அரக்கர்கள்
– சித்துராஜ் பொன்ராஜ்
1. சியாமளனும் ஸ்ரீதரும் பீர் குடிக்கிறார்கள்
இராணுவச் சேவையின்போது எங்களுக்குப் பீர் பரிமாறியவர்களில் யாரும் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை என்று சியாமளன் சொல்கிறான்.
மதுபான விடுதியின் நடுவிலிருந்த குறுகலான மேடையில் ஐந்துபேர் கொண்ட இசைக்குழு கித்தாரின் தந்திகளின்மீது வழுக்கவிட்ட விரல்களின் கர்ண கொடூர சறுக்கலோடு அடுத்த பாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி வெளிச்சம் நிறைந்த கோப்பைகளில் மதுபானங்களை அருந்திக் கொண்டும், உரத்த குரல்களில் கத்திப் பேசிக் கொண்டும் நபர்கள் குழுமி இருந்தார்கள். பெருந்தொற்றுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரங்களைக் கொண்டாடியே தீருவது என்ற வெறி மிகுந்த கூட்டம்.
அவர்களுக்குப் பின்னால் பார் கவுண்டருக்குப் பின்னால் பல ஒளிமிகுந்த கோப்பைகளைச் சுழற்றி மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த பையன்மீது சியாமளனின் கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தன.
சியாமளனும் எனக்கும் ஒரே வயது. இருவரும் ஒரே நேரத்தில் அதிகாரிகளுக்கான பயிற்சியை முடித்தோம். அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் நடந்த கடைசி அணிவகுப்பில் புதிய பதவியின் அடையாளமாக தோள்களில் அணிந்து கொள்ள தங்க நிறத்தில் ஒற்றை நட்சத்திரம் பதித்த பட்டைகளும், சிவப்புத் துணி சுற்றிய கறுப்புத் தொப்பியும் இடுப்பில் மாட்டிக் கொள்ள பூண்போட்ட உறையோடு வாளும் தரப்பட்டன. அணிவகுப்பு முடிந்து கண்களில் மிரட்சி வழிய நின்றிருந்த குடும்பத்தாரோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் இருவருக்கும் ஒரே தரைப்படைப் பிரிவில் பணி நிரந்தரமாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இராணுவச் சேவையின் அடுத்த ஒன்றரை வருடங்களுக்குத் நாங்கள் வசித்த ஊரைச் சுற்றியுள்ள காடுகளிலும் மேடுகளிலும் எங்களைவிட ஒன்றிரண்டு வயதே குறைவாக உள்ள பதினெட்டு வயது பையன்களை பயிற்சி என்ற பெயரில் வழிநடத்திச் செல்வதும் பயிற்சிகள் ஓய்ந்திருக்கும் நேரத்தில் சிவந்து கனத்திருக்கும் மண்ணில் பதுங்கு குழிகளை வெட்டி மீண்டும் மூடுவதும்தான் வேலையாக இருக்கும் என்பது நினைவுக்கு வந்தபோது சற்று ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அப்போது நாங்கள் அணிந்திருந்த ஆடை அலங்காரங்களுக்கு போதை அதிகம்.
சிவப்புத் துணி சுற்றிய தொப்பிகளை ’ஹோ’ என்ற சத்த்தோடு மீண்டும் மீண்டும் காற்றில் தூர வீசிப் பிடித்து ஆரம்ப கட்ட இராணுவப் பயிற்சி முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில் அந்த ஏக்கத்தின் சுவடு அப்போதைக்கு மறைந்து போனது.
அந்த நாள்களிலும் இராணுவப் பயிற்சிக்குப் பின்பும் நாம் அவ்வப்போது சந்தித்தபோதெல்லாம் ஆள் பாதி, ஆடை பாதி என்று சியாமளன் அடிக்கடிச் சொல்வான். அப்போது நாங்களிருந்த பத்தொன்பது வயதில் ஆள் என்பது கால்வாசிதான். ஆடை என்பதுதான் முக்கால் பங்குக்கு எங்களை நடத்திப் போனது.
சியாமளனுக்கு நல்ல கனமான உடம்பு. வெயிலில் அலைந்தால் பொரிப்பொரியாக பூத்துப் பழுப்பேறிப்போகும் வெளுத்த தோல்நிறம். கைகளில் குழல் நீண்ட துப்பாக்கியை மார்போடு அணைத்துக் கொண்டு சீருடை மொத்தமும் சேற்றில் முக்கி விறைத்துப்போய்க் கிடக்க மூச்சை மெல்லிய சீறலாய் விட்டுக்கொண்டே சீனன் குன்றுக்கு அடுத்திருந்த காடுகளின் தரைமீது சியாமளன் மெல்ல ஊர்ந்து கொண்டு மலைப்பாம்பைப்போல் முன்னேறியது எனக்கு நினைவிலிருக்கிறது.
காட்டில் ஒரு வாரமோ பத்து நாளோ பயிற்சிகள் முடித்து முகாமுக்குத் திரும்பிச் சோல்ஜர்களுக்கு ஆணைகள் இட்டுவிட்டுக் குளித்து முடித்தவுடன் பனியனும் கால்சட்டையுமாக நாங்கள் இருவரும் குளிரூட்டப்பட்ட மெஸ்ஸுக்குள் புகுந்து கொள்வோம்.
மெஸ் என்பது அதிகாரிகள் சகாய விலையில் மது அருந்தவும், டார்ட்ஸ் மற்றும் பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடவும் ஒதுக்கப்பட்டிருக்கும் பிரத்யேகமான இடம். மதுபானம் பரிமாறப்படும் பாரின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் நீண்ட கவுண்டரில் தனது கனமான கைகளையும் அகலமான மார்பையும் கவுண்டரின் விளிம்பில் சாய்த்தபடி சியாமளன் அமர்ந்து கொள்வான். தனது உருண்டையான பெரிய தோள்களை மார்புக்கு முன்புறமாகக் குறுக்கி தலையைக் கொஞ்சம் முன்னால் நீட்டிச் சியாமளன் அவ்வப்போது நாக்கினால் உதடுகளைத் துடைத்துக் கொண்டு பீர் அருந்தும்போதும் ஒரு மலைப்பாம்பு அமர்ந்து பீர் குடிப்பது போலவே இருக்கும். பொன்னிறமான பீரின் பேரொளியில் பலநாள் பயிற்சிகளால் சோர்வாகிக் குறுகிப் போயிருக்கும் சியாமளனின் சிறிய மணிவிழிகளில் தந்திரமும் வன்மமும் பளபளக்கும்.
பல நேரங்களில் நானே மெஸ்ஸின் அரையிருட்டில் குழம்பி சியாமளின் ஈரமான சிவந்த உதடுகளிலிருந்து வெளியேறி மெல்ல அசைந்து மீண்டும் வாய்க்குள் புகுந்து கொள்ளும் அவனுடைய நாக்கின் நுனியில் பிளவிருப்பதாக எண்ணி மயங்கியிருக்கிறேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக அவன் நாக்கு வாயிலிருந்து அடுத்து வெளிவரப் போகும் தருணத்துக்காக அசையாமல் சியாமளனின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்.
”என்ன பின்பக்கம் அரிப்பெடுத்த பொட்டச்சியாட்டம் என்னையே விடாம ஏக்கத்தோட பார்த்துகிட்டே உக்கார்ந்திருக்க?” என்று சியாமளன் நான் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கவனிக்கும்போதெல்லாம் கலகலவென்று பலமாகச் சிரித்தபடி கேட்பான். ஆனால் அவன் வாயோரங்களிலும் பற்களிலும் கன்னங்களின் மேற்புறத்திலும் இருக்கும் அந்தப் பெரிய சிரிப்பு அவன் கண்களில் இருக்காது. சியாமளன் எவ்வளவுதான் வாய்விட்டுச் சிரித்தாலும் அவன் கண்கள் பீரின் அடிப்பகுதியில் கனமாய்க் கிடக்கும் மஞ்சள் நிறத்தில் கடுமை மாறாமல் மெஸ்ஸையும் அதில் அமர்ந்திருக்கும் அனைவரையும் விடாமல் சுற்றி வந்து கொண்டே இருக்கும்.
சியாமளன் தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் மிக உயர்தர ஆண்கள் பள்ளிகளில் மாத்திரம் படித்தவன். அதனால் அவன் வாயிலிருந்து வெளியேறும் ஓசைகள் அனைத்தும் மிகத் துல்லியமாகக் கத்தரிக்கப்பட்டவையாக, தேர்ந்தெடுத்த இசைநயம் மிக்கவையாக இருந்தாலும் அவற்றிலிருந்து உருவாகும் வார்த்தைகள் அத்தனையும் மிகப் பெரும்பாலும் அசிங்கமானவை..
சியாமளனின் தந்தை நமது நாட்டிலிருந்த வழக்கறிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் என்றும், அவருக்கு அரசியல் தொடர்பும் செல்வாக்கும் அதிகம் என்றும், இராணுவச் சேவை முடிந்து உலகின் மிக முக்கிய பல்கலைக் கழகங்களில் சட்டப்படிப்புக்காக விண்ணப்பிக்கும்போது அவன் இராணுவச் சேவையின் குறிப்புக்கள் விண்ணப்பத் தாளில் வியப்பூட்டும்படி பிரமிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியிலேயே வதந்திகள் தணிந்த குரல்களாக முகாமெங்கும் பரவி வந்தன.
ஆனால் அப்போதும் சரி, இராணுவ சேவை முடிந்து எட்டு வருடங்களில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட அநேகச் சந்திப்புக்களிலும் சரி சியாமளன் தனது தந்தையைப் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ எதையுமே பேசியதில்லை.
இப்போதும் சியாமளன் எனக்கெதிராய் போடப்பட்டிருந்த முக்காலியில் ஒரு உடல் கனத்த மலைப்பாம்பின் தோரணையோடு அமர்ந்திருந்தான். எட்டு வருடங்கள் போனதில் முகம் அகலமாகியிருந்தது. இராணுவச் சேவை காலத்தில் இருந்த ஒட்ட வெட்டிய மயிர் காணாமல் போயிருந்தது. நீளமாய் வளர்ந்து பழுப்பு நிறமேற்றப்பட்டுப் பின்னோக்கிப் படியச் சீவப்பட்ட தலைமயிருக்கு அடியில் சியாமளனின் பெரிய நெற்றி பளபளத்தது. நாங்கள் அமர்ந்திருந்த மதுபான விடுதியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த அவனது கனமஞ்சள் கண்கள் ஏதோ ஒரு பெயரிடப்படாத வன்மத்தில் எரிந்தன.
அவன் தன்னைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாவிட்டாலும் சியாமளனின் பணக்காரத்தனத்தின் மீதும் செல்வாக்கின்மீதும் எனக்கு எப்போதும் சந்தேகம் வந்ததே இல்லை. என்னைப் பொறுத்தவரை சியாமளனின் செல்வச் செழிப்பு என்பது அவன் கால்களில் அணிந்திருக்கும் மிக விலையுயர்ந்த கூரிய முனைகளையுடைய கறுப்புநிறத் தோல் காலணிகளின் மினுமினுப்பு. கூந்தல் தைலத்தைப்போன்ற மெல்லிய தோல் வாசனை. அவன் கால்சட்டையின் தொடைப்பாகத்தின் பாம்புகள் நகர்வதுபோன்ற மெல்லிய சரசரப்பும் சியாமளின் சட்டையின்மீது சிறிய வெள்ளைப் பூக்களாய்ப் பூத்திருக்கும் பீரின் கசப்பு வீச்சமும்.
ஆள் பாதி, ஆடை பாதி..
“உனக்கு ஒன்றரைக்கண் ஜெரால்டை நினைவிருக்கா ஸ்ரீதர்? ஒல்லியா, ஒசரமா. ஒரே நேரத்துல ரெண்டு மூணு திசையப் பார்க்குற மாதிரி முட்டைக் கண்ணோட?”
சியாமளன் என் கண்களுக்கு முன்னால் தனது வலதுகை சுண்டு விரலை நீட்டிக் கொஞ்சம் அசிங்கமாய் ஆட்டினான். விடுதியின் இருட்டில் அவன் விரலின் உட்பகுதி திடுக்கிடும் வெண்மையைக் கொண்டிருந்தது. என் கண்களின் முன்னால் ஒல்லிக்குச்சி உடம்போடு, அக்குளில் வியர்வை வட்டங்கள் கருத்திருக்க இராணுவப் பச்சை டீ சட்டையில் மெஸ்ஸின் பார் மேடைக்குப் பின்னால் ஒரே நேரத்தில் முட்டைக் கண்கள் பிதுங்க எல்லாத் திசைகளையும் பார்த்தபடி குழப்பம் நிறைந்த முகத்தோடு நிற்கும் ஒரு வாலிபனின் உருவம் சியாமளனின் சட்டைப்பைக்குள் திணிக்கப்பட்டிருந்த ஒரு கத்தை ஐம்பது டாலர் நோட்டுகளின் மினுமினுப்பாக எழுந்து சடசடத்தது.
“கேம்புக்குப் பின்னால இருந்த மொட்டைச் சரிவுல கண்களக் கட்டிகிட்டுச் சைக்கிள் விடப்போய் காங்கீரிட் பங்கர் சுவத்துல சொருகி பல்லு, கண்ணு, வாயி, முகர எல்லாம் சிதறிச் சின்னாபின்னமாகச் செத்துப் போய்க் கிடந்தானே.”
சியாமளன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பீர் கோப்பையின் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த சிறுநுரையை ஆள்காட்டி விரலால் தட்டிவிட்டபடியே பேசினான். ஏதோ ஒரு மிகப் பெரிய நகைச்சுவையைச் சொல்லிவிட்டதுபோல அவனது பெரிய உடம்பு எந்தவொரு சத்தமுமில்லாமல் குலுங்கி அடங்கியது. சியாமளன் ஆள்காட்டி விரலால் தட்டிவிட்ட பீர் நுரை பறந்து சென்று எங்கள் இருவருக்கும் இடையிலிருந்த முக்காலியின் மீது மாட்டியிருந்த தோலுறைமீது பட்டுத் தெறிப்பதை நான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நீதான் கண்ணக் கட்டிகிட்டு அப்படிச் சைக்கிளச் சரியா ஓட்டினா அவனுக்கு ஒரு புது மோட்டார் சைக்கிள வாங்கித் தரதா சொன்னியாமே.”
அப்படிச் சொல்லும்போது என் வாய் நிறைய கசப்பு நிறைந்திருந்தது. குடித்துக் கொண்டிருந்த பீரின் கசப்பு அதன் தங்க நிற வெளிச்சத்துக்குள் நன்றாகக் கலந்து போகச் செய்வதுபோல் கோப்பையின் பிடியை விரல்களால் இறுகப் பற்றிக் கோப்பையை ஒரு பக்கமாய்ச் சாய்ந்து அதன் கனத்த அடிப்பாகத்தை மேசையில் ஓரிரு முறைப் பலமாகத் தட்டினேன். என் கண்கள் சியாமளனின் கண்களைச் சந்திப்பதை வலிய தவிர்ந்திருந்தது எனக்கு நன்றாகவே தெரிந்தது.
“உங்க அம்மாவ-. வாயில நல்லா வருது. ஜெரால்டோட சாவுக்கு நான்தான் காரணம்னு சொல்வ போலிருக்கு. அவனுக்குப் பின்னால இன்னொருத்தன் வந்தானே. கறுப்பா, எண்ணெய் வடியுற மூஞ்சோட, குட்டையா. தடிமாடு ஒருத்தன். முருகேசோ, ஜெகதீசோ. ஏதோ ஒரு கண்றாவிப் பேரோட.”
“முருகேசு.”
“முருகேசு. பொண்ண கேசு. அவன் கேம்ப்ப விட்டு அனுமதி இல்லாம வெளியேறி நாய்படாத பாடுபட்டு எட்டு மாசம் இராணுவச் சிறைக்கெல்லாம் போனதும் என்னோட தப்புதான்னு சொல்வ போலிருக்கே. அந்தக் குப்பப் பைய இப்ப குப்ப லோரி ஓட்டுறானாம். அவன் பார்க்கப் போனானே அந்தத் தேவடியா சிறுக்கி. அவ கதை என்னாச்சுனு தெரியுமா? அவன் பிடிபட்டு ஜெயிலுக்குப் போனவுடனேயே அவன் பிரெண்டு ஒருத்தனோட போய் ஒட்டிக்கிட்டாளாம். இந்தப் பய ஜெயில்லேர்ந்து வெளியாகுறப்ப அவ நாலு மாசம் கர்ப்பமாம்.”
முருகேசைப் பற்றிச் சியாமளன் எவ்வளவு துல்லியமாக விடாமல் துரத்திக் கொண்டு போய் தெரிந்து வைத்திருக்கிறான். அந்த மதுபான விடுதி குளிரிலும் எனக்குக் கொஞ்சம் வியர்த்தது. சியாமளனின் கண்கள் என்மீது கொஞ்ச நேரம் அசையாமல் பதிந்திருந்ததை உணர்ந்தேன். ரத்தம் மொத்தமும் வற்றியதுபோல் வெண்மை நிறமாக இருந்த அவன் ஆள்காட்டி விரல்மட்டும் அவனுக்கு முன்னாலிருந்த பீர்க் கோப்பையின் விளிம்பைத் தட்டிக் கொண்டிருந்தது.
பீர்க்கோப்பைகளைத் துண்டுத் துணியால் அழுந்த் துடைத்துக்கொண்டே பார் கவுண்டரில் சாய்ந்து சியாமளனின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்ட முருகேசு என் நினைவுக்கு வந்தான்.
இராணுவத்தில் நிரந்தர நோய் உள்ளவர்களில் படித்த பையன்கள் கிளார்க்கு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். கொஞ்சம் படிப்பு குறைவாக உள்ளவர்களை சமையலுக்கும், லாரி ஒட்டுவதற்கும் அனுப்பி வைப்பார்கள். சமையலுக்குப் போனவர்களிலும் கொஞ்சம் நோஞ்சானாகவோ சட்டி கழுவுவதற்கு மட்டுமே லாயக்குள்ளவர்களாக இருப்பவர்கள் மெஸ்ஸில் பீர் பரிமாறுவதற்காக ஒவ்வொரு நாள் மாலையும் ஒருவர் மாறி ஒருவர் சமையல் சார்ஜண்ட் தயாரிக்கும் பணிப்பட்டியலுள்ள முறைப்படி நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ‘மெஸ் பாய்’ என்று பெயர்.
பல்வேறு குடும்ப மற்றும் உறவு பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் மந்தபுத்தி உள்ள அப்படிப்பட்ட பையன்களுக்குப் பெண்மையை அதீதமாகக் காட்டும் கொஞ்சம் பெரிய முலையும், வாளிப்பான கூந்தலும், பெரிய கண்களும், சாயம் தீட்டிய தடித்த உதடுகளும் உள்ள பளபளப்பான பெண்களும், ஹாண்டில்பாரை முறுக்கினால் பெரிதாய்ச் சத்தமிடும், துப்புரவாகத் துடைத்து வைக்கப்பட்டிருக்கும் பளிச்சென்ற வண்ணங்களையுடைய மோட்டார் சைக்கிள்களுமே உலகம்.
“அவன் உனக்குப் பீர் ஊற்றிக் கொடுக்குறப்ப எல்லாம் சதா சர்வ காலமும் நீ கேம்ப்லயே கிடந்தா உன் கேர்ள்பிரண்ட வேற எவனாவது ஓட்டிகிட்டுப் போப்போறான்னு நீ சொல்லிகிட்டே இருந்த. அந்த வயசுல இருக்குற ஒருத்தன் வேற என்னத்தான் பண்ணுவான்? அதுலயும் ஜாஸ்தி படிக்காதவன்.” என்றேன்.
சியாமளன் தனது மார்புக்கூட்டை எக்கி எக்கி தொண்டையில் மாட்டியிருக்கும் கோழையை வெளியேற்றுவதைப்போல் அசிங்கமாகச் சத்தமெழச் சிரித்தான்.
2. வேணுவின் கதை
ஆனால் இந்த இருவரின் முடிவுகூட சியாமளனின் இராணுவ வாழ்க்கையில் உண்மையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஜெரால்டையும் முருகேசையும் தொடர்ந்து வேணு என்ற ஒரு பையன் மெஸ் பாயாக நியமிக்கப்பட்டான். வேணுதான் முன்கூறிய இருவரையும்விட நீண்ட நெடுநாள்களுக்கு எங்களுக்குப் பீர் பரிமாறியது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால் வேணு ஒரு பெண்ணாய் இருந்திருந்தால் அந்தக் கேம்பையே விலைக்கு வாங்கியிருப்பான். ஒரு பேரழகிக்குரிய அத்தனை உருவப் பொலிவும் நளினமும் அவனுக்கு இயல்பிலேயே அமைந்திருந்தன.
வெட்டிவைத்த வெண்ணெய்போல் வழவழப்பானதாகவும் சுடர்மிக்கதாகவுமிருந்த வேணுவின் வெண்ணிற சருமத்தையும், மழைக்கால இரவின் ஈரமும் குளிர்ச்சியும் நிறைந்திருந்திருந்த அவனது பெரிய கண்களையும் பார்த்து முதன்முறையாகப் பாருக்குள் நுழைந்தவர்களைப் பார்த்திருக்கிருக்கிறேன், கவுண்டருக்குப் பின்புறமாய் மர அடுக்குகளில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் மது பாட்டில்களை இரு கைகளில் பிடித்துக் குலுக்கி மதுவை சின்னஞ்சிறிய கிளாஸ்களில் ஊற்றி பார் மேடையில் சற்றே வழுக்கிய விதமாய்ப் பரிமாறும்போது நாட்டியம்போல திரும்பும் அவனது குறுகலான இடுப்பின் லாவகத்தைப் பார்த்துச் சில மேலதிகாரிகளே அவனிடம் பேசும்போது தங்கள் பதவியின் கர்வத்தை மறந்து மிக மென்மையாகப் பேசுவார்கள்.
அப்படிப்பட்ட வேணுதான் ஓரிரவு மெஸ்ஸில் வேலை முடிந்தபிறகு கடைநிலை சோல்ஜர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பன்னிரண்டு பேர் படுக்கக் கூடிய அகலமும் உயரமும் நிறைந்த பழைய பிரிட்டிஷ் பாராக்ஸ் அறையின் உச்சியில் தொங்கிய மின்விசிறியில் தூக்கு மாட்டிச் செத்துப் போனான். வேணு செத்த பின்பு சில வாரங்களுக்குச் சியாமளன் பயிற்சிகளின் இடையிடையே சுத்தமான முழு இராணுவச் சீருடைக்கு மாறிக் கைகளில் ஒரு கோப்போடு எங்கெங்கோ போய் வந்தான். அந்த நேரத்தில் மெஸ்ஸில் நான் மட்டும் தனியாக் குடிக்க ஆரம்பித்திருந்தேன். மெஸ்ஸில் மது பரிமாற வெளியிலிருந்து முதன்முறையாக நடுவயது சீனன் ஒருவனை நியமித்திருந்தார்கள்.
அதன்பிறகு நடந்தவை யாவும் சியாமளனின் குடும்பப் பின்னணியைப் பற்றிய பேச்சைப்போலவே அடங்கிய குரல்களின் மெல்லிய புலம்பல்களாகவும், தூரத்தில் எங்கோ தனது அதீத சக்தியனைத்தையும் கட்டுப்படுத்தி மென்மையான மணற்குன்றுகளைத் தழுவி மெல்ல மேலேறும் அலைகளின் சலசலப்பாகவுமே என் காதுகளை எட்டின. அப்படிப் பேசப்பட்ட வார்த்தைகளும் இராணுவ முகாமின் மாடிப் படிக்கட்டுத் திருப்பங்களிலும், பயிற்சி ஓய்ந்திருக்கும் வேளையில் நிழல் குவிந்திருக்கும் கட்டட மூலைகளில் தீக்குச்சி உரசி ஏற்றப்படும் சிகரெட்டுகளின் மங்கிய வெளிச்சத்திலும், முகாமில் கட்டாயமாய் விளக்கணைக்க வேண்டிய இரவு பத்து மணிக்கு எழுப்பப்படும் சங்கொலிக்குப் பிறகு இருட்டில் பாராக்ஸ் படுக்கை வரிசைகளுக்கிடையில் தங்கிய கனத்த இருட்டிலும் மட்டுமே பேசப்பட்டன.
சிலர் சியாமளன் வேணுவைக் கேலி செய்தே தற்கொலைக்குத் தூண்டினான் என்றார்கள். மற்றவர்களோ வேணு அடிக்கடி முகாமில் குரல்கள் அடங்கிய பிறகு சியாமளனுக்குத் தரப்பட்டிருந்த அதிகாரிகளுக்கான தனியறைக்கு அருகில் உலாத்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக விவரித்தார்கள்.
சிலர் ஒரு நாள் இரவு மெஸ்ஸின் பின் பக்கமாயிருந்த இருட்டிலிருந்து சியாமளனும் வேணுவும் வெளிபட்டதைத் தங்கள் இரண்டு கண்களாலும் பார்த்ததாகக் கூறினார்கள். அவர்கள் அப்படி வெளியேறியபோது வேணு தனது கால்சட்டையின் இடுப்பை மீண்டும் மீண்டும் சரி செய்து கொண்டிருந்தானாம். நடை மோசமாகத் தள்ளாடியதால் விழப்போனவனைச் சியாமளன் பிடித்துக் கொள்ளப் போனானாம். அப்போது வேணு சியாமளனின் பெரிய உடம்பை முழங்கையால் தள்ளி ‘என் பக்கம் வராதே! என்னை அசுத்தப்படுத்திவிட்டாய் – போய்விடு’ என்று பதறிய குரலில் சொன்னானாம்.
முகாமில் இருந்த வீர்ர்கள் அனைவரும் பாரில் மதுபானம் பரிமாற வரவழைக்கப்பட்டிருந்த மத்திய வயது சீனனின் சிடுசிடுப்புக்கும் மந்தமான அசைவுகளுக்கும் எங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் சியாமளன் மீண்டும் பழையபடி முகாமின் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி வந்தான். அதன்பிறகு அவன் பயிற்சிகளின் நடுவில் முழுச் சீருடைக்கு மாறிக் கோப்புகளோடு எங்கும் போய்வரவில்லை. சியாமளனின் தந்தை தனது பணபலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவனைக் காப்பாற்றிவிட்டதாக முகாமில் நிழல்களின் அசைவுகளைப் போன்ற அதே தீனமான குரல்களில் எல்லோரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
சியாமளனோ தனக்கெதிராகக் கிளம்பும் நிழல்களையே உண்டு பிரகாசமாய் ஜ்வலிக்கும் ஏதோ ஒரு புதுவகை அசுரனைப்போல் மிகுந்த பொலிவோடு இராணுவப் பயிற்சியில் மீதமிருந்த சொச்ச காலத்துக்கு எங்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தான்.
நான் சியாமளனின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தபோது அவனது சிவந்த நாக்கு நுனி அவனுடைய ஈரம் மிதக்கும் தடித்த உதடுகளை ஒரு முறை துப்புரவாய்த் துடைத்துவிட்டு மதுபான விடுதியின் இருட்டில் உருவமற்றுப் போய்விட்டதைப்போன்று இருந்த அவன் வாய்க்குள் பின்வாங்கிக் கொண்டிருந்தது. சியாமளனின் கண்ணிமைகள் மிக விநோதமானதும் மிக அதிகமான தித்திப்பு நிறைந்ததுமான ஒரு போதைக்குள் மூழ்க ஆரம்பித்திருப்பவைபோல் அவனுடைய இடுங்கிய கண்களின்மீது கனத்துக் கிடந்தன.
3. இரண்டு பழைய கதைகள்
சியாமளன் அவன் அமர்ந்திருந்த முக்காலியை நன்றாகப் பின்னுக்குத் தள்ளி அவனுடைய உடம்பின் நடுப்பாகமும் தொந்தியும் நன்கு சரிவதற்கு வசதியாக கால் அகட்டி அமர்ந்தான். அவன் கண்கள் இப்போது என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
பின்பு சியாமளன் பீரின் கசப்பு நிறைந்த கரடுமுரடான ஓர் அந்நியக் குரலில் பேசுவதுபோல் பேசினான்.
“உனக்கு ஒண்ணு தெரியுமா, ஸ்ரீதர்? வேணுவோட அம்மா ரொம்ப நாளா எங்க வீட்டுலதான் வேலைக்காரியா இருந்தா.”
சியாமளன் இப்படிச் சொல்வான் என்று ஏதோ ஒரு காரணத்துக்காய் நான் முன்னாலேயே ஊகித்திருந்தேன். ஆனாலும் அவன் அப்படிச் சொன்னதற்குப் பிறகு என்னை மீண்டும் ஒருகணம் குழப்பம் சூழ்ந்து கொண்டது. பின்பு சற்றே முன் தள்ளியிருக்கும் சியாமளனின் மலைப்பாம்பினைப் போன்ற முக அமைப்பையும் முக்காலியை உடம்பால் சுற்றியிருப்பதைப்போல் அவனிடமிருந்து எல்லாத் திசைகளிலும் வழிந்து கொண்டிருந்த அவன் உடம்பின் சதைப்பெருக்கையும் பார்த்தபோது எனக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று புரிவதுபோல தோன்றியது.
“ஆரம்பத்துல போரடிச்சுப் பண்ணதுதான். படிப்பு மொத்தத்தையும் பசங்க மட்டும் படிக்குற ஸ்கூல்ல மாத்திரமே முடிச்ச பையனுக்கு ஒரு பொம்பளைய நிர்வாணமாப் பார்க்க ஆசை இருக்குமா, என்ன? ஆனா அந்த சூம்புன முலைகளையும் நட்டுக்கிட்டு நின்ன மார்புக்காம்புகளையும் இடுப்போரமா தொங்குன சதையையும் மீறி நான் கொடுக்குறேன்னு சொன்ன பணத்துக்காக அம்மணக்கட்டையா நின்ன கல்யாணமான பொம்பளயப் பார்க்கப் பார்க்க ஒரு குறுகுறுப்பு ஏற ஆரம்பிச்சது உண்மைதான். அதுலயும் என் செல்போன்ல உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்டப்ப கேவலம் நூறு வெள்ளிக்காக எந்தப் பக்கம் திரும்பி நின்னா அழகா தெரிவானு யோசிச்சு நின்ன வேணுவோட அம்மாவ பார்த்தப்ப அந்தக் குறுகுறுப்பு போதையா மாறிச்சு. மத்தவங்களோட இயலாமையை ரசிக்கறதுல ஏற்படுற போதை. ஒண்ணு சொல்லட்டுமா ஸ்ரீதரா. மத்தவங்களோட இயலாமையை வச்சு அவங்கள நம்ம இஷ்ட த்துக்கு ஆட்டிவைக்குற போதை இருக்கே, அது இந்தப் பீர் தர போதையவிட பெருசு.”
சியாமளன் கோப்பையிலிருந்த பீரை மடமடவென்று குடித்து முடித்துவிட்டு உதடுகளை வாய்க்குள் சப்பி ‘பக்’ என்ற சத்தமெழ நிறுத்தினான்.
‘ஆனாலும் சியாமளன் – அவன் அம்மா ‘நியூட்டா’ இருக்குற போட்டோக்கள நீ வேணுகிட்ட காட்டியிருக்க வேணாம்.”
சியாமளன் பின்பக்கத்தை மட்டும் மறைக்கும் அளவுக்கு அணியப்பட்டிருந்த குட்டைப்பாவாடை குலுங்க எங்களைக் கடந்து போன மதுபான விடுதி சர்வர் பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். பிலிப்பினோக்காரி என்று அப்பட்டமாய்த் தெரிந்தது. அவளுடைய உடம்பு வாகுக்குப் பொறுத்தமே இல்லாத இறுக்கமான ஆடைகளுக்குள் தன்னை நுழைத்திருந்தாள். உடம்புச் சதை அங்கும் இங்கும் ஆடைக்குள்ளிருந்து பிதுங்கியதால் அவள் அளவுக்கு அதிகமாய்ப் பொருள்கள் அமுக்கிக் கட்டப்பட்ட மூட்டைபோல காட்சியளித்தாள்.
“நாம உடுத்துற உடுப்புக்கும் நம்ம இயலாமைக்கும் நிறைய தொடர்பு இருக்கு ஸ்ரீதர். நாற்பத்து அஞ்சு வயசுக்கு அவ சேர்த்து வச்சிருந்த அவ மொத்த இயலாமையும்தான் வேணுவோட வயசான அம்மாவ எனக்கு முன்னால அம்மணக்கட்டையா நிக்க வச்சது. ஜெரால்ட், முருகேஸ், வேணுங்கிற மூணு பேரோட இயலாமைதான் அவங்கள சாவுக்குக் கொண்டும் போனது. அப்பா, அம்மா, தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க, கட்டிக்கப் போற பொண்ணுனு எல்லார் முன்னாடியும் எல்லாத்தையும் அவுத்துப் போட்டு நிக்குற மாதிரியான அசிங்கமா ஒரு சாவு.”
‘இந்தக் கண்றாவியச் சொல்லத்தான் இத்தனை நாளைக்கப்புறம் பீரடிக்கக் கூப்பிட்டியா?”
”இல்லை, இத்தனை காரியத்தையும் நான்தான் செஞ்சேன்னு தெரிஞ்சிருந்தும் இந்த எட்டு வருஷத்துல என்கூட உக்கார்ந்து எத்தனை பீர் ஓசியில குடிச்சுத் தீர்த்திருப்ப. உன்னோட அந்த இயலாமையப் பார்த்துச் ரசிக்கணும்னு தோணுச்சு.”
தனது பீர்க் கோப்பையின் பிடியை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்த சியாமளன் மீண்டும் ஏதோ நினைவுக்கு வந்தவன்போல் –
“முன்னாலயே இதை நான் உன்கிட்ட சொல்லியிருப்பேன். ஆனா நீ என்மேல புகார் சுமத்தி இராணுவ மேலிடத்துக்கு இரகசியமா எழுதுன புகார் பத்துன தகவல் சமீபத்துலதான் எனக்கு தெரிய வந்தது. அப்பவே நீ பெரிய எழுத்தாளன்தாண்டா, இல்ல?”
எக்கி எக்கி மார்பிலிருந்து கோழையை வெளியேற்றுவதுபோல் பெரிதாய் சிரித்தான். சியாமளனைச் சந்தித்த நிமிடத்திலிருந்து அந்த இரவு முழுக்க நான் எனக்குள் அடக்கி வைத்திருந்த கோபம் என் தலைக்கேறியது. என் கையிலிருந்த பீர் கோப்பையைச் சியாமளன்மீது விசிறியடிக்க நினைத்து என் கையை உயர்த்தினேன். ஆனால் கடைசி நிமிடத்தில் கோப்பையை மேசையில் தேங்கியிருக்கும் தண்ணீர் வட்டத்திலிருந்து நகர்த்தி வைப்பதைப்போல் பாவனை செய்து கையகட்டி மேசையின் வேறொரு இடத்தில் வைத்தேன். இப்போது என் நெற்றி முழுக்க வியர்வை அரும்பியிருந்தது.
சியாமளன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான்.
“இந்த நேரத்துலகூட நாகரிகம்ங்கிற பேர்ல என்னை அடிக்க முடியாத உன் இயலாமையப் பார்த்து நான் பரிதாபப்படுறேன் ஸ்ரீதர். ஜெரால்ட், முருகேஸ், வேணு இவங்களோட சாவு போலவே உன் இயலாமையும் எனக்கு ரொம்ப வேடிக்கையா படுது.”
சியாமளன் மீண்டும் முன்னால் நகர்ந்து இருவருக்குமிடையே இருந்த மேசைமீது தனது கனத்த உடல் மொத்தத்தையும் சாய்த்து அமர்ந்தான். மேசையை நிறைத்திருந்த பீர் கோப்பைகள் ஒன்றோடொன்று மோதி விடாமல் கிணுகிணுத்தன.
“எங்கயோ படிச்சிருக்கேன் ஸ்ரீதர். துரியோதனனோட சபையில திரௌபதிய உடுப்புக் கழட்டித் துச்சாதனன் அம்மணமாக்குனப்ப கௌரவர்கள்ள மிச்சமிருந்த மத்த தொண்ணூத்து ஒம்பது பேரும் கைகட்டிப் பார்த்துகிட்டுத்தான் இருந்தாங்களாம். உடுப்பக் கழட்டுனவன் ஒருத்தன். பார்த்தவங்க தொண்ணூத்து ஒம்பது பேர். இதுல யாரு உண்மையில அரக்கன்னு நான் எப்பவும் யோசிப்பேன். நீ சொல்லு ஸ்ரீதர். நீதான் பெரிய எழுத்தாளனாச்சே. திரௌபதிய அம்மணமாக்குன அந்த ஒரு ஆள்மட்டும் அரக்கனா, இல்ல பார்த்துகிட்டு இருந்த எல்லாருமா?”
நான் பீர்க் கோப்பையின் பிடியை இறுகப் பற்றியிருந்த என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள்ளிருந்து என்னை யாரோ துகிலுரித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களைக் கடந்து போன பிலிப்பினோகாரி மீண்டும் எங்களிடம் வந்து சியாமளனின்மீது முட்டுவதுபோல் நின்று இன்னொரு பீர் வேண்டுமா என்று கேட்டாள். சியாமளன் அருவருப்பு நிறைந்த முகத்தோடு சிறு கையசைப்பில் அவளை அப்புறப்படுத்தினான். அவள் திரும்பி நடந்து போகும்போது அவள் உடம்பை மறைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அவளுடைய ஆடைகளையே சின்ன புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்..
கொஞ்ச நேரம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளன் தொண்டையைச் செறுமிக் கொண்டு காறி உமிழ்வதுபோல் –
”இதுக்குப் பதிலா இவள முழுக்க அவுத்துப் போட்டுகிட்டு நிக்கச் சொல்லியிருக்கலாம்…” என்றான்.
சியாமளனின் கனமஞ்சள் நிறக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். நூறுபேர் இருந்த சபையில் துணிகள் உரியப்பட்டு நின்ற அந்தப் புராண காலத்துப் பெண்மணி புகழ்பெற்றது அவள் ஆடையாலா அல்லது அவள் அம்மணத்தாலா?
ஆள் பாதி, ஆடை பாதி.
அவன் கண்களில் சரி விகிதத்துக்குப் கருணையும் வன்மமும் கலந்திருந்தன.
***
-சித்துராஜ் பொன்ராஜ்