இன்று புறுத்திச் சக்கை, ரப்பர் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் காயக்கரை மலையில் அப்போது வாழையும் மரச்சீனியும்  பயிரிடப்பட்டிருந்தது என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. குத்தகை நிலங்களை அடுப்பித்த பள்ளத்தாக்கிலிருந்து, தாக்கல் காடும் அடுத்த மேட்டில், காப்பு காடும் தொடங்கிவிடும். மரச்சீனி என்றால் நூறுமுட்டானோ, அடுக்குமுட்டானோ, சுந்தரி வெள்ளையோ அல்ல நல்ல அசல் காந்தாரிப் படப்பன். காட்டுப் பண்ணிக்குப் பிடித்த கிழங்கு. வாயில் வைக்க முடியாத கசப்பு. ஆனால் உலர் கிழங்காக மாற்ற  இதுதான் தோதானது. கசப்பு சுவை அதீதம் என்பதால் பூச்சிப் பட்டைகளோ மாவு வண்டோ தீண்டாது. நீண்ட நாள் தாக்குப்பிடிக்க வேண்டிய  கிழங்கு மாவுக்கு இந்த கசப்புதான் காவல் தெய்வம்.

இந்தப்  பகுதியின்  பெரும்பாலான குடும்பங்களில் காலைச் சிற்றுண்டிக்கு மரச்சீனிக்கிழங்குதான் பிரதான உணவு; இருக்கும் மக்கள் பற்றத்தில் எல்லோருக்கும் தெகையாது இருந்தும் எப்போதாவது மிச்சமிருப்பது  இரவுக்கும் அடுத்த நாள் காலைக்கும் உணவாகும்.  மீதமிருக்கும் கிழங்குகள்தான் உணக்கக் கிழங்காக ஆவது. உணக்கக் கிழங்கை பானையில் சேகரித்து தேவைக்கு இடித்து மாவாக்கிக்கொள்ளலாம். அரிசி இடிப்பதை விட லேசானது. கிழங்கு மாவில் செய்த புட்டு ஒருவிதமாக ஒட்டித் திரண்டு, சவைக்க முடியாமல் விழுங்க வேண்டியிருந்தாலும் ஆவிப் பறக்கும் அதன் மணமும் சேர்ந்து அத்தனை சுவையாகயிருக்கும்.    

—————————-          

உடும்புக் கறி சாதா வேவிச்சா வேவாது கேட்டியா? எண்ணையில விட்டாக்கும் வேவிக்கணும். சாதனம் படப்புவள்ளயும் மரத்துவளுக்க மேலயுமாக்கும் கெடக்கும். பைய கம்பக் கொண்டு தட்டி எடுக்கணும். படப்புக்குள்ள கெடச்சியத பட்டி கடிச்சு கொண்டு வரும். சாதா ஆப்ப ஊப்ப பட்டியளில்ல . நல்ல வேட்டை பட்டியளு. உடும்பு பிடிச்சியது பயங்கர அப்பியாசமாக்கும்.”

உடும்பு வேட்டையை நேரில் பார்ப்பது போல் இருக்கும் மத்தியாஸ் சொல்லும் கதை. அவன் சொல்லும் எல்லாக் கதைகளிலும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்வான்.

ஊயி கண்டராக்குக்கு காயக்கரையில் ரெண்டு பெரிய கண்டம் உண்டு. பாட்டமா சொந்த இடமா தெரியாது. அங்கு காவலுக்கு போகும் மத்தியாஸ் நிறைய கதைகள் சொல்லுவான். வீட்டுக்கு வரும்போது குருமிளகு, செம்மட்டிப் பழம், மலைவாழை, காந்தாரி மிளகு, ஏலக்காய், கிராம்பு இப்படி ஏதாவது கொண்டும் தருவான். பண்ணிவேட்டை, உடும்புக் கறி சமையல், மிளா இறைச்சி, வாற்றுச் சாராயம்  இவற்றோடு காட்டுக்கு விறகு பொறுக்க வரும் பெண்களோடு ஏற்படும் பாலியல் அனுபவக்கதைகளும் அவனிடம் கொட்டிக்கிடக்கும். உறவில் எனக்கு மத்தியாஸ் பெரியப்பா மகன்.

     ‘’ பாம்பும் பல்லியும் கலந்த ஒரு சாதனமாக்கும் உடும்பு. பாம்பைப் போல ஒரு நாக்கு. பாம்பை மாரி சட்டை உரிக்கும். உடும்புக்க மேல் தொலி நல்ல கட்டியாக்கும். அடித்தொலி கட்டி கெடையாது . பாக்கியதுக்கு சின்ன மொதலையைப் போல.  வாலுக்கு நல்ல ஊக்கம் உண்டு. மண்ணுடும்பு பொன்னுடும்பு ரெண்டும் பிடிசிருக்கியேன் கேட்டியா. நவறு கழுகுக்க நவறைப் போல இருக்கும் . ஒரு பிடி பிடிச்சா பின்ன வெட்டிதாய்ன் எடுக்கணும் . பண்டு கோட்டை ஏற மாவீரன் சிவாஜிக்க படையளு உடும்புக்க வால்ல கயறு கட்டித் தூக்கி அதப் பிடிச்சு கேறுவாவளாம்.

பிடிச்சப் பொறவு ரெண்டு நகறையும் காலையும் சேத்து பின்னால,  கள்ளனுக்க கையை பின்னால கட்டுவமில்லியா அது போல கட்டணும். பொறவு வாலைச்சுத்தி ரவுண்டாக்கி வீண்டும் ஒரு கட்டு கட்டி சாக்குல போட்டு வைப்போம்.

சரக்க உலிச்சியதும் பாடாக்கும். ஆனா நல்ல உக்கிரன் எறச்சியாக்கும். பலதரம் எறச்சியளு தின்னவியளுக்குத் தெரியும். வெள்ளத்தில இல்ல எண்ணையிலதாய்ன் வேவும். நின்னு வேவணும் கேட்டியா . நல்ல வெளிச்செண்ண நூறு மில்லி விட்டு அதில உடும்பெறச்சிய வெட்டியிட்டு இத்துவோல நல்லமொளவும், கிராம்பும் , பட்டையும் கூட்டி எறச்சிமசாலயும் காந்தாரி மொளவும் மல்லியும்   இட்டு வேவிச்சு  . எனக்கப்போ ! கூட எள்ளுபோல வாற்றோ பொங்கலோ கிட்டிச்சிண்ணா தள்ளயத்தின்ன ஜீவிதந்தாய்ன். ‘’

மத்தியாஸை மத்தாய் என்றே அழைப்போம். அவன் மலையிலிருந்து கீழிறங்கி வரும் போதெல்லாம் அநேகமாய் மாதமொருமுறை தவமணியின் விளையில் சந்திப்போம்.

———————-

‘’மோளியடிப் பொற்றையில ஒரு நாளு ராத்திரி . வாற்றுக்க ஊறலு கீழ கெடக்கு நானும் நம்ம நாகராயனும் போவாஸும் மறு வஷத்தில காவலுக்கு கெடக்கியோம். தணுப்புன்னு சென்னா அப்படியொரு தணுப்பு. கிறிஸ்மஸ்க்கு ரெண்டு வாரம்தாய்ன் இருக்கும் நல்ல கச்சோடம் உள்ள சமயமில்லா ஊறலு மயமா உண்டும். திடீர்னு இந்த நாகராயன் பயலுக்கு வெறயலு எளவிட்டு . தேகம் அப்படியே கிடுகிடுன்னு வெறச்சுது. பய சுழிஞ்சு போறான் . போவாஸ் தூற முடுக்கி கீழ ஓடைக்கு இறங்கியிருந்தாய்ன். நாய்ன் ஒற்றைக்கு இருக்கியேன். பாத்தேன் பயலுக்கு எப்படியெங்கிகிலும் இச்சிரி சூடு குடுக்கணும். இல்லேங்கி பிரேதம்தான். சுற்றி நோட்டம் விட்டேன்.என்னெங்கிலும் கிட்டுதான்னு . பயலுக்கு கொஞ்சம் சாராயத்தை வாயில ஊற்றிக் கொடுக்கலான்னா பயலுக்கு அரை போதம்தான் உண்டும். என்ன செய்யோக்கு. நாங்க கூடாரம் இட்டிருந்த சரிவுக்கு கொஞ்சம் மேல ஒரு மரத்தைக் கண்டேன்.ஆக்கொத்தி எடுத்துவோண்டு போய் பத்து நுப்பது வெட்டு. சங்கிராண்டம் கீழ விழுந்துது. குண்டு தோண்டி இந்த மரத்தை அப்படியே இட்டு தீ வச்சேன் .அதுக்குள்ளே நம்ம போவாஸும் வந்திட்டாய்ன். தீ குபு குபுன்னு நின்னு எரிய்யுவு. பிடில மக்கான்னு சொல்லி காலையும் கையும் பிடிச்சு நாகராயனைத் தூக்கி தீயில இட்டு வாட்டினோம் . ஐஞ்சு நிமிஷம்தாய்ன் பய இன்னபாரு தள்ளேன்னு எழும்பி ஒரு கப்புல சாதனத்தை எடுத்து அடிக்கான்.

‘’மத்தாயே ஒருமாரி ஊம்பித்தனம் காட்டப்பாது என்னா .பச்சை மரம் எப்பிடிடே எரியும்?’’ கூட்டத்தில் கதை கேட்டுக்கொண்டிருந்த அப்பி மிகச்சரியாய் தவறைக் கண்டுபிடித்த தோரணையில் கேட்டான்.

‘’அது குந்த்ராண்டம் வேங்கை மரமாக்கும்டே அப்பி .வேங்கை மரம் பச்சையிலேயே எரியும் அறியலாமா . அதுல ஒரு எண்ணெய் உண்டு .பின்னைக்கா மரமும் அப்படியாக்கும்.கீரிப்பிள்ள அறியாத பாம்பாடே .மலையில கெடக்கியவனுக்கே மரத்தைக் குறிச்சுச்  சொல்லிகுடுக்கியா மக்கா .’’

அப்பி அதன் பிறகு  பேசாமல் கதை கேட்டான்.

————————

 பட்டை லோடுக்கும் போவான் . நன்னாரி லோடுக்கும் போவான்.

‘’ நறுனாட்டிக் கிழங்கு இருக்கில்லா கிழங்கு வைக்கமுன்ன அந்த வேர்லயாக்கும் நல்ல மணம் இருக்கும். சைஸு சிறிதுதாய்ன் மணத்தைக் கண்டேன்னா அப்பிடியிருக்கும்.’’

எதையாவது பேசிக்கொண்டேயிருக்கும் மத்தாயை எனக்குப் பிடிக்கும்.  அவன் கொண்டு வரும் காட்டுப் பொருட்களை விட அவன் கொண்டு வரும் கதைகள் மேல் , தகவல்கள் மேல் எனக்கு ஒரு மயக்கம். அவன் இந்த ஊராண்டிகளைப் போல் பேதம் பார்ப்பதில்லை. ஜாதி வித்தியாசம் கிடையவே கிடையாது. சொந்த மச்சினன் போவாஸைவிட சின்னையனுக்க மொவன் என்னைவிட  பூவங்காம்பறம்பு பூவண்டன் தெரு நாகராயன் தான் அவனுக்கு நெருக்கம்.

காட்டில் நேரம் நகர்வது ஊரைப் போல் இருக்காது . அந்த அமைதியும் தனிமையும் பல வேலைகளில் பாலியல் உணர்வுக்கே எட்டித்தள்ளும். காட்டுவேலை செய்யும் ஆண்களுக்கு அதற்கான வடிகால் விறகு பொறுக்க வரும் பெண்கள்தான்.

மத்தாய் கதையைத் தொடங்கினான்.” நல்ல செறுப்புக்காரக்குட்டியாக்கும் கேட்டியா நாய்ன்  அண்ணு வேலை அற்று இருந்தய்ன். கொஞ்சம் காந்தாரிப் படப்பனை செறு துண்டுவளாட்டு வெட்டி, பாறையில் காயப்போட்டுவோண்டு   நேரமே காய்ஞ்ச படப்பனையும் சோப்பனையும் பானையில இடக்குச் சுட்டி பானையை எடுக்க தாழோட்டுப் போறேன்.

சற்று இடைவெளி விட்டான் மத்தாய் . எல்லோரும் சாரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

‘’ஒரு பத்து பதினெட்டு வயசுதான் இருக்கும். குட்டி மூத்திரம் போறதுக்கு வெறவுக்கட்ட  தாழப் போட்டோண்டு ஒதுங்கினா.நாய்ன் பதுக்க கிட்டப் போனேன். அப்ப நெஞ்சூக்கம் கொஞ்சம் கூடுவலு இருந்த சமயம். குட்டி இருந்திட்டு பாவடையை எறக்கின நேரத்தில நேரிட்டு கேட்டுட்டேன்.  

குட்டே கொஞ்சம் புளி குத்தலாமா?

மசை நெறைய புளி குத்தின கையாக்கும் போல . சின்ன அறப்பும் இல்லாமக் கேட்டா .

ஓ குத்தினா என்ன கிட்டும்.?

கஞ்சுவெள்ளம் உண்டு. மயக்கின கெழங்கும். பின்ன கையில ஒரு இருவது ரூவா தல்லாம்.

அண்ணு அவ கஞ்சி குடிச்சோண்டு போனா.’’

நாங்கள் எல்லோரும் அவன் சொன்ன கதைக்கு அன்று எச்சில் விழுங்கி தவித்து வீடு திரும்பினோம்.

————————

‘’ஒரிக்கா பிறாவெளையில ராத்திரி மலவாதைக்க கிட்ட மாட்டின கதை தெரியுமாடே ஸ்டீபா’’

மத்தாய் இந்த கதையை என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறான். ஆனாலும் சுவாரசியமான கதை .

செல்லு அண்ணோ செல்ல அண்ணோவ் என்றேன் நான்.

இந்த மாதிரி தருணங்களில் அவனை கொஞ்சம் ஐஸ் வைத்தால் போதும் .கதை காட்டருவி போலக் கொட்டும். ஆனாலும் நாங்கள் அமர்ந்திருந்த வட்டப்பாறையின் அருகில் இருக்கும் கல்லறைத் தோட்டம் வயற்றை பிசைந்தது.காரணம் அந்த கதை அப்படி.

காணிக்காரவன்மாருக்க தெய்வங்களும் வாதைகளும் பயங்கரமாக்கும் கேட்டியளா மக்கா . ஒன்னிரண்டு தெய்வங்கள் இல்ல மலங்காளி, வாழாற்று மாடன், மலைவாதை, காலாட்டுத் தம்புரான், வடக்கன் பேய், வரம்பொதி ஆயன், அடங்காட்டு ஆயன், கரும்பாண்டியம்மன், பேராயன் இப்படியாக்கும் சம்பவங்கள். பிறாவிளை பாலன் காணி நமக்க கூட்டுக்காரனாக்கும். அங்க உள்ள அச்சுதன் ஆசானும் நமக்கு நல்ல அடுப்பமுண்டு. தெய்வங்களை இங்க உள்ள இந்துக்களை மாரி சிலையெல்லாம் வச்சி வழிபடியதில்லை. அவியளுக்கு தெய்வங்கள் வெறும் கருங்கல்லுவ .ஒரு கூம்பு போலத்தான் இருக்கும். ஆனா பயங்கர சக்தி ஒள்ளதாக்கும். அண்ணு நம்ம கண்ட்ராக்குக்கு கை மருந்துக்கு கொஞ்சம் ஆனப்பாலு வேணும்னு கேட்டிருந்தாரு. நானும் பிற்ற நாளு கொண்டு வரேன்னு செல்லிட்டு பைய யாத்ரையத் தொடங்கினேன். என்னன்னு இல்ல அண்ணு ஒரே வெள்ளத்தாகம். நமக்கு வெறும் வெள்ளம் போருமா. சங்கதியை சொன்னதும் பேச்சிப்பாறையிலேண்டு நம்ம கூட்டாளி சோமன் வந்து சேந்தான். பிள்ளா ஒங்களாணை என்னா அடின்னு தெரியுமா மூக்க முட்ட வாற்றுச்சாராயம் குடிச்சோம். சோமனுக்கு மறுநாளு டூட்டி. ஆளு ட்ரைவராக்கும். அவன் குலசேகரத்துக்குப் போய்ட்டான். நமக்கென்ன நான் ஒற்றைக்கு புறாவிளைக்கு புறப்பட்டாச்சு. குத்திருட்டு . இஞ்ச ஆருக்கு பேடி. நான் போறேன். மணலோடை ஆறு கண்ணுக்கு தெரியுது. மலையளுல கெடந்த பழக்கம் இல்லியா . காலு அது போக்குக்கு போவது. பசுத்தேடித்திரிய கன்னுக்குட்டி போல. புறாவிளைக்கு கிட்ட போவும்போது ஒரு சின்ன திலுப்பு உண்டு . அங்கதாய்ன் சிக்கினேன்.

சுத்தி இருட்டு . ஒரு அனக்கம் இல்ல. மக்கா வாதை ரு பனை கெளரம் இருக்கும் . மலைவாத …கண்ணுக்க முன்ன நிக்குது. எனக்க அப்போ .கொடலு கலங்கிட்டுலே. நெஞ்சு இடிஞ்சு விழியது மாரி ஒரு நெலவிளி கேட்டுது.

என் அருகில் அமர்ந்திருந்த சுஜித்தின் கால்கள் மெல்ல நடுங்குவதைக் கண்டேன்.

‘பாத்தேய்ன். பாலனை விளிச்சா விளி கேக்காத்த தூரம். ஒன்னும் நிவர்த்தியில்ல. மலைவாதை ஆளைக் கொண்டுதாய்ன் போவும். எனக்கு பையப்பைய தலைக்கட்டு விட்டுது. நான் வழி மாறி யாக்கும் போயிட்டேன். என்ன செய்ய ஏசுவே வேளாங்கண்ணி மாதாவே ஜெபமாலையை இட்டுட்டு வரேல. ஈரக்கொலை வாய்வழியா வெளிய வாரதுபோல இருக்கு. ஒருபக்கம் வயறு கலக்கி தூற முடுக்குது. என்ன செய்ய?

நான் எழுந்து அருகில் இருந்த புதரில் சிறுநீர் கழித்து வந்தேன்.

மத்தாய் தொடர்ந்தான் ‘’அப்பத்தான் ஓர்மை வந்து நம்ம அச்சுதன் ஆசான் எனக்கு ஒரு மந்திரம் படிப்பிச்சு தந்தது.மலங்காளியை மனசில நெனைச்சு மந்திரத்தைசொன்னேய்ன்.

‘என்னாண கெட்டு கெட்டு

நின்னாண கெட்டு கெட்டு

படைச்ச பரமசிவனாண கெட்டு கெட்டு

பல்பனாவ சாமியாண கெட்டு கெட்டு

எங்க தேவியாண கெட்டு கெட்டு

படிச்ச பிரம்மனாண கெட்டு கெட்டு

நின்னாண கெட்டு கெட்டு என்னாண கெட்டு

நித்திய இத்திய சிவா ‘

ஒங்களாணை மக்கா வாதை ஏங்க போச்சுன்னு தெரியாது. அது காடுகெட்டு மந்திரமாக்கும். அதுக்க பொறவு ஒருநாளும் இருட்டத்தில புறாவிளைக்கு போறதில்ல.

——————————

அன்று தவமணியின் விளையில் மரச்சீனி நடவு. ஒத்தாசிக்கு நாங்களும் சென்றிருந்தோம். காலையில் இளங்குடிக்கு போய் இருந்த இருப்பு வேலைகாரார்கள் கரையேறி இருட்டினப் பிறகும் தொடர்ந்தது. மத்தாய்  அன்று முழு போதையில் இருந்தான். போதையில் கதைகளுக்கு தடை இருக்காது. மதியம் தரையில் குழிந்திருந்த குழியில் வாழை இலை பரத்தி நல்ல பச்சவெட்டு தேங்காய் திருவித் தூவிய உளுந்தங்கஞ்சி விட்டு  பிலா இலக்கு  கோட்டி எல்லோரும் சுற்றி இருந்து குடித்துக் கொண்டிருந்தோம். இளங்குடி கிழங்குக்கு மிச்சமிருந்த இடி சம்மந்தியும், மதியம் வறுத்த காணச்சம்மந்தியும்  இதமாய் தொண்டையில் இறங்கியது.

சிகாமணி பாட்டா  தலைமையில் ஆறு பேர் வந்திருந்தனர். வெற்றிலை பாக்கு முறுக்கானுக்காக எங்கள் அருகில் வந்தமர்ந்த அவரிடம் மத்தாய் கதையளக்க ஆரம்பித்தான்.

நட்டது என்ன கம்பாக்கும்?

வேறன்ன அடுக்கு முட்டான் தான் ‘

பாட்டா மெல்லிதாய் சொன்னார்.

அப்பெல்லாம் எத்தன வகை மரச்சீனிக் கெளங்கு இல்லையா பாட்டா ..கரியிலைப் பொதியன், உளிச்சோப்பன், நறுக்கு ,மஞ்சக்குட்டன், மாக்கொழுந்தன், கரிகாலன்.

கரிகாலன் கிழங்கும் காமுறித் தேங்காயும் போரும்ணாக்கும் பழைய வாக்கு இல்லியா பாட்டா மத்தாய் அவருக்கே மறந்து போன கதைகளை அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். பாட்டா முறுக்கான் முடிந்ததும் நீங்கினார்.

கெழங்க சுட்டு தின்னிருக்கியால .இங்க நாங்க மலையில சுட்டு தின்னுவோம்.இல்லேன்னா அவிச்சி , இல்லீயன்னா மயக்கி, இல்லேன்னா பெரட்டி தின்னுவோம்.  ஒரு நாளு பானை ஒடஞ்சி போச்சி  சுட்டு தின்ன பிடிச்சேல என்ன செய்தமுன்னு தெரியுமா?

ஒரு பழைய அடவு ஒண்ணு உண்டு காணிக்காரன்மாருக்க அடவு . மாக்கல்லு இல்லாத நல்ல கருங்கல்லு ஒன்னு எடுக்கணும். தீமூட்டி கங்கு நெறைய வார மாரி வரவு எரிக்கணும் . இந்த கருங்கல்ல அதில இடனும் பொறவு. கூவ கெழங்கு இலையளு எடுத்து அதில மரச்சீனிக் கெழங்க பொதிஞ்சு இந்த கல்லுக்க மேல வச்சிரணும் . கொஞ்சம் காந்தாரி மொளவும் உப்பும் கூட இட்டு பொதியலாம். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பொதியப் பிரிச்சுப் பாத்தா கெளங்கு முட்டை மாரி வெந்து இருக்கும். நீங்க இதெல்லாம் எண்ணு கண்டிட்டுண்டுடே பிள்ளாரே.

‘ஐயப்பன் பிள்ளரு நெய்யப்பம் சுட்டு

காக்கை கொத்தி கடலலிட்டு

முங்ஙாம் பிள்ளரு முங்ஙி எடுத்து

தட்டாம் பிள்ளரு தட்டி எடுத்து

வாங்ஙாம் பிள்ளரு வாங்ஙி பறிச்சு

தின்னாம் பிள்ளரு தின்னு கழிச்சு

ஐயப்பன் பிள்ளரு நெய்யப்பம் சுட்டு ‘

மத்தாய் அவன் பாட்டுக்கு பாடிக் கொண்டிருந்தான்.

————

மத்தியாஸானவர் ஜலத்தின் மீது அசைவாட கொண்டிருந்தார்.

அன்று போவாஸ் மகளுக்கு சடங்கு. சந்தடிகள் அடங்கிய பின்னிரவில் எங்கள் குழு போவாஸ் வீட்டு கொல்லையில் குழுமியிருந்தது. நாகராஜன் மட்டும் அன்று இல்லை. கர்நாடகத்துக்கு பட்டை லோடு கொண்டு போயிருப்பதாக மத்தியாஸ் அண்ணன் சொல்லிகொண்டிருந்தான். போவாஸ் மகள் சடங்குக்காகவே தனியே வாங்கி வைத்திருந்த மிலிட்டரி குப்பி எங்கள் முன் அசையாமல் நின்றிருந்தது.

லே மத்தாயி ஒனக்க மத்த கதை ஒண்ணு செல்லுடே கேட்டு கனமா நாளாவுது வாட்ச் கடை பாக்கியம் மேஸ்திரி அண்ணன் கேட்டார்.

அதுக்கென்ன செல்லலாய்ன் மொதல்ல ஒரணம் அடிப்போம் என்றான் மத்தாயி. ஏற்கனவே நாங்கள் யாரும் அறியாமல் வேறொரு குழுவோடு அவன் ஒரு ரவுண்ட் அடித்திருந்தான். அவனுக்குள் கதைகள் ஊறத்தொடங்கிவிட்டன. எல்லோரும் குப்பியைக் கவழ்த்தி ஆளுக்கு ஒரு கிளாஸ் அருந்தினோம். கனைத்தபடியே மத்தாய் ஆரம்பித்தான்.

‘அப்ப அமலபுஷ்பம்னு ஒருத்தி. பொற்றைக்கு வெறவு பெறக்க வருவா. எனக்கக் கூட நம்ம நாராஜனும், திட்டுவெளையிலேண்டு ஒரு சாய்ப்பு பயன் , பேரு மைதீன் கண்ணு ,  பொறவு நாவக்காட்டிலேண்டு ஐவின்னு ஒருத்தன்நாங்க நாலு பேரும் மட்டும். வெட்டி திருத்துத சோலிதாய்ன். நானும் ரெண்டு மூணு நாளா பைய்ய அனக்கிப் பாத்தேன். சரக்கு விழல்ல. நல்ல நயம் பெண்ணாக்கும். அது பாத்தா தெரியும். பெண்ணுவளுக்கு அவளுவள யாராவது பாக்கியாவன்னு தெரிஞ்சா ஒரு பவுசு வரும் .வெளிய காட்டேல்லேன்னாலும் நல்ல அனுபவம் உள்ளவன் கண்டுபிடிச்சிருவான். ஆணாப்பெறந்தவனுவளுக்கு அறியலாம் அவளுவளுக்க நடையில, நோட்டத்தில, மூச்சில தெரியுத மாற்றம். செல பெண்ணுவ எடக்கண்ணு போட்டு பாப்பாளுவ. நானும் ஒரு ஆழ்ச்சை சுத்திக் கறங்கினேன். செவிடு பறியலசும்மா ஒண்ணு முட்டிப் பாப்போம்னு பழக்கம் குடுக்கக் கிட்டப் போனா பசு எறியுது. ஆகா இது வேற எனமாக்கும்னு பிடிகிட்டிச்சு . நானும் விடேல மடக்கிரலாம்னு செவிடு பெருக்கிற்றே கறங்கினேன். அவ கண்டுகிடேல. நம்ம நாராயனும் ஆளு மோசமில்ல . அவனும் கண்ணடிச்சு, கையகாட்டிப் பாத்தான். குட்டி ஒரு மாரி சீறுது டே நமக்கு சரிபடாதுன்னு ஒதுங்கிட்டான்.

சாய்ப்பு பையனுக்கும் அமலாளுக்க மேல ஒரு கண்ணு உண்டும். ஆளு நல்ல வெளுப்பு சுந்தரக்குட்டனாக்கும், நானும் நாகராஜனும் ஒதுங்கின பொறவு இவண் வளைச்சிப் பாத்தான். நான் யூகிச்சது விழுந்தா அவனுக்குத்தான் விழும்னு . எங்கே எங்களையாவது கண்ணுக்க நேர பாப்பா. இந்தப் பயல ஒரு மயிருன்னுதானும் மதிக்கல. ஆரையும் ஒரு பில்லுன்னுதானும் மதிச்ச மாட்டா. அவளுக்க கிட்ட போவ விடாம எதோ ஒண்ணு எங்களையும் தடுத்து பிடிச்சுது.

நாவக்காடு ஐவினு பய கறுகறுன்னு இருப்பான் பாக்கியதுக்கு கறுப்புல ஒரு ஐஸ்வரியம் உண்டில்லா அதுவுமுமில்ல. ஆனா சம்பவம் வேற மாரியாக்கும் நடந்துது. என்ன ஆச்சின்னு தெரியாது. ஒரு நாளு நான் பாறை ஊற்றில குளிச்சு துணி அலக்கிட்டு வாறேன்.ஒரு கரைச்சலு சத்தம்.நான் ஒரு கிடுவுல ஒளிஞ்சு நின்னு கேட்டேன். அமலாதான் .ஐவின் பயலுக்க காலைக் கட்டிபிடிச்சோண்டு கண்ணீர் விட்டு கரையுதா.‘என்னை தொட்டிட்ட விட்டுராத விட்டா நான் சீரழிஞ்சு போவேன்.செறுப்பத்திலேயே மாப்பிள செத்துப் போனான். ண்ணேலேருந்து ஆரையும் நான் பாக்க மாண்டேன்.எனக்கப் பொன்னே உன்னைப் பாத்துதான் எனக்கு ஆசை வந்துது. இனி நீ என்னை விட்டுட்டா எனக்க பிரேததைத்தான் பாப்ப. ஒன்னாண சாவேன். அமலா அந்த பயலுக்க கால்ல விழுந்து கெடக்கியதப் பாத்ததும் தேகம் சிலித்துப் போச்சு மக்கா . ஒரு சந்தமில்லாத்த பய. பெரிய சாமர்த்தியமும் கெடயாது .ஆனா அவளுக்க மனசு அவன்டயாக்கும் விழுந்துது. உடம்பவிட மனசுக்க பெலமாக்கும் வலிது.

சிறு இடைவெளிவிட்டு நிறுத்தி மீண்டும் ஒரு கிளாசை கவிழ்த்துவிட்டு தொடர்ந்தான்.

ஆனா விதி அதைவிட வலிது. இந்த இடைக்கு பெருஞ்சாணி மலைக்கு ஒரு சோலியாட்டுப் போனேன். அவளைக் கண்டேன். பாவம் .அந்த பய வயற்றில குடுத்திட்டு ஓடிட்டான்.இவ இப்ப சீரழிஞ்சு கெடக்கியா.மரிச்சு போறதுக்கும் வழியில்ல கையில பிள்ள உண்டு. எனக்கு மறுக்கமாயிட்டு பாத்துக்கோ. அமலபுஷ்பம் பாவப்பட்ட பெண்ணடி . நான் தொட்டிதாய்ன் எந்நாலும் ஒருக்காலும் இவளப்போல பெண்ணுவளை தெற்றாட்டு செல்ல மாண்டேன்.

அன்னைக்கு கரலுபொட்டி கரஞ்சிட்டெண்டே . அது ஒரு மாரி கரையெக்கம். நெஞ்சு பொட்டிக் கமறி .

அமலா..அமலா

இரண்டு முறை அவள் பெயரைச் சொல்லிவிட்டு , இப்போதும் அழுவதுபோல் மூக்கைச் சிந்தினான். பிறகு மண்ணையே ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்து சொன்னான்.

காந்தாரிப் படப்பன்ல கசப்பு இல்லேன்னா அது என்னடே மயிரு, அதென்னடே தள்ளையத்தின்ன காந்தாரிபடப்பன்.    

***

 

-சிவசங்கர் எஸ் ஜே

 

 

 

சொற்குறிப்புகள்

தாக்கல் காடு {பஃப்பர்}

காப்பு காடு {ரிசர்வ்}

புறுத்திச் சக்கை அன்னாசிப் பழம்

நூறுமுட்டான், அடுக்குமுட்டான், சுந்தரி வெள்ளை,காந்தாரிப் படப்பன்

மரச்சீனிக் கிழங்கு வகைகள்

பற்றம்-கூட்டம்

தெகையாது பத்தாது

உணக்கக் கிழங்கு உலர்க் கிழங்கு

சவைக்க-அரைக்க

படப்பு– புதர்

பட்டி-நாய்

அப்பியாசம்வித்தை

பாட்டம்-குத்தகை

குருமிளகு நல்லமிளகு

தொலி-தோல்

நவறு நகம்

தள்ளயத்தின்ன-பாராட்டாய்சொல்லும் வசவு

வாற்று-வாடி சாராயம்

ஊறலு சாராயத்திற்கான ஊறல் பானைகள்

தணுப்பு-குளிர்

கச்சோடம்-வியாபாரம்

மயமா-நிறைய

வெறயலு நடுக்கம்

சுழிஞ்சு-தளர்ந்து

சங்கிராண்டம் ,குந்த்ராண்டம் பெயரற்ற அல்லது சட்டென பெயர் மறந்துபோன பொருட்களை குறிக்கும் சொல்

ஆக்கொத்தி வளைந்த வெட்டுக்கத்தி

நறுனாட்டிக் கிழங்கு-நன்னாரிக் கிழங்கு

ஊராண்டிகள்- நாட்டுமிராண்டிகள்

செறுப்புக்கார-சிறு வயது

சோப்பன்- கசப்பு சுவைகொண்ட மரச்சீனி கிழங்கு

தாழோட்டு-கீழ் பக்கம்

சாரம் லுங்கி கைலி

நெஞ்சூக்கம்-தைரியம்

மசை சிறு பெண்

ஆனப்பாலு-யானைப் பால், காட்டில் பாறைகளில் உறைந்து கிடக்கும்.

பேடி பயம்

திலுப்பு திருப்பம்,வளைவு

அனக்கம் அரவம் ,சத்தம்அசைவு

நெலவிளி கூக்குரல்

தலைக்கட்டு போதை

தூற முடுக்குது வயற்றைக் கலக்குவது

ஒத்தாசிக்கு-ஒத்தாசை ,உதவி

இளங்குடிக்கு காலை உணவு

பரத்தி விரித்து வைத்து

பச்சவெட்டு-மரத்திலிருந்து பறிக்கப்பட்ட காயாத தேங்காய்

பிலா இலக்கு  கோட்டி பலா இலையை கொன்னை போல் பின்னி கஞ்சி குடிக்க பயன்படுத்துவது  

காணச்சம்மந்தி- கொள்ளுத் துவையல்

கரியிலைப் பொதியன், உளிச்சோப்பன், நறுக்கு ,மஞ்சக்குட்டன், மாக்கொழுந்தன், கரிகாலன்.

அடவு தொழில்நுட்பம்,வித்தை

கங்கு-தீக்கனல்

கூவக்கெழங்கு– ஒருவகைக் கிழங்கு

பொதிபொட்டலம்

சடங்கு– பூப்புனித நீராட்டு

பொற்றை– சிறு குன்று

எடக்கண்ணு– பக்கவாட்டில் பார்ப்பது

ஆழ்ச்சை– வாரம்

செவிடு பறியல– வித்தைகள் பலிக்கவில்லை

சுந்தரக்குட்டன்- அழகன்

பில்லு-புல்

துணி அலக்கிட்டு– துணி துவைத்துவிட்டு

கரைச்சலு– அழுகை

கிடுவு– பாறை பிளவு/மறைவு

இடைக்கு– சில நாட்களுக்கு முன்

மறுக்கமா-சங்கடமாக

பெண்ணடி-பெண் பிள்ளை

தொட்டி- பொறுக்கி

கரலுபொட்டி இதயத்தில் இடி விழுந்ததுபோல்

கரையெக்கம்-அழுகை

தெற்றாட்டு– தவறாக

Please follow and like us:

1 thought on “காந்தாரிப்படப்பன் – சிவசங்கர் எஸ் ஜே

  1. மத்தியாசுக்க கூடயிருந்து கதை கேட்ட சுகமும். வயிறுமுட்ட கிழங்கு திண்ணு வீத்திருக்கு.

    கதை ஒரு அருமையான நிலப்பரப்பில் இழுத்து செல்கிறது.
    ‘ அருமை’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *