(1)
நல்லதண்ணி கிணற்றடிப்பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து அவள் எனது சைக்கிளை மறித்தாள். மறித்தாள் என்பது மரியாதைக்குரியதாக செயலாக கருதப்படலாம். உண்மையைச் சொல்வதானால், சைக்கிளின் கைப்பிடி நடுஇரும்பின் மீது தனது ஒரேகையை அதிகாரத்தோடு அழுத்தி நிறுத்தினாள். அதற்கு நான்கைந்து விநாடிகளுக்கு முன்னர் “அண்ணா, அண்ணா…” – என்று இரண்டொரு தடவைகள் அவள் அழைத்த குரலுக்கு திரும்பிப்பார்த்து, நானாகவே அவள் பக்கத்துக்கு சைக்கிளைத் திருப்பியிருந்தால், எனது மரியாதைக்கு இவ்வளவு கேடு ஏற்பட்டிருக்காது.
கிணற்றடிக்கு அருகாக உள்ள நெல்லிமரத்துக்குக்கீழிருந்து கச்சான் விற்கின்ற அந்தக்கிழவி அன்றில்லை. பாடசாலைவிட்டு வரும்வழியில் தாமரை பிடுங்குவதற்காக குளத்துக்குள் இறங்கும்போது, அந்தக்கச்சான் கிழவி, கரையிலிருந்து “கொம்மா தேடப்போறாள், ஓடுங்கோடா” – என்று எங்களை துரத்துபவள். அன்று அங்கில்லை. கிணற்றடித் துலாவின் நுனியில் குந்தியிருந்த காகம் ஒன்று, என்னைத் தலைசாய்த்துப் பார்த்துவிட்டு திரும்பவும் இறக்கைகளுக்குள் முகத்தை நுழைத்து உதறியது.
எனக்கும் சாதுவாக உதறியது. சைக்கிளிலிருந்து இறங்கி, அவளோடு அருகில் நடந்து சென்றேன். நெல்லி மர நிழலுக்குச் சென்றபிறகு –
“எங்களப் பாத்திட்டு ஏன் அண்ணா ஓடுறிங்கள். இஞ்ச பாத்தீங்களா, இவ்வளவு ஆயுதங்களும் இவளிட்டத்தான் பொறுப்பு குடுத்திருக்கிறம்”
நீளமாகப்போட்டிருந்த மேசையில் ஒவ்வொரு வடிவத்தில், கறுப்பு – வெள்ளி நிறங்களில், அதுவரை படங்களில்மாத்திரம் பார்த்த, ஆயுதங்கள் படுக்கவைக்கப்பட்டிருந்தன. அவை அத்தனையும் துப்பாக்கிக் குடும்பத்தின் குழந்தைகள் என்பது மாத்திரம்தான் புரிந்தது. மற்றும்படி, அவற்றின் நீளங்களும் துவாரங்களும் வெவ்வெறு அளவில் காணப்பட்டன. அவை எத்தனை கொலைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தன, எத்தனை உடல்களை சீவிச்சரித்தன போன்ற விவரங்கள் எதுவும் தெரியாததுபோல, சத்தமின்றித் தூக்கத்தில் கிடந்தன. சில துப்பாக்கிகளின் இறக்கைகள் கழற்றப்பட்டும் இளைப்பாற வசதியாக துளைகள் துடைக்கப்பட்டுமிருந்தன. எப்போதும் எங்கும் சடசடத்தபடி பார்த்த அந்தத் துப்பாக்கிகள், விறைத்தபடி கிடப்பதைப்பார்க்க வித்தியாசமாக இருந்தது.
நான் துப்பாக்கிகளின்மீது விபரீதமான பார்வையொன்றை பதித்தபடி பதற்றத்தோடு நின்றேன். கண்களில் இயன்றவரை பரிதாபத்தை வரவழைத்துக்கொண்டேன். அதனை அவள் புரிந்துகொண்டாள்.
“எங்களைப்போல உங்களுக்கும் இயக்கத்தில் சேர விருப்பமில்லையா அண்ணா”
இருபக்கமும் வாரி இழுத்த முடியை, இரண்டு பின்னல்களால் வளையங்களாகக் கட்டி, பின்னுக்கு இழுத்து முடிந்திருந்தாள். கண்களும் பார்வையும் வெளுத்துப்போயிருந்தன. குழி விழுந்த தொண்டையிலிருந்து சுரந்த அவளது வார்த்தைகள் ஒருவித ஏக்கம் படிந்தவையாக ஒலித்தனவே தவிர, அதில் நியாயம் இல்லாமல் இல்லை. துப்பாக்கிகளுக்குப் பொறுப்பாக மேசைக்குப்பின்பாக நின்றுகொண்டிருந்தவளும் இப்போது என்னைப் பார்த்தாள். கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாதவனாக அவர்கள் இருவருக்கும் முன்னால் நான் மௌனித்து நிற்பதை அவர்கள் ரசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எனக்கு அது புதிய அனுபவமாக – வெட்கமாக – அவர்கள கேட்;கும் வரைக்கும் என்னில் கண்டறியாத குற்றத்தை திடீரென்று உணர்ந்தவனாக – நின்றுகொண்டிருந்தேன். சைக்கிள் முன்பிடியில் கொழுவியிருந்த புத்தகப்பையை சுரண்டுவது, அப்போதைக்கு அவர்களது பார்வையிலிருந்து எனது கண்களை விலத்தி வைத்திருப்பதற்கு வசதியாக இருந்தது.
“இந்த நாட்டை காப்பாத்துறத்துக்கு எத்தினை எத்தினை அண்ணா – அக்காமார், ஏன் உங்கட வயசிலயே எத்தினபேர் போய் உயிரக்குடுக்கினம். உங்களுக்கு கொஞ்சமும் உறைக்கயில்லையா அண்ணா, எங்களுக்கும் உங்கள மாதிரி வந்து படிக்க தெரியாதா…..”
இப்படி யாராவது தெருவில் மறித்து கேள்விகேட்டால், உடனடியாகத் தனது ஞாபகம் வந்துவிடவேணும் என்று அம்மா அடிக்கடி சொல்வாள். இரண்டு நாட்களுக்கு முன்னரும் பாடசாலைக்குப் புறப்படும்போது, திருநீறைப் பூசிவிட்டபிறகு “வரும்வரைக்கும் அம்மா பாத்துக்கொண்டிருப்பன், பள்ளிக்கூடம் முடிஞ்சா, நேர வீட்டுக்கு வந்திரவேணும், என்ன” – என்ற அம்மாவின் வார்த்தைகள் இப்போது எங்கிருந்தோ கேட்டதுபோலிருந்தது. கூடவே, எப்படியாவது இவர்கள் இருவரிடமிருந்தும் கழன்றுவிடலாம் என்ற தைரியமும் மனதில் தடித்தது.
“உங்கள சண்டைக்கு வரச்சொல்லயில்லை அண்ணா, நீங்கள் வந்து எங்கட வேலைய பாருங்கோ, நாங்கள் சண்டைக்குப்போறம்”
இருவரையும் நிமிர்ந்து பார்த்தேன். அவர்கள் இருவருமே எனது கண்களில் குற்ற உணர்ச்சியை தேடினார்கள். தங்களைப்போல நானும் இயக்கத்தில் சேர்ந்துகொள்ளாதமைக்கான காரணங்களை நான் கூறக்கூடும் என்ற பதில்களையும் தேடினார்கள். அதற்கான எந்த ரேகையும் தெரியாதபோது, கூர்ந்து பார்த்தார்கள். என்னை எனக்குள் உடைத்து அழவைத்துவிடலாம் என்றும் எண்ணியிருப்பார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு அங்கம்தானே. ஆனால், நான் தெருவில் யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா என்று பார்த்தேன். அப்பா மாத்திரம் அந்த வழியால் வந்தால், எவ்வளவு வேகமாக வந்து என்னை மீட்டுச்செல்வார் என்று யோசித்தேன். அவரிடம் வாங்கிய எல்லா அடிகளும் மறந்து, அந்த இடத்தில் வீரனைப்போல பெரும் சித்தரமாக மனதில் தெரிந்தார்.
கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாதவனைப்போல, நான் விறைத்த கட்டையாக நின்றுகொண்டிருந்தது அவர்களின் முயற்சிக்குப் பெரும் தடையாக இருந்தது. மறித்தவள் சொல்ல, மேசைக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தவள் எனது பெயரை எழுதினாள். விலாசத்தையும் தரச்சொன்னாள். குளத்தடி துலா நுனியிலிருந்த காகம் கரைந்தது. அப்பா வருகிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். கோயில் ஐயர்தான் பூசைக்குத் தண்ணியெடுப்பதற்கா குடத்தோடு கிணற்றடிப்பக்கமாக வந்துகொண்டிருந்தார்.
“உடன வரவேணும் எண்டில்லை அண்ணா, யோசிச்சுச் சொல்லுங்கோ”
மேசைக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவள் சொல்லி முடிக்குமுன்னர் சைக்கிளில் நான் ஏறிவிட்டேன்.
வீடு சென்று சேரும் முன்னரே அப்பாவுக்கு எப்படியோ தகவல் போய்விட்டது. வேகமாக சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர், என்னைப் பார்த்துவிட்டு பெரும் பதற்றத்தோடு “எதில வச்சு மறிச்சவங்கள்….? “நான் சொன்னனான் இல்ல, தனிய ஒருநாளும் வரவேண்டாம் எண்டு” “என்ன கேட்டவங்கள்” அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கழற்றி வீசினார்.
அப்பாவே “போ” என்று சொல்லியிருந்தால்கூட எந்த இயக்கத்திலும் போய் சேர்ந்துகொள்வதற்குத் துணிச்சலற்ற எனது இதயம், இப்போதுதான் சீரான வேகத்தில் துடிக்கத்தொடங்கியிருந்தது. பெரியதொரு ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதைப்போல – சண்டைக்களத்தில் குண்டு மழையில் – சீறிவந்த துப்பாக்கி ரவைகளையே – தப்பிவந்துவிட்ட அதிஷ்டமும் பெருமிதமும் உள்ளே நுரைத்தது. அதுபோக, என்னை இயக்கத்தில் சேர்த்துவிடவேண்டும் என்று ஒரு தரப்பும், சேர விடக்கூடாது என்று இன்னொரு தரப்பும் மூர்க்கமாக போராடுகின்ற அந்தத் தருணத்தை நேரடியாக தரிசித்தபோதுதான், என் மீதான மதிப்பும் எனக்கு புரிந்தது. அந்த உணர்வு பிரம்மாதமாக இருந்தது.
வீட்டுக்கருகில் போனவுடனேயே அம்மாவின் அழுகுரல் கேட்டது. திருநீறும் கையுமாக ஓடிவந்து அணைத்தார். என்னை மீண்டும் பெற்றெடுத்த குதூகலத்தில் முத்தத்தினால் ஒற்றியெடுத்தார். ஒற்றிய இடமெல்லாம் திருநீற்றை பூசினார். பக்கத்து வீடுகளிலிருந்தும் சிலர் புதினம் பார்க்க வந்திருந்தார்கள். அன்றுதான் கண்டதைப்போல என்னைப்பார்த்து வித்தியாசமாய் புன்னகைத்தார்கள். அப்போது என்னைப்பற்றி மாத்திரமல்ல, ஆயுதங்களின் எடுப்பும் அதைத்தாங்கும் இயக்கங்களின் மதிப்பும் புரிந்தது.
காகமொன்று முற்றத்து விளாட் மரத்திலிருந்து கரைந்துகொண்டிருந்தது.
(2)
அதற்குப்பிறகு நடந்த இடப்பெயர்வில் நாங்கள் நாவற்குழிப்பக்கமாக வந்திருந்தோம். யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியிருந்தது. வீட்டைவிட்டு கிளம்பும் முன்னர் கிணற்றடி மரத்தில் முற்றியிருந்த செவ்விளநீரை இறக்கிக்கொண்டுப்போவதற்கு அப்பா பெருமுயற்சி செய்துபார்த்தார். அதற்குள், உடனடியாக வெளியேறும்படி ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்த காரணத்தால், இளநீரை அநாதையாக மரத்திலேயே விட்டு கிளம்பவேண்டியதாயிற்று. நாவற்குழிக்கு வந்தபிறகும் அப்பாவுக்கு அந்த இளநீர் ஞாபகமாகவே இருந்தது. அவ்வப்போது, “யாழ்ப்பாணத்தில் இயக்கத்துக்கும் இராணுவத்துக்கும் சண்டை நடக்குதாம்” – என்று கேள்விப்படும்போதெல்லாம் அப்பா வீட்டைப்பற்றி முதலில் யோசிப்பார். பிறகு, அந்த இளநீரைப்பற்றித்தான் அதிகம் கவலைப்படுவார். அம்மாவிடம் சொன்னால், அவர் “தப்பி வந்திட்டம் எண்டு சந்தோஷப்படுங்கோவனப்பா” – என்று ஆறுதல் சொல்லுவார்.
அப்பாவுக்கு இளநீர்போல, எனக்கு இரவில் கடும் இருட்டில் அந்த இரண்டு பெண்களும் அடிக்கடி ஞாபகத்தில் வருவர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலின்றி தலைமடிந்து நின்ற அந்தக்கணம், இருள்திரண்ட இதயத்தின் மேல்வந்து அடிக்கடி மிதக்கும். வெடித்து வறண்ட அவள் உதடுகளும் கூரிய பார்வையும் எண்ணையில்லாமல் பரட்டை விழுந்த முடியும் அப்படியே அச்சொட்டாக இரவில் என் முன் வந்து நிற்கும். இருவரும் இப்போது எங்கே ஓடியிருப்பார்கள்? சண்டைக்காக யாழ்ப்பாணத்தில் நின்றுகொண்டிருப்பார்களா? அல்லது இராணுவம் பொழிந்து தள்ளிய குண்டுகளில் ஒன்று அவர்களை அறுத்துச்சென்றிருக்குமா? இருவரிடமும் அத்தனை ஆயுதங்கள் இருந்ததே? ஆனால், இராணுவத்திடமும் அத்தனை ஆயுதங்கள் இருந்திருக்குமே?
நாவற்குழி இரவுகள் வித்தியாசமானவை. நாங்கள் இடம்பெயர்ந்திருந்த வீட்டுக்கு முன்னாலிருந்த மாமரத்தில், இரவில் கேட்டறியாத ஒலிகளில் பறவைகள் சடசடத்தபடி பறக்கும். அது ஒருவித பயத்தைக்கொடுக்கும். எனக்கு காகம் கரைவது பழக்கமானது மாத்திரமல்லாமல், அது கரைவதை ஓரிரு நாட்கள் கேட்காவிட்டால், வெறுமையாகவுமிருக்கும். மாமரத்தில் சடசடக்கும் பறவையை சிலவேளைகளில் நிலவொளியில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில், வெளியில் போவேன். இரவில் எல்லா பறவைகளும் காகம்போலத்தானிருக்கும். வந்து படுத்துவிடுவேன்.
“எங்கையப்பு இரவில எழும்பி திரியிறாய்” – அம்மா படுக்கையில் எழுந்திருந்து கேட்பார்.
“மாமரத்தில காகம்” – என்;று முதல்தடவை சொன்னபோது திருநீறு பூசிவிட்டார்.
நாவற்குழிக்கு வந்து மூன்றாவது கிழமை, தச்சன்தோப்பு வீதியில், இரண்டு பக்கமும் ஒலிபெருக்கி கட்டிய ஓட்டோ ஒன்று அறிவிப்பு செய்தபடி போனது. நாங்கள் பேணிப்பந்து விளையாடத்தொடங்கியருந்த, மகா வித்தியாலய சுற்றுவட்டாரத்திலேயே அந்த ஓட்டோ சுற்றிச் சுற்றி தொடர்ந்து அறிவிப்பு வழங்கியபடியிருந்தது.
“யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அடித்து துரத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் புலிகளின் அணிக்கு உதவியாக, நாவற்குழியில் பதுங்கு குழி வெட்டுவதற்கு ஆட்கள் வேணும். இது இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கும் அறிவிப்பு இல்லை. உங்களை இந்தத் தேசத்தின் குடும்ப உறுப்பினர்களாகக்கருதி இரந்து கேட்கும் உதவி” – என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டது.
இந்த அறிவிப்பில் ஏதோ சூட்சுமம் இருப்பதாக நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்த குடும்பத் தலைவர்கள் முன் மாமரத்தடியில் கூடியிருந்து கதைத்தார்கள். அம்மா எல்லோருக்கும் தேனீர் ஊற்றிக்கொடுத்தார். இருந்தாலும், இராணுவத்தை அடித்து கலைத்துவிட்டால், திரும்பவும் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம் என்று, அந்த அறிவிப்புக்குள் ஒளிந்திருந்த செய்தி, எல்லோருக்கும் ஆசைகாட்டுவதாகவே இருந்தது.
“அதிலபோய் ஒருக்கா தலையக் காட்டிப்போட்டு வந்தா என்ன? என்ன சொல்லுறியள் அண்ணை” – என்ற கேள்வியை ஒவ்வொரு விதமாக மாமரத்துக்கு அடியில் நின்றுகொண்டிருந்தவர்கள் விவாதித்தார்கள். தங்கள் குடும்பத்தலைவர்கள் நல்ல முடிவுதான் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு, வீட்டுப்பெண்கள் தெருவையும் அவர்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அம்மா இரண்டாவது தடவையும் தேனீர் ஊற்றிக்கொடுத்தார்.
அப்போது, கொஞ்சப்பேரை ஏற்றிக்கொண்டு இரண்டு ட்ரக்டர்கள் தச்சன்தோப்பு பக்கத்திலிருந்து நாவற்குழிச்சந்திப் பக்கமாக போயின. நாங்கள் வீட்டுக்கு வெளியால் ஓடிச்சென்று பார்த்தபோது, சிலர் கட்டியிருந்த சாரத்தோடு ட்ரக்டரில் ஏறியிருந்தனர். இயக்கத்துக்கான ஒரு சிறு உதவியைச் செய்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பமாக அந்தப்பயணத்தை எண்ணி, அவர்களின் முகமெல்லாம் திருப்தி படர்ந்திருந்தது. போகலாமா, வேண்டாமா என்று, இரண்டு தேனீர் குடித்தும் தீர்மானிக்க முடியாமல், குழம்பிக்கொண்டிருந்த மாமரத்தடி ஆலோசகர்கள், ஏதோ தாங்கள் நினைத்ததை வேறாட்கள் நிறைவேற்றப்போகிறார்கள் என்ற திருப்தியோடும், “எப்படியும் யாழ்ப்;பாணம் மீண்டிடுவோம்” – என்ற நிறைவோடும் ட்ரக்டர்கள் கண் எல்லையை மறையும்வரைக்கும் பார்த்திருந்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். அப்பாவுக்கு முன்மரத்து இளநீர் கண்ணுக்குள்ளேயே குலுங்கியபடி கிடப்பதை நான் மாத்திரமல்ல, அம்மாவும் புரிந்துகொண்;டார்.
எனக்கென்னவோ, அந்த ட்ரக்டரில் போயிருந்தால், என்னை மறித்த அந்த இரண்டு பிள்ளைகளையும் எங்காவது வழியில் கண்டிருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு அந்த நேரத்துக்கு சம்மந்தமே இல்லாமல், நெஞ்சில் பெரியதொரு அலையாக மோதிவிட்டு நுரைத்தபடி இறங்கியோடியது. எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பை தவறவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு தொண்டைக்குள் தொங்கியபடியிருந்தது. வழக்கமாக அடர்ந்த இருளில் நினைவில் மேலெழுகின்ற அந்த முகங்களை பகலிலேயே உணர்ந்தபோது அந்தரமாக இருந்தது.
இரண்டாவது நாள் காலையில், கைதடிப்பக்கமாக பயங்கரமான ஷெல் சத்தங்களும் தகரத்தில் அறைவதுபோல போரோலிகளும் கேட்டன. நாவற்குழி, தச்சன்தோப்பு, மறவன்புலவு பக்கத்திலுள்ளவர்களை தென்மராட்சியின் உட்பக்கமாக இடம்பெயருமாறு அறிவிக்கும் ஓட்டோவொன்று மதியத்திலிருந்து ஓயாமல் ஓடியபடியிருந்தது. யாழ்ப்பாணம் போகலாம் என்ற எதிர்பார்ப்போடு பதுங்குகுழி வெட்டுவதற்கு குடும்பத்தவர்களை அனுப்பியவர்கள், தச்சன்தோப்பு சந்தியில் குழறி அழுதபடி நின்றுகொண்டிருந்தார்கள். அப்பா எங்கள் எல்லோரையும் குஞ்சுகளை கோழி அழைத்துச்செல்வதுபோல கவனமாக கூட்டிச்சென்று கொண்டிருந்தார். மகா வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள பாலத்தடியில், ஒரு தாய் தரையில் விழுந்திருந்து கதறினாள். நாங்கள் சைக்கள்களில் சாமான்களை இழுத்துக்கட்டியடி தென்மராட்சியை நோக்கிய வயல்பாதையினால் போய்க்கொண்டிருந்தோம். எங்களைத் தாண்டி – எதிரில் – மறைப்புக்கட்டிய பச்சை வாகனங்களில் பெருந்தொகையான போராளிகள், சீருடையிலும் சாரத்தோடும் நாவற்குழிப்பக்கமாக போய்க்கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கும் ஓயாத சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் கேட்டது.
இடப்பெயர்வை மீறி, நாங்கள் தாண்டிவந்த இடத்தில் அடர்ந்திருந்த தாய்மாரின் அழுகுரல், பெரும்போரொன்று எங்களைத் தன் கால்களின் கீழ் அழுத்திவைத்திருப்பது போலிருந்தது. எனக்குள் பெரும்பீதி பீடித்திருந்த இதயம், புதிய காட்சிகளைக் கண்ட பதற்றத்தில் வேகமாகத் துடித்தது. கன நாட்களுக்குப்பிறகு அப்பா மீண்டும் ஒரு வீரனாகத் தெரிந்தார். நாங்கள் இரண்டு சைக்கிள்களில் முன் பின்னாகப் போனாலும், தங்கச்சியை ஏற்றிக்கொண்டு சென்ற எனது சைக்கிளுக்கு மிக அருகாமையில் அவர் அம்மாவுடனும் தம்பியோடும் வந்துகொண்டிருந்தார். தச்சன்தோப்பு வயல்வெளிக்காற்று முகத்தில் வீசியடித்தது. அதைவிட, வேகமாக எங்களை தாண்டிச்செல்லும் இயக்க வாகனங்களின் புழுதி, அச்சத்தை அறைந்ததது.
திடீரென்று அந்த வாகனங்களில் ஒன்றில் அந்த இரண்டு பிள்ளைகளும் இருந்திருப்பார்களோ என்ற யோசனை மின்னல்போல என் முன்னால் விழ, கடந்து சென்ற வாகனமொன்றை வேகமாக தலையை வெட்டிப்பார்த்தேன். வாகனத்தை மூடிப்போட்டிருந்த பசிய குழைகளைத்தாண்டி அதிலிருப்பவர்கள் யாரையும் தெரியவில்லை.
“அண்ணா, முன்னுக்கு பார்த்தெல்லே அப்பா சைக்கிள் ஓடச்சொன்னவர்” – என்று தங்கை ஹாண்டிலைப்பிடித்திருந்த எனது கையை அச்சத்தோடு கிள்ளினாள்.
(3)
அக்காராயன் ஸ்கந்தபுரத்தில் நாங்கள் குடியிருந்த சிறிய கல்வீட்டுக்குரியவர்கள் வெளிநாட்டிலிருந்தார்கள். அங்கு முதலில் இடம்பெயர்ந்து வந்திருந்தவர்கள், முல்லைத்தீவுப்பக்கமாக இடம்பெயர்ந்துவிட, அதிஷ்டவசமாக அந்த வீடு எங்களுக்கானது. மிகவும் அருகாக என்று சொல்லமுடியாது. கூப்பிடு தூரத்தில், சில வீடுகளிலிருந்தன. அங்கெல்லாம் சொந்த வீட்டுக்காரரும், சில வீடுகளில் இடம்பெயர்ந்து வந்த சிறிய குடும்பங்களையும் அனுமதித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களால் ஓரிரு வாரங்களில் ஸ்கந்தபுரமெங்கும் போர்நெடி வீசத்தொடங்கியிருந்தது. ஊர்க்காரர்கள் எங்களிடம் யாழ்ப்பாணத்தின் கடைசி அனுபவங்களை கேட்கத்தொடங்கினார்கள். வெறும் வளவுகளும் குச்சுப்பாதைகளும் பரபரப்பாக இயங்கத்தொடங்கின.
இங்கேயும் பல மாமரங்கள் இரவில் கதைப்பதற்கு வசதியாக வளர்ந்து சடைத்திருந்தன. காகங்கள்போல பல பறவைகள் கதைகளுக்கு குறுக்காக இரவில் சடசடத்துப் பறந்தன. குடும்பமாக எந்தச் சேதாரமும் இல்லாமல் ஆபத்துக்களிலிருந்து மீண்டுவந்துவிட்டதை எண்ணி அம்மா நிம்மதியாக இருந்தார். ஆனால், அப்பாவுக்கு வீட்டை விட்டு இன்னும் இன்னும் தொலைவுக்கு வந்துவிட்டதை எண்ணி யோசனை அதிகரித்தது.
அடுத்தடுத்த வாரங்களில் யுத்தம் வேறொரு வடிவத்தில் எங்கள் பகுதிகளுக்குள் வடிந்து வந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களுக்கு கட்டாய ஆயுதப்பயிற்சி வழங்கப்போவதாக, நாவற்குழியில் ஓடிய அதேநிற ஓட்டோவொன்றில் ஒலிபெருக்கி கட்டி ஸ்கத்தபுரம் முழுவதும் வீதி வீதியாக அறிவிக்கப்பட்டது. இடம்பெயர்ந்துள்ளவர்களை வட்டாரப்பணிமனையில் வந்து பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவிப்பில் சொல்லப்பட்டது. ஜீரணிக்காத பெரும் கல்லொன்றை சுமந்து திரிவதைப்போல அப்பா வீட்டிலேயே கிடந்தார். வீட்டுக்குள்ளேயும் பொதுவான பேச்சுக்கள் குறைந்தன. அப்பா வழக்கமாக புதினம் கேட்டுவருவதற்கும் பத்திரிகை வாங்குவதற்கும் அண்ணாசிலை சந்திக்கு போய் வருவார். அதையும் நிறுத்திவிட்டார். அப்பாவில் அதுவரை காணாத நரைத்த தாடியைப்பார்த்து, வீட்டில் எல்லோருக்கும் மெல்ல மெல்ல அச்சமும் பதற்றமும் பரவியது. எப்போதும் வீரனாகவே தெரிந்த அப்பா, எங்கள் கண்முன்னாலேயே தளம்பத்தொடங்கியது எனக்குள் புதுப்பதற்றத்தை கூடுகட்டியது.
அன்று மதியம் தாண்டி, இரண்டு மணியளவில் நீண்ட மினி பஸ் ஒன்று ஸ்கந்தபுரம் வீதி வழியாகப் புழுதியைக் கிளப்பியபடி எங்கள் வீட்டைத்தாண்டிச் சென்றது. அப்பகுதியில் அந்தளவு வாகனங்கள் வருவது மிகக்குறைவு. யாரும் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்கிறார்களா என்று முற்றத்தில் இறங்கி நின்று தெரு நடமாட்டத்தை எட்டிப்பார்த்தேன். அரை மணிநேரத்திலேயே அந்த வாகனம் திரும்பி வந்துகொண்டிருந்தது. அப்பா உள் கதிரையிலேயே இருந்தார். தங்கையும் தம்பியும் அம்மாவுடன் சமையலறையில் நின்றுகொண்டிருந்தார்கள். வாகனத்தைக் கண்டவுடன், வேலியின் கிளுவம் கதியால்களின் வழியாக தலையைப் பிதுக்கிப் பார்த்தேன். எதிர்பார்க்கவே இல்லை. வந்த வேகத்தில் நேரடியாக எங்கள் வீட்டுக்கு முன்பாக அந்த வாகனம் ‘ப்ரேக்’ போட்டது. அப்பா வீட்டுக்குள்ளிருந்து வெளியில் பாய்ந்த வேகத்தில்கூட, என்னால் வீட்டுக்குள்ளே பாய்ந்து ஓடமுடியவில்லை. அதைவிட வேகமாக வாகனத்திலிருந்து மூவர் படலையை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள்.
“அண்ணை, உங்கள வந்து பதியச்சொல்லி எவ்வளவு நாள்”
“தம்பி…..” – ஏற்கனவே உடைந்திருந்த அப்பாவின் சொற்கள் உள்ளே வந்தவனது குரலின் முன்னால் பொசுங்கி விழுந்துன. அவர்களை நோக்கி கெஞ்சும் தோரணையில் அப்பா சொற்களைத் தேடினார்.
“கொஞ்சக் கொஞ்ச வேலையாக ஆளுக்காள் செய்தால், அமைப்புக்கு உதவியாக இருக்கும் அண்ணா, தம்பிய கொஞ்சக்காலத்துக்கு விடுங்கோ, திருப்பிக்கொண்டு வந்து விட்டுறம்” – என்று மிகவும் அழுத்தமான குரலில் முதலில் பேசியவனே அப்பாவின் கண்களைப்பார்த்து அழுத்தமாக சொன்னான். ரீசேர்ட் அணிந்த அளவான உயரமும் எடையும் கொண்ட இளந்தாரி. அவனோடு ஒப்பிடும்போது அப்பா மிகவும் வயோதிபம் விழுந்தவராய் தெரிந்தார். அவன் அதிகாரமான குரல் கொண்டவன். வந்த விஷயம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கையில், மற்ற இருவரும் படலையடியிலேயே நின்றிருந்தார்கள்.
அப்பாவுக்கு “தம்பிய அனுப்பி வையுங்கோ” – என்றது மாத்திரம்தான் கேட்டிருக்கவேணும் “தம்பி…..” – என்றபடி அவர்களை நோக்கி மண்ணில் விழுந்தார். அம்மா அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடி வர, தங்கையும் தம்பியும் ஒருபோதும் காணாத அந்தக்காட்சியைப்பார்த்து, பயத்தில் குழறினார்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவர் காண இன்னொருவர் எப்போது அழுதோம் என்று எனக்கு ஞாபகமே இல்லை. எல்லாவற்றையும் எப்போதும் தனது மாட்சிமை பொருந்திய பலத்தினால் கட்டியபடி ஓடியவர் அப்பா. எங்கள் குடும்பத்தின் பலமும் அழகும் அதுவாகவே இருந்தது. மற்றவர்கள் எப்படியோ, ஆனால் நாங்கள் அதை ரசித்தோம். அந்த அழகு எங்கள் கண்முன்னால் முன்பின் தெரியாத ஒரு ஊரின் முற்றத்தில் உடைந்து சிதைந்தது. நிமிர்ந்தெழுந்து யாரிடம் கெஞ்சுவது என்று புரியாமல், அப்பா ஊன்றி எழுந்து மீண்டும் விழுந்தார். எனக்கு அன்று எங்கிருந்து அந்த வீரம் வந்தது என்று தெரியவில்லை. இன்னொரு வகையில் சொன்னால், எப்படி நான் அப்பாவாக மாறினேன் என்றே புரியவில்லை. ஓடிச்சென்று அப்பாவைத்தூக்கினேன். கூடவே, கைத்தாங்கலாக, அவரை அம்மா வாங்கிக்கொண்டார்.
“அண்ணை, பிரச்சினை ஒண்டும் வேண்டாம், நான் வாறன்” – என்றேன் அப்பாவுடன் பேசியவனைப் பார்த்து.
“தம்பி……” – என்று அம்மா குழற, நான் என்ன பேசினேன் என்று தெரியாமல் தங்கச்சியும் தம்பியும் கூடவே கதறினார்கள். நாங்கள் நாவற்குழியில் பதுங்கு குழி வெட்டப்போனவர்களின் உறவினர்கள் எழுப்பிய ஒப்பாரியிலிருந்தே இன்னமும் மீளவில்லை. இவ்வளவு வேகமாக எங்கள் வீட்டின் முற்றத்திலும் அந்தச் சத்தம் கேட்டிருக்கக்கூடாது.
எனக்கென்னவோ, அந்த இடத்தில் ஆபத்தை மீறிய சாகச உணர்வொன்று மனதில் வெடித்திருக்கவேணும். அல்லது ஆனைக்கோட்டை நல்லதண்ணிக் கிணற்றடியில் கேட்ட நியாயமான கேள்விக்கான பதிலொன்று ஆழ் மனதில் உறங்காமல் அலைந்திருக்கவேணும்.
அப்பாவை பிடிந்திருந்த அம்மா, அவர் மீதான பிடியை அப்படியே தொப்பென்று விட்டுவிட்டு, பாய்ந்து வந்து என்னைப்பிடித்தார். எனது ரீசேர்ட்டை கொத்தாகப்பிடித்து வீட்டுக்குள் இழுத்துச்செல்ல முற்பட, அப்போதுதான் படலையடியில் நின்றுகொண்டிருந்த இருவரும் என்னிடம் வந்தார்கள்.
(4)
ஆசனங்கள் முற்றாகவே கழற்றப்பட்ட அந்த வாகனத்தில் எனக்கு முன்னரே பலர் ஏற்றப்பட்டிருந்தனர். எல்லோரும் தரையிலிருந்தோம். வாகனத்தின் வாசலில் என்னை ஏற்றியவரில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் முன் இருக்கையிலோ, பின்னால் வருகின்ற வேறேதாவது வாகனங்களிலோ வந்துகொண்டிருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
அப்பாவையும் அம்மாவையும் நினைப்பதே இல்லை என்று வலுக்கட்டாயமாக வேறேதாவது சிந்திப்பதற்கு மனதைத் துலாவினேன். இப்படிக்கூட்டிச்செல்லப்படுகிறவர்களுக்கு அப்படி என்னதான் நடைபெறுகிறது என்று பார்த்துவிடுவது என்பதுபோல மனதை இறுக்கமாக்கிக்கொண்டேன். அப்படி இறுகிய மனது, முகத்தை பக்கத்தில் சற்று திரும்பிப் பார்த்தபோது சில்லுச் சில்லாகச் சிதறியதுபோலிருந்தது.
அவள்!
அந்த இருவரில் ஒருத்தி.
என்னையே பார்த்தபடி வாகனத்தின் குலுங்கலோடு சேர்ந்தாடியபடியிருந்தாள். கன்னங்கள் இரண்டிலும் மஞ்சள் அப்பிக்கிடந்தது. என்னை அடையாளம் கண்டுவிட்டாள் என்பதைப்புரிந்துகொள்ளவே கடினமாக இருந்தது. இருந்தாலும் அவளது பார்வை நிச்சயமாக அவளுக்கு உள்ளிருந்தவளை காண்பித்தது. வெளியே தெரியும்படியாக கழுத்தில் தடித்த தாலி தொங்கியது. ஏன் என்று தெரியாமல், எனக்கு இதயம் வேகமாக துடித்தது. இவள் எங்கே இங்கே? இவள்தான் இயக்கமாயிற்றே? பிறகெப்படி கழுத்தில் தாலி? வாகனத்திற்குள் மிகுதி அதிர்ச்சிகள் ஏதாவது உண்டா? மற்றவளும் இங்குதான் இருக்கிறாளா? என்னோடு சேர்ந்து ஏழுபேர். இப்போது எனது பார்வையை, அவளுக்கு முன்பாக இருந்த பெரியவர் ஒருவர் நோட்டமிட்டபடியிருந்தார். அவர் என் பார்வையில் என்ன வித்தியாசத்தைக்கண்டார் என்று தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
பச்சை பெய்ண்ட் பூசிய வீடொன்றில் நாங்கள் அனைவரும் இறக்கப்பட்டோம். சுற்றுமதில் போடப்பட்டிருந்தது. மதிலின் மேல் தகரமடித்து உயர்த்தப்பட்டிருந்தது. எங்காவது வாகனத்தை நிறுத்தியவுடன், அவளோடு பேசவேண்டும் என்றிருந்த எனக்கு, அந்த வீடொன்றும் அச்சம் தரும்படியாக இருக்கவில்லை. அந்த வீட்டிற்கு முன்பாகக் கிடுகினால் வேயப்பட்ட நீளக்குடிசையொன்று அதற்கு முன்பாக அழகான பச்சைக்குளம். நடுவில் துவக்கொன்று நடப்பட்ட கல்சுருவம். குடிசைக்குள் வரிசையாகச்சென்று பிளாஸ்திக் கதிரைகளில் இருந்தபோது, நான் நேரடியாக அவளிடம் சென்று “ என்னை ஞாபகமிருக்கிறதா” – என்றேன். அவள் எதுவும் பேசாமல் ஒதுங்கவும், வாகனத்துக்குள் என்னை வித்தியாசமாகப் பார்த்த பெரியவர், இப்போது உத்தியோகபூர்வமாக என்னைப்பார்த்து முறைத்தார். தனது பார்வையின் ஊடான செய்தியை என்னிடம் அழுத்தமாக பதிவுசெய்தார். புரிந்துகொண்டு நான் பின்வாங்கிக்கொண்டேன்.
அங்கிருந்து சிறிது நேரத்தில் பெண்கள் அனைவரும் தனியாக அழைத்துச்செல்லப்பட, அன்று மாலை, அவளுடனான மேலதிக தொடர்பும் திரும்பவும் சென்று பேசுவதற்கென்று எனக்குள் வைத்திருந்த திட்டமும் இழுத்து அடைக்கப்பட்டது.
எனது குழுவில் இப்போது அந்தப்பெரியவர் சேர்ந்திருந்தார். அவருடன் பேசுவதற்கு எனக்குள் இயல்பான உந்துதல் எப்போதும் எழவில்லை. இருந்தாலும் என்னை ஒரு குற்றவாளிபோலப் பார்க்கின்ற அவரது பார்வைக்குப் பதில் சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது.
அதே வீட்டில் அன்றிரவு ஆண்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டோம். அந்த நீண்ட குடிசையில்தான் எல்லோரும் உறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிசைக்கு மேல் பரந்து படர்ந்திருந்த மரத்தின் வழியாக நிலவு எறித்த ஒளிவெள்ளம், பச்சை வீட்டு முற்றத்தில் கரிய கோடுகளால் கோலமிட்டபடியிருந்தது. நாவற்குழி ஞாபகமும் இப்போது அப்பா என்ன செய்வாரோ என்ற நினைப்பும் கூடவே அம்மா என்னை விடாமல் போராடிய கடைசிக்கணங்களும் அடிமனதிலிருந்து மெல்ல மெல்ல மேலெழப்பார்த்தன. மனசுக்கு இரவு மிகப்பொல்லாத உணவு. எதையாவது புரையேற்றி அனுப்பிக்கொண்டேயிருக்கும். அச்சத்தில் அந்தப்பெரியவரை தேடினேன். அவரோடு பேசவேண்டும் என்று எனது கண்கள் ஞாபகம் செய்தபடியே இருந்தன.
நிலவினை மெல்ல மெல்ல முகில்கள் விழுங்கி முடிய, மெல்லிய மழை தூறத்தொடங்கியது.
குடிசையின் வெளித்தாழ்வாரத்தில் என்னைப்போலவே தனியாக முற்றத்து நிலவைப்பார்த்தபடியிருந்த பெரியவர், என்னைக்கண்டவுடன் முதல்போல் அல்லாமல் இருட்டில் சாந்தமாகத் தெரிந்தார். அருகில் போனேன். மரத்தில் விழுந்த மழைத்துளிகள் இப்போது உடைந்து உடைந்து விழும் சத்தம் மாத்திரம் கேட்டபடியிருந்தது.
“தம்பி, இதில இருங்கோ” – குரல் கரகரத்தது.
சொல்வதற்கு முதலே அருகில் குந்தினேன். அவருக்கும் என்னுடன் பேசவேண்டியதாய் ஏதோ மனதிலிருந்திருக்கிறது. உள்ளே தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு கேளாமல், மழைத்தூறலுக்குள் தனது குரலை ஒளித்தபடி மெதுவாக பேசத்தொடங்கினார்.
“அவள் என்ர மகள்” – குரல் உடைந்தபடி வந்து விழுந்தது.
“முதல் தானாகவே அமைப்பில சேரப்போறன் எண்டு, என்னட்டையும் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்தில சேர்ந்து, மூண்டு மாத பயிற்சியோட பிரச்சாரம் அது இதுவென்று றோட்டு றோட்டா திரிஞ்சாள். நான் விடயில்லை. முகாம் முகாமாக ஒவ்வொருத்தரையும் கலைச்சுத் திரிஞ்சு கையில காலில விழுந்து ஒருமாதிரி வீட்ட கூட்டிக்கொண்டு வந்திட்டன். தாயில்லாதவளை எப்படியாவது காப்பாத்திப்போட்டன் எண்ட நிம்மதியோட இந்த ஊருக்குள்ள ஓடிவந்தன். கடைசியில, திரும்பவும் பறிகொடுத்திட்டன்” – மேலும் மேலும் அவரது குரல் உடைந்துகொண்டுபோனது.
ஆனைக்கோட்டையில் கண்டவள்தாள்தான் என்று எனக்கு இப்போது அவளை உறுதிசெய்துகொண்ட மனத்திருப்தி வந்தது. ஆனால், தகப்பனும் மகளும் ஏன் ஒரேயடியாக இயக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்பது இப்போது மறுபக்கத்தில் குழப்பமாக தெரிந்தது. சந்தேகத்தை நேரடியாக கேட்காமல், சுற்றிவளைத்து கேட்கலாம் என்றபடி –
“அப்ப உங்கட மருமகன் இயக்கமா?”
;துயர்தோய்ந்த அவரது முகம் இப்போது குழப்பமானது போலிருந்தது. பதில் சொல்ல முடியாதளவுக்கு அவரது மனம் களைத்திருக்கலாம். அல்லது சொல்ல விருப்பமில்லாமலுமிருக்கலாம்.
“யாரை கேட்கிறியள் தம்பி…..எங்களுக்கு யாருமில்லை அப்பு. அவளைக்கூட்டிக்கொண்டு போக வந்தவுடனேயே, என்னையும் கூட்டிக்கொண்டுபோங்கோ, பிள்ளையோட நானும் பக்கத்தில இருக்கிறன் எண்டு வாகனத்தில ஏறி வந்திட்டன்”
சொல்லிமுடிக்கும்போது என்னை அறியாமலேயே அவர் முகம் கலங்கலாகத்தெரிந்தது. அப்பாவின் நினைவுகள் என் கண்களில் திரண்டுவந்து முட்டிக்கொண்டு நின்றன. நிலவிழந்த வானத்தின் இருள் என் முன்னால் அமிலமழைபோல தூவிக்கொண்டிருந்தது. அடைத்துவைப்பதற்கு எவ்வளவோ முயற்சித்தும் என்னைமீறி வந்த வீட்டு ஞாபகம், என்னை அந்தப்பெரியவரின் முன்னால் துண்டுதுண்டாக உடைத்துப்போட்டது. ஒரு குடும்பம் மாத்திரம் இருந்திராவிட்டால், அப்பாவும் நிச்சயம் இதைத்தான் செய்திருப்பார் என்று இந்த மழை மீது சத்தியம் செய்து, குழறி அழுதுவிடவேண்டும்; போலிருந்தது.
“கலியாணம் கட்டினவள் எண்டு காட்டினால் கூட்டிக்கொண்டு போகமாட்டினம் எண்டு, என்ர மனுசியிண்ட தாலியையும் பிள்ளைக்குப்போட்டு முகம் முழுக்க மஞ்சளை அப்பிக் கழுவிப்போட்டு இரண்டு மூண்டு மாதமாக வீட்டுக்குள்ளேயே பதுக்கி பதுக்கி வச்சிருந்தன் தம்பி….”
மழை இப்போது பெருஞ்சத்தத்தோடு மரத்தில் விழுந்து விழுந்து உடையத்தொடங்கியதால், “யாழினி……..” – என்று பெருங்குரலெடுத்து அழுத பெரியவரின் அச்சத்தம் அதில் அடைக்கலமானது. வைக்கோல் வைத்து அடைத்த குடிசைச் சுவரில் சாய்ந்தபடி நான் தரையில் அமர்ந்துவிட்டேன். போர் தின்னக்காத்திருந்த அப்பாவி மண் எதுவும் புரியாமலேயே, ஊழிப்பெருமழையில் உற்சாகமாய் நீராடியது. பெரியவரின் பேரோலத்தின் பின்னணியில் அந்த மழைவாசம் மனதில் இருளைக்கரைத்து ஊற்றியதுபோல ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது. அவர் விம்மி அழுத்த சத்தம் காதுகளில் துயரத்தின் களிபோல ஒட்டிக்கொண்டிருந்தது. என் கைகள் அச்சத்தில் பதறியபடி என்னை அறியாமல் அவரை அணைத்துக்கொண்டது.
இதுவரை கேட்டிராத சத்தங்களோடு மழைப்பறவைகள் அந்த மரத்துக்குள் அங்குமிங்கும் பறந்தடித்தன. மழை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரோஷமானதுடன் கூடடைந்த பறவைகளின் சத்தமும் அடங்கிப்போனது.
(5)
என் பெயர் சொல்லி அழைத்த குரலால் திடுக்கிட்டு எழுந்தபோது குடிசைக்கு வெளியில் மெதுவாக விடிந்திருந்தது. முன் பின் பார்த்திராத ஒருவர், மரத்துக்குக் கீழே எனக்காக நின்றுகொண்டிருந்தார். அவர் அழைத்த சத்தத்தில், எனக்கு அருகில் தூக்கத்திலிருந்தவர்களில் ஓரிருவர் எழுந்துவிட்டார்கள். பெரியவர் இன்னமும் குடிசைக்கு வெளியிலேயே உட்கார்ந்திருந்தார். எனதுடலில் முதல்நாளிலிருந்த துணிவின் அரைவாசி குறைந்திருந்தது. மிகுதியை அச்சம் நிறைத்திருந்தது. இனி நான் ஒரு தனியாள் என்ற வெறுமை அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் அடிமனதில் சுரக்கத்தொடங்கியிருந்தது.
குடிசைக்கு வெளியில் நின்று எனது பெயரை அழைத்த குரலினால், மேலும் பதற்றமானேன். நான் எழுந்துபோன மாத்திரத்தில், அழைத்த நபர் முகாமின் வாசலுக்கு நடந்துகொண்டிருந்தார். மேலதிக உத்தரவு எதுவும் தராமலேயே நான் அவர் பின்னால் நடக்கத்தொடங்கினேன். மரத்துக்கு மறுபக்கம் சென்று, வாசலடியைப் பார்த்தபோது, முகாமின் படலை முப்பது பாகையில் திறந்திருக்கக் கண்டேன். அதன்வழி, வெளியில் அப்பா தெளிவாகத் தெரிந்தார். அந்தக் குடிசையில் தூங்கிய இரவின் பெறுமதி அப்போது புரிந்தது. அப்பாவை கண்டதும், எனக்கு முதன்முதலாக அன்றைய காலைக்கடன் கண்ணீராகத் திரண்டது. அதுவரைக்கும் என்ன நடந்தது என்பதையெல்லாம் யோசிக்குமளவில் எதுவும் ஞாபகதுக்குக் கிட்டவில்லை. அக்கணத்தில் என்ன செய்வது என்று எதையுமே சிந்திக்க முடியாமல் என் புத்தி செத்திருந்தது.
வீடு நோக்கி அப்பாவுடன் பச்சைநிற “சாளி” மோட்டர் சைக்கிளொன்றில் மீண்டுகொண்டிருந்தேன். அதிக காற்றைச் சுவாசிப்பதற்கு இதயம் இடமளிப்பதைப்போல உணர்ந்தேன். சாளி மோட்டார் சைக்கிளை ஓடுகின்ற அப்பாவின் தோள்கள், பின்னிருந்து பார்க்கும்போது உண்மையிலேயே மலைபோலத் திரண்டிருந்தன.
ஆனால், முதல்நாள் கண்ட மஞ்சள் பூசிய முகமும் – மண் குழைந்து இருளில் ஓலமிட்ட கரிய அச்சமும் – என்றைக்கும் என் மனதால் முற்றாக வடிந்துவிடவில்லை. அது திடீரென்று அலையோடு எழுந்து நின்று அச்சமூட்டும் அரூப அவலக்குளமாய் ஆழ் மனதில் தளம்பியபடியே இருந்தது. அப்போதெல்லாம் ஒலியெழுப்பத் துணிவற்ற என் ஊமை உதடுகள் “யாழினி” – என்று உச்சரித்துப் பார்த்துக்கொள்ளும்.
(6)
உயர்ந்த சாம்பல் நிற நினைவுக்கல்லின் முன்பாக பல நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். வழக்கமான மெல்பேர்ன் வைகறை, இன்னமும் விடியாத ஐந்து மணி ஆகாயத்தை இருளுக்குள்ளேயே பொத்திவைத்திருந்தது. முன்னிரவு பெய்த மழையின் மிச்சத்துளிகள் அவ்வப்போது இலைகளிலிருந்து வழுக்கி வழுக்கி விழுந்து உடைந்துகொண்டிருந்தன. ஆங்காங்கே சில வெள்ளத்தடங்கள் எங்கள் கால்களுக்கு அருகிலும் மின்குமிழ் வெளிச்சத்தில் ஒளிர்ந்தபடியிருந்தன. “டௌன் சேர்விஸ்” இன்னும் இருபது நிமிடங்களில் ஆரம்பமாகவிருந்தது.
ஜெப்ரியோடு அன்ஸாக் தினத்தன்று இந்த இடத்துக்கு வருவது எனக்கு ஏழாவது தடவை. அவன் இங்கு வருவதற்கான காரணம் அவனது பேர்த்தியார் மாத்திரமே. அவனது பூட்டனொரு யுத்தவீரன் என்று அறிந்துகொண்ட வரலாறு அவனுக்குள் ஒருபோதும் பெருமையான செய்தியாக இறங்கியதே இல்லை. அன்ஸாக் தினம் என்பது அவனைப் பொறுத்தளவில், ஒரு தேசிய விடுமுறைநாள். அந்தளவில் அது அவனுக்கு நிறைந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. வார விடுமுறையோடு அன்ஸாக் தினம் சேர்ந்து வந்தால், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த நீண்ட விடுமுறை தனக்கு மூக்கு முட்டக் குடிப்பதற்குக் கிடைத்த தேசிய வரம்போல, மிதந்து களிப்பான். ஆனால், பேர்த்தியாரிடம் சிறுவயதிலிருந்தே ஊறிவிட்ட அச்சம், ஒருபோதும் அன்ஸாக் தினத்தை அவன் தவறவிட்டதில்லை.
ஜெப்ரியின் பூட்டன் பற்றி முதன் முதலாக அவனின் பேர்த்தியாரிடம்தான் கேட்டிருந்தேன். பல்கலைக்கழக இறுதியாண்டாக இருக்கவேண்டும். அவனது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் மதிய உணவுக்கு சென்றபோது, நான் தயங்கியபடி கேட்ட அந்தக்கேள்விக்கு ஜெப்ரியின் பேர்த்தியார், பழைய படங்கள் அனைத்தையும் தொகையைக் கொண்டுவந்து மடியில் பரவி வைத்து சரித்திரத்தையே சொன்னார். யாரும் கேட்டுவிடமாட்டார்களா என்று பல காலமாக ஒளித்துவைத்திருந்த இரகசியம்போல, அவரின் நினைவுகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளில் இனிக்க இனிக்க வந்து விழுந்தன. அவற்றைக்கூறும்போது, அவரது வயோதிபத்தின் சிறுநரைகூடத் தெரியவில்லை. அவரது விழிகளில் வரலாற்றின் ஒளிவெள்ளம் ததும்பிக்கொண்டிருந்தது. நடுக்கம் பீடித்த விரல்களினால் ஒவ்வொரு கறுப்பு வெள்ளைப் படங்களையும் எடுத்துக் காண்பிக்கும்போது வரலாற்றின் மொத்தப்பூரிப்பும் அவரது சுருங்கிய முகத்தசைகளில் மினுங்கியது.
துருக்கியின் ‘கலிப்பொலி’ என்ற தீபகற்பத்தில் முதலாம் உலகப்போரின்போது இடம்பெற்ற போரில் ஒஸ்ரேலிய நியூஸிலாந்துப் படைகளுக்கு ஏற்பட்ட பேரவலம் மிகப்பெரியது. ஜேர்மனியின் ஒட்டமான் இராச்சியத்தின் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக நேச நாடுகளுடன் சேர்ந்து போரிடுவதற்காகப் போன ஆஸ்திரேலிய படையினரில் சுமார் எண்ணாயிரம் பேர் பலியானார்கள். சொல்லப்போனால், நேசநாடுகள் பயங்கரத்தோல்வியைத் தழுவிக்கொண்ட சமர் அது. அந்தச் சண்டையில் பலியானவர்களில் ஜெப்ரியின் பூட்டனும் ஒருவர்.
அதனைக்கூறும்போது ஜெப்ரியின் பேர்த்தியாரின் குரலில் அப்படியொரு அழுத்தம் தீர்க்கமாக ஒலித்தது.
பிறகு, மடியில் வைத்திருந்த அல்பத்தில் இல்லாத பெரிய படமொன்றை, தனது அறையில் காட்டுவதாகக்கூறி உள்ளே அழைத்துப்போனார். அது, போரில் இறந்த அவரது அப்பா மாத்திரமன்றி, அவருடைய சகாகக்களும் மெல்பேர்னிலிருந்து, துருக்கிக்குப் புறப்படுவதற்கு முன்னர் எடுத்தது. சீருடையில் நின்றுகொண்டிருந்த அந்தக்கூட்டத்தினரில் தனது தந்தையின் படத்தில், மெதுவாக விரலை ஊன்றியவாறு, என்னைப் பார்த்து உதடுகள் விரியச் சிரித்தவர், “இவர்தான் எனது அப்பா” – என்றார். தனது தந்தையின் இறப்பினை நினைவுகூரும்போது எங்கே, சுவரில் அடித்து அடித்து அழுதுவிடுவாரோ என்ற பதற்றத்தில் அறைக்குள் சென்ற எனக்கு, அவரது அந்தக்கொண்டாட்டமான புன்னகை ஆச்சரியமாக இருந்தது.
தனது சிறிய பண்ணையில் செம்மறி ஆடுகளை வளர்த்துவந்த ஜெப்ரியின் பூட்டனார், பெருநில முதலாளிகளின் பண்ணைகளின் காவலுக்கு அவ்வப்போது சென்று உதவிசெய்வதுண்டு. குதிரையில் பண்ணையை வலம்வந்து, தொந்தரவு செய்யும் காட்டு மிருகங்களை சுடுவதில் ஜெப்ரியின் பூட்டன் கை தேர்ந்தவர். இதனாலேயே, அவர் இராணுவத்துக்கு விண்ணப்பித்த உடனேயே பட்டாளத்தில் சேர்;த்துக்கொண்டார்கள். தனது தந்தையின் குதிரiயிலிருந்து போன நாட்களையும் வேகமாக காட்டு விலங்குகளை கலைத்துச்சென்ற சம்பவங்களையும் ஜெப்ரியின் பேர்த்தியார் சத்தமிட்டு, வர்ணித்துக்காட்டினார்.
அப்போது, ஜெப்ரியின் தாயார் சமையலறையிலிருந்து வந்து என்னைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டுப்போனார். தனது தாயாரின் கதைகளோடு நான் களித்திருப்பது கண்டு, அதனைக்குழப்பாமல் இரண்டு குளிர்பானக் குவளைக்கொண்டுவந்து இருவருக்கும் பரிமாறிவிட்டுப்போனார்.
ஜெப்ரியின் பேர்த்தியார் எவ்வளவுக்குத் தன் நினைவுகளால் நிறைந்திருந்தாலும் ஒருபோதும், ஒஸ்ரேலிய படைவீரர்களை நினைவு கூரும் அன்ஸாக் தினத்துக்கு வந்ததே இல்லை. ஜெப்ரியும் சொல்லியிருக்கிறான். நானும் கடந்த ஏழு வருடங்களில் தவறாமல் அவதானித்திருக்கிறேன். அன்றைய தினம், வீட்டிலேயே தங்கிவிடுவார். பின் வளவிலுள்ள ப10ந்தொட்டிக்கு அருகில் தனது தள்ளுவண்டியோடு போவார். அங்கு வந்து உட்காரும் பறவைகளைப் பார்த்திருப்பார். மதிலின் மேல் தெரியும் வானத்தை கண்களை சுருக்கிப் பார்ப்பார். பிறகு, இருள் கவிய முன்னரே நித்திரைக்குப் போய்விடுவார். அன்ஸாக் தினத்துக்குப் போகவேண்டும் என்று ஜெப்ரியை ஒவ்வொரு வருடமும் என்னோடு தவறாமல் கலைத்துவிடுகின்ற ஜெப்ரியின் அம்மாதான் தனது தாயாரின் இந்த நினைவுகளை என்னுடன் பகிர்ந்திருந்தார்.
ஆனால், அன்று அதிசயமாக ஜெப்ரியின் பேர்த்தியார், அன்ஸாக் தினத்தன்று அதிகாலை நடைபெறும் “டௌன் சேர்விஸ_க்கு” வந்திருந்தார். அவருடைய தள்ளுவண்டிலை, திரண்டிருந்த கூட்டத்துக்கு முன்பாக, ஜெப்ரியின் தாயார் தள்ளி வந்திருந்தார். அவர் மழையாடை அணிந்திருந்தார். அருகில் போனபோது, கைகளால் சைகை செய்து எனக்கு வணக்கம் சொன்னார், அவரின் முகத்தில் குவிந்திருந்த மழையாடையின் வழியாக குறிப்பாக அவரைக்காண முடியவில்லை. ஜெப்ரியின் தாயார் அவர் அருகில், தள்ளுவண்டியுடனேயே நின்றிருந்தார்.
சரியாக ஐந்தரை மணிக்கு, சாம்பல் நிற நினைவுத்தூபிக்கு அருகில், சீருடையில் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர், மிக மிடுக்கோடு தனது இரண்டு கைகளிலும் ஊதுகுழலை எடுத்து ஊதினான். போருக்குப் போகும் படையினர் அதிகாலையில், இ;ந்தக்குழல் ஊதியவுடன், வேகமாக எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, சீருடைகள், ஆயுதங்கள் சகிதம் சண்டைக்குத் தயாராகவேண்டும். அதற்கு முன்னர், “துப்பாக்கி உணவு” எனப்படுகின்ற காலையுணவு அனைவருக்கும் வழங்கப்படும். அதை முடித்துக்கொண்டு முன்னரண்களுக்கு ஓடவேண்டும். அடுத்தநாள், இந்தக்குழல் ஊதி எல்லோரும் கூடும்போதுதான், முதல்நாள் சமரில் யார் இறந்தார்கள் என்பது தெரியவரும். ஒருவகையில், இந்த குழலின் ஒலி, சாவின் நினைவொலிதான். எதிரணியிலும் இதுபோன்ற ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும். இதையும்தான் இராணுவ ஒழுங்கு என்று அந்தக்காலத்தில் அழைத்துக்கொண்டார்கள். இந்த போர்ச்சடங்கினை நினைவுகூரும் வகையில், அன்ஸாக் தினத்தன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு, இந்த குழல் ஊதும்போது, இறந்த போர் வீரர்களின் உறவினர்கள் உள்ளுடைந்து அழுவார்கள். அப்படி அழுபவர்கள் சிலரை அவ்வப்போது, நான் சென்ற அன்ஸாக் கூட்டத்தில் கண்டிருக்கிறேன். நிச்சயமாக அந்தக்கணக்கில் ஜெப்ரி இல்லவே இல்லை.
அமைதி அடர்ந்திருந்த அந்த அதிகாலை அன்று எனக்கு திடீரென்று அந்தரமாக இருந்தது. குழல் ஊதும் சத்தமும் விட்டு விட்டு விழுந்துகொண்டிருந்த மழைத்துளிகளின் ஒலியும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, யாரோ பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைப்பதுபோன்ற சத்தம் அடிமனதில் கேட்டது. நுரையீரலுக்கு சுவாசம் போதாததுபோலிருந்தது. அமைதியை கிழித்தபடி நான், அங்கிருந்த காற்று முழுவதையும் வேகமாக இழுத்தேன். இருளைக்கரைத்தது அப்பியதுபோன்ற நாற்றம் நாசியில் அடித்தது. மின்குமிழ் வெளிச்சத்தில் விலகியிருந்த இருள் திடீரென்று என் கண் முன்னால், சுருள் சுருளாக இறங்கியது. நான் அவற்றை எட்டிப்பிடிப்பதுபோல அசைந்தபோது, பின் நகரும் பெருங்காலமொன்றின் ஊழை மனதில் கேட்டது.
கால்களின் கீழிருந்த வெள்ளத்தடத்திலிருந்து தண்ணீர், பாம்புகளாக என் மீது ஏறுவதாய் உணர்ந்து திடுக்குற்றேன். திரும்பிப்பார்த்தபோது, ஜெப்ரியின் தாயார் உயர்ந்த சாம்பல் நிற நினைவுத்தூபியை கவனம் அகலாத தனது கண்களினால் பார்த்தவாறு, இறுக்கமாக நின்றுகொண்டிருந்தார். எனக்கு, ஜெப்ரியின் பேர்த்தியாரை பார்க்கவேண்டும் போலிருந்தது. மீண்டும் மீண்டும் முகத்திலடித்துக்கொண்டிருந்த அந்த இருளின் களிநாற்றம் என்னைச் சூழ்ந்திருந்தது. தள்ளுவண்டியின் அருகில் சென்று குனிந்து பார்த்தபோது, ஜெப்ரியின் பேர்த்தியாரின் தலை மடிந்திருந்தது.
இரவுப்பறவைகள் சடசடத்தபடி மரத்திலிருந்து உயரப்பறந்து சென்று சிறகு விசிறியபடி வட்டமிடுகின்ற சத்தம் கேட்டது.
ஸ்கந்தபுர பச்சை முகாம் குடிசைக்கு வெளியே எனது தோள் மீது சாய்ந்து அழுத பெரியவரின் தேகத்தில் உணர்ந்த குளிர்மை, வாள் போல இதயத்தைச் சீவிச்சென்றது.
முற்றும்
– தெய்வீகன்
சிங்கள ராணுவம் செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரிக்கூட இல்லையே ஏன்?