1)
அவன் கைகள் ஒவ்வொன்றும்

ஐந்து தலை நாகம்

அவன் தழுவினால்

உடல் நீலம் பாரித்துவிடும் என்பதறிந்தும்

தன்னை அவனுக்கு

தழுவக் கொடுத்தாள்

புணர்ச்சி முடிந்ததும்

விலாப்பகுதி புடைத்துப் பிளந்து வெளிவந்த சிறகை

வானளாவ அசைத்து

பறந்து சென்று விட்டான்

அவள் மார்பகத்தில் சொட்டுச் சொட்டாய் துளிர்த்திருந்த

விஷத் துளிகளை காற்று நக்கி குடித்தது

ஏழு குளத்தில் குளித்துமவள்

உடல் நனையவில்லை

இப்போதவள் குளிப்பது

எட்டாவது குளம்

குளத்தில் தெரிந்த வானத்தின் முகத்தில் கோபமாக ஒரு குத்து விட்டாள்

ஆயிரம் தலை கொண்ட நாகமாக மாறியது குளம்

அதில் அவள் அமிழ்ந்து ஐக்கியமானாள்

 

2)
பிரம்மாண்ட வெளியின் முன்

பரந்து விரிந்த கடலின் முன்

ஒரு பெருமலையின் முன்

ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் முன் எல்லா மனிதனும் ஒரே மனிதன்தான் எல்லா மனிதனுக்கும் ஒரே குரல்தான்

ஓவென்று என்று ஓங்கி கத்துவான்

தன் குரலை கொண்டு ஒரு பெரும் தனிமையை அதன் பேரமைதியை

கிழிக்க முயற்சிக்கும் செய்கையது

சதைச் சோற்றை ரத்த குழம்பில் கலந்து பிசைந்து அள்ளிப்புசிக்கும் காளியின் ஆங்காரத்துக்கு இணையான

ஆங்காரமது

அகோரமாக கண்டஞ் சங்கிலியால் இரும்பு பலகையில்

கட்டி வைத்த மாவீரன் தகர குரலில் கர்ஜிப்பது போலிருக்கும் பெருஞ்சீற்றமது

எல்லோர் முன்னும் மறைத்து வைத்திருந்த

தன் பைத்தியத்தனத்தை பிரம்மாண்டத்தின் முன் திறந்து வைக்கும் ஒரு உபசடங்கு அது

 

3)

நிலவுக்கும் பாஷோவிற்கும்

பிறந்த மலைதான் மட்சுமா

தாங்க முடியாத தவிப்பில் பால் கட்டிய மார்போடு நிலா வெளியே வந்து

மட்சுமா

ஓ மட்சுமா

மட்சுமா என்று மலையை எழுப்பி மேக மறைப்பில் பாலூட்டுகிறது

சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து நிலா பார்க்கும் திருவிழாவைக் கொண்டாட வந்த மக்கள் தாய்மையின் பூரிப்போடு

அமர்ந்திருக்கும் நிலாவைப் பார்த்து ஆனந்திக்கிறார்கள்

ஹொக்கைமா பூக்களை வைத்து வழிபடுகிறார்கள்

பனி உதடுகளில்

பாலருவி வழிய கிடக்கும்

மலை குழந்தையை

மடியில் கிடத்திக் கொண்டு

தாய்மையின் ஒளியால் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது நிலா

 

4)
உடல் என்பது ஒரு தனி எழுத்து

நாலைந்து பேர் கூடி நின்றால்

நாமொரு வார்த்தையாகிவிடுகிறோம்

நம்மை யாராவது எழுத்துகூட்டி படிக்கிறார்கள்

சொற்களின் சேர்மானத்தை வைத்து

இது உரைநடையா கவிதையா என்றும் சொல்லிவிடலாம்

உதாரணமாக

உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் கூட்டம் கூட்டமாய்

அகல் விளக்கேற்றும் பெண்களை

நல்ல கவிதைகள் என்று

விரும்பிப் படிக்கின்றன

தீப முலைகளில்

வெளிச்சப் பாலருந்த வரும் யட்சிகள்

***

-கார்த்திக் திலகன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *