கே. கணேஷ் அவர்களுடைய மொழிபெயர்ப்பு படைப்புகள் குறிப்பாக அவர் சார்ந்த சமூகப் பார்வையை பண்பாட்டு தளத்தை வெளிக்கொணரும் வகையில் அமைந்தன என்பதை அவருடைய படைப்புகளை வாசிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். பாரதி இதழ் வெளிவந்த காலச்சூழல் இதழ்களிலிருந்த படைப்புகளின் சாரம் என்பது பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள், உரையாடல்கள் அவசியமென்பதை அதே காலத்தில் வெளிவந்த மறுமலர்ச்சி இதழோடு ஒப்பிடுகிற போது புரிந்து கொள்ள முடிகிறது. இதழாசிரியராக பாரதியை அவர் நடத்திய விதத்தை அது கொண்டு வந்த படைப்புகளின் வழியே அது எந்தளவு முற்போக்கான சிந்தனைகளை கட்டுடைப்புகளை கொணர்ந்தது என்பதன் வழியே புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலிருந்து இங்கு வந்த பின்னரும் அவருடைய இடதுசாரி இயங்கியலை அவர் நிறுத்தவில்லை என்பது அவருடைய கொள்கைப்பிடிப்பை அதைத் தாண்டிய படைப்பிலக்கியங்களிலும் இலக்கிய களச்செயற்பாடுகளிலும் நாம் கண்டுகொள்ள முடியும். குறிப்பாக இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் துவக்கத்தையும் அதற்கு பின்னால் முற்போக்கான பாரதி இதழின் தூண்டுதலும் இருந்ததென்பதே பலருடைய நிலைப்பாடு. இலங்கை மக்கள் எழுத்தாளர் முன்னணியை ஆசிய ஆபிரிக்க சங்கங்களோடு இணைத்து அதன் உப தலைவர்களிலொருவராக அவருடைய இயங்குதல் இருந்திருக்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் முற்போக்கு எழுத்தாளர்களை இணைக்கும் அமைப்புக்கள் துவக்கப்பட்டதன் பின்னணியிலும் கே கணேஷ் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது என்பதை பலரும் பதிவு செய்கிறார்கள். கே. கணேஷ் பல புனைப்பெயர்களோடு பல சிற்றிதழ்களிலும் ஆரம்ப காலத்தில் எழுதிவந்திருக்கிறார். பேரா. க சிவத்தம்பி, ஈழ இலக்கியம் இன்று அடைந்துள்ள முக முக்கிய அடைவிலும் தடத்திலும் காத்திரமான செல்நெறியை உருவாக்கியவர்கள் என்ற இடத்தில் கே. கணேஷிற்கு முக்கிய இடம் இருக்கிறது என்கிறார். உண்மையில் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஐரோப்பாவுக்கு சென்று தாயகம் மீண்ட சஜ்ஜத் சாகீர், பைஸ் அகமட் பைஸ் போன்றவர்கள் அங்கு நிலவிய இலக்கியப்போக்கை மாற்றியமைத்தனர். வெளிப்படையாக பொதுவுடைமை கொள்கையை பேசமுடியாதவிடத்து (progressive literature) முற்போக்கு இலக்கியம் என்ற பேனரில் பேச ஆரம்பித்தனர். இதன் தாக்கத்தினால் இந்தி, உருது இலக்கியங்கள் மிகப் பெரும் சாதனைகளை செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலும் இதன் பாதிப்பு பரவ ஆரம்பித்த பின்னணியில் தமிழ் இலக்கிய வெளியிலும் மணிக்கொடி போன்ற இதழ்களில் முற்போக்கான அதே நேரம் உரைநடையில் நிறைய மொழிபெயர்ப்பு படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. இந்த பின்னணியில் தான் கணேஷ் அவர்களும் மொழிபெயர்ப்பை தெரிந்தெடுத்து தமிழகத்தின் பல இதழ்களுக்கு வழங்கியிருக்கிறார். மணிக்கொடியில் அவரது ஆசாபாசம் என்கிற சிறுகதையும் அதிஷ்டசாலி என்கிற ஹங்கேரியன் மொழிபெயர்ப்பு சிறுகதையும் வெளிவந்தன. தவிரவும் மாதர் மறுமணம், ஜனசக்தி, லோகசக்தி, கல்கி போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன. தவிரவும் சித்தார்த்தன், கேஜி, மலைமகன் போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.

வேற்றுமொழிகளில் வந்த நிறைய படைப்புகளை அவை சொன்ன முற்போக்கான தத்துவங்களை, தமிழ் சூழலிலும் விதைக்க வேண்டும் என்கிற உந்துதலால் அவருடைய கவனம் மொழிபெயர்ப்பின் மீது சென்றிருக்கிறது என்பதை அவர் மொழிபெயர்த்த படைப்புகளின் உள்ளடக்கங்கள் அவை கட்டுடைத்து எழுப்பிய கேள்விகள் அவை எழுதப்பட்ட நிலங்களிலிருந்து உண்டாகிய அரசியல் சமூக மாற்றங்களை கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சமதர்ம நாடுகள் எனக் கருதப்பட்ட நிலங்களிலிருந்து விடுதலை உணர்வு, தனிமனித விடுதலை, நாடுணர்வு சார்ந்த மக்கள் நேயம், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சார்ந்த துயரம் வலி போன்றவையே அவர் மொழிபெயர்த்த படைப்புகளில் பேசப்பட்டிருக்கும். அவரது மொழிபெயர்ப்பு ஆர்வம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் கே.கணேஷ் ” ‘பிறநாட்டு, நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் கட்டளையை நிறைவேற்றும்
முகமாகத்தான், மற்றத் துறைகளில் அதிகம் ஈடுபடாது மொழியாக்கத் துறையில் அதிக கவனம் செலுத்த நேர்ந்தது. அரச குடியேற்ற நாடாக – Crown Colony என்ற பிரிட்டிஷ் அரசின் சலுகை பெற்ற பெரும் நாடாக இலங்கை அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிலவியது. பரந்த பாரதத்தினைவிட இத்தீவில் பேச்சு, எழுத்து, கல்வி உரிமைகளும் வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. அங்கு தடை
செய்யப்பட்ட நூல்கள் இங்கு சர்வ சாதாரணமாகப் பரவியிருந்தன. உதாரணமாக சுபாஷ் சந்திரபோஸின் ‘Indian Struggle’ (இந்தியப் போராட்டம்) என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பினும் இங்கு இறக்குமதியாகி, தலைப்புகளை மாற்றி இந்தியாவுக்குக் கடத்தப்பட்டன. இந்தியாவில் வெளிவந்தவுடன் விறுவிறுப்பாக இலங்கையை வந்தடையும் நூல்கள், பின்னர் அக்கரையில் தடைசெய்யப்பட்டு அபூர்வமாக அமைபவை, இங்கு பரவலாகக்கிடைத்தன. தவிரவும், ஐரோப்பிய இலக்கியங்கள் இங்கு சரளமாகப் புளங்கின. இந்த நிலையில், இந்திய எழுத்தாளரும் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான முல்க்ராஜ் ஆனந்த் வெளியிட்ட Untouchables போன்ற நூல்கள் இந்நாட்டில் பரவியதைப்போல இந்தியாவில் அறியப்படவில்லை. பெங்குவின் வெளியீட்டினர் தொடங்கிய New Writing என்ற புதுமை இலக்கிய வரிசை இதழில், முல்க்ராஜ் ஆனந்த், இக்பால் அலி, ராஜாராவ் போன்றோரின் படைப்புகள் வெளியாகின. ஒரு இதழில் முல்க்ராஜ் ஆனந்தின் Barber’s Trade Union (நாவிதர் சங்கம்) என்ற சிறுகதை வெளியாகியது. அதன் உணர்வும், உணர்த்திய புது உலக எண்ண உதய வெளிப்பாடும் என்னை ஈர்த்தன. இரண்டாம் பேர்க்காலத்தில் லண்டனில் தங்கியிருந்த முல்க்ராஜ் ஆனந்த், அப்போது பொதுமக்கள் எண்ண வெளிப்பாடுகளை உணர்த்தும் பேட்டி காண்பவராக இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, அவரது அனுமதி பெற்று அக்கதையை மொழிபெயர்த்து ‘சக்தி’ இதழுக்கு அனுப்பினேன். தி.ஜ.ர. அவர்கள் அதனைப் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பல மொழிபெயர்ப்புகளை வெளியிடும்படி தூண்டிக் கடிதம் எழுதினார். இவ்வகையில், அவர் ஆசிரியராக அமைந்த, ‘மஞ்சரி’, ‘ஹனுமான்’, ‘ஹிந்துஸ்தான்’, ஆகிய இதழ்களுக்கும் சிறுகதைகளை மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கினேன்.
பஞ்சாபி எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் அவர்களின் சிறந்த சிறுகதைகளை, இலங்கையனான நான், தமிழகத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பினைப்பெற்றேன். இப்போது போலல்லாது, அக்காலத்தில் ஆங்கிலக்கல்வி தமிழகத்தைவிட இலங்கையில் உயர்நிலையில் இருந்தமையும், ஆங்கில ஆர்வமும் பயிற்சியும் மெத்தனமாக இருந்தமையும் எனது முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. அத்துறையில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது. மொழியாக்கத்திற்கு ஆங்கில மொழியே துணையாக அமைந்தது. அம்மொழியில் மொழியாக்கப்பட்டதை, என்னால் தமிழ் நாட்டுச் சூழலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப தமிழாக்கப்பட்டன. இதற்கென மொழிபெயர்க்கப்படும் பிறநாட்டு வரலாறுகள், பண்பாடுகள், மக்களது வாழ்க்கை நெறிகள், சமயக்கோட்பாடுகள் இவற்றுடன் மரபு, குறியீடுகள், பழக்க வழக்கங்கள், சகுனங்கள், சமய வழிபாடுகள் இவற்றை ஆய்வு செய்வதில் காலங்கழிந்தது; கழிகின்றது.” என தி.ஞாவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். லூசுன், முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், கிருஷ்ணசந்தர், குப்பிரியாவோவ், ஜெள சூ லி, இவன்·பிராங்கோ, சந்தோர்பெட்டோவ்பி, ஹோசிமின் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் படைப்புகளை காலத்தின் தேவை கருதி தமிழுக்கு கொண்டு வந்தார். பெரும்பாலான படைப்புகள் அந்தந்த நிலங்களில் பெருந்தாக்கத்தை சமூக பண்பாட்டு மாற்றத்தோடு இணைந்த புரட்சியை பேசிய படைப்புகளாக இருந்தன. ஹோசி மின் உடைய வரலாற்றைத் தெரிந்து கொள்கிற போது தன் நிலத்திற்காக ஹோசிமின் செய்த தியாகங்களை தன் வாழ்நாளில் அவர் கடந்து வந்த கொடூரமான சிறைகளை தலைமையேற்ற விடுதலை போராட்டங்களை அவருடைய புகழ் பெற்ற உரைகளை கொண்டு அந்த உன்னத தலைவனை தமிழ் பரப்பில் விரிவாக பேசியிருப்பதை அல்லது அவரது சிறைக்குறிப்புகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள கூரிய பார்வையை புரிந்து கொள்ள முடிகிறது. வியட்நாமிய கதைகள் தொகுப்பிலுள்ள பல கதைகளிலும் குறிப்பாக மூங்கில் பள்ளத்தாக்கு கதையிலும் தேசத்தின் விடுதலை வேட்கையில் உள்ள ஊடாட்டத்தை மூங்கில் பள்ளத்தாக்கு உப்புக்கரிப்பதிலிருந்து தொடங்கி மூங்கில் காடுகளில் ஆறு கோடி கைகளை நம்பி உயிர் தியாகம் செய்யும் கிழவன் வழியே நில உணர்வை விடுதலையை பேசுகிற போக்கையே காணமுடியும். அப்படியான படைப்புகளுக்காக அப்படியான விடுதலையுணர்வும் பிற்போக்கான அடிமைத்தனத்திலிருந்து சமூக மாற்றத்தை நிறுவும் சிந்தனைகளுக்காக அவரது சொந்த படைப்பிலக்கியங்களையே சுருக்கி கொண்டவர் கே. கணேஷ். இளைஞன் எர்கையின் திருமணம் கதையிலும் அது போசிக்கிற சிந்தனை சிறிய கிராமத்தில் எழும் புரட்சி சார்ந்தது. வழக்கமான வர்க்க மீறல் திருமணங்கள் சார்ந்த கதையாக இருந்தாலும் அது பேசிய அரசியல் நுண்ணியது.

ஐரோப்பாவில் நிலவிய வர்க்க வேறுபாடுகளை போன்றதல்ல இங்கு நிலவிய சமூக கட்டமைப்பு. சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார சுரண்டலோடு ஒடுக்குமுறைகளை மோசமான உரிமை மறுப்புகளோடு இருந்து வந்த இனக்குழுவின் மீது எந்த இலக்கியத்தை திணிக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனையும் தெளிவும் கணேஷிடம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரின் போராட்டங்களை ஒட்டுமொத்த ஆதிக்க சாதியினருக்கும் எதிராக திருப்பிய அடையாள அரசியலின் தந்திரோபாய பின்னணியில் மார்க்சியத்தை தான் சார்ந்த சூழலில் எவ்வாறு பயிலுவது என்கிற தெளிவே அவரை தீண்டாதான் போன்ற நாவல்களை மொழிபெயர்ப்பதன் பார்வை என பலரும் வியந்து பார்க்கிறார்கள். ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியினுடைய தாய் போன்ற நாவல்கள் இருந்தும் முல்க்ராஜ் ஆனந்த்தினுடைய ( untouchable) தீண்டாதான் தான் கணேஷின் தெரிவாக இருந்திருப்பதிலிருந்து அது புலனாகுகிறது. இதனால் தான் சத்திய போதிமரம் போன்ற கதைகளைக் கொண்டு அவருடைய முற்போக்கு பங்களிப்பை அந்த கதையின் ஆன்மீகம் சார்ந்த போக்கை கொண்டு மூடவிடுவது நியாயமல்ல என்று தோன்றுகின்றது. ஆக்க இலக்கியமொன்றை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதென்பது வெறுமனே சிந்தனை சார்ந்த பிரதியீடு மட்டுமல்ல உணர்வுகள், மனித விழுமியங்களை சரியாக பரிமாற்ற வேண்டிய கலை. அது கே. கணேஷிற்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. லூசுன் சிறுகதைகளை படிக்கிற போது அந்த கதைமொழி எவ்வளவு லாவமாக இருக்கிறதென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. லூசுன் நவீன சீன இலக்கியத்தின் பிதாமகர். அவருடைய கதைகள் புதிய கருத்தியலும் வாழ்வியலும் சீனாவுக்குள் எட்டிப் பார்த்த காலப்பகுதியில் சீன மனித வரையியல் பற்றிய ஆவணமாக மூட நம்பிக்கைகள் தளர்ந்து சீனா நிமிரத்தலைப்பட்ட காலத்தின் சாட்சியாக பார்க்க முடியும். ஒரு பைத்தியகாரனின் குறிப்புகள் என்ற கதையிலும் மனித மாமிசம் உண்ணப்போவதாக ஒரு பைத்தியகாரனின் குறிப்பினூடே ஆழமான அன்றைய சீனாவின் நில அரசியலை அதிகாரத்தை சர்வாதிகார ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரத்தையும் பேசும் போக்கு இருக்கும். ஏறத்தாழ எல்லாக் கதைகளிலும் இழையோடும் தத்துவம் மானுட விடுதலை சார்ந்தே இருந்திருக்கிறது. அருமருந்து என்னும் கதை ஒரு மூட நம்பிக்கை சார்ந்த குறுநாவலென்று கருதினாலும் அது குறித்து நிற்கும் காலமும் மனிதர்களும் மஞ்சு ஆட்சியாளர்களுக்கெதிரான வர்களின் மீது காட்டப்பட்ட கடுமைகளையும் பேசுவதை உணர முடியும். பாய்ஹுவா இலக்கிய மறுமலர்ச்சி காலத்தில் எழுதப்பட்ட முக்கிய குறுநாவலாக இதனை சொல்ல முடியும்.

“தமிழுக்குப் புதுமைப்பித்தன் எப்படியோ, சீனத்துக்கு லூசுன் அப்படியே. சமூதாய முரண்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்த்த பூர்வமாக, அதேவேளை கலை நயத்துடனும் எடுத்துக்காட்டும் லூசுன் அவர்களுடைய சிறுகதைகளை தமிழ் மக்களுக்கு அறிமுகஞ்செய்த, வாசிக்கக்கொடுத்த பெருமை கே.கணேஷ் அவர்களுடையது. ‘Selected stories of Luh Shun’ என்னும் ஆங்கிலத்தொகுதி 1960இல் சீனாவில் வெளியிடப்பட்டது. 1972லும் 1978லும் இந்த ஆங்கிலத்தொகுதி மறுபதிப்புப் பெற்றுள்ளது. இந்தத் தொகுதியின் பதினெட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பே லூசுன் சிறுகதைகள். தேசியக் கலை இலக்கியப் பேரவை இந்தச் சிறுகதைத் தொகுதியை 1995இல் வெளியிட்டுள்ளது.” என்கிறார் தெளிவத்தை ஜோசப்.

மலையக சூழலை அதிகம் கதைகளில் பேசியிருக்கவில்லை என்னவொரு குற்றச்சாட்டு அவர் மேல் இருந்தது. அதைப் பற்றி கே.கணேஷ் ” நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத்தோட்டம் தொலைநோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறியமுடிந்தது.தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றியோ, தேயிலைப்பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்குப் பெரிதும் வாய்க்கவில்லை. இலங்கை, தமிழகப் பள்ளிப்படிப்பு முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலை நாட்டுப் பகுதியில் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க்கை முறைகளையும், சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும் ஏடுகள், நூல்கள் வாயிலாகவே அறிய முடிந்தது.
எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில் மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகள், கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஓட்டம் பார்த்துவந்து அவர்களது உள்ளாத்மாவையே உணர்ந்துவிட்டதாகப் பம்மாத்துப் புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தைக் குறித்து நான் கவனம் செலுத்த முடியாமையின் காரணமாகும். சமூகத்தின் பொருளாதாரச் சீர்கேடுகள், மேடுபள்ளங்கள் சரிசமன் ஆக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவர்களும் மேல் நிலையில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எய்தவேண்டும் என்ற சமதர்மக் கொள்கையில் எனக்குக் ஈடுபாடு இருந்தது. சாதி, வகுப்பு, இனபேதம் போன்றவற்றில் ஈடுபாடுகள் இத்தகைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்குமேயன்றி அதற்குத்துணையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அதனால் மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவநிலை ஏற்படும்பொழுது பெருவெள்ளம் வந்து சிறு குப்பைகூழங்களை அழித்துச் சமநிலையாக்கிவிடும் என்று நினைத்தேன்.” என்கிறார்.

கே. கணேஷ் மொழிபெயர்த்த ஏராளமான கவிதைகள் இருப்பதாக அறியமுடிகிறது. தொகுப்பாக வந்த எத்தனை நாள் துயின்றிருப்பாய் என் அருமைத்தாய்நாடே என்கிற ஹங்கேரி கவிஞர் பெட்டோவ்ஃபி இனுடைய கவிதைகள் மற்றும் பல தொகுக்கப்படாத கவிதைகளின் பாடுபொருளும் உயிரும் அவருடைய கருத்தியலுடனே ஒன்றிப் போகின. ஹோசிமின் சிறைக்குறிப்புகளிலும் அதே விடுதலையுணர்வே மேம்பட்டிருக்கும்.

“கணேஷ் அவர்கள் சிறுகதைகள், கவிதைகள் சிலவற்றை எழுதியுள்ளார். எனினும் இவரது இலக்கியத் தனித்துவத்தை அடையாளப்படுத்தி நிற்பது இவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளே ஆகும். ஏற்கனவே பார்த்தபடி இவை உலகின் பல்வேறு பாகங்களிலுமுள்ள சமூக/அரசியல் இலக்கிய முக்கியத்துவமுடைய மேதைகளையும் பெரும் எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டுவரும் பணியை இவர் செய்துள்ளார். ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது சிந்தனைகளை மாத்திரமல்லாது உணர்வு முறைகளையும் இன்னொரு மொழிக்குள் கொண்டுவருகின்ற ஒரு பெரும் வித்தையாகும். கணேஷ் இந்த இலக்கியப் பணிமூலம் தமிழ் வாசகர்களின் சமூக அரசியல் பார்வைகளின் விஸ்தரிப்புக்குப் பெரிதும் உதவியுள்ளார். நூல்கள் பெரும்பாலும் சிறிய அளவினதாகவே இருந்தனவெனினும் இவற்றின் செல்வாக்கு மிகப்பெரியது.
எந்த மொழியிலும் நவீன இலக்கியம் பற்றிப் பேசும்போது ஓர் உண்மையை மனதில் இருத்துதல் அவசியம். அதாவது நவீன இலக்கியம் என்பது மொழிப்பாரம்பரியம் ஒன்றிற்கு மாத்திரம் உரியதல்ல. அது உலகப்பொதுவானது. நவீன இலக்கியத்தின் வடிவங்கள் உலகப்பொதுவான இலக்கியவடிவங்கள். அந்த வடிவங்களைச்செழுமைப்படுத்தியோர் ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு கண்டத்துக்கோ உரியவர்கள் அல்ல. உண்மையில் தமிழில் நவீன இலக்கியம் என்று சொல்லவேண்டுமே தவிர, தமிழ் நவீன இலக்கியம் என்று சொல்லக்கூடாது. கணேஷினுடைய இலக்கியப்பார்வை அந்த அகண்ட மனித நிலையைத் தழுவியது. பிரதேசங்களின் தனித்துவங்களினூடாகக் கிளம்பும் உலகப்பொதுமை அவரது இலக்கிய மூச்சின் உயிர்நாடியாகிறது. கணேஷினுடைய இலக்கிய பலம் இதுதான். இத்தகைய பார்வை அகற்சியும் உலகப் படைப்பிலக்கியத் தாடனமும் கொண்டவர்கள் நம்மிடையேமிகமிகச் சிலரே. அந்தச் சிலருள்ளும் கணேஷ் நிமிர்ந்து உயர்ந்து நிழல்பரப்பி நிற்பதற்குக் காரணம் அவருடைய அடக்கமுடமையும் அறிவாழமுமாகும்.” [ பேரா. கா. சிவத்தம்பி, ஞானம் சிறப்பிதழ்]

கே கணேஷ் அவர்கள் மணிக்கொடி காலத்திலிருந்து சிறுகதை மூர்த்திகளான புதுமைப்பித்தன், கு.பரா, பிச்சமூர்த்தி போன்றோர்களிடமும் இந்திய முற்போக்கு எழுத்தாளர்களான முல்க் ஆனந்த ராஜ், கே ஏ அப்பாஸ் போன்றவர்களிடமும் இதழாசிரியர்களான தி ஜ ர, கல்கி மற்றும் பலரோடும் தொடர்புகளோடு இருந்திருக்கிறார். தவிரவும் ஐரோப்பிய, உக்ரேனிய எழுத்தாளர்களோடு தொடர்புகளையும் பேணி அங்கு நடந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிற வாடிக்கை கொண்டவர். இத்தனைக்கும் விருதுகளையோ அங்கீகாரங்களையோ அவர் தேடிப்போனவரல்ல. இடதுசாரி இயக்கங்களோடு இயங்கியவராக தன்னை எப்போதும் முன்னிறுத்தாதவராக ‘நான்’ என்ற வார்த்தையை ரொம்பவும் குறைத்து கொண்ட பண்பாளராகவும் அவர் இருந்திருக்கிறாரென்பது மிக முக்கியமான ஒன்று. பிற்காலத்தில் மார்க்சியத்தின் மீது அதீத விமர்சனமும் பற்றற்ற நிலையும் அவரிடத்தில் இருந்தபோதிலும் குறிப்பாக இடதுசாரித்துவ இயங்குநிலையிலிருந்து தன்னை ஒதுங்கிக் கொண்டு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட வராக குருவை எதிர் பார்த்திருந்தவராக இருந்தபோதிலும் அவரது இலக்கிய பணியையும் அடையாளத்தையும் வயது மூப்பின் கருத்தியல் பிரள்வைக்கொண்டு மூடிவிடுவது அறமற்றது. சொந்த நிலத்தை விற்று பாரதி இதழை நடத்திய அந்த முற்போக்கு சிந்தனையாளரின் நூற்றாண்டை இன்னும் வெகுசிறப்பாக மலையக இலக்கிய இயங்குதாரிகள் மட்டுமன்றி ஈழத்தமிழ் பெருநிலமும் விமரிசையாக கொண்டாட வேண்டும்.

***

 

-சப்னாஸ் ஹாசிம்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *