பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ தொகுப்பினை முன் வைத்து பேராசிரியர் அ. ரமாசாமியின் கருத்து சலசலப்பிற்கான வழிமுறையினை ஏற்படுத்தியிருக்கிறது. இலக்கிய செயற்பாட்டு உறவில் இம்மாதிரியான உரையாடல்களின் போக்கிற்கு அமையவே எதிர் வினையினை நிகழ்த்த வேண்டிய தேவையும் இப்போதைக்கு வாய்த்திருக்கிறது.

                                                                            பேராசிரியர் அ. ரமாசாமி

 

எம். ஏ. நுஃமான் குறித்த இலக்கிய உலகின் விமர்சன நோக்கு இரு மனநிலைகளைக் கொண்டது. ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவந்த எம்.ஏ. நுஃமான் தற்காலப் போக்கில் ஓய்வடைந்து விட்டார் என்பதும், இலக்கியம் சாகும் வரைக்கான எழுத்து முறையினைக் கொண்டதல்ல; இயங்குகின்ற காலம் வரைக்குமான கணிப்பீடு என்பதுமாக அமைந்திருக்கிறது.பாட அலகினைக் கொண்டு எழுதப்பட்ட அடிப்படைத் தமிழ் இலக்கணம் வரட்சியான போக்கினை கொண்டிருப்பதாகக் கூறும் கருத்தியலுக்கு எதிர் வினையான சில போக்குகள் என்னிடமுண்டு.

“க.பொ.த உயர்தர வகுப்புக்குரிய புதிய தமிழ் இலக்கணப் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ள இப்பாடநூல் பல்கலைக்கழகங்களிலும், பிற உயர் கல்வி நிறுவனங்களிலும் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் சற்று விரிவாக அமைந்துள்ளது.” என்கிறார் எம்.ஏ.நுஃமான்.

அடிப்படையில் தமிழை கலை நோக்குடன் அணுகுகின்ற போக்கு தமிழக எழுத்துச் செயற்பாட்டாளர்களிமுண்டு. அ. ராமசாமி அவர்களும் அந்தப் புள்ளியிலிருந்து விலகியிருக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்தில்தான் இவ்வாறான கருத்து நிலைக்கு வந்திருக்கக் கூடும். இலக்கணம் என்பது மொழி அங்கத ரீதியான வகுப்பியலைத்தாண்டி தனித்த முகத்துடன் விரிந்து நிற்கும் ஆழமான செயற்பாடு. இலக்கணத்திற்கு எப்போதும் கராரான முகமுண்டு. இலக்கியமும், இலக்கணமும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்து மொழி அமைப்பியலை உருவாக்கிய போதிலும்; தனித்த அடையாளத்தின் ஊடாக இலக்கியம் + இலக்கணம் பிரிந்து செயற்படுகின்ற புள்ளியில் கலை அம்சங்கள் வறட்சி நிலைக்கு மாறிவிடுவதை தேர்ந்த ஆய்வு முறையிலிருந்து புரிந்திட முடியும்.

இலக்கணம் எப்போதும் வறட்சியான அமைப்பினை கொண்டிருப்பதை அ. ராமசாமி புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் எம். ஏ. நுஃமான் மீதான விமர்சனமாக முன் வந்திருக்கிறது.
” உருட்டினேன் என்பதைப் பிறவினை என்று சொன்னோம். வினையைச் செய்தவனே அதன் பயனை அடையாது பிறிதொருவர் அல்லது பிறிதொன்று அதன் பயனை அடைவதை இது சுட்டுகின்றது. உருட்டுவித்தேன் என்பதை எதில் சேர்ப்பது? ஆறுமுக நாவலர், மு. வரதராசன் போன்ற அறிஞர்கள் இதனையும் பிற வினையாகக் கொள்வர். ஆனால் உருட்டினேன் என்பதிலிருந்து இது அமைப்பிலும், பொருளிலும் வேறுபடுகின்றது. இங்கு எழுவாய் அதாவது கருத்தா வினையை நிகழ்த்தவில்லை; வினை நிகழ்வதற்கு காரணமாக உள்ளார். ஆகவே, பிறவினையில் இருந்து வேறுபடுத்தி,காரணவினை என தற்கால மொழியியல் அறிஞர்கள் இதனை வகைப்படுத்துவர். (அகத்தியலிங்கம் 1982)”.

எம். ஏ. நுஃமான் இலக்கணத்தினை இலகு வழிப்படுத்தினார் என்பதில் மாத்திரம்தான் நாம் நின்று கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றைய கருத்தியல்களின் படி இலக்கணம் எப்போதும் வறட்சியான போக்கினையே கொண்டியங்கியிருக்கிறது. மாறாக எம். ஏ. நுஃமான் ஒன்றும் வறட்சியான இலக்கணம் படைத்துவிடவில்லை.அ. ராமசாமி சொல்வதைப் போல எம். ஏ. நுஃமானின் ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ வறட்சியான போக்கினை கொண்டிருப்பதாக இருந்தால்; அ. ராமசாமி இலக்கணத்தில் கலை வடிவத்தினை எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த இடத்திலிருந்துதான் முரண்பட்ட கருத்தியலை தொடர வேண்டியிருக்கிறது. இலக்கணம் கலை வடிவத்தினை கொண்டியங்க மறுக்கும் சூழலினை பற்றியே அதிகம் பேச வேண்டிய மற்றும் நிரூபிக்க வேண்டிய சூழலில் அ. ராமசாமி சிக்கி விட்டார் என்றே சொல்லலாம்.
எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என விரிந்து கிடக்கும் இலக்கணப் பரப்பில் அ. ராமசாமி எதிர்பார்க்கும் கலை வடிவமும், வறட்சியும் எம்மாதிரியான போக்குகளை கொண்டிருக்கும் என்பதில் உறுதியான நிலைப்பாடு இருக்கப் போவதில்லை.

“மரபு வழி இலக்கண கருத்துக்களோடு நவீன மொழியியல் கருத்துக்களையும் இணைக்க வேண்டியது மொழி கற்பித்தல் துறையில் இன்று அவசரத் தேவையாக உள்ளது. அவ்வகையில் இலக்கணம் கற்பித்தல் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவன் நான். இக்கருத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். எனினும், மொழி கற்பிக்கும் ஆசிரியர் எல்லோருக்கும் மொழியியல் பயிற்சிக்குரிய வாய்ப் புக் கிடைக்கும்வரை இது முற்றிலும் சாத்தியம் அல்ல.”
எனும் எம். ஏ. நுஃமானின் கருத்துக்கள் இலக்கணத்தினை மொழியியல் ஆய்வாக மாத்திரம் கருத்தில் கொள்வதாக அமைந்திருக்கிறது. இவ்வகையான நகர்தல்களுக்கு உட்படும் இலக்கணத்தில் அழகியலையும், கலை உணர்வினையும் எம். ஏ. நுஃமான் வெளிப்படுத்த வேண்டுமென நினைப்பது அபத்தமானது.”ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய பொருள்கள் வினையின் பொருள்களே அன்றி வேற்றுமையின் பொருள் அல்ல என தற்கால அறிஞர் கூறுவர். இப்படிப் பார்த்தால், தலையைச் சொறிந்தான், கன்னத்தை கிள்ளினான் போன்ற வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமையின் பொருளை சொறிதல் பொருள், கிள்ளல் பொருள் என்றெல்லாம் விவரிக்க வேண்டியிருக்கும் என கு. பரமசிவம் என்ற மொழியியல் அறிஞர் தனது ‘இக்காலத் தமிழ் மரபு’ என்ற நூலில் கிண்டலாகக் கூறுகின்றார்”

எனும் எம். ஏ. நுஃமானின் வேற்றுமை இலக்கணத்தின் உதாரணங்கள் தெளிவான போக்கினைக் கொண்டவை. கு. பரமசிவத்தின் நையாண்டி முறையின் ஊடாக இலக்கணம் விளங்கப்படுத்தப்பட வேண்டுமென அ. ராமசாமி நினைப்பது வறட்சி வடிவத்திலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம். இலக்கணத்தில் கலை வடிவத்தினை எதிர்பார்ப்பதன் விளைவாகவே இவ்வகை வாசிப்பு நிலைகள் உருவாக்கம் பெருகின்றன. ஆயினும் இலக்கணத்தற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான பெருங்கோட்டில் வேறுபட்டு நிற்கும் கலை வடிவத்தினை இலக்கண முறைக்குள் வலிந்து புகுத்திவிட முடியாது என்பதே இலக்கணத்தின் தொழில்.

இலக்கணம் பயிற்சி முறைகளை அடிப்படையாகக் கொண்டது.

‘ஓடுகின்றன’ எனும் வினையினை பின்வருமாறு பிரிக்கலாம்.

ஓடு+கின்று+அன்+அ.

இதில் ரசத்தினையும், கலையினையும் அ. ராமசாமி நினைப்பது போல உட்புகுத்தி எழுதிப்பார்ப்போம்.

ஓடுகின்றன எனும் வினையினை மிக ரம்மியமாக பிரிக்க முடியும்.

ஓடு என்பது ஓடுதலை குறிக்கும், கின்று என்பது அதன் தொடர்ச்சியாக வந்து அன் முழுவதுமாக இதனை ஒப்புவமைப்படுத்தும். இறுதியில் பெறப்படும் அ அனைத்துக்குமான முழு மொத்த விகுதி வடிவமாய் இருக்கும். எதுவுமே விளங்கிவிட முடியாத சக்கர சுழற்சி நிலைக்கு ஆளாக்கவிடுவதற்கானதும், இலக்கண கற்பித்தலின் மீதிருக்கின்ற பொதுப் புத்தி வெறுப்பினை மேலும் எரிய வைக்கின்ற செயலாகவே மாறியிருக்க இம்மாதிர உதவுகிறது.

“மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி விதிகளின்படி நன்னூல் என்பதை மாணவன் நன்மை + நூல் என்று பிரித்து எழுத வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். நல் + நூல் என எழுதுவது தவறு எனக் கருதுகிறோம். தற்காலத் தமிழின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் ‘தனிக் குற்றெழுத்து அல்லாத ஏனைய எழுத்துக்களின் பின்னே சொல்லின் இறுதியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம்’ என்னும் வாய்ப்பாட்டையே இன்னும் சொல்லிக் கொடுக்கிறோம். இன்றையத் தமிழின் அமைப்புக்குப் பொருத்தமற்றது எனினும், நல்லன், கரியன் என்பன குறிப்பு வினை முற்றுகள் என்றும், இவை குறிப்பாகக் காலம் காட்டுகின்றன என்றும் கற்பிக்கிறோம். பெயரெச்சம், வினையெச்சம், விணையாலணையும் பெயர், தொழிற் பெயர் முதலியவற்றை, அவற்றின் தொடரியல் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாது சொல் நிலையிலேயே விளக்குகிறோம். இத்தகைய இலக்கண அம்சங்கள் தொடர்பாக இதுவரை நடைபெற்றுள்ள மொழியியல் ஆய்வுகள் பற்றி மொழி கற்பித்தல் துறையினர்க்கு எதுவும் தெரியாது. இந்நிலையில், இலக்கணம் கற்பித்தல் தொடர்ந்தும் பழைய தடத்திலேயே செல்வது தவிர்க்க முடியாதது.”

இக் கருத்திலிருந்து எம். ஏ. நுஃமான் இலக்கணம் மீதான கற்பித்தல் முறையினையே குற்றம் சாட்டுகிறார். இலக்கணம் கற்பித்தல் முறைக்கு மாறுபட்ட கோணத்தினை கொண்டிருப்பதாக விமர்சிக்கிறார். இங்கு இலக்கணத்தின் மீது செலுத்தப்படும் அழகியல் குறித்து அதீத கவனம் செலுத்தப்படவில்லை . ஏனெனில் இலக்கியம் அழகியலுக்கானதும், வறட்சியினை புறந்தள்ளுகின்ற பண்பினைக் கொண்டதுமாக இருக்கின்ற சூழலில்; இலக்கணம் பழமை வாய்ந்த கற்பித்தல் முறைக்கான மாற்றத்தினை வேண்டி நிற்கிறது.
“முற்று வாக்கியத் தொடர்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் and என்னும் இணைப்பிடைச் சொல்லால் இணைக்கப்படுவது போல் தமிழில் உம் என்னும் இணைப்பிடைச் சொல்லால் இணைக்கப்படுவதில்லை.

உதாரணமாக

Kannan came + Kannan went ஆகிய வாக்கியங்கள்

Kannan came and went என ஆங்கிலத்தில் இணைக்கப்படலாம். ஆனால் தமிழில் கண்ணன் வந்தான், கண்ணன் போனான் ஆகிய வாக்கியங்கள் உம் இடைச்சொல்லைப் பயன்படுத்தி கண்ணன் வந்தானும் போனானும் என இணைக்கப்படுதில்லை. பதிலாக கண்ணன் வந்து போனான் என இணைக்கப்படுகின்றன.”

எம்.ஏ.நுஃமான் இப்படியாகவே இலக்கணத்தினை நுகர வைத்திருக்கிறார். இங்கு மொழி ரீதியான வேறுபாட்டு தளத்தினை நிரூபிக்கிறார். இலக்கணம் வலிந்து கொண்டு செயற்படுவதற்கான மாற்று நிலையினைக் கொண்டதல்ல என்பதும், அவை சொற்களுக்கும், வாக்கியங்களுக்கும் இடையிலான இலக்கண உறவினை வேண்டி நிற்பதை நிறுவ முயற்சிக்கிறார்.

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்

இங்கு அழகியல்சார் வடிவங்களுக்கு வேலையில்லாமல் போகிறது.
இலக்கியம் + அழகியல் + வறட்சி எதிர்ப்பு.

இலக்கணம் + தெளிவு + வறட்சி ஏற்பு.

இவ்வகை நிலைப்பாட்டில் அலச வேண்டிய பகுதியினை ஏம். ஏ. நுஃமான் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் என்பதில் திருப்தியிருக்கும் அதே நேரத்தில் அ. ராமசாமி எதிர்பார்க்கும் இலக்கணத்தின் கலை வடிவமும், எம். ஏ. நுஃமானின் அடிப்படைத் தமிழ் இலக்கணத்தில் உள்ள இலக்கண வறட்சி என்ற கருத்தியலும் வெறும் மேலோட்டமான பார்வையாகவேயிருக்கிறது.

***

 

 

-ஏ. எம். சாஜித் அஹமட்

Please follow and like us:

2 thoughts on “இலக்கணப் போர் முனைக்குள் பேராசிரியர்கள் – எம். ஏ. நுஃமான் + அ. ராமசாமி

  1. நான் சொன்னதாகச் சொல்லும் இந்தக் குறிப்பு எனக்கே நினைவில் இல்லை. இந்தக் குறிப்பை எங்கே சொல்லியிருக்கிறேன் – என்று சொல்லியிருக்கவேண்டும். அதுதான் சொல்லிய பின்னணி என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். எனது விளக்கத்தை முன்வைக்கவும் உதவும்
    அ.ராமசாமி

    1. https://www.jeyamohan.in/28652/

      //எம்.எ. நுஃமான் எழுதி அடையாளம் வெளியிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் கொஞ்சம் வறட்சியான இலக்கண நூல் தான்.//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *