பிரார்த்தனைக்கிடையில் வேறேதோவெல்லாம் தோன்றி மறைந்தது.
தான் கன்னியஸ்த்திரியாகிய கடந்த பதினொரு வருட காலப்பகுதியில் இதுவரை செய்யத் துணியாத ஒன்றை செய்யப் போகிறோம் என்பது கூட ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.
‘அருள் நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே …… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே…’
அடுத்த வரியை மறந்துவிட்டவள் போல, ஆன்யா ஒரே வரியை மீட்டிக் கொண்டிருந்தாள். திடீரென பாதியில் எழுந்து வெளியேறினாள்.
மெல்லிய சாம்பல் வண்ண பூசலுக்குள் உள்நுழைவதாய் பொழுது மாறத் தொடங்கியிருந்தது.
திரும்பும் திசையெங்கிலும் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்டிருந்த அளவிற்கு மிஞ்சிய தூய்மையும். பெருத்த நிஷப்தமும், புனிதமான அந்த மடத்தை முழுவதுமாய் நிறைத்துக்கொண்டிருந்தன. வேகமாக கடந்து சமயலறைப்பக்கத்தை அண்மித்தாள்.
நீண்ட சாப்பாட்டு மேசையை தாண்டும் போது, காயவிடப்பட்ட கன்னியாஸ்த்திரிகள் சிலரின் ஆடைகள் கொடியில் தொங்கின. அவ்வாடைகளின் இடைக்கிடையே உள்ளாடைகளும் பாதி தெரிந்த நிலையில் மறைக்கப்பட்டிருந்தன.
பதட்டத்துடன் நடையைத் தொடர்ந்த ஆன்யா, சிறுநொடி நிதானித்து திரும்பிப் பார்த்தாள். இளநீல வண்ணத்திலான மார்பக அங்கியினூடாக காற்றின் மெல்லிய அசைவை அனுமானிக்க முடிந்தது.
தன் வலது கையின் பெருவிரல் தவிர்த்த ஏனைய விரல்கள் நான்கையும் உள்ளங்கைப் பொட்டிற்கிடையே அமத்திப்பிடித்தவாறே, வேகமாக எட்டி தன்னறைக்குள் நுழைந்தாள். பட்டென கதவை தாழிட்டுக் கொண்டாள்.
இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துப் பார்த்தாள் போதாதென்று தோன்றியது. மேசையிலிருந்த ஈரடிசுவொன்றால் கண்களையும் கன்னங்களையும் மீண்டுமொருமுறை ஒற்றியெடுத்து, அவசரமான முறையில் கைகளுக்குள் சுருட்டிக் கசக்கி அந்த கடதாசியை குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தாள்.
ஏற்கனவே வீசப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுக்குவியலும் ப்ளாஸ்டர்களும் நிறைந்திருக்கும் குப்பைகூடையை பார்க்கச் சகிக்காமல், தள்ளி அதனை மேசைக்கடியில் ஒளித்தாள்.
நிமிடநேரத்தையும் தாமதிக்க அவள் விரும்பவில்லை. பாதியளவு தன்னுருவம் காட்டும் கண்ணாடிக்கு முன்னே நின்றுக்கொண்டாள். முகத்தில் வழமைக்கு மாறான கருமையும் சோர்வும் மிகுந்து வழிந்திருப்பதாய் ப்பட்டது. எப்போதுமாய் சிவந்து தென்படும் அழகான அந்த இதழ்களில் ஆங்காங்கே வறட்சியான வெடிப்புகள் தோன்றியிருந்தன.
பரபரவென ஆடையை களையத்தொடங்கி இடுப்பளவில் அதனை நிறுத்திப்பிடித்தபடி வெட்டியகற்றப்பட்ட தன் ஒற்றை மார்பைத் தேடினாள். ஒட்டி மூடிய ப்ளாஸ்டரை அகற்றிப் பார்க்குமளவிற்கான தைரியம் நிச்சயமாய் அவளிடத்தில் இருக்கவில்லை.
திடீரென்றேதான் இப்படி ஒரு ஆசையும் கூடத் தோன்றியது. பார்க்க விரும்பாத பாதியளவு உடலை கண்ணாடிபிம்பத்திலிருந்து மறைத்தபடி அடுத்தபாதியின் வனப்பை தானே இரசிக்க விரும்பினாள்.
ஐவிரல்களுக்குள் மூடினாற்போல் தனதந்த மார்பை பொத்திப்பிடித்தாள். மெதுவாக மேடேறியிருக்கும் தசைப்பகுதியை வருடிக்கொடுத்தாள். உடற்தசையை மிஞ்சிய பிரிதொரு மென்மை மார்பகத் தசைக்குள் நிரம்பியிருப்பதாயிருந்தது. பிம்பத்தினின்றும் பார்வையை அகற்றி குனிந்தொருமுறை தடவிக்கொண்டாள்.
‘பிதாவே நான் என்ன செய்கிறேன். ஏன் என் மனவலிமையை குறைத்துக்கொண்டிருக்கிறாய்? எந்த உபயோகமுமேயற்ற ஒரு தசைதுண்டத்திற்காக ஏங்கித்தவிப்பது நான்தானா? எதை நோக்கி சிந்திக்கிக்கிறேன்? நானா என் பிம்பத்தை இரசிக்கத் தவிக்கிறேன். இல்லாமல் போன என் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்?’
இரு கைகளாலும் முகத்தைப் பொத்தி விசும்பியழத் தொடங்கினாள். அதே நிலையில் முழந்தாளிட்டமர்ந்து விசும்பலை நிறுத்தாமல் வேகமாக ஜெபித்தாள்.
‘யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…
யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…
யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…’
ஒரேயொரு தடவை கதவு தட்டப்பட்ட சப்தத்தால் வேகமான அந்த ஜபம் நிறுத்தப்பபட்டது. அநேகமாக ரோஜினாவின் செய்திகொண்டுவரும் செய்கையது.
சிஸ்டர் ஆன்யா ஆடைகளை சீர்படுத்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.
‘சிஸ்டர் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’
அனுமதி கேட்காமலேயே அறைக்குள் நுழைந்து, அச்சிறிய பொதியை மேசை மீது வைத்தபடி ஆன்யாவை பார்த்தாள் ரோஜினா. அப்பார்வையில் தேவைக்கு மிஞ்சிய பரிதாபம் கசிந்திருந்தது. வேறெதையும் கேட்டு விடாமல் உடனடியாகவே அறையிலிருந்தும் வெளியேறினாள்.
‘என்னவாயிருக்கும்? யார் அனுப்பியிருப்பார்கள்?’
ஊகிக்கும் மனநிலையா இது. வழமை போல பாதர் பரெட்ரிக்கிடம் இருந்து புத்தகங்கள்…? சிஸ்டர் சாயனாவிடமிருந்து பழங்கள்…? அக்காவிடமிருந்து ஏதேனுமா? பிரித்து பார்க்கத் தோன்றாமல் அப்பொதியினை உற்று அவதானித்தவாறு அமர்ந்திருந்தாள்.
கண்களால் துளைத்தப்பொதியினை திறக்க முனைந்தாள். பொதியின் மேற்பகுதி அசைந்து கொடுத்தது.
மடிக்கப்பட்ட அதே நேர்த்தியுடன் பொதிக்கடதாசிகள் ஒவ்வொன்றாக தம்மை விடுவிக்கத் தொடங்கிய மறுகணமே அடைபட்ட சுவாசத்தை வெளியேற்றத்தவிக்கும் சில பட்டாம்பூச்சிகள் பெட்டியை துளைத்துக்கொண்டு வேகமாக வெளியேறின. எதிர்பாரா அந்த திடீர் வெளியேறலால் விசிறப்பட்ட துளி வர்ணங்கள் அவ்வறையின் வெண்சுவற்றில் ஆங்காங்கே படிந்து கொண்டன.
அதுவொரு அதிசயப் பொதியென்பதில் சந்தேகமில்லைதான். ஆன்யா குனிந்து ஒவ்வவொன்றாய் வெளியில் எடுத்தாள்.
மடித்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையொன்று. அதற்கு ஒத்துப்போகுமாப் போல் கற்கள் பதித்த ஒரு சோடி வளையல். சிறிய அட்டிகை. இன்னும் இரு காதணிகள். கூடவே கூர் வடிவ அடியுடைய பாதணிகள்.
கூரடியுடைய பாதணிகள் எழுப்பும் புதுவிதமான நடையோசையில் எப்போதுமாய் ஒரு மயக்கம் இருப்பதுண்டு. குதிரைக் குளம்பின் தாளம் தரும் கம்பீரத்தையொத்த நடையை தனக்குரியதாக்கும் எந்த பெண்ணுமே, மிகுந்த திமிரையும்; மிதப்பான பார்வை விசிறலையும் வலிந்துப் பெற்று தனக்குத்தானே அதனைப் பொத்தி மறைத்துக்கொள்கிறாள்.
ஆன்யா சிரித்துக் கொண்டாள். இன்னும் துழாவிப்பார்த்தாள்.
ராட்சத மௌனத்தெறிப்புடன் அழகான பெண்பொம்மையொன்று வெளிவந்தது.
நடுங்கும் விரல்களால் அதனை தொட்டுப்பார்த்தாள். விபரியக்கவியலா வைராக்கிய ரேகைகளை முகமெங்குமாய் அது படர விட்டிருந்தது. மிக இறுக்கமான உணர்வுடைய பெண்ணாக அது தன்னை வெளிப்படுத்த விரும்புவதாய் தோன்றியது.
ஆன்யா அப்பொம்மையின் வனப்பை அதிகரிக்க விரும்பினாள். அதன் உதடுகளை அசைத்திழுத்து சிரிக்கப் பண்ணினாள். கண்களுக்குள் ஊதி உயிர் கொடுக்க எத்தனித்தாள்.
‘புற்றுநோய்காரியா நீ? அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டிருக்கிறாயே’?’ கன்னங்களை இலேசாக கிள்ளி வைத்தாள்.
அதுவொன்றும் அத்தனை சிரமாக இருக்கவில்லை. அந்த குட்டி பெண்பொம்மையை இயல்பான அழகுடன் மாற்றி வைக்க ஆன்யாவால் முடிந்தது. பொம்மையின் மொத்த உருவத்தையும் பார்வைக்குள் ஏற்றி இரசித்தாள்.
இயல்பை மாற்றிக் கொள்ளுதலை யாரால்தான் ஏற்க முடியும்!
எதிர்பாரா சீற்றத்துடன் யன்னல்வழி நுழைந்த திடீர் காற்று, அப்பொம்மையை அவளுடைய கைகளிலிருந்து தட்டி கீழே வீழ்த்தியது. மேலும் கோரமாக அறையை ஆட்கொண்டு ஆடவும் தொடங்கியது.
ஆன்யா யன்னல் திரைச்சீலைகளை வெறித்துப் பார்த்தாள். பொம்மையை எடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அதன் பொன்நிற முடியை கோதி விட்டாள். பொம்மையின் கைகளை அழுத்திப்பிடித்து ‘பயப்படாதே…. பயப்படாதே….’ என்றாள்.
காரணமின்றி மனது அச்சப்பட்டது.
சட்டென ஏதோ தோன்றிட யன்னலை அகலத்திறந்து எட்டிப் பார்த்தாள். மொத்த கருமையும் உள்ளே வரும் ஆவேசத்துடன் மிதந்து கொண்டிருந்தது. இயலுமளவிற்காய் எக்கிப்பார்த்து யாருமில்லையென உறுதி செய்துக்கொண்டாள். கைகளை மேலே உயர்த்தி பெரும் விசையுடன் உந்தி, மதிலுக்கு அப்பால் போய் விழும்படி கட்டளையிட்டு, அப்பொம்மையை தூரமாய் வீசியெறிந்தாள்.
அத்தனை ஆசுவாசம் அவளுக்கு.
இனியெதுவும் இருக்க போவதில்லையென்று எண்ணிக்கொண்டே பெட்டியை தலைகீழாய் திருப்பித் தட்டினாள். பெட்டியின் இடுக்கில் மறைந்திருந்த மின்மினிப் பூச்சொன்று விரைந்தோடி வெளிவந்தது. அது ஒளிர்வித்த மென்பிரகாசத்தை கைகளுக்குள் ஏந்திக்கொள்ள வேண்டி, அதன் பின்னாலேயே ஆன்யா ஓடத்தொடங்கினாள்.
மீண்டும் ஒரேயொரு தடவை தட்டப்படும் கதவின் சப்தம்.
கதவு திறந்தேயிருந்ததால். ரோஜினா உள்ளே வந்திருந்தாள்.
‘இன்னுமே தெறந்து பாக்கலயா சிஸ்டர்?’
‘பாக்கலயா…? இன்னுமா…?’
ஆன்யா மேசையை பார்த்தாள். வைத்த அதே இடத்தில் அதே நிலையில் அப்பொதியிருந்தது.
சுற்றிலும் ஒருமுறை அறையையும் ரோஜினாவையும் பார்த்துக்கொண்டாள். சுவற்றில் ஒட்டிக்கொண்ட வர்ணத்துளிகளை தேடினாள். மெதுவாக தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை உள்ளங்கைக்குள் அப்பிக்கொண்டாள்.
வெளியேற்றப்படா ஏதோ ஒரு இரகசியம் உடைந்து அறையெங்கும் வியாபித்திருப்பதாக மனது நம்பியது.
‘பாதர் ப்ரெட்ரிக் வந்திருக்கிறார். உங்களுக்கு தொந்தரவில்லன்னா சந்திக்கலாம்னு சொல்ல சொன்னார்’
‘இதோ ரெண்டு நிமிஷத்துல வாறேன்னு சொல்லு’ ஆன்யா பரபரப்புடன் ஆயத்தமானாள்.
தேவையேயில்லாமல் மனது வெறுமையடைந்திருப்பதை மாற்றிட, புன்னகையை வலிந்தேற்றிக் கொண்டவளாய் மெல்ல நடந்து வரவேற்பறையை அடைந்தாள்.
முன்வாசல் வழி பூந்தோட்ட கதிரையொன்றில் பாதர் ப்ரெட்ரிக் அமர்ந்திருந்தார். வராண்டாவின் மஞ்சள் நிற மின்குமிழின் பிரகாசத்தை ஏந்தி குரோட்டன் செடிகள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
‘குட் ஈவினிங் பாதர்’
பாதர் ப்ரெட்ரிக் முக மலர்ச்சியுடன் ஆன்யாவை நோக்கி ‘சுகமா இருக்கியா ஆன்யா?’ என்றார்.
அவள் தலையாட்டிக்கொண்டாள். வார்த்தைகள் வர மறுத்தன. தன்னில் ஏற்பட்டிருக்கும் ஏதோவெல்லாமான மாற்றங்களை தன் தந்தையை போன்றிருக்கும் பாதர் ப்ரெட்ரிக்கிடம் ஒப்பிக்க வேண்டுமென்பதை மட்டுமே ஆன்யா யோசித்தாள்.
‘ஆன்யா, வலிமை பெறு. துணிவு கொள். அஞ்சாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். உன்னை கைவிடவும் மாட்டார்.’
பாதர் பிரார்த்தனையை போதனையாக சொல்லத் தொடங்கியிருந்தார்.
‘பாதர்… நான் எங்கேயாவது போகணும் பாதர்’
அவரது பதில்பார்வையின் ஆச்சரியம் ஆன்யாவிற்குப் புரிந்தது.
‘நீங்கதான் உதவி செய்யணும் பாதர்?’
‘எங்கையாவதுன்னா?’
‘எந்த அடையாளமும் இல்லாம…. யாரையுமே தெரியாத…. நான் நானா இருக்குற ஒரு இடத்துக்கு’
ஆன்யா…! என்ன பேசுற?’
‘என் மனநிலைய புரிஞ்சிக்க உங்களால மட்டுமே இப்போதைக்கு முடியும்னு தோணுது பாதர்’
‘ஆண்டவர் தன் வார்த்தைகளை அனுப்பி உன்னை குணப்படுத்துவார். நீ பதட்டமாகாமல் அமைதி கொள்’
‘ஒரே ஒரு இழப்பு பல விஷயத்த அடையணுன்னு நினைக்க வைக்குது பாதர்’
‘ஆன்யா’
பாதர் அதட்டலாக சத்தமிட்டார்.
‘ட்ரை டூ அண்டஸ்டேண்ட் மீ பாதர்’
ஆன்யா சிறு குழந்தையாய் தேம்பியழுவதை கண்டதும் பாதர் கண்கள் மூடி அடுத்த பிரார்த்தனையை ஆரம்பித்திருந்தார்.
Help me not to fear the future but to boldly trust that you are in control when my emotions plunge me down, and when I am in despair ….….’
ஆன்யா தானும் அப்பிரார்த்தனையில் சேர்ந்துக் கொண்டவளாய் தொடர்ந்தாள்.
And times when I can’t talk and don’t know what to say, help me to “Be still, and know that you are God” Be my comforter, my healer and bring me peace. In Jesus’ name, Amen..’
பாதர் ப்ரெட்ரிக் ஆன்யாவின் நெற்றியில் சிலுவை இட்டார். இரண்டு தினங்களுக்குப்பின் வருவதாய் கூறி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து வெளியேறினார்.
தான் எதனை யோசிக்கவிழைகிறோமென ஆன்யாவாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை மீறிய எண்ணங்களாகவும். பல நாட்கள் தேங்கி மேலெழுந்த ஏதோ ஒரு உந்தலாகவும்….
முதலாம் வாக்குத்தத்தத்தின் போதான அந்த உறுதி எங்கே போனது? அல்லது நித்திய வாக்குறுதியின் பின் இறுகப்பற்றியிருந்த ஆண்டவரின் பாதங்களை நான் தளர விட்டு விட்டேனா? வெறுமனே ஒரு நோய் தந்த மாற்றம் தான் இதுவென நம்பிட முடியவில்லை. ஏதோவொன்று… அதையும் தாண்டிய வேறேதோவொன்று… புறவுலகை நோக்கி பயணிக்க எத்தனிக்கும் அளவிற்கு அத்தனை முதிர்ச்சியற்று போய்விட்டேனா என்ன?
இல்லையெனில் ஏன் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்? எங்கே பயணிக்க திட்டமிடுகிறேன்?
ஆன்யா தலையை பிய்த்துக் கொண்டாள். அவளது மூச்சின் சீரான சப்தம் வெளியே கேட்பதாய் இருந்தது. இரவு பிரார்த்தனைக்கான மணியோசையும் ஒலிக்கத் தொடங்கியது.

 

2
புதிதாய் எடுக்கும் மாத்திரைகளின் வீரியம், தோற்றத்தை புரட்டிப் போட ஆரம்பித்திருந்தது. உலர்ந்த தோலின் வெடிப்பும், செதிலாய் உரியும் வெண்நிறமான கணமற்ற ஏதோ ஒன்றுமாய் அதைப்பற்றி யோசிக்க மாட்டாதவளாய் நாட்களை வேகமாக கடத்த பிரயத்தனித்தாள் ஆன்யா.
முடி உதிர்வின் பங்கு இரட்டிப்பின் அளவைத்தாண்டியிருந்தது. ஞாபக மறதியின் எல்லையும் விஸ்தாரமாகியிருந்தது. முதல்நாள் சம்பவங்களைத்தானும் துல்லியமாக மீட்ட முடியா மயக்க நிலையை அவள் வரவேற்கவே செய்தாள். எப்போதுமாய் படுத்தேயிருக்க விரும்பினாள். விழிப்பு நிலையிலும் கண்கள் மூடி வெறுமனே கிடந்தாள்.
இரத்தம், சலம், மாத்திரைகள், தைலம் என்ற பக்கத்தை மறுத்து மறுபக்கம் பார்க்கையில் உதிர்ந்த கேசம் நெளிந்து பறப்பதாய் இருக்கும்.
அவ்வப்போதான பிரார்த்தனைகள் மட்டுமே ஆறுதலைத் தந்தன.
பார்வையாளர்களை அனுமதிக்காதிருக்க வேண்டினாள். ரோஜினாவிடம் சொல்லி அறையின் முகம்பார்க்கும் கண்ணாடியை அப்புறப் படுத்தினாள்.
ஆன்யாவிற்குத் தெரியும். எல்லாமே மாறக் கூடியதென்று… நான்கோ எட்டோ எண்ணிக்கை முக்கியமில்லை. சில வாரப்பகுதிக்குள் இழந்ததெல்லாம் மீண்டும் பெறப்படுமென்பது வைத்தியரின் கணிப்பு. வெட்டியகற்றப்பட்ட ஒற்றை மார்பகத்தை தவிர… ஆமாம் மார்பகத்தை தவிரதான்.
பார்க்க பிடிக்காத அருவருப்பை கண்கள் மூடி தவிர்த்தாள். புதிய உலகொன்றை சிருஷ்டிக்கவே ஆன்யா விரும்பினாள்.
கற்பனையில் சில பிராணிகளை வளர்த்தாள். அவற்றின் பாஷைகளை கற்றுக்கொண்டாள். மீன்களை கடலுக்கடியில் மட்டுமே தேடினாள். பறவைகளை காட்டுக்குள்ளும் பாம்புகளை புற்றுக்குள்ளுமாய் அதனதன் வாழ்விடத்திலேயே அவை இயல்பு மாறாமல் தம்மை வெளிப்படுத்துவதை கண்டு இரகசியமாய் களிப்புற்றாள்.
‘பிதாவே’ என பெருங்குரலெடுதது அவ்வப்போது விளித்தாள். சமயங்களில் மரணத்தை விட கொடுமையான இழப்பு மனநிலையை தாங்கமாட்டாமல் பிதற்றுவாள். தனிமையை மட்டுமே விரும்புவதாய் காட்டிக்கொண்டாள். தொடர்ச்சியாக ஒளிந்து மறைந்து கிடந்திடும் நாட்களை வெறுத்து பிரார்த்தனைகளை மிகக்கெட்டியாக பிடித்தபடி தன்னை திடப்படுத்துவாள்.
இமைகளை திறவாமல் நீண்ட நேர இடைவெளியெடுத்து சிந்திப்பதில் நிறைந்த ஆசுவாசம் கிடைப்பதாயிருந்தது. இருளும் ஒளியும் மாறி மாறி வந்து போனதையும், இரவுகள் மட்டும் நீண்டு கிடந்து அவஸ்த்திப்பதையும் அவள் யாரிடமும் சொல்லாதிருந்தாள். திடீரென எப்போதாவது ‘ஆன்யா எங்கே?’ என்று தேடுவாள்.
பிறந்து தொலைத்தலால்; மட்டும் என்னவாகிவிடப் போகிறது ?
பெண்ணாய்த் தன்னை உணர்தலில் உள்ள திருப்திக்கு ஈடேயில்லையென்பதை நினைக்கும் போதில் மட்டுமே அவளது புலன்களணைத்தும் புத்துணர்வால் நிரம்புவதாய் இருக்கும். அடிவயிற்றில் சில்லுணர்வை படரவிட்ட இதமும் சிலிர்ப்பும் தோன்றி மறையும். கண்கள் திறவாமலேயே சிரித்துக் கொள்வாள். தன்னை புறத்தோற்றத்தில் பெண்ணென அடையாளப்படுத்தும் மிஞ்சிய மார்பகத்தை வாஞ்சையுடன் பற்றுவாள்.

3
பிரக்ஞையற்ற வெற்றுப் பொழுதுகளாய் பிணியின் மீதேறி நடந்த நாட்களை அருவருப்பான கனவென ஒதுக்கியிருந்தாள் ஆன்யா.
கொஞ்சமாக விருந்தினர்களை அனுமதிக்கவும், சிரித்து பேசவும், அவ்வப்போது உலாவித் திரியவுமாய் தொடங்கியிருந்த ஒரு மாலை பொழுதில் கபில நிற பூனையொன்று தானே தன்னுடலை ஸ்பரிசித்து நெளிப்பதை கண்டதும் பிரிக்கப்படாத தனது பரிசுப்பொதி நினைவிற்கு வந்திருந்தது.
பூனைக்கும் அப்பொதிக்குமான தொடர்பு எதுவுமே இல்லையென்று தெரிந்தாலும் ஏன் அப்படி நினைக்கத் தோன்றியதென யோசித்தவாறே அறைக்குள் சென்று அப்பொதியை தேடியெடுத்தாள்.
சிஸ்டர் சாயனாவிடமிருந்து வந்திருந்தது.
உள்ளிருக்கும் பொருள் பற்றிய எதுவித எதிர்பார்ப்புமற்று பரபரவென மேற்கடதாசியை கிழித்துப் பிரித்தாள். பொலித்தீனால் உறையிடப்பட்டதாய், வெண்ணிறத்தில் ஒரு மார்பக அங்கி.
‘இதெல்லாம் இனியெதற்கு …?;’
வெகு சாதாரணமாய் பொலித்தீனை அகற்றி விரித்துப் பார்த்தவள் சிலையாக சிறுபொழுது ஸ்தம்பித்தாள். ஒற்றை மார்பகம் செயற்கையாக வைத்து நம்ப முடியாத நேர்த்தியுடன் தைக்கப்பட்டிருந்தது. அடுத்தகணமே தனக்கதனை பொறுத்திப் பார்க்கத் தொடங்கினாள்.
கச்சிதமான அளவு.
அதற்கு மேலால் சட்டையை சரிசெய்தாள். துளியளவிலும் வித்தியாசமில்லாமல் அத்தனை பொருத்தமாயும், மாசற்ற நிஜத்தன்மையை ஒப்புவிப்பதாயும் இருந்தது. சத்தமில்லாமல் சிரித்தாள். மீண்டும் மீண்டுமாய் தன் பிம்பத்தை பார்த்து உறுதி செய்து பூரித்துப் போனாள். யன்னலை திறந்து காற்றுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தாள். அப்படியே வான்வெளி பார்த்து கையசைத்து குதூகலித்தாள்.
மிதப்பது போல் தோன்றியது.
இழப்பின் வலியை மீள்நிரப்பும் சிறு துணிக்கையை வேண்டாமென மறுக்குமா மனது ? சூழற் பூக்களெல்லாம் ஒரே சமயத்தில் பூத்தாற் போல் நறுமணக்கலவை உள்நுழைந்து வெளியேறியது.
ஒருசில நாட்களுக்கேனும் போதுமே!
உடல் ஊனமுற்ற உணர்ச்சியுடன் மறைந்து குறுகி இனி நடக்க வேண்டாம். எப்போதுமான நிமிர்ந்த நடையினை இயல்பாக்கி கொள்ளலாம். கண்கள் பார்த்து தயக்கமின்றி பேசலாம்.
ஆன்யா தன்னை சரிபார்த்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேற ஆயத்தமாகிய அதே நொடி தன்னறிவின்றி கால்கள் பின்னோக்கிச் சென்றன. மனம் தடுமாறியது. இயல்பிற்கு மாறான நடுக்கம் மேனியெங்குமாய் பரவியது. இராட்சத பறவையொன்றின் மிகக் கொடூரமான ஓலம் அறையை சூழ்ந்தொலிப்பதான பதைபதைப்பு உருவாகியது.
மீண்டும் ஒரு பிரமைக்குள்ளான உள்நுழைவா?
‘இத்தனை பதட்டத்துடன் முடிவெடுப்பவளா நான்?’
மாயத்தினூடாக எட்ட எண்ணிடும் ஒரு பொய் மகிழ்வு எப்படி சரியானதாகும்?
கேட்டுக்கொண்டிருந்த இராட்சத ஓலங்களின் எதிரொலியை வெளியேற்றுவதாய் எண்ணிக்கொண்டு யன்னல்களை முழுதுமாய் திறந்து வைத்தாள். கண்களை விரக்தியோடு மூடி சில நொடிகள் நிதானமாக யோசித்தாள்.
அற்புதமான அந்த சில நொடிகள் பல மணித்தியாலங்களை விழுங்கி, பெருத்த நீள்பாம்பாகி அவளை அப்படியே தன்வசப்படுத்த தொடங்கியது.

 

4
சில மணித்தியாலங்கள் தேவைக்கேற்ப நீள்வதால் என்னவாகிவிடப்போகிறது?
சமயங்களில் எதுவென்றாலும்…!
ஆன்யாவின் முகம் பிரகாசித்தது. சுற்றிலும் புதிதாய் சில நிறங்கள் உயிர்கொண்டெழுந்திருப்பதை அவள் அவதானித்தாள். பலநாட்களாக அவளை சோர்வடைய செய்திருந்த இலக்கற்ற தவிப்பு, இல்லாமல் போயிருப்பதான உணர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள்.
எந்த அவசரமுமின்றி தொடர்ச்சியாக செயற்பட அவளால் முடிந்தது.
ஆடையை அகற்றி, அந்த பொய் மார்பகம் தாங்கிய உள்ளங்கியை பிய்த்தெடுத்தாள். அதனை அலட்சியமான பார்வையுடன் உள்ளங்கைக்குள் சுருட்டி குப்பைக்குள் எறிந்தாள்.
நிரந்தரமான சிரிப்பொன்றை முகத்தில் தக்க வைத்தபடி ஆடையை சரிசெய்துக்கொண்டாள். இப்போது தன் பிம்பத்தை பார்க்க வேண்டுமென அவள் நினைக்கவில்லை. ஆனால் தன் புருவமத்தியில் கர்வம் திமிர்த்திருப்பதாய் தோன்றிக்கொண்டேயிருந்தது.
சிறு தயக்கமுமின்றி ஒற்றை மார்பகத்துடனான உடலை நிமிர்த்தி நடந்து அறையிலிருந்து வெளியேறினாள்.
குதிரையின் குளம்பொலி அவளுக்குள் மாத்திரமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

***

 

-பிரமிளா பிரதீபன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *