Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இராட்சத தொட்டாச்சுருங்கி (கட்டுகஸ் (சிங்களம்)
இலங்கையில் அறிமுகம்செய்யப்பட்ட வித்துக்களைக்கொண்டு இனம்பெருக்கும், 4—6 மீற்றர் உயரம் வரை வளரும், வளைந்த கூரான முட்களைக் கொண்டுள்ள மெக்சிகோ, தெற்கு வெனிசுவெலா, மற்றும் மத்திய அமேசன் பள்ளத்தாக்குப் பிரதேசங்களை பூர்வீகமாகக் கொண்ட, உலகத்தின் மிக மோசமான முதல் 100 அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களுக்குள்
அடங்கும் தாவரம் அல்லது பல்லாண்டு செடி அல்லது சிறிய மரமாகும். ஆனால் ஆபிரிக்காவில் இந்த மரங்கள் சுமார் 200 வருடங்களாகவே காணப்படுகின்றது.
புதிய பிரதேசங்களில் இந்தத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்களாக, நிலத்தோற்றத்தை விருத்திசெய்ய, மண்ணரிப்பைத் தடுத்தல் போன்ற பல காரணங்களை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தும் நோக்கமாகவோ அல்லது தவறுதலாகவோ இந்தத் தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில், இவை சிக்கலான விவசாய, சுற்றுச்சூழல், பொருளாதார
பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதன் பூர்வீக நாடுகளில், இந்தத் தாவரங்களினால் ஏற்பட்ட பிரச்சினைகள் மிகவும் குறைவாகும். இந்தத் தாவரங்கள் இரண்டு மீற்றருக்கும் குறைந்த உயரமுள்ள சிறிய பற்றைகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படுகின்றது. ஆபிரிக்க, ஆசிய, சில பசுபிக் தீவுகள், அவுஸ்தரேலியாவின் வட பிராந்தியங்கள் போன்றவைகளில் இந்தத் தாவரங்கள்
மிகவும் ஆக்ரோசமாக உயரமாகவும், அடர்த்தியாகவும், பாரிய நிலப்பரப்பை பிடித்தும் வளர்ந்து, சுதேசிய இயற்கையான உயிரின பல்வகைமைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
இந்த அந்நிய ஆக்கிரமிப்பு தாவரமானது, இலங்கையின் மத்திய மாகாணத்தின் மகாவலிக் கங்கையின் கரைகளிலேயே 1997ம் ஆண்டு முதன் முறையாக அடையாளம் காணப்பட்டது. அப்போது மகாவலிக் கங்கைளின் கரைகளை உறுதிப்படுத்த இந்தத் தாவரங்கள் உதவுவதாகக் கருதப்பட்டன. இருந்தும் தொடர்ச்சியான கவனையீனம் காரணமாக, இந்தத் தாவரங்கள்
1 கிலோ மீற்றர் அகல, சுமார் 20 – 25 கிலோமீற்றர் நீள அளவிற்கு மகாவலிக் கரைகளின் வழி நெடுக அப்போது காணப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டளவில் இலங்கையின் 4 மாவட்டங்கள், 3 மாகாணங்கள், 4 விவசாய சூழலியல் வலயங்கள் உள்ளடங்கலாக 46 வலங்களில் மிக வேகமாகப் பரவியிருந்தது. அத்துடன் 2017ம் ஆண்டளவில் மகாவலியின் மேல் நீரேந்து பகுதிகளில், 30 – 35 கிலோமீற்றர் தூரத்திற்கு தெளிவாக தெரியுமளவிற்கு பரவியிருக்கிறது. மகாவலி
நதிக்கரையைத் தவிர, கைவிடப்பட்ட வயல்வெளிகள், ஆறு, கரைகள், வீட்டுத் தோட்டங்கள், வீதியோரங்கள். நீர்வழிகள், பதிய கட்ட வேலைகள் நடக்கும் ஸ்தானங்கள் போன்றவைகளிலும் தற்போது பரவிக் காணப்படுகின்றன.
1980ம் ஆண்டுகளின் ஆரம்பங்களிலிருந்தே இந்தத் தாவரங்கள் குடியேற ஆரம்பித்தன. விவசாய நிலங்கள், கைவிடப்பட்டட நிலங்கள், இயற்கை வன ஒதுக்குகள் போன்ற சூழற்றொகுதிகள் இந்தத் தாவரங்கள் ஏற்படுத்திய எதிர்மறையான விளைவுகளால் கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்குள்ளாகின. இதனால் பயிர்ச்செய்கை நிலங்களினதும், மற்றைய நிலங்களினதும் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டதுடன், நிலங்களின் பெறுமதியும் மதிப்புக் குறையத் தொடங்கின. இந்த தாவரங்கள் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. நீரோட்டத்தின் மூலம் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்தத் தாவரத்தின் விதைகள் பரப்பப்படுகின்றன. அத்துடன் மனிதர்களின் ஆடைகள், விலங்குகள், கால்நடைகளின் தோல் உரோமங்கள், பறவைகளின் இறகுகள், வாகனங்களின் சக்கரங்கள் போன்றவைகளுடன்
ஒட்டுப்பட்டும் சிறியளவிலான விதைகள் பரப்பப்படுகின்றன. இந்த மரத்தின் விதைகளின் தடித்த வித்துறைகள் மண்ணினால் கீறப்படுவதன் காரணமாக (scarification) பரிகரிப்பு செய்யப்பட்ட விதைகளே, பரிகரிக்கப்படாத, மற்றும் நீரில் ஊறவைக்கப்பட்ட விதைகளைவிட அதிக முளைதிறன் கொண்டு காணப்படுகின்றன. அத்துடன், நுண்ணுயிர்த்தாக்கம், வெப்பநிலை ஏற்றத் தாழ்வுகள், மண்ணரிப்பு, நீர் ஓட்டம். உபகரணங்கள் பாவனை போன்றவைகள்
காரணமாகவும் தடித்த வித்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதனால், இந்த வித்துக்களுக்கு முளைதிறன் அதிகரிக்கின்றன.
வருடம் முழுவதும் பூக்கக்கூடிய, 13.4 சென்ரிமீற்றரான காய்களில் 8-20 விதைகள் காணப்படும். இதன் விதைகள் பல வருடங்களுக்கு உறங்கு நிலையிலிருந்து முளைக்கக்கூடியன. மணற்பாங்கான மணலுக்குள் இருக்கும், விதைகள் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கக்கூடியன. இதனையும் விட, நிலைமைகளைப் பொறுத்து இன்னும் நீண்ட காலத்திற்குப் பிறகும் முளைக்கலாம். ஆனால் களித் தரையானது, முளைதிறனைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தாவரங்களானது 12 வாரங்களுக்குப் பிறகு, 77 சென்ரிமிற்றர் உயரத்தை அடைந்தவுடன், பூக்கத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இரு பூக்களுக்க மேல் உருவாக்காது. அத்துடன் விதைகளையும் உருவாக்காது. 18 வாரங்களுக்குப் பிறகே காய்கள் காய்க்கத் தொடங்கி, விதைகள் உருவாகத் தொடங்கும். அப்போது 4 பூக்களுக்கு மேல் பூக்காது. ஆரம்பத்தில்
மெதுவாக வளரும் இத்தாவரங்களானது, 8-12 வாரங்களுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு 2.4 சென்ரிமீற்றர் வேகத்தில் வளரக்கூடியன. வேர்களின் வளர்ச்சியும் 12- 18 வாரங்களில் அதிகளவாக காணப்படும். இத்தாவரத்தின் பரம்பலுக்கு, ஆறுகளின் ஓடும் நீரே முக்கிய காரணமாகும். அத்துடன் நாடு தழுவிய பரம்பலுக்கு, கட்டட வேலைகளுக்காக வாகனங்களில் மண் ஓரிடத்திலிருந்து நாட்டின் பல பாகங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டமையே மிக முக்கிய காரணமாகும்.
இராட்சத தொட்டாச்சுருங்கியினால் பூர்வீக இனங்களுக்கும், வாழிடங்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள்:
மேய்ச்சல் நிலங்களை, குறிப்பாக வெள்ளப் பள்ளத்தாக்கு சமவெளிகளில் குறைத்துள்ளன. அத்துடன் உயிரியல் பல்வகைமைக்குரிய வாழிடங்களின் அளவையும் குறைத்துள்ளன. நீர்ப் பாதைகளைத் தடைசெய்து, பிரயாணத்திற்கும், மீன்பிடிக்கும் தடையாய் இருப்பதுடன், மனிதர்கள் தங்களின் நாளாந்த குளித்தல், கழுவுதல், நீந்துதல் போன்ற தேவைகளை
நிறைவேற்றவும் தடையாயிருக்கின்றது. இராட்சத தொட்டாச்சுருங்கியானது, வனசீவராசிகளின் உணவுத் தேவைநிறைவேற்றும் இடங்களை ஆக்கிரமித்து, அந்த இடங்களிலுள்ள வன விலங்குகளையும் வேறு இடங்களுக்கு துரத்தியுள்ளன. இயற்கையான நீர் வரத்து பாதைகளையும், நீர்ப்பாசனப் பாதைகளையும் தடைசெய்து அங்கு இருந்த பூர்வீக
இனங்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. மருத மரங்கள் இயற்கையாகவே நீர்த் தொகுதிகளின் கரைகளில் விதைகளாகப் பரம்பி, நாற்றுக்களாகி மரங்களாக வளர்ந்து வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும். ஆனால் இந்த இராட்சத தொட்டாச் சுருங்கித் தாவரங்கள் இந்த மருத மரங்களை வளரவிடாது, வெள்ளப்பெருக்கையும் அதிகரித்துள்ளன. அத்துடன்
பூர்விக இனத்தாவரங்களை அழித்து, தான் மட்டும் மிக அடர்த்தியான முள்நிறைந்த பற்றைகளாக வளர்ந்து, விலங்குகளும், மனிதர்களும் உள்நுழையாதவாறு பல தடைகளையும் ஏற்படுத்தியுள்ளன.
இராட்சத தொட்டாச்சுருங்கியைக் கட்டுப்படுத்தல்:
இராட்சத தொட்டாச்சுருங்கியை பல்வேறு முறைகளில் பல்வேறு நாடுகளில் கட்டுப்படுத்துகின்றார்கள். பொறிமுறை கட்டுப்பாடு: பற்றைகளாக அல்லது அடர்த்தியாக வளராத, அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் தாவரங்களை, வெட்டி, வேரோடு பிடுங்கி எரித்துவிடலாம். இந்த முறையானது நிறைய மனிதவலுவை வேண்டிநிற்பது.
இந்த முறையில் தாவரங்களைக் கட்டுப்படுத்தும்போது, இந்த தாவரத்தின் விதைகளின் தடித்தவித்துறை நீக்கப்பட்டு, முளைதிறன் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரசாயன முறை:- இரசாயன முறையில் கட்டுப்படுத்தும்போத சுற்றுச்சூழல் பாரியளவில் மாசடைகின்றது.கிளைபொஸ்பேற் களைநாசினியானது, தாவரத்தின் வாழ்க்கைவட்டத்தின் வெவ்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று முறை 1.44 கிலோகிராம் கிளைபொஸ்பேட்டை ஒரு ஹெக்டேயருக்கு விசிறும்போது, 6 மாத வயதுள்ள கன்றுகளை, இந்த களைநாசினியானது மிகத் திறமையாக கட்டுப்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவுஸ்தரேலியாவில், கிளைபொஸ்பேட் களைநாசினியானது, வான்வழி விசிறல் மூலம் இத்தாவரங்களை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் தரைவழி விசிறல் மூலம் சிறிய பரப்புள்ள தாவரங்களையே கட்டுப்படுத்தலாம். இரசானப் பொருட்களைப் பாவித்து இந்தத் தாவரங்களைக் கட்டுப்படுத்தும்போது, இரசாயனப் பொருட்கள் நீர்ச் சூழற்றொகுதிகளையும், அதன் உயிரினங்களையும் பாதிப்பிற்குள்ளாக்கும்.
எரித்தல்:- இளம், மற்றும் முதிர்ந்த மரங்களை எரித்துக் கட்டுப்படுத்தல் மிகவும் கடினமானது. வேர்களுடன் பிடுங்கி. அவைகளை வெயிலில் உலர்த்தினாலேயே தாவரங்களை முற்றாக எரிப்பது இலகுவானதாக இருக்கும். இருந்தும் இவ்வாறு எரிக்கப்பட்டாலம், எரிக்கப்பட்டு மீதமான தண்டுகளிலிருந்தும், மற்றும் விதைகளிலிருந்தும் புதிய தாவரங்கள்
விருத்தியாவது அவதானிக்கப்பட்டுள்ளது. எரித்தலானது, வித்துக்களின் உறங்குநிலையை நீக்கி, முளைதிறனை அதிகரிக்கச் செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தும் எரித்தலினால் ஏற்படும் உயர்ந்த வெப்பநிலையினால் ஒரு பகுதி விதைகள் அழிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பயிராக்கவியல் முறைகள்:- இராட்சத தொட்டாச்சுருங்கியானது இளம் நிலைகள் காணப்படும் பகுதிகளில் Panicam maximum எனப்படும், கினியா அல்லது மானா புற்கள் ஒரு சதர மீற்றரில் 16 புற்கள் காணப்பட்டால் மிகவும் வினைத்திறனாக இராட்சத தொட்டாச்சுருங்கித் தாவரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மாத வயதுள்ள கினியா அல்லது மானா புற்களின் நாற்றுக்கள், இராட்சத தொட்டாச்சுருங்கியின் விதைகள் முளைப்பதனை தடைசெய்கின்றன. கினியா அல்லது மானா புற்களுடன் இராட்சத தொட்டாச்சுருங்கியானது போட்டியிட முடியாமல் பின்வாங்குகின்றன. ஆனால் கினியா அல்லது மானா இலுக்கு புற்களும் இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பு தாவரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புற்கள் இலங்கையில் 18ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் மேய்ச்சல் தரைகளிலும், புன்னிலங்களிலும் காணப்பட்ட இந்தத் தாவரங்கள் மனித முகாமைத்துவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி, இலங்கையெங்கும் தரிசு நிலங்கள், உலர் பற்றைகள,; புல்வெளிகள், விவசாய நிலங்கள்
போன்ற சூழற்றொகுதிகளில் பரவி அந்நிய ஆக்கிரமிப்பு தாவரமாக மாறியுள்ளது. ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம் ஒன்றை இன்னொரு ஆக்கிரமிப்பு தாவரமொன்றினால் அழிக்கும் போது, நிலைமை மேலும் சிக்கலான ஒன்றாக மாறிவிடும்
நிலைமை காணப்படுகின்றது. இந்தத் தாவரங்கள் நிழலான பகுதிகளில் வளர்ச்சி குறைவாகக் காட்டுவதனால், மருத மரங்களை கரைகளில் நட்டு, நிழலை
ஏற்படுத்தி கட்டுப்படுத்தலாம். கிளிசிறிடியா நடுவதன் மூலமும் இந்தத் தாவரங்களை கட்டுப்படுத்தலாம் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. சோளத்தினதும், பயறினதும் முளைதிறன் சுட்டெண்ணும், இராட்சத தொட்டாச்சுருங்கியின் சுட்டெண்ணும் ஒரே அளவாக இருப்பதனால், இந்தத் தாவரங்கள் இருக்கும் பிரதேசங்களில் சோளப் பயிர்ச்செய்கைகளை
மேற்கொள்ளலாம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள்:- அவுஸ்தரேலியாவில் இராட்சத தொட்டாச்சுருங்கி தாவரங்களை அந்த நாட்டின் பூர்வீக தாவரங்களான Hymenachne acutiglum , Oryza autralensis போன்றவை கட்டுப்படுத்துகின்றன. வேறு நாடுகளில் இந்தத் தாவரங்களில் இலைகளை உண்ணக்கூடிய பலவகையான கிறிசொமெலிட் வண்டினங்கள் காணப்படுவதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இராட்சத தொட்டாச்சுருங்கிபோன்ற அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்கள், விவசாய நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தல், விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனைக் குறைத்தல், சுதேசிய, பூர்வீக, உள்நாட்டு இனங்களுக்கு வளப் பங்கீடுகளுக்கான போட்டிகளை ஏற்படுத்தி அவைகளை அழித்தல், உயிர்ப்பல்வகைமையின் அளவைக் குறைத்தல், அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்ற தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருத்தல், காடுகளின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், எங்களின் இயற்கையான சூழலுக்கு தேவையான இனங்களின் மீளுருவாக்கம் மற்றும்
வளர்ச்சிக்கு இடையூறாக இருத்தல், சூழல்தொகுதியின் பல்வேறு இயக்கங்களுக்கு இடையூறாக இருத்தல், தாவர, விலங்குகளின் இயற்கையான வாழிடங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், நெருங்கிய உள்ளுர் இனங்களுடன் மரபணு கலப்பை ஏற்படுத்தி. மரபணு மாசை உண்டாக்கல், போசணை வட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி
உயிரினங்களின் வாழ்க்கை வட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், காடுகள், சாலையோரங்கள், ரயில் போன்றவைகளில் விபத்துக்களை ஏற்படுத்தலும் (தீ பரவல்), சேதங்களை ஏற்படுத்தல், நீர்பாசன நடவடிக்கைகளில் பாதிப்பு,
மீன்பிடி, வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு, நீர் நிலைகளை மனிதர்கள் பாவிப்பதில் தடைகளை ஏற்படுத்தல், மனித உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தல், சூழலின் அழகைப் பாதித்தல், கட்டுப்படுத்துவதற்கு அதிக செலவையயும் ஏற்படுத்தல் உட்பட மேலம் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பரவல்:- மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவின் மண்டுர், பாலமுனை, தம்பலவத்தை, மற்றும் அந்தலோயா நதியின் கரைகள், இரு மாவட்ட எல்லைகளிலும் காணப்படுகின்றன. பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெற்கு நோக்கி, அம்பிலாந்துறை – வீரமுனை வீதியூடாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குள் பரவத் தொடங்கியிருக்கின்றன. அத்துடன் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவின் பல இடங்களிலும் மிகவும் அடர்த்தியாகவும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த பிரதேச செயலகப் பிரிவுகள் எதிர்நோக்கும் முதன்மையான சுற்றுச்சூழல் பிரச்சினையாக இந்த அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம்
உருவாக்கும் பிரச்சினைகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 2012ம் ஆண்டு பாரிய வெள்ளத்தின் மூலம் தென்னிலங்கையிலிருந்து இந்த மரத்தின் விதைகள் கொண்டு வரப்பட்டு இந்த மரங்கள் பரப்பப்பட்டிருப்பதாக பொது மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றார்கள்.
கட்டுரையாளர் தொடர்ச்சியாக ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, இந்தப் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், தங்களது உத்தியோகத்தர்களின் மூலம் இந்தத் தாவரங்களை படிப்படியாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கட்டுரையாளரும், அவருடைய மாணவர்களும், இந்தத் தாவரங்களை வினைத்திறனாக கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த ஆய்வுகளில், இந்தத் தாவரங்கள் களுதாவளை, மருதமுனைப் பகுதிகளில் வீடுகளில் இயல்பாக வளர்ந்து காணப்படுகின்றன என்பது அறியப்பட்டிருக்கின்றது. இந்தத் தாவரங்களின் தீமை பற்றிய எந்த விடயங்களும் வீட்டுக்காரர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அத்துடன் இந்தத் தாவரங்கள் கட்டட வேலைகளுக்காக தூர இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணிலிருந்த விதைகளின் மூலம் இந்தத் தாவரங்கள் பரம்பப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கான விழிப்புணர்பு:- இலங்கை போன்ற வறிய நாடுகளில் இதனைக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல. ஏனெனில் இதனைக் கட்டுப்படுத்துவற்குரிய நிதி வசதிகளும், மற்றைய வசதிகளும் குறைவு. இதன் காரணமாக இராட்சத தொட்டாச்சுருங்கி
தாவரங்களை அரசாங்கத்தினாலோ அல்லது தனியாரினாலோ இலகுவாக கட்டுப்படுத்த முடியாது. இதனை வினைத்திறனாக கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள் பங்கேற்பு மிக முக்கியமானதாகும். திட்டமிடல் தொடக்கம் மரங்களை அழித்து, அந்த இடங்களில் சுதேசிய மரங்களை நடுதல் வரை பொதுமக்களின் பங்கேற்பு இருத்தல் வேண்டும். இதற்கு பொது
மக்களுக்கும், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். விழிப்புணவை ஏற்படுத்தும் முகமாக, இத்தாவரங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், சிறு நூற்கள் போன்றவை பொது மக்களிடையே விநியோகிக்கப்பட்டு, பல்வேறு மட்டங்களிடையே கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அத்துடன் ஒரு
தாக்கமான இயக்கமாக பொது மக்கள் பங்கேற்புடன் இவை எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
உயிரியல் களைக் கட்டுப்பாட்டிற்கு ஏதாவது வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்பது அரசசார்பற்ற நிறுவனங்களின் துணைகொண்டு ஆய்வுசெய்யப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை மேலே கூறிய அனைத்து களைக்கட்டுப்பாடுகள் இணைந்த (இரசாயன, பௌதிக, பொறிமுறை, எரித்தல், விழிப்புணர்வு, உயிரியல்) கட்டுப்படுத்தும் முறைகளே திறமையாக அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையாகவிருக்கும்.
***
-ஏ.எம். றியாஸ் அகமட்
(சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)