ஐந்தாம் திசை
மேலிருந்து கீழ் நோக்கி வந்துகொண்டிருந்தேன்
பின்னர் நான் வந்தது
இடமிருந்து வலமோவென
சந்தேகமெழுந்தது
நிமிர்ந்து பார்த்தேன்
இறங்குவதற்கு படிகள்
எதுவுமங்கில்லை, ஏறுவதற்கும் தான்
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
திசைகளற்ற ஒரு புள்ளியில்
நின்று கொண்டிருந்தேன்
இங்கிருந்து எனது முதலடி
எத்திசையை நோக்கியி்ருக்கும்?
எனக்கான ஐந்தாம் திசைக்காக
காத்திருக்கின்றேன்
நான்
துண்டிக்கப்பட்ட என் கையிலிருந்து
துளிர்த்தெழுந்தது
சின்ன வயதில்
நான் விழுங்கிய புளியங்கொட்டை
என்னுடலென
ஆரத்தழுவியதை நீரூற்றி வளர்க்க
விருட்சமானது
புழு, பூச்சி, பறவைகள், மிருகங்களென
அனைத்தும்
அடைக்கலம் கொண்டன என்னுள்
மிரண்ட அவர்கள்
மீண்டும் வெட்டினர்
என் அடுத்த கையையும்
நான் விழுங்கிய வேம்பங்கொட்டை வீறுகொண்டெழுந்தது
என் வயிற்றுக்குள்
இன்னும் அடைந்து கிடக்கின்றன
பல விதைகள்
விரைவில் நானொரு காடாவேன்.
வாழ்க்கை
கையிலெடுத்து
மிக அருகில் கொண்டு வந்து
உற்றுப் பார்த்தேன்.
மெல்லிய வெடிப்பு மயிர்போல் குறுக்கே
நெளிந்து ஓடியது.
எங்காவது தட்டுப்பட்டால்
இரண்டாகப் பிளக்கக் கூடும்.
ரபர் பாண்ட்டெடுத்து
இறுக்கி சுற்றிப் போட்டு
மேசையில் வைத்தேன்.
இளம் சிவப்பு ரப்பர் பாண்ட் துருத்திக் கொண்டு நின்றது.
கழற்றிப் போட்டேன்.
இரண்டாகப் பிரிவதற்கு முன்னால்
ஒட்டுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தாயிற்று.
எல்லாமுறைகளும் அடையாளத்தோடு
துருத்திக் கொண்டு நின்றன.
எறிவதற்கும் மனமில்லை.
ஒட்டுவதில் அதிகம் துருத்தாத
ஏதோ ஒருமுறையை மனமின்றித்
தெரிவுசெய்து திருப்திப் பட்டுக் கொண்டேன் என் வாழ்க்கையை போல்
-கறுப்பி சுமதி
(கனடா)
Please follow and like us: