‘இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது இவை எல்லாமே என்னைப் பற்றியது.
இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்களுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்து பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்”
மேற்சொன்னது பின்னட்டை குறிப்பின் ஒரு பகுதி மேலும் அந்த குறிப்பின யதார்த்தத்தைதான் பொது வாசகன் இந்த தொகுப்பில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய அனுபவம் இருக்கும்.

தமிழ் புனைவிலக்கியங்களின் தனித்துவமான இடத்தையும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இருக்கக்கூடிய எழுத்தாளர் திரு அசோகமித்திரன் போன்ற எழுத்தாளுமைகளை வாசித்தலோ அவர்சார்ந்த உரையாடல்களை மேற்கொள்வதோ எப்போதுமே மனநிறைவானது. எப்போதுமே அப்படியான மனநிலையில் இருந்து வழுவி விழுவதில்லை மனம். அசோகமித்திரனின் ‘என் பயணம்’ என்ற இந்த கட்டுரைத்தொகுப்பின் மேற்சொன்ன அட்டை குறிப்புதான் சாரம் அதிலும் குறிப்பாக ஒரு கண்ணோட்டம் என்பதை அவர் குறித்தான மெலிதான அனுபவம் என அடிக்கோடிட்டு கொள்ளலாம்.

இந்த சுய பயணத் தொகுப்பு பூரணமாக அசோகமித்திரனின் இலக்கியப் பயணம் குறித்தான முழு வீச்சுடனான பார்வையோ ஒரு ஒழுங்கமைப்பான கால கட்டமைப்பைக் கொண்ட அல்லது அவரின் பயணத்தின் வயது பருவத்துக்கேற்ற ஒழுங்கமைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளோ அல்ல அதிலும் குறிப்பாக திட்டமிடப்பட்ட வழமையாக வாசிக்கக்கூடிய பயணக்கட்டுரைகளின் அனுபவம் அமைப்பை கொண்டதாக அமையாது. பயணம் என்பது ஒரு வயதெல்லையில் இருந்து இன்னுமொரு வயதெல்லைக்கு பயணம் செய்தலும் அடங்கும் என்பதற்கான புரிதலோடு வாசித்து அறிய அவசியமானதையும் ஆர்வத்தோடு வாசிக்கும் மனநிலைக்கொத்த கட்டுரைகளையும் நேர்காணல்களையம் தொகுத்து இந்த கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

தொகுப்பின் உள்ளடக்கத்தை

1) அசோகமித்திரனின் இளமைக்காலம்
2) அவரின் ஆரம்பக் கால இலக்கிய அனுபவங்கள், வெளிநாட்டு இலக்கியப் பயணங்கள்
3) நேர்காணல்கள் மற்றும் உரையாடல்கள்

என வகைப்படுத்தி தொகுப்பை வாசிப்பதன் ஊடே இன்னும் நேர்த்தியாக கட்டுரைகளை உள்வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.

அசோகமித்திரனின் எழுத்து பயணங்களை தெரிந்து கொள்வதற்கு முன் அவரின் இளமைக்காலம் குறித்தான வாசிப்பு அனுபவம் தொடர் வாசகர்களுக்கும் எழுத்தார்வத்துக்குள் பிரவேசிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ’18வது அட்சக் கோட்டில்” என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையில் அசோகமித்திரனின் இளமைக்காலம் பற்றிய பார்வை கிடைப்பதோடு தரமான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடும். அதில் அவரின் இளமைகாலம் நிஜாம் சமஸ்தானத்தில் இருக்கக்கூடிய சிகந்தரபாத்தில் கழிந்த விதம் இரண்டாம் உலக போர் முடிவதற்கு நுனிநிலையில் அதற்கு பின்னரும் நிஜாம் சமஸ்தானத்தின் அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியல் நிலமைகளுடன் அது ஒரு சராசரி தமிழ் குடும்பங்களை பாதித்த விதம், அங்கிருந்து தமிழ் மக்களின் தமிழ் நாட்டுக்கான இடம்பெயர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசியிருப்பதோடு அவரின் இளமைக்கால வாழ்விடமான சிகந்தரபாத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும் அந்நிலத்தின் காலநிலை மாறுதல்களில் ஏற்படும் சூழல் மாறுதல்கள் அவற்றின் மீது அவருக்கிருந்த கரிசனைகளையும் இந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறார். மேலும் இரண்டாம் உலகப் போர் நிறுத்தத்திற்கு பின்னரான உலக அரசியலின் சாராம்சமான நிலவரம், அந்த நிலவரம் டெல்லியை பாதித்த விதம் அதன் தொடர்ச்சி நிஜாம் மக்களை பாதித்தவைகளென ஒழுங்கு முறையில் சொல்லிச்செல்லும் கட்டுரை அசோகமித்திரன் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தது வரையான காலம் மட்டும் கட்டுரை நீண்டு முடிகிறது. இந்த கட்டுரையோடு ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ எனும் தலைப்பிட்ட சேர்ப்பு எழுத்தாளர் திரு அசோகமித்திரனின் இளமை காலம் குறித்து பேசுகிறது. இந்த இரண்டு கட்டுரைகளுமே அவருடைய முழுமையான இளமைகாலம் பற்றியோ அல்லது அவர் அப்போது இயங்கிய இலக்கிய முறைமைகள் பற்றியோ பேசவில்லை.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் வகைப்பாட்டுக்குரிய கட்டுரைகளில் மொத்தமாக 09 தலைப்புக்களை உள்ளடக்கலாம் இந்த தலைப்புக்களில் ‘பேனாவே ஊன்றுகோலானது” எனும் கட்டுரையில் பொதுவாக எழுத்தாளர்களின் இயல்பு நிலைப் பற்றியும் அவர்களின் செல்நெறியாக இருக்க வேண்டிய பாதைகளை யதார்த்தங்களை குறிப்பிட்டு இருப்பதோடு இந்த கட்டுரை தொனியில் ஒரு எழுத்தாளர் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கான வற்புறுத்தல் இருக்காது. அவர் பார்வையில் எழுத்தாளை பற்றி பேசி இருப்பதோடு, அசோதமித்திரனின் முதல் சிறுகதையும் அது சஞ்சிகையில் வெளிவர பட்டப்பாட்டையும் சொல்லியிருப்பார். மிகப்பெரிய எழுத்தாளுமையின் ஆரம்பமே சில்லறை சில்லறையான சேமிப்பின் வெளிப்பாடே என்பதற்கான கட்டுரை அது. தனது முதல் சிறுகதையை கிட்டத்தட்ட 10 சஞ்சிகைகளுக்கு அனுப்பியதாகவும் அந்த பத்துக்கும் அனுப்பும்போது ஒவ்வொன்றுக்கும் பல்வேறு மாற்றங்கள் செய்ததோடு பத்தும் பிரசுரிக்க வில்லை என்றும் இறுதியில் முதல் அனுப்பிய சஞ்சிகையே கடைசியில் சீர்திருத்தி அனுப்பியதை பிரசுரித்ததாகச் சொல்கிறார்.

மேலும் அசோகமித்திரனின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ‘கரைந்த நிழல்கள்’ நாவல் உருவானதன் பின்னணியை ‘கரைந்த நிழல்கள்’ திடமான கதை’ என்ற கட்டுரை தலைப்பில் சொல்லியிருப்பதோடு தொடர்ந்து வரும் கட்டுரையில் ‘பயணம்’ சிறுகதைப் பற்றியும் அந்த கதை கரு தோன்ற காரணங்களையும் அவற்றோடு ஒட்டிய கதையின் நகர்தலையும் ஒப்பீடு செய்து பேசியிருப்பார். மேலும் தொகுப்பில் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் அவரின் ‘இனி வேண்டியதில்லை’ என்ற குறுநாவலையும் அதில் அவர் ஆற்றியிருக்கும் சினிமா அனுபவங்கள் பற்றியும் பேசியிருப்பதோடு ஒரு கதை சொல்லியின் பாங்கில் அந்த கட்டுரையை எழுதி இருக்கிறார். அசோகமித்திரனின் படைப்புக்களில் வரும் தனக்கு பிடித்த பெண் பாத்திரம் ‘இனி வேண்டியதில்லை’ என்ற கதையில் வரும் சுஜாத்தாவே என்கிறார். மேற்சொன்னவைகளை தாண்டி இவர் இண்டர்நேஷனல் ரைட்டிங் புரோகிராமிற்காக அமெரிக்கா அயோவா பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்டதை பற்றியும் அங்கிருந்து அவர் எழுதிய ஏழு கடிதங்களை ஏழு தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கடிதத் தொகுப்புக்கள் ஆர்வமான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தா விட்டாலும் எழுத்தாளர் குறித்தான Documentry யாக சேகரித்து வைத்துக்கொள்வதாக இருக்கும்.

இந்த கட்டுரைத் தொகுப்பின் மிக முக்கியமான வாசிப்பு அனுபவமாக பின் இணைக்கப்பட்டிருக்கும் நேர்காணல் மற்றும் உரையாடல் தொகுதியை குறிப்பிடலாம் இந்த உரையாடல்களில் மிகவும் பயனுள்ளதாக ‘சிங்களத் தீவினிலே ஒரு சந்திப்பு’, என்ற நேர்காணலும் ‘ஒரு இலங்கைத் தமிழ் மாணவனோடு பேசியபோது’ என்ற உரையாடலும் அடையாளப்படுத்தி சொல்லலாம். மேலும் நான் சொன்ன ‘சிங்களத் தீவினிலே ஒரு சந்திப்பு’ என்ற நேர்காணல் 1977 பிப்ரவரி 19,20ஆம் தேதிகளில் யாழ் வளாகத்தில் தமிழ் நாவல் நூற்றாண்டு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அசோகமித்திரனை இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்ற ஐ.சாந்தன் செய்த நேர்காணலே இடம்பெற்றிருக்கிறது. நேர்காணலில் நாவல்களின் உருவம் உள்ளடக்கம், உங்களை பாதித்த நூல் அதன் ஆசிரியர் மற்றும் அமெரிக்க அயோவா பல்கலைகழகத்தின் ஏற்பட்ட அனுபவம் தொடர்பான உரையாடலின் இறுதியில் ஈழத்துத் தமிழிலக்கியத்தின் போக்கையும் வளர்ச்சியையும் பற்றித் தங்களின் அபிப்பராயம் என்ன? என்ற கேள்விக்கு அசோகமித்திரனின் “நான் பங்கு பெறும் ‘கணையாழி” பத்திரிகையில் ஈழத்து எழுத்தாளர்கள் நுஃமான், ரத்தினசபாபதி ஐயர், சாந்தன், யேசு ராசா, இராசரத்தினம், திக்குவல்லை கமால், மனோகரன் போன்றோருடைய படைப்புக்கள் பிரசுரிக்கப் பெற்று அவை தென்னிந்தியர்களிடையே நல்ல கவனம் பெற்றன” என்பதோடு மேற்சொன்னவர்களில் நூல்கள் சிலவற்றையும் அடையாளப்படுத்தி இருப்பார். ஈழத்து படைப்பாளர்கள் மீது அவருக்கிருந்த தேடலும் அது சார்ந்த வாசிப்பையும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் ஒரு வாசகனாக நான் மனமகிழ்ந்த இடம் அது

‘ஒரு இலங்கைத் தமிழ் மாணவனோடு பேசியபோது’ என்ற உரையாடலில் ஈழத்து போர்நிலம் பற்றியும் ஈழவிடுதலையின் இலக்கிய பங்குகள் பற்றியும் விடுதலை அமைப்பினர் தொடர்பான தென்னிந்திய படைப்பாளர்களின் படைப்பு மனம் என ஈழப்போராட்டத்தை மையப்படுத்திய உரையாடலாகவே அமைந்திருந்தன. அந்த உரையாடலின் இருப்பு ஈழத்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் எனக்கென்னவோ இந்த கேள்விகளுக்கான பதில் ஈரமில்லாததாக இருந்தது அல்லது உரையாடும் மாணவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத உரையாடலாக இருந்திருக்கக்கூடும். பொதுபுத்தியில் இருந்து பார்க்கும் போது அவதானத்துக்குரிய பதில்கள்தான் ஆனால் ஒரு போராட்டக்குழு மீதான ஈடுபாட்டோடு வாசிக்கும் போது ஆர்வமான பதில்கள் கொண்ட கலந்துரையாடல் அல்ல. பொத்தம் பொதுவாக அசோகமித்திரனின் என் பயணம் கட்டுரைகளின் வாசிப்பு அனுபவம் ஒரு எழுத்தாளரின் அங்கொன்று இங்கொன்றான அறிமுகத்தை, அனுபவத்தை தரக்கூடிய அவசியமான வாசிப்பு அனுபவம்.

***

 

-VM ரமேஷ்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.