உள்ளச் சீற்றமும் கொந்தளிப்பும் அடக்கமுடியாத கடலை உள்ளேயும் வெளியேயும் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். கடல்களின் கோமான் தூதர் ஹிள்ரு உப்புசமுத்திரத்தின் வழியே ஞான திரவியங்களை அள்ளித்தருபவர். நம்பிக்கையிழந்து துவண்டு போயிருக்கும் இவ்வேளையில் ‘..நமக்கு அல்லாஹ் இருக்கிறான்’ என அடிக்கடி தனக்கு தானே ஆறுதல் கூறும் பெத்தாம்மாவை நினைத்துப்பார்க்கிறேன். பெற்றால் தான் பிள்ளையா? பெறாமலே முகம்மதியாபுரத்தில் எத்தனை பிள்ளைகள் அவளுக்கு ?  இங்குப் பெத்தாம்மாவை நினைவு கூறுவதற்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றது. இரவோடு இரவாக பாகபிரிவினையில் மூத்த தாரத்து பிள்ளைகளை மாடுகளை பற்றிவிடுவது போல் பற்றிவிட்டார்களே. ஒருமா புஞ்சை நிலம் எழுதிய பட்டா, ஐந்து எவர்சில்வர் டம்ளர், மொட்டை தூக்கு சட்டி, இரண்டு வெங்கல அண்டா சபையோர் முன்னிலையில் பரப்பி வைத்திருந்தார்கள். தலையாரி, பாகபிரிவினை பங்கினை சிட்டா நோட்டில் வரிசையாக தலையெண்ணி  ‘கொழும்பார் ஹாஜியார் மூத்த தாரத்து தலைப்புள்ளை வகையாறா’ என 786 க்கு கீழே உருப்படிகளை எழுதிக்கொண்டிருந்தார்.

‘எல்லாத்திலயும் பங்கு கேக்க இந்த வீடென்ன பாட்டன் பூட்டன் சொத்தா.. நான் சீனங்கோட்டையிலும் காங்கேசன் துறையிலும் சம்பாதிச்சது விருப்பம் இருந்தா தருவேன். மூத்த தாரத்தில் பிறந்தவனுங்களுக்கு பாலக்குடி விவசாயநிலம் மட்டுந்தான். வீடு , பாலக்கட்டை பலசரக்குகடை எல்லாம் ..என் ரெண்டாந்தர பிள்ளைகளுக்கு மட்டுந்தேன்’ என கொழும்பார் பாட்டன் பஞ்சாயத்தில் கூறியபோது,

‘உங்களுக்கு புடிச்ச புள்ளங்களுக்கும் மட்டும் தான் வீடுன்னா.. பெக்குறப்பவே பிடிச்சவங்களா பாத்து பெத்துருக்கணும் மாமா..’  என்று அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு பெண் குரல். யார் அது உம்மா தான். உம்மாவே தான். பாலக்குடி வெள்ளாமை நெல்மூட்டைகள் மாட்டுவண்டியில் பரம்பரை வீட்டுவாசலில் நின்றுக்கொண்டிருந்தன. மஃரிபு நேரத்தில் கூட சிட்டுக்குருவிகள் நெல்மூட்டையை தன் அலகுகளால் குத்தி பதம் பார்த்துக் கொண்டிருந்தன.   வண்டிக்காரன் மாட்டை ‘ச்ச..ச்ச..’ நாக்கை சுழற்றி, தார்கம்பால் அமர்த்திக்கொண்டிருந்தான். பரம்பரை வீட்டின் முற்றத்திலிருந்த பழைய மாமரம் பூப் பூத்திருந்தது. மாம்பிஞ்சு பால் மணமும், அணில் கடித்து துப்பிய செங்காய்களும் முற்றத்தில் அதை மொய்த்த எறும்பு பலரின் காலை கடித்தது.

 ‘இஞ்சாரும்மா.. பெரிய மனுஷஹ பேசும்போது பொட்டபுள்ளஹ குறுக்க பேசுறது என்ன வழக்கம்.’ என்று காலில் ஏறிய எறும்பை உதறியாவாறே செவத்த ராவுத்தர் கேட்டார்.

‘..பெத்துப்போட்டு வெறுத்து என்னாகபோகுது ?  தான் பெத்துப்போட்ட மூத்த தாரத்து புள்ளங்களும் அந்தாள இல்லைனு பத்திரத்துல எழுதசொல்லுங்க’ என்று உம்மா கத்திக்கொண்டிருந்தாள்.

‘எவ்வளவு வாய்துடுக்கு இவளுக்கு..’

‘வீடு இல்லனு சொல்றாரு .. இவர் மயன் பெத்துப்போட்ட பச்சபுள்ளய வச்சிட்டு நான் எங்கபோவேன்..  இத கேட்க நாதியில்ல.. பொல்லாத பஞ்சாயத்து’  சபை நடுவில் அடுக்கிவைத்திருந்த அண்டா குண்டாவை தன் காலால் உம்மா உதைத்துவிட்டாள். என் கையை பிடித்துக்கொண்டே வீட்டை  விட்டு விடுவிடுவென வெளியேறிய நாள், இன்னும் சூடு குறையாமல் அப்படியே இருக்கிறது.

வாப்பா பினாங்கில் இருந்தார். அந்த ஊரில் உம்மாவுக்கென்று தூரத்து உறவினரான பெத்தாம்மாவை தவிர யாருமில்லை. அவள் வீட்டு வாசல் இலந்தை மரநிழலில் உம்மா என்கையை பிடித்துக்கொண்டு  நின்றபோது, பெத்தாம்மா அரவணைத்த விதம் மறக்ககூடியதா ? இப்பவோ அப்பவோ என பெத்தாம்மா வீட்டு மண்சுவர்கள் எல்லாம் வாய்பிளந்து நிற்கையில்,  ‘முத்துப்பேட்டையார் கூட்டில் இல்லாத இடமா? இங்கேயே இருந்துகொள்..’ என்று வீட்டு முன் திண்ணையில் ஒரு வெள்ளைத்துண்டை குறுக்கே கட்டி எங்களை குடியமர்த்தினாள். அன்று பெத்தம்மா வீட்டு சுவற்றுப்பொந்தில் குடியிருந்த மீன்கொத்தி, தன் குஞ்சுகளுக்கு கீலி பொடிகளை கடலில் இருந்து கவ்விகொண்டு வந்திருந்தது. மாம்பிஞ்சு வாய் பிளந்து குஞ்சுகள், ஏற்கனவே தாயின் குடலில் மசிந்து கிடந்த மீன் சதைகளுக்காக ‘கீச் கீச்’ என யாசித்துக்கொண்டிருந்தன.

நான்,  ‘இதென்ன பட்சி பெத்தாம்மா..’

 

 ‘அவங்களும் உன்னை மாதிரி இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்குள்ள வந்திருங்காங்க..’ என்றாள்

 

  வசதிவாய்ப்பு பெருக, வாப்பா அனுப்பிய பணத்தில்  நாங்களே முத்துப்பேட்டையார் வீட்டை கிரயம் செய்த நாள்,  வீட்டு வாசல் படியை நனைக்கும் கடலை பார்த்து தன் பிறைத்துணி மேலாடையை இருகரங்களிலும் ஏந்தி பிரார்த்தித்தாள் பெத்தாம்மா.

 

‘..எல்லா காலத்திலும் கடலில் அவர் நடமாடிக்கொண்டிருப்பார்..’

 

   அன்று, யாரையோ அவள் கடல்நீலத்தில் அடையாளம் கண்டுகொண்டது போல்,  பெத்தாம்மா சிரித்தாள்.

 

   அதுவொரு பால்சோற்று பெருநாள் ! விதவைகள் ,  கைம்பெண்கள் தைமாத முதல் அறுவடை நெல்லை  தூயர் ஹிள்றுவின் பெயரால் அரிசி, கடலைப்பருப்போடு கடைந்துக்கொண்டிருந்தனர். பிரசவகாலங்களில்  சூலித்தாய்களுக்கு உயிர்தந்துவிட்ட இறந்துப்போன குழந்தைகளை நினைவூட்டும் நாள் ! அமர குழந்தைகளுக்காக பாலும் பழமும் சிறார்களுக்கு உண்ணக்கொடுத்து அவர்களின் வடிவில் தங்களது குழந்தைகளை காணும் நாள். பிரசவத்திலேயே இறந்துப்போய்விட்ட தனது பிள்ளைகளான புன்யாமீன், லுக்மானுல் ஹக்கீம் நினைவாக பெத்தாம்மா கலங்கியிருந்தாள். பின்பு வெற்றிலையில் காம்பு ஒடித்து என் வாயிலிட்டு மெல்லக்கூறினாள்.  ‘..இனியென்றுமே முத்துப்பேட்டையார் வீட்டில் ஆண் வாரிசு கிடையாது !’ அங்கிருந்த என்னையள்ளி உச்சிமுகர்ந்தாள்.

 

  ஒளி மங்கி இருள் மெல்ல கடலை கவ்விகொள்ளும் மாலைப்பொழுதில் பெத்தாம்மா ,

 

‘ தீர்க்கதரிசி மூசாவிற்கு கையில் கைத்தடி இருந்தும், ஞானத்திற்காக தூயர் ஹிள்றுவை இறைவன் சந்திக்க செய்தான். தூயர் ஹிள்றுவை தீர்க்கதரிசி மூசா சந்தித்த நாள்..பொன்னாள்..கடலில் பிராயணிக்கும் போதே ஹிள்று  பயணிகளின் கப்பலை உடைக்கிறார். தெருவில் இருந்த வீட்டு சுவற்றை தகர்க்கிறார் . ஒவ்வொன்றிலும் தூயர் ஹிள்ருவிடம் வெளிப்பட்ட சீற்றத்தைக்கண்டு தீர்க்கதரிசி மூசா கடுமையாக விமர்சிக்கிறார். ஹிள்றுவுடன்  கடுமையான விவாதம் செய்கிறார். ஆனால் உண்மையென்ன.. ?’ என்று சுண்ணாம்பு தடவியபடியே பெத்தாம்மா உம்மாவின் பக்கம் திரும்பி கேட்டாள். உம்மாவிடம் பதிலில்லை.

 

 ‘..ஹிள்று அனாதைகளின் சொத்தைக் களவாடிய திருடர்களின் கப்பலை உடைத்தார்.அனாந்தரமாக இருந்த சுவருக்கு கீழே கதியேயென அடைக்கலமாகியிருந்த குடும்பத்தை , காவு வாங்க நின்ற ஒரு சுவரை தகர்த்தார். தூயர் ஹிள்று கையிலிருந்த கடப்பாரை அப்படித்தான்.. மண்ணுக்கு கீழே மறைந்து கிடந்த வைரங்களை வெளிகொணர்வது போல, தீர்க்கதரிசி மூசாவின் இதயத்தை இடித்துரைக்க ஒவ்வொரு உண்மையாக வெளியாகி கொண்டிருந்தது ‘’

 

 புகைச்சல் இருமலோடு பட்டையில் கட்டியிருந்த மூக்குப்பொடியை கலிமா விரலால் அழுத்தி தன் மூக்குறிஞ்சினாள். உம்மா மெதுவாக என் காதில் கிசுகிசுத்தாள். ‘பெத்தாம்மா, திஜ்லாவிலிருந்து வந்துள்ள ஜின்னோடு பேச போறா..’

 

‘எப்படி கண்டுபிடிச்சே உம்மா..’  நான்  உம்மாவின் காதில் கிசுகிசுத்தேன் .

 

சன்னமான குரலில் , ‘ஜின் அவ மேல ஏறிடுச்சினா..சுத்த தமிழ்ல ஒக்கூர் மாசாத்தியார் மாதிரி பேசுவா’ என உம்மா சிரித்தாள்.

 

 உம்மாவின் பேச்சு பெத்தாம்மாவை தொந்தரவுக்குள்ளாக்கி இருக்கவேண்டும். அவளது உருண்டை கண்கள் எனக்கு பயத்தை தந்தன. அனிச்சையாய்  முகத்தில் சிரிப்பை வரவழைத்தாள்.

 

‘ஆஹா..  மெளலாய்..  நீ நடத்தும் பட்டறிவு பாடங்கள் தான் எவ்வளவு மகத்தானவை?  மூமின்களின் இதயத்தின் மொழி தான் என்ன ? அவர்கள் ஒவ்வொரு சிரமத்திலும் நலவுகளை மட்டுமே அர்த்தம்கொள்ள முனைகிறார்கள். குறைமதியாளர்கள் அப்படியல்ல , நிகழ்வில் வெளிப்புற விளைவுகளை காண்கிறான். அவனுக்கு பொறுமைக்கு பதிலாக, பதட்டத்தை கையிலெடுக்கிறான் ‘  என்று கையிலிருந்த வீட்டு சாவியை உம்மாவிடம் தந்தாள் பெத்தாம்மா. வானத்தை அன்னார்ந்து பார்த்தாள், வானில் சிறிய நகத்துண்டு போல் ரஜப்மாத இளம்பிறை. மீண்டும் எனை உச்சிமுகர்ந்து அணைத்துக்கொண்டாள். இத்தனை காலத்தில் பெத்தாம்மா மடியிலும் மாரிலும் வளர்ந்த நான் தான் .. நினைவில் நின்றாடும் புன்யாமீனும்,லுக்மானுல் ஹக்கீமும்..அவளுக்கு எல்லாமும் ..

 

  ‘பெத்தாம்மா .. எங்களோடே இருந்திடேன்..’ தனது தூரத்து உறவினர் வீட்டிற்கு செல்ல எத்தனித்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன். துணிப்பையில் இருந்த பழைய திருக்குர்ஆன் பிரதியை கையில் பரிசாக தந்தாள். பக்கங்கள் நைந்துப்போன பழைய பிரதி இருந்தும் விரித்து முகர்ந்துப்பார்த்தேன். இவ்வுலகில் எங்குமே நுகர்ந்திடாத ஒரு வாசனை. அதன் ஒவ்வொரு எழுத்துக்களும் அவளது எத்தனையோ வருட வாசிப்பை எனக்கு நினைவூட்டியது. நடுநிசியிலும் சூரிய உச்சத்திலும் இறைவனோடு ராகமும் தாபங்களுமாய் குர்ஆன் வழியாக வாழ்வின் பொருளை கண்டவள். அவள் குர்ஆனை ராகமெடுத்து ஓதும் வாசிப்பு இரவுநேர ரம்மியமான அலைகளுக்கு மத்தியிலும், நாய்களின் ஊளைகளுக்கு மத்தியிலும் ‘பொல்லா ஷைத்தானே போ.. போ’ என இரவில் யாரையோ அதட்டுவதும், பெத்தாம்மாவின் மடியை பாதுகாப்பாக உணர்ந்தேன். அவளோடு ஊணும் உறக்கமும். கூர்மையான கண்களாலும், தன் எச்சி ஊறும் நாவினாலும்  இரவும் பகலுமாய் குர்ஆனின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உரு ஏற்றப்பட்டிருந்தன. எழுத்துக்கள் நகர ஆரம்பித்தன. ஒன்றோடொன்று மோதி வார்த்தைகளாக வந்துவிழுந்தன. எல்லா வார்த்தைகளும் கோர்வையாகி , ‘..முஃமின்கள்அல்லாஹ் மீதே தவக்குல் வைக்கட்டும்’ என்ற வேதவரிகளை பிரதியிலிருந்து நான் உச்சரிக்க முயன்றுக்கொண்டிருந்தபோது, பெத்தாம்மா

கண்ணீரோடு தன் பைகளை தூக்கிக்கொண்டு தெருவை தாண்டிவிட்டாள்.

 

  பழைய முத்துப்பேட்டையார் வீட்டை தரைமட்டமாக்கிவிட்டு, புதிய வீடு கட்டும்நாளில் வாப்பா அந்த பிரதியை ‘குர்ஆன் எழுத்து.. கால்ல மிதிபடாம.. போய் கடல்ல விட்டுடு ‘ என்று கூறினார்.  இறந்துப்போய்விட்ட அவளது நினைவாக இருக்கும் இந்த பிரதியை ஏன் கடலில் விடவேண்டும் ? எனக்கு விட மனமில்லை. மண்ணறைக்கு சென்றுவிட்டவளின் நினைவாக இருக்கும் பிரதியை, வாப்பாவின் வற்புறுத்தலால்  இடுப்பளவு தண்ணீரில் கடலில் விட்டுவிட்டு வந்தேன்.  குர்ஆன் பிரதி மீண்டும் மீண்டும் கரையில் செங்குத்தாக ஒதுங்கி நிற்கிறது. ஏழாவது முறை கடலில் விட்டுவிட்டு திரும்பிப்பார்க்காமல் வீடு வந்த சேர்ந்தபோது, வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த இலந்தை மரத்தின் மீது குர்ஆன் பிரதி தொங்கிக்கொண்டிருந்தது.

 

 நெஞ்சோடு பிரதியை அணைத்துக்கொண்டேன் ‘பெத்தாம்மா..’

 

*******

 

 

‘இறைவா தூயர் ஹிள்ரு பொருட்டால் என் சிரமங்களின் நன்மையை புலன்களுக்கு உணர்த்துவாயாக ! நான் ஒதுங்கிக்கொள்ள ஒரு கூரை வழங்குவாயாக ! கூரையின் கீழ் ஞானகோப்பையை தருவாயாக ! உன்னிடத்தில் சேர்க்கும் ஒரு கப்பலை இக்கரைக்கு அனுப்பிவைப்பாயாக ..’ கடலை பார்த்து பிராத்தித்தேன்.

 

‘அல்லாஹ் உன் காவல்’ என்று  சிரமகாலங்களில் எழுதுவது என்  உம்மாவின் வழக்கம். ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கும் இந்த ரயிலை யார் நிறுத்துவா ? என்று கேட்டால், மெளத்தாகிட்டா என் கபுர்ல வந்துப்பாரு ! அங்கேயும் உன் உம்மா உனக்காக எழுதிக்கொண்டுதான் இருப்பாள்’. ஆத்மார்த்தமான பரிசுத்த சீதேவி ! உம்மா ! மானசீகமாக உம்மாவோடு ஒரு பூங்காவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறேன்.

 

‘உம்மா! எனக்கும் இருக்கும் பிரச்சனைகளுக்கும் சேர்த்து நீ ‘அல்லாஹ் உன் காவல்’ என எழுத ஆரம்பித்தால் சிங்கப்பூர் முழுதுமாக வீட்டுக்கு வீடு நான் தினசரியாக இதை தான் போடவேண்டும் ! வாப்பா உனக்கு பினாங்கிலிருந்து கடிதம் எழுதுவார்களே ! அது போல் ஒரு கடிதமாக இதை நினைத்துக்கொள்ளேன் !  நீ எனக்காக அனுப்பும் பிரார்த்தனைகள் கடல்கடந்து புறாக்களாக இந்த தீவில் பறந்துக்கொண்டிருக்கும் வேளையில், எந்த காரணமும் நீ அறியாமல், விமான நிலையத்தில் குழந்தைகளையும் உன் மருமகளையும் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறேன்.

 

 

  இன்று விமான நிலையத்தில் நான் இறங்கிய காட்சியை நீ பார்த்திருக்க வேண்டுமே ! வாய் உடைந்து சிரித்திருப்பாய் அதுவும் மணமேல்குடியில் உன்னை வைத்து பல் புடுங்க கத்துக்கிட்டாரே டாக்டர் காளியப்பன் ! அந்த பொக்கை வாய் தெரிய சிரித்திருப்பாய்! பண்டபாத்திரங்களோடு இறங்கியதை பார்த்திருந்தால் நான் சிறிய வயதில் நம் வீட்டு திண்ணையில் பெரிய தொப்பையோடு படுத்துகிடப்பாரே.. பாத்திர வியாபாரி கண்ணாகுடி தொந்தி செட்டியார் !  அவரை உனக்கு நினைவூட்டியிருப்பேன்.

 

  எத்தனை மகத்தான காலம் ! பத்து ருபாய் தந்தால் மஞ்சள் பைநிறைய செல்வமுறல் மீன் ! வீட்டில் செல்வம் இல்லையென்றாலும் நீ ஆய்ந்து எறியும் செல்வமுறல் மண்டையை பூனை கவ்விக்கொண்டு ஓடும் காலம் ! நீ மதிலில் காயவைத்த பன்னா கருவாடுகளை திருடி வயிறு நிறைய பூனைகள் உண்ட காலம் !

 

‘எம்மோவ் ! கொஞ்சம் ஆனம் மட்டும் தாங்க! ‘ என தொந்தி செட்டியார் வேஷ்டியை உதறிகட்டிவிட்டு திரும்புகையில், தூக்கில் பழைய கஞ்சியை உள்ளங்கையில் பிழிஞ்சி அவர் அள்ளுகையில் கிண்ணத்தில் முறல்மீன் துண்டு இருக்கும். சிறுபிராயத்தில்  நான் உன்னோடு கோபித்துக்கொண்டு மூட்டை முடிச்சி கட்டிக்கொண்டு கிளம்புபோதெல்லாம் ‘கண்ணாங்குடி செட்டி்!  எங்க கிளம்பிட்டீங்க’ கேலியாய் சிரிப்பாயே அதுபோல தான் இன்று நிகழ்ந்தது. சாக்குப்பை நிறைய பாத்திரங்களும் வீட்டுசாமான்களுமாய் அழுகையும் ஆத்திரமுமாய் வேனிலிருந்து ‘தடபுடலாக’ விமானநிலையத்தில் இறங்கினேன்.

 

      ஒரு கிருமி உலகத்தை புரட்டிப்போடும் என்று யாரும் கனவினில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் ரொட்டி புரட்டு ‘அலேக்காக தூக்கிப்போட்டது’ நாட்டுக்கு நாடு நீ என் நாட்டுக்க்குள் வந்துவிடாதே ! என  விமான நிலைய விளக்குள் அணைக்கப்பட்டது. எல்லைகள் இழுத்து மூடப்பட்டன. எந்நேரமும் கார்களும் வாகனமுமாய் தவழும் மலேசிய சிங்கப்பூர் எல்லையான ஜோகூர் பாலம்,  கீறிப்பிள்ளைகளும் உடும்புகளும் சர்வசாதரணமாக உலா வருவதாக செய்திகள் வருகின்றன. எல்லை மூடப்பட்டநாள் நினைவுக்கு வருகிறது. ஊருக்கு திரும்ப முடியா மலேசிய ஊழியர்கள் ! அங்கேயும் இங்கேயும் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு நின்றது பெருந்துயரம் உம்மா! வழமையானநாட்களில் சிட்டுகுருவிகளை போல ஜோகூருக்கு தங்கள் வாழ்விடங்களை தேடி பறப்பவர்கள் அன்று ஸ்தம்பித்து போனநாள் ! இவ்வூரில் மனிதநேயத்தோடு சில உள்ளங்கள் தெருவில் நின்றவர்களை தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துக்கொண்டு அரவணைத்துக்கொண்ட நாள் ! உன் பேரன் சிறியவன், தங்க இடமில்லாமல் ரயில்வேநிலையத்தில் படுத்துறங்கிய மலேசிய பெரியவருக்கு தனது போர்வையை கொடுத்து வந்தநாள்.

 

    இயற்கையும் காலமும் பதிலுக்கு என்ன செய்யும் என்று அறியாது . வாழ்க்கை மிட்டாய் போத்தலிலிருந்து நமக்கு என்ன மிட்டாய் தரப்போகிறது யார் அறிவார் என்று எவர் சொன்னாரோ தெரியாது. அதுவொரு கசப்பான மருந்தை தரப்போகிறது என்று கடந்த மாதம் வரை நான் நினைத்துப்பார்க்கவில்லை. வீட்டு உரிமையாளர் நின்றது நிக்க வீட்டை விட்டு காலி செய் எனும்போது நிதர்சனம் சுடுகிறதே உம்மா ! வாப்பா சபுரில் இருந்த காலங்களில் கூறுவாரே, ‘சபுராளி மதில் மேல் பூனை ! அவனுக்கு ஆற்றில் ஒரு கால் ! சேற்றில் ஒரு கால் ‘ இன்றுவரை சபுராளி துயரம் அப்படி அப்படியே . குடும்பத்தை இங்கே வைத்துக்கொள்வதா ? அங்கே வைத்துக்கொள்வதா ? என்ற யோசனையிலேயே மூத்தவள் குத்தவைத்துவிடுகிறாள். இனி அவளுக்கு நகை நட்டுக்கு விமானத்தில் ஏறினால் தானே துட்டு .முடி நரைத்த பின்பு ஊர் திரும்பிய நாளில் டையடித்துக்கொண்டு ராம்நாட்டிற்கும் தொண்டிக்கும் தாயபுள்ளைஹ வீடுகளில் உலாவரும் போது போன காலங்கள் எல்லாம் திரும்பி வரவாபோகிறது ?

 

 போனவை போனவையாக இருக்கட்டும். சொந்த ஊர்  திரும்பி தொழில் செய்யலாம் என்று வந்தவர்கள் என்ன ஆனார்கள் ?  ஊருக்கு மேற்கே பாலகட்டை தாண்டி மந்திகடை திறந்த சவுதி பண்டாரி சேமு மம்மது மாமா மீண்டும் ரியாத் திரும்பிவிட்டதாக செய்தி . சேமு மம்மது மாமா துபாய் ஷேய்க் போல் கந்தூரா அணிந்து மந்திகடை திறந்தநாள் மட்டும் கூட்டம் அள்ளோ அள்ளு ! தள்ளோ தள்ளு !

 

 ‘…சவூதியிலும் இனிய தமிழில் தான் அல்லாஹ் அக்பர்னு பாங்கு சொல்வாங்க..’  என்று முதல் சபுர் திரும்பிய நாளில் மாமா கூறியதை இன்று வரை ஊர் மறந்ததா ? மாமா எந்த மூலையில் திரும்பினாலும் ‘அல்லாஹ் அக்பர்’ என கத்திவிட்டு ஓடி ஒளிந்துக்கொள்ளும்  இளந்தாரி பயலுகள்.

 

     மலேசியாவுக்கு தோட்ட விசாவில் போய் ரொட்டி பிராட்டா வீசுவது போல், சவுதிக்கு ஆசாத் விசாவில் போய் ஒட்டகம் முதல் அரபாளுங்க புள்ளகுட்டிகளை  வரையிலும் மேய்த்துவிட்டு , சபுராளிகள் தன் இரத்தத்தை உறிஞ்சிய அரபுநாட்டை பழிக்கு பழி வாங்குவது எப்படி ? வேறென்ன ஊருக்கு வந்ததும் மொத வேலையா மந்தி கடை திறப்பது . மலேசியாவை பழிவாங்குவது எப்படி? ஊரில் மலேசியா சீ ஃபுட்ஸ் கடைவைத்து நாசிகோரிங் என்றபெயரில் கண்டதையும் எண்ணை சட்டியில் வறுத்து தட்டில் தூக்கியடிப்பது.

 

   சேமு மம்மது மாமா மந்தி கடை என்னாவானது? திறந்த மறுநாள் வியாபாரத்திற்கு மாமியும் மாமாவும் தனியாக உதயாபட்டினம் லாஞ்சடி ஈ,  ஓட்டியதாக ஊர் முழுதும் குபீர் சிரிப்பு . சிரிப்பென்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் பெண்பிள்ளையாய் பெற்றெடுத்த சீமான் சேமு மம்மது மாமா,‘.. இனியென்ன சேமு மம்மதுக்கு ,பொட்ட புள்ளையெல்லாம் மொத்தத்தையும் கட்டிக்கொடுத்தாரு ! இனி ஜாம் ஜாம்னு ஊர்ல இருக்கலாம்..’ என அரபிகொடுத்த ஓய்வூதிய காசு பணங்களோட திரும்பி வந்தவர தாயபுள்ளங்க சும்மா விட்டதுஹளா.

 

‘..  பேத்திக்கு காதுகுத்த ஜிமிக்கி வாங்கி வாங்க வாப்பா!  ‘  மூணாவது மாச ஃபிளைட்ல மாமாவை மொத்த குடும்பமும் ஏற்றிவிட்டது.

 

வாப்பா சொல்வது சரிதான்மா.

 

‘..ஊதா அட்டைய ஒருமுறை கையிலெடுத்துட்டா திரும்பி கீழவைக்கவே முடியாது ..’

 

 விலைவாசி குதிரைக்கும் சம்பள கழுதைக்கும் .. கழுதையும் தேய்ந்து இப்போது கட்டெறும்பு.. இரண்டிற்கும் பந்தயம் வைத்தால் என்ன? கூட்டி கழித்துப்பார்த்தால் வரவுக்கும் செலவுக்கும் நடுவில் பெரிய பள்ளம் . இந்த பள்ளத்தை அடைக்க எத்தனை மூட்டை மண்ணள்ளி தட்டுவது உம்மா ! வெளிநாட்டு கதவு யாரிடமும் கையேந்தாத வாழ்க்கையோடு அவர்களின் குடும்பத்திற்கு விசாலமான வாழ்க்கையும் திறந்து காட்டுகிறது. அதை பார்த்துவிட்ட கண்களுக்கு இனி எப்போதும் ஊர் காட்சிகள் வேப்பங்காய் தான் ! அதனால்தான் என்னவோ ஊர் திரும்பினாலும் மீண்டும் பொட்டியை கட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கே சபுராளி திரும்பிவிடுகிறான்.

 

  சபா சரவாக்கில் ‘ தலையை வெட்டுவது’ என்று ஒரு சொலவடை உண்டு. தலையை வெட்டு என்றால் மரணதண்டை அல்ல ! மரணத்திற்கும் பின்னாடி வாழ்வு கொடுப்பது ! அப்படி எத்தனையோ மலேசிய அமரர்களின் ஜாதகத்தை குழிதோண்டி அவர்களின் பெயரால் பாஸ்போர்ட் எடுத்து நம்மவர்கள் உலாத்துவது .அவர் தலையை வெட்டி இவர் தலையை பொறுத்துவது. எத்தனை ‘தலை வெட்டு’ சபுராளிகள்,வாழ்வளித்தார்கள் ! குடும்பத்திற்கு சோறுபோட்டார்கள் !  

 

உன் மகன் கதையை கேட்பதற்கு காதுகளை கூர்மையாக வைத்துக்கொள். நின்றது நிக்க வீட்டை விட்டு காலி பண்ணு என்றதும், கொடுத்த முப்பது நாட்களுக்குள் இன்னொரு வீடு தேடி பார்ப்பது என்பது புளியகொம்பு . வாடகை பத்திரத்தில் முன்பு தொகையிட்ட ஆயிரத்தி எண்ணூறு வெள்ளி மதிப்புள்ள வீடு இப்போது சந்தையில் மூவாயிரம். யாருக்கும் நா ஊறத்தானே செய்யும். வீட்டு முதலாளிக்கும் எச்சில் ஊற ஆரம்பித்தது. வாடகை ஒப்பந்தம் போட்ட இரண்டு மூன்று மாதங்களிலேயே இப்படியொரு விலையேற்றம். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்வது தானே வியாபார தந்திரம். வீட்டை விற்கபோகிறேன் கிளம்பிவிடு என்றுவிட்டார் . அதற்கு தோதுவாக, ‘உரிமையாளருக்கு தேவை என்றால் ஒருமாத அவகாசத்திற்குள் வாடகைதார்ர் வீட்டு காலி செய்து தரவேண்டும்’ என்றதொரு நிபந்தனை பத்திரத்தில் ஒரு ஓரமாய் இருக்கிறது. இந்நாட்களில் நாளொன்றுக்கு வாடகை சந்தை விலையேற்றம் காண்கிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் விலைபோகாத வீடுகள் எல்லாம் இப்போது அலங்கார மணப்பெண்ணாய் காட்சியளிக்கிறது. நகரத்திலிருந்து இருபந்தைந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இருக்கும் வீட்டிற்கு இரண்டாயிரத்தி முந்நூறு வெள்ளி ! இரண்டுவருட கிரயம் ! இருந்தால் இரு ! இல்லாவிட்டால் நகரு !’ என்கிறது வியாபார சந்தை . இவை எல்லாவற்றிற்கும் மறுபெயர் வியாபார தந்திரம்.

 

  ‘இன்று போய் நாளைவா ‘ என்று எத்தனை வாடகை குடியிருப்புகளுக்கு நம் ஜாதகம் போய் திரும்பிவந்தன தெரியுமா . வாங்குகின்ற சம்பளம் மூவாயிரத்தையும்  வீட்டிற்கே வழங்கும் நிலை. ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறிய சிறகடிப்பு வேறு ஒரு இடத்தில் ஒரு மிக பெரிய சூறாவளி யை ஏற்படுத்தும் என்கிறது அறிவியல். ஒரு சிறிய கிருமி என்ன செய்தது தெரியுமா உம்மா. என்னை தங்க வீடின்றி குடும்பத்தோடு நடுத்தெருவில் ‘கண்ணாகுடி தொந்தி செட்டி’ போல் பண்டபாத்திரங்களோடு நிறுத்தியது. கண்ணாங்குடி செட்டிக்காவது மதியம் படுத்துறங்க ஒரு திண்ணை நம் வீட்டில் இருந்தது. நமக்கென்று யார் இருக்கிறார் நாம் நம்பிக்கொண்டிருக்கும் அல்லாஹ்வை தவிர ? கொடுத்த அவகாசம் இம்மாதத்தின் கடைசி இரவு வரை வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனது. நேற்றுஇரவோடு இரவாக பாத்திரங்களை அள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டேன். விடைபெறுதலில் மட்டும் சிறிய கண்ணீர் கசிவு . சிறியவன் எனது சட்டை காலரை பிடித்துக்கொண்டு போகமாட்டேன் என்றான். அவனது உம்மாவிடம் அடம்பிடித்த கணம் மட்டும் , பாழாய்போன மூவாயிரத்தை முழுதாய் கொடுத்துவிட்டு வீட்டை எடுத்து பசியோடிருந்திருக்கலாம் என தோன்றியது. அது உணர்ச்சிவசப்பட்ட அக்கணம் மட்டுமே. மனிதர்கள் உணர்வயப்படுதலின் குமிழ்கள் ! ஊதி பெருகி உடையும் கணம் உணர்ச்சிவசப்படுதலில் இருந்தே அந்நியப்பட்டிருப்போம். நான் இப்போது அதிலிருந்து அந்நியப்பட்டுவிட்டேன்.  

 

   வெளிநாட்டிற்கு பறக்க தயாராகும் விமானங்கள், அமர்ந்து ஒளிரும் இரவு விமான ஓடுதளங்களில் – ஆளில்லா அந்த பொட்டல் வெளியில் ஒரு பலூன் காற்றுதக்கவாறு அங்குமிங்குமாக பறந்துக்கொண்டிருக்கும் வேளையில் ,

‘வெளிநாட்டு சபுர் என்னோடு முடிவுக்கொள்ளட்டும் ! பிள்ளைகளாவது ..’  என்று கண்கள் பனிக்கும் பிரார்த்தனைகளைப்போல் ஒரு வலுவான பிரார்த்தனையைப் போல இவ்வுலகத்தில் வேறு ஏதும் கனதியானது உண்டா?  பெத்தாம்மா கூறிய நலவுகளை சிரமங்களில் தேடியலைகிறேன் ! தூயர் ஹிள்றுவின் கடப்பாரைக்காக காத்திருக்கிறேன். அவள் கூறுவதுபோல் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனுக்குள்ளும் இருக்கும் நாத்திகனை சமாளிப்பதே பெரிய வேலையாக இருக்கிறதே உம்மா.

 

   விமான நிலையத்திலிருந்து திரும்பிப்பார்க்காமல் எஞ்சியிருந்த மூட்டைகளோடு திரும்பிவந்துவிட்டேன்.  நான் அமர்ந்திருக்கும் பூங்காவிற்கு எதிர்திசையில் இருக்கும் கடற்கரையில் மணல்வீடுகள் கட்டிவிளையாடும் சிறுவர்களுக்கு அலைமேற்பரப்பில் ஏதோ சிறிய வெள்ளி கோப்பைகள்,  படகுகள் போல் காட்சியளிப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அலைகள் அதனை தூக்கியெறிவதும், அது குதித்து அங்குமிங்கும் ஆடுவதுமாய் அவர்களுக்கு அவையாவும் என்னவென ஆர்வமூட்டுகிறது. உதிரியாக விளையாடியவர்கள் ஒருசேர நின்று பார்க்கிறார்கள்.

 

   ஒருகரையில் வீசியெறிந்த பாத்திரங்கள் எல்லாம் மறுகரையை  வந்தடைய இன்னும் அவகாசம் இருக்கிறது.

அவையாவும் ‘முத்துப்பேட்டையார் வீடு’  பெயர் பொறித்த பாத்திரங்கள் உம்மா. இக்கடிதத்தையும் இறுதியாக வீசிவிடுகிறேன். அபயம் தேடியலையும் போது மட்டும் ஏன் உம்மா ? என் தலைக்கு மேலே இவ்வளவு விருட்சமாய் இலந்த மரத்தின் நிழல் வளர்ந்து கொண்டிருக்கிறது.

 

**********

 

மஃரிபு – சூரியமறைவுக்கு பிறகான தொழுகை

கலிமா விரலால் – ஆட்காட்டி விரல்

மெளலாய் – இறைவன்

முஃமின்கள் – இறைநம்பிக்கையாளர்

தவக்குல் – பொறுப்பு சாட்டல்

சபுர் – பயணம்

ஊதா அட்டை – பாஸ்போர்ட்

***

-முகம்மது றியாஸ்

Please follow and like us:

1 thought on “ஏழாவது வானத்தில் வீடு – முகம்மது றியாஸ்

 1. என்ன சொல்ல ரியாஸ்…?
  அருமை, அழகு, அபாரம் இப்டிலாம் சொல்றதுக்கு இந்தக் கதைல எதுவுமே இல்லை
  இன்னும் சொல்லப்போனா, இதுல கதைன்னு ஒன்னுமே என் கண்ல படலை..
  ரத்தமும் சதையும் எலும்பும் நரம்பும்தான் துடிக்குது…
  “நல்லாரு”ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..
  அதுக்குமேல…. மறுபடியும் முதல்ல இருந்து படிச்சிக்கிங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *