‘ எல்லாத்தையும் சரியா கணிக்கக்கூடிய தியரி –ரிசர்ச்சர்- ஒரு சைஃபை ஜான்ரா‘ இப்படியான ஒன் லைன் ஐடியாக்கள் தோன்றி பல மாதங்கள் ஆகிற்று. எப்போது முழு நீளத் திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கினேனோ அன்று முதல் காட்சிகளின் ஊடாகவே அனைத்தையும் அனுகிக்கொண்டிருந்த மனமும் மூளையும் என்னை அதிலிருந்து விடுவித்ததற்கான வெளிப்பாடாகவே இதை பார்க்கிறேன் . தற்போது அதன் முதல் வரைவு முடிந்திருந்தது . பத்திரிகையாளராக பணியாற்றி வரும் அண்ணன் கோகுலை கூடுதல் திரைக்கதைக்கு பயன்படும் சில தகவல்களை பற்றி விசாரிப்பதற்கு கடற்கரையில் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது .
மணி எட்டு. எப்போதும் போல் மெரினா மனிதர்களை தன்னுள் புதைத்துக் கொண்டு இருக்க, நங்கூரத்தின் உதவியால் கடலில் மிதந்துக்கொண்டே கரையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஒரு கப்பல் , மனிதர்கள் அவரவர்களுக்கு தகுந்தாற் போல கடல் கரையை பயன்படுத்தி கொண்டிருந்தனர். திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற துடிப்போடு இதே கடற்கரையில் நண்பர்களோடு பேசித் திரிந்த பேச்சுக்களை கடல் காற்று வீசிச் செல்வதை ஏந்தாமல் எப்படி இருக்க முடியும் ?. நானும் கடலை நோக்கி நடந்து கரையின் விளிம்பில் அமர்ந்தேன். அண்ணன் வர இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஆகலாம் என்றார்.அப்போது தீர்க்கமான குரலில் ” ஜோசியம் சாமி… ஜோசியம் சாமி ” ..நான் கடலை பார்த்துக் கொண்டிருப்பதை அவள் வெகு நேரம் கவனித்தவள் போல, ” கடல் அளவு லட்சியம் கண்ணுல தெரியுது, கண்டிப்பா கைக்கு வந்து சேந்திரும். கட்டம் கூடிவருது.. கை ஜோசியம்.. கண்ணா ஜோசியம்.. ” என்றாள்.
கொஞ்சம் திரும்பி பார்த்தேன், அதே முக பாவனை. போன முறை ஆடிஷனுக்கு வந்த அதே முகம். அவளை அடையாளம் கண்டு கொண்டேன். முப்பது வயது இருக்கலாம்.அவள் கட்டி இருந்த புடவை அவளை இன்னும் அழகாக காட்டியது.அவளைத் தெரியும் என்பதை முகத்தில் காட்டி கொள்ளாதது போல.. எவ்வளவு என்றேன்…
” முப்பது ரூபா…… ”
சரி சொல்லுங்க என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியுடன் என் அருகில் உட்கார்ந்தாள்.. கைகளை நீட்டுங்கள் என்று என் கையை அவளே எடுத்து கொண்டாள். கொஞ்ச நேரம் பார்த்தவள், ‘ உங்க ஆச கஷ்டத்த நோக்கி நகருது.. ஏன்னா அது அவ்ளோ பெருசு.. கஷ்டம் தொரத்துது.. எங்குட்டு திரும்பியும் ஒன்னும் ஒட்டல .எல்லாமா சேந்து உங்கள இந்த மண்ணுல தள்ளிப் புடுச்சு அடுத்தவன் மிதிக்கணுமுனு ‘ என்று சொன்னாள். பின் அதற்கு பரிகாரம் இருக்கிறது என்று எங்கோ ஒரு கோவிலை சொல்லி விளக்கு போடவும் சொன்னாள்…
“நீங்க இப்படி பொதுவா சொல்லக் கூடாது… தெளிவா சொல்லுங்க “ என்றேன் .
“அததான் சார் சொல்லிட்டு இருக்கேன்…. உங்களுக்கு வேண்டியது கெடைக்க கொஞ்ச உழைக்கணும்…. ”
“கொஞ்சம் ஒழைச்சா போதுமா…?”.
அவள் முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லை….
“தெளிவா சொல்லுங்க….நான் எந்த தொழில்ல இருக்கேன்… ”
“சார் நீங்க கட்டட தொழில். ”
“இல்ல…..”
“கட்டட தொழில் இல்லையா…. ”
“இல்ல….. ”
” கட்டட தொழில்ல இருந்திருந்தா இந்நேரம் உச்சிய புடுச்சிறுப்பீங்க..அது இல்லேனதுனால தான் இப்போ இப்படி இருக்கீங்க “ என்றாள்.
“நீங்க மழுப்பாதீங்க ..தெளிவா சொல்லுங்க.. … ”
மறுபடி மறுபடியும் பொதுபுத்தியாகவே தான் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளை சீண்ட அதற்கு மேல் மனம் இல்லை… கொஞ்ச நேரம் பேசி கொண்டிருக்கையில் கோகுல் அண்ணனிடம் இருந்து மெசேஜ் வந்தது’ நாளை சந்திக்கலாம்’ என்று.
அவளை பார்த்தேன் அவளுக்கு இந்த வேஷம் சரியாக இருந்தது.நான் முப்பது ரூபாய் எடுத்து நீட்டினேன் அவள் அதை வாங்கும் போது ..
” அடுத்து எந்த ஆடிஷனுக்கும் போகல போல ” என்றேன் அவளிடம் . கொஞ்சம் திகைத்தவளாய் ” சார் நீங்க ” என்று முன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு கொஞ்சம் பின் நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். மறுபடியும் யோசித்தது போல
” சார் நீங்க…”
“நானும் ஜோசியம் பார்ப்பவன்தான் ” என்றேன் .
“சார் விளையாடாதீங்க… ”
“நானும் ஜோசியம் பார்ப்பவன் தான்… ”
……
” ஆனா கை ஜோசியம் இல்ல… முக ஜோசியம்…” என்ற எனக்கு என் மூளைக்குள் பதுங்கியிருந்த அவள் பெயரும் ஞாபகம் வந்தது… ” மாலா தான நீங்க…. ”
அவள் ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.அவள் முகத்தை பார்த்தால் என்னை ஜோசியம் பார்ப்பவன் போல நம்பி விட்ட பதட்டம் தெரிந்தது , சிரித்துக் கொண்டேன் .
“உனக்கு ஜோசியம் தெரியாதுல.”
“பொழப்ப கெடுத்துறாதீங்க சார்… எனக்கு தெரியும் ” என்றாள்…
“பொய் சொல்லாத…. ”
” உண்மையா தெரியும் ” என்றாள்…
” அப்படினா நான் பொய் சொல்றேன்னா…. ”
…..
” நீ மாலா தான ”
” ஆமா சார்.. ”
” நீ மடிப்பாக்கம் தான ”
“ஆமா சார்…. ”
“ஆறாம் கட்டத்துல சூரியன் என்ன சொல்லிருக்காருனு சொல்லு ” என்று சும்மா அடுச்சு விட்டேன்…
அவள் பேந்த பேந்த முழித்து விட்டு… பின் அவமானத்துடன் தலையை தொங்கப் போட்டு கொண்டாள்…. அவள் அழுவது போல தெரிய
” உங்களால தான் எங்களுக்கு அவமானம் “என்றதும் அழுதே விட்டாள். அதே அழுகை டைரக்டர் சார் திட்டிய போது வெளிப்பட்ட அதே அழுகை தான் ..
” அழுகாதீங்க மாலா.. இப்படித்தான் அன்னைக்கும் அழுது ஆடிஷன்ல வெளிய அனுப்புச்சாங்க “என்றதும் தலையை நிமிர்த்தினாள் சிறு மூக்கு உறிஞ்சலுடன்…
” என்ன பாத்தா ஜோசியம் பாக்குறவன் மாதிரியா தெரியுது … நான் அசிஷ்டன்ட் டைரக்டர் மா ” என்றேன். அவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.
” அதுகப்பறோம் எங்க ஆளையே காணோம் ஆடிஷன்ல ”
“எங்க சார்.. அதுவே அசிங்கமா போச்சு…”
“அப்படி பாத்தா எப்படி….” என்றதற்கு அவள் அதுகப்புறோம் எதுவும் நடக்காது என்று முடிவெடுத்ததாக சொன்னாள்….
” இது என்ன ஜோசியம்லா “…
சிரித்து கொண்டாள்….
” எதுக்கு…. ”
” ஏதோ வேல அவ்ளோ தான் சார்… ”
“ஜோசியம் பாப்பியா… ”
மெல்லிய சிரிப்புடன் ” எப்போன்னு ஞாபகம் இல்ல சார் சரியா ..ஒரு ஜோடி கடல் கரையில அழுதுட்டு இருந்தத பார்த்தேன் , நானா போய் பேசி அவங்களுக்கு என்ன பிரச்சனைனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். எதுக்கு அப்படி பண்னேன்லா தெர்ல சார் . அவங்க என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க..கவலை படாதீங்க கண்டிப்பா கொழந்த பாக்கியம் அம்மாக்கு இருக்கு என்றேன். அங்கிருந்து ஒரு நம்பிக்கையோடு அவங்க கெளம்புனாங்க. ராத்திரி முழுக்க அவங்கள பத்தியே தான் யோசிச்சுட்டு இருந்தேன். அப்பறோம் கொஞ்ச நாள் கழுச்சு அவங்க என்ன பாக்க வந்துருந்தாங்க.. யாருனே தெரியாத என்ன தேடி கண்டுபிடுச்சு என்கிட்ட வந்து என் மனைவி கருத்தரித்தாச்சுனு சந்தோசத்தோடு சொல்லி சாரியும் கொடுத்துட்டு போனாங்க சார், அது இந்த சாரி தான் சார் ” என்று அவள் அணிந்திருந்த சாரியை காட்டினாள் ..அப்படியா என்று கேட்ட என்னிடம்
“இது ஜோசியமானு தெர்ல.. ஆனா நல்ல வார்த்த சார் ” என்றாள்
” கண்டிப்பா…. ”
அடுத்து ஏதோ சான்ஸ்னா சொல்லுங்க சார் என்று அவள் நம்பரை கொடுத்தாள்.
“சாரி.. அழகா இருக்கு என்றேன்… ”
“கட்டிருக்கவங்கள பொறுத்து சார்” என்று சிரித்து கொண்டே “எப்படி சார் இப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க… ”
“எங்க டைரக்டர் அதுவரைக்கும் அவ்வளவா யாரையும் திட்ட மாட்டாரு உங்கள தான் ரொம்ப திட்டிட்டாரு அன்னைக்கு ” என்றேன்.
அதற்கு அவள் சாரியை சரி செய்து கொண்டே “அன்னைக்கு என் கட்டம் அப்படி இருந்திருக்கும் போல சார் ” என்று சிரித்து கொண்டாள்..

******

-லட்சுமிஹர்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *