‘ஸலாம் அலைக்

2022, நாவல்

ஆசிரியர்: ஷோபா சக்தி

வெளியீடு: கருப்புப் பிரதிகள்

‘ஸலாம் அலைக்’ நாவல் ‘இரு முனைகளிலிருந்து தொடக்கிச் சொல்லப்படும் கதை வளையம்’ என்று நூலின் முன் அட்டை சொல்கிறது. நாவலின் பிரதான கதாபாத்திரம் உலகில் ஒரேயொரு கதைதான் இருப்பதாக அடிக்கடி சலித்துக்கொள்கிறது. எழுத்தாளர் எல். ஜே வயலட் தனது சிறு குறிப்பில் ‘ஸலாம் அலைக்’ஐ இரண்டு கதைகளாகப் பிரித்து வாசிக்கிறார்: ஒன்று அகதிகளுடைய கதை, மற்றையது அதிகாரங்களின் கதை.

இதை ஒரு வசதிக்காக தனிமனித உதிரிக்கும், அதிகாரக் கட்டமைப்புகளுக்கும் இடையான பிணக்கு என்று தொகுத்துக் கொள்ள முடியும். இதையே தனிப்பட்ட இருப்புக்கும் (particularity) உலகளாவிய தன்மைக்குமான (universality) இடைப்பட்ட முரணாக, உதிரி அனுபவத்துக்கும் (subaltern experience) இலக்கிய வடிவத்துக்கும் (literary form) அல்லது பிரதிநிதித்துவத்துக்கும் (literary representation) இடையான முரணாக எல்லாம் கூட நாம் விளங்கிக் கொள்ள முடியும். இந்த இரண்டில் தனியனாக்கப்பட்ட உதிரித்  தரப்பினுடைய எடுத்தியம்பலை (அல்லது அந்த எடுத்தியம்பலின் அசாத்தியத்தை) உலகளாவிய, பொதுப்பட்ட ‘ஒரே ஒரு கதையாக’  ‘ஸலாம் அலைக்’ முன்வைக்க எத்தனிக்கிறது.தனித்ததற்கும் உலகளாவியதற்கும்* இடையிலான இடைவெளி பல தருணங்களில் அத பாதாளம். பாலம் கட்ட முடியாது. ஆனால், தீர்க்கமுடியாத இம்முரணே அரசியலுக்கான முன்நிபந்தனை (precondition) என்பார் ஏர்னெஸ்ரோ லாக்கலாவ். ‘ஸலாம் அலைக்’ இம்முரணைக் கையாளும் விதங்கள் சிலவற்றை ஷோபா சக்தியின் எழுத்துச் செல்நெறியின் பின்னணியில் வைத்து அணுகுகிறது இக்கட்டுரை.

மொழியின் வாக்குறுதி

ஷோபா சக்தியின் இச்சாநாவலின் நாயகி ஆலாவை, அவளது விதியின் கொடூரமான குறுக்கத்தில் இருந்து தத்தெடுத்து காப்பக, இலக்கிய, நினைவு அடுக்குகளில் நுழைத்து, உண்மை, பொய், புனைவு, வரலாறு தொடர்பான குழப்பங்களை ஏற்படுத்த உதவுகிற அடிப்படை ஏதனம் எழுத்து. தனிப்பட்ட அவலத்தில் இருந்து அவளை வரலாற்றுக்குக் கடத்துகிறது எழுத்து1. அந்த நாவலில் வருவது போலவே ‘ஸலாம் அலைக்’இலும் மொழி ஒரு வாழ்வியல் உத்தியாக இயங்குகிறது உதாரணத்துக்கு, மொட்டச்சி அய்யன் கதாபாத்திரத்தினுடைய பாலினம் கடந்த இருப்பை மத ஐதீகம் சாத்தியப்படுத்தி வைக்கிறது.  மொழியூடாக முன்வைக்கப்படும் அய்யனுடைய அருள்வாக்கு, என்னை ஆணாக விளி!எனும் கட்டளையாக speech actஆக இயங்குகிறது, யதார்த்தத்தில் இடையீடு செய்கிறது.

“பாடங்களைப் படிக்காமல், எப்போதுமே கதைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிற” மையக்கதாபாத்திரம் ஜெபானந்தன், பொதுப் பரீட்சையில் தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற ஆறு பாடங்களிலும் தோற்று போய்விடுகிறான். வாசிப்பு, மொழியின் சுவை இரண்டுமே அன்றாட யதார்த்தத்தைக்  கடந்தேகும் (transcendental) உத்திகளாக ஒரு கட்டம் வரை அவனுக்குக் கைகூடுகின்றன:

‘‘நான் பொழுதை நூலகத்திலேயே போக்கினேன். சண்டையும் சாவும் சவமும் பட்டினியும் மட்டுமே கிராம மக்களின் நாவுகளில் இருந்த அந்த நாட்களில், கதைப் புத்தகங்களில் இருந்த மனிதர்கள் என்னைத் தேசங்களைக் கடந்து ஸ்ரேப்பி புல்வெளிக்கு முரட்டுக் குதிரைகளில் அழைத்துச் சென்றார்கள். அரேபியப் பாலைவனங்களில் என்னோடு புதையலைத் தேடி அலைந்தார்கள். காவேரிப் படுக்கையின் பச்சைக் கிராமங்களைக் காண்பித்தார்கள். சீனர்கள் குவாங்கோ நதியை உடைத்து, மஞ்சள் நீரைப் பெருகப் பண்ணி ஜப்பானியப் படைகளைத் தடுத்தார்கள்’.

ஊர் மக்களின் நாவில் உலாவுகிற யுத்த அன்றாடம் பற்றிய அதே அலட்டலை, நீங்களும் திருப்பி உச்சரிக்க வேண்டியதில்லை. வேறு உச்சரிப்புகள், கனவுகள், கற்பனைகள் சாத்தியம்.  மானுட இருப்புக் குறித்தபொருண்மையான (‘இரத்தமும் சதையும்’) உடனடி எடுகோளுக்கு எதிர்மறையான உந்துதலைக் கொண்ட கதாபாத்திரமாக நாவலின் முற்பகுதியில் ஜெபானந்தன் இருக்கிறான். அவனுடைய நன்நம்பிக்கை கீழ்க்கண்டவாறு இயக்கமுறுகிறது:

‘என்னுடைய மனதில் ஒரே நொடியில் நன்னம்பிக்கை முளைத்தது, அது தனது பசிய கிளைகளை என்னுடைய முழு நரம்புகளுக்குள்ளும் ஊடுருவ விட்டது. போன நிமிடம் வரை மனம் இருண்டு போயிருந்தவன், இப்போது விறுவிறுப்பும் உற்சாகமும் கிளர்ச்சியான மனமும் கொண்ட மனிதனாக மாறி விட்டேன். இந்த மாயத்தை நம்முள் தோற்றுவிக்கும் எண்ணங்களே லிங்க விலாசம். எண்ணங்களின் திட வடிவமே மனித உயிரி. எண்ணங்களே ஆன்மா. நம்முடைய மரணம் என்பது எண்ணங்களின் அழிவு என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை.

நாவலுடைய கதை வளையத்தின்ஒரளவு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பகுதியை இந்த உந்துதல் மிக்க லிங்கவிலாசம் எடுத்துக் கொள்கிறது என்று வைத்தால், நாவலின் கணிசமான இதர பகுதிகள் இந்த விலாச விரிவின் அசாத்தியத்தை, சிதைவை, அவநம்பிக்கையை counterthesis (எதிர் எடுகோளாக) முன்வைப்பவையாக இருக்கின்றன. எண்ணங்களின், கற்பனையின், மொழியின் சாத்தியத்தையும் அசாத்தியத்தையும் தனக்குள்ளாகவே தருக்கித்துப் நிகழ்த்திக்காட்டும் நாவல் வடிவத்தை ‘ஸலாம் அலைக்’ உத்தேசிக்கிறது எனலாம்.

இருப்பின் பிண்டத்தன்மையும் மொழியின் துரோகமும்

ஆன்மாவின் பறப்புக்கு நேரெதிரான, பிண்டத்தன்மையான ஒரு இருப்பை சைவசித்தாந்தமும், போர்ச்சூழலும், அகதியாதலும் ஜெபானந்தனுக்குப் பரிசளிக்கின்றன. ‘கனவு உறைந்து போய் இரத்தக் கல்லாக மூளைச் சீழ் கூடத்துள் உருள்கிறது. இச்சைகளுடைய வக்கிரம் அல்லது பிறழ்வு தன்னை ஓர் மனநோயாளனோ என அவனை எண்ண வைக்கிறது. இரவுகளில் தூக்கம் வராமல் காட்டுக்குள் அலைந்து திரிகிற விடலை ஜெபானந்தனுக்கு ஒருவிதமான creaturely life சிறிய வயதிலேயே நேர்ந்து விடுகிறது. அக்கண்டல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்ட பூனைகள் அவனுடன் புசத்திக்கொண்டு திரிகிறான். பற்றைகளுக்குள் நின்று சுயமைதுனம் செய்யும் போது இலைகளில் தெறிக்கும்அவனது விந்து நீரை அப்பூனைகள் தாவி நாக்கிக் குடிக்கின்றன. அடிப்படையில் காட்டின் இருண்மையுடன், மிருகங்களுடன் பங்கிடப்பட்ட எல்லையற்ற பிண்டமாக ஒரு இருப்பு.

வெறும் உயிர்பிழைப்புக்கு மட்டுமாய்க் குறுக்கப்பட்டு, அரசாண்மையின் காப்பீடுகளால் உறுதிசெய்யப்படும் சுயாதீனம் இல்லாமல் ஆக்கப்பட்ட பிண்டத் தன்மையான இருப்புகளை வெற்று உயிரிகள் (bare life) எனக்  கருதுவார் ஜியார்ஜியோ அகம்பென். ‘புசத்துதல்’ மொழி கைவிட்ட ஒரு நிலை. நாடு, வீடு இரண்டிலிருந்தும் விலகி காட்டில் ஒரு உயிரியாக எஞ்சிய பிற்பாடு மொழி கைகொடுக்கிறதா அல்லது கைவிடுகிறதா என்பது கோட்பாட்டு உலகில் சுவாரசியமான கேள்வி. ஸ்பீவாக் இன் ‘Can the subaltern speak? (விளிம்பு உதிரிகளால் பேச இயலுமா?) போல, இந்த நிலையில் ஜெபானந்தனுக்கு மொழிதல் ஒரு சிக்கலான பிரச்சனை. காலம் அவனைச் சிறுபராய வாசிப்பிலிருந்து நெடுந்தூரம் கொண்டுவந்து இப்போது மொழியில் தன்னை முன்வைக்க வேண்டியவனாக, குறிப்பான்களின் உற்பத்தியாளானாக மாற்றிவிட்டிருக்கிறது.  

இரவல் வாங்கிப் படிக்க நேரும் புத்தகம் ஒன்றில் கீழ்க்காணும் வரிகளை, தன்னுடைய பிறப்புக் குறிப்பாக வரித்துக் கொள்கிறான் ஜெபானந்தன்:  

“நீண்ட வாக்குவாதங்கள் சில சமயங்களில் நம் மனதுள் மொழியாக இன்றி உணர்ச்சிகளின் வடிவில் பளீச்சிட்டுவிட்டு ஓடுகின்றன. அவ்வாறான நமது உணர்ச்சிகளை மொழியில் எழுதினால், சிறிதும் நம்ப முடியதானவாக தோன்றுகின்றன. எனவே தான், எல்லாருமே அனுபவித்துள்ள உணர்ச்சிகளே ஆயினும் இவை வெளிச்சத்துக்கு வாராமலேயே புதைந்து விடுகின்றன.”

தன்னுடைய இருப்பைப் பொறுத்தவரை, மொழியின் உள்ளார்ந்த துரோகத்தை ஆரம்ப நாட்களிலேயே ஜெபானந்தன் உணர்ந்து கொண்டுவிடுகிறான். அனுபவத்தை மொழியில் எழுதுதல் என்பதில் ஒரு நம்பமுடியாத தன்மைஒட்டிக்கொண்டுவிடுகிறது. காலம் நகர நகர இது ஜெபானந்தனுக்கு முன்னிருக்கும் பெரிய வாழ்வாதாரப் பிரச்சனை ஆகிவிடுகிறது மொழியின் நிர்பந்தம்.

தனியன் மொழியும் உலகளாவிய பொது மொழியும்

விவிலியத்தில்  பாபெல் (Babel) என்பது பொதுப்பட்ட மொழியில் சாத்தியமாகும் பேச்சும் புரிதலும் மறுக்கப்பட்ட, குழப்பகர உச்சரிப்புகள் நிறைந்த கோபுரம். ஸலாம் அலைக்இல் பாபெல் பெயர் சூடிக்கொண்ட கோபுரத்தில் தனது தாய்லாந்து அலுவலகத்தை வைத்து நடாத்துகிறது அகதிகளுக்கான United Nations High Commissioner For Refugees (UNHCR) நிறுவனம். இதன் மூடுண்ட கதவுகளுக்கு வெளியே தன்னுடைய கதையைச் சொல்லும்படி விதிக்கப்பட்ட நிலையில் ஜெபானந்தன். தமது கதைகளைக் கேட்டுப் புரிந்துகொண்டு தயை செய்யும்படியான கோரிக்கையுடன் அவனைப் போல் அங்கே ஆயிரம் பேர். ஜெபானந்தன் தன்னுடைய அனுபவங்களை உண்மைஎன்று முன்வைக்கும் போது, அதை வெறும் ஒப்பாரிஎன்று நிராகரிக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

அதைவிடத் துயரம் இந்த நிராகரிப்புக்கு முன்னாலேயே ஒரு அபத்த நகைமுரணாக நிகழ்ந்துவிடுகிறது: மரணத்திலிருந்த்து தப்பி வந்த மனிதனின் கதைஎன்று தலைப்பிட்டு ஒரு சிறுகதையாகத்தான் அவனால் உண்மையை எழுதமுடிகிறது. இங்கேயே எழுத்து, வடிவம் போன்ற ஏதனங்களுடைய துரோகம் தன்னிலையுடைய அநாதரவைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. எதிர்கொள்ள நேரும் அரசியல் ஆபத்துக்கள், கிட்டக்கூடிய சட்ட ஆதாயங்கள் என சரிவிகிதம் கலந்து நேர்த்தியாக அந்த உண்மையைச் சொல்லியாகவேண்டும் என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்யப் பொய்களைச் சோடனை செய்து, பிறகு அப்பொய்களைச் சமாளிக்க இன்னொரு தொகை உண்மைகளும் பொய்களும் சேர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.சோடனையில்லாமல் உண்மை விலைப்படப் போவதில்லை.

தனிப்பட்ட மொழிக்குள் தனித்துக் கைவிடப்பட்ட (abandoned into a private language)  தன்னிலைக்கு எஞ்சியிருக்கக் கூடிய மொழிதல் ஏதனங்கள், நுட்பங்கள் என்ன? அவலத்தை அனுபவிக்கும் அழுகுரலுக்கு வாய்க்கக்கூடிய, கைவரக்கூடிய இலக்கிய வடிவம் என்ன?‘வெறும் ஒப்பாரி’ பலன் தரப்போவாதில்லை என்று வேறு கற்றுக் கொண்டாகியாயிற்று. தன்னிடம் இருப்பது அப்பட்டமான ஒரேயொரு கதைதான், அது உலகளாவிய பொதுப்பட்ட கதை என்பதாக ஒரு ஆறுதல் பிரலாபத்தை அது கண்டடைந்துவிடுகிறான் ஜெபானந்தன். அனைத்துப் பிரலாபங்களையும் ஒரே கதை என்று தட்டையாக்குவது அத்தன்னிலையால்  செய்யமுடிகிற  ஒரு வஞ்சத்தீர்ப்பு.இவ்வாறு கூறிக்கொள்வதன் மூலம் குறுக்கப்பட்ட தனது இழிநிலையின் அவல தரிசனத்தை ஒத்திப்போடுகிறது அக்கதாபாத்திரம்.

பல்வேறு கதைப்பின்னல்கள் மூலம், கட்டமைப்புகளையும் சட்டகங்களையும் நிர்வகித்து வன்முறை செய்கிற உலகுக்கு முன்னால், ஒரு தனித்த உதிரி செய்யக்கூடிய ஒரு தந்திரம் கிமிக்(gimmick) இதுவாகத்தான் இருக்கக்கூடும் என்று வைத்துக் கொள்ளலாம். அழுகுரலுக்கும், ஒப்பாரிக்கும் பெறுமதியில்லை என்று சொல்கிற வடிவங்களின் நீதியின்மைக்கெதிரான ஒரு மறுப்புச் செயல். தன்னுடைய வாக்குமூலத்தை ஒத்திப்போடுதல். அதேபோலவே, பிறருடைய வாக்குமூலங்களின் தனித்துவத்தை நிராகரித்துப் பொதுமைப் படுத்துதல் (ஒரேயொரு கதையை எத்தனை தரம் தான் கேட்பது?). இந்த இரண்டுமே ஒருவிதமான proto-universalityயை தனிப்பட்டதான் விலாச எல்லைகளுக்குள் நின்றபடி எத்தனிக்கின்றன, அவாவுகின்றன. மேலைத்தேய தத்துவவியலில் Universalityக்கும் particularityகக்கும் இடையே பேச்சுவார்த்தை சாத்தியமில்லை. அதன் தருக்கத்துள் நின்று பார்த்தால் the particular can only corrupt the universal என்பார் ஏர்னெஸ்டோ லக்லாவ். அந்தவகையான ஒரு ஊழல்ப் பரிவர்த்தனையை உலகளாவிய தன்மையுடன் மேற்கொள்ள முனைகிறது ஜெபானந்தனின் ஒரேயொரு கதை பிரகடனம்.

சிறையின் குறுக்கம், காலத்தின் பெருக்கம்

நாவலில் ஓரிடத்தில் ப்ரெஞ்சு ஜானதிபதி இது அகதிகளின் யுகம்என்று சொல்லி அதற்கான விளக்கங்களை அடுக்கிக்கொண்டு போகிறார். லிபரல் தேசங்களுடைய மாய்மாலப் பாவனைகள் பற்றிய விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும். இக் குறிப்பிட்ட தருணத்தில், கதாபாத்திரம் ஜனாதிபதியுடைய உரையை ஒரு வித்தைப்பேச்சாக, கண்கட்டலாக, சத்தியமற்ற ஒன்றாக விளங்கிக் கொள்கிறது. ஏனென்றால் ஜனாதிபதி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறார். அப்படியான அடுக்கப்பட்ட தர்க்கம் உண்மையாயிருக்க வாய்ப்பில்லை; சத்தியம் மிகவும் இலகுவானது. உண்மை இலகுவானது. ஆயிரம் காரணங்கள் சொல்லவேண்டியிருந்தால், அடிப்படையில் எங்கோ தவறென்று அர்த்தம் என்றவாறாக உண்மையின் இயல்பைப் பற்றிய தன் கருத்துருவாக்கத்தை ஜெபானந்தன் முன்வைக்கிறான்.

ஆனால், உலகமும் உண்மையும் அவ்வளவு தட்டையானசமாச்சாரங்கள் அல்ல. அங்கே பல்லாயிரம் கதைகள், உண்மைகள் வெவ்வேறு விதங்களில் முட்டி மோதுகின்றன. அடுக்கப்படக்கூடிய ஆயிரம் காரணங்கள் இருக்கவே செய்கின்றன. பாபேல் கோபுரம் மாதிரி என்றே வைத்துக்கொண்டாலும். இவை பற்றிய விசாரத்தில் ஈடுபடுவதற்கான அவகாசம் ஷோபா சக்தியுடைய கதாபாத்திரங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதில்லை. ரஷ்ய ஸ்ரேப்பி புல்வெளி, சீன நதிப்படுகை என முன்னொரு கட்டத்தில் நுகர்வில் சாத்தியமாகி இருந்த மொழிமூலமான சர்வாதிகாரமிக்க கொள்வனவு (imperious purchase)இனிமேலும் சாத்தியமாகாத படி தன்னுடய பின்-காலனித்துவ சமகால அடையாளத்தின் தனிப்பட்ட எல்லைகளுக்குள் சிறையிருக்கிறோம் என்கிற தன்னுணர்வை ஷோபா சக்தியின் பாத்திரங்கள் எட்டுவதில்லை. அக்காதாபாத்திரங்களுடைய இலக்கிய, அரசியல் சுயாதீனம் பலவகையான பிணக்குகளால் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

வழக்கமாகவே உண்மை பற்றிய விசாரத்திலிருந்து, அதன் நிர்ப்பந்தத்தில் இருந்து தம்மைப் பலவிதங்களிலும் விடுவித்துக்கொள்கிற கதாபாத்திரங்கள் ஷோபா சக்தியுடையவை. கொரில்லா’, ‘ம் நாவல்கள் தன்-புனைவு, வாக்குமூலம், குற்றச்சாட்சியம், பாவமன்னிப்பு எனப் பலவேறு மொழிதல் வடிவங்ளின் கலவை மூலம் கால ஒழுங்கை எதிர்கொள்கின்றன. விசாரத்துக்கான அவகாசம் இங்கே வடிவரீதியாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சிறையில் நிகழக்கூடிய ஒருவகை காலப்பெருக்கத்தில் (temporal excess, junk time) ஷோபா சக்தியுடைய கதாபாத்திரங்கள் வசதியாக மொழியிலிருந்து பிறழ்ந்து பேதலிப்புக்கு ஆளாகிவிடுகின்றன. ‘இச்சா’ நாவல்  நடந்தது என்னவகைசாகஸ த்ரில்லராக அமைந்ததில் தன்னை இந்தவகை சங்கடங்களில் இருந்து விடுவித்துக் கொண்டுவிட்டது. இதுவரைக்குமான உடனடி வாக்குமூல வடிவம் (testimonial form) வழங்காத கால அவகாசம் ஸலாம் அலைக்இல் ஜெபானந்தனுக்கு நேர்ந்துவிடுகிறது. கால அவகாசத்தின் சகல தருணங்களில் இருந்தும் தன்னுடைய நேர்மையான வாக்கு மூலத்தை ஜெபானந்தன் தள்ளிப்போட்டபடியே இருக்கிறான். ஜெபானந்தனின் சைவசித்தாந்த பாலபாடம் காலப்பிரமாணத்தில் ஆரம்பிக்கிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட தின, வருஷ, யுக அலகுகள், தேவர்களுக்கு வாய்க்கும் கால அலகுகள் இரண்டுக்கும் இடையான வித்தியாசங்கள் ஜெபானந்தனுக்குத் தெரிந்தே இருக்கிறது. யுத்ததின் உடனடித் தன்மையை, அதன் குறுக்கத்தை மீறி நீளும் கால ஒழுங்கை ஷோபா சக்தி முதல் முறையாக ஸலாம் அலைக்இல் சந்திக்கிறார் என்று கொள்ளலாம்.ஷோபா சக்தியுடைய கதாபாத்திரம் சொல்லக்கூடிய வசனம் என்று நம்பத் தோன்றாத ஒரு வசனம் (an uncharacteristic line) இந்நாவலில் என்னை வியப்புக்குள்ளாக்கியது:“அகப்பேயின் விசித்திரங்களைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை’. உடல், அகம் (‘அகப்பேய்’) இரண்டுமே ‘ஸலாம் அலைக்’இல் காலாதீதத்தின் பெருக்கையும், சிறையின் குறுக்கததையும் ஒருசேரச் சந்திக்கின்றன. ஷோபா சக்தியின்  எழுத்து இதுவரை அவர் சந்திக்க நேராத தர்மசங்கடங்ககளை நோக்கி நகர்ந்து செல்கிறது என நினைக்கிறேன்.

சிறையும், முகாம்களும் (ஏன் யுத்தத்தின் ‘திறந்த சிறை’யும்) அடிப்படையில் நேர, கால அலகுகளுடன் தொடர்புகொண்ட தண்டனை உத்திகள். முதலாளித்துவ சமூகத்தில் முதன்மையான தண்டனை வடிவமாக இருக்கும் சிறைவாசம், நேரத்தைக் கரைத்துவிடும் பணியைப் பூர்த்தி செய்கிறது (‘prison dissolves time: This is the principal form of punishment in a capitalist society’)  என்று சொல்வார் அந்தோனி நெக்ரி. சிறைவாசம் இருந்த கதாபாத்திரங்களுடைய விசாரம், குலைக்கப்பட்ட நேர ஒழுங்குடன் பிணக்குக் கொண்ட ஒன்றாகவே இருக்க முடியும். சிறையிருப்பு நாவலில் அடிக்கடி நிகழ்கிறது. கதாபாத்திரத்துக்கு வெளிச்சம் வெறுத்துப் போய்விடுகிறது. காட்சிகளைப் பெருக்கி அவற்றின் திளைப்பில் அவன் பொழுதைக் கழிக்கிறான். உடலெங்கும் கண்கள் போல ஆகிவிடுகிறது. ஆசன வாய்க்குகூட கண் முளைத்து விடுகிறது. முன்னொரு காலத்தில் பொழுதைப் போக்க உதவி செய்த மொழி இப்பொது இல்லை. கனவும் காட்சிகளும் கைவிட்ட நிலையில் தன்மீது குப்பைகளை அள்ளிப் போடும்படி அவன் சொல்கிறான்.

உடலும் அடையாளமும்

சிறைவாசம் உடலின் பொருண்மையான இருப்பு நோக்கிஎழுத்தைத் திருப்புகிறது. மார்கி தி சாத், ஜெனெ போன்றோரின் எழுத்துக்கள் உடலின் கிட்டிய விழைவுகளைக் இறுகப்பற்றியபடி நகர ஆரம்பிக்கின்றன. ஆனால், ஷோபா சக்தியுடைய கதைகளில் ‘பொருண்மையான இருப்பு’க்குத் திரும்புதல் என்பது வெறும் உடலுக்குத் திரும்புதல் அல்ல. உடல் தன்னுடைய உலகளாவிய வியாபாகத்தையும், தற்சமயத்தின் குறுக்கத்தையும் விசாரித்து உணர்ந்து கொள்ள முன்பாக அதை அடையாளத்தின் கதகதப்புக்கு நகர்த்திக் கொண்டுபோய் விடுகிறார். பரிநிர்வாணம் அசாத்தியமாகிவிடுகிறது.

உலகளாவிய பண்பாட்டின் பயனற்ற தன்மை பற்றிய சந்தேகம், அடையாளம் நோக்கிய திரும்புதலைத் தூண்டுகிறது.  போதலேரின் கவிதையாலோ, கலாச்சாரத் து̀றையில் வேலை செய்யும் பிரெஞ்சு அம்மணியாலோ ஜெபானந்தன் குடுபத்தின் சிதைவைத் தடுக்க முடிவதில்லை. அவலம் நிரந்தரமான உண்மையாகிவிடுகிறது. ஜெயகாந்தன் இந்திய இராணவத்துக்கு வானொலியில் வக்காலத்து வாங்குகிறார். இலக்கியம் ஒரு மேம்படுத்தும் சக்தியாக இயங்குவதில்லை. மொழியாலும் அதன் ‘உயர்ந்த’ ஏதனங்ககளாலும் கைவிடப்பட்டிருக்கிறோம் என்பதன் கழிவிரக்கம் பாரதூரமான ஒன்று.

இங்கே கைவிடப்படுதல் என்பதிலிருக்கிற விவிலியத்தன்மை முக்கியமானது. மொழிபெயர்ப்பின் ஏதோ ஒரு தூரத்துச் சாத்தியத்துக்கு, அதன் இரட்சிப்புக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாக வேண்டும் என்கிற ஒரு நிலையைக் கதைசொல்லி வந்தடைய வேண்டியிருக்கிறது.Des Tours de Babel கட்டுரையில் மொழிபெயர்ப்புக்கு அத்தியாவசியமாய் இருக்கிற தூரம் பற்றிய பிரக்ஞையை(knowledge of the distance) அழுத்துவார் தெரிதா. புனித பிரதி என்கிற தன்மை மிக அவசியமான ஒன்றாக இருப்பதையும் அவர் குறிப்பிடுவார். தொலைவின் அதல பாதாளத்தைக் கடக்க ஒரு நன்நம்பிக்கை வேண்டும். உண்மையை, அதன் உள்ளார்ந்த சத்தியத்தை, மொழிபெயர்ப்புக்கு ஒப்புக்கொடுத்துவிடவேண்டும்.

ஷோபா சக்தியின் கதாபாத்திரங்கள் பகிர்ந்த, பகிர்ந்து கொள்ளாத குற்றத்தின் கறை படிந்தவையாக இருக்கின்றன.பாவம். Sin. அதிலிருந்து இரட்சிப்பு நோக்கிய நகர்வுக்கு கிறிஸ்தவம் பிரேரிக்கிற மார்க்கம் பாவ ஒப்புதல்(confessions). கதையோட்டத்தின் சாகசத்துக்குள் தமது பாவமன்னிப்பை ஒளித்தும் மறைத்தும் ஒத்திவைத்தும் எல்லையற்றுப்  பிற்போடுகிற ஒரு காரியத்தைப் பண்ணிக்கொண்டு அதேநேரம் ஒரு தனித்த, அப்பட்டமான உண்மை பற்றிய நப்பாசையை முறையீடாகவும், இராட்சிப்புக்கான துருப்புச்சீட்டாகவும் வைத்துக் கொண்டு இருப்பது ஷோபா சக்தி படைக்கும் கதாபாத்திரங்களின் குணசித்திரமாக இருக்கிறது. க்கதாபாத்திரங்கள் அடிப்படையில் இறைநம்பிக்கையின் பொறிமுறைகளில்இருந்து தம்மைத் தூரப்படுத்தியவையாக இருந்தாலும், அதே நேரம் கிறிஸ்தவ விடுதலை இறையியலின் தர்க்கத்தில் மாட்டிக்கொண்டவையாயும் இருக்கின்றன.

மனைவியின் முருகவழிபாடு, சைவாகமங்கள், தேவாரங்கள், மொட்டைச்சி ஐயனுடைய ஐதீக தந்திரங்கள்எல்லாவற்றையுமே கதைகளாகவும், அவற்றுக்கு அப்பாலான இரத்தமும் சதையுமான இருப்பை மெய்ப்பொருளாகவும் ஷோபா சக்தியுடைய எழுத்து விங்கிக்கொள்கிறது. இந்த உடல் அடிப்படையில் அப்பாவித்தனமானது. கைவிடப்பட்டது. கொலை செய்பவனும், கொலைசெய்யப்படுபவனும் அதீத அப்பாவிப் பதர்களாக வந்து போவார்கள். இரட்சிப்பை வேண்டி நிற்கிற ஒருவித விடுதலை இறையியல்  இங்கே வந்து சேர்ந்து விடுகிறது.முதிர்ந்த வயது ஜெபானந்தனை முகத்தில் அறையும் இளவயது பொலீஸ்காரன், கண்களைச் சந்திக்க நேரும்போது முகத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனை சங்கடப் படுத்தக் கூடாதென ஜெபானந்தன் தன் கண்களைத் தாழ்த்துகிறான். இன்னும் இரண்டு இடங்களில், வாடிக்கையாளர்களுக்குப்  பட்டெனத் தெரியும்படி தன்னை அலங்கரித்துத் தெருவில் வந்து நிற்கிற தமிழ் வேசி, ஜெபானந்தனுக்கு குழந்தைகள் கற்பனையில் வரைந்த ஒரு விநோதமான பலவண்ணப் பறவையைப் போல தத்திக்கொண்டிருப்பவளாகத்தோன்றுகிறாள்.கைவிடப்பட்ட அப்பாவிகளால் ஆகியிருக்கும் உலகம் ஷோபா சக்தியுடையது. ஒரு விவிலிய உலகம். தங்களுடையதும், பிறருடையதும் பாவங்களிலுருந்து, பொய்மைகளில் இருந்து ஒருவழியாக தப்பித்துக்கொள்கிற, கூட்டு இரட்சிப்பைக் கோரி நிற்கிற அப்பாவித்தனத்தை பொருண்மையான தர்க்கமாக உட்பொதிந்த உடலங்களாக அவை வலம் வருகின்றன.

இந்த அப்பாவி உடலுடன் இரண்டறப் பிணைந்திருப்பது இனத்துவ அடையாள அரசியல். தனக்கும் தன் மகனுக்கும் இடையிலான இடைவெளிகளை காலம் அல்லது தலைமுறை சார் இடைவெளிகளாக அன்றி தேச அலகு நிர்ணயித்த தூரமாக மட்டும் விளங்கிக் கொள்கிறான் ஜெபானந்தன். பயந்தது மாதிரியே, மகனை இன்னொரு தேசம் காவுகொண்டுவிடுகிறது. இந்த தேசத்துடைய வித்துடல் அவன். . பிரெஞ்சு உச்சரிப்புக்கு நாக்குக் குழறுகிறது. ப்ரெஞ்சுக் குடியரசில் பிறந்த மகன் ‘நாக்கைத் திருத்த முயற்சிக்கிறான். நாக்கு முதலில் வந்தது. மொழி பிறகு வருவது. ஆக நாக்கின் இருப்புத்தானே உண்மையாக முடியும்? உண்மைகள் அடிநாக்கில் இரத்தமும் தசையும் தோலுமாக, நித்திய வெடுக்காக ஒட்டியிருக்கின்றன. பிரெஞ்ச் உச்சரிப்பில் சீனர்கள், ஆபிரிக்கர்கள் என வித்தியாசம் இருப்பது ஒருவித theory of racial difference ஆக ஜெபானந்தனுக்கு உறுதிப்படுகிறது.

எஞ்சும் கழிவிரக்கம்

ஜெபானந்தனுடைய லிங்க விலாசம் குறுகிய மானுட உடல் (நலிந்து எஞ்சியிருக்கும் ஆன்மா?) ஒருவகையில் தன்னுடைய தேசிய எல்லைகளால் நிர்ணையம் செய்யப்பட்ட ஒன்றாக,  படகேறாமல், விமானம் ஏறாமல் எல்லைக்கு உள்ளேயே நின்றுவிட்டிருகிறது. கடந்தேகுதல் ஒரு போலி வாக்குறுதி. அதந துரோகமாக எஞ்சிய பிண்ட உடல். அந்த உடல் என்பது கூட ஒரு கதையாடலே என்பதை ஜெபானந்தன் உணர்ந்து கொள்வதில்லை. இனத்துவ அவல நினைவு, அதன் கழிவிரக்கம் அல்லது சுயபச்சாத்தாபம் ஒரு பொருண்மையான, ஸ்தூல உண்மையாக ontological, material truth ஆக மாறிவிடுகிறது. எல்லாக்கதையாடல்களையும், சட்டகங்களையும் தட்டையாக்கி ஒரே கதையாகக் குறுக்குகிற ஸலாம் அலைக், அந்த கதையின் தருக்கங்களுக்கு அப்பாற்பட்ட நிரந்தர உண்மையாக இந்த இனத்துவ உடலைத் தக்கவைக்கிறது. பாவங்களுக்கு, பொய்மைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அப்பாவி இருப்பு.

தன்னுடைய மயக்கமருந்துத் தன்மைக்கெதிராகச்  செயற்படும் நாவலென எல்.ஜே.வயலெட் எழுதியிருப்பதை கருத்தில் கொண்டேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை இனத்துவ சுயத்தை கழிவிரக்கம், சுயபச்சாபத்துடன் வருடித்தரும் ஒரு கட்டுமந்திரமாகவே நாவல் இயங்குகிறது.உணர்வுபூர்வமான வாசக அணுகுமுறைகளை அணைபோட்டு விடாமல் அரவணைத்தபடி, அவற்றுக்குத் தேவையானதீனிகளை அள்ளி வழங்கியபடிதான்  அதன் கட்டமைப்பை வடிவமைக்கிறார் ஷோபா சக்தி. இந்த ஒரேயொரு கதைபழகிப் போன, மிகவும் பரிச்சயமான அலுப்பூட்டக்கூடிய கதை என்ற முக்கியமான அடிக்கோடிடலை மீறிய பரிவுணர்ச்சியை வாசகர்கள் திரும்பத் திரும்பத் தம்முடைய வாசிப்பாக முன்வைப்பதை ஊடகங்களில் காண்கிறோம் இல்லையா? அவலம் பற்றிய சித்தரிப்பு மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி, கழிவிரக்கம், (சுய)பச்சாதாபம், அறச்சீற்றம், அரசியல் திடசங்கல்பம் என்று கலந்து கட்டிய போதையூட்டும் உணர்வுக்கதம்பத்துக்கு இட்டுச் செல்கிறது.வாசகருடைய பரிவுணர்ச்சியை இரட்சிப்பாகக் கொள்ள முடியாது. கூடாது. இலக்கியத்தில் இந்தவகையாக இரட்சிப்பு வேண்டி நிற்கும் இனத்துவ இருப்புடைய அப்பாவித்தனம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டிய ஒன்று. ‘சலாம் அலைக்’இனுடைய  விடுதலை இறையியல் நேர்மையான விசாரத்தை ஒத்திப்போடுகிறது. அரசியல் மொழியில் சொல்லப்போனால் நேர்மையான குற்றவிசாரணையின் சாத்தியங்கள் பிற்போடப்படுகின்றன.

பரிசீலிக்கப்படாத இதர சாத்தியங்கள்

வஞ்சிக்கப்பட்ட கதாபாத்திரங்களுடைய உண்மைஇரத்தமும் சதையுமான ஒன்று. அப்பட்டமானது (அதன்படி இலகுவானது; புரிந்துகொள்ளக்கூடியது; உள்ளங்கை நெல்லிக்கனி) என்கிற எடுகோளை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிற யாருக்கும் இந்த நாவலுடன் பிரச்சனைகள் இருக்கப்போவதில்லை. உதிரிகளை அப்பாவிகளாக நிறுத்தித் தான் விடுதலை அரசியல் செய்யவேண்டும் என்கிற கடப்பாடு ஒரு paternalist தன்மை கொண்டது.

கைவிடப்பட்ட அடையாளமாக மட்டுமே எஞ்சி நிற்காமல் நாவலில் தன்னுடைய லிங்கவிலாசத்தை தக்கவைக்கும்கதாபாத்திரம் ஜெபானந்தனின் துணைவி உமையாள்.அவளுடைய சுயாதீனத்தின் தருக்கங்களை நாவல் பரிசீலிப்பதில்லை. தமிழர்களை அறவே வெறுக்கிறேன்என்று அடிக்கடி சொல்லிக் கொள்கிறாள். தன்னை வேறு வேறு வடிவங்களில் புதுப்பித்துக் கொள்ள அவளால் இயலுமாயிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிகு அவளைக் கண்ணுறும் ஜெபானந்தன் நடையுடைகளைப் பார்த்தால் கரீபியன்  அல்லது மடகாஸ்கார் பெண்ணல்லவோ’ என்று நினைத்துக் கொள்கிறான்.உமையாளாக இருக்க வாய்ப்பில்லை என்று மருகுகிறான். உமையாளைப்போலவெ, நான் முதலில் குறிப்பிட்ட தமிழ் வேசியின் கோலமும் ஜெபயனந்தனில் இருந்து வேறுபடும் லிங்க விலாசமே.  சிறுபிள்ளை வரைந்த தத்தும் விநோதப் பறவையாக மட்டுமே தென்படாமல் அந்த வேசியோ,மனைவியாக மட்டுமன்றி ஊமையாளோ தம்முடைய சுயாதீனம் இயங்கும் மார்க்கங்களை முன்வைக்க முடியுமாக இருந்தால் அங்கே இரட்சிப்பு இறையியலுக்கோ சுயபச்சாத்தாபத்துக்கோ அதிக இடமிருக்கப் போவதில்லை என்பது என் கணிப்பு. ஷோபா சக்தியின் பெண்கள் துரோகத்தை மிகவும் லகுவாக, இயல்பாக செய்துவிடுகிறார்கள். ஓராயிரம் கதைகள் மலரட்டும்.

***

 

-ஹரி ராஜலெட்சுமி

 

1: போருக்குப் பின்னான ஈழ இலக்கியத்தில் வரலாற்றின் தேவதூதாக (ஒரு messianic forceஆக) இலக்கிய எழுத்து முன்வைக்கப்படுவதை, Walter Benjaminஇன் Angel of Historyகருத்தாக்கத்தைச் சுட்டி முன்னரும் எழுதியிருக்கிறேன். காண்க: மறுமை அரங்கு: சயந்தனின் ஆதிரை நாவல். ஆக்காட்டி இலக்கிய இதழ்.

2: உலகளாவியது (universal) என்பதை ஐரோப்பிய தனியதாக (European particular) ஆக மாற்றி வாசிக்கும் ஒரு கவிழ்ப்பு முறை உண்டு. நான் அவ்வாறு கருதுவதில்லை.ஐரோப்பிய நங்கூரங்களுக்கு அப்பால் உலகளாவியதன் வியாபகம் உண்டு. அதன் விரிந்த அர்த்தத்தில் இக்கட்டுரை உலகளாவியதைப் பயன்படுத்துகிறது.

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *