கவிஞர் மஜீத் மீளாத் துயிலில் மல்லாக்கப்படுத்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்த போது எனக்கு கவிதைகளைத் தவிர வேறு எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. குனிந்த தலையும், நேரிய பார்வையும் கொண்ட மஜீதின் உடலை அத்தருணத்தில் கவிதைகளுக்காக வேட்கை மட்டுமே சூழ்ந்து கொண்டிருந்தது. அவனது கவிதைகளின் வீரியம் போலவும், அவை உரத்துப் பேசுகின்ற ரணங்கள் போலவும் கிழக்கிலங்கையின் கவிதை வெளியினை யாரும் சீரியஸாக அணுகவில்லை. மஜீத் காத்திரமான கவிஞன் என ஒற்றை வார்த்தையில் சொல்வதை விடவும், அவனது கவிதைகள் பேசிச் சென்ற விடுதலையின் உரத்த குரல் வசீகரமானது. மஜீதின் படைப்புக்கள் விடுதலையினை வேண்டி நிற்கும் சனத்திரளை நோக்கி விடப்படுகின்ற ஓராயிரம் கேள்விகளின் பின்னால் தஞ்சம் புகுந்திருந்ததினை மறுக்கவியலாது. காலத்தினை நோக்கி வெகு சீக்கிரமாகப் பாய்ந்து விடும் பிரதிகளின் வழியே மஜீதின் எழுத்துக்கள் முளைத்திருந்தன. மாமூலான இருப்புக்களைத் தாண்டி வெளிப்படைத் தன்மையில் இயங்குகின்ற பரீட்சார்த்த முறைமைகளை, நிலைமைக்கு ஏற்றவாரு பிரதிகள் உருவாக்கிக் கொண்ட சூழலில் மஜீதின் கவிதைகள் தனியொரு பரப்பில் விசாலமாய் கிடந்தன. மஜீதின் பிரதிகள் காலத்தின் நிழலாகவும், நிகழ்வுகளின் தலையீடாகவும் எம்முன் விரிவடைந்தது. யதார்த்தங்களின் பார்வைக் கோட்டிலிருந்து விடுபட நினைத்து, பிரபஞ்சம் தாண்டிய, அல்லது யதார்த்தங்களை மீறிச் செயற்படுகின்ற பிரதி வெளிக்குள் மஜீதின் சொற்கள் ஓய்வடையாமல் இயங்கிக் கொண்டிருந்தவை. எவ்வாறு இம்முறையினை அணுகி, இலக்கிய தளத்தினை புரிந்து கொள்வது எனும் குழப்பத்தில் இவ்வெளியினை விட்டு அகன்றோடியவர்கள்தான் அதிகம். எவ்வளவு புயல் வீசிய போதும், சுழியினில் அகப்படாமல், தங்களை பாதுகாத்துக் கொண்டு பிரதிகளின் ஊடாக எம்முன் உரையாடத் தொடங்கிய தளத்தினை, எமது சூழலில் ஒரு சிலரே முன் வைத்தனர். அவர்களுள் கவிஞர் மஜீதின் கவிதை மனம் பிரதானமானது.

ஏதோ ஒரு வகையில் பிறப்பொடுத்துக் கொண்டிருக்கும் புதுமைகளின் வாசனை, மஜீதின் எழுத்துக்களில் இருந்தே தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகியது. எல்லாப் பிரதிகளும் ஒரு போக்கினைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த வேளையில், மஜீதின் பிரதி வடிவங்கள் மொழியியல் மீதான கட்டுடைப்பினைச் செய்து கொண்டிருந்தன. இயற்கைத் தனங்களில் வெளிப்பட்டு நிற்கின்ற மரணம், வாழ்வு, கனவு, காட்சி, பௌதீகம், என விரியும் பரப்பினில், சிறு கருவியாக அவற்றுள் மாற்றத்தினை கொண்டுவந்த கவிஞனாக மஜீதை அடையாளப்படுத்தலாம். மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைத் தகர்த்து, அழுத்தமும் யதார்த்தங்களை மீறிச் செயற்படும் கண்டுபிடிப்பாளனின் யுக்தியும், அவற்றின் மீதான தீவிர வாசிப்பும் மஜீதின் கவிதைகளில் நிரம்பியிருந்தன. மஜீதின் பிரதிகளை நுகர்கின்ற வாசகப் பரப்பின் மீது, சுமையற்ற மீட்சியினை எப்பொழுதும் வேண்டி நிற்கின்ற சொற்களை பின்நவீனத்துவத்தின் வடிவமாய் உருவாக்கினான். இதன் காரணமாகவே பன்முகப்பட்ட வாசகர்கள் மஜீதின் எழுத்துக்களில் நவீன இயங்குதளத்தின் பெரும்பாரத்தை புரிந்து கொள்கின்ற அதே சமயம், ஓர்அபரிமிதமான விடுதலைப் பண்பினையும் உணர முடியுமாயிருந்தது.

வரட்சியான நிலத்திலிருந்து உருவாக்கப்படுகின்ற ஒரு மரத்தினை புறவயக் காரணிகளின் செயற்பாடு இயங்க வைக்கின்ற புதினத்தை மஜீதின் சொற்களிடமே கற்க வேண்டியிருக்கிறது. ஏறு வெயில்;, வாழ்வின் மீதான எளிய பாடல்கள், சுள்ளிக்காடும் செம்பொடையனும், ஒரு இலையின் மரணம், கதை ஆண்டி, மஜீத் கவிதைகள், புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன, யாரோ ஒருத்தியின் டயரி, மஜீதின் பின்நவீன கதையாடல் மூன்று, ரத்த நதி ஓடிய செம்மண் ஆகிய மஜீதின் படைப்புலகத்தினை, மிக எளிதாக வகைப்படுத்திவிட முடியாது.

காலத்தின் மிகத் தீவிரமான உருவாக்கம், அவற்றின் மீதான உரையாடல்கள், பிரதிகளின் உணர்வுத்தளமாக அமைந்திருந்த சொற்களின் தொகுப்புக்களாக இவைகளின் வருகை எதிர் கதையாடலுக்கான வெளியினை உருவாக்கியது. போரியல் காலத்தின் உக்கிரமான பேரிருப்பின் மூலையில் வசிக்கவும், அக்காலத்தின் மறைவிடங்களை பேசுவதும் பெரும் குற்றங்களாக்கப்பட்ட சூழலில், அவற்றினை மறுதலித்து தமது பிரதிகளினூடே பெரும் அரசியலினை நிகழ்த்திய மஜீதின் எழுத்திமைப் போக்கு, தமிழ் – முஸ்லிம் சூழலின் விரிந்த அடையாளம். கவிதைகள் கொண்டியங்கும் மாற்றியல் போக்கினை பெரும் விவாதத்திற்கு அழைக்கும் விமர்சனப் பாங்கும்; மஜீதின் எழுத்துக்களில் தங்கியிருந்தன. கவிதைகள் கதை சொல்லும் பின்நவீன அழகியல் எனும் பெரும் பரப்பினை இங்கு ஏவிவிட்டு, காத்திரமான உரையாடல் மொழியினை மஜீத் தோற்றுவித்தார். முரண்டபாட்டைக் காட்டிலும் கவிதைகளை பராமரிக்கும் முரண்பாடாக மஜீத் இயங்கினார். மஜீதின் எழுத்துக்களைப் பொறுத்தவரை கவிதைகளும், கதை மொழியும் பொது வெளியில் நிகழ்வதாகிவிட்ட அல்லது, பொது வெளியில் மதிப்பிடப்படும் பெருத்த விவாதக்காரணியாக மாறிவிட்டிருந்தன. ஒரு பிரதி உருவாக்குகின்ற சிக்கலை, பல்லாயிரம் கேள்விகளை, பிரதிகளோடு நாம் புரிகின்ற வினைகளை மஜீதின் இயங்குதளம் மிக வேகமாக கட்டுடைத்தது.

மொழிகளின் போக்கினை தனக்கான ஒன்றாக உருவாக்கிக் கொண்ட மஜீதின் இயங்குதளம் எதிர்பார்ப்புகளுக்கும், வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும், நிராசைகளுக்கும் ஆரம்பமாகவிருக்கின்ற குறுகிய வெளியிலிருந்து வெளியேறுகின்ற உபவழிகளை சொல்லித்தந்தன. யதார்த்தங்களைக் காட்டிலும் பிரமாண்டமான பெருவெளியின் இயற்கையினை, தனது மொழிக் கூட்டிற்குள் நகர்த்திச் செல்லும் பண்புகளை தனது சொற்களுக்கு கற்றுக் கொடுத்தது மஜீத் கவிதைகள். சாவகாசமான மொழிப் போக்கில் அமைந்த சித்தரிப்புக்களின் ஊடே, எதிர்பார்க்கப்படாத கூரிய ஆழ்படிமங்களானது, மொழியினில் செலுத்துகின்ற அதிகாரத்தின் வடிவம், முற்போக்கான கலாச்சாரத் தேடுதல், உடைத்து விடப்படுகின்ற சமூகக் கட்டமைப்பின் விரிசல்கள் என பெரும் போக்கு முறைமைகள் மஜீதின் பிரதிகளாக வெளிப்பட்டு நிற்கின்றன. நிறுவன சூழ்ச்சிகளுக்கு ஆட்பட மறுக்கின்ற, நிறுவன வங்குரோத்தின் மீது பிரிதொரு எதிர்வினையினை பாய்ச்சுகின்ற அமைப்பியல் சார் வடிவம் கொண்ட மஜீதின் மொழி, ஒரு படைப்பின் நேரடிக் காலமாகும். அக்காலத்தின் திரிதங்கு நிலையியலை வாசகன் நுகர்கின்ற பிரதிக்கோணத்திலிருந்து, மஜீத் மிக அதிகமாகவே வேறுபட்டிருந்தார்.

‘‘சட்டகங்களை கலைக்க முடியாத உண்மையாக இன்னும் நிர்மானித்திருப்பதும் அவைகளின் வழிகாட்டுதலின் மூலமே நமது இலக்கியச் செயற்பாடு நீட்சி கொள்வதையும் சிதைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை பேசுவதாகும். சட்டகங்களைக் (வகைமாதிரி) கேலி செய்யும் பின் இலக்கியச் செயற்பாடாகவே பார்க்கவிரும்புகின்றேன். இப்பிரதி கவிதையா? காப்பியமா? சிறுகதையா? நாவலா? வரலாறா? எதுவென அடையாளப்படுத்த முடியாமல் திமிறிக் கொண்டிருப்பதோடு, பல்தரப்பட்ட வகைமாதிரிகளின் கூறுகளையும் படிமங்களையும் பொறுக்கியெடுத்து பிரதியின் எல்லையற்ற வெளியில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது. இப்பிரதி வரலாற்றின் தற்காலிக நிகழில் கரையக் கரைய எழுத்தாகி விட்ட இலக்கியத்தனம் எனலாம்’’ என தன்னுடைய படைப்புலகத்தினை இப்படியே மஜீத் அணுகினார். வரையறுத்து சொல்ல முடியாத கட்டமைப்பிற்குள் அவனின் எழுத்துக்கள் எதுவும் தங்கிவிடவில்லை.

 

மஜீதின் கவிதைகளால் நிரப்பப்பட்ட உலகம் மிக விசித்திரமானது. எங்கும் வியாபித்திருக்கின்ற அழகியல் கூறுகளிலிருந்து கவிதைகளை நுகர முயற்சிக்கலாம். அத்துமீறிய உணர்வுகளின் மெல்லிய வெளிச்சத்திலிருந்து மஜீதின் கவிதைக்கான வேர்கள் நடப்பட்டிருப்பதாக நம்புகிறேன். பொது நிலை மனப்பாங்கு சார்ந்த கவிதைகளின் வெளியிலிருந்து ஏராளமான உரையாடல்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அடுத்தகட்ட நகர்வின் சாயலினை கொண்டிராத கவிதைகளின் இறக்குமதி இவையெல்லாவற்றிக்கும் சவாலாகவே இருந்திருக்கின்றன. வெளிப்பாட்டு நிலையியல் பற்றி உரையாடத் தொடங்கிய கவிதைப் பாங்கிலிருந்து முற்று முழுதாக மாறி, கவிதைகளின் கோர்வையானது மசாலா பரப்பினுள் தூவப்பட்டிருப்பதினை அல்லது தூவுகின்ற கால ஓட்டம் எம்மை பீடித்திருக்கிறது என்பதை மஜீத் உணர்ந்திருந்தார். அதிகார வங்குரோத்து வாதம், தேசிய, சர்வதேச இருப்பியல் கேள்வி, இன அடையாள மறுதலிப்பின் எதிர்ப்பு வாதம், நில அடையாளங்களின் பார்வை, போர் யுகம் என விரிவடைந்திருக்கும் மஜீதின் கவிதைகளுக்கு மொழி விளையாட்டு ரொம்பவும் பொருந்திப் போனது. கவிதை எனும் பெருத்த அடையாளத்தின் ஊடாகவே பல்வேறு வகையான எழுத்து முறைமைகளை உருவாக்கிக் கொண்டார் மஜீத். கவிதை மொழியினை பார்வைக்கு கொண்டுவருகின்ற இம்மாதிரியான செயற்பாட்டு முறை, பிரதிகள்; மீதான எமது வாசிப்பு மனத்தினை சிலிர்ப்படையச் செய்தன.

பன்முகப் பார்வையினைக் கொண்ட பிரதிகள் எல்லா செயற்பாடுகளின் மீதும் தனது காலடியினை பதித்திருக்கிறது, என்பதினை நாம் நம்பியே ஆக வேண்டுமா என்ன? இவ்வாறான நிகழ்வுகள் நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் பொழுதில் நம் உடல் சோர்வடைந்திருக்கும் போது, சில நேரங்களில்; ஒரு கவிதை நம் நினைவிற்கு வந்து, நம்முடைய சிந்தையினை கிண்டிவிடும். ஒரு பிரதியோ ஒரு புதுமையோ போதும், நமக்கு வியப்பினை அளிப்பதற்கு, கலங்கம் விடுபடுவதற்கு. பிரதிகளின் இன்பத்தினை அறிவதற்கு. இவ்வாறே மஜீதின் அடுத்த நகர்வு பெருவெளிக் காலத்திலிருந்தே வேறொரு முகமாய் வெளிவந்தது. விமர்சனப் பரப்பிலிருந்தும், பின்நவீனத்துவ இயங்குவாதியாகவும் பெரும் இருப்பினை தனது பிரதிகளில் தெளித்தார். மாமூலான இலக்கியச் சூழலின் மரபிலிருந்து பின் அமைப்பியலுடன் காத்திரமாய் வெளிவந்த பெருவெளி, அதன் செயற்பாட்டாளராக இயங்கிய மஜீதின் எழுத்துக்கள் micro fiction அமைப்பிலிருந்து poetic fiction முறையாக தோற்றம் பெற்றது.
ஒரு பிரதியானது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர்பார்த்தபடி, உரையாடல்களை உருவாக்கியபடி இருக்கும். மஜீத் எழுதிய சொற்களின் எதிர்பார்ப்பானது இலக்கியப் பிரதிகளைப் பொறுத்தவரை மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன். ஒரு பிரதி தன்னை பெருப்பித்துக் கொள்வது அதன் மீது முன் வைக்கப்படும் பல நூறு கேள்விகள் மூலமாகவே இடம் பெறுகிறது. மஜீதின் எழுத்துக்களைப் பொறுத்தவரை விமர்சனங்கள், கேள்விகள் என்பன இன்றியமையாத ஒன்றாகிவிட்டிருந்தது. சில அபரிதமான பின்புலத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகள் மிக அதிகமான கேள்விக்கு உட்படுத்தப்படுவதினை நாம் அவதானிக்க முடியும். அவ்வாறான கவிதைகள் மீது பாரிய வரலாற்றுச் சுமை இருப்பதாக நாம் யூகிக்கலாம். மஜீதின் கவிதைகளிலும், எழுத்துக்களிலும் வரலாற்றுச் சுமை மிக அதிகமாகவே இருந்தது.

அதிகாரத்தினை தாண்டிய அமைப்பலிருந்து விடுபடும் ஆசிரிய விம்பத்தினை ஆதரித்து, ஆசிரியன் அதிகாரக் காட்சியின் பொருளாக மாறிவிடக் கூடாது எனும், ஆசிரியன் செத்துவிட்டான் பரப்பில் மஜீதின் எழுத்துக்கள் பெரும் மாற்றமைப் பண்புகளை பேசியிருக்கின்றன. அதிகாரக் காட்சியினை இலக்கியப் பரப்பினூடும், செயற்பாட்டுத் தளங்களினூடும் சாட்டி விட்டு, நிதர்சனமாக வெளியேறும் பிரதிகளாகவும் இருந்திருக்கின்றன. எழுத்துக்கள் எப்பொழுதும் உயிரின் மையத்தினை ஆட்டுவிக்கக் கூடியவையே.

ஒரு படைப்பினை நுகர்கின்ற போது அது எம்மாதிரியான விளைவினை நுகர்வோன் மத்தியில் ஏற்படுத்தும் என்கின்ற வகைப்பாடுதான் அப்பிரதியினது உயிரின் மையம். ஒரு பிரதி என்று அறியப்படுவது மொழிகளின் மூலமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பிரதிகளின் காத்திரம் மொழியினை ஒரு ஒப்பற்ற தளத்திற்கு கொண்டு செல்கிறது. பிரதிகளின் உணர்வுகள் எப்பொழுதும் விசாலமானவை, பூலோகத்தின் சகலதையும் பதிவு செய்யக் கூடியவை, மொழியிலிருந்து வெளிவருகின்ற அனைத்து விடயங்களினதும் இன்பமானது பிரதியாளனின் மொழிகளின் வீரியத்திலிருந்து உருவாக்கம் பெறுகின்றன. இதுவே பிரதியாளன் கொண்டிருக்கின்ற மாய விம்பமாகும். இவ் விம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல்; பிரதிகளை எப்பொழுதும் மிக நேர்த்தியாக நேசிக்கின்ற ஒரு படைப்பாளனாள் மட்டுமே தரமான இலக்கியங்களைத் தர முடியும்.

நிறுவன கட்டமைப்புகளின் மீது நிகழ்த்தப்படுகின்ற கோட்பாட்டு வாதங்களை எழுத்தியக்கம் விவாதப்படுத்திய சூழலில், இலக்கியமும் பின்நவீன சிந்தனைப்பாட்டிற்கு கடமை புரிகின்ற சேவகனாக தோற்றம் கொண்டது. மஜீதின் கதை ஆண்டி வாழ்வின் இருப்பினை அடையாளப்படுத்தி வாசிப்பு செய்யப்பட்டது. இதற்குப் பின் பலவிதமான சிந்தனை வார்ப்புகள் இருப்பதாக நாம் நம்ப முடியும். மொழியில் உருவாக்கப்படுகின்ற மாயைகள் என்பது பிற அடையாளத்திற்கான புரிதல்களாகவே இருக்கின்றன. தமிழ்ச் சூழலினைப் பொறுத்தவரை பிற அடையாளங்கள் மீதான அரசியலினை புரிந்து கொள்வது மிகத் தேவையாகிறது. பெரும்பாலும் அரசியல் நிலைப்பாட்டினை கதைப்பரப்பில் தக்க வைக்கின்ற பெரும் பணியினை அவை செய்கின்றன. அந்நிய நிலத்தில் விதைக்கப்பட்ட இப்போக்கின் தாக்கம்; பிற்பாடு தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி கூறுவதா? அல்லது மையத்தின் அமைவினை மொழிமாற்றம் செய்வதா? போன்ற கேள்விகள் இவ்வகைப் பிரதிகளின் மீது முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும் ஒரு பிரதியினை வாசகன் நுகர்கின்ற போது அங்கு வியாபித்திருக்கின்ற பிரதி பற்றிய கனவுச் சித்திரங்களை நேரடித் தமிழ் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே தந்திருக்கின்றன. அவற்றுள் கதை ஆண்டி தவிர்க்க முடியாத மஜீதின் கதை சொல்லும் பிரதிகளின் ஒன்று. மஜீதே கதை சொல்லியாகி, பாத்திரமாகி, வினையாகி முழுப் பிரதியினையும் தாங்கி நின்ற அரசியல் நிலமது.

பாரம்பரிய முறையாக பின்பற்றப்பட்ட கலை வடிவத்தின் செல்வாக்கானது மொழி எனும் பெருத்த வெடிப்புக்களாய் மாறிக் கொண்டடிருந்த சூழலில் மஜீதின் படைப்புக்கள் உருவாக்கம் பெற்றிருந்தன. மஜீதின் பிரதிகள் மீதான ஈர்ப்பானது கலை வடித்தின் பகுதியாகவே நோக்கப்பட்டது. பெரும் விவாதக் கருப் பொருளினையும், அதிகார அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற கோட்பாட்டு கருத்தியல் போக்கானது மஜீதின் விமர்சனப் பார்வையிலிருந்து விலகி விட முடியாதவையாகியிருந்தன. குறிப்பிட்ட செயலுக்குள் மாத்திரம் இயங்கிவிட்டு விலகிச் செல்கின்ற எழுத்து முறைமைகளை, இருப்பியல் வரையறைக்குள் வைத்து மஜீத் நோக்கவில்லை. பரவிச் செல்கின்ற எழுத்து முறைமைகளின் ஊடாக விரிந்த பரப்பின் மீதான போர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தான். அங்கிருந்து ஏராளமான உரையாடல்களைத் பிரட்டிக் கொண்டிருந்தான். மஜீதின் கவிதை வெளியானது, உரையாடல்களை முன் வைத்தே இயக்கம் பெற்றன. கவிதை, கவிதைக்குப் பின்னால் எழும் கேள்வி, கேள்விகளுக்குப் பின்னால் உருவாக்கப்படும் நீண்ட உரையாடல்கள் என்பன ஒட்டு மொத்த சூழலின் நவீனப் பெரும் விவாத்தின் காரணிகளாக மாறின. தனது உடம்போடு ஒட்டிக் கொண்ட நோயினை எதிர்த்துப் போரடிய படியே பேனாவும், எழுத்தும், உரையாடலுமாக இயங்கிக் கொண்டிருந்தான் மஜீத்.

 

 

விளைவுகளுடன் விரிந்து பயணிக்கும் கவிதைகள் மீதான உரையாடல்கள் மஜீதினை வாசிக்கும் நுகர்வோனின் பெருமிதமான வெளியீடு. நுகர்வோனால் நிரம்பிய மாற்றுப் பார்வைகளின் நிர்மாணமானது பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதும், அல்லது அதன் மீது கேள்விகளை முன்வைப்பதுமாகும். மஜீதின் கவிதைகளை பொருத்தமட்டில் அடையாளம், அடையாளத்தினை வேண்டி நிற்றல், அடையாளப்படுதல் போன்ற இன்னோரன்ன வகை மாதிரிப் போக்கிலிருந்து விரண்டோட நினைக்கின்ற கவிதை வடிவம்தான். அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்ட பிரதிகளின் வெளியேற்றமும், பின்னர் புகுந்து கொண்ட பின் நவீன வடிவப் போக்குகளும் அரசியல் வங்குரோத்தினை சாராமல் இயங்கியதில்லை. ஆனால் நீட்சியான வாசிப்பின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப மஜீதின் எழுத்துலக பணி பின்நவீன அறிதலுக்கான தமிழ்ச் சூழலின் இயங்குதளமாயிருந்திருக்கிறது.

பெரும் கதையாடலினை தோற்றுவித்த மஜீதின் பின்நவீன கதையாடல் மூன்று எனும் விளிம்புநிலைப் பிரதியானது இலக்கிய உலகிற்கு மிகவும் புதுமையான வாசிப்பினைத் தந்தது. ஆயிரம் காத்திரமற்ற எழுத்தாளர்கள் பேசப்படாமல் இருக்கலாம் ஆனால் காத்திரமான ஒரு படைப்பாளி இருட்டடிப்பு செய்யப்படுவதென்பது பெரும் அபத்தமாகும். இன்று விளிம்பு நிலை வாதிகளாக தங்களுடைய வாழ்வியலை நகர்த்துகின்ற பல சமூகங்களின் கட்டமைப்பிற்காக மஜீதினுடைய எழுத்துக்கள் போராடின. மஜீத் காதலை தன்னுடைய கவிதைகளில் பாடுகிறான் என்றால் அது தேசம் பற்றிய காதலாகத்தான் இருந்தது. மஜீத் பெண்ணுடலை பாடுகிறான் என்றால் அது அதிகாரத்தின் மீதான குறியீடாகத்தான் இருந்தது என்பதினை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்து கொள்வான். நீட்சியான வாசிப்பின் தேடலினை மேற்கொள்ளாத எந்த வாசகனுக்கும் மஜீதின் பிரதிகளை புரிந்து கொள்வதென்பது வைக்கோல் போரில் குண்டூசி தேடுவது போன்று மிகச் சிரத்தையானது.

‘‘எந்தப் பதிலுக்குப் பின்னேயும் ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிட்டால் அது கேள்வியாகவே மாறிவிடும். ஆகவே பதில்கள் கூட கேள்வியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முயற்சிதான்’’ எனக் கூறும் மஜீத் அற்புத மொழிகளின் கூட்டுக்காரன். ஒரு இலையின் மரணம் போல அவனது வாழ்வு முடிந்தாயிற்று. ஆயினும் அவனது மொழியும், புதுமையும், கவிதைகளும் புதியதொரு உலகமாய் எம்முன்னே எப்பொழுதும் விரிந்து கொண்டேயிருக்கும்.

 

. எம். சாஜித் அஹமட்

 

Please follow and like us:

3 thoughts on “கவிதை வனத்திலோர் ஆண்டி – கவிஞர் மஜீத்

  1. கவிஞர் மஜீத், ஆழமான கவிதைகள் பல்பரிமாணம் கொண்டது சிறந்த ஆளுமையுள்ளகவிதைகள் அவருடையது இழப்பு இலக்கியத்துக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *