“மாடும் வீடும்” கவிதைத் தொகுப்பு வெளிவந்த காலங்களில் ஏற்பட்ட அதிர்வுகள் தொடர்பாக பெருவிரல் கலை இலக்கிய சந்திப்பொன்றில் கலந்துரையாட கிடைத்தது. ஒரு தொகுப்பின் வெளியீட்டுக்கு பின் அந்த தொகுப்பால் கவிஞரின் வேலை பறிபோனது என்பதாயும் அந்த கவிதைகளில் வீரியம் தொடர்பாகவும் தாங்கிநிற்கும் சமூக பெறுமானங்கள் தொடர்பாகவும் யதேச்சையாக கலந்துரையாட கிடைத்த அன்றைய நிகழ்வுக்கு பின் உண்மையில் மனதுக்கு பாரமாகவே இருந்தது. எப்படியும் அந்த கவிதைகளை வாசித்து விடவேண்டும் அதை விட கவிஞரை கண்டு, இந்த அனுபவங்களை மீட்டவேண்டும் என்று உறுத்திக்கொண்டிருந்த அளவுக்கு படைப்பாளர் தொடர்பான அறிதலோ அல்லது படைப்பு பற்றியதான தேடலோ என்னிடம் ரொம்பவும் தொலைவாகவே இருந்தது.
தொடர்ந்து ‘மாடும் வீடும்” தொகுப்பு நான் மேற்சொன்ன உரையாடலுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பின் தான் வாசிக்க கிடைத்தது. அந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் தொடர்பாக கட்டுரை தொடர்ச்சியில் பேசலாம். அதற்கு முன் நூலின் அணிந்துரையை பாடலாசிரியர் வைரமுத்து சுட்டிக்காட்டி பேசியிருக்கும் சிலவற்றின் சாரத்தை பார்க்கலாம். இந்த தொகுப்பை அணுக வேண்டிய நுட்பத்தையும் லாகவமாக சொல்லியிருப்பதோடு அவரின் கவிதைகள் பற்றி பின்வருமாறு பொதுத்தன்மையையும் அதன் ஊடே கண்டுகொள்ளலாம். இந்த மனநிலை மல்லிகை சி.குமாரை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு விடுவதும் தொடர்ந்து நான் எழுத இருப்பதற்கும் தீர்க்கத்தரிசனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
‘மனப்பாடம் செய்யாமலேயே மனதில் வந்து ஒட்டிக்கொள்வதுதான் நல்ல கவிதை. அந்தவகையில் நல்ல கவிதைகளை மட்டும் தந்த நல்ல கவிஞர் மல்லிகை.சி குமார்’. இது அவரை வாசிக்க தூண்டும் ஒவ்வொரு இடங்களில் அசைப்போட்டு கொள்ளலாம்.
தொகுப்பை வாசித்த பின் பலமுறை மல்லிகை சி.குமாரை சந்திக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனாலும் ஹட்டனில் நடைபெற்று முடிந்த எழுத்தாளர் சிவனுமனோகரனின் ‘மீன்களை தின்ற ஆறு” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு வரை சந்திக்கவோ அவருடன் உரையாடவோ கிடைக்கவில்லை. அதற்கு பின் தொடர்ந்து அவருடன் உரையாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. அப்படி பேசும் போதெல்லாம் எவ்வளவு எளிமையாக அவரின் கவிதைகளும் கதைகளும் மனங்களையும் மக்களையும் சென்றடைந்ததோ அதே அளவானதே நடை உடையும் உரையாடலும்.
மல்லிகை.சி.குமார் மலையக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானதொரு படைப்பாளுமையாக அடையாளப்படுத்தப்பட வேண்டியவர் ஆனால் அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டாத அதே நேரம் அந்த தந்திரத்தையும் அறியாதவர். அதனால் தான் என்னவோ அவர் பேசப்பட வேண்டிய இடங்களும் அவரை பற்றி பேச வேண்டிய சமூகமும் அவரை மறந்து வரும் சூழ்நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது. மல்லிகை. சி குமார் தலவாக்கலை பெரிய மல்லிகைப்பு என்ற இடத்தில் 1944.01.04 ஆம் திகதி பிறந்தவர். ஊரின் பெயரிலேயே தன் பெயருக்கு முன் அடையாகவும் புனைவாகவும் வைத்துக்கொண்டதால் சி.குமாரை மல்லிகை சி. குமார் என்று அறிகிறது இலக்கிய உலகம்.
இவரின் இலக்கிய பிரவேசம் மற்றைய இலக்கிய ஆளுமைகள் போல் இல்லாது இயல்பாகவே புத்தகம் மீதும் சஞ்சிகை மீதும் ஆர்வம் கொண்ட பின்புலத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரின் தந்தை சின்னையா தோட்டத்து கங்காணியாவார். தோட்ட தொழிலாளராக இருந்த போதும் சராசரியான தொழிலாளரை போல் அவர் தன் வாழ்க்கையை கடந்து போக விரும்பவில்லை. நிறைய புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தென்னிந்தியாவில் இருந்து நேரடியாக வரவழைத்துக் கொண்டு வாசித்தது மட்டுமன்றி தங்கள் பிள்ளைகளையும் ஊரார்களையும் வாசிக்கத் தூண்டினார். அவரின் ஏற்பாட்டில் பெரிய மல்லிகைப் பூ தோட்டத்தில் நூலகம் ஒன்றையும் அவற்றுக்கு தேவையான புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தாராளமாக கொடுத்துதவியதாக அறியக்கிடைக்கின்றது. அதுவே மல்லிகை சி.குமாரை இலக்கிய பக்கம் பிரவேசிக்க காரணமாக அமைந்திருந்தது.
மல்லிகை சி.குமாரை பொறுத்தமட்டில் தனது தாய்மாமன்களின் மூலம் தென்னிந்திய சஞ்சிகைகளையும் நூல்களோடு இலங்கை வெளியீடுகளையும் தாராளமாக வாசிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தோடு அவர் அன்றாடம் கண்ட மக்களின் பிரச்சினைகளும் அடிமை தனங்களும் தூரநோக்கும் மக்கள் மீதான கரிசனைகளற்ற அரசியல் பின்புலமும் தான் தன் இலக்கிய படைப்புக்களுக்கான கருவை தெரிவு செய்ய போதுமானதாகவே இருந்தது. இவருக்கென்று குருவோ அல்லது இவர் பின்பற்றிய எழுத்தாளுமை என்று எவரும் இல்லை இயல்பு வாழ்க்கையும் தனக்கெட்டிய எண்ணங்களுமே மக்களுமே குருவாகவும் பின்பற்றலாகவும் இருந்திருக்கிறன.
தலவாக்கலை சிங்கள மகா வித்தியாலயத்தில் எஸ்.எஸ்.சி வரை படித்த சி.குமார் ஆரம்பக் காலத்திலேயே கவிதைகளை கதைகளை எழுதியவரல்ல. ஓவியம் வரைவதிலேயே தீவிரமான ஆர்வம் கொண்டவர். விகடனில் மனியம் என்ற ஓவியர் ஊடாக தபால் மூலம் ஓவியம் கற்றவர் என்பதோடு, தான் வாழ்ந்த சூழலின் பெயர் பலகை உள்ளிட்ட நிறைய ஓவியங்களை சஞ்சிகைகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் வரைந்திருப்பதோடு இப்போது அவரை அவர் வாழ்ந்த ஊர் சூழலில் கவிஞராக கதையாசிரியராக அறியாமல் பெரும்பான்மையான மக்கள் அவரை ஓவியராகவே இனங்கண்டும் இனம் காட்டியும் கொள்கின்ற அளவிற்கு ஓவியத்தில் பிரகாசித்தவர்.
மல்லிகை சி.குமார் தெரிவு செய்து அணுகிய ஓவியம், கவிதை, கதைகள் என்று தான் பிரவேசித்த மூன்று துறைகளிலும் தகுதி மிக்கவராக தன்னை உருவாக்கிக் கொண்டதோடு தரமானவைகளையும் வாசகப் பரப்பிற்கு தந்திருக்கிறார். மேலும் இலங்கை வானொலியில் மலையக மக்கள் வாழ்வியல் பேசும் ‘குன்றின் குரல்” நிகழ்ச்சியில் நாடகங்கள் பலவற்றை எழுதியும் இயக்கியும் உள்ளார் என்பதும் மனங்கொள்ளத்தக்க அதே நேரம் இவரின் வாழ்க்கை போக்கிலும் சாதிப்பிலும் மறக்கமுடியாத நபர் இவருடைய துணைவியார் சரோஜா அம்மையாராவார் என்பதையும் இவ்விடத்தில் மனங்கொள்ள தக்கது. தன் கணவரின் எல்லா படைப்புக்களுக்கும் முதல் விமர்சகரும் வாசகியுமான சரோஜா அம்மா கணவனின் படைப்புக்களில் உள்ள எழுத்து பிழைகளைத் திருத்தியும் கொடுத்துதவியதுமே ம.சி.குமாரை சரளமாகவும் சாத்தியமாகவும் இலக்கியத்துக்குள் இயங்க காரணமாக அமைந்திருந்தது. மேலும் அவர் எழுதி இயக்கிய நாடகங்களில் அம்மையார் பாத்திரமேற்று நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மல்லிகை சி.குமாரின் படைப்புக்களான ‘மாடும் வீடும்’ என்ற கவிதைத்தொகுப்பு ‘வேடத்தனம்’ ‘மனுஷியம்” போன்ற சிறுகதைத் தொகுப்புக்கள் மட்டுமே நூலுருப் பெற்றப் படைப்புக்களாக காணப்பட்ட போதும் சி. குமார் பல நூறு கதைகளையும் கவிதைகளையும் ஓவியங்களையும் எழுதியும் வரைந்தும் இருக்கிறார் துரதிர்ஷ்ட வசமாக அவை மிகவும் குறைவாகவே வாசிக்கவும் காணவும் கிடைக்கின்றன. இருந்தும் நான் மேற்சொன்ன கவிதைகள் புனைவுகளின் வாசிப்பு அனுபவமே தாராளமாக போதுமானதாக இருக்கிறது மல்லிகை சி.குமாரை பற்றி பேசுவதற்கு. இருந்தும் ஒரு படைப்பாளனின் படைப்புக்களின் ஆவணப்படுத்தப்படாமல் வாசிக்கக் கிடைக்காமை வருத்தம் தரக்கூடிய விடயமாகவே உணர்கிறேன்.
இந்த கட்டுரைக்காக அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டிருந்தபோது தகவல்களை உடனுக்குடன் நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்வதில் சிரமமாக இருந்தது. தன் தந்தையின் நூற்றுக்கணக்கான கதைகளையும் கவிதைகளையும் கொண்டுச் சென்று தொகுப்புக்கள் போடுவதாக சொல்லி கதைகளில் சிலவற்றை வேறு பெயர்களில் பிரசுரமாக்கியது மட்டுமன்றி புனைவுகளையும் கவிதைகளையும் டம்மி(மாதிரித் தொகுப்பு) தொகுப்புக்களாக பெற்றுச் சென்று காணமலாக்கியதுமே அவர்களை என்னிடம் அப்படி பேசியிருக்க தூண்டிருக்கலாம். மேலும் அவருடைய படைப்புக்களின் இழப்பு என்பது அவருக்கானதோ அவர் குடும்ப உறுப்பினர்களுக்கானதோ அல்லாமல் அதையும் தாண்டி ஒட்டுமொத்த மலையகத்துக்கான இலக்கிய இழப்பு.
இதற்கு முன் எழுதிய எழுத்தாளர் திரு. சாரல் நாடன் தொடர்பான தகவல்களை சேகரிக்க மிகவும் இலகுவானதாக இருந்தது.அவரின் பிள்ளைகளும் மனைவியும் அவற்றை தந்துதவுவதில் தீவிர ஆர்வம் காட்டியிருந்தார்கள். அவரின் தகவல்கள் சரியாக வீட்டில் ஆவணப்படுத்தப்பட்டிருந்ததன. எப்போது வேண்டும் என்றாலும் வீட்டுக்கு வரலாம் தாராளமான தகவல்களையும் அவரின் நூல்களையும் வாசிக்க உதவுவதாக சொல்லியிருந்த அதே நேரம் துளியும் மாற்றம் இல்லாத முற்றும் முழுதும் வேறுபட்ட அனுபவத்தை ம.சி.குமார் குறித்தான தேடலில் இலக்கிய நண்பர்களிடமும் அவர்களின் வீட்டாரிடமும் அனுபவிக்கக் கிடைத்தது. அவரின் படைப்புக்கள் குறித்தான கட்டுரைகள், பதிவுகள் புகைப்படங்கள், விருதுகள் சேகரித்து ஆவணப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இருட்டடிப்புக்கு மத்தியில் எழுப்பி நிறுத்த வேண்டிய ஆளுமை மல்லிகை.சி குமார். அவருக்கு மலையக இலக்கியம் செய்த துரோகங்களை சாகடிக்க இனியும் அவர் குறித்தான பதிவுகள், ஓவியங்கள்,கதைகள், கவிதைகளை ஆவணப்படுத்தலையும் அவர்களின் பிள்ளைகள் இனியும் செய்வார்கள் என்று நம்புவோம். அவர் உயிரோடு இருக்கும் காலங்களில் மலையக இலக்கிய மேடைகளில் காணக்கிடைக்காத அவரின் படைப்புக்கள் குறித்து சரியாக முன் கொண்டு போக முயற்சி செய்யாத அவரின் உறவுகள் இறந்த பின்னும் அவரை பற்றி பேசுவது மகிழ்ச்சியானாலும் அப்படியான முயற்சிகளில் அவர் பற்றிய நான் மேல் சொன்ன ஆவணங்கள் சேகரிப்பு நான் அறிந்த மட்டில் தொடரப்படாமல் இருப்பதும் வருத்தமளிக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவதற்கு ‘தாயகம்” மல்லிகை சி.குமாரின் சிறப்பிதழ் உதவிய அளவிற்கும் தகவல் தந்த அளவிற்கும் உறவினர்களிடம் அவரின் இலக்கிய நண்பர்களிடமும் தகவல் கிடைக்கவில்லை என்பது உண்மை.


இனி மல்லிகை சி.குமாரின் படைப்புக்கள் குறித்து பேசலாம். மலையக இலக்கியங்களில் கோ.நடேசையர், சி.வேலுப்பிள்ளை இப்போது பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷ்ணு புர விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் மற்றும் மு.சிவலிங்கம் போன்ற படைப்பாளர்களின் படைப்புக்களை வாசித்த அனுபவத்தில் இருந்து மல்லிகை சி. குமாரின் படைப்புக்களை வாசிக்கும் போதும் மேற்சொன்னவர்கள் எங்கோ காணாமல் போன உணர்வை தருகிறது. தெளிவத்தை ஜோசப் மற்றும் மு.சிவலிங்கம் போன்றவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்ட அளவிற்கு மல்லிகை.சி.குமார் செய்யவில்லை என்பது நிதர்சனம். மேலும் ஒரு வாசகனாக மேற்சொன்னவர்களை விட ம.சி.குமார் முதன்மையாவதற்கான காரணம் மல்லிகை சி.குமாரும் ஒரு தொழிலாளி போலவே அவர் பாடுபொருளாகக் கொண்ட தொழிலாளர்களின் துயரங்களையும் குறை நிறைகளையும் அந்த களத்தில் இருந்தே கண்டு கொண்டவர். மற்றொன்று மலையக மக்களை பொறுத்தமட்டில் எல்லா வகையிலும் அடிமைப்படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வரும் சமூகத்தினர் அவர்களுக்கென்று தனித்து உயிர்ப்போடு இயங்கக்கூடிய அரசியல் பின்புலம் இல்லாத நிலைமைக்கும் வெறுமனே ஒட்டுமொத்த குற்றமும் தலைவர்களுக்கு உரியதல்ல அவர்களை தாண்டி தொழிலாளர்களிடம் ஆயிரம் குறைகள் உள்ளன. அவர்களின் அறியாமையும் தங்களை வளர்த்துக் கொள்ளா முயற்சிக்காமையும் தான் தொழிலாளரின் துயரங்களுக்கும் விடிவற்றமைக்கும் காரணம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட கவிஞர் மல்லிகை சி.குமார் தன் கவிதைகளிலும் கதைகளிலும் அவற்றை கருவாக முதல் கொண்டதிலும் தனித்துவமான முன்மாதிரி. 1995 இல் வெளிவந்த மக்கள் கவியின் ‘மாடும் வீடும்’ தொகுப்பில் இருந்து சில கவிதைகளையும் அதன் அர்த்தங்களில் பிரதிபலிக்கும் மக்களின் வாழ்வியலையும் பார்ப்போம்.
மக்களே குற்றம் செய்து மந்திரிகளை திட்ட வேண்டாம் அவர்களின் தவறு இதிலென்ன இருக்கிறது.

‘இது உண்மையிலேயே
எங்கள் தவறுதான்
நாங்கள் போட்ட
பூமாலைகள்தான்
அவர்களை நிமிரவிடாமல்
தடுக்கின்றன’
இதையே ஒத்த இன்னுமொரு வரி
‘துதி பாடிகள்
இருக்கும் வரை
மரண வீட்டில் கூட
உங்களுக்கு
மாலைகள் கிடைக்கும்”

எவ்வளவு நிதர்சனம் பாருங்களேன் மக்களின் பிழைகளை எவ்வளவு லாவகமாக தொழிலாளர்களின் செவிகளில் சேர்க்கிறார். இவரின் கவிதைகளில் அனாவசியமான செயற்கைத் தனம் இருக்காது உள்ளதுகளையும் கண்டவைகளையும் கவிதைகளாக்கினார்.

‘வானத்து முழு நிலவு
நட்சத்திரத்தோடு
பூமிக்கு வந்தது போல்
மாவிளக்கு ஏந்தி
தோட்ட நிலாக்கள்
மாரி சந்திக்கு
போவது தனியழகு இல்லை
வளைந்து போகும்
ஒரு நதியின் அழகு”
இந்த காட்சியின் உண்மை அழகை அந்த மலைநாட்டில் வாழ்ந்து கழித்து கொண்டாடியவனாலேயே உயிரோட்டமாக அனுபவிக்க முடியும். பாதை வளைவுகளும் இரண்டு பக்க தேயிலை செடிகளின் அழகும் அதோடு ஒட்டி மஞ்சள் நிறத்திலான அவர்களின் சாரிகளும் தாவணி பாவாடைகளின் அணிவகுப்பும் தனித்துவமாக கலை ஒன்றின் காட்சி தரும் அழகு அவை ரசிப்பதற்கு பேரின்பம். இந்த கவிதைத் தொகுப்பு முழுவதும் இவ்வாறான நிறைய இடங்களை காணலாம். இவை எல்லா வர்ணிப்பிலும் மனிதர்களிடமும் அவர் கண்ட மனிதத்தின் அழகையும் வர்ணிப்பை மட்டுமே காட்ட முனைந்திருப்பார்.
காலம் காலமாக சுரண்டப்படுகிற ஒரு வர்க்கத்தின் உரிமை குரல் மல்லிகை சி.குமாருடையது

‘கடவுச் சீட்டின்
கடைசித் தேதிப்படி
நாங்கள் என்றோ
காலாவதியான ஜென்மங்கள்’ ம.சி.குமாருக்கு இவைகள் அவரின் வேதனைகளில் மூலநாதம் ஏன் எங்களை மட்டும் இப்படி உரிந்து குடித்த பின் துப்பி விடுகின்றீர்கள் என்பதுதான். அவர்களின் வரியில் எப்போதுமே பழிவாங்கும் குணம் இருக்கும் எங்களை அடிமைப்படுத்தும் உங்களுக்கு மறு அடிகொடுப்போம் மக்களே தயாராகுங்கள் என்பதாகவே இருக்கும் அவை அனைத்தும் புரட்சிகளின் வித்துகள்.

கண்டிப்பாக
நாங்கள்
ஒரு நாள் மேலே
எழுவோம்!
பட்டமே உன்னையும் உன்னை
இயக்குபவர்களையும்
நாங்களும்
பள்ளத்தில் இறக்குவோம்
அன்று தீபாவளி
எங்களுக்குதான்.’

இப்படியாக இவரின் ‘மாடும் வீடும்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 22 கவிதைகளும் தனித்துவமான அடையாளம். அங்கொன்று இங்கொன்றல்ல ஒட்டுமொத்தமும் ஒதுக்கப்பட்ட முடியாதவை. இந்த தொகுப்பின் பெயருக்கான காரணம் கேட்ட போது மாடு – அப்போதைய கால்நடை அமைச்சரும் வீடு – வீடமைப்பு அமைச்சரையும் குறிக்கும் என்கிறார். உண்மையில் எவ்வளவு வேங்கையின் வீரம் பாருங்களே அதே அரசாங்கத்தில் இருந்து கொண்டு அவர்களின் குற்றங்களை சுட்டி காட்டி மிரட்டியிருக்கிறார் இதுதான் ஒரு படைப்பாளருக்கு இருக்கவேண்டிய திமிர். மேலும் இந்த தொகுப்பு வெளிவந்த 1995 காலப்பகுதியில் மத்திய மாகாண சாகித்திய விருதுக்கு தகுதி இருந்தும் தட்டிக்கழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் தொகுப்பு வெளிவர பெயரை கேட்ட உடனே பயந்து ஓடியவர்களும் தடையாக இருந்த பலரிலும் மத்தியில் இவரை சூழ இருந்த கிருஸ்தவ நண்பர்கள் தொகுப்பு வெளிவர பெரிதும் உதவியதோடு ‘மாடும் வீடும்’ தொகுப்பும் ‘கிருஸ்தவ தொழிலாளர் சகோரத்துவம்’ என்ற வெளியீட்டின் ஊடாகவே வெளிவந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கவிஞன் மல்லிகை சி.குமாரின் இன்னொரு பரிணாம முயற்சிதான் சிறுகதைகள். நான் முன்னர் கூறியதை போல தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம் போன்ற படைப்பாளுமைகள் மல்லிகை.சி குமாரின் சிறுகதை கருக்களோடு ஒப்பிடும் போது வெகு தொலைவில் இருக்கின்றன மக்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதிலும் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி நேர்நிலைப் படுத்தவதிலும் மு.சியோ,தெளிவத்தை ஜோசப்போ போன்றவர்களை விட மல்லிகை.சி.குமார் தனித்துவமானவராக விளங்குகின்றார். மேலும் எழுத்தாளர் திரு. தெளிவத்தை ஜோசப் மு.சி போன்றவர்கள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டாது புனைவிலக்கியங்கள் மீது தங்களின் கவனத்தை திருப்பியவர்கள். ஆனால் மல்லிகை சி.குமார் இரண்டு தளங்களிலும் தன்னை முழுமையாக வெளிக்காட்ட முற்பட்டதோடு மக்களுக்கு அவசியமானவைகளை தாராளமாக தந்திருக்கிறார்.

எந்தெந்த இடங்களில் மக்களிடமோ மந்திரிகளிடமோ பிழைகள் இருக்கின்றனவோ அவற்றை சரியாக சுட்டிக்காட்டுவதும் யார் யார் குற்றத்திற்கு உரியவர்கள் எப்படி எவ்விடத்தில் எந்த விடயங்களில் குற்றங்கள் புரிகிறார்கள். அவற்றை எப்படி ஒரு தொழிலாளர் வர்க்கம் கண்டு கொள்ளாமல் போவதனையும் அதன் பாதிப்பு நிலைமைகளையும் மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை, போக்கை, புரிதலை நன்கு அறிந்த பரிச்சயத்துடன் சிறிதும் பிசகாமல் சுட்டிக்காட்டுவதும் என்னென்ன மக்களுக்கு அவசியம் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் எந்த புள்ளியில் புரட்சி வேரூன்ற வேண்டும் அவற்றை எவ்விதம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நன்கு தெரிந்த ஆளுமை மல்லிகை சி.குமார் மற்றவர்கள் போல மலையகத்தில் இருந்து வாழ்ந்த சுவடுகளுடன் நகரத்தில் வாழ்ந்து கொண்டு கதை எழுதவில்லை. அந்த மக்களோடு வாழ்ந்து கொண்டு அவர்களின் அளவையும் அறிவையும் புரிந்து கதை எழுதியவர். இதனால்தான் மற்றவர்களை விட தனித்துவமாக விளங்குகிறார் கவிஞர்.
இவரின் கதைகளில் புனைவு கலை அல்லது புனைவு அழகியலுக்கான தொழிநுட்பம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக இருந்தும் அவை அவசியமே இல்லை. அடிபட்ட மக்களுக்கு அடிப்பட்ட மொழியிலேயே சொல்லும் போதுதான் அது ஆழமாக, அர்த்தமாக உறுத்தவும் உணர்த்தவும் செய்யலாம். மற்றையவர்கள் எழுதிய கதைகள் தொழிலாளர்களுக்கானதல்ல. தொழிலாளர்களை பற்றி தொழிலாளர்களை நேசிக்கும் ஒரு கூட்டத்தினருக்கு குறிப்பாக கற்றறிந்தவர்களுக்கு மல்லிகை சி.குமாரின் கதைகள் தொழிலாளர்களுக்கானது. அவர்கள் வாசித்து புரிந்து கொள்ளும் அளவினதானது.
இவரின் சிறுகதைத் தொகுப்புக்களாக ‘மனுஷியம்” 2001 ஒன்றில் சாரல் வெளியீடாக வெளிவந்திருந்த அதே நேரம் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘வேடத்தனம்’ 2020 இல் கொடகே வெளியீடாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தகக்கது. இந்த தொகுப்புக்களில் இடம் பெற்றிருக்கும் கதைகள் யாவும் எத்தனையோ முறைகள் நான் கடந்து செல்லும் அன்றாட மலையகம்.
மனுஷியத்தில் தொகுப்பில் மொத்தம் 13 கதைகள் அவற்றுள் முதல் கதை’ கொழுந்துக் காடு” 1980 வீரகேசரியில் வெளிவந்திருந்தது. மிகவும் அற்புதமான சிறுகதை. பல வருடங்களாக தோட்டத்தில் கங்காணி வேலை பார்க்கும் ஒருவர் அவரின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரு மலைகளின் ஒவ்வொரு தேயிலை செடிகளையும் அறிந்தவர் அவற்றின் ஒருவராக வாழ்ந்தவர் அவரின் அனுபவம் என்பது இப்போதெல்லாம் அந்த மலைக்காடுகள் தேயிலை கொழுந்துகளை ஒரு பொருட்டாகவே கருதாத கூட்டத்திற்கு எங்க புரிய போகிறது. அவர்களுக்கு அன்றாடம் ஒரு பெயர் கிடைத்தால் போதும் ஆனால் அன்றைய தொழிலாளர்கள் கொழுந்து மலைகள் அன்போடு நேசித்தவர்கள் அதனோடே வாழ்ந்தவர்கள் அவர்கள் வீட்டில் உள்ளவர்களோடு எவ்வளவு ஈடுபாட்டோடு வாழ்ந்தார்களோ அவ்வாறே அவர்களுக்கான வேலைத்தளங்களையும் ஆராதித்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சிதம்பரம் கங்காணி வயதானாலும் தன் தொழிலில் நியாயமாக செயற்படுபவர். அவர் வேலை செய்ய மலையை ஒரு புது கம்பெனி பாரமெடுக்க வயதானவர்களை வீட்டில் நிறுத்தி முதியவர்களை அனுபவம் இல்லாதவர்களை வேலைக்கமர்த்தும் முயற்சியில் சிதம்பரத்தின் வேலை போகிறது. இந்த கதையை வாசித்து நகரும் போது வேதனை தாளாது அடர்த்தியாக கவ்விக்கொள்ளும்.
மல்லிகை சி.குமாரின் கதைகளில் தொழிலாளர் புரட்சி தொடர்பாகவும் அந்த புரட்சி இயங்க வேண்டிய தளங்கள் களங்கள் என்பவற்றை சிரத்தையுடன் சொல்லி சென்றிருப்பார். அப்படி அவர் சொல்லிச் செல்லும் கதைகளில் ‘சிவப்பு மலர்கள்’ கதையும் ஒன்றாகும். மேதின போராட்டங்களில் காலங்காலமாக தொழிலாளர்கள் பங்கு பற்றுதல்களும் அதற்கு பின் மறைந்திருக்கக்கூடிய அரசியலையும் இந்த கதையின் ஊடே சொல்லியிருப்பார். சினிமா சாஸ்திர ஒப்பந்தத்தின் விளைவால் அதிகரித்த தொழிலாளர்கள் மீண்டும் தென்னிந்தியாவுக்கு கொத்தணி தொத்தணியாக சொந்தங்களையும் சுகங்களையும் நிலத்தையும் விட்டு போக நேர்ந்ததும் பிரஜா உரிமை இழக்கப்பட்டதும் ஜே.வி.பி கலவரங்களின் போது மலைநாட்டு மக்கள் அடைந்து இன்னல்களும் துயரங்களும் எண்ணிலடங்காதவை. இவற்றை தன் கதைகளில் பாத்திரங்கள் நிகழ்வுகளின் ஊடாக மல்லிகை சி.குமார் வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படியான சூழ்நிலைமைகளை வெளிக்காட்டும் கதையொன்றுதான் ‘வளரும் மரங்கள்’ தோட்டத்து இடமொன்றில் ஒரு தொழிலாளி துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் போது நாடற்றவன் பிரஜா உரிமையற்ற பரதேசி என்று விரட்டியடிக்கப்படுகின்றான் அவன் விவசாயம் செய்வது தீவிரவாத செயலாய் தோட்டத்து நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றது. அவன் பற்றியதும் அவன் அம்மா அப்பா பூர்வீகம் பற்றியும் அவர்களின் பிரஜா உரிமை பத்திரத்தை காத்துக்கொண்ட சம்பவத்தையும் புனைவின் ஓட்டத்தில் நனவோடையாக சொல்லப்பட்டிருக்கும் அந்த கதை எமது இதயத்திற்கு நெருக்கமானதாகவும் சுமையானதாகவும் இருக்கும்.


இனி நிகழ இருக்கும் நாடற்றவன் நிலமற்றவர் நிலைமையும் இதுவாகவே இருக்கப்போகிறது என்பதற்கான குரல் ஓலம் தான் மல்லிகை சி.குமாரின் ‘வளரும் மரங்கள்” கதை. வளரும் மரங்களை என்று அழித்து விடமுடியாது. அவை மீண்டும் மீண்டும் விழித்தெழும் என்பதன் தொனியில் அமைந்தது அந்த கதை இப்படிதான் முடிகிறது ‘ஆனால் இந்த இளைஞர்கள்…..அவர்களின் முயற்சிகள் நாளை இல்லை என்றாலும் ஒரு நாள் மீண்டும் புடைத்தெழும்.” இவ்வாறே இவரின் கதைகள் எதுவுமே சோர்ந்து விழும் முடிவுகளை கொண்டதல்ல பொங்கி விருட்சமாய் மலைகளாய் எழும் தன்மை மிக்கது.
ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தல் என்பது என்னை பொறுத்தமட்டில் எப்போதும் நிகழக்கூடியது. அவ்வாறு எப்போதும் நிகழக்கூடிய சந்தர்ப்பத்தை அவரின் கதைகள் கவிதைகளை பற்றி பேசும் போதும் இன்னும் அந்த முயற்சி சாத்தியமாக்கப்படுதலே எனதிந்த முயற்சி. இந்த தொகுப்பில் ‘குமாரிக் காடு’ என்ற சிறுகதை துயரத்தின் உச்சம். கட்டாயம் மலையகத்தான் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை. காலம் காலமாக தேயிலை காடுகளில் உழைத்த ஒரு தொழிலாளியின் சாவை அடக்கம் செய்ய இடம் தேடி பிணத்தை சுமந்தப்படியே மலைகளும் பள்ளங்களும் ஏறி இறங்கி துயருரும் ஒரு சமூகத்தின் கதை. இப்படியான கதைகளை ஆப்பிரிக்க அடிமைச் சனங்களின் கதைகளில் கூட காணக்கிடைக்காதவை. இவ்வாறான கதைகளை வாசிக்கும் போது எங்கள் சமூகம் மீதும் எங்களின் தீராத கோபம் மட்டுமே ஏற்படுகிறது. மேற்சொன்னவாறு மனுஷியத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகள் பற்றி சிலாகித்து கொண்டே போகலாம் மேலும் 2020 வெளிவந்த ‘வேடத்தனம்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளும் இதே தன்மை மிக்கதே கே பொன்னுத்துரை ம.சி.குமாரின் கதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார் ‘ மலையகத்தில் தொழிற்சங்க அரசியலைத் தன் படைப்புக்களில் மிக லாவகமாக உள்வாங்கி அதனை இலக்கியம் ஆக்கி மலையக இலக்கியத்தில் தனித்துவமாக வெற்றி பெற்ற படைப்பாளி’ என்கிறார். மேலும் நான் மேலே சொன்ன மனநிலையில் தான் எழுத்தாளர் மு.சிவலிங்கமும் இருக்கிறார் அவர் மல்லிகை சி.குமாரின் கதைகள் பற்றி ‘குமாரின் கதைகள் எல்லாமே தகவல் நிறைந்தப் பதிவுகளாகும். தொழிலாள மக்களின் பாமரத்தனங்கள் அந்தப் பாமரத்தனங்கள் எப்படியெப்படியெல்லாம் அதிகார வர்க்கங்களாகின, சமூக வஞ்கர்களாலும் பழியெடுக்கப்படுகிறன என்பது பற்றியும் அதே கதை மாந்தர்கள் புரிந்துக் கொள்ளும் மொழியிலேயும் அதே கதை மாந்தர்கள் தங்களை உணர்ந்து வெகுண்டெழுவதும் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். நிச்சயமாக அதே கதை மாந்தர்கள் தங்களை உணர்ந்து வெகுண்டெழும் விடுதலை வேட்கை ஏற்படத் தூண்டும் கதைகள் அவை.
‘வேடத்தனம்’ தொகுப்பில் 15 கதைகள் அந்த கதைகளும் நான் மேற்சொன்ன கதைகளை ஒத்த உணர்ச்சி வீரியம் மிக்கன. இவரின் கதைகளின் முடிவுகள் தான் தனித்துவமானவை தினக்குரலில் 2008 இல் வெளிவந்த ‘வேடத்தனம்’ சிறுகதையின் முடிவு இப்படி இருக்கிறது ‘ஏய் எங்களை ஏமாற்றி நீங்கள் இன்னும் எத்தனை காலம் வாழமுடியும்? இதுக்கெல்லாம் நாங்கள் முடிவுக்கட்டாமல் விடமாட்டோம்’ என்றதாகவும் ‘தேங்காய்’ என்ற சிறுகதையில் “அடப் பாவிங்களே…. கொன்னுப்புட்டீங்களே. பச்ச பயல கொன்னுப்புட்டீங்களே” என கத்தியவள் ஆத்திரத்தோடு தேங்காயை எடுத்து மந்திரியின் வாகனத்தை நோக்கி எரிந்தாள் தேங்காய் பட்டு முன் பக்க கண்ணாடி சிதறியது.மறு நிமிடம் என்ன செய்வது என தெரியாமல் நின்ற சிறுவர்கள்,ஆளுக்கொரு கல்லை எடுத்து அந்த வாகனத்தின் மீது எறிந்தனர்.’ இப்படித்தான் ஒவ்வொரு கதைகளும் பதில் அடி கொடுப்பதாக விழித்தெழும் ஒரு சமூகக் கூட்டமாக காட்ட முற்பட்டிருப்பார். ‘வேடத்தனம்’ தொகுப்பில் இருக்கும் கதைகளின் பொது தன்மை என்னவென்றால் இதற்கு முன் வெளிவந்த தொகுப்பை விட அரசியல் வாதிகளின் பிழைகளை நேரடியாக சுட்டிக்காட்டியிருப்பதோடு அவற்றுக்கு பொது மக்கள் உடனுக்குடனும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருப்பார்.
இந்த தொகுப்பில் இருக்கும் அங்கதச் சுவை மிக்க சிறுகதைகளில் ஒன்று ‘மீசை’ தலைவனின் பரிசளிப்பு அப்பியாசக் கொப்பியில் மாணவர்களின் அதாவது தொழில் சங்க தலைவர்களின் மகன் ஒருவன் மீசை வரைந்து வைத்தல் சம்பந்தமான சிறுகதை. அறியாத இரண்டு சிறுவர்கள் செய்த இந்த செயலால் அல்லற்பட்டு முட்டி மோதி அர்த்தமில்லை தொழிற்சங்க உறுப்பினர்களின் மூடத்தனம் பற்றிய கதை. இப்படி ஒவ்வொரு கதையும் தனித்துவமிக்கவை மேலும் ‘வேட்டி’ என்ற கதை சோகம் நிறைந்தவை. அன்றாடம் மலைநாட்டு மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகளை மூலக் கருவாக கொண்ட கதை. ‘மணிக்கதவு’ கதை அரசியல் அடிமைகளுக்கு செருப்படி. அந்த கதையில் உணர்வுகளை உயிர்ப்பித்து சிலிர்க்கச் செய்யும் இடம் இது. கதைக்கு மட்டும் அல்ல நம் சமூகத்திற்கும் ‘தலைவருக்கும் விருப்பமில்லாத கட்சித் தலைவரின் படம் தனது வீட்டுக் கழிப்பறையின் கதவில் ஒட்டியது யாரென்று ஊரே மிரண்டு போகும் அளவிற்கு கலவரம் செய்கிறார். முடிவில் கழிப்பறை கதவில் உள்ள ஓட்டையை அடைக்க மகள் ஒட்டியதாக கூறும் போது வெட்கித் தலை குனிகிறார். இந்த கதையில் தலைமுறைகள் தாண்டிய ஒரு தகவல் இருக்கிறது. அன்று கடவுளாக மதித்த தலைவர்களின் காட்சிப் படம் இன்றைய சமூகத்திற்கு மலசலக் கூட கதைவடைப்புக்குத் தான் உதவும் அவர்களின் முயற்சி பயனற்றதாக இருக்குமானால்.
இப்படி ஒவ்வொரு கதைகளையும் பேசிக்கொண்டே போகலாம் மிகவும் காத்திரமான கதை களங்களை கொண்ட உயிர்ப்பு மிக்க சிறுகதை மல்லிகை சி.குமாரினது ‘வேடத்தனம்’ தொகுப்புக்காக அண்மையில் கொடகே விருதும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது இவரின் படைப்புகளுக்கு விருதுகள் ரீதியான அங்கீகாரங்கள் குறைவென்றாலும் ஒரு சில கோடிட்டு காட்டக்கூடியவை. மேலும் இவர் விருதுகளுக்கு பின்னாடி நிற்கவும் இல்லை எதிர்ப்பார்க்கவும் இல்லை.
இருந்தும் அவரின் ஆளுமைக்கு வந்து சேர்ந்த விருதுகள் கலாபூசணம் , LIFETIME ACHIEVEMENT AWARD 2018, ஜனாதிபதி விருது, தமிழ்மணி, கலைமாமணி, சாகித்திய விருது, கொடகே விருது, துரைவி என்.எஸ். எம் ராமையா நினைவு பரிசு. போன்ற விருதுகளிற்கு சொந்தக்காரர் என்பதோடு இவரின் ஓவியங்களில் சில ஜெர்மன் நாட்டின் கண்காட்சி காட்சியகம் ஒன்றில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன விருதுகளை தாண்டி மல்லிகை சி.குமார் சென்றடைய வேண்டியது இன்றைய இளைய சமூகத்தினருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்குமாகும். அவர் பற்றிய உரையாடல்கள் விமர்சனங்கள் ஆய்வுகள் காலத்தின் தேவை அவற்றுக்கான ஒரு தூண்டுதல் துளிதான் இந்த கட்டுரை முயற்சி.

***

-VM ரமேஷ்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *