கால நுனியிற் சமனிலை பேணும் கவனத்துடனும் பக்குவத்துடனும் எங்கள் முன் வந்து நிற்கிறாள் அயலாள். அயலாள்  என்பதற்குள் ஓர் அன்னியத்தன்மை தெரிந்தாலும் இவள் எங்கள் அயலாள் தான் என்னும்போது நெருக்கமாகிவிடும் தன்மையும் தோன்றுகிறது.  இன்னொரு பார்வையில் இவர்  அயல் ஆள் என்னும் பொருட்பட்டுப் பொதுப்பாலாகவும் இத்தொகுப்பின் தலைப்பு அமைகிறது. புலம் பெயர்ந்த எவரும் அவர் வாழும்  நாட்டுச் சூழலைப் பொறுத்த வரை அங்கு வாழும் பூர்வ குடிகளுக்கு  அயல் ஆள் தான் என்பதுவும் இங்கு தொக்கி நிற்கிறது. இத் தொகுப்புக்குத் தலைப்பிடப்பட்டுள்ள போதும் ஒரு சில கவிதைகள் நீங்கலாக ஏனையவற்றுக்குத் தலைப்பிடப்படவில்லை. படைப்பாளி கவிதை சுட்டும் பொருள் களம்  மற்றும் உணர்வை ஆழப்படுத்துவதற்கே  தலைப்பிடுகிறார்.  தலைப்பிடப்படாது விடப்படும் பொழுது வாசிப்பவரின் வியாக்கியானவெளி மட்டுப்படுத்தப்படாது விடப்படுகிறது. ஆனாலும் கவிதைகளை விளங்குவதற்கான  சுட்டியாகத்  தலைப்பு அமையும் போது வாசிப்பு இலகுவாகிறது. இத்தொகுப்பில் மொத்தமாக 63 கவிதைகள் உள்ளன.

வாழ்வின் உழல்வுகளையும் புலம்பெயர்ந்ததால் வந்த  குறிப்பான உழல்வுகளையும் இத்தொகுப்பு எங்கள் முன் வைக்கிறது. சொற் சிக்கனம் நிறைந்த கவிதைகள் மனித உறவுகளுக்குள் உண்டாகும் காதலை, அன்பை,  அந்நியத்தை, வாழ்வின் உழல்வுகளின் குறியீடாக வருகிற கனவுகளை, எங்கள் முன் விரித்து வைக்கின்றன. இவற்றுட் பெண் நிலையில் அதிலும் பெண் படைப்பாளியாக வாழ்தலின் உழல்வை வெளிப்படுத்தும் படைப்புகள் மிகுந்த சமநிலையுடனும் பக்குவமுடனும்  வெளிப்படுகின்றன. சமநிலை பேணிக்கொண்டு காலமும் வாழ்வும் இயங்கிக் கொண்டிருப்பதைச் சுட்டுவதுடன் இக்கவிதைத் தொகுப்பு தன்னைத் திறந்து கொள்கிறது.

 

நேற்றுத் தொடங்கிய நாளை

நாளையைக் கண்ட இன்று 

காலக் கவனத்தின் நுனியில் 

அங்கும் இங்கும் பாதப்பெருவிரல் ஊன்றி,

விரையும் காலத்தைத் தாண்டிச் செல்லக் கனவுத் திறப்பில்  ஒரு வழி.

 

வயது போகிறதாயினும் விரையும் காலத்தையும்  வெல்லும் கனவுகளுடன்  வாழ்வைத் திறக்கின்றன இக்கவிதைகள்.

 

ஓய்வெடுத்தால் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியமாகி விடுகிறேன் என்னும் சில்வியா பிளாத்தின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட  இரண்டாவது கவிதையில்  தொலைவுக்கும் தொலைவான கதைகளின் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்காக  இவள் மது அருந்துகிறாள். இசை கேட்கிறாள். நடக்கிறாள்.  உடல் உழைப்பைச் செய்கிறாள். வாசிக்கிறாள். கணணி பார்க்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாகச் சுய பிரக்ஞையுடன்  தான் பைத்தியக்காரியானால் மருத்துவமனைக்குத் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதி மொழியையும் வாங்கிக் கொள்கிறாள்.

மனதை அழுத்தும் துயரங்களிலிருந்து தன்னை விடுவிக்க ஒருவர் என்ன செய்ய வேண்டுமோ அவை எல்லாவற்றையும் அவள் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.

இக்கவிதைக்குள் எங்களை அழைக்கும் சொற்றொடராக-  இக்கவிதையின் ஆத்மாவாக  இருப்பது  `தொலைவுக்கும் தொலைவான கதைகள்` என்னும் சொற்றொடர்.  ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கிற  தொலைவுக்கும் தொலைவான கதைகள் பற்றிய நினைவுச் சுமைகளை எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதைகளின் விளைநிலம் எது? இக்கேள்விகளுக்கான பதில் ஆளுக்காள் வேறுபடும். கேள்விகள் எழுப்பப்படுவதுதான் முக்கியமானது. எங்களுக்கு அண்மையாக இருந்த கதைகள் நாங்கள்  புலம் பெயர்ந்ததால் தொலைவுக்கும் தொலைவான கதைகளாகினவா?

 

இத்தொகுப்பின் பின் மூன்றாவது கவிதை மொழிகள் பற்றியது. இக்கவிதை மிக ஆழமான கவிதை.

 

மண்ணில் எழுதிப் பழகிய மொழி ஒன்று 

விருப்பின்றிக் கற்றது மற்றொன்று 

அகதியாக அறிந்தது இன்னொன்று

அம்மொழிகளை மீறி என் கனவுகளின் மொழி வேறொன்று

இம்மொழி ஒலிகள்  அற்றது

பல நிறங்களால் ஆனது

ஒவ்வொரு கனவின் மொழிபெயர்ப்பும் 

அடுத்ததொரு உறக்கம் வரை தொடர்கின்றது

நாவும்  மனமும் அந்நியத்தின் அலைவும்

மொழியின் சுழலில் உழல்வு 

 

புலம்பெயர்கிற ஒவ்வொருவருக்கும் தன் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதனைக் கற்றுக்கொண்டாலும் அம்மொழி எங்களிற் பலருக்கு இதயத்துக்கருகில் வருவதில்லை.  அம்மொழி எங்களின் நினைவிலி மனத்திலும் வாழ்வதில்லை.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுவது என்பது அதன் சொற்களையும்  உச்சரிப்புக்களையும்  அதன் இலக்கணங்களையும் கற்றுக்கொள்வது மட்டும் அன்று, அம்மொழி வாழும் நிலத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும்  கற்றுக் கொள்வதுமாகும் . ஒருவகையில் அவற்றை ஏற்றுகொள்வதுமாகும். இவை எல்லாமும் கைகூடிவரினும் கூடத்  தாய்மொழியில் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கும் போதும்   பேசும்போதும் வருகிற  இலகுவான உணர்வு,  நிர்ப்பந்தத்தின் பேரிற் கற்றுக்கொண்ட மொழியில் ஏற்படுவதில்லை.  தாய்மொழியில் கூட எங்கள் கருத்தையும் உணர்வுவையும் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் எங்களில் எத்தனை பேருக்கு வெளிப்படுத்த முடிகிறது? விரும்பிக் கற்றுக்கொள்கிற இன்னொரு மொழியிற்கூட ஆழமான அறிவை அடைவது இலகுவானதல்ல. மனிதருக்கும் மொழிகளுக்கும் இடையிலான உறவும் ஊடாட்டமும் மிகச் சிக்கலானவை.  புற உலகத்தில் புழங்குகிற எந்த மொழிக்கும் அந்நியமான உயிர் ஒன்றுக்கு மொழியாக அதன் கனவின் மொழி இருக்கிறது. மொழிகளினூடே கடத்தப்படுகிற வாழ்வின் விழுமியங்களுக்கு அன்னியமான உயிரின் கனவது. ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசுகிறவர்களின் கனவின் மொழி கூட வேறொன்றாக இருக்கக் கூடும். இங்கு மொழியென்பது வாழ்வு பற்றிய வேறொரு நிலைபாட்டைக் குறியீடு செய்கிறது. புலம் பெயர்வு தருகிற  பெரும் அதிர்ச்சிகளில் ஒன்று மொழியே பாரமாகிப்போவதுதான். தன் தாய் மொழியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அப்பாரம் தெரியாது. புலம் பெயர்ந்தும் தாய்மொழியிலேயே மட்டும் வாழ்வதும் பாரம்தான். புலம் பெயர்ந்த முதலாவது தலைமுறைக்குக் கால நிலை மட்டுமல்ல மொழியும் பாரம் தான். புலம் பெயர்ந்து வாழும் எங்களிடம்  பல சந்தர்ப்பங்களில் எங்களைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி: நீ கனவுகாணும் போது என்ன மொழியிற் கனவு காண்கிறாய் என்பதாகும்.

 

பெருமளவுக்கு அகக்காட்சிப்படிமங்களைக் கொண்ட  கவிதைகளுள்ள இத்தொகுப்பில்  தனியே புலக் காட்சி ஒன்றின் மூலம் புலம் பெயர் வாழ்வின் மிக முக்கியமான முரண் நிலை ஒன்றை எங்கள் முன் வைக்கும் கவிதையாகக் கவிதை பதினைந்து உள்ளது.

குடை பிடிக்கும் அளவுக்குப் பனிமழை

ரயில் நிலையத்துள் நுழைந்ததும்  மடக்கி முடிக்கப்

பிடித்தது ஒரு கை 

குடையை மடக்கியவர்  இங்கு இருக்கும் தமிழ்க் கோஸ்டி

பறித்தவர் வைன் கோஷ்டி 

அவரோ வேலைக்கு நேரம் போச்சு விடடா விடடா

கெஞ்சுகிறார்

இவரோ என்னோட தானே வந்தனீ  எப்ப வேலைக்குப் போகத் தொடங்கினனீ 

விடு மச்சான் விடு வேலைக்கு நேரம் போகுது 

கல்யாணம் கட்டியாச்சோ என்னோட தானே வந்தனீ

எப்ப கல்யாணம் முடிச்சனீ

வீடும் வேண்டியாச்சோ 

என்னோட தானே வந்தனீ

அவர்  நாட்டுக்குப் போயிட்டு வந்தனான் அம்மா உன்னைத் தேடுறா

இவர்  என்னோட தானே வந்தனீ  எப்ப நாட்டுக்குப் போனனீ

குடை போனாற் போகிறது எனப் போகிறார். 

 

ஒரே நேரத்திற் புலம் பெயர்ந்த இருவருள் ஒருவர் பொருளாதார ரீதியாகத் தன்னை இங்கு நிலை நிறுத்திக்கொள்கிறார். மற்றவரோ தன்னை இப்புலம்பெயர்வாழ்வுள்  நிலை நிறுத்த முடியாதவராக மதுவுக்கு அடிமையானவராக ஆகி இருக்கிறார். இருவரும் சந்திக்கும்  கணத்து உரையாடல்களை இக்கவிதை முன் வைக்கிறது.  சந்தித்துக் கொள்ளும் இருவரும் தமிழர்கள்தான் ஆனாலும் ஒருவர் தமிழ்க் கோஸ்டி ஆகவும் மற்றவர் வைன் கோஸ்டியாகவும் புலம் பெயர் வாழ்வுடன் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் பிளவுண்ட   சமூகத்தின்   பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

 

ஒர் அற்ப ஆமாம் அல்லது இல்லைக்குக் கூட என் கண்கள் பனித்து விடுகின்றன

என்ற கவிதை இரு உயிர்கள் தம்முள் உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தத்தளிப்பதைச் சொல்ல முயல்கிறது. இரு உயிர்களுக்கும்  இடையில் உள்ள  இடைவெளி என்பது ஆம் அல்லது இல்லை என்பதற்கிடையில்  உள்ள இடைவெளிதான். இந்த இடைவெளியை நிரப்புகிற கனவு உள்ளதே அது கொடுமையானது  என்கிறது இக்கவிதை. ஆம்  என்று சொல்லக்கூடும் என்ற நம்பிகையில்  ஒரு உயிர் மெல்லிய ஆடையை- எவருக்கும் தெரியக்கூடாதென்று மறைத்து வைத்த மெல்லிய ஆடையை எடுத்து அணிகிறது. “மறைத்து வைத்த மெல்லிய ஆடையை  அணிகிறது மனம்” என்ற வரி மிக முக்கியமானது. மெல்லிய ஆடை என்பது  உடலின் அழகை மறைத்தும் மறைக்காமலும்  சாகசம் செய்யக்கூடியது. அது மனதுக்குள் பொத்தி வைத்த காமத்தையும் குறிக்கின்றது.

இல்லை என்று சொல்லி விட்டாலோ  அவ்வுயிர் கொண்ட காதலும் காமமும் பாறைகளின் பின்னாற் சும்மா ஒளிவதில்லை அதனைக் ( பாறையைக் ) குடைந்து ஒளிகின்றன. பாறைகளைக் குடையும் துயரத்தை அவ்வுயிர் அனுபவிக்கிறது. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையிலான இடைவெளி ( ஆ வுக்கும் இ க்கும்  இடையில்  உள்ள இடைவெளி )  மிகச் சிறிதுதான். ஆனால் இரண்டில் ஒன்றைச்  சொல்ல வருடக்கணக்காக ஆகி விடும்போது துயர் நீண்டு விடுகிறதே! இவை எல்லாம் அவளின் அகவுலகில் தான் நிகழ்கின்றன. அவள் இக்கரையிலும் அவன் அக்கரையிலும் இருக்கிறார்கள். இனியும் பொறுக்க முடியாது என்று படகை ஆற்றில் தள்ளி விட்டு ஏறி வா என்கிறாள். நிலவோ ஏறுவதும் இறங்குவதுமாக நடுங்குகிறது. அட முட்டாளே ஏறிப் போ  அல்லது இறங்கித் தோணியைத் திருப்பித் தள்ளி விடு.

 

சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் ஒருவர் கொள்ளுகிற ஊடாட்டத்தின் பரிமாணத்தைச் சொல்கிற கவிதைகளாகக் கவிதை பதினொன்றும் இருபத்தேழும்  அமைகின்றன. கவிதை பதினொன்றில் மென்மையான பெண்ணான இவர் தன்னைப் புண்படுத்துபவர்களை நட்பு நீக்கம் செய்கிறார். முகப்புத்தகத்தைப் பிரயோசனம் அற்ற விசயங்களுக்குப் பயன்படுத்துபவர்களையும் அவர் நட்பு நீக்கம் செய்கிறார். இதனைப் பார்க்கிற தோழி, ‘இப்படியே போனால் பள்ளிக்கூடப்பிள்ளைதான் நீ’ என்கிறாள்.  சின்னப்பிள்ளைகளாக  இருக்கும்போது பிடிக்காதவற்றை  ஏன் எதற்கு என்ற  கேள்வியின்றி விலக்கி  வைத்து விடுவோம். ஒரு நிலையிற் பிடிக்காதவையும் கூட வாழ்வின் ஒரு பகுதிதான்  என்பதை அக்கூற்றுமூலம் உணர்த்துகிற தோழி, இறந்து போன  நாலு கவிஞர்களை என்ன செய்வாய் என்கிறாள். அதற்கு இவர்  நினைவுக்கு இருக்கட்டும் என்கிறார். கவிஞர்கள் இறந்து போனாலும்  அவர்கள் பற்றிய நினைவுகள் வாழும்.

 

கவிதை நாற்பத்தியொன்று மெய் நிகர் வெளியில்  நாங்கள் எவ்வாறு இயங்குகிறோம் என்பதை அழகாகச் சொல்லும் கவிதை. இருபத்தைந்தாவது அய்ம்பத்தியொராவது  மற்றும் அறுபத்தியொராவது   கவிதைகள் பெண்ணாகவும் படைப்பாளியாகவும் வாழ்தலின் பரிமாணத்தை அழகுறச் சொல்லும் கவிதைகளாகும்.

அன்றாட வாழ்வில் பெண்ணுக்களிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்ள  வேண்டிய நிர்ப்பந்தத்தினால் எழுத்தே வாழ்வாவது  அனேகமான பெண்படைப்பாளிகளுக்குச் சாத்தியமாவதில்லை. சமைக்க வேண்டும் என்ற அவசரம் மனதிற் தோன்றும் படைப்பின் கருக்களைச் சமையலறையில் சேமிக்க வைக்கிறது.  படைப்புக்கான உந்துதல்கள் எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. அவ்வாறு வரும்போது அன்றாட வாழ்வின் சுமைகளும்  பெண் என்பதால் வரும் மேலதிக சுமைகளும் சேர்ந்து படைப்பாக்கத்தை அமுக்கி விடுகின்றன.  ஆனால் இவர் படைப்பாக்கம் அழிக்கப்பட இடம் கொடுக்காமல்  படைப்பின் கருக்களைக் கவனமாகச் சேமிக்கிறார். அது மட்டுமல்ல படைப்பின் கருக்களை விமர்சனபூர்வமாக அணுகவும் செய்கிறார்.

 

பசி தொடங்குகிறது

சமைக்கப்போகும் அவசரம்

சொற்கள் தலைக்குள் அலைகின்றன

எழுத்துக்கள் மின்னி மறைகின்றன

எல்லா இடங்களிலும்  சேர்த்துச்  சேர்த்து 

என்  சமையல் அறையில் இனி இடமில்லை

தேர்ந்தெடுப்பதற்கும் விலக்குவதற்கும் 

வளர்ந்தவளின் புத்தியும் சரி பிழை அறிந்த  விரல்களும் தேவை

(விமர்சனபூர்வமான அணுகுமுறை)

எழுதாமல் விட்டவைகளின்

அனுதாபக் கரைச்சல் 

பசியை விட மோசம்.

 

வாழ்வின் வேலைகளுடன் சமையலையும் இரசித்துச் செய்து நல்ல சமையற்காரியாகிறவர் இலக்கிய உலகிலிருந்து காணாமற் போகிறார்.

 

சட்டி எரிந்து கொண்டிருந்தது

எண்ணெய் சூடாகி விட்டது

கடுகுப்போத்தல் கைதவறி உடைந்து போனது

(கை தவறல் மூளையின் கவனம் வேறெங்கோ – படைப்பில் – இருக்கும்போது நிகழ்வது)

வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தபோது

தோன்றிய  வரிகளை என்ன செய்வது

அடுப்புக்குள் போட்டு எரித்துவிட்டு

கொதித்த் குழம்பை இறக்கினேன்

கறி  நல்ல  ருசி 

(அன்றாட வாழ்வில் இருந்து அன்னியமாகவும் இல்லை)

 

கவிதையும் நல்ல ருசி.

 

அன்றாட வாழ்வின்பாடுகளை எதிர்கொள்ளும் அதே நேரம் படைப்பாளியாகவும் வாழ்வதற்கு ஒருவர் செய்யக்கூடிய அத்தனை விடையங்களையும் பக்குவத்துடன் சமநிலையில் நின்று செய்யும் ஒருவராக  இத்தொகுப்பின் படைப்பாளி இருக்கிறார்.

 

இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் இருண்மையானவை. இருண்மையற்ற, கவிதைகளுக்குள்ளும் சில வேளைகளில் இருண்மையான படிமங்கள் வந்து போகின்றன.  இருண்மையான கவிதைகள் என்றால் என்ன?  கவிதைகள் எதனைச்  சுட்டுகின்றன  என்பதை மிக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாத நிலை தோன்றும் போது  அவற்றை இருண்மையான கவிதைகள் என்கிறோம்..

படைப்பாளியின் தனது அனுபவங்களை இறுக்கமான படிமங்களின் ஊடாகச் சொல்ல முனையும் போது இருண்மை தோன்றுகிறது.  இத்தகைய கவிதைகளைப்  பலமுறை வாசிக்க வேண்டும். பல வேளைகளில் இவற்றை எழுதும் படைப்பாளி என்ன நினைத்தாரோ அதை விடவும் வேறு ஒன்றையும் எங்களால் அதனுள் வாசிக்க முடியும்.

வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன.

காதுகளில் வண்டொன்று சத்தமிடுகின்றது

கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன 

மனநிலை குழம்புவதை  உணரும் போதெல்லாம் காதற் பனியும்  தூவுகிறது

அச்சத்தின் கதகதப்பைப்  பற்றிய கள் (ள)  மனம்

மெய்யான ஒன்றை தீரத் தீர  அருந்தாததாக (அருந்த முடியவில்லையே! என்று ) மறுகும் உடல்  

கற்பனைகளை அள்ளிய கைகள் 

திரும்பத் திரும்ப அலைகள் என்னை வாரிக் கொள்கின்றன 

சுருட்டி இழுத்துக் கொண்டு போகின்றன 

குளிர்மை அச்சம் தத்தளிப்பு 

அமிழும் என் குரல் 

எவருக்கும் கேட்காத தொலைவது

என் விறைத்த  தலையில் அமர்கிறது புள்

அதன் கூர் அலகு சொற்களைக் கொத்துகிறது.

ஆழப் புதைந்த மலையின் நுனி

பாதங்களைக் குத்துகிறது.

 

இந்தக் கவிதை எதனைச் சொல்ல வருகிறது என்பதை மிக இலகுவாக உணர்ந்து கொள்ள முடியாது.  வாழ்வின் பாடுகளை அல்லது வாழ்வு தரும் துன்பங்களை எதிர்கொள்ளும்போது உடலும் மனமும் எப்படித் துன்புறுகின்றன.  என்பதை இந்தக் கவிதை சொல்ல முயல்கிறது ஆனால் இங்கே எதுவும்  வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை  தெளிவாகவும் சொல்லப்படவில்லை.

இக்கவிதையில் வரும் இரு படிமங்களைப் பார்ப்போம்.

 

  • “அச்சத்தின் கதகதப்பைப் பற்றிய கள் மனம்”

அச்சம் கதகதப்பைக் கொண்டு வருமா? கதகதப்பு இதமான உணர்வுடன் சம்பந்தப்படுவது அல்லவா?.  கள் மனம் என்பது கள்ள மனதென்று வர வேண்டுமா?  அல்லது போதையான மனதைக் குறிக்கிறதா? அச்சம், கதகதப்பு, கள் மனம் இவற்றுக்கிடையிலான தொடர்பு என்ன?

மேலும் மேற்குறித்த வசனத்தொடர் பௌதீகமான காட்சியை உருவாக்கக்கூடிய படிமம் அல்ல. அது ஒரு உணர்வுநிலையைக் குறிக்கும் படிமம் என்பதால் எங்களுக்குள் அதுபற்றிய தெளிவான காட்சியை உருவாக்குவது கடினமாகிறது.

மனம் குழம்பும்போது காதலைத் தேடுகிறது. போதையுற்ற மனதுக்கு அக்காதல் உணர்வு கதகதப்பையும்  அச்சத்தையும் ஊட்டுகிறது காதலிலிருந்து காமத்துக்கு நகர்ந்து மெய்யான ஒன்றைத் தாகம் தீர அருந்த முடியவில்லையே! கற்பனைகள் யாவும் வெளியே கொட்டுண்டு போய்க் கிடக்கின்றன. கைகளால் அள்ளிக்கொள்ள வேண்டும் என இதனை விரித்துக்கொள்ளலாம்.( இது ஒரு வகையான வாசிப்பு. வேறு வாசிப்பு முறைகளும் இருக்கலாம்.)

  •  “கற்பனைகளை அள்ளிய கைகள்”

இது காட்சியை உருவாக்கிச் சொல்ல வருவதை உணர்த்தக்கூடிய படிமம்.

கற்பனைகளை உருவாக்குவது மூளை-மனம். கற்பனைகள் பெளதீகப் பொருட்கள் அல்ல ஆனாலும் கற்பனைகளுக்கு கைகளால் அள்ளுதல் என்ற பெளதீகச் செயல் மூலம் பெளதீகப் பெறுமானம் உருவாக்கப்படுகிறது.

அருவமான படிமங்களும் இலகுவில் ஊகிக்க முடியாத குறியீடுகளும் கவிதைகளை இருண்மையாக்குகின்றன.   வாழ்வு தரும் பாடுகள் வழி உருவாகும் உணர்வுகளை வெளிப்படுத்தச் சாதாரணமான சொற்றொடர்கள் போதாது என்றும்  ஏற்கனவே வழக்கில் உள்ள சொற்பதங்கள் உருவாக்கும் அர்த்தங்கள் ஆழமற்றவை என்றும் ஒரு படைப்பாளி நினைக்கும்போது  இருண்மையான படிமங்கள் தோன்றலாம்.  அல்லது படைப்பாளி தான் உருவாக்கும் உருவ மற்றும் அருவக் காட்சிகளுக்கு இடையே கண்ணிகளை இடாமல் இடைவெளிகளை விட்டுவிடுவதாலும் இருண்மை தோன்றலாம். படைப்பாளியின் அனுபவத்தையும் புலக்காட்சிகளையும்  மொழி வடிவச் சித்திரமாக மாற்றும் திறன் அல்லது திறனின்மை  இருண்மையான கவிதைகளை உருவாக்கலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாலாக வாசிப்பவரின் கற்பனை திறனும் மொழியறிவும் வாழ்வனுபவமும்தான்   இருண்மையான  கவிதைகளுக்கு ஒளியூட்டுபவையாக இருக்கும்.

தொகுப்பின் 62வது கவிதை கீழே உள்ளது. இக்கவிதையின் இறுதி வரி தேவையற்றது என்று படுகிறது.

 

சுவர்களில் ஊத்தைகள்

நுளம்புகளை அடித்த இரத்தச் சுவடுகள்

பார்க்கும் இடமெல்லாம் தூசுகள்

கழுவக் கழுவக் நிறையும் பாத்திரங்கள்

காறித் துப்பித் துப்பி முகம் கழுவும் தொட்டி நாறுகிறது 

கண்ணாடியில் திரும்ப திரும்ப அதே முகம் 

சும்மா இருந்து நடப்பதைக் காணும்  உறுதியைப் பரிசோதிக்கிறேன்.

என் பாதங்களுக்குக் களிம்பு தடவி அங்கும் இங்கும் உலாவுகிறேன்

மகிழ்ச்சியை வடிவமைக்க இனிப்பாகச் சிரித்து 

என் ஒரு நாளைத் தொட்டுப் பார்க்கிறேன்.

எல்லாவற்றையும் மீறி “வீடு ஒரு சிறைபோல ” கள்ளமாக மனம் நினைக்கிறது.

 

கவிதை ஒன்றில் எங்கள் முன் விரித்து வைக்கப்படுகிற பெளதீகக் காட்சியினூடு உருவாக்கப்படும் உணர்வுலகம் பல்வேறு வியாக்கியானங்களை உருவாக்கக் கூடியது. வாசிப்பவர்களுக்கான வெளி சிறையிடப்படல் தேவையற்றது. மேலும் கவிதை சொல்லாமற் சொல்வதைப் படைப்பாளி மீள எழுதுதல் தேவையற்றது.

 

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதைகளினூடும் தெரிகிற படைப்பாளியின் பொதுப் பண்பாக   மென்மை இருக்கிறது. இக்கவிதைகள் உரத்துப் பேசுவதில்லை.  இறுக்கமான படிமங்களினூடும் குறியீடுகளினூடும்  விரித்து வைக்கப்படும் புலக்காட்சிகளினூடும்,  வாழ்வு- குறிப்பாகப் புலம்பெயர்வாழ்வு தன்னுள் உருவாக்குகிற அக உலகை எங்கள் முன்  என் அயலாள் விரித்து வைக்கிறார். அவர் விரித்து வைக்கிற உலகம் எங்களை ஈர்த்துக்கொள்கிறது.

 

நன்றி:

படைப்பிலக்கியம் (மூன்றாவது zoom உரையாடல் நிகழ்வு ),கனடா

தேவ அபிரா

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *