பசு மரங்கள் போர்த்திய அடர்வனம். தாவரப்பச்சையில்
கூடுதல் மினுமினுப்பு. பெய்திருந்த மழையில் ஈரமுத்துக்களை நுனியில்
சுமந்து சிலுசிலுத்தன இலைகள். மழையின் புணர்ச்சியில் மண்ணில் ஒருவித வாசம்.அதோடு விதவிதமான செடி,கொடிகளின் வாசமும் சேர்ந்துகொள்ள சண்முகம்
மூச்சை உள்ளிழுத்து ஆழமாக சுவாசித்தான். நீல வானத்தில் எதையாவது வரைந்தே தீருவேன் என்பதுபோல் தூரிகை கணக்காய் சில மரங்கள் தலை சிலுப்பி வளர்ந்து நின்றிருந்தன.
நாசித்துவாரங்கள் வழியே உள்நுழைந்த குளிர்காற்று நுரையீரல் பிரதேசத்தை
அடைந்து சிலிர்ப்பூட்டியது. இந்த காற்று அவன் சுவாசித்ததில்லை. அவன் கண்கள் சொருக சுவாசித்து நடந்தான். தரையில் ஓடியிருந்த செடி,
கொடிகளின் இலைகள் மெத்மெத்தென்று மிதிபட்டன.
” டேய் சம்முவம், எந்திரிடா……எம்மா நேரம் தூங்குறான் பாரு….”
காத்தாயி காதுக்கருகில் இரைய, சண்முகம் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். காலடியில் ஆட்டுக்குட்டி அமர்ந்து அசைப்போட்டுக் கொண்டிருந்தது.
” ச்சே…..இதான் அம்புட்டு மெத்து, மெத்துன்னு இருந்துச்சா……நான் என்னமோ நெனச்சிட்டேன்.”
சொல்லிவிட்டு தாடையை சொறிந்தவனுக்குக் கண்ட கனவு கண்ணுக்குள் நின்றது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்தக்கனவு வந்து போகிறது.
காடு, விதவிதமான பூக்கள், அடர்த்தியாய், அலசலாய், குட்டையாய், நெட்டையாய் மரங்கள். குறுக்கும், நெடுக்குமாக, ஊடாக, படர்ந்து கிடக்கும் கொடிகள் பார்க்க, புழங்க பரவசம் தந்தன. அது ஏன் அந்தக்கனவு அடிக்கடி வருகிறது என்று சண்முகத்துக்குப். புரியவில்லை
” எலேய், நின்னுக்கிட்டே கனவு காணுறான் பாரு. ஒனக்கு என்னாச்சிடா
இன்னிக்கி……?”
ராமைய்யா அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு கையில் டீத்தம்பளரோடு நகர்ந்து
போனார். சண்முகம் கொல்லைப்புறம் வந்தான்.அலுமினிய அன்னக்கூடையில் காத்தாயி நிறைத்து வைத்திருந்த கலங்கலான தண்ணீரைமொண்டு முகம் கழுவினான். முகம் கொழகொழத்தது.
” பாவிப்பயலே, அம்புட்டு தண்ணியையும் வாரி எறைச்சிப்புடாத…..நாலு
தெருவு தள்ளி தண்ணி மொண்டாந்துருக்கேன். ஒரு கொவளைக்கு மேல, மொள்ளக்கூடாது சொல்லிப்புட்டேன்.”
காத்தாயி குடிசைக்குள்ளிருந்து பேய் போல் அலறினாள். சண்முகம் பதில்
சொல்லாமல் பல் தேய்த்தான். பார்வை, சுருங்கிக் கிடந்த கொல்லையில் விழுந்தது.
தண்ணீர் சுருங்க ஆரம்பித்ததிலிருந்து கொல்லையும் சுருங்கிவிட்டது போல அவனுக்குத் தோன்றியது. படர்ந்து கிடக்கும் பச்சை, கொல்லையை விஸ்தரித்து காட்டும். காத்தாயி அவரை, வெண்டை என்று எதையாவது விதைத்திருப்பாள்.
பச்சைப்பசேல் இலைகள் முளைவிட்டு கொல்லையெங்கும்
பசுமையாயிருக்கும். வளர்ந்து கிடக்கும் செடிகளும், கொடிகளும்,
வேலியைத்தாண்டி கொல்லைப் பரவியிருப்பது போல தோற்றப்பிழையை
உண்டாக்கும். இப்போது எல்லாம் போய் கொல்லை வறட்டு நிலமாகக்
கிடக்கிறது.
“சம்முவம், டீ ஆறிப்போவுது. உள்ளாற வாடா…..”
காத்தாயி குரல் கொடுத்தாள். சண்முகம் உள்ளே வந்து தம்ளரில் ஏடு படர்ந்து கிடந்த டீயை எடுத்து மடமடவென்று வாயில் சரித்துக்கொண்டான்.
காத்தாயி கத்தரிக்காயைப் புடவை முந்தானையில் அழுந்தத் துடைத்துவிட்டு
நறுக்கி, வாணலியில் கடுகு, வெங்காயம் தாளித்து அதில் போட்டாள். ரெண்டு உப்புக்கல், மிளகாய்த்தூள், ஒரு கரண்டி எண்ணெய் விட்டு வதக்கினாள்.
இன்னொரு அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருந்தது. மூடியிருந்த தட்டை மீறி கொதித்தண்ணீர் நுரைத்து, நுரைத்து வழிந்தது. காத்தாயி கரண்டியால்
சோற்றைக் கிளறிவிட்டு முகத்தில் வழிந்த வியர்வையை முந்தானையில்
துடைத்துக்கொண்டாள்.
சோறாக்கிவிட்டு இன்னொரு நடை தண்ணீர் எடுக்கப் போகவேண்டும்.
மூன்றுபேர் புழங்கும் வீட்டில் ஒரு நாளைக்குப் பத்து குடங்கள் தண்ணீர்
செலவாகிறது. அதில் நான்கு ஆடுகளுக்குக் காட்டும் தண்ணீரும் அடக்கம். எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அதைக் குறைக்க முடியவில்லை. ஆடுகள், ஏழை,
பாழைகளுக்கு தற்காலிக சொத்து.
ஆத்திர, அவசரத்துக்குப் பிடித்து விற்றுக்கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் கழுத்து வெட்டப்படும் ஆடுகளின்மேல் பாசம் வைக்கும் பத்தாம்பசலிகளாக அந்த ஏழைகள் இருந்து தொலைத்ததுதான் வேடிக்கை. சண்முகம் தோளில் துண்டைத் துப்பட்டாபோல் போட்டுக்கொண்டு வேலைக்குக் கிளம்பிவிட்டான். அந்த கருநீல அரை டவுசர் எடுத்தது வசதியாகப்போய்விட்டது. பொழுதுக்கும், பாட்டுக்கும் அதையே
அணிந்துகொண்டு கிடப்பது அவ்வளவு இலகுவாயிருந்தது அவனுக்கு. குனிந்து, நிமிர்ந்து வேலைப் பார்க்கவும், தாறுமாறாகக் கிடந்து தூங்கவும் அரை டவுசர்
அவ்வளவு பாந்தம்.
“சம்முவம், கொளம்புல காய் ஏதும் போடல. அங்க போயி திராவி
பாத்துக்கிட்டு இருக்காத….”
காத்தாயி சொல்லிவிட்டு தூக்கில் சோற்றை நிரப்பி குழம்பூற்றிய
கிண்ணத்தைச் சோற்றின் நடுவில் வைத்து அழுத்தினாள். விளிம்பு வெடித்த டப்பாவில் கத்திரிக்காய் பிரட்டலை அள்ளி வைத்து மூடி தூக்கினருகில் வைத்தாள்.
கரண்டியை எடுத்துவிட்டு சோற்றுப்பானையை நன்றாக மூடினாள்.
அடுப்பிலிருந்து விறகை இழுத்து தண்ணீர் தெளித்து அணைத்தாள். அவிழ்ந்து விழுந்த கொண்டையை அள்ளி முடிந்து இரு கைகளையும் ஊன்றி எழுந்தபோது வலது புற இடுப்பு விண்விண்ணென்று தெறித்து வலித்தது. கடந்த ஒரு மாதமாக தண்ணீருக்கான போராட்டம் தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது. தத்தம் வீட்டு அடி பம்ப்பிலோ, கிணற்றிலோ தண்ணீர் பிடித்து புழங்கிக் கொண்டிருந்தவர்கள் நிலத்தடிநீர் வற்றிப்போக பஞ்சாயத்து
போர்டு குடிநீர்க் குழாய் இணைப்புப் பெற்று சுகமாகத்தான் வாழ்ந்தனர்.
தெருவில் பொதுக்குழாய் உண்டு. வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் அதில் நீர் பிடித்து உபயோகித்துக்கொண்டனர். ஒரு மாதத்துக்கு முன் பஞ்சாயத்து
போர்டு ஆழ்குழாய் கிணறு பழுதாகிப்போனது. புதிய கிணறு அமைக்க கலெக்டரிடம் மனு கொடுத்தாயிற்று. தீர்வு வந்தபாடில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் குடங்கள்
பெருகியிருந்தன. முன்பு ஊர் இப்படியில்லை. இரண்டு குளங்களிலும் பசுங்க மணத்தோடு தண்ணீர் சலசலத்துக்கொண்டேயிருக்கும்.
கிணறுகளின் சகடைகள் அதிகம் உருண்டதேயில்லை. கிணற்றின் வயிறுவரை தண்ணீர் கிடக்கும். காலை, மாலை இருவேலைக்குளியல் அனேகமாகஎல்லார் வீடுகளிலும் உண்டு. அது தவிர, கிரகணம், துக்கம், தீட்டு என்று மூன்றாவது குளியலும் இங்கு வெகுசாதாரணமாக இருந்தது. எல்லாம் சுருங்கி இப்போது காக்காய்
குளியலாகிவிட்டது.
வசதி படைத்த நாலைந்து வீடுகளில் இருநூறு, இருநூற்றைம்பது அடிக்குக்
கீழே போர் இறக்கி தண்ணீர்த்தேவையை தீர்த்துக்கொண்டனர். அவர்களிடம்
ஒரு பானைத் தண்ணீர் கையேந்த முடியாது. ஏந்தினாலும் கிடைக்காது.
பக்கத்து டவுனில் பெரிய கட்டிடம் கட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கு
சண்முகம் சித்தாள் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். மினி பஸ் வரும். அதில் ஏறிப்போனால் கட்டிட வாசலடியில் இறக்கி விடுவார்கள்.
கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அந்த இடம் மரங்கள் அடர்ந்து கிடந்தது.
சண்முகம் சினிமா பார்க்க டவுனுக்குப் போகும்போது கவனித்திருக்கிறான்.
இப்போது எல்லாம் கழிக்கப்பட்டு இருந்ததற்கான தடயமின்றி கட்டிடம்
மேலெழும்பிக்கொண்டிருக்கிறது.
காத்தாயி இரண்டு குடங்களோடு கிளம்பிவிட்டாள். பத்து மணிக்கே வெயில் உச்சத்திலிருந்தது. பத்தடி நடந்ததும் வனஜா சேர்ந்து கொண்டாள்.
” ராசமாணிக்கத்துக்கு ராத்திரிலேருந்து வயத்தால போவுது. கொல்லக்கடசிக்கு
போறதுக்குள்ளாற நெடுவ இருந்து வச்சிடுறான். அத தண்ணி ஊத்தி
அலசுறதும், காலு களுவுறதுமா அம்புட்டு தண்ணியும் தீந்து போச்சி….”
அவள் அங்கலாய்த்தபடியே நடந்தாள். எல்லோருக்கும் காசு பிரச்சனையாக
இருந்ததுபோய் இப்போது தண்ணீர் கடும் பிரச்சனையாக மாறிப்போனது
ஏனென்று காத்தாயிக்கு விளங்கவில்லை. ஊரில் பொட்டு மழையில்லை. வரவேண்டிய இடத்திலிருந்து தண்ணீர் வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. கொடுக்க மறுப்பதாக எல்லோரும்
பேசிக்கொண்டார்கள். அந்த அரசியல் இழவெல்லாம் அவளுக்கொன்றும்
புரியாது. அவள் சுடுமணலில் வேகவேகமாக நடந்தாள். மணல் கொதித்துக்கிடந்தது.
கால் வைக்க, வைக்க நெகிழ்ந்து கொடுத்து, அடித்த காற்றுக்கு கலைந்து மூடிக்கொண்டது.
ஆற்றின் நடுவில் குட்டை போல் குறுகிய பரப்புக்குள் நீர் கிடந்தது. அதுதான் அவர்களின் நீராதாரம். ஒவ்வொரு முறையும் தண்ணீர் எடுக்கும்போது நீர் தளும்பி அலையும். மேலும், கீழுமான அலைச்சல், காத்தாயி மனதைப்போல்.
ஒரு குடம் நீர் நிரப்பும்போது, ஒரு குடம் குறைகிறதே என்கிற அலைச்சல். மொத்தமாகத் தீர்ந்துவிட்டால் அடுத்து எங்கே செல்வதென்ற பதைப்பு.
தண்ணீர் புதுப்புளி கரைத்த நிறத்திலிருந்தது. அதிலும் சில மீன் குஞ்சுகள் நீந்திக்கொண்டிருந்தன.
மீன் பிடிக்கவோ, குளிக்கவோ ஊர்ப்பஞ்சாயத்து தடை விதித்திருந்தது. நீண்ட மலைப்பாம்பு போல ஆறு வளைந்து, நெளிந்து கிடந்தது. நடுவில் குத்திக்கிழித்தது போல அந்த ஓடை. மற்ற இடங்களில் திட்டுத்திட்டாய், குத்துச்செடிகள் கோரைகள் மண்டிக்கிடந்தன.
ஒரு காலத்தில் சுழித்து ஓடிய ஆறு. காத்தாயியின் பெரியப்பா மவன் பத்து வயதில் ஆற்றோடு போய்விட்டான். அணை திறந்து விடப்பட்டதையடுத்து ஆற்றில் நுங்கும், நுரையுமாக நீர் ஓடிற்று. சனம் வேடிக்கைப்பார்த்து வாய்
பிளந்து நின்றது. கூட்டத்தோடு நின்றிருந்த காத்தாயியின் பெரியப்பா மவன் கால் இடறி
கரையிலிருந்து பொத்தென்று ஆற்றுக்குள் விழுந்தான். விழுந்தவனை ஆறு சுழற்றி தள்ளிக்கொண்டுபோய் எங்கோ சொருகிற்று. கடைசிவரை உடல்
கிடைக்கவில்லை.
அதனாலேயே காத்தாயிக்கு ஆற்றைக்கண்டால் பயம். அந்தப்பக்கமாக செல்ல
நேர்ந்தால் வலுக்கட்டாயமாக தலையை தாழ்த்தி பாதையைப் பார்த்தவாறு நடப்பாள். இன்று அனாயாசமாக ஆற்றில் இறங்கி நடந்து நடுவிலிருக்கும் ஓடைக்குச்
செல்லும் தைரியத்தை தண்ணீர் சுவடின்றி காய்ந்து கிடக்கும் மணற்திட்டுகள் அவளுக்குத் தந்திருந்தன. எவ்வளவு நாட்களுக்கு தாங்குமென்று தெரியவில்லை. ஒரு மழையடித்தால் சமாளிக்கலாம் என்று சனங்கள் பேசிக்கொண்டார்கள். கோடைமழை அறிவிப்பின்றி வரும். வெளுத்துக்கட்டிவிட்டுப் போகும். அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
” இந்தா, அந்தான்னு போக்கு காட்டுதே. ஒரு அடி, அடிச்சிப் பேஞ்சா பூமி
குளுந்துடும். நெலத்தடி நீரும் ஏறும். ஆனாப் பயபுள்ள வரமாட்டேங்கிதே. ”
ராமய்யா குடிசை வாசலில் அமர்ந்து எதிர்வீட்டு முனியப்பனிடம்
விசனப்பட்டுக் கொண்டிருந்தார்.
” அட, நாடு முளுக்க இதே நெலமதான் சித்தப்பா. இப்புடியேப்போனா நம்ம
நாட்டுக்காரனுங்க நாக்கு வறண்டு செத்தானுங்கன்னு வெளிநாட்டுக்காரனுங்க
பேசிக்குவானுங்க….என்னமோ போ….மனசே சரியில்ல.”
அவனின் குரலில் தெறித்த வேதனை ராமைய்யாவையும் தொற்றிக்கொண்டது. சண்முகம் அவர்கள் பேச்சில் கவனம் சிதறாது செல்போனில் நோண்டிக்
கொண்டிருக்க, காத்தாயிக்கு எரிச்சலாயிருந்தது.
” அது என்னாடா எப்பப் பாத்தாலும் போனையே கொடஞ்சிக்கிட்டிருக்க. அதுல
அப்புடி என்னாதான் இருக்கு…..”
“பொளுது போவல. சும்மா பாத்துக்கிட்டிருக்கேன். காலையில
ஒம்போதுலேருந்து சாங்காலம் வரைக்கிம் கல்லு சொமந்து, சொமந்து ஓடம்பே நொந்துப்போவுது. அத மறக்க செல்போனப் பாக்குறேன்.”
சண்முகம் சொல்ல, காத்தாயி வேதனையோடு அவனைப் பார்த்தாள்.
சண்முகம் ஆறாவதுக்குமேல் பள்ளிக்கூடம் போகவில்லை.
” ஒம்புள்ள மண்டையில களிமண்ணுதான் இருக்கு. ஒரு வார்த்த எழுதத்
தெரியல. இந்தப்பயல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி ஏம்மா எங்க உசிர
எடுக்குற…?”
வாத்தியார் கூற, காத்தாயிக்கு அவமானமாகிவிட்டது. வீட்டுக்கு வந்து சண்முகத்தை மொத்து, மொத்தென்று மொத்திவிட்டாள். அத்தோடு படிப்புக்கு
முற்றுப்புள்ளி விழுந்தது.
சண்முகம் காசு சேர்த்து நாலாயிரம் ரூபாய்க்கு செல்போன்
வாங்கிக்கொண்டான்.
“இம்மா காசு போட்டு போன வாங்கி என்னாத்த புடுங்கப்போற….?” என்று
காத்தாயி குதியோ, குதியென்று குதித்தாள். ராமய்யா அவளை
சமாதானப்படுத்தினார்.
” தோளுக்கு மேல வளந்துட்டான். எதுத்து ஒரு கேள்வி கேட்டான்னா மனசு
சுண்டிப்போயிரும். அதனால பேசாம அந்தாண்டப் போ….”
” அதுசரி, புள்ளைய ஒருவார்த்த சொல்லிறக்கூடாது. அப்பனுக்கு
பொத்துக்கிட்டு வந்துரும்” என்ற காத்தாயி, சண்முகம் போனை கண்ட
இடத்தில் வைத்தபோது எடுத்துப் புடவை முந்தானையில் துடைத்து
பத்திரப்படுத்தினாள். நாலாயிரம் ரூபாயாயிற்றே.
“செல்போனுல கண்ட, கண்ட படமெல்லாம் பாக்கலாமுன்னு சொல்லுறாங்க. இருட்டுல நடக்குறதையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுவாங்களாம்.
எதுக்கும் ஒம்புள்ள மேல ஒரு கண்ணு வச்சிக்க.”
மேலத்தெரு கஸ்தூரி சொன்னாள். காத்தாயிக்கு ஈரக்குலை நடுங்கிவிட்டது.
சண்முகம் போனைக் கையிலெடுத்தால் செய்யும் வேலையை விட்டுவிட்டு
அவனைக் கண்காணிக்கத் தொடங்கினாள்.
ஒருநாள் தண்ணீர் எடுத்து வந்தவள் அவன் போனில் எதையோ ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருக்க, குடத்தை அப்படியே போட்டுவிட்டு வேகமாக அருகில் வந்து பார்த்தாள்.
பிளாஸ்டிக் குடம் விழுந்த வேகத்தில் உடைந்து தண்ணீர் முழுவதும்
தரையில் வழிந்து வீணாயிற்று. சண்முகமோ எதையும் அறியாமல்ஹெ மாட்டித் திரையில் ஓடிய இளையராஜா பாடலை ரசித்துக்கொண்டிருந்தான்.
” ஐயோ, மாரியாத்தா…..ஒரு கொடம் தண்ணி போச்சே. சொமக்க முடியாம
சொமந்துக்கிட்டு வந்து இப்புடி அநியாயமா வாரிக்குடுத்துட்டேனே.”
காத்தாயி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். பாடல் முடிந்து
எதேச்சையாக பின்புறம் திரும்பிப் பார்த்த சண்முகம், காத்தாயி தேமேயென்று அமர்ந்திருப்பதைக் கண்டு, ஈரமாகிவிட்டிருந்த தரையைப் பார்த்து நிலைமையை யூகித்துக்கொண்டான்.
” கொடத்த ஒடச்சிட்டியா…..அம்புட்டு தண்ணியும் போச்சா…..?”
” எல்லாம் அந்த கருமத்தால வந்தது. ஒருநா அத தூக்கிப்போட்டு ஒடக்கிறனா,
இல்லியான்னு பாரு. ”
காத்தாயிக்கு மூச்சிரைத்தது. சண்முகத்துக்குப் புரியவில்லை. அதற்குமேல் அங்கிருந்தால் வசவு மேல் வசவு விழும் என்பது மட்டும் புரிந்து மெதுவாக நழுவினான்.
” போடா போ……வெளிக்கிப்போனா காலு களுவ தண்ணி கெடையாது. பூவரச
எலையப் பறிச்சி தொடச்சிக்க வேண்டியதுதான்.”
” வெளிநாட்டுல அப்புடித்தாம்மா காயிதத்துல தொடச்சிக்கிறாங்க.”
சண்முகம் திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு ஓடினான்.
வேலையின் கடுமையில் உடம்பு நொந்தபோது சண்முகத்துக்கு அந்தக்கனவு வந்தது. புண்ணை வருடும் மயிலிறகுபோல் அது அவனை வருடிற்று. ஆனால்
தொடர்ந்தாற்போல் வரவில்லை. விட்டுவிட்டு வந்தது. எதிர்பார்த்து கண்களை மூடிக்கிடப்பான். அது அவனுக்குப் போக்குகாட்டிவிடும்.
ஆழ்ந்த உறக்கத்தில் புலன்களின் ஒடுக்கத்தில் திறந்துவிட்ட புதுவெள்ளம் போல அந்தக்கனவு வரும். கனவில் வரும் காட்டில் உலாவிடும்போது இனம்புரியாத சுகம் உடலைக்கவ்வும். மாயையான கனவுக்குள் சண்முகம் தன் வாழ்க்கை சுயத்தைத்தொலைத்து தொலைந்துவிடத்துடித்தான்.
அன்றாட வாழ்க்கையின் கடுமையை செல்போனில் பாதியும், கனவில்
மீதியுமாய் கழிக்க அவனுக்கு விருப்பமாயிருந்தது.
தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் பாதிப்பைத் தன்னில் பதித்துக்கொள்ள அவனுக்கு அச்சமாயிருந்தது.
அன்று அந்தக்கனவு வந்தது. பசுமரங்கள் போர்த்திய அடர்வனம்.
தாவரப்பச்சையில் கூடுதல் மினுமினுப்பு. சண்முகம் தரையில் பரவிக்கிடந்த கொடிகளின் இலைகள் மிதிபட நடந்தான். தூரத்தில் அருவியின் பேரிரைச்சல். பலவித ஒலியெழுப்பும் பட்சிகளின்
குரலொலி. அவன் உடல் முறுக்கேறிக்கொண்டது. சாரல் மழையின் பன்னீர்த்தெளிப்புகள் உடலை நனைக்க காற்று சில்லிட்டு வீசியது.
” தாயே மகமாயி……இந்தக்கொடும எங்க நடக்கும்…..”
கனவின் இடையே மெலிதான ஓலம் போல் அந்தக்குரல் எழும்ப, சண்முகம்
திடுக்கிட்டு விழித்தான்.
” எவனோ அசலூர்க்காரன் வெளிக்கிருந்துபுட்டு தேங்குன குட்டையில கால களுவிட்டுப் போயிட்டானே…..அந்தத் தண்ணியக்கொண்டு இனி எப்புடி
சோறாக்குவேன். ஒரு மடக்குத் தண்ணி உள்ளாரப்போனாலும்
தொண்டைக்குள்ள நிக்கிற பீத்தண்ணி நாத்தமா நாறுமே……”
காத்தாயி இருட்டில் தலைவிரி கோலமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
முற்றும்
எழுத்தாளர் ஐ.கிருத்திகா