” ஹோய்….”.
” ஊஊஊய், ஊமையன்..!”.
” வெடில்.. வெடில் இருக்கா?.”.
பாறி வீழ்ந்த வேர்முடிச்சிலிருந்து காளான் முட்டம் போல அவன் எழுந்து வந்தான். முன்னரும் குளக்கரையில் கொம்பரிலிருந்து விழும் கொக்கு இறக்கைகள் தலைமுடியில் சிக்கி நிணம் கலையா கண்களோடு வந்து நின்றிருப்பான். அவன் அழுக்கோ அலங்கோலமோ அதை விட அவன் திருத்தமில்லாத ஊளை போன்ற ஊமைக் கதறலோ திருடித் தின்ற தென்னங் கோம்பைகளையோ ஆமை கடித்த வெள்ளரிப் பழம் மேல் அவன் கழித்த மூத்திர வாசனையோ அவனுக்கான அடையாளமாய் தோட்டத்தில் அவன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தங்கியிருந்த சாட்சியாயிருந்தன. பெரிய தென்னை மரங்களைச் சுற்றி சரிவர தோண்டப் பட்ட பாத்திகள் மீது கவிழ்க்கப்பட்ட தென்னம் மட்டைகளின் ஊறிய வாசமும் பக்கத்து வீடுகளில் அப்பம் அவிக்கும் வாசமும் நெருடி நாசியைக் கரித்தன. குளத்திலிருந்து இரவில் கரையொதுங்கும் முதலைகள் குடில் வாசலை அண்டாது தங்கூசி நூலை குறுக்கு மறுக்காக வேய்ந்து வைத்திருந்தான். களப்பிலிருந்து குளத்துக்கு பெரிய குழாய் வழியாக வரும் முதலைகள் கரையேறி வாய்திறந்து படுத்திருக்கும் குளக்கரைக் தோட்டங்களில் முதலைகளை விரட்ட ஆங்காங்கே கொழுத்திப் போடப்படும் பட்டாசுச் சத்தங்களுக்கு நாய்கள் விரண்டோடுவது வழக்கமாயிருந்தது. இந்த பட்டாசுக் கலாச்சாரத்தை ஊமையன் தான் துவங்கியிருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் பட்டாசுக்கட்டுக்காய் முதலைகள் பயந்து குளத்துக்கு பாயும் பெருஞ்சத்தம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை ஆர்வமாக்கியிருந்தது. பதினாறு பதினெட்டடி இராட்சத முதலைகள் ஊரின் நடுவே உள்ள மருதவெட்டுவான் குளக்கரையில் விரட்டப் படுகிற பட்டாசுச் சத்தங்களுக்கு நாய்களைத் தவிர மற்ற எல்லாம் இப்போதெல்லாம் அசூயையுற்றிருந்தன. குளிர் ரத்த முதலை முட்டைகள் வெடிப்பதைப்போல ஊமையனின் பட்டாசுகள் குடிசையிலிருந்து திரிப்புகையோடு ஏறி வந்து முதலையின் பக்கத்தில் டும் என்று வெடிக்கும். இரவில் எந்த இருட்டில் அவை கரையேறினாலும் ஊமையனின் கண்ணிலிருந்து தப்பாது. ஊர்வனவரசனின் காலன் இரவிலேயே அக்கம் பக்கத்திற்கு அருகாமையில் இருந்தான். தேங்காய் திருடி விற்கிற காசில் வாங்கிய பட்டாசுகளை வேலிக்கு மேலால் இனாமாக கொடுப்பதில் அவனுக்கொரு சந்தோசம். அப்போதும் அவன் கைகளிலிருந்து தூர இருந்து பட்டாசைப் பிடுங்கியெடுப்பர். அவன் அலங்கோலமும் தூரத்தே வரும் துர்நாற்றமும் அவனை தள்ளிவிட்டிருந்தன. அவனுக்கு குடும்பமென்று இருந்ததில்லை. மாதம் இருநாட்கள் குளித்து சுத்தமாகி பெரிய சேட்டு, காற்சட்டை செருப்போடு ஊருக்கு கிளம்பிவிடுவான். கையில் ஒரு மட்டை போல இருக்கும் பையை யார் கேட்டாலும் அவன் கொடுப்பதில்லை. மீறிப் பிடுங்கினாலோ முதலை வால் போல திமிரி விடுவான்.
கிளம்பும் போது எந்த ஊரென்று கேட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் எழுதி வரும். ஏறாவூரென்பான். புன்னாலைக் கட்டுவான், அக்குரஸ்ஸ, தொடங்கமவென்று புதிது புதிதாக காட்டுவான். எங்கே போகிறானென ஊகிக்கவே முடியாதபடி குறுக்குப்பாதைகளை தேர்ந்தெடுப்பான். வழக்கமான பேரூந்துத் தரிப்பிடத்தில் ஏறமாட்டான். சலீம் மாஸ்டரின் தோட்டத்துக் காரன் என்பதைத் தவிர வேறு தகவல்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. சலீம் மாஸ்டர் தோட்டத்துக்கு வரும் நாட்களில் தோட்டத்தை துப்பரவாக்கி விடுதி போல கட்டப்பட்ட கூடத்தை கழுவி கதிரைகளை துடைத்துப் போடுவான். ஓங்கி வளர்ந்த மரக்கிளைகளை கத்தரித்து விடுவான். முழு வெள்ளரிப் பழங்களை கவனமாக தட்டில் கழுவி கொட்டை துப்பக் கோப்பையோடு கூடத்தின் விறாந்தையில் வைத்து விடுவான். மாஸ்டர் கறாரானவர் என்பதால் அவர் எண்ணி வைக்கும் தென்னங்குலைகளை அவன் திருடுவதில்லை. குளப்பக்கமாக ஒரு தென்னை சாய்ந்திருந்தது. தானாக முளைத்து வளர்ந்த அந்த மரத்திலிருந்து சிறிய தேங்காய்களை அவன் திருடி விற்பான். இது மாஸ்டருக்கும் தெரிந்திருந்தும் தோட்டத்தில் தேங்காய்களை விட பெரிய ஆதாயம் அவருக்கு தோட்டத்திலிருக்க வேண்டும்.
***
” கொஞ்ச நாளா அவிய தள்ளித் தள்ளி தான் இரிக்காங்க..”.
அக்கம் பக்கத்தில் பேச்சு பரவியிருந்ததை புரிந்து கொண்ட சௌதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்கிற குழப்பத்தோடு காயப் போட்ட ஆடைகளிலிருந்து கிளிப்புகளை கழட்டி கோப்பையில் போட வேண்டியிருந்தது. இரவின் கொலுவிலிருந்து பொம்மைகளாய் தலையாட்டிய மரங்களின் மேல் துண்டு துண்டாக சந்திரள் கிழிந்து கிடந்த குளுமை காற்றிலும் ஊறி மூக்குத்துவாரங்களைக் கூசியது. வீட்டில் வளர்க்கிற கடுவன் பூனை எதையோ தின்று கடப்படியில் வாந்தியெடுத்து விட்டிருந்ததில் அந்த நாற்றம் குமட்டி எடுத்தது. விறாந்தை கடப்படியை கழுவி பூனை தின்னுகிற பழைய பீங்கானை குசினிப்பக்க வெளிப்படியில் வைத்து விட்டு நிமிர்ந்தாள். அவளைச் சுற்றி குரல்கள் நீளமாக ஆண் ஒலியிலும் குட்டையாக பெண்ணொலியிலும் கவனமாக அசரீரித்தன. ஒரு ஒலிப்பதிவு நாடாவைப் போல அந்த கூச்சல் சத்தம் ஏறிக்கொண்டே தலையைக்குடைந்து மூக்கைத் தள்ளுவது போலிருந்தது. அவர்களுக்கு பிள்ளை இல்லை. இருக்கிற சொத்து போதாதென்று மாஸ்டருக்கு பிடித்திருக்கிற காசுப்பேய் அடங்குமென்ற நம்பிக்கை அறவே நீர்த்து பூனை விழுங்கிய மீன் சதை போலச்செரித்து விட்டிருந்தது. இந்த வியாபாரம் வேண்டாம், இந்த ஆபத்து வேண்டாமென்ற பெண் குட்டையொலிகளை ஏறி வந்த ஆண் நீளவொலிகள் எகத்தாளமாக ஏப்பமிட்டு முன்னேறின. அச்சம் அவள் கழுத்துக்கு நேரே தேங்காய் உரிக்கிற உளியைப் போல பளபளத்துக்கிடந்தது. இப்படித் தான் முன்னரும் மானியத்தில் வந்த அரசாங்க உரத்தை மொத்தமாக பதுக்கி வைத்திருந்த போது அவள் அச்சத்திலிருந்தாள். பிச்சைக்காரி கதவைத் தட்டினால் கூட திடுக்கிட்டு பதறியெழுந்தாள். யாருக்காக சேர்க்கிறோம், எதற்காக குவிக்கிறோம் என்று கேள்விகள் கேவலைப்போல கோழிக்கூவலாய் அவளை நெருக்கின. மாஸ்டர் கண் விழித்த படி படுத்திருந்தார். நாளைக்கு விடியும் போதே அவர் புறப்பட்டாக வேண்டி ஆடைகளை ஸ்திரீ பண்ணி கொழுவிவிட்டாள். கதவுகளைச் சாத்தி பின் கதவருகே பூனைப் பீங்கானில் மீன் குழம்போடு பிசைந்த சோற்று உருண்டைகளை வைத்திருந்தான். பொல்லாத கடுவன் தின்றாலும் திருடித் தான் தின்னும், சலீம் மாஸ்டரின் பூனையாச்சே என்பாள். பெரும்பாலும் அந்த உருண்டைகள் காலைவரை தின்னப்படாமல் எறும்பேறியிருக்கும்.
” இஞ்சே..” .
” ம்ம்ம்..”.
” நமக்கு எதுக்கு மணி இந்த தொழில்..”.
” விட்டிட்டு இருக்கிறதோட இருப்பமே..”.
” ஆரும் புடிக்காட்டியும் அல்லாஹ் பிடிச்சிருவானே மணி..”.
அவள் கெஞ்சியிருந்தாள். ஒரு குழந்தை போல கருவிலிருத்தாது கலைந்து ரத்தமாகிப்போன எல்லாக் குழந்தைமையும் சேர்ந்த பெண் ஒலியில் குறுகலாக வேண்டினாள்.
” நான் செல்லியிருக்கேன், எண்ட விசயத்தில தல போடாத..”.
” பேசாம படு.”
ஆண் நீளவொலி ஏறி மிதித்ததில் குழந்தைமையோடு பெண் குட்டையொலி மெதுமெதுவாக பெண் நீள மௌனமாகியதில் அவள் அசந்திருந்தாள். தூக்கம் அவளைக் கட்டி ஒலிநாடாத்தொந்தரவிலிருந்து முதலை போல அமைதிக்குள் தள்ளி மூழ்க விட்டிருந்தது.
***
முதலையின் வாலைப் பக்கவாட்டில் இழுத்து முன்னங்கால்களோடு முதுகின் மேல் கட்டி மல்லாக்கப் போட்டிருந்தான். வாயை அகட்டி குச்சியை அடைவைத்து பெரிய முதலை பற்களைத் தொட்டுக்காட்டினான். பிள்ளைகள் காலையிலேயே வந்திருந்தனர். கையில் தூண்டில்களோடு குளக்கரை தென்னை மரங்களில் வார இறுதியில் சாய்ந்தபடி நின்றிருப்பர். அவ்வப்போது அவர்கள் பாவனையாக தூக்கிவிடும் தூண்டில் கம்புகளில் மீன்களோ இரையோ இருப்பதுமில்லை. மருதவட்டுவான் குளத்தை சில மாதங்கள் ஆற்றுவாழை முற்றாக மூடியிருக்கும். ஆற்றுவாழை காற்றுப்பைக்கு நடுவே மீன்கள் துள்ளும் சிறிய நீர்வட்டங்கள் தவிர குளம் முழுதாய் ஆற்றுவாழை ஊதாப்பூவின் தம்பங்களாய் வடிந்து கிடக்கும். பெருகிய ஆற்றுவாழை நார்கள் அவிந்த மணத்திற்கு பூச்சிகள் கொதித்துப் பரவும். இந்தக் காலங்களில் குளக்கரைத் தோட்டங்களில் தோணிகள் குப்புறக்கிடக்கும். தூண்டிலோ வலையோ போடமுடியாது. மாஸ்டரோ ஊமையனின் உதவியோடு அவரின் தோட்டத்தை அண்டிய குளப்பகுதியில் முன்னர் வரண்ட காலங்களில் நட்டிவைத்த மரக்கால்கள் வரை ஆற்றுவாழைகளை சுத்தம் செய்து வைத்திருந்தார். பாவனைத்தூண்டிலார்கள் கம்புகளோடு நின்றால் யாருக்கும் சந்தேகம் வராதென்பது மாஸ்டரின் திட்டம். பொட்டலங்களாக கண்ணாடிப்பளிங்கு போல சலவைக் கல்லு போலவிருந்த போதைப் பொருள் பிரபலமாகியிருந்ததில் சலீம் மாஸ்டரும் அந்த வியாபாரத்தில் பெரும் பகுதியை விற்கிற முக்கிய கையாக மாறியிருந்தார். அந்த பெரும் பகுதியை எங்கோ யார்யாரிடமோ இருந்து பொட்டலங்களாக தருவிப்பார். அவற்றை நொடிப்பொழுதில் கைமாற்ற தரகர்கள் ஊரெங்கிலுமிருந்தனர். இந்த பரிமாற்றம் மிகுந்த பாதுகாப்போடு பலமணிநேர கண்காணிப்பிலிருந்து சரியான நேரம் வரும் வரை காத்திருந்து தக்க சமயத்தில் ‘சாமான்’ கைமாறுவதாக வலையமைப்பு இருந்தது. அதற்குரிய கேந்திரக்கொட்டகையாக முதலைத்தோட்டமிருந்தது. சில பொட்டலங்களை மாஸ்டரும் விற்பதுண்டு. பிள்ளைகளுக்கு இரண்டு தேர்வுகளைக் கொடுப்பார் மாஸ்டர். பணத்திற்கு பொட்டலங்களை வாங்க முடியும் அல்லது பொட்டலங்களுக்காக இன்பத்தை கொடுக்கமுடியும். இன்பமென்பது ஒரே இனத்திலிருந்து ஒரே பாலிலிருந்து வெடிக்கும் ஆற்றுவாழை காற்றுப்பை போல நொடிநேர இன்பமாயிருக்கும். கூடத்தின் தங்குமறையில் யாரோ ஒருவரைத் திருப்திப் படுத்துகிற கூவலாயிருக்கும். முதலை எச்சங்களைத் தின்ன கரைக்கு ஊர்ந்து வரும் விரால் மீனைப் போல பிள்ளைகள் பெருகி சில நாட்களிலே முதலைத்தோட்டப் பக்கம் ஊர்ந்து வந்தனர். பொட்டல இன்பம் அல்லது இன்பத்துப் பொட்டலம் என இவற்றைப் பற்றி எந்த கவலையுமில்லாது முதலையைக் கட்டி வைத்திருந்தான் ஊமையன். காலனின் பராக்கிரமம் அந்தக் காலைப்பொழுதில் கொய்யா மரத்தினடியில் மல்லாந்து கிடந்த முதலை வயிறு போல சுட்டது. குழுமியிருந்த பிள்ளைகள் ஏதோ சமிக்ஞை போல பள்ளி மணி ஓசைக்கு விரைவது போல குளத்துக்கரை தென்னம் மரங்களுக்கு இரண்டிரண்டாக பாவனைத்தூண்டிலுக்கு விரைந்தனர். பெரிய கதவு திறந்ததும் மாஸ்டர் வந்திருந்தார். கதவைத் திறந்த ஊமையனின் துர்நாற்ற மிகுதியால் விலகி ஒதுங்கினார்.
” பண்டி.. குளியேன் டா ..!”.
குமட்டியபடி எல்லாவற்றையும் சரிபார்த்தபடி கூடத்தில் விறாந்தையிலிருந்த சாய்மனையில் உட்கார்ந்து கொண்டார். சிறிய கைப்பேசிகளோடு தெருவிலிருந்து சைக்கிள்களில் சிறிய கதவுப்புறமாக ஒவ்வொருவராக கண்காணிப்பிலிருந்து திரும்பியிருந்தனர். கூடத்து பின்புறம் கொசுவலை மூடியிருந்த கிணற்றின் மேல் குவிந்திருந்த இலைச்சருகுகளை ஊமையன் அள்ளிக் கொண்டிருந்தான். அவர்கள் எல்லோரும் ஒரு சமயத்துக்காக காத்திருந்தனர். வழக்கத்தை விட இன்று அதிகளவு சாமான் வரவிருப்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
***
இறுகிக்கிடந்த அந்த துண்டு சன்னலை கஷ்டப்பட்டு திறந்துவிட வழக்கமான காற்று என்றில்லாது புதிய சன்னலிலிருந்து சிலிர்த்த படி தொட்டது. சன்னலின் வெளிப்புறச் சுவரின் கிடையான இடைவெளியில் புழுதி அண்டியிருந்த இடத்தில் கைவிரல்களைத் தொட்டாள். நீண்ட முட்டைக்குழிகள் போல புழுதி அழிந்து சுவர்ப்பூச்சு மஞ்சளாய் வெளியே வந்தது. ஆயிரம் குடும்பங்களின் சாபத்தை இப்படித்தான் பணமூட்டைகளோடு கட்டி இருந்த நம்பிக்கையை அழித்து மாஸ்டர் வீடு வரப்போகிறார். எந்த முகத்தில் எந்த மனதை அவரிடம் பறிகொடுத்தாளோ அந்த முகம் சோபையிழந்து படோடோபமாய் இறுகிக் கிடக்கிற இந்நாட்களை வெறுத்தாள்.
” நீ இன்னா பாத்துக்கு இரிக்காயே..”.
” ஆக்கள் என்னெயெல்லாம் கதக்காங்க. மனிசன் ட மனம் பத்தி அழியப் போறியா..”.
அவளது உம்மாவின் இந்த கேள்விகள் ஒரு பெரிய அணிலை துரத்துகிற கடுவன் பூனையைப் போல அவளை பீதிக்குள்ளாக்கின. குழிவாடி விம்பம் போல சௌதாவின் முகம் கோரமாகுவதாய் அவளுக்கு வியர்த்து வடிய மறுபடியும் சிரமப்பட்டு அதே சன்னலை மூடுகிறாள். வழக்கமான திறக்கப் படாத சன்னலென்ற படியால் திடீரென மூண்ட இருள் அவளுக்கு வாடிக்கையானதொன்றாக இருந்தபோதிலும் ஏதோ மூலையிலிருந்து அறையின் ஒளியை முதலையைப் போல விழுங்குவதாக உணர்ந்தாள். மூச்சின் வேகம் கூட மூடு சீலைக்கு மேலே முலை தள்ளிவந்ததை கவனியாது ஒரு தைரியத்தை வரவழைத்து ஆடைகளை மாற்றினாள் சௌதா. எப்படியாவது கூத்தாடி அவரை கையோடு கூட்டிவருவது என்று முடிவெடுத்து ஆலாய் பறந்தாள். சாபத்தோடு வாழுவதை விடவும் அவர் கண் முன்னே குளத்தில் பாய்ந்து முதலை வயிற்றில் கற்களோடு செரிமானமாகலாமென்றிருந்தது. வழக்கமான ஆட்டோக்காரருக்காக தெருவில் காத்திருந்தாள். பதினைந்து நிமிடம் தான் தோட்டத்திற்கு. கொஞ்சம் நேரம் முதலே எழும்பி விட்டிருந்த பூனை அவள் கால்களை மறித்து போகவிடாமல் தடுத்தது.
***
நேரமாகியும் எதுவுமே நடக்காததில் தரகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். வெயில் ஏறிவிட்ட மயக்கத்தில் ஆங்காங்கே குளத்திலிருந்த நீர் வட்டங்களில் மீன்கள் எழும்பும் துள்ளலுக்கு வெள்ளிப் பாளம் எழும்பியது போல் இருந்தது. உயர்ந்த தென்னை மரங்களின் நிழல்கள் உல்லாச விடுதியின் குடை மேசைகள் போல பரவிக் கிடந்தன. ஊமையன் மண்வெட்டி பிடியை இறுக்கவென ஆணிகளை அண்ட வைக்கிற சத்தம் தவிர வேறு சப்தங்கள் இல்லை. கட்டப்பட்டு மல்லாந்து கிடந்த முதலை ஏறத்தாழ வரண்டு அசைவற்றுக் கிடந்தது. செத்திருக்குமென்றே பலர் நினைத்திருந்தனர். ஆற்றுவாழைகளின் ஊதாப்பூக்களின் மேல் தாழப்பறந்த ஊர்க்குருவிகளை தவளைகள் பாய்ந்து பாய்ந்து விரட்டுவது அந்த கதகதப்பிலும் வேடிக்கையாயிருந்தது. எல்லோரும் ஏதோ ஒரு சமிக்ஞை கிடைத்ததைப் போல தயாராக தெருவுக்கு ஒரு வாகனம் வந்திருந்தது. நிச்சயமாக அது ஆட்டோவல்ல. கிடைக்கவிருக்கிற கோடிக்கணக்கான பெறுமதியான பொருளை ஒரு மீன் விக்கிற ஐஸ் பெட்டியில் ஒருவர் கொண்டு வந்ததும் சிறிய கதவும் மூடப்பட்டன. தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் கண்காணிப்போடு ஆட்கள் பதுங்கியிருந்தனர். பெட்டியிலிருந்து கறுப்பு பொட்டலங்களை வெளியில் இறக்கும் பாவனையிலே முன்னரை விட பன்மடங்கு எடையுடையதாக இருக்கவேண்டும் என்று தெரிந்தது. தரகர்களின் கைகளிலே ரயில் டிக்கெட் ஒன்று இருந்தது. ரயிலே இல்லாத அக்கறைப்பற்றில் ரயில் டிக்கெட்டுக்கு இந்த விலை இருக்குமென்று யாருமே எதிர்பார்க்கவுமில்லை. அந்த டிக்கெட் இலக்கங்களுக்கேற்றவாறு அவர்களுக்கு சாமான் பிரித்துக் கொடுப்பதாக முடிவானது. எல்லோரும் வெள்ளரிப் பழத்தை சீனியில் தொட்டுத்திங்க ஆரம்பித்தனர். கோப்பையில் துப்புகிற டிக் டிக் சத்தம் கேட்டது. தென்னமரக் குடை நிழலிருந்து பொட்டுப் பொட்டாக கருமை கூடிவந்தது. ஆட்கள் திடுதிப்பென்று ஏறக்குறைய எல்லாத் தென்னைகளிலிருந்தும் குதித்தனர். குளத்திலிருந்து மூடிவைத்த கொசுவலைக் கிணற்றிலிருந்து ஆட்கள் வெளிறிய வெள்ளைக்கால்களோடு சுற்றி வளைத்தனர். குளத்தில் இருந்தவர்களிடம் ஒருவகையான இரசாயனம் மணத்தது. பெரும்பாலும் முதலையை அண்டவிடாமல் அவர்கள் பூசியிருக்கலாம். ஆயுத முனையில் ஏறத்தாழ எல்லோரும் மண்டியிட்டு நிறுத்தப்பட ஊமையன் அதிகாரிகளை விலக்கி வந்து கூடத்தில் உட்கார்ந்து கொண்டான். அவன் நடத்தை முற்றாக மிடுக்கோடு மாறி விட்டிருந்தது. அழுக்கு உடையினுள் பிஸ்டல். நீவி விட்ட தலைமுடியில் இருந்து கொக்கு இறக்கைகள் தாவி விழுந்தன. மாஸ்டர் குனிந்து கொண்டார். மயான அமைதியில் காற்றில் ஆடிய தங்கூசி நூல் சுருதியாய் இசைத்தது. இப்போது பெண் குட்டையொலி ஆண் நெட்டைத் திமிரை ஒடிக்கும் அசரீரி பூனைச்சீறலைப் போல கேட்டது அவருக்கு. அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் ஊமையனொரு நட்சத்திர உயரதிகாரியாக இருக்கவேண்டும். சிங்களத்திலேயே கட்டளைகளை சொல்லிக் கொண்டிருந்தான். வேலிக்கு மேலால் அருவருப்பாக பட்டாசு வாங்கும் ஆசாமிகளை பார்த்து நமட்டுச் சிரிப்பொன்று வந்தது. போதைப் பொருள் தடுப்பு கொழும்பு பிரிவின் ஜீப்புகள் அலறியபடி வந்தன. கட்டிவைத்த முதலையை அவிழ்த்து குளத்தில் தள்ளிவிட்டான். எல்லோரையும் கைது செய்து ஏற்றியபோது வரிசையாக நின்ற போலீஸ் ஜீப்புகளுக்கும் போதைப் பொருள் புனர்வாழ்வு நிறுவன வாகனங்களுக்கும் பின்னால் ஒரு ஆட்டோ அழுகையோடு வந்து நின்றது. அப்போதும் எங்கோ யாரோ ஒருவர் கொழுத்தி வெடித்த பட்டாசில் மருதவெட்டுவான் குளம் அதிர்ந்து படுத்தது.
***
-சப்னாஸ் ஹாசிம்