“உங்கள் கொம்புகள் எதற்காகப் படைக்கப்பட்டன. உங்கள் கால்களிலிருக்கும் வேகம் புலிகளுக்கோ சிங்கங்களுக்கோ உண்டா? இது பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?  தப்பிப் பிழைத்தலே உங்கள் இன அடையாளமாகிப் போனதன் அரசியல் பின்னனி குறித்து என்றாவது தேடியிருக்கிறீர்களா?”
முதல் முதலாய் அவரை நாங்கள் சந்திக்கையில் அவர் சொன்னது.
அவர் கொல்லப்பட்டார்.
உண்மையில் அவர் மரணம் இயற்கையானது கிடையாது. அவரைப் படுகொலை செய்தார்கள். மெதுமெதுவாக சித்திரவதை செய்து அதில் இன்பங்கண்டே கொன்றார்கள். தனிப்பட்ட தீங்கென எதுவும் அவரால் அவர்களுக்கு ஏற்படவில்லை. அது அவர்களுக்கும் தெரியும். எதிர்காலம் என்ற ஒன்றில் அவரும் வாழ நேரிட்டால் அவர்களை எதிர்க்கும் பெருஞ்சக்தியாக உருவெடுப்பார் என்ற அச்சத்தால் அவரை திட்டமிட்டுக் கொன்றார்கள்.
அடக்குமுறைகளை, உரிமைப் பறிப்பை, இன ஒடுக்குமுறையை எதிர்த்து திமிரிக்கொண்டு மூர்க்கமாகப் போராடிய ஓர் முரட்டு ஓநாயை சில நரிகளும் புலிகளும் மான்களும் காட்டையே கையகப்படுத்தும் சிங்கங்களின் பேராசையை நிவர்த்திக்க அவை போட்ட எச்சில் இறைச்சித் துண்டுகளுக்கு ஆசைப்பட்டு ஓர் கூட்டு வேட்டையில் துரோகத்தை ஆயுதமாகக் கையாண்டு கொடூரமாய்த் தீர்த்துக் கட்டின.
பரந்த உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் வாழ்க்கைக்கான போட்டி உணவிலிருந்துதான் தோன்றியது. காலமும் பரிணாமமும் இணைந்து இப் போட்டியை பல வடிவங்களாகப் பிரித்து அனைத்தையும் அரசியல் என்ற ஒற்றைப் புள்ளிக்குள் அடக்கின.
ஆம். எங்கள் காட்டிலும் அரசியல் புகுந்தது.
நான்கு பக்கமும் நீர் நிலைகளால் சூழப்பட்டு கரைநெடுகவும் கடுங்கொடிகளால் அரண் அமையப் பெற்றதுமான செழித்த கருங்கொடித்தீவுதான் எங்களது காடு. மான்களும் முயல்களும் நரிகளும் புலிகளும் குருவிகளும் பருந்துகளுமாக தமக்கென இயற்கை நிர்ணயித்த விதிகளுக்கமைய வாழ்ந்து கொண்டுடிருந்தன. இங்கு அனைத்து விலங்குகளுக்கும் குடித்தொகைக்கான ஓர் அளவுகோலிருந்தது. ஓர் நரியோ புலியோ தன் பசிக்கு மட்டுமே வேட்டையாடும். தில்லையாறு பெருக்கெடுக்கும் மேற்கு மலையிலிருந்து அது சங்கமிக்கும் கிழக்கு சமுத்திரக் கடற்கரைவரை நீண்டிருந்த மேய்ச்சல் தரையே மான்களான எங்களுக்கும் எருமைகளுக்கும் வாழ்வழிக்கும் நிலமாகவிருந்தது. குளிர்காலம் முடிந்து கோடை ஆரம்பித்து விட்டால் எலிகளும் முயல்களும் வகை தொகையின்றிப் பெருகத் துவங்கிவிடும். அவற்றின் வளைகளால் மேய்ச்சல் நிலம் பெரிதும் நாசமாகும். இத் தருணத்தில் தான் நரிகள் வேட்டையில் குதிக்கும் கொழுத்த ஆண் முயல்களும் எலிகளும் அவற்றின் உணவாகும். எமது மேய்ச்சல் தரையும் பாதுகாக்கப்படும். குளிர் காலத்தில் மான் மரைகள் எருமைகளின் இனப்பரம்பல் அதிகரிக்க புலிகளில் வேட்டையுக்திகளால் அவையும் கட்டுப்படுத்தப்படும். தீவைக் குறுக்கறுக்கும் தில்லையாறு அவரவர் மேய்ச்சல் நிலங்களில் பங்கிடப்பட இருப்பிடங்களும் எட்டுத் திசையிலுமாக பிரிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் தாண்டி பின்பற்றப்பட்டு வந்தது.
இதுதான் காட்டில் அனைத்து விலங்கினங்களும் ஏற்றுக் கொண்டுவாழும் ஜனநாயகம். அது கூட தீவுக்கப்பால் யானைகளோடு அரியனைக்கான போரில் தோற்றுக் கொண்டிருந்த சிங்கங்கள் தீவைக் குறிவைக்கும் வரை மட்டுமே.
சூழ்ந்திருந்த நீர் நிலையைத்தாண்டி மறுகரையில் யானைகளின் ராச்சியமிருந்தது. யானைகளும் சிங்கங்களும் அடிக்கடி மோதிக் கொள்ளவதாக பருந்துகள் செய்தி கொண்டுவரும். கருங்கொடித்தீவுக்கு சம்பந்தமேயில்லாத செய்தியாகையால் நாங்கள் கண்டுகொள்ளவதில்லை. அது போன்றதோர் வழக்கமான நாளில் தான் அவை செய்தியொன்றைப் பரப்பின. யானைகளின் தோளில் ஏறி சிங்கங்கள் சில கருங்கொடித்தீவின் கரையை அடைந்திருப்பதாகவும். அரணாகவிருந்த கருங்கொடிகளை அகற்றி முகாமிட்டுமிருப்பதாகவும் அவை சொன்ன செய்தி சிறு சலசலப்பைத்தான் அப்போது ஏற்படுத்தியிருந்தது.
பூரண பௌர்ணமி இரவொன்றில். நரிகள் எழுப்பிய மரண ஓலம் காற்றைக் கிழித்து காட்டையே உலுக்க ஊளைச் சத்தம் வந்த வட திசை நோக்கி விரைந்த தலைமை விலங்குகள் கண்ட காட்சி நெடுங்காலமாய் கருங்கொடித்தீவின் வரலாறு சந்திக்காகதது. ஆறு புலிக்குட்டிகள் கொடூரமாய்க் கொல்லப்பட்டிருந்தன. அவற்றில் கழுத்துகளில் பதிந்திருந்த வேட்டைப் பற்கள் சிங்கங்களுடையதுதானென பருந்துகளின் சாட்சியோடு நிரூபனமானது. மட்டுமில்லாமல் கருங்கொடித்தீவைக் கைப்பற்றி சிங்கங்களின் பரிபாலனத்திற்குட்பட்ட வனமாக மாற்றும் கபடத்தனமும் இதில் ஒழிந்திருப்பதாகவும் பருந்துகள் எச்சரித்தன. கேட்ட இளம் புலிகள் கொந்தளித்து ஈவிரக்கமற்ற இப்பாதகச் செயலைப்புரிந்த சிங்கங்களை பழிதீர்த்தேயாக வேண்டுமெனவும் உறுமத்துவங்கின. சில முதிய புலிகள் அவற்றின் கோபத்தைத் தனிக்க முற்பட்டு பேச்சுவார்த்தைதான் இதற்கான தீர்வு சிங்கங்களோடு மோத முற்பட்டால் இழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் திட்டவட்டமாகக் கூறின. அவற்றின் பேச்சை நம்பிய இளம் புலிகள் ரத்தத்திலகமிட்டு முதிய புலிகளை சிங்களோடு பேச அனுப்பி வைத்தன. புலிகளுக்கு இழைக்கப்பட்ட இவ் அநீதி மான்களான எமக்கும் ஏற்படலாம் என்ற அபாய எச்சரிக்கை சில இளமான்களால் வலியுறுத்தப்பட்ட போதும் எமது கூட்டத்திலிருந்த தலைமை மான்கள் சிங்களோடு கொண்டிருந்த நட்புறவைக் காரணங்காட்டித் தட்டிக் கழித்தது மட்டுமில்லாமல் புலிகளின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுத்தரப்பாக நிற்கவும் மறுத்தன. எதிர்காலத்தை உணர்ந்த அவ் இளமான்கள் கூட்டத்தின் கட்டுப்பாட்டையும் மீறி புலிகளுக்கு ஆதரவாய் குரலும் கொடுப்பதாக முடிவெடுத்து இளம் புலிகளோடு போய் ஒட்டிக் கொண்டன.
கருங்கொடித்தீவில் அரங்கேறிய படுகொலையை தலைகீழான செய்தியாக்கி சிங்கக் குருளைகள் கொல்லப்பட்டதாக தீவுக்கு அப்பாலுள்ள பருந்துகள் புரளியைப் பரப்ப வெகுண்டெழுந்த ஏனைய சிங்கங்கள்  யானைகளோடு இணைந்து வேட்டை விதிமுறைகளை மீறி கண்ணில் சிக்கிய அத்தனை புலிகளையும் கொன்று பலமாகக் கர்ஜித்தன. தீவுக்கப்பால் சிறு கூட்டமாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த புலிகள் இத்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்டைவிட்டும் சிதறி ஓட மிஞ்சியவை கருங்கொடித்தீவில் அடைக்கலம் புகுந்தன.
கிழட்டுப் புலிகளை நம்பிப் பலனில்லை என்பதைக் கண்டுகொண்ட இளம் புலிகள் சிங்கங்களுக்கெதிரான யுத்த அறிவிப்பை வெளியிட்டன. அடுத்த பௌர்ணமி இரவில் புலிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல் வேட்டை கருங்கொடித்தீவின் கரையில் அமைந்திருந்த சிங்கங்களின் முகாமை நிர்மூலமக்கி சில முக்கிய தலைமைச் சிங்கங்களையும் பலியெடுத்தது . எஞ்சியிருந்த சிங்கங்கள் யானைகளின் உதவியோடு நீர் நிலையை ஊடறுத்துப் பின்வாங்கின. புலிகளுக்குக் கிடைத்த இவ்வெற்றியை தாக்குதலுக்காகப் பிரிந்த குழுக்கள் ஒற்றுமையாகப் பங்கிடாமல் தாமே வெற்றிக்குக் காரணமென போதையில் அடித்த தம்மட்டம் புலிகளுக்குள்ளான கோஷ்டிப் போராக மாறி விளைவில் புலிகளை முப்பத்திமூன்று விடுதலைக் குழுக்களாகப் பிரித்தது மட்டுமில்லாமல் புலிகளை புலிகளே கொல்லவும் செய்ததது. அறிவிலித்தனமான இச் சண்டையில் பல திறமையான தலைவர்களை புலிகள் இழக்க நேரிட்டது.. போராடச் சென்ற மான்களும் குழம்பி தத்தமக்கு ஐக்கியமான புலிகளின் கூட்டங்களில் இணைந்து வேறு வேறாகின.
நாளாக நாளாக கொலைகள் மூலமான அழித்தொழிப்பானது காரணமின்றி செய்தவர் யாரென்பதற்கான ஆதாரங்களுமின்றி நடந்தேறியது. குற்றச்சாட்டுகளை ஒருவர்மாறி ஒருவர் வைத்தனர். வகை தொகையின்றி மான்களும் முயல்களும் வேட்டையாடப்பட்டு காட்டின் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. நரிகள் ஒதுங்கிய இடம் பருந்துகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னொருனாளில் காட்டின் பெருத்த விருட்சத்தின் நிழலில் கூடிய மான்கள் சில எமது கூட்டத்தை தலைமை தாங்க வந்திருப்பதாக அறைகூவல் விடுத்தன. திட்டமிட்டு நடப்பது வேட்டையல்ல அதுவோர் அழித்தொழிப்பென்பதை எமக்கு அவை காட்டின. அளவுக்கு மீறி வேட்டையாடப்படும் மான்களையும் முயல்களையும் தீவுக்கு அப்பாலுள்ள சிங்களின் முன் படையலிட்டுக்கு தமக்கான ஆதரவை தலைமைச் சிங்கங்கள் பெருக்குவதாக அவை தெளிவுபடுத்தின. இதனால் யானைகள் வேட்டையாடப்படுவது குறையும். எனவே யானைகளும் இத்திட்டத்திற்கு நேரடியான ஆதரவை வெளிப்படுத்துகின்ற என்பதையும் இதுதான் அரசியல் எனவும் பெருத்த விருட்சத்தின் கீழ் கூடிய தலைமையேற்ற மான்கள் போதித்தன. சிங்கத்தை எதிர்ப்பது போல் புலிகள் நடத்துவது தந்திரமாக எழுதப்பட்ட நாடகம் என்பதையும் காட்டின. அவற்றின் பேச்சு எம் அனைவரையும் வசீகரித்தது. புலிகளின் புரட்சிக் குழுவை புலிகள் நம்பியதை விடவும் நாம் மரத்தின் கீழ் கூடிய தலைமை மான்களை நம்பினோம். ஆதரவுக் குரல் கொடுத்த மான்களை போராளிகளாகவும் புலிகளின் குழுக்களில் இருப்போரை துரோகிகளாகவும் தரம் பிரித்தன. ஆனால் வகைதொகையின்றி வேட்டையாடப்படும் மான்களின் எண்ணிக்கையோ அதிகரித்தது மட்டுமில்லாமல் மேய்ச்சல் தரையில் புலிகளும் சிங்களும் கூட்டமாக எம்மை வேட்டையாடின. தலைமை ஏற்ற மான்களோ பழியை புலிகளின் மீது மட்டுமே போட்டன. அவர்களின் போராளிகளின் மத்தியில் சிறு சலசலப்புத் தோன்றவும் சிங்கங்களிடமிருந்து புல்லுக் கட்டுக்களைக் கொண்டுவந்து மரத்தடியில் கொட்டி, சிங்கங்கள் நம்மொடு ஓர் புரிந்துணர்விற்கு வந்திருப்பதாக நியாயப்படுத்தின. புல்லுட்டுக்கட்டுகளில் மயங்கிய பெரும்பான்மையான மான்கள் சிங்கங்கள் நமக்கு அநியாயம் இழைக்காதென ஒத்தூதின.
எங்கள் மான் கூட்டத்தில் மட்டுமல்ல புலிகளின் பக்கமிருந்தும் குட்டிகளையும் துணையையும் இழந்த பெண்களின் ஒலம் கருங்கொடித்தீவின் காற்றில் கலந்து தினமும் ஓர் சோக கீதத்தையே இசைத்தது. தில்லையாறு கருங்சிவப்பாகி ஓடிக் கொண்டிருந்தது. எலிகள் எங்கோ இடம் பெயர்ந்து விட்டன. இப்போது எலிகளின் வளைகள் புலிகளால் கைப்பற்றப்பட்டு பதுங்கு குழிகளாக மாற்றப்பட்டிருந்தன. புலிகளும் மான்களும் ஒருவரையொருவர் பரம வைரிகளாகப் பார்க்கும் நிலை உருவாகியது. மேய்ச்சலுக்குப் போகும் மான்கள் அரைகுறையாகத் திரும்பி வந்தன. வடதிசை மேய்ச்சல் தரையில் பன்நெடுங்காலம் வாழ்ந்து வந்த மான்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி அடித்து விரட்டப்பட்டன. புலிகளொடு கூட்டுச் சேர்ந்திருந்த மான்கள் அதிருப்தியால் சிங்கங்களுக்கு எதிரான போராட்டக் களத்திலிருந்து வெளியேறின. கடுஞ்சினங் கொண்ட புலிகள் விலகிய மான்களை தேடித் தேடி வேட்டையாடின. முப்பத்து மூன்று கூட்டமாய் புலிகள் பிரிந்திருந்தாலும் மான்களான எமக்கு அநீதியிழைப்பதில் அவற்றிடையே வேறுபாடு எதனையும் காண முடியவில்லை. எமது இருப்போ இங்கு கேள்விக் குறியாகியது. தலைமை தாங்குவதாகக் கூறிய மான்களோ சிங்கங்களுக்கு எம்மை விற்று பதிலுக்கு சன்மானமாகக் கிடைக்கும் புல்லுக்கட்டுகளை பங்கு பிரிப்பதிலேயே குறியாய் இருந்தன.
புலிகளுக்குள் நடந்த உட்போர் முப்பத்தி மூன்று கூட்டமாய் கலைந்திருந்த புலிகளை தனித்த இயக்கமாக்கியது. ஏனைய முப்பத்தியிரண்டு குழுத் தலைமைகளும் வீழ்த்தப்பட்டன. கருங்கொடித் தீவை புலிகள் முழுதாக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. எல்லையில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருந்தது.
அச்சமும் எச்சரிக்கையும் தீரா வேட்கையும் பழிவாங்கலும் துரத்தலும் துரோகமும் எம்மை நிலை குழைவுக்குள்ளாக்கி பட்டனி போட்டிருந்ததோர் வழக்கமான பௌர்ணமி இரவில் பெருத்த இடியொன்று தெற்கு மலை உச்சியில் இறங்கியது. காடே பகல் போல் பெருவொளியால் சூழப்பட்டது. அனைத்து காட்டு விலங்குகளும் மேற்கு நோக்கி விரைந்தோம். அனைவர் முகத்திலும் ஆனந்த அதிர்ச்சி, கனவிலும் கூட நினைத்திராத காலத்தால் என்றோ மறைந்து போன ஒருவரின் மீள் வருகை கனவா? நனவா?.
விழிகள் சிவந்து பிடரி மயிர்கள் சிலிர்க்க ஆணவத்தோடும் கம்பீரத்தோடும் நின்ற ஓநாயை நாங்கள் கண்டோம்.எங்கள் காட்டின் ஞானத்தந்தை, எமது வாழ்க்கை முறைய, காட்டின் ஒழுங்கை. நாங்கள் நம்பிக் கடைப்பிடித்த காட்டு ஜனநாயகத்தை எமக்குப் போதித்த அப் பெருஞானியின் மீள் வருகை எம்மை அழ வைத்தது. காட்டை சூழ்ந்திருக்கும் அபாயம் அடியோடு இல்லாமல் போகுமென நம்பினோம். சிங்கங்களுக்கு இதுவோர் அபாய எச்சரிக்கை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இதே சிங்கங்களின் மூதாதையரே எமது கருங்கொடித்தீவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தனர். எமது மூதாதையரின் ஓலமும் அழுகையும் தெற்கேயிருந்து ஓர் ஓநாய்ப்படையை வரவழைத்தன. ஓநாய்கள் யுத்த தர்மத்தை கடைப்பிடிப்பவை. சிங்கங்களின் கூட்டு வீரம் ஓநாய்களின் முன் தவிடுபொடியாகி தாக்குதலில் சிக்கிய சிங்கங்கலெல்லாம் பஷ்பமாகிப் போயின. ஓநாய்களின் யுத்த தந்திரத்திற்கு ஈடுகொடுக்க முடியாச் சிங்கங்கள் சின்னாபின்னமாகி ஈற்றில் சரணடைந்து கருங்கொடித்தீவை விட்டும் வெளியேறி யானைத்தீவில் தஞ்சமடைந்தன. பெருந்துயரிலிருந்து எமது மூத்த சந்ததியை மீட்ட அவ் ஓநாய்க் கூட்டத்தின் தலைவரே மீண்டும் எமக்காய் இறங்கியிருந்தார்.
சிங்கங்கள் தமது முகாம்களைக் கைவிட்டு யானைத் தீவுக்குச் தப்பிச் சென்றன. புலிகள் அவர் முன் மண்டியிட. கொடுங் கோபதிலிருந்த அவ் வீர ஓநாய் முக்கிய புலிகள் சிலதை அவ்விடத்திலேயே வதைத்தார். தலைமையேற்றிருந்த மான்களோ கூட்டத்தின் நலனுக்காகவே பாடுபவதாக நடுங்கியபடியே காலில் விழ “இடைவெளி நிரப்ப வந்த கோழைகளே விலகிச் செல்லுங்கள்” என்ற அவரின் உறுமல் தீவுக்கப்பாலிருந்த யானைகளையும் உலுக்கியிருக்கும்.
தெற்கு மலைத்தொடரிலேயே அவரின் பாசறை அமைந்திருந்தது. வரலாற்றுக் கதைகளிலிருந்து அவர்பால் ஈர்க்கப்பட்டிருந்த என்போன்ற இள மான்கள் பலர் அவர் முன் நின்றிருந்தோம். போராட வேண்டுமென்ற வேட்கையைத் தவிர வேறெதுவும் எம்மிடமிருக்கவில்லை.
“புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் இருப்பதைப் போல் கூரிய நகங்களோ வேட்டைப் பற்களோ எதிர்க்கும் பலமோ எம்மிடமில்லையே தலைவா?”
அவர் புன்னகைத்தார். அதில் இகழ்ச்சியிருந்தது.
“உங்கள் கொம்புகள் எதற்காகப் படைக்கப்பட்டன. உங்கள் கால்களிலிருக்கும் வேகம் புலிகளுக்கோ சிங்கங்களுக்கோ உண்டா? இது பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?  தப்பிப் பிழைத்தலே உங்கள் இன அடையாளமாகிப் போனதன் அரசியல் பின்னனி குறித்து என்றாவது தேடியிருக்கீறீர்களா?”
அவர் பதில் எமக்குள் ஓர் தெளிவைக் கொடுத்தது. பெரு விருட்சத்தினடியில் ஞானம் பெற்ற மான்கள் அவிழ்த்து விட்ட கதைகள் போலி அரசியல் கபட வார்த்தைகள் என்பதையும் கண்டு கொண்டோம். புலிகளின் பின்னால் சென்ற மான்கள் திசை திருப்பப்பட்டு ஏமாற்றப்பட்ட அரசியலும் புரியத்துவங்கியது.
எமக்குள்ளிருந்த கொந்தளிப்பையும் ரௌத்திரத்தையும் உளியாக்கி போராளியாக எம்மை செதுக்கினார். கருங்கொடிப் புதர்களுக்குள் பதுங்கியிருந்த சிங்கங்களின் தலைகள் கூர்மையாக்கப்பட்ட எமது கொம்புகளால் கிழிக்கப்பட்டன.
ஓநாய்களின் யுத்த தந்திரங்களையும் நெறிகளையும் மான்களில் கண்ட சிங்கள்கள் பின்வாங்கின. அடங்கிவாழ்ந்த ஓர் இனம் காட்டின் பாதுகாப்பையே கையிலெடுத்ததை புலிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ச்சியான நாட்களில் காட்டில் எவ்விதக் குழப்பமும் ஏற்படவில்லை. சிங்கங்களினதும் புலிகளினதும் இவ் அமைதி எமக்குள் பெருத்த சந்தேகத்தைக் கிழப்பினாலும் வாழ்க்கை முறை வழமைக்குத் திரும்பியது.
“கருங்கொடித்தீவை போர் மேகம் சூழவிருக்கிறது. எதிர்த்தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் தயாராகவிருங்கள்”
அவர் எச்சரித்தார்.
“அனைத்து வழிகளிலும் தயாராகவே இருக்கிறோம் தலைவரே. தோழர்கள் எவரும் சோர்வடையவில்லை”
“வீரத்தில் குறையேதுமில்லை. உங்கள் உணர்வுகள் சீண்டப்படலாம். சூழ்ச்சிகளும் தந்திரங்களும் நம்மை பலவீனமாக்கலாம்”
“சூழ்ச்சிகளா? வழியேயில்லை தலைவா”
“மஹ்ம் பதுங்கிப் பாய்வது புலிகளினதும் சிங்கங்களினதும் பிறவிக் குணம் அதை முறியடிப்பது சுலபம் ஆனால் நமது விழிகளைக் கூர்மையாக்க வேண்டியது துரோகமெனும் கொடு ஆயுதமொன்றுக்குத்தான்.”
“துரோகமா?”
அடுத்த நாளிலிருந்து தலைமை மான்களும் காட்டிலிருந்து தலைமறைவாகின. பெருத்த மரத்தடியில் சில போராளி மான்களின் நடமாட்டத்தை மட்டுமே கண்டோம். காட்டில் நிலவிய அசாத்திய அமைதி எம்மை கிலிகொள்ளச் செய்தது. எதற்கும் தயாராகவிருந்தோம்.எமது ஒற்றர் விழிகள் எட்டுத் திக்கும் ஊடுவியிருந்தன. அமைதியும் நெடுநாட்கள் நிலைத்திருக்கவில்லை. மேற்குப் பக்கமாக சிங்கப்படை முன்னேறி வருவதாக செய்தி கிடைத்தது. தோழர்கள் உசாரானோம். ஏற்கனவே திட்டமிட்டபடி மேற்கு மலையில் முயல்களின் உதவியோடு அமைக்கப்பட்ட அகழிகள் தயாராகவே இருந்தன. கொம்புகள் நீண்டு வளர்ந்திருந்த மான்கள் படை மலை இடுக்குளகிலும் முற்புதர்களிலும் பதுங்கியது. ஒற்றர் செய்திகளின் படி சிங்கங்கள் மேற்குப் பக்கமாக மட்டுமே ஊடுவியிருந்தன.
“முன்னறிவித்து விட்டு சிங்கங்கள் தாக்குதல் தொடுப்பது உங்களுக்குள் சந்தேகத்தை கிளப்பவில்லையா?”
அவர் விழிகளில் சந்தேகம் குடி கொண்டிருந்தது.
“இதுவரை களத்தில் இறங்காத பெரும்படை அவர்களிடமிருப்பதால் அவர்கள் தைரியமாக போரை அறிவித்திருக்கலாம் அல்லவா தலைவரே”
“பலம் பொருந்திய சிங்கச் சேனை கருங்கொடித்தீவின் கரையில் முகாமிட்டும் புலிகள் இன்னும் அமைதியாக இருப்பதன் சூட்சுமம் புரியாமல் பிதற்றாதீர்கள்”
“இப்போரில் நாம் பின்னடைந்தாலோ தோல்வியுற்று அழிந்தாலோ அது புலிகளுக்கு நன்மையைத்தானே கொடுக்கும். புலிகளின் அமைதிக்கு அது காரணமாக இருக்கலாம்?”
“ஹா ஹா ஹா”
“தலைவரே”
“நாம் போரிடுவது எமது காட்டை மீட்கத்தானே. புலிகளின் போராட்ட நோக்கமும் அதுவாகவே இருக்க. அவர்கள் பின்வாங்குவது ஏன்?
இக் கேள்விக்கு எம்மிடம் பதிலிருக்கவில்லை.
“படையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை வடக்கு நோக்கியும் திருப்புங்கள். இன்றோடு பல புதிர்கள் அவிழ்க்கப்படலாம்”
ஓநாயின் உத்தரவுக்கமைய. படையின் ஒரு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வட திசை எல்லையில் நிறுத்தப்பட்டது. மேற்கே அனுப்பட்ட படை மூன்றாகப் பிரிக்கப்பட்டு மலையின் இரு முனைகளிலும் இரு தொகுதிகளாக சிங்கங்கள் கரையில் அமைத்திருந்த முகாம் நோக்கி நகர. எஞ்சிய படைப்பிரிவு சிங்கங்களை எதிர்க்கக் காத்திருந்தது. எதிர்பார்த்தபடியே சிங்கங்கள் மலை உச்சியிலிருந்து வேகமாகக் கீழிறங்கின. உத்தரவு வரும் வரை எம்மில் எந்த நகர்வும் ஏற்படவில்லை. சிங்கங்களை உள்ளே விட்டு சுற்றி வளைப்பதுதான் எமது திட்டமாகவிருந்தது. வேகமாகக் கீழிறங்கிய அவை முழுதும் மலையே விட்டு இறங்கும் வரை நாங்கள் காத்திருந்தோம். கடைசிச் சிங்கமும் மலை உச்சியை விட்டு அகல மலைச் சரிவுகளில் மறைந்திருந்த மூர்க்காமான மான்கள் இறங்கிக் கொண்டிருந்த சிங்கங்களின் அணிவகுப்பு நிரலுக்குள் பயகங்கரமாய்ப் புகுந்தன. நேருக்கு நேராக எதிர்க்க வந்த சிங்கப்படை இத் தந்திரத்தித் தாக்குதலை எதிர்ப்பாக்காததால் நிலைகுலைந்தது. பக்கவாட்டில் வழிநடத்திய சிங்கங்கள் வீழ்த்தப்பட்டாலும் கீழிறங்கும் அவற்றின் வேகத்தை குறைக்கவில்லை. சுதாகரித்துக் கொண்டு மலையை விட்டிறங்கி மேய்ச்சல் தரையை அடைந்து பலத்தை அதிகரித்து தாக்குதலை சமாளிப்பதே அவற்றின் நோக்கமாயிருந்தது. மலைச்சரிவின் இடையில் வெட்டப்பட்ட அகழி அவற்றை தடுத்தது. சிங்கங்களின் முன்னிரலை தலைமை தாங்கியவை அகழிகளில் சிக்கி உயிர்விட்டன. அடுத்ததடுத்த வரிசையில் முன்னேறியவை தாமதிக்க எமது கொம்புகள் அவற்றின் வயிற்றைக் கிழித்தன. மூர்க்கமான எதிர்த்தாக்குதல் புரிந்த சிங்களிடம் நாமும் பல தோழர்களை இழக்க நேரிட்டாலும் வரிசை மாறி வரிசையாக தாக்குதல் படை புதுப்பிக்கப்பட்டதாலும் எமது பலத்தில் தளம்பல் எதனையும் ஏற்படுத்தவில்லை.
பலமாக உதைத்த கால்களில் சிக்கிப் படுகாயமடைந்த சிங்கங்கள் எதிர்த்தாக்குதல் தொடுக்க முடியாதளவுக்குத் திணறின. மலையடிவாரத்தில் காத்திருந்த படைக்கு முன்னேறக் கட்டளை கிடைத்தது. கொம்புகளை முன்நீட்டி வேகமாக மலையேறினோம். கீழிருந்து மேலேறிவந்து கொண்டிருந்த புழுதியைக் கண்டவை தாம் தந்திரமாக சுற்றி வளைக்கப்பட்டதை உணர்ந்து உச்சிக்குத் திரும்ப முடிவெடுத்துப் பின்வாங்கின. அதற்கிடையில் ஏற்கனவே மலையில் பக்கவாட்டில் சிங்கங்களின் முகாம் நோக்கிச் சென்ற இரு படைப்பிரிவுகளும் மலை உச்சியில் சந்தித்து எஞ்சியிருந்த நான்காவது பக்கமும் அடைக்கப்பட்டது. ஓநாயின் யுத்த தந்திரத்தால் மான்களின் சக்கரவியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட சிங்கங்களின் விழிகளில் தோல்விப்பயத்தைக் கண்டோம். உயிர்காக்க நாற்றிசையும் சிதறி ஓடுவதே அவற்றுக்கிருந்த ஒரே வழி. மான்களின் பலத்திற்கும் யுத்த முறைக்கும் ஈடுகொடுக்க முடியாச் சிங்கங்கள் புறமுதுகிட்டன. தன்மானத்தை கடைசிவரை தக்கவைக்க நினைத்தவை களத்திலேயே செத்துமடிந்தன. சிங்கங்கள் எழுப்பிய மரண ஓலம் கருங்கொடித்தீவு முழுக்கவும் ஒலித்தது. மலை உச்சிவரை விரட்டப்பட்டவை கரையை அடைந்து யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. சிங்கங்கள் சரணடைந்து யானைத்தீவு திரும்புவதை எம்மால் எற்க முடியவில்லை. போருக்கு வந்தவைகளின் மொத்தக் கதையையும் இங்கேயே முடிப்பதே எமது நோக்கமாயிருந்தது. விழிகளில் மரண பயத்தாலும் அவமானத்தாலும் துவண்டு போயிருந்த சிங்கங்களிடம் திருப்பி அடிக்க வேண்டுமென்ற வெறியிருந்தும் உயிர்ப்பிச்சையளிப்பதில் ஓநாய் உறுதியாகவேயிருந்தார்.
“சாதுக்களை சாதுக்களாகவே வைத்திருப்பதே உமது கூட்டத்திற்கு நலமென உங்களை ஏவி விட்ட கிழட்டுச் சிங்கங்களிடம் நான் கூறியாதாய்க் கூறுங்கள்”
தலைகுனிவோடு தீவி விட்டு மீண்டும் வெளியேறின சிங்கங்கள்.
– – – – – – –  – – – – – – –  – – – –  – – – – –  – – – –  – – –  – – – – – – – – – – – – – – – –  –
கருங்கொடித்தீவே விழாக் கோலம் பூண்டு. வசந்த காலத்துக்கான கொண்டாடங்களை முறைப்படி ஆரம்பித்தோம். அடிவாங்கிய சிங்கங்கள் திரும்பலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவை மீண்டும் படை திரட்ட அதிக காலம் பிடிக்கும் என்பது தெளிவாகவே தெரிந்துமிருந்தது. புலிகளைத் தவிர அனைத்து விலங்கினங்களும் வசந்த காலத்தை வரவேற்றோம்.
புலிகள் ஒதுங்கக் காரணமிருந்தது. நடந்த போரில் எம்மை சிங்கங்கள் தோற்கடிக்குமென உறுதியாக நம்பிய புலிகள் நிலைமை எமக்குச் சாதமாக மாறினால் இடையில் புகுந்து யுத்த வெற்றியை சிங்கங்களின் பக்கமாகத் திருப்பவும் திட்டமொன்றை வகுத்திருந்தமை வடதிசையில் திருப்பபட்ட எமது படைப்பிரிவின் தற்காப்பால் வெளிப்பட்டது. காடே அதிர்ச்சியடைந்தாலும் தான் எதிர்பார்த்ததுதான் என்றார் ஓநாய். மான்கள் ஈட்டிய வரலாற்று வெற்றி பெருமரத்தடியில் பிசுபிசுக்கப்பட்டாலும் தலைமறைவான தலைமை மான்கள் இன்னும் திரும்பியிருக்கவில்லை.
பத்து நாட்கள் வரை நீடித்த கொண்டாட்டம். பெருமரத்தடியில் கிடந்த தலைமை மானொன்றின் காயப்பட்ட சடலத்தால் நிறுத்தப்பட்டது. அதன் கொம்புகளும் பாதக் குழம்புகளும் பிடுங்கி அகற்றப்பட்டிருந்தன. இது எச்சரிக்கை என்பது புலப்படினும். மீளவும் எம்மை சீண்டுவது யார் என்பதில் எமக்குத் தெளிவுகிட்டவில்லை. சிங்கங்ளின் தரப்பிலிருந்து வந்த செய்தி எமது கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.
“எம்மோடு பேச்சுவார்த்தைக்கு வந்த பெருமரத்துத் தலைமை மான்கள் சிலதையும் இரண்டு புலிளையும் பணயக் கைதிகளாக கைப்பற்றியிருக்கிறோம். அதோடு யானைத்தீவில் சிறு கூட்டமாக வாழும் ஏனைய மான்களின் மேய்ச்சல் நிலமும் திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டடுள்ளது. நமது பிரச்சினைகளை பேசி முடிவெடுப்போம் தலைமை ஓநாய் மட்டும் வடமேற்கு கரைப்பகுதியிலுள்ள குன்றிற்கு வரும் பௌர்ணமி இரவில் தனியாக வரவேண்டும்.” சிங்கங்களின் செய்தியை பருந்துகள் பாடி விட்டுப் பறந்தன. புலிகளும் தங்கள் போராளிகளை மீட்க ஓநாயின் ஆதரவை வேண்டி நின்றன.
அனைவரும் கொதித்தெழுந்தோம்.
“சிங்கங்களுக்கு மன்னிப்பு வழங்கியது பெருந்தவறாகிப் போனதே தலைவா?”
“இல்லை உங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான அழைப்பிது. என் வருகையும் தற்காலிகமானதுதான்.”
“அப்படியெனில்”
“நான் அவர்களின் அழைப்பை ஏற்கின்றேன்.”
“தலைவா இது சூழ்ச்சியென வெளிப்படையாகத் தெரிய தங்களின் இம் முடிவு எம்மை அச்சமூட்டுகிறது”
“கூடாது. அது உங்களை பலவீனர்களாக்கும். இந்த உத்வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டும். என்னிடமிருந்து கற்ற ஞானம் என்றும் உங்களோடிருக்கும் வரை நமக்குள் பிரிவென்பது நிகழாது.” அவர் விழிகளில் ஏதோவோர் தெளிவு. இத்தகைய நெருக்கடியிலும் தன்னிலையை தளர்வடையாது வைத்திருக்க ஓர் ஓநாயால் மட்டுமே முடியும். அவர் விடை பெற்றார். மேற்கு மலையிலிருந்திறங்கி கரை வழியே சிங்கங்கள் அழைத்த குன்றிற்கு விரைந்தார். காடே அவரை வழியனுப்பி வைத்தது. புலிகள் அப்போதும் வரவில்லை. எமக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்தது. தொலை தூரத்திலும் அவரின் கம்பீரமும் மூர்க்கமான நடையும் அப்படியே தெரிந்தது. என்னோடு நான்கு தோழர்களை அழைத்துக் கொண்டு மாற்றுத் திசையில் வடமேற்கு நோக்கி விரைந்தேன்.
ஓநாய்க்கு முன் குன்றின் கீழ்ப்பகுதியை அடைந்தோம். உயரத்தில் குன்றின் எல்லைப் பகுதியை சிங்கங்கள் காவல் புரிந்து கொண்டிருந்தன. பத்துக்கும் மேற்பட்ட தலைமைச் சிங்கங்கள் அங்கு நின்றிருந்தன. இரண்டு புலிகளும் சில மான்களும் சிங்கங்களால் சுற்றி வளைக்கப்பட்டு காவலிடப்பட்டிருந்தன.
ஒநாய் அவ்விடம் வந்து சேர்ந்தார்.
“வருக ஞானத்தந்தையே” சிங்கத் தலைவனிடம் மெலிதான புன்னகையிருந்தது.
“உன் வரவேற்பை ஏற்க நான் இங்கு வரவில்லை. கைப்பற்றியிருக்கும் புலிகளையும் மான்களையும் விட்டுவிடுங்கள். யுத்தத்தில் கயமை கூடாது”
“கயமையால் அன்றி பெரு வீரர் உம்மை வீழ்த்துவது கடினமல்லவா தலைவரே”
“எச்சரிக்கிறேன்” சிங்கங்கள் நடுங்கின.
“எச்சரிக்கையா. எமக்கா. எமது உருமல் சத்தத்தைக் கேட்டாலே பாய்ந்தொடிய ஓர் இனத்தை எம்மை எதிர்க்கவே தயாராக்கி விட்டீர். எம் மூதாதையர் இட்ட தவறை நாங்களும் கடைப்பிடிப்பதா? ஆளவே பிறந்த இனம் பின்வாங்குதல் எம் இனத்துக்கே இழுக்கு. வரலாறு எமக்குமுண்டு மகாஞானியே. வேடிக்கை பார்க்கவா இவ் ஓநாயை இங்கு அழைத்தோம். தாக்குங்கள் உடனே”
காத்திருந்த சிங்கங்கள் ஓநாயின் மீது பாய்ந்தன. கொடுங்கோபம் கொப்பளிக்க காடு அதிர்ந்து கடல் பொங்க உறுமிய ஒநாய் சிங்கத் தலைவன் குரல்வளையைக் கவ்வி வீசி எறிந்தார். சுருண்டு வீழ்ந்த தலைமையைக் கண்ட ஏனையை சிங்கங்கள் ஓநாயின் உடல் முழுக்கத் தமது பற்ளையும் நகங்களையும் பதித்தன. குருதி கொப்பளிக்க அவரின் தாக்குதல் மூர்க்கமாகவேயிருந்து, சிங்கங்களோடு வெறுமனே தனித்த ஓநாயாய் போரிடவில்லை ஓர் ஓநாய்க் கூட்டத்தின் பலம் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியது. பத்து சிங்கங்களால் அவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவற்றில் மூன்று கொல்லப்பட்டன. ஏனையவை பின்வாங்கின. அவர் விழிகளுக்கு இணையாக முறைக்கவும் அவை சக்தியிழந்தன. திடீரென அவற்றின் முகத்தில் புன்னைகை படர பின்னாலிருந்து ஓநாயின் முதுகை ஓர் மான்கொம்பு துளைத்தது. திருப்பி அடித்தார். பணயக் கைதியாக நாடகமாடி முதுகில் குத்தியது தலைமை மான். அவர் விழிகளில் கண்ணீர் வெளித்தெரிய அமர்ந்திருந்த புலிகளிரெண்டும் பாய்ந்து அவர் கழுத்தைக் கவ்வின. அவர் எதிர்த்தாக்குதல் தொடுக்கவில்லை. விழிகளில் கண்ணீரோடு சிரித்தார். ஏனைய மான்களும் தத்தமது கொம்புகளை அவர் உடலில் புகுத்தின.
எமது ஞானத்தந்தை, எமக்குள்ளிருந்த அடிமைத்தனத்தை துடைத்த எம் தலைவன். எங்கோ தொலைந்து போன நம்பிக்கையை எம் கரங்களில் கொடுத்த இணையற்ற புரட்சி வீரன். எம் கண் முன்னே வதைக்கப்பட்டார். அவர் குருதி வாசனையோடு நீதியும் தர்மமும் வெளியேறின. எங்கள் நரம்புகள் புடைத்தன. குன்றின் மீது பாய்ந்து சிக்கும் அத்தனை துரோகிகளையும் ஒழிக்குமாறு உணர்வுகள் ஆர்ப்பரித்தன. இரண்டேயிரண்டு புலிகள் இங்கிருக்க ஏனையவை??
காயப்பட்ட பருந்துகள் இரண்டு காலடியில் வீழ்ந்தன. கிழக்குக் கரையோரமாய் பதுங்கிப் புகுந்த புலிகள் ஒட்டுமொத்த மான் கூட்டத்தையும் வேட்டையாடி காட்டையே சூரையாடிக் கொண்டிருப்பதாய் செய்தி கூறி மடிந்தன. நாங்கள் எதிர்பார்க்காத பதிலடி. மலை அடிவாரத்தில் தயாராகவிருந்த மான்களின் படை என்னவாது?
விரைந்தோம். அதிர்ச்சி புயல் வேகத்தில் அடித்தது. காட்டை விட்டும் தலைமறைவாகிப் போன நரிகள் வேட்டையில் குதித்திருந்தன. அதற்கிடையில் ஓநாய் வீழ்த்தப்பட்ட செய்தி காடு முழுக்கவும் பரவ தலைவனை இழந்த சோகத்தில் சோர்வடைந்த எங்கள் படை தோல்வியடைந்து கொண்டிருந்தது. பாதிக்கும் மேல் தோழர்களை இழந்து விட்டிருந்தோம். குட்டிகளும் பெண்களும் கழுத்திலும் வயிற்றிலும் வேட்டைப்பற்கள் பதிந்திருந்த நிலையில் குற்றுயிராய்க் கிடந்தனர். ஓநாயின் உடலை சிங்கங்கள் யானைத் தீவுக்கு கொண்டு சென்றன.
சரணடையுமாறு அறிவித்தன புலிகள்.
“எதிர்காலம் சாத்தியமான போர்க்களத்தில் வீரமரணம் மூடனின் செயல்” தலைமை ஓநாய் கூறியதை முடிவாக்கி சரணையத் தீர்மானித்து மீதமிருந்த உயிர்களைக் காத்தோம். மீண்டும் புலிகள் கருங்கொடித்தீவைக் கைப்பற்றின. சிங்கங்களின் கூட்டுச் சதி பெரு வெற்றி பெற்றது. அடிமைகளாக மீண்டும் பச்சை குத்தப்பட்டோம். துரோகத்தைக் நேரடியாக் கண்டவர்கள் போராட வக்கற்றவர்களாகாக ஆனோம். மீண்டும் மான்களின் தலைமை பெருமரத்தடியில் கைப்பற்றப்பட்டது. சூழ்ச்சிக்கார துரோகிகள் நயவஞ்சகமாய் நாடகமாடி ஓநாயின் இழப்புக்கு நீலிக்கண்ணீர் வடித்ததுமில்லாமல் வெளிப்படையாக சிங்கங்களோடு கூட்டுச் சேர்ந்தனர். கேள்வி கேட்கத் திராணியற்று நின்றது மான் கூட்டம்.
கேள்விகளோடு ஆரம்பிக்கும் ஒவ்வோர் நாளும் விடையற்றதாகவே முடிவுற்றன. இதுதான் எங்கள் விதியா? மீண்டுமொரு முறை ஓநாய் சொன்னதை நினைவு கூர்கிறேன்.
“உங்கள் கொம்புகள் எதற்காகப் படைக்கப்பட்டன. உங்கள் கால்களிலிருக்கும் வேகம் புலிகளுக்கோ சிங்கங்களுக்கோ உண்டா? இது பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?  தப்பிப் பிழைத்தலே உங்கள் இன அடையாளமாகிப் போனதன் அரசியல் பின்னனி குறித்து என்றாவது தேடியிருக்கிறீர்களா?”
சிங்கங்களின் உடலைக் குத்திக் கிழித்த எமது கொம்புகளில் இரத்தக் கறை இன்னுமிருக்கிறது. ஆனால் எங்கள் கூட்டமோ மீளவும் இன்னோர் ஓநாய் வரும் என நம்பிக் கொண்டிருக்கிறது.
முற்றும்.
-றிசா முகம்மட் ஹசன்.
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *