென்றபோது சவிதா முழுநேரம் ரோஹித்தின் தாயானாள். அவள் பிரசவத்திற்காக தாய்வீடு சென்றபோது குழந்தை சித்திக்காக ஏங்கி இளைத்தே போனான்! ரஞ்சித்தோடு அவள் திரும்பியபோது அவர்கள் மூவரும் ஒரு தனி உலகம் படைத்துக் கொண்டார்கள்.
கவிதாவிற்கு பிள்ளை வளர்ப்பதை பற்றிய கவலையில்லை என்பதில் அலுவலகத்தில் கொஞ்சம் பொறாமையே கூட உண்டு. ஒருநாள் அவள் தோழி நளினி கேட்டாள் “இப்பவும் உன் பிள்ளைய உன் தங்கச்சிதான் பாத்துக்கறாளா?”
“ஆமா, அவளும் பசங்களும் ஒரு தனி உலகம்.”
“எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இரு. என்ன இருந்தாலும் அவளுக்குன்னு ஒரு பிள்ளை வந்தப்பறம் முன்ன மாதிரியே உன் பிள்ளைய பாப்பாளான்றது சந்தேகம்தான்.”
சேச்சே! என்ன பேசறா இவ? சவிதாவை பத்தி இவளுக்கு சரியா தெரியல.
அன்று மாலை தலைவலித்ததால் சற்று முன்னதாக அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டாள். வீட்டில் நுழைந்தவுடன் “என்ன கவி, சீக்கிரம் வந்துட்ட? ஒடம்பு முடியலியா?” என்றாள் சவிதா.
“ஆமா, கொஞ்சம் தலைவலிக்குது.”
“ரெண்டு நிமிஷம் இரு, இவன் பால் குடிச்சு முடிச்சதும் ஒனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி தரேன்.”
“மெதுவா வா. அவசரமில்ல. ரோஹித் எங்க?”
“அவன் ஸ்கூலேர்ந்து வந்தவுடனே டிவிதான். இதோ, பலகாரம் எடுத்துவெச்சத கூட சாப்பிடல. இவனுக்கு முடிச்சிட்டு அவன இழுத்துட்டு வரணும்.”
ஸ்கூல்லேருந்து குழந்தை வந்து அரைமணிக்கு மேல் ஆயிருக்குமே! இன்னும் ஒண்ணும் சாப்பிடலையா? நளினி சொன்னது சரிதானோ?
“ஏண்டி, டிவி பாக்கறான்னு அப்படியே விட்டுருவியா? பசிக்காது அவனுக்கு?” என்று சிடுசிடுத்தபடி அவனை அழைக்கப்போனாள் கவிதா. தூங்கிவிட்ட குழந்தையை தொட்டிலில் இட்டுவிட்டு சவிதா காபியுடன் வந்தபோது கவிதா ரோஹித்தை தரதரவென்று இழுத்து வந்தாள்.
“என்னாச்சு, கவி? விடு அவன. இந்தா, தலைவலினேல்ல மொதல்ல காபிய குடி. நீ வா, செல்லம்.”
“செல்லமாவது வெல்லமாவது! ஸ்கூல்லேர்ந்து வந்த பிள்ள பட்டினியா கெடக்கு, நீ நிதானமா கொஞ்சிட்டிருக்க! ஏண்டா, அவங்கவங்களுக்கு ஆயிரம் வேல இருக்கும். ஒனக்கா திங்கத் தெரியாது? இப்படித்தான் தெனமும் கெடக்கறியா?”
சவிதா கண்களில் நீருடன் திகைக்க, சாரதா “என்னம்மா? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்தற?” என்றார். “ஆமா அத்தை, வீட்டுல உங்க கூடவே இருந்து குழையறால்ல, நீங்க அவ பக்கம்தான் பேசுவீங்க” என்றவள் ரோஹித்தை உலுக்கி “தின்னு தொலையேண்டா, சனியனே!” என்றாள். சவிதா ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
பக்கத்து வீட்டு அக்கா காலைல சொன்னது சரிதானோ? நீ என்னதான் பாலும் தேனுமா குடுத்து வளத்தாலும் உங்கக்கா மனசுல அவ பிள்ளையவிட ஒனக்கு உன் பிள்ளதான் ஒசத்தின்னு எண்ணம் வரும்ன்னு சொன்னாங்களே! அக்காவ பத்தி இவளுக்கு என்ன தெரியும்னு நெனச்சேனே! அது தப்போ?
மறுமுறை கவிதா இதே ரீதியில் பேசியபோது “கொஞ்சம் நிறுத்துறியா?” என்றாள் சவிதா. “ஒனக்கு என்பேர்ல அவ்வளவு சந்தேகம்னா ஏன் என்ட்ட விட்டுட்டுப்போற?” சாரதா “சவிதா…” என்று ஏதோ சொல்லவர “ஆமா, அத்தை. என்ன இருந்தாலும் சம்பாதிக்கிற மருமக. நான் அவள சொல்லலாமா? உங்களுக்கு தாங்காதுல்ல” என்றாள்.
சாரதா அன்றோடு நிறுத்திக்கொண்டார். தேவியின் தலையீடும் அதேபோல் முடிந்தது. “அத்தை, உங்களால ரோஹித்த பாத்துக்க முடியுமா முடியாதா? முடியாதுன்னா அவன டே-கேர்ல விட்டுடறேன்” என்றாள் கவிதா. “ஆனா அவகிட்டயே அவன் போகக்கூடாது.” தலைவிதியை நொந்துகொண்டு சம்மதித்தார் சாரதா. மகனையும் சித்தியிடம் செல்லக்கூடாதென்று கூறியபோது “ஏம்மா?” என்றான் குழப்பமாக. “சொன்னத செய். இல்ல முதுகுதோல உரிச்சிடுவேன்.” சவிதாவும் ஒதுங்கிக்கொண்டாள்.
பிள்ளைகள் இருவரும் ஏழும் ஐந்தும் வகுப்பு வந்தாயிற்று. வீட்டினுள் ஒருவருக்கொருவர் பேசினாலே அம்மாக்கள் வந்து இழுத்துச்சென்றுவிடுவார்கள். அப்பாக்கள் அதை கேள்விகேட்டாலோ பூகம்பமே வெடிக்கும். கணேஷும் சதீஷும் மௌனசாட்சிகளாகி பலகாலம் ஆகிவிட்டது.
கவிதா அலுவலகத்தில் ஒரு பயிற்சிக்காக இரண்டு மாத காலம் தில்லி செல்ல வேண்டியிருந்தது. ஆயிரம் ஆணைகள் ரோஹித், கணேஷ், சாரதா மூவருக்கும்.
“ரோஹித், பாட்டிய படுத்தாம இரு. நேரத்துக்கு சாப்பிடு. ஒழுங்கா படி, ஹோம்வொர்க் செய். க்வாட்டர்லி எக்ஸாம் வருது. கவனமா இரு.”
“என்னங்க, அவன பிடிச்சு உக்காத்தி படிக்க வைங்க. அவன் மார்க்குக்கு நீங்கதான் பொறுப்பு. ஞாபகம் இருக்கட்டும்.”
“அத்தை, அவன நீங்களே பாத்துக்கோங்க.”
கவிதா விமானமேறிய இரண்டு நாட்களில் தெருவில் ஷட்டில் ஆடும்பொழுது சறுக்கி விழுந்து வலது கையில் காயத்துடன் வந்தான் ரோஹித். சதையில் ஆழமாக வெட்டி ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
“ஐயோ!” சாரதாவின் அலறல் கேட்டு வந்த சவிதா அவனை ஸ்கூட்டரில் அமர்த்திக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். டிடி ஊசியும் நான்கு தையல்களும் போட்டார்கள். இரண்டு நாள் கழித்து கட்டு மாற்றவேண்டும். ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள்.
அவர்கள் வீடு திரும்பியபோது கணேஷும் சதீஷும் வந்து சேர்ந்திருந்தனர்.
“டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கணேஷ் கேட்டான்.
“தையல் போட்டிருக்காங்க, மாமா. அஞ்சு நாளைக்கு மாத்திரை. ரெண்டு நாள் கழிச்சு கட்டு மாத்தணும்.”
“சரி, சரி, ரெண்டு பேரும் சப்பிட வாங்க” என்றார் சாரதா.
சப்பிட்டு முடித்தவுடன் தன் தலையணை போர்வையை எடுத்துக்கொண்டு வந்த ரோஹித்திடம் “எங்கடா போற?” என்று சாரதா கேட்க “சித்தி கூடத்தான் நான் தூங்கப்போறேன். சித்தியும் ஓகே சொல்லிட்டாங்க” என்று நிற்காமல் போனான் ரோஹித். “நில்லுடா!” என்று சாரதா அவன் பின்னே ஓட கணேஷும் சதீஷும் அவரை தடுத்தனர். “இல்லப்பா, கவிதா…” என்றவருக்கு “பாத்துக்கலாம்மா” என்று கணேஷ் பதிலுரைத்தான்.

“என்ன அண்ணி, ஒரே யோசனை?” உள்ளிருந்து வந்த சாரதாவின் கேள்வியால் கலைந்த தேவி பேரன்களின் பேச்சை பற்றி சொன்னார். சவிதாவின் காதிலும் அவர்கள் பேசியது விழுந்திருந்தது.
உண்மைதானே! மூன்று வயதுதான் மூத்தவள் என்றாலும் தாயைப்போல அன்பு காட்டிய கவிதா எப்படி இப்படி மாறிப்போனாள்? தாயாகியவுடன் அவளிடம் தாய்மை அற்றுவிட்டதா? அவள் மட்டுமா மாறிவிட்டாள்? நான் மாறவில்லையா? சரி, அவள் ஏதோ கோபத்தில் பேசினால் நான் அவளிடம் பேசி புரியவைக்க முயன்றேனா? இல்லையே! என் தாய்மை என்ன ஆனது? உயிராய் வளர்த்த ரோஹித்தை தவிர்த்துவிட்டேனே! அவன் கூப்பிட்டாலும் பதில் கூறாமல் எத்தனை முறை நகர்ந்திருப்பேன்! இதோ, குழந்தைகள் கேட்கும்படி நடந்துகொண்டோமே! இவனது கேள்விக்கு நான் என்ன பதில் கூறமுடியும்? எங்கள் வீம்பிற்காக இவர்களை பிரித்துவிட்டோமே! இதோ, இருவரும் எப்படி சந்தோஷமாக விளையாடுகிறார்கள்! ஆனால்…
க்வாட்டர்லி எக்ஸாமில் முதல் ரேங்க் எடுத்த சந்தோஷத்தில் “சித்தி…” என்று ஓடி வந்தான் ரோஹித். “அந்த ப்ரியா ரொம்பத்தான் பீத்திக்கிட்டா, சித்தி. நீ என்னை முந்தி ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கவே முடியாதுன்னு சவால் விட்டா. நான் ஜெயிச்சிட்டேன்!” சவிதாவை பிடித்துக்கொண்டு தட்டாமாலை சுற்றினான்.
ஆடி குதித்து ஓய்ந்தபின் சொன்னான் “சித்தி, நீங்க நான் ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே பாடம் சொல்லித்தரீங்களா, எனக்கும் ஈஸியா இருக்கு. அம்மா ஆஃபிஸ்லேர்ந்து வந்து சொல்லித்தரும்போது ரொம்ப லேட்டாயிடுது, எனக்கும் தூக்கம் வந்திடுது. மார்க் குறையும்போது அம்மாவுக்கு கோவம் வருது. சித்தி, ப்ளீஸ், ப்ளீஸ், எனக்கு நீங்களே எப்பவும் பாடம் சொல்லித்தரீங்களா?”
என்ன பதில் சொல்ல? அவன் அடிபட்டதிலிருந்து இன்றளவும் என்னுடனே இருப்பது கவிதாவுக்கு தெரிந்தாலே என்ன நடக்குமோ? நாளை அவள் பயிற்சி முடிந்து திரும்பி வருகிறாள்!
விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் கணேஷிடம் கவிதா பேசிக்கொண்டே இருந்தாள். “நான் ரொம்ப கவலைப்பட்டேங்க, ரோஹித்த விட்டுட்டு போறதுக்கு. அத்தையால பாத்துக்க முடியுமா, நீங்க ஒழுங்கா பாடம் சொல்லித் தருவீங்களா, எக்ஸாம் வருதே என்ன மார்க் வாங்குவானோன்னு. என்னால நம்பவே முடியல. நான் என்ன பாடுபட்டாலும் அவன் செகண்ட் ராங்க்தான் வாங்கினான், இப்ப ஃபர்ஸ்ட் வந்திட்டான். இனிமே நீங்களே அவனுக்கு பாடம் சொல்லிக்குடுக்கலாம்போல!”
“இல்ல, கவிதா. நான் சொல்லிக்குடுக்கல.”
“பின்ன, அத்தையா இல்ல மாமாவா?”
“சவிதா.”
புருவம் சுளித்து கவிதா பேச முற்பட “கொஞ்சம் பொறுமையா கேளு” என்று கணேஷ் நடந்தவற்றை கூறிமுடித்தான். கவிதா பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
குழந்தைகள் இருவருக்கும் கையில் சோறு உருட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் சவிதா.
“கண்ணு, அம்மா வராளா இன்னிக்கு! ஜாலியா?” ரோஹித்திடம் கேட்டாள்.
“ஜாலிதான், சித்தி. ஆனா…”
“என்னடா?”
“இல்ல… அம்மா வந்தப்புறம் நீங்க என்கூட பேசமாட்டீங்கல்ல? தம்பியும் நானும் சேந்து விளையாட முடியாதுல்ல…”
அவன் கேள்வியால் எதிரில் இருந்த சவிதாவும் பயணம் முடித்து உள்ளே வந்த கவிதாவும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கியபடி சிலைத்திருந்தனர்.

***

 

-சுதா ஶ்ரீநிவாசன்

Please follow and like us:

5 thoughts on “அன்னையாதல் – சுதா ஶ்ரீநிவாசன்

  1. பெண்களின் உலகு. குழந்தைகளின் உலகு.

    இரண்டையுமே கதையில் காண இயலுகிறது. “ஆனால் என்ன இருந்தாலும் அவ பிள்ளைய பார்த்துக்கிற மாதிரி உன் குழந்தையை பார்க்க மாட்டாள்” என குடும்பத்தை பிரித்த பெண்.. இதுநாள் வரை நிம்மதியாக இருந்துள்ளாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *