00

தூக்கமில்லாத இரவைக் கொன்று போட நினைத்தேன்

இரவிரவாக அதை அடித்தேன்

வசைச் சொற்களால் திட்டினேன்

எதற்கும் அஞ்சாமல்

என்னையே சுற்றிக் கொண்டிருந்தது அது.

எரிச்சல் மேலெழ

அதன் முகத்தில் காறி உமிழ்ந்தேன்

சிரித்தபடி என்னைத் தழுவியது.

விலகி

அதைத்தூர விரட்டினேன்

முடியாதபோது

நானே விலகியோட முயற்சித்தேன்

அதுவோ சலியாமல்

பின்தொடர்ந்தது.

சகிக்க முடியாமல்

விரட்ட

தூரத்தே போய் நின்று குரைக்கிறது

இந்தக் குரைப்பொலியில்

எப்படித்தான் நான் தூங்குவது?

இப்படியே அது

இர விரவாக அலைந்து கொண்டும்

என்னை அலைத்துக் கொண்டுமிருக்கிறது

சட்டென அது

சின்னஞ்சிறிய பூனைக் குட்டியாகி

ஓடிவந்து என் கால்களை அளைந்து கொண்டிருந்தது.

00

தூக்கமில்லாத இரவில்

இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தபோது

நகரத்தின் லட்சம் முகங்களிலும்

ஒருமுகமும் தெரிந்தாக இல்லை

லட்சம் வாசல்களிலும்

ஒன்றேனும் எனக்குரியதாக இல்லை

நூறு வழிகளிலும்

ஒன்றும் நான் செல்வதற்கென்றில்லை

ஆயிரம் மின்விளக்குகள் ஒளிர்ந்தும்

ஒன்றும் எனக்கொளியூட்டவில்லை.

இரவும் நானும் நீண்ட நேரம்

தனித்துத் தடுமாறிக் கொண்டிருந்தோம்.

எங்கு, ஏது, எப்படி, எதுவாக என்ற

கேள்விகளின் முன்னே

திரண்டிருந்த கசப்பின் இருளில்

தொலைந்து

தொலைந்து

தொலைந்து

தொலைந்து

என்னைத் தேடிக் கொண்டிருந்தேன்.

எனக்கொரு இடத்தை

அதற்கொரு வழியை

அங்கேயொரு வரவேற்பை

அதனோடிணைந்திருக்கும் முகங்களையெல்லாம்

எவ்விதம் கண்டடைவதென்று

இந்தத் தொலைதூரப் பயணிக்குப் புரியவில்லை.

நீண்டு கொண்டேயிருந்த தூக்கமில்லாத இரவில்

தொலைந்து கொண்டேயிருந்தேன்.

அப்பொழுதுதான்

ஒரு தேவதூதனாக எங்கிருந்தோ வந்தாய்

அன்பினால் இழைக்கப்பட்ட

ஆயிரம் வழிகளோடு

ஆயிரமாயிரம் முகங்களோடு

ஆயிரம் வாசல்களோடு

அத்தனைக்குமான திறவுகோல்களோடு

அன்றே நகரம் தன்னைத் திறந்தது எனக்காக

ஆமாம், எனக்கும் உனக்குமான நமக்காக.

தூக்கமில்லாத  அந்த இரவில் நாங்கள்

நகரத்தை ஆட்சி செய்யத் தொடங்கினோம்.

00

தூக்கமில்லா இரவைத் தோற்கடிப்பதற்காக

தூக்க மாத்திரையை தந்து புன்னகைக்கும்

மருத்துவரைப் பார்த்துப் புன்னகைக்கிறது

தூக்கமில்லாத இரவு.

தூக்கமில்லாத இரவுக்கும்

தூக்க மாத்திரைக்குமிடையில்

ஒரு போர்

எப்படி நிகழ்கிறது

என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

போருக்கான ஆயுதத்தை

மாத்திரையாகத் தந்து சென்ற மருத்துவரை

எந்த விதியில் சேர்த்துக் கொள்வதென்று

தெரியவில்லை.

இரவோ எதற்கும் அடங்காமல்

கொழுந்து விட்டெரிகிறது.

அனல் மூச்செழுந்து

தகிக்க

எழுந்து உலாவுகிறேன்.

இரவு நீள்கிறது

இரவின் நீளத்துக்கு

நடந்து கொண்டேயிருக்கிறேன்

நடந்து

நடந்து

நடந்து

நடந்து

எவ்வளவுதான் சென்றாலும்

முடியவில்லை இரவு.

கொதிக்கும் இரவை

கையேற்கவும் முடியாமல்

கை விடவும் முடியாமல்

தத்தளிக்கும் மருத்துவரையும்

என்னையும்

ஓரக்கண்ணால் பார்த்துச் சிரிக்கிறது

தூக்கமில்லாத இரவு.

நான் மருத்துவரையும்

தூக்க மாத்திரையையும்

தூக்கமில்லாத இரவையும் பார்த்துப்

புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்.

00

தூக்கமில்லாத இரவொன்றில்தானே

வழியில்

ஒரு அரிய முத்தைக் கண்டெடுத்ததைப்போல

Face Book நட்பின் அழைப்பில்

இணைந்து கொண்டோம்.

பிறகு

நம் நட்பின் குழந்தை

தூக்கமில்லாத இரவுகளிலேயே வளர்ந்தது.

பாடல்களும் பரவசமும்

அன்பின் ஊட்டங்களும்

பகிர்தலும்

கதைகளும் விவாதங்களும்

ஊடலும் கூடலுமாக

தூக்கமில்லாத இரவுகளில்

அதை வளர்த்தெடுத்தோம்.

அந்த முத்தின் ஒளி

அற்புதமாகச் சுடர்ந்து கொண்டிருந்தது.

பருவமடைந்த நட்பை

அல்லது

முதிர்ந்து

ஒளிசுடர்ந்த முத்தை

திடீரெனக் காதலாக வண்ணந்தீட்டி

உருமாற்ற முற்பட்ட போதொரு தயக்கம்

கிரகணமாகி

நம் மீதே இருளடர்த்த

பதற்றத்தின் குழிகளில் வீழ்ந்தாய் நீ

குழப்பத்தின் அலைகடலில் தவித்தேன் நான்

வண்ணமும் பேரழகும்

இனிமையின் தித்திப்பும் கொண்ட காதலை

அதிலே சுளை கொண்ட அன்பின் திரவியத்தை

எந்தக் கைகளில் ஏந்துவது

இதயத்தின்

எந்த மையத்தில் அதை இருத்துவதென்று

புரியவில்லை எனக்கு.

நட்புக்கும் காதலுக்குமிடையில்

அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்

ஊஞ்சலில்

ஏதொரு சொல்லுமற்ற மௌனத்தில்

இருவரும்

இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக

இருக்கிறோம் நெடுநேரமாக

நெடுநேரமோ நீள்கிறது

நெடுங்காலமாக.

தூக்கமில்லாத இரவில்

முத்தாக

மௌனத்தில் ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன

Messenger களின்  Indicators…

எப்போதவை சொல்லாக முளைக்கும்?

அந்தச்சொல்லின் நாதமென்ன?

00

தூக்கமில்லாத இரவுக்கும்

நடந்த கொள்ளைக்கும்  உள்ள தொடர்புகளை

அறிக்கையிடச் சொன்னார் நீதிபதி.

கொள்ளை நடந்த இரவு

தூக்கமற்றிருந்த அனைவரையும்

அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

தூக்கமின்றிய இரவிலிருந்த

அத்தனை பேரும் நீதிமன்றத்திற் கூடியபோது

மூச்சுத்திணறினார் நீதிபதி.

இவ்வளவு ஆட்களும் தூக்கமற்றிருந்தபோது

எப்படிக் கொள்ளை போனது என்று கேட்டார்.

தூக்கமற்ற இரவின் ரோந்துப் பொலிஸாருக்கு

முதல் தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கமற்ற இரவில்

தூக்கமற்றிருந்தோருக்கு

இரண்டாம் தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கமற்ற இரவுக்கு

மூன்றாம் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை

அன்றிரவு தூக்கமற்றிருந்தார் நீதிபதி.

00

 

 

 

 

-கருணாகரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *