அறிமுகம்

 

தமிழறிஞர் பரப்பில் பன்முக ஆளுமை கொண்டவராகத் திகழ்பவர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் ஆவார். ஈழத்து கலை இலக்கியப் பாரம்பரியத்தை தனது திறனாய்வின் வழியே தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிமுகம் செய்ததில் இவரின் பங்களிப்பு தலையாயதாகும். கவிதை, சிறுகதை, நாவல், நாட்டாரியல், மொழியியல், திரைப்படம், நாடகம் போன்றவற்றை தனது திறனாய்வுப் பார்வைகளினூடே நேரிய மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கினார். ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ (1979 – இணையாசிரியர்), ‘திறனாய்வுக் கட்டுரைகள்’ (1985), ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ (1987), ‘மொழியியலும் இலக்கியத் திறனாய்வும்’ (2001), ‘மொழியும் இலக்கியமும்’ (2006), ‘சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்’ (2017)  ஆகியன இவரது திறனாய்வுக் கட்டுரைகளை தாங்கி வந்த நூல்களாகும்.

 

ஆய்வுத்துறையோடு இணைந்த கலை, இலக்கியத் திறனாய்வுத் துறையில் அகலக்கால் பதித்த இவர், பேராசிரியர்களான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி வரிசையில் வைத்து நோக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர ராமசாமி தினமணிச்சுடர் நேர்காணல் ஒன்றில் (1994 : ஏப்ரல் 30) குறிப்பிடும் கருத்து பின்வருமாறு அமைகிறது :

 

‘’கைலாசபதியின் பார்வையில் கலைப்பண்பு களையும் சேர்த்து முழுமைப்படுத்தியவர் என்று நுஃமானைச் சொல்ல வேண்டும். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆக விவேகமான பார்வை இவருடையதுதான். ஏனெனில் இவரது எழுத்தில் வாழ்க்கை, மனிதன், கலை மூன்றும் முரண்கள் இல்லாமல் இணைகின்றன”

 

பல்கலைக்கழக ஆய்வுப் பணியை சமூக இயங்கியலோடு இணைப்புச் செய்தவர் என்கின்ற அடிப்படையில் எம்.ஏ. நுஃமான் அவர்களால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ‘மொழியியலும் தமிழ் மொழிப் பாடநூல்களும்’ (1974) என்ற ஆய்வேடு இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் அப்போது பயன்படுத்தப்பட்ட தமிழ்மொழிப் பாடநூல்களை நவீன மொழியியல் கருத்தியலின் அடிப்படையில் மதிப்பிடும் ஒன்றாக அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக குறுகியகால திட்டப்பணியில் இவரால் மேற்கொள்ளப்பட்ட ‘மட்டக்களப்பு முஸ்லிம் தமிழில் அரபுக் கடன் சொற்கள்’ (1984) எனும் ஆய்வுமுயற்சியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

‘’வரன்முறையாக ஈழத்து தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபட்ட ஈழத்துப் பல்கலைக்கழக புலமையாளர்களுள் சு. வித்தியானந்தன், ஆ. சதாசிவம், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் என்போர் முதல் நிலையில் குறிப்பிடப்பட வேண்டியவர்களாவர்’’

 

என்று கா. சிவத்தம்பி (2007:143) தனது ‘தமிழில் இலக்கிய வரலாறு’  எனும் நூலில் இவரது ஆய்வுப் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் எம்.ஏ. நுஃமான் அவர்களின் திறனாய்வு நோக்கையும் அவர் உறவுகொண்ட கோட்பாடு களின் வழியே அவர் நிகழ்த்திய திறனாய்வுகளையும் அடையாளம் காண்பதாக இவ்வாய்வு அமைகின்றது.

 

எம்.ஏ. நுஃமானின் திறனாய்வு நோக்கு

 

எம்.ஏ. நுஃமான் ஒரு திறனாய்வாளர் என்ற அடிப்படையில் திறனாய்வு நோக்கு குறித்த பல அபிப்பிராயங்களைக் கொண்டவராகத் திகழ்கிறார். தமிழ் இலக்கியங்களோடு மாத்திரமன்றி உலகளாவிய இலக்கியங்களோடும் இவர் கொண்டிருந்த உறவு இந்நோக்குநிலைகளுக்குக் காரணமாக அமைந்திருப்பதைக் கொள்ளலாம். இலக்கியத்தின் இயங்கியலை, அது சமூகத்தில் இடைவிடாது நிகழ்த்தும் இடைவினையை புரிந்துகொள்ளலின் பின்னணியில் இலக்கித்திறனாய்வு தவிர்க்க முடியாமல் நிகழ்கிறது என்பது இவரின் கருத்தாகும். இது பற்றி நேர்காணல் (2011 : வல்லினம்) ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :

 

‘’இலக்கியத்தின் உடன்விளைவுதான் இலக்கிய விமர்சனம். இலக்கியம் தோன்றும்போதே இலக்கிய விமர்சனமும் தோன்றிவிடுகிறது. இது உலகப் பொதுவான ஓர் உண்மை. கிரேக்க இலக்கியம் இல்லாவிட்டால் அரிஸ்டோட்டிலின் கவிதையியல் கோட்பாடு இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரம் சங்க இலக்கியம் பற்றிய விமர்சன அழகியல் கோட்பாடுகளைத்தான் பேசுகின்றது. காலம் தோறும் இலக்கியப் பொருளிலும் வடிவத் திலும் ஏற்படும் வேறுபாடுகள்தான் இலக்கியக் கோட்பாடுகள், விமர்சனப் பார்வைகள் என்பவற்றின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகின்றன. அவ்வகையில் இலக்கியம் என்ற ஒன்று இருக்கும் வரை விமர்சனம் இருக்கும். இலக்கியத்தின் உள்ளார்ந்த அம்சங்களையும், அதன் இயக்க விசைகளை யும் புரிந்து கொள்வதற்கு விமர்சனம் தேவைப்படும். இலக்கியத்தின் தேவையும் வளர்ச்சியுமே விமர்சனத்தின் தேவையையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது என்றுதான் நினைக்கிறேன்’’

 

திறனாய்வின் இன்றியமையாமை படைப்பிலிருந்து பிரிக்க முடியாத கூறாக தொடர்ந்து வரும் நிலையில் அதன் சார்புநிலை குறித்த கேள்விகளும் எழுவது இயல்பானதே. இதனால் திறனாய்வு என்பது அகநிலைச் சார்பான அபிப்பிராயங்களாக அன்றி, தர்க்க ரீதியான, புறநிலையான காரண காரியத் தொடர்புடன் வெளிப்படுத்தப்படுகின்ற திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே எம்.ஏ. நுஃமான் அவர்களின் கொள்கையாகும். இத்தகைய திறனாய்வு மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பினும் கூட ஆரோக்கியமானவையாகும் என அவர் கருதுகிறார். (திறனாய்வுக் கட்டுரைகள், 1985 : 3)

 

இலக்கியத் திறனாய்வு தன்னளவில் முழுமை பெற்றதாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது படைப்பின் பகுதியளவான பகுதியை மாத்திரம் நோக்கி நழுவல் போக்கில் கடந்துவிட முடியாது. படைப்பு குறித்த வாசகனின் கேள்விகளுக்கு அத்திறனாய்வு தரும் திருப்திகரமான பதிலில்தான் அத்திறனாய்வின் வெற்றி தங்கியுள்ளது. இது பற்றிக் கூறுகையில் (2007: 252) :

 

‘’இலக்கியத் திறனாய்வு இலக்கியத்தின் சகல அம்சங்களையும் விளக்குவதையும் மதிப்பிடு வதையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு இலக்கியப் படைப்பு – ஒரு கவிதை, ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை – எவ்வாறு தொழிற்படுகின்றது; அதன் அழகியல் அம்சங்கள் எவை? அது தரும் உளவியல் தாக்கம் எத்தகையது;  ஒரு இலக்கியப் படைப்புக்கும் அது தோன்றிய சமூகத்துக்கும் இடையே உள்ள உறவு என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு இலக்கியத் திறனாய்வாளன் விடைகாண முயல்கிறான்’’

 

எனக் குறிப்பிடுகின்றார். இத்தேடலில் படைப்பு, திறனாய்வு என்பவற்றிற் கிடையிலான தொடர்பும், திறனாய்வாளனது அறிவுப் புலமும் கவனத்திற் கொள்ளப்படுகிறது. படைப்புக்களுடனான திறனாய்வாளனது உறவின் ஆழமே நல்லதொரு திறனாய்வுக்கு வழிவகுக்கிறது என்பது எம்.ஏ. நுஃமானின் (2017 : 23) நோக்காகும் என்பதனை பின்வரும் கருத்து எடுத்துக் காட்டுகிறது  :

 

‘’ஒரு விமர்சகனுக்கு படைப்பின் உணர்வு வலயத்துள் சஞ்சரிக்கும் படைப்பு மனம் வேண்டும். அது ஒரு படைப்பாளிக்குத் தன் உணர்வு வலயத்தை அறிவு பூர்வமாகப் பகுத்தாராயும் சிந்தனைத்திறன் வேண்டும். உலகின் சிறந்த படைப்பாளிகள் பலர் நல்ல ஆய்வறிஞர்களாகவும், விமர்சகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். படைப்புணர்வு அற்றவன் நல்ல விமர்சகனாகவோ அறிவு பூர்வமான சிந்தனைத்திறன் அற்றவன் நல்ல படைப்பாளியாகவோ மலர்தல் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்’’

 

இந்த பின்னணியில் எழுகின்ற கேள்விகளில் அடிப்படை யானது திறனாய்வுத் தரம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதேயாகும். இதனை ஒரு பிரச்சினையாக அடையாளம் காணும் எம்.ஏ. நுஃமான் எல்லோருக்கும் பொதுவான தர அளவுகோல் ஒன்ற நாம் நிறுவமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். உயர் இலக்கியம், தீவிர இலக்கியம், உன்னத இலக்கியம், மேலான இலக்கியம் என்றெல்லாம் பேசும் நம்மால்கூட குறிப்பிட்ட படைப்பை எந்த வரிசையில் சேர்ப்பது என்பதில் உடன்பாடு காணமுடியவில்லை என்பது இவரது கருத்தாகும். (சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும், 2017 : 63)

 

உறவுகொண்ட கொள்கைகளும் கோட்பாட்டுத்  திறனாய்வும்

 

இலக்கியத் திறனாய்வாய்வானது தனித்ததோர் துறையாக அடையாளப்படுத்தப்படுகின்ற போதிலும் அது பல கோட்பாடுகளின் வழியிலும் கொள்கைகளின் வழியிலும் கண்டடையப்படும் ஒன்றாகும். காலமாற்றத்தின் அடைவுகளுக்கேற்ப எம்.ஏ. நுஃமானும் இதன்வழியே பயணித்துள்ளார். சமூகப் பார்வையுடன் கூடிய மார்க்சியக் கொள்கை இவர் உறவுபூண்ட கொள்கைகளில் முதன்மையானதாகும். இதுபற்றிக் கூறும் எம்.ஏ. நுஃமான் (2014 : 11)  :

 

‘’இலக்கியத்தை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், படைப்பாளி களின் கருத்து நிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவ முடியும். இலக்கியம் பற்றிய புரிதலை அது ஆழப்படுத்தும்’’

 

என்கிறார். மார்க்சிய அரசியல் வெகுவாகப் பேசப்பட்ட காலத்தில் அதன் நடைமுறைச் சாத்தியங்கள் வழியே மார்க்சியத் திறனாய்வும் சிலரால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. இதனால் மார்க்சியத் திறனாய்வு அரசியல் வழியே பார்க்கப்படக்கூடிய ஒன்று அல்ல என்று கூறி டெர்ரி ஈகிள்டனின் மேற்கோள் (2014 : 10) ஒன்றை இதற்காக எடுத்துக்காட்டுகின்றார் :

 

‘’மார்க்சிய விமர்சனப் பாரம்பரியம் மிகமிக வளமானது. ஏனைய விமர்சன முறைகளைப் போன்றே அதுவும் ஓர் இலக்கியப் படைப்பை விளக்குவதில் எவ்வளவு ஒளி பாய்ச்சுகிறது என்ற அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டுமே தவிர அதன் அரசியல் நம்பிக்கைகள் நடைமுறையில் சாத்தியமாக உள்ளனவா என்ற அடிப்படையில் அல்ல’’

 

தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவைத்து விட்டு இலக்கியத்தை புறநிலையாக அணுகுவதற்கு மார்க்சியம் உதவியது என்பது எம்.ஏ. நுஃமானின் அடிப்படையாகும். இந்தப் புறநிலைப் பார்வைதான் இலக்கியத் திறனாய்வில் மார்க்சியத்தின் பிரதான பங்களிப்பு என்று  கூறும் இவர் மார்க்சியத் திறனாய்வின் வழியே இடம்பெற்ற வரட்டு மார்க்சியப் போக்கையே தான் கேள்விக்குட்படுத்தியதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் மார்க்சியம் தவிர்ந்த ஏனைய பயனுள்ள கொள்கைகளையும் பயன்படுத்தலாம் என்கிறார். இதனையே நேர்காணலில் (வல்லினம் : 2011) :

 

‘’என்னை ஒரு மார்க்சிய விமர்சகன் என்பதை விட, ஒரு நடுநிலையான விமர்சகன் என்ற அடையாளத்தையே நான் பெரிதும் விரும்புவேன். மார்க்சிய விமர்சனத்தில் மேலோங்கி இருந்த வரட்டுப் போக்கை நான் தீவிரமாக விமர்சித்திருக்கிறேன். ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ என்ற எனது நூல் அதன் விளைவுதான். இலக்கியம் பற்றிய விமர்சனப் பார்வைகளும் கொள்கை களும் பல. அதில் ஒன்றுதான் மார்க்சியப் பார்வை. இலக்கியத்தின் சமூக வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில், இலக்கியத்தை ஒரு உன்னத நிகழ்வாக அன்றி ஒரு சமூக உற்பத்தியாக ( Social Product ) நிறுவியதில் மார்க்சியத்தின் பங்கு முக்கியமானது. ஆயினும் இலக்கியத்தில் எல்லா அம்சங் களையும் அதனால் விளக்கி விட முடியும் என்று நான் நம்பவில்லை. பல்வேறு விமர்சனக் கொள்கைகளில் நமக்கு பயனுள்ள வற்றை நாம் எடுத்துகொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்’’

 

எனக் குறிப்பிடுகின்றார். எம்.ஏ. நுஃமான் ‘மார்க்சிய விமர்சகர்’ என்று அழைக்கப்படுவது மு.பொன்னம்பலம் போன்றோரின் தொடர்ச்சியான உரையாடல் வழியே கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். தன் காலத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்திய கொள்கையின்பால் அவர் அதிகம் ஈர்க்கப்பட்டாரே தவிர அக்கொள்கைக்குள் முற்றாக மூழ்கியவரல்ல என்பது பலரதும் கருத்துமாகும். ‘பன்முக ஆளுமை எம்.ஏ. நுஃமான்’ என்ற கட்டுரையில் அ. ராசாமி (2015 : 20) கூறும் கருத்தொன்று பின்வருமாறு அமைகிறது :

 

‘’படைப்பாளியாகவும் கல்வியாளராகவும் ஒரே நேரத்தில் செயல்படுத்தத் தொடங்கிய நுஃமான் தன் காலத்தில் அதிகம் விவாதிக்கப் பெற்ற மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகளோடு விவாதங்களை நடத்தியவர். அவருக்கு முன்பு தமிழில் மார்க்சியத் திறனாய்வில் பங்களிப்புச் செய்த ஆளுமைகளான தொ.மு.சி. ரகுநாதன், க. கைலாசபதி, கோ. கேசவன் ஆகியோரது திறனாய்வு முறையில் இருந்த பயன்பாட்டு வாதம் மற்றும் வரலாற்று வாதத்தை முழுமையாக கைக்கொள்வதில் இருந்து விலகிப் படைப்பின் சூழலையும், படைப் பாளியின் அகநிலையையும் இணைத்துப் பார்க்கும் மார்க்சியத் திறனாய்வு முறையை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக அமைப்பியல், தொடர்பாடல், பெண்ணியம் போன்றவற்றின் வரவை மனமுவந்து வரவேற்றவர். இதனால் கீழைத்தேயவியல் – மேலைத்தேயவியல், சிறுபான்மை – பெரும் பான்மை முரண்பாடுகளின் பின்னணியில் இலக்கிய உருவாக்கம், இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு ஆகியவற்றைக் கவனித்து தனது எழுத்துப் பணியினைக் கவனப்படுத்தி, விவாதக் கட்டுரைகளையும் நூல்களையும் தந்தவர்’’

 

இவ்வகையில் காலமாற்றத்தினூடே நிகழும்; கருத்தியல் மாற்றத்தை புரிந்தவராக எம்.ஏ. நுஃமான் காணப்படுகிறார். மாறிவரும் உலக ஒழுங்கில் இலக்கியப்  போக்குகளினிடையே வேறுபாடுகளையும், பொதுமைகளையும் நோக்க வேண்டுமேயொழிய ஏற்றத்தாழ்வுகளை காணலாகாது என்பது இக்காலமாற்றத்தினூடாக அவர் கூறவரும் செய்தியாகும். இதனால் அண்மைக்காலம் தொட்டு இலக்கியத்தின் பன்மைத்துவத்தையும் அதன் ஜனநாயக பண்பாட்டியலையும் வலியுத்தி வருகிறார். தனது நேர்காணல் (2001 : 28) ஒன்றில் அவர் குறிப்பிடும்போது :

 

‘’காலமாற்றம் என்பது வெறும் ஆண்டுக் கணக்கல்ல. அது நமது அனுபவம், அறிவு, கருத்துநிலை எல்லாவற்றிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. கால வளர்ச்சிக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாதவன் கட்டித்து இறுகிப் போகிறான். பத்து இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நுஃமான் அல்ல இன்று இருப்பவன். அன்று பேசிய அதேகுரலில் இன்று நான் பேசவில்லை என்பதை ஒரு குறையாக நான் கருதவில்லை. இன்று பண்பாட்டு பன்மைத்துவத்துக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கிறேன். இலக்கிய விமர்சனத்தில் மட்டும் நான் இப்பார்வையைப் புறக்கணிக்க முடியாது. பலவகையான இலக்கியப் போக்குகள் உள்ளன. அவற்றுள் ஒன்று எனக்குப் பிடித்தமானது என்பதற்காக ஏனையவற்றை என்னால் நிராகரிக்க முடியாது. எள்ளி நகையாட முடியாது. அவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அவற்றைப் புரிந்து கொள்ள எனது விமர்சனப் பார்வை உதவ வேண்டும்’’

 

என்று தனது மனவிரிவை பக்கச் சார்பின்றி எடுத்துரைக்கும் பாங்கு கவனிக்கத்தக்கது.

 

மார்க்சிய வரவிற்குப்பின் தமிழில் அதிகம் பேசப்பட்ட அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற கொள்கைகள் எம்.ஏ. நுஃமானின் ‘பிரதியின் மரணம்’ என்ற கட்டுரையினூடாக எதிர்வினையாக்கப்பட்டபோது அதிக வாதப்பிரதிவாதங் களை எதிர்கொண்டது. கால அடைவில் இக்கொள்கைகள் வழிபாடாக அன்றி திறனாய்வுக் கண்ணோட்டத்தில் அணுகப்படவேண்டும் என்ற கருத்து இவரால் முன்வைக்கப் பட்டது. அவை நமது சமூகத்தை, கலை இலக்கியத்தை புரிந்து கொள்வதற்கு சில கலைச்சொற்களையும் கருத்தாக்கங்களையும் தந்திருக்கின்றது என்று நம்பும் இவர், நமது புரிதலுக்கும் தேவைக்கும் ஏற்ப இவற்றைப் பயன்படுத்தலாம் என்கிறார். ஆரம்பத்தில் அரசியல் இயக்கங்களாகவும், கலைக்கோட்பாடு களாகவும் இவரால் வகைப்படுத்தி விளக்கப்பட்ட தலித்திய, பெண்ணிய மற்றும் பின்நவீனத்துவ, மெஜிக்கல் ரியலிச, பின் அமைப்பியல் சிந்தனைகள் பின்னர் சமூக இயங்கியல்களிலும் இலக்கியத் திறனாய்வியலிலும் தவிர்க்க முடியாமல் செல்வாக்குச் செலுத்திவருவதை ஏற்றுக் கொள்கிறார். இதனை மார்ச்சியமும் இலக்கியத் திறனாய்வும்| நூலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (2014 : 9) பின்வருமாறு பதிவு செய்கிறார் :

 

‘’கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. சோசலிச முகாம் முற்றிலும் உடைந்து நொறுங்கிற்று. மாஓவின் சீனா, முதலாளித்துவப் பாதையில் முன்னேறி உலக வல்லரசாக முயல்கிறது. அமெரிக்கத் தலைமையில் நிதி மூலதனம் தன் உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. வர்க்க உணர்வை மழுங்கடித்து, இனம், மதம், பிராந்தியம், சாதி, பால் அடிப்படையில் அடையாள அரசியலை ஊக்கப்படுத்தி நாடுகளை கூறுபடுத்துவது நிதி மூலதனச் சக்திகளின் பொருளாதார உலகமயமாக்கல் திட்டத்தை சாத்தியப் படுத்தும் உத்தியாகவே தோன்றுகிறது. இப்பின்னணியிலேயே கடந்த சில தசாப் தங்களாக ஓங்கி ஒலித்த பின் அமைப்பியல், பின்நவீனத்துவச் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்’’

 

முடிவுரை

 

எம்.ஏ. நுஃமான் அவர்களிடம் திடமான திறனாய்வுநோக்கு இருப்பதை அவதானிக்கலாம். அது திறனாய்வாளர் பக்கமான சார்பைக்  கொண்டிராமல் படைப்பாளி, வாசகர் ஆமோதிப்பு என்ற அடிப்படையில் அமைவது கவனிப்புக்குரியதாகும். இதனாலேயே படைப்புக்களைத் திறனாயும்போது உயர்வானது, மேலானது, உன்னதமானது என்று ஒற்றைப் பட்ட  கருத்தைக் கூறாமல் அதில் ஆழமான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். கோட்பாட்டுத் திறனாய்வில் மார்க்சியம் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும் காலமாற்றங்களினூடே பயணிக்கும் போது எதிர்ப்படுகின்ற திறனாய்வுக் கோட்பாடுகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்று எம்.ஏ. நுஃமான் குறிப்பிடுவதன் மூலம் அவரது பன்மைத்துவ ஆற்றல் வெளிப்படுகிறது. அவ்வாற்றல் அவரை தமிழின் சிறந்ததொரு திறனாய்வாளராக அடையாளம் காட்டி நிற்கின்றது.

 

உசாத்துணை :

 

  1. சுந்தர ராமசாமி., (1994), ‘நேர்காணல்’, ‘தினமணிச்சுடர்’, ஏப்ரல் 30.

 

  1. சிவத்தம்பி கா., (2007), தமிழில் இலக்கிய வரலாறு, நியுசெஞ்சுரி புக்ஸ் ஹவுஸ், சென்னை.

 

  1. நுஃமான் எம்.ஏ., (2011), ‘நேர்காணல்’, ‘வல்லினம்இணைய இதழ்’ ஜூன் – ஓகஸ்ட், இதழ் 08.

 

  1. நுஃமான் எம்.ஏ., (1985), திறனாய்வுக் கட்டுரைகள், அன்னம் (பி) லிட், சிவகங்கை.

 

  1. நுஃமான் எம்.ஏ., (2007), மொழியும் இலக்கியத் திறனாய்வும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

 

  1. நுஃமான் எம்.ஏ., (2017), ‘நேர்காணல்’, ‘ஈழத்து தமிழ் நவீன இலக்கியவெளி| புரிதலும் பகிர்தலும்’, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

 

  1. நுஃமான் எம்.ஏ., (2017), சமூக யதார்த்தமும் இலக்கியம் புனைவும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

 

  1. நுஃமான் எம்.ஏ., (2014), மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

 

  1. ராமசாமி அ., (2016),’பன்முக ஆளுமை எம். ஏ. நுஃமான்’ எதுவரை, இலண்டன்.

 

  1. பௌசர். எம்., (ப.ஆ), (2001), ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும், மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு.

***

– எம் . அப்துல் றசாக்

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *