இந்த வாழ்க்கையும், வாழ்வின் மீதுள்ள பிடித்தங்களும் , மனமும் நம்மை உள்முகமாக வேறு ஒரு பக்கம் செலுத்திக்கொண்டிருக்க, வாழ்க்கை ஒரு இறுக்கமான இயந்திரதனமான வாழ்வை கையளித்தபோது , எப்போதேனும் நாங்கள் நினைத்திருப்போம் தானே? இந்த வாழ்வில் இருந்து வெளியேறுவது எப்படியென்று. காஃப்காவின் ” உருமாற்றம்”எனும் நாவலை அப்படியொரு முயற்சியாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான மனிதர்களால் அருவருப்பாக பார்க்கப்படுகின்ற கரப்பான் பூச்சியை கொண்டு பின்னப்பட்டிருக்கின்ற ஒரு கதை.

ஒரு இளைஞன் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அதன் பின் நடப்பதெல்லாம் என்ன? இதுதான் கதை .கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிற இளைஞன், எத்தகையதொரு கற்பனை, உங்களால் இப்படியொரு கற்பனையை நினைத்து பார்க்க முடிகின்றதா? ஆம் காஃப்காவின் உருமாற்றம் அத்தகையதொரு முயற்சிதான்.

இப்படியொரு கற்பனைக்கருவை இலக்கியத்திற்குள் கொண்டுவரும்போது அதற்கான பிரதிபலிப்பு வாசகர்களிடம் எப்படியிருக்கும், இலக்கிய உலகில் அதன் பிரதிபலிப்பு எப்படியிருக்கும் என்ற அச்சம் இருக்கும். அதை வெற்றிகரமாக காஃப்கா தனது படைப்புகளில் கையாண்டிருப்பார். இப்படிப்பட்ட கற்பனைக்கருவை நீண்ட பயிற்சியும் அனுபவமும் இன்றி கையாள்வது மிகக்கடினம். ஏனெனில் கொஞ்சம் பிசகிபோனாலும் அபத்தமாக சுவையற்று போகக்கூடும். கனவுலகம் பற்றிய நுண்மையான அறிவுலகம் அற்ற யார் எழுதியிருந்தாலும் , இந்தப்படைப்பு இவ்வளவு ஜனரஞ்சகமாக மாறியிருக்க முடியாது.

தமிழ் இலக்கிய உலகு மட்டுமல்ல உலகம் முழுவதும் காஃப்காவின் ” உருமாற்றம் அதீத வாசக கவனிப்பை பெற்றது. மிகப்பெரிய புகழை இது அவருக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தது. நவீன மனிதனின் இருத்தலியல் கவலைகளையும் , அந்நியமயமாதலையும் காஃப்காவின் உருமாற்றம் பூச்சியின் படிமத்தில் சித்தரித்திருந்தது என்று சொல்பவர்களும் உண்டு.

முக்கியமாக இரண்டு மாபெரும் யுத்தங்களுக்கு மத்தியில் சிதைந்து போயிருந்த ஐரோப்பிய மக்களின் நிலைமை இந்த கரப்பான் பூச்சியினுடைய வாழ்வையொத்ததாக இருந்தது, helpless , morally pointless ஆக இருந்தது என்கிறார்கள். இந்த இரண்டையும்தான் காஃப்கா தனது படைப்புகளில் பேச முற்பட்டார்.

காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை வைத்துக்கொண்டு அவரின் படைப்புகளை மதிப்பிடுபவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் .” காஃப்காவின் வாழ்வும் இலக்கியமுமே பூரணமாக அவருக்கும் , அவர் தகப்பனாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுகள் காரணமாக எழுந்தவை, அத்தோடு திருமணம் தொடர்பில் அவர் மிகுந்த பயத்துடன் காணப்பட்டிருந்தார். அவற்றின் எல்லாம் வெளிப்பாடே அவருடைய கதைக்கருக்கள், என சொல்பவர் உண்டு.

எது எப்படியிருந்தாலும் உருமாற்றத்தில் வருகிற க்ரகர் என்ற பாத்திரம் காஃப்காவை நகல் எடுத்துதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. பிடித்த வாழ்வை வாழவேண்டும், நிறைய எழுத வேண்டும்,.இந்த இயந்திரத்தனமான வாழ்வில் இருந்து விடுப்படவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால் நடைமுறையில் சாத்தியமற்ற தந்தையின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு இயந்திர வாழ்வு அவருக்கு இருந்தது. இந்த காலத்தில் அவர் ஃபிராய்டின் மனோதத்துவ அலசல், கனவுகள் என்பதில் அதீத ஈடுபாடுடையவராக காணப்பட்டிருக்கின்றார். 1910 முதல் 1923 வரையான காலத்தில் தத்துவம் தொடர்பான எண்ணங்கள், கண்ட கனவுகளின் விவரிப்புகள் என்பவற்றை எழுதியிருக்கிறார். படைப்புகள் தடைப்பட்ட போதெல்லாம் அதை தூண்டும் முயற்சியாக இதை கையாண்டிருக்கிறார். அப்படி அவருக்கு ஏற்பட்ட கனவின் விவரிப்பாகவே ” உருமாற்றத்தை பார்க்கின்றேன். ”

கதை இதுதான் அம்மா, அப்பா, கதையின் நாயகன் க்ரகர் சேம்சா மற்றும் அவனது தங்கை என்றிருக்கிற ஒரு சிறிய குடும்பம். அது முற்று முழுவதுமாக க்ரகரின் ஊதியத்தில் தங்கியிருக்கிறது. திடீரென ஒருநாள் தூக்கத்தில் ஒரு கெட்ட கனவில் இருந்து திடுக்கிட்டு எழும்பும் க்ரகர் , தான் நிஜமாகவே பிரமாண்டமான கரப்பான் பூச்சியாக மாறியிருப்பதை உணர்கிறான். பின்னர் அந்த குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றது இதுதான் கதை.

திடீரென நின்று போகிற வருமானம் அந்த குடும்பத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தத்தொடங்கும். மேலதிக பணவிரயத்தை தடுக்கவும், குடும்பத்திற்கு சில வருவாயை ஏற்படுத்தவும் சில முடிவுகள் எடுப்பார்கள். வேலையாட்களை ஆட்குறைப்பு செய்வார்கள். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவார்கள் இப்படி. அருவருக்கத்தக்க பிரயோசனமற்று போன பூச்சியிடம் மனிதர்கள் அன்பு பாராட்டுவார்களா என்ன, பணம் தருகிற விடயங்களுக்கு தருகிற முக்கியத்துவத்தை மனிதர்கள் வேறு எதற்கும் தரமாட்டார்கள். தாய் தந்தை என வெறுத்து ஒதுக்கப்பட்ட க்ரகரை அவனது தங்கை மட்டும் நேசிப்பாள். கடைசியில் அவளும் இப்படி சொல்லிவிடுவாள்,

” அப்பா அவன் போய்விட வேண்டும். அது ஒன்றுதான் வழி. இந்த பூச்சிதான் க்ரகர் என்ற எண்ணத்தில் இருந்து விடுப்பட நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீண்டகாலம் நாம் அப்படி நம்பியதே நம்முடைய துன்பத்திற்கு அடிப்படை. அது எப்படி க்ரகராக இருக்க முடியும்? அது க்ரகராக இருந்திருந்தால் , மனிதர்கள் இந்த மாதிரியான பூச்சியுடன் வாழ முடியாது என்பதை எப்போதோ உணர்ந்து அவனாகவே எங்காவது போயிருப்பான். அதற்கு பிறகு நமக்கு சகோதரன் இருந்திருக்கமாட்டானேயொழிய நாம் தொடர்ந்து வாழ்ந்து அவனுடைய நினைவை கௌரவத்தை போற்றியிருப்போம்”. இப்போதுள்ள நிலையில் இந்த பூச்சி நம்மை துன்புறுத்துகிறது. குடியிருப்பவர்களை விரட்டுகிறது. வீடு முழுவதும் தனதாக்கிக்கொண்டு நம்மை சாக்கடையில் தூங்கவைக்க அது விரும்புவது வெளிப்படையாக தெரிகிறது. ”

• இந்த வார்த்தைகள், மற்றும் அவன் கரப்பான் பூச்சியாக மாறிவிட்டதை தொடர்ந்து வீட்டில் ஏற்பட்டமாறுதல்கள் அவனை ரொம்பவே பாதிப்படைய செய்தது. அவன் மிகுந்த பசியுடனும் , ஊனமாகிப்போன உடலுடனும் இந்த பாழடைந்த அறையில் தனித்திருக்கிறான். எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சிறிய அன்பை. ஆனால் அந்த குடும்பம் சிறுக சிறுக அவனை மறந்துப்போனது. உபயோகமற்ற அவனை இடையூறாக பார்த்தார்கள். அப்படியான ஒரு நாளில்தான் அவன் எல்லாமுமாக நினைத்திருந்த அவனது தங்கை இப்படி பேசிவிடுகிறாள். அதன் பின்னர் நடப்பது என்ன? ஒரு தத்துவமாக அதை காஃப்கா சொல்லியிருப்பார். அறுவறுக்கத்தக்க ஒரு பூச்சியை நாயகனாக கதை முழுவதும் இயங்கவிட்டு பின் அதனிடம் ஒரு நட்பை, இரக்கத்தை ,காதலை இப்படி ஏதோவொன்றை வாசகரின் மனதில் ஏற்படுத்துவதில் காஃப்கா வெற்றியடைந்திருப்பார். உலக இலக்கியங்களின் தீராத பிரியம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான படைப்பு பிரான்ஸிஸ் காஃப்காவின் ” உருமாற்றம் ” .

-எழுத்தாளர் நர்மி

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *