ஊரில் எத்தனையோ அசைவ உணவகங்கள் வந்துவிட்டது. முழுக் கோழியை உறித்து கம்பியில் சொருகி, தீயில் சுழல விடும் தந்தூரி கடைகள் பஸ் ஸ்டாண்டில் பெருகிவிட்டன. பக்கெட் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடைகள் வந்துவிட்டது. குளிர்வசதி கொண்ட அந்த உணவகங்களில் மக்கள் குவிகின்றனர். இவ்வளவுக்கு பிறகும், கடைத்தெருவின் ஒரு மூலையில், அடுப்பு கரி படிந்து சுவரெல்லாம் இருட்டாகி, வெளிச்சமே இல்லாமல் பாழடைந்த வீடு போல் இருக்கும் இந்த மதுரை பெஸ்ட் முனியாண்டி விலாஸுக்கு இன்னமும் சிலர் வந்துக்கொண்டுதான் இருந்தனர். அப்படி அவர்கள் வருவதற்கு உணவின் சுவை மட்டும் காரணம் அல்ல. ஊரின் எந்த உணவகத்திலும் மது குடிப்பதற்கு அனுமதியளிப்பதில்லை. போலிஸை சமாளிக்க தெரிந்தவர்களுக்கு, போதையேறியதும் டேபிள் சேரை உடைத்தெறிபவர்களை சமாளிக்க முடியாததே அந்த தடைக்குக் காரணம். முனியாண்டி ஹோட்டலை பொறுத்தவரை அப்படி உடைக்க மதிப்பாக எதுவுமில்லை. அப்படியே உடைத்துப்போட்டாலும் சிரித்துக்கொண்டே அனுப்பிவைப்பவர் பெருமாள்சாமி முதலாளி. அடுத்த நாள் அப்படி உடைக்கப்பட்ட ஸ்டுலிலேயே உட்காரவேண்டி வருமென்பதால் ரெகுலராக குடிக்கவருபவர்களும் அங்கு தகராறு செய்ய தயங்கினார்கள்.

நினைவு தெரிந்த நாள் முதல் இந்த பழைய வீட்டில் தான் மதுரை பெஸ்ட் முனியாண்டி விலாஸ் இயங்கி வந்தது. பிரதான கடைத்தெரு சாலையிலிருந்து ஒருவர் மட்டுமே நடக்க கூடிய சந்தாக ஓடி, அதன் முடிவில் உணவகம் இருந்தது. கடைத்தெரு பார்த்தபடி இருக்கும் வீட்டின் மூலையில் கல்லாபெட்டி இருந்தது. பெருமாள்சாமி நாயுடு இல்லாத நேரத்தில் அவரது மூத்தமகன் ரங்கய்யன் உட்காந்திருப்பார். சிறுவனாக பள்ளிக்கு செல்லும்போது சுருக்கு வழியாக இந்த சந்தில் புகுந்து செல்வதுண்டு. உணவக வாசலிலின் ஒரு மூலையில் கல்லாபெட்டியும் இன்னொரு மூலையில் பரோட்டா போடும் கல்லுமிருக்கும். கல்லா பெட்டிக்கு நேராக இருந்த அந்த மூன்று அடி சந்தின் வழியாக கடைத்தெருவின் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருப்பார் பெருமாள்சாமி நாயுடு. கடைத் தெருவை பார்ப்பதில் சுவாரஸ்யம் குறையும் நேரத்தில் பொன்வண்டு பனியனுடன் வியர்வை பொங்க அந்தோணி, பரோட்டாவை புரட்டி எடுப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்.

எல்லாவற்றையும் தாண்டி மதுரை பெஸ்ட் முனியாண்டியில் ஒரு விசித்திரம் இருந்தது. உணவகத்தின் வாசலில் சிறிய ஸ்பிக்கர்கள் கட்டப்பட்டு அவற்றில் எந்த நேரமும் சினிமா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். உணவகத்தின் உள்ளேயும் அந்த பாடல் மெலிதாக ஒலிக்கும். ஆனால் அந்த பாடல்கள் வேறு எங்குமே கேட்க கிடைக்காதவையாக இருந்தது. கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அவை பழைய பாடல்களுமில்லை. இருப்பினும் அந்த பாடல்கள் எந்த படத்தில் வந்தவை, யார் இசையமைத்து என்றே அறிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவை பிரபல்யம் இல்லாதவையாக, ஒருவேளை அந்த பாடல்கள் இடம்பெற்ற படங்களே வெளிவரவில்லையோ என்கிற அளவுக்கு விசித்திரமானவையாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் சிரஞ்சிவி நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்து வரும்போது, தெலுங்கு வார்த்தைகளின் வாயசைவுக்கேற்ப எழுதப்பட்டவையும் அதில் உண்டு. இப்படி ஒரு ரசனையா என்று தோன்றும்படி அந்த பாடல்களை தேர்ந்தெடுப்பது யார் என்று நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். பெருமாள்சாமி நாயுடு, ஒருபோதும் அந்த பாடல்களை முணுமுணுத்தோ, தாளம்போட்டோ பார்த்ததில்லை. கேசட்டுகள் வழக்கொழிந்து, சிடி, எம்பி3 என மாறி பல ஆண்டுகள் ஓடிவிட்ட சூழலிலும் முன்பு போலவே கேட்டேயிராத பாடல்களை பழைய ஸ்பீக்கர்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்தது, முனியாண்டி ஹோட்டலில் மட்டும் காலத்தை நிறுத்தி வைத்தது போல் தோன்றியது.

காலங்காலமாக குடிமேஜையில் பேசப்படுபவைகளை கேட்டு அலுத்துபோனதாய் மிக மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது அந்த பழைய மின்விசிறி. ஓடுகள் வழியே இறங்கும் மதிய வெயிலின் வெம்மையை அறையெங்கும் விசிறியடித்தது அது. உள்ளே இறங்கியிருந்த மது உடலின் வெப்பத்தை கூட்டி வியர்வையை பொங்க வைத்திருந்தது.  ஒரு பெரிய தட்டில் பொறித்த கோழி, வறுத்த மீன், மட்டன் ப்ரை, கறி மீன் போன்றவற்றை சுற்றிலும் வைத்து கொண்டு வந்து காட்டி ஆர்டர் எடுத்துக்கொண்டிருந்தார் அந்தோணி. மெனுகார்டை காட்டி ஆர்டரை எடுப்பதை எல்லாம் நம்புவதில்லை பெருமாள்சாமி நாயுடு. சுவையான உணவை நேரடியாக காட்டுவதின் வழியாகவே மக்களை சாப்பிட தூண்ட முடியும் என்று நம்புபவர் அவர்.

பழைய திண்டுக்கல் பூட்டின் வடிவத்தை நினைவுப்படுத்திய நன்கு சிவந்து பொறிக்கப்பட்ட கெண்டை மீனை காட்டி ஆர்டர் செய்தான், சிவா. மூன்று எவர்சில்வர் டம்ளர்களில் டாஸ்மாக்கில் வாங்கி வந்திருந்த மார்ஃபெஸ் பிராந்தியை கால்வாசி விட்டு தண்ணீர் ஊற்றினான் லோகு. வெகு நாட்களுக்கு முன்பே நண்பர்களுக்காக ஃபாரின் சரக்கு வாங்கி வருவதை விட்டிருந்தேன். பெரும்பாலும் அது இவர்களுக்கு கேட்பதில்லை. க்ளென்ஃபிட்ச் சிங்கிள் மால்ட் விஸ்கியை அருந்திவிட்டு, பத்தவில்லை என்று அதற்குமேலேயே டாஸ்மாக் விஸ்கியை விட்டுக்கொள்ளும் அபத்தத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எங்களுக்கு பக்கத்து வரிசையின் மூலையில் அந்த இளம்பெண்ணும் எதிரில் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தனர். அந்த உணவகத்தில், கடைசியாக எப்போது இளம்பெண்ணை பார்த்தோம் என்று நினைவில் இல்லை. சமயங்களில் வயதான தம்பதிகள், கிராமத்திலிருந்து மளிகை சாமான்கள் வாங்கிவிட்டு திரும்புகையில் கணவரின் மது விருப்பத்திற்காக அங்கு வருவதுண்டு. அந்த இடத்தில் ஒரு இளம்பெண்ணை பார்ப்பது கிளர்ச்சியாகவும் அதே சமயத்தில் ஒரு அசெளகரியத்தையும் தந்தது. அந்த பெண் இடது கையில் சிறிய பர்ஸை பிடித்து சுருட்டியவாறே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். கிழவர் பழுப்பு நிறமான வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்தார். கழுத்தில் கட்சிகரை போட்ட துண்டு. வயது காரணத்தால் ஜிப்பா பெரியவர் தளர்ந்திருந்தாலும், ஒரு காலத்தில் உறுதியான உடலை கொண்டிருந்தவர் என்பதை தீர்க்கமான கண்கள் காட்டியது.

கரு நீலத்தில், வெளிர் நீல நிற பறவைகள் பொறித்திருக்கும் காட்டன் புடவை அணிந்திருந்தாள் அந்த பெண். அதே வெளிர் நீலத்தில் குட்டையான ரவிக்கை.  மாநிற மேனி. கழுத்தை ஒட்டி மெலிதான தங்க செயின். திருத்தப்பட்ட புருவம், அளவான கண்கள். நீள்வாக்கு முகம். உதடுகளில் மிக மெல்லிய சிவப்புத் தீட்டல். தலைமுடியை பின்னாமல் போனிடெயில் போல் விட்டிருந்தாள். நெற்றி ஓரத்தில் சிறிய தழும்பு அவள் செய்திருந்த மேக்கப்பை மீறி தெரிந்தது. அவள் உடுத்தியிருந்த விதம், அமர்ந்திருந்த பாங்கு, இவற்றிலிருந்த நளினம் மீண்டும் அவளை பார்க்கவைத்தது.

கிழவர், அந்த பெண்ணிடம் பேசியபடி அவ்வபோது துண்டை இடது பக்கமாக தூக்கி வாயை மறைத்தபடி டம்ளரை எடுத்து குடித்தார். இலையில் இருந்த மட்டன் பிரியாணியில் இருந்து கறியை எடுத்து கடித்துக்கொண்டார். அவர் கடிக்க எடுத்துக்கொண்ட பிராயத்தனத்தில் வாயில் பற்கள் இல்லை என்பது தெரிந்தது. அந்த பெண் கறியை கையிலெடுத்து மசித்து அவர் சாப்பிடுவதற்கு தோதாக இலையில் வைத்தாள். போதும்மா என்று சிணுங்கியபடி அவர் அதை தொட்டுக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் பெண்கள் தாயாகி விடுகின்றனர் என்று தோன்றியது. கிழவர் ஏற்கனவே நிறைய குடித்திருக்கிறார் என்பதை சிவந்த கண்கள் காட்டியது. திரும்பவும் டம்ளரை எடுத்தார். ”போதும்ப்பா. பிரியாணியை சாப்புடுங்க” என்றாள் அந்த பெண். கிழவர் மெலிதாக சிரித்துக்கொண்டே வலதுபக்கமாக திரும்பி பாட்டிலில் இருந்து சரக்கை டம்ளரில் ஊற்றிக்கொண்டு ஜக்கில் இருந்த தண்ணீரை கொஞ்சமாக அதில் ஊற்றி பழையபடி துண்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு உறிஞ்சினார். பிறகு எங்களை பார்த்து சினேகபாவமாக சிரித்தார்.

”எம் மவ ஆனந்தி. சிங்கப்பூர்லே வேலை பாக்குது. லீவுக்கு வந்துருக்கு”, என்றார்.

”சிங்கப்பூருலே எங்க?” என்றான் அங்கு மூன்று வருடம் ஓவர்ஸ்டே அடித்திருந்த லோகு. பெரியவர் தயக்கமாக அந்த பெண்ணை பார்த்தார். அந்த பெண் கேள்வியை தவிர்த்து, மைய்யமாக சிரித்தது. பெரியவர் எங்களிடம் சகஜமாக பேசுவதை அந்தப்பெண் விரும்பவில்லை என்பது தெரிந்தது.

நான்குமணி கறவைக்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது என்று கடைத் தெருவில் அவிழ்த்துவிட்டிருந்த ஒரு பசுமாடு பின்பக்கம் ஒலிக்கும் ஹாரனை சட்டைசெய்யாமல் வெயிலில் நிதானமாக நகர்ந்துக்கொண்டிருந்தது, சந்து வழியாக தெரிந்தது. வாழைத்தார்களை வண்டியில் தள்ளிக்கொண்டு, வழிகேட்டு சத்தம் கொடுத்துக்கொண்டே போனார் ஒருவர்.

பெரியவர், அடுத்த ரவுண்டை உறிஞ்சி கீழே வைத்துவிட்டு சிவப்பேறிய கண்களுடன் என்னை பார்த்து “ மூணு தறுதலைகளை பெத்தேன். நடுரோட்டுலே வுட்டுட்டுச்சுங்க. கடைசியா பெத்த ஒத்த பொண்ணு இது, நின்னு காப்பத்துது.” என்றார்.

அப்பா, போதும்.. சாப்பிடுங்க.. என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி முனகினாள் ஆனந்தி.

எங்கய்யா காலத்துலே ஒன்றரை வேலி நெலமிருந்துச்சு. புள்ளைங்களை படிக்க வைக்குறேன், பொண்டாட்டிக்கு வைத்தியம் பாக்குறேன்னு நா கொஞ்சத்தை ஒழிச்சேன். அப்பவும் பதினாறு மா நெலம் கிடந்துச்சு. முப்போகம் விளையுற மண்ணு. ஒழுங்கா பார்த்திருந்தா, ராசா மாதிரி இருக்கலாம். தறுதலைங்க எவனும் நெலத்தை பார்க்கலை. அங்க தொட்டு, இங்க தொட்டுன்னு கடனாயிடுச்சு. பட்டாமணியாரு, நெலத்தை மீட்க வழியில்லன்னா, தானே வெள்ளாமை பண்ணிக்கிறேன், பாக்கி பணத்தை வாங்கிக்கன்னுட்டாரு.

சற்று இடைவெளி விட்டார் பெரியவர். துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டார். தொண்டை கம்மியிருந்தது.

நாம உசுரோட இருக்கச்சையே, இன்னொருத்தன் நம்ம நெலத்துலே இறங்கி வெவசாயம் செய்றதை பாக்குறது எப்புடிருக்கும் தெரியுமா? நம்ம பொஞ்சாதியை, இன்னொருத்தான் பெண்டாள விட்ட மாதிரி வலி தம்பி அது. நீளமாக பேசியதால் மூச்சிரைத்தார் பெரியவர்.

இப்போ என்னாத்துக்கு போனதை எல்லாம் பேசணும்? சாப்பிட வந்த இடத்திலே இது என்ன வேலை?வீட்டு கதையெல்லாம் இங்கே சொல்லிட்டு இருக்கே? என்றாள், அந்த கருநீல புடவையணிந்த ஆனந்தி. சொல்லிவிட்டு என்னை முறைத்தாள். ”நீ தான் தேவையில்லாம இதெல்லாம் அவரை சொல்லவைக்குறே”, என்கிற புகார் அவள் கண்களில் தெரிந்தது. கோபத்திலும் அவளது அசைவுகளில் நளினம் கெடவில்லை. பேசும்போது குவியும் சிறிய உதடுகளில் புன்முறுவல் இன்னும் மிச்சமிருந்தது.

”அட நீ சும்மாரும்மா. மனசுக்குள்ளேயே கெடந்து புழுங்கிட்டு கிடக்கேன். பச்ச மட்டை வெட்டற அன்னைக்குதான், நெருப்பெல்லாம் ஆறும். தம்பிங்க யாரோ, எவரோ, சொல்லிதான் ஆத்திக்குறானே” என்றார் பெரியவர். கண்கள் சிவந்து, வாய் குழறத் தொடங்கியிருந்தார் .

பேச்சு சத்தம் கேட்டு, கல்லாபெட்டியிலிருந்த பெருமாள்சாமி நாயுடு, சன்னல் வழியே மெல்லக் குனிந்து உள்ளே பார்த்தார். சாப்பிட வருபவர்கள், குடித்துவிட்டு மெளனமாக மட்டன் சாப்ஸும், பிரியாணியையும் தின்றுவிட்டு நகர்ந்துவிட்டால் அன்றைய பொழுதுக்கான வியாபாரம் நல்லபடியாக போனது என்று அர்த்தம். குடித்துவிட்டு ஆரம்பிக்கும் எந்த பேச்சும், சண்டையில்தான் நிற்குமென்கிற அனுபவம் அவருக்கு. அவர் உள்ளே பார்ப்பதை நான் பார்த்தவுடன் சட்டென்று தலையை திருப்பிக்கொண்டு பழையபடி கடைத்தெருவை பார்க்க தொடங்கினார்.

லோகுவும், சிவாவும் என்னை எதிர்பார்க்காமல் அடுத்தடுத்த ரவுண்டுகளில் மும்முரமாக இருந்தர்கள். வேலைக்காக ஊரை விட்டு போன ஆரம்பகாலங்களில், விடுமுறைக்கு வரும்போது குடிப்பது நண்பர்களுடன் பேசி, விட்டுபோன காலத்தை பேச்சால் நிரப்பிக்கொள்வதற்காகதான பிராயசையாகதான் இருந்தது. சில வருடங்களில் பொதுவாக பேசிக்கொள்வதற்கான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விட்டிருந்தது. எங்களுக்கு தெரிந்த பெண்கள் திருமணமாகி வேறு நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்றிருந்தார்கள். பொதுவான நண்பர்கள் குறைந்திருந்தார்கள். எங்களுக்கு தெரிந்த ஊர் இப்போது நினைவுகளாக மட்டும்  எஞ்சியிருந்தது. பெரிய மால்கள் நான்கு வந்து விட்டது. ரெத்னா டீலக்ஸ் தியேட்டர் மல்டி பிளக்ஸ் திரையரங்காக உருமாறியிருந்தது, மாறாமல் இருந்தது இந்த முனியாண்டி ஹோட்டல் மட்டன் சாப்சும், அதன் பிரசித்தி பெற்ற இசையும் தான்.

பெரியவரை பார்க்க தயங்கி, கிளாஸில் தண்ணீர் விட்டுக்கொண்டேன். அந்தோணி, தட்டில் அயிட்டங்களுடன் உள்ளே வந்து ”வேற ஏதாவது வேணுமா சார்”, என்று கேட்டார். அந்தோணியை உள்ளே அனுப்பியதே முதலாளியாகதான் இருக்கும். சிவா, ”பெப்பர் நல்லா தூவி மூணு ஆஃப்பாயில்”, என்றான். பிரச்சினை எதுவுமில்லை என்று உறுதி செய்துக்கொண்ட திருப்தியுடன் வெளியே போனார் அந்தோணி.

குரலைச் செருமி, கவனம் ஈர்த்தார் பெரியவர். அவரைச் சட்டை செய்யாமல், லோகுவிடம் “கடை எப்படி போகுது?| என்றுக் கேட்டேன். ம்ம்..போவுது என்று சொல்லிவிட்டு செல்ஃபோனை நோண்டினான் லோகு. பெரியவர் பேச விரும்புகிறார் என்பது அவரது அசைவுகளில் தெரிந்தது. வேண்டுமென்றே மெளனமாக இருந்தேன். அப்பாவும் மகளும் ஏதோ பேசிக்கொண்டார்கள். பெரியவரை பார்க்க பாவமாக இருந்தது.

பிறகு சட்டென்று துணிந்து, ”பையங்க எங்கே இருக்காங்க?” என்று அவரிடம் கேட்டேன். மூத்தவன் ரெண்டு பேரு திருப்பூர் பனியன் கம்பெனி வேலைக்கு போனானுக. திடீர்ன்னு வேலையைவிட்டுட்டேனு வருவானுக. மறுக்கா போவனுக. ஒருத்தன் உள்ளூரலேயே கூலி வேலை பாத்துகிட்டு, குடிச்சிட்டு திரியுறான். ஒருத்தனும் பிரயோஜனமில்லை, தம்பி. எல்லாம் போச்சு. காசு, பணம் மருவாதை எல்லாம் செய்முறை செய்ய வக்கு இருக்குறவனுக்கு தான். வெத்து சோறுன்னு தெரிஞ்சா சொந்தமாவது ஒண்ணாவது. மண்ணு மட்டும் கையை வுட்டு போச்சுன்னா, மானமும் போச்சுன்னுதான் அர்த்தம். அப்படியே தான் போணுச்சு பத்து வருசம். எல்லாத்தையும் மாத்துனது, இந்த பொண்ணுதான். எங்க குலச்சாமி. கையை எடுத்து மகளை கும்பிட்டார் பெரியவர்.

ஆனந்தி, தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தாள். இனி இவரை நிறுத்த முடியாது என்று தோன்றியவளாக சங்கடத்துடன் புன்னகைத்தாள். “ஆம்பிளை பயலுங்களை படிக்க வைக்கணும்ன்னு செலவு செஞ்சேன். ஒருத்தனும் தேறலை. ஆனா பொண்ணு உள்ளூரலேயே ஸ்கூலு போணுச்சு. பொறவு வைராக்கியமா சிங்கப்பூர் போய் சம்பாதிச்சு இந்தா இடிஞ்சு விழுந்த வீட்டை எடுத்து கட்டிபுடுச்சு. பத்து மா நெலம் இருந்தா பாருப்பாங்குது. என் புத்திக்கு இதை காலேசு அனுப்பணும்னு தோணாம போயிடுச்சு.”

கீழே குனிந்து அடுத்த ரவுண்டுக்கு பாட்டிலை தேடினார் பெரியவர். தள்ளாடிய கை பட்டு எவர்சில்வர் டம்ளரிலிருந்த தண்ணீர் இலையில் கொட்டியது. இலையிலிருந்து ஓடிய நீர், கரு நீல நிற புடவையில் சொட்டியது. ஆனந்தி சட்டென்று இலையை மூடிவிட்டு, எழுந்து கைகள் கழுவ வாஷ்பேசின் இருக்கும் முற்றத்துக்கு போனாள். பெரியவர் ஒரு வழியாக பாட்டிலை தேடியெடுத்து மீதமிருந்ததை தனது டம்ளரில் கவிழ்த்துக்கொண்டார். ஆனந்தி எழுந்த வேகத்தில் சிவாவும், லோகுவும் நிமிர்ந்து வேடிக்கை பார்த்தார்கள். தேவையில்லாமல் இவரிடம் பேச்சுக்கொடுத்தோமோ என்கிற சங்கடத்தில் நான் தலைகுனிந்து சாப்பிட்டேன்.

பெரியவர் இலையை துளாவிக் கொண்டே, டம்ளரை உறிஞ்சினார். கைகழுவி வந்த ஆனந்தி, ”போதும் சாப்புட்டது, கெளம்புப்பா” என்றாள், சத்தமாக. பெரியவர் காது கேளாதவர் போல், டம்ளரை கீழே வைத்துவிட்டு துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டார். ஆனந்தி இந்தமுறை இன்னும் கோபமாக ”நீ இப்போ கிளம்ப போறீயா இல்லியா ?”, என்றாள்.

அட, தட்டுவாணி செறுக்கி, என்கிட்டே சம்பாதிக்கிற பவுசை காட்டுறியா. அடிச்சு மொகரையை பேத்துடுவேன் என்று கை ஓங்கி எழ முயற்சித்தார். நிலை தடுமாறி சுவரை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தார். நீ கேலாங்க்லே என்ன தொழிலு செய்றேன்னு எனக்கு தெரியாதா? நாயே, இப்படி குடும்ப மானத்தை கப்பலேத்திட்டியேடி அவிசாரி முண்டை.. இதெல்லாம் ஒரு பொழைப்பா? என்று பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினார் பெரியவர். ஆஃப்பாயில் எடுத்துவந்த அந்தோணி விக்கித்துப்போய் நின்றார். அவமானத்தில் கூனி குறுகியவளாய் ஆனந்தி கண்களிலிருந்து நீர் சொட்ட நின்றிருந்தாள். வழக்கம்போல் கேட்டேயிராத ஒரு விசித்திரமான பாடல் ஸ்பிக்கரிலிருந்து கசிந்தது.

***

– ரா.செந்தில்குமார்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *